இதோ வந்துவிட்டது இவ்வாண்டுக்கான பெண்கள் நன்னாள்.
என் சிந்தனையில் இருந்து கடந்த 13 அல்லது 14 ஆண்டுகளாக
இந்த நாளைக் குறித்து நான் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இந்நாளைப் பற்றி ஏறத்தாழ
5–6 பதிவுகள் எழுதியிருப்பேன். அந்த எழுத்துகளில் நான் தொடர்ச்சியாக எழுப்பும்
சில கேள்விகள் உள்ளன.
“பெண்களுக்கு இன்னும் ஏன் பெண்கள் தினம்? அவர்களுக்கு என்ன குறை
இருக்கிறது?” என்று கேட்கும் ஆண்களுக்கு, என் பதிவுகளில் பொதுவான பதிலை அளித்திருக்கிறேன்.
அதேபோல், “பெண்கள் நாள் ஏன் அவசியம்?” என்று தெளிவில்லாமல் கேட்கும் பெண்களுக்கும்,
அந்த நாள் எப்படி உருவானது, ஏன் அது தேவையானது என்பதையும் என் எழுத்துகளின் மூலம் விளக்கியிருக்கிறேன்.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லுவது சில நேரங்களில் அலுப்பைத்
தரலாம். எனினும், ஒரு கொண்டாட்டத்தின் தேவையை ஏற்கவோ மறுக்கவோ ஒரு தனிநபரின் நிலைப்பாட்டில்
என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே என் கருத்து.
அதிலும், நாட்டில் அறியப்படும் எழுத்தாளராக இந்த நாளில் எனது நிலைப்பாட்டைப் பதிவு
செய்வது ஒரு கடமை என்றும் நான் நினைக்கிறேன்.
பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும்
ஒரு சாதாரண நாள் அல்ல. அது விடுதலைக்காகவும் சம உரிமைக்காகவும் போராடிய பெண்களின்
குருதி மற்றும் உயிர்ப்பலியின் நினைவுநாள். இன்று நாம் “பெண்கள் தினம்” என்று கொண்டாடும்
இந்த நாள், எண்ணற்ற பெண்களின் போராட்டங்களின் சாட்சியாக உருவானது.
அதன் வரலாறோ அதன் தாத்பரியமோ தெரியாமல் சில பெண்கள் அந்த நாளை
ஒரு சாதாரண கொண்டாட்ட நாளாகவே அனுபவிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில் அதுவும் தவறு
அல்ல. நாள் முழுவதும் குடும்பப் பொறுப்புகள், வேலைச்சுமைகள், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றுக்குள்
வாழும் பெண்களுக்கு ஒரு நாள் சற்றே சுவாசிக்கவும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளவும்
தோன்றினால் அது அவர்களின் உரிமை.
ஆனால் உண்மையை அறிந்த பெண்களே சில நேரங்களில் அந்த உண்மையை மறந்துபோய்
நடப்பது தான் சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக, பொது வெளியில் அறியப்படும் பெண்களுக்கு
சில சமூகப் பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
எங்கோ ஓர் இடத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை நீங்கள் இங்கிருந்து
கண்டிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உலகில் எங்காவது ஒரு பெண் துன்பப்படும்போது
அதில் நீங்கள் கட்டாயமாக பங்கெடுக்க வேண்டும் என்றும் நான் கூறப்போவதில்லை. அப்படி
நீங்கள் செய்தாலும் அது அதிகப் பிரசங்கித்தனம் அல்ல. யாராவது அப்படிச் சொன்னாலும் அதற்கு
நீங்கள் எதிர்வினையாற்றத் தேவையில்லை. பேசுபவர்கள் பேசுவதைத் தவிர நமக்காக வேறு எதையும்
செய்யப் போவதில்லை.
ஆனால், நமது நாட்டிலேயே நாம் எதிர்வினையாற்றக்கூடிய பல விஷயங்கள்
இருக்கின்றன. குறைந்தபட்சம்
நம்முடைய சமூகத்தில் நடக்கும் அநீதிகளைப் பற்றிக் கூட நாம் ஏன் பேசுவதில்லை?
ஒரு பெண்ணுக்கோ, பெண் குழந்தைக்கோ பாலியல் வன்புணர்வு நேர்ந்துவிட்டால்
தமிழ் ஊடகங்கள் கொஞ்சம்கூட கூச்சமின்றி பெண் கற்பழிக்கப்பட்டாள்; சொந்த தந்தையே கற்பழித்தார்,
சகோதரனே கற்பழித்தார் என எழுதுகிறார்கள். இப்படி சொல்வதுகூட பெண்களுக்கு எதிரான வன்முறை
என்று பலமுறை கூறியாகிவிட்டது. ஒரு பெண்ணின் கற்பை அழிக்க முடியுமா? அவளுக்கு நடந்த
கொடுமைக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ ஊடகங்கள் அவளின் கற்பை அழிப்பதில் தீவிரம் காட்டுவது
ஏன் என புரியவில்லை. இதை களப்பெண்கள், பெண்கள் அமைப்புகள் கேள்வி கேட்க வேண்டாமா?
மேலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் — குறிப்பாக குடும்ப வன்முறை
முதல் பாலியல் பலாத்காரம் வரை — இன்னமும் முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில் செயல்படுகின்றனவா
என்ற கேள்வி இருக்கிறது. இதை யார் கேட்க வேண்டும்? நமக்காக நாம் கேட்காமல் வேறு யார்
கேட்பார்கள்?
கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதலில் 6 முதல் 12 வயதுக்குள் உள்ள
150 மாணவிகள் உயிரிழந்ததாகவும், மேலும் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் 40 பேர்
கொல்லப்பட்டதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உயிர்கள் பற்றிய வேதனை எத்தனை
பேரின் மனசாட்சியைக் குலைத்தது? இதைப் பற்றி யார் பேசினார்கள்? பன்னாட்டு ஊடகங்கள் அது
ஒரு சாதாரண செய்தியாகவே கடந்து சென்றுவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா? அல்லது
நமது நாட்டில் யாராவது அந்த உயிர்களுக்காக ஞாயம் பேசினார்களா?
பெண்கள் நன்னாள் என்பது மலர்களும் வாழ்த்துச் செய்திகளும் பரிமாறிக்கொள்ளும்
ஒரு விழாவாக மட்டும் மாறிவிடக் கூடாது. அது ஒரு நினைவூட்டல் — பெண்கள் இன்னும் சமத்துவத்திற்காக,
பாதுகாப்பிற்காக, மரியாதைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் நினைவூட்டும்
நாள். இந்த நாள் ஒரு கொண்டாட்டமாக இருப்பதற்கும் முன், அது ஒரு கேள்வியாகவும் ஒரு சிந்தனையாகவும்
நமக்குள் எழ வேண்டும். அந்த சிந்தனை தான் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முதல் படி.
இப்போது சொல்லுங்கள், பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை நாம் எப்படி
கொண்டாட வேண்டும், சகோதரிகளே…?
-யோகி
