திங்கள், 12 ஜூன், 2023

புலாவ் பெசார் எனும் புனித தலம்


வெயில் காலமாக இருந்தாலும், இந்தப் பருவத்தில் நமது நாட்டில், எல்லா மதத்தினரும் அவரவர் மதம் சம்பந்தப்பட்ட புனித யாத்திரைக்கு செல்ல ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிகிறது. வாழ்கையில் ஒருமுறையாவது புண்ணிய தலத்திற்கு போய்வந்துவிட்டால் பிறந்த பலனை அடைந்த திருப்தி ஏற்படும் என்று பலர் பக்தியோடு கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். கொரானாவிற்கு பிந்திய சூழலில் பயணம் செய்வது அதிகரித்திருந்தாலும்,
 அதற்காக பெரிய தொகையை செலவழிக்க வேண்டியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.

2019-இல் நான் வட இந்தியா, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் திருத்தலத்திற்கு சென்றபோது, செலவழித்த தொகையைவிட தற்போது இரண்டு-மூன்று மடங்கு தொகையை செலவழித்து மக்கள் அங்கு சென்று வருவதைக் காண்கிறேன். கிட்டதட்ட யாத்திரை சம்பந்தப்பட்ட சுற்றுலா என்பது லாபம் பார்க்கும் தொழிலாளாக மாறிவருவது, எங்கும் கண்கூடாக பார்க்க முடிகிறது.

நமது நாட்டில் இஸ்லாமியர்களுக்காக இருக்கும் புனித தலத்திற்கு, இனம், சமையம் பார்க்காமல் வெளிநாட்டிலிருந்தும்கூட பலர் வருகை தந்து பத்தியோடு தரிசித்து செல்கின்றனர். நான் புலாவ் பெசார் குறித்துதான் உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். மலாக்கா மாநிலத்தில் இருக்கும் புலாவ் பெசார் எனும் தினித்த தீவு, பத்தியை மட்டுமல்ல இயற்கை அழகு குவிந்து கிடக்கும் அழகிய தீவாகவும் இருக்கிறது.

மலாக்கா பட்டணத்திலிருந்து சுமார் 25 நிமிடத்தில் ஜேதி அன்ஜோங் பத்து (Jeti Anjung Batu) எனும் இடத்திற்கு வந்தால், அங்கிருந்து புலாவ் பெசார் செல்வதற்கான கட்டணமுடன் கூடிய கப்பல் போக்கூவரத்து இருக்கிறது. தனியார் மோட்டார் படகுகளும் செயற்படுகின்றன. சுமார் 30 நிமிடங்களுக்குள் நீர் வழி பயணத்தை மேற்கொண்டு புலாவ் பெசார் தீவின் கரையில் இறக்கி விடுகிறார்கள்.

அங்கிருந்து 10 நிமிடங்கள், கடலின் அழகை ரசித்தபடியே கொஞ்ச தூரம் நடந்தால் இஸ்லாமிய மக்களின் இறை தூதர்களின் புனித கல்லறைகள் வருகின்றன. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது இந்தியர்களும் சீனர்களும்கூட மரியாதையாகவும் பக்தி மார்க்கமாகவும் பிரார்த்தனைகளில் கலந்துகொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வேண்டுதலின் பேரில் அன்னதானமும் வழங்குகிறார்கள். அதெல்லாம் சில நிபந்தனைக்கு உட்பட்டதாகும். 

தற்போது நான் பார்த்த புலாவ் பெசாருக்கும், 5 ஆண்டுக்கு பிந்திய புலாவ் பெசாருக்குமே நிறைய மாற்றங்கள் இருப்பதாக அங்கு தொடர்ந்து புனித யாத்திரைக்கு வருபவர்கள் கூறுகிறார்கள். சில விரும்பத்தகாத செயல்களினால் நிறைய கட்டுப்பாடுகள் தற்போது புலாவ் பெசாரில் விதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சாமி அழைப்பது, மாந்தீரிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவது போன்ற விவகாரங்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை கிடைக்ககூடிய வகையில் கடுமையாக்கியிருக்கிறார்கள்.

நோன்பு பெருநாளின் இரண்டாவது நாளில் நான் அத்தீவுக்குச் சென்றிருந்தேன். வானிலை, பயணம் செய்வதற்கான மனநிலையை ஏற்படுத்தியிருந்தது. நிறைய பேர் படுதா அமைத்து, இரவே தீவுகளில் தங்கியிருப்பதை காண முடிந்தது. அறை எடுத்தும் அத்தீவில் தங்க முடியும் என்பதை ஒரு தகவலாக வாசகர்களுக்கு கூறிக்கொள்கிறேன். 


புலாவ் பெசாரில் இருக்கும் புனிதக் கல்லரைகளில் இருப்பவர்கள் யார்?   இந்தக் கேள்விக்கு உண்மையும் புரளியுமாக நிறைய பதில்கள் வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அங்குச் செல்பவர்களுக்கு அதன் வரலாறு தெரியும் வகையில் குறிப்பு பதாகைகள் வைத்திருக்கிறார்கள். அதன் துணையுடன் நான் அவ்விவரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில்.

இந்த சமாதிதான் அங்கு முதன்மையான சமாதியாக கருதப்படுகிறது.  சுற்றிலும் வேலி அமைத்து மிகப் பாதுகாப்பாக இந்த சமாதி பேனப்படுகிறது. வரலாற்றின் படி, சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில் சவூதியில் பாக்தாத் நகரில் 1463-ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். ஒருமுறை அவர் நபிகள் நாயகத்தின் கல்லறையைப் பார்வையிட மதீனாவுக்குச் சென்றபோது, ​​​​"இஸ்லாத்தின் போதனைகளை ஜாவா தீவில் பரப்புங்கள்" என்று ஒரு குரல் கேட்டதாம். அது இறைவனிடமிருந்து தனக்கு வந்த கட்டளை என்று கருதியவர்,  பின்னர் பயணம் செய்து இறுதியாக கி.பி 1495-இல் தனது 16 சமைய சகாக்களுடன் புலாவ் பெசாரை வந்தடைந்திருக்கிறார். இவர்களின் வருகைக்குப் பிறகு, இஸ்லாமிய சமைய போதனைகள் விரிவடைந்ததாகவும், நிறைய பேர் இவர்களின் சீடர்களாகவும், இவர்களை பின் பற்றுபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். சுல்தான் அல்-அரிப்பின் ஷேக் இஸ்மாயில் அவர்கள் தமது 58-வது வயதில் காலமாகியிருக்கிறார்.

அவரின் சமாதியில் மனம் உருகி பிரார்த்தனை செய்பவர்களின் துயர் தீர்க்கப்படுகிறது என்றும் மன அமைதி கிடைக்கிறது என்றும் அங்கு வரும் பக்தர்கள் கூறுகிறார்கள். அங்கே ஒரு பெண் துறைவியின் சமாதியும் இருக்கிறது. அவருக்கு கல்லரை எழுப்பப்படவில்லை, என்றாலும் இஸ்லாமிய மக்கள் அவரை தாயார் என்று குறிப்பிடுவதோடு, அவ்விடத்தில் பிரார்த்தனை செய்யாமல் வருவதில்லை. அங்கே இருக்கும் சமாதிகளும் கல்லரைகளும் மிக நீளமாக இருக்கின்றன. அவ்வளவு உயரமாக அக்காலத்தில் மனிதர்கள் இருந்தார்களா என்ற கேள்வி எழாமல் இல்லை. கோலசிலாங்கூரில் இருக்கும் புக்கிட் மெலாவத்தியிலும் இதேபோல மில நீளமான பழங்காலத்து சமாதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.  

புலாவ் பெசார் கடலில், சிலர் குளித்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது. ஆனால், மதியத்திற்குப் பிறகு தண்ணீர் உள்வாங்கி மிகப் பெரிய பாறைகள் வெளிவருகின்றன. Baby crab என்று சொல்லக்கூடிய சிறிய வகை நண்டுகள் கடற்கரை முழுவதும் சுற்றிதிரிவதை பார்க்க முடிந்தது. மிக அமைதியான சூழல் மனதை ஆக்ரமித்திருந்தது. அது தீவுக்கே உள்ளே தனித்துவமாகவே நான் பார்க்கிறேன்.

மதியம் 3மணியளவில் நாங்கள் தீவிலிருந்து விடைபெற்றோம். சிலர் அப்போதுதான் தனியார் படகுகளில் தீவுக்குள் வந்துகொண்டிருந்தார்கள். புலாவ் பெசார் குறித்த நிறைய அதிசயங்களையும் அமானுஷ்ய கதைகளையும் கேட்டிருந்த நான் என்னுடைய முதல் பயணத்தில் எந்த எதிர்பார்ப்பையும் அதன் மீது வைக்கவில்லை. அதனாலேயே அந்தத் தீவின் அழகில் என்னால் தொலைய முடிந்தது; ஒப்புக் கொடுக்க முடிந்தது.  மலேசிய இஸ்லாமியர்களின் மிக முக்கிய வழிப்பாட்டு தலமாக இந்தப் புலாவ் பெசார் விளக்குகிறது. மலேசிய இந்திய முஸ்லிம் நண்பர்களும் வருடத்திற்கு பலமுறை இந்தத் தீவுக்கு வந்து வழிப்படுவதை கடமையாகவே கொண்டிருக்கின்றனர். அதிலும், ரம்ஜான் பெருநாளின் இரண்டாவது நாளில் இங்கு வருவதை அவர்கள் முக்கிய அம்சமாகவும் கடமையாகவும் கொண்டிருக்கின்றனர். அதோடு இந்தோனேசியாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்கூட புலாவ் பெசார் மகிமையை கேள்விப்பட்டு நிறைய பேர் வருகிறார்கள்.

நமது இசைப்புயல் ரஹ்மானும், அவரின் தாயாரும், சில தென்னிந்திய நட்சத்திரங்களும்கூட இந்தத் தீவுக்கு வந்து அது குறித்து  பேசவும் செய்திருக்கிறார்கள். 

இப்படி நல்ல விஷயங்கள் சொல்லக்கூடிய வகையில் இருந்தாலும், அங்கே வரும் சுற்றுப்பயணிகளாலும் சில பொறுப்பற்ற நபர்களாலும் வீசப்படும்  குப்பை கூளங்கள் அந்த அழகிய தீவை நாசம் செய்துவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.  உணவுக் கழிவுகள், ஞெகிழிகள், வீசப்படும் உடைகள் உள்ளிட்டக்  குப்பை மேடுகள்  அங்காங்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. அங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளுலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.  சொந்தத் தேவைக்காக வெளியிலிருந்து வாங்கிவரும் பொருட்களின் கழிவுகளை இந்தத் தீவில் வீசி செல்வது என்ன ஞாயம் என்றுதான் தெரியவில்லை.   

என்னுடைய மற்றுமொரு  துயரம் என்னவென்றால், வரும் காலத்தில் இந்தப் புனிதக் தலம் விடுமுறையை ஜாலியாக கழிக்கும் கூடார முகாமாக ஆகிவிடக்கூடாது என்பதும்தான்.     

நன்றி : தமிழ்மலர் ஞாயிறு பதிப்பு (11/6/2023)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக