தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம் அல்லது மே தினம் என்பது உழைக்கும் மக்களுக்காகவும், இப்படி ஒரு தினம் கொண்டாடுவதற்கு காரணமானவர்களின் வரலாற்றை நினைவுக்கூர்ந்து மனுசரிக்கும் ஒரு நாளாகும் முன்னெடுக்கப்படுகிறது. நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தொழிலாளர் தினம் என்பது ஒரு நாள் பொது விடுமுறையோடு முடிவதில்லை. 8 மணிநேர வேலை, உழைப்புக்கேற்ற சம்பளம் இந்த அடைப்படைத் தேவைகாக புரட்சி வெடித்தது. அதன் காரணத்தினால் சில தொழிலாளர்களின் உயிர்களும் காவுக் கொள்ளப்பட்டது. அந்தத் தியாகத்தின் மீது நின்றுக்கொண்டுதான் நாம் உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தோழர்களே உங்களுக்கு எங்களது நாட்டில் எப்போது-எங்கு முதன் முறையாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது என்ற வரலாறு தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும், மே 1 ஆம் தேதி பன்னாட்டு ரீதியில் கொண்டாடும் தொழிலாளர் தினம் அல்லது மே தினம், முதன்முறையாக மலாயாவில் 1921- ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில் இடதுச்சாரி தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது. முதல் தொழிலாளர் தினம் அல்லது நாட்டின் முதல் மே தினம் கூட்டத்தில் ஈப்போ நகரின் தொழிலாளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது வரலாறு.
முதலாளித்துவத்தின் ஆதிக்கம் என்பது, உழைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் எல்லாம் தலைவிரித்தாடியது. பிரிட்டிஷ் பிடியில் இருந்த எங்கள் நாடு, அவர்களிடம் சிக்கியிருந்த காலத்தில் தொழிலாளர் தினமெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் 1908- ஆம் ஆண்டு, மலாயாவில் சீனாவைக் அடிப்படையாகக் கொண்ட Anarchism என்கிற அரசு மற்றும் நாடு மறுப்பாளர்கள் குழு உருவானது.
கிளர்ச்சிக்காரர்களாக அறியப்பட்ட இவர்கள் புரட்சிகரமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். 1918 ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் கிளைகள் Truth Society என்ற பெயரில் சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் ஈப்போவில் நிறுவப்பட்டு, சீன மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த அமைப்புச் சார்ந்த தத்துவங்களும் செய்திகளும் படைப்புகளும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
மலாயாவில் வெளியிடப்பட்ட Anarchism அமைப்புச் சார்ந்த சில புரட்சிகரமான புத்தகங்களின் தலைப்புகள் இவை :
"அரசின்மையும் சோசலிசமும்" (Anarchism and Socialism)
"அரசின்மை தத்துவம் மற்றும் கருத்துக்கள்" (The Philosophy and Ideas of Anarchism)
"அரசின்மை வாதத்தின் எளிய விளக்கங்கள்" (Simple Explanations of Anarchism)
"உழைக்கும் மக்களுக்கான அரசின்மை பற்றிய உரையாடல்கள்" (Conversations Regarding Anarchism for Working Men)
"உழைக்கும் ஆண்கள் சங்கங்களின் கொள்கை" (The Principle of Working Men’s Unions)
கோலாலம்பூரில் செயற்பட்ட Anarchism தோழர்களின் தொடர் முயற்சியாக சீன மொழியில் Yik Khuan Poh என்ற தலைப்பில் செய்தித்தாளையும் வெளியிட்டனர். Yik Khuan Poh என்றால் வெகுஜனங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதாகும். 1919 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செய்தித்தாள் வெளியிடப்பட்டது. மலாயாவில் மிகவும் தீவிரமான செய்தித்தாள் என்று மக்களாலும் இடதுச்சாரி தோழர்களாலும் அப்பத்திரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. Anarchism -வாதியான கோ துன் பான், இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து அவ்வமைப்பின் தத்துவங்களையும் புரட்சிகரமான கருத்துக்களையும் விடாமுயற்சியுடன் மக்களிடத்தில் பரப்பினார்.
1919-ஆம் ஆண்டு மலாயாவில் முதன் முதலாக மாபெரும் தொழிலாளர் ஒன்றுகூடலை நடத்துவதற்கு இந்த அமைப்பு திட்டம் வகுத்தது.
1920-இதன் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக மே 1, 1921 அன்று, பேராக் மாநிலத்தின் ஈப்போ நகரில், Anarchism-வாதிகள் மலாயாவின் வரலாற்றில் முதல் "மே நாள்" தொழிலாளர் தினப் பேரணியை ஏற்பாடு செய்தனர். தொழிலாளர் தினத்திற்காக நம் நாட்டில் Anarchism தோழர்கள் செய்த மிகப்பெரிய பங்களிப்பு இதுவாகும்.
இந்த அமைப்பில் செயற்பாடுகளைக் கண்டு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளே மிரண்டு போனார்கள். Anarchism தோழர்கள் அச்சு ஊடகங்கள் வழியாக முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஆயுதமாக பிரசுரிக்கப்பட்ட சிற்றிதழ்கள், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் அச்சு பிரசுரங்களை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் புதியச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இப்போது மலேசியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அந்தச் சட்டம்தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
உலகலாவிய ரீதியில் உழைக்கும் மக்களுக்கான போராங்களுக்கு ஆண்டுகள் 200 கடந்தாலும், உழைக்கும் பாமர மக்களுக்காக போராட்டங்களை இன்னும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இடதுச்சாரி கட்சிகள் இருக்கின்றன. நமது நாட்டைப் பொருத்தவரை இடதுசாரி கட்சியான மலேசிய சோசலிசக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுக்கான தொழிலாளர் பேரணியை முன்னெடுக்கிறது. இன்றும் நாம் குறைந்த பட்ச சம்பளத்திற்காகவும், முதலாளிகளால் சம்பளம் வழங்காத பிரச்னைகளுக்காகவும் வீதியில் இறங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தொழிலாளர் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் இருக்கும் வரை அதை எதிர்க்கும் தொழிலாளர் வர்க புரட்சி நடந்துக்கொண்டே இருக்கும்.
மூலம்: தோழர் Fahmi Reza
நன்றி தமிழ்மலர் நாளிதழ் 1/5/2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக