ஞாயிறு, 12 அக்டோபர், 2025

வீடு – என் கனவு அல்ல, என் மகனுக்கு கொடுக்கும் சின்னக் கூடு

தனக்கான கூட்டைத் தனக்குப் பிடித்த இடத்தில், யாருடைய அனுமதியோ எதிர்ப்போ இன்றி கட்டிக்கொள்ளும் சுதந்திரம் பறவைகளுக்கே உரியது. ஆனால், மனிதனுக்கு அந்த சுதந்திரம் இல்லை. குறிப்பாக, தன்னுக்கென ஒரு இல்லம் அமைத்துக்கொள்ளும் முயற்சியில், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பண ரீதியாகவும் மனிதன் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறான்.

பி40 அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழைப் பகுதிகளுக்கான மக்களுக்கு வீடு அமைப்பது கனவுக்குப் புறம்பானது. ஏதேனும் வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு இல்லத்தை வாங்கிய பின்னரும், அதன் வங்கிக் கடனை அடைத்து முடிப்பதற்குள் மரணம் வாசலில் காத்திருக்கிறது. அல்லது பண நெருக்கடியால் சிக்கி, திவாலான நிலைமை உருவாகிறது.

இந்தியத் தோட்டப் பாட்டாளிகள், மலாயாவிற்கு பாட்டாளிகளாக வந்து, மூன்றுநான்கு தலைமுறைகளாக இந்நாட்டில் வாழ்ந்தும் இன்னும் பாட்டாளிகளாகவே திகழ்கிறார்கள். நாட்டில் சிறுபான்மை இனமாக மாறிய துயரத்திற்கு மேலாக, அவர்களில் பலருக்கு இன்னும் தங்களுக்கென ஒரு இல்லம் கூட இல்லாத நிலைமை வலியை அதிகரிக்கிறது. மிக அண்மையில், தோட்டப் பாட்டாளிகளுக்கான மலிவு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை பார்லிமென்டிலும் ஒலித்ததுஅந்தக் குரல் இவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.

இந்த நிலையில் நானும் எனது இணையர் ஓவியர் சந்துருவும் வீடு குறித்த எந்த ஓர் ஆவலும் ஆசையும் கொள்ளாமலே இருந்தோம்.

வீடு வாங்குவது என் கனவும் அல்ல. என் தேவை ரொம்பவும் எளிமையானது. தேவைக்கு அதிகமாக உணவைக்கூட நான் உண்ண மாட்டேன் என்றால் என் எளிமையை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் பெரிதாகப் பிரபஞ்ச ஆசைகள் எதுவும் வைத்துக் கொள்ளாதவள் நான்.

குழந்தை இல்லாததால், “எங்களுக்கு வீடு தேவையில்லைஎன்ற முடிவில் நானும் சந்துருவும் உறுதியாக இருந்தோம். அந்த முடிவு எங்களுடன் 17 ஆண்டுகளாக உடன் வந்தது. மாதந்திர சம்பளம் ஒரு மாதத்திற்கு அவரவருக்கு போதுமானதாக இருக்க வாழ்க்கையை எந்த சேமிப்பும் இல்லாமல் நிம்மதியாகவே ஓட்டிக்கொண்டு இருந்தோம். அதில் நான் மட்டும், வருடத்துக்கு ஒருமுறை விமானப் பயணம் செய்துவிடுவேன்அதுவே எனது சிறிய ஆடம்பரம்.



2023 நவம்பர் மாதம் மகன் பிறந்தான். ஒருகாலத்தில் வேண்டாம் என்று எண்ணிய வீடு, அவனுக்காகதேவையானதுஎன்று

முடிவு செய்தோம். வயதின் மறுபக்கத்தில் நிற்கும் எங்களுக்குப் பெரிய சவாலான முடிவு இது. இன்றைய முதலாளித்துவச் சூழலில், வாழ்க்கைச் செலவுகள் ஏற்கனவே கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கின்றன.

மகனுடைய காலம் எப்படி இருக்குமோ? ங்களால் அவனுடைய  பயணத்தில் நீண்ட நாள் செல்ல முடியாது. எந்த நேரமும் நின்றுபோகக்கூடிய கடிகாரம் போலத்தான் நாங்கள். இந்நிலையில் வீடு வாங்குவது மிகப் பெரிய முடிவு. என்றாலும் மகனுக்காக இந்த சுமையை ஏற்றிருக்கிறோம்.

எங்கள் நிலையில், வாங்கியிருக்கும் வீடு கொஞ்சம் அதிகமான பொறுப்பு தான். ஆனால், மூன்று தலைமுறையாக வீடு வாங்க முடியாத குடும்பத்தைச் சேர்ந்த எங்களைப் பொறுத்தவரைஅந்த வரலாற்றை உடைத்துப் புதிய பாதை திறந்திருக்கிறவன் என் மகன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதிஅந்த வீட்டுக்காக கையெழுத்திட்டோம். சகல வசதிகளுடன் கூடிய ஒரு மாடர்ன் கான்டோமினியம் வீட்டை நாங்கள் வாங்கியுள்ளோம்.  19/8/2025 அதன் சாவி எங்கள் கைகளில் கிடைத்தது. அந்தச் சாவி, ஒரு கதவை மட்டும் அல்ல; எங்கள் மகன் அவனுக்காக திறக்கப்போகும் புதிய எதிர்காலத்தின் கதவாகும்.