செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மைத்திரேயனின் உண்ணாநிலைப் போராட்டம்


BLOCKROCK நிறுவனத்தை எதிர்த்தும் மறுத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் சமூக ஆர்வளர் மைத்ரேயன் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது. அதே வேளையில், மலேசிய இந்திய மக்கள் இந்தப் போராட்டத்தைப் எப்படி பார்க்கின்றனர் என்பது இங்கு விவாததிற்கு உட்படுத்த வேண்டியதாகும். சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டத்தை கொச்சப் படுத்தும் விதத்தில் நிறையவே பகடிப் பதிவுகளை காண முடிந்தது.

 மைத்தேரேயனின் இந்தப் போராட்டத்தைப் பார்ப்பதற்கு முன்பாக ‘பிளேக்ராக்’ என்பது என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ரொம்பவும் சுலபமாக ஊதித்தள்ளும் வெண்சுறுட்டு விவகாரம் இல்லை இது. இரத்தத்தை உரிஞ்சும் அட்டை பூச்சியால்கூட இந்த பூமிக்கு நண்மை உண்டு. உயிரையே உறிஞ்சி ஏப்பம் விடும் ஒரு சொத்து மேலாண்மை நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. மேலும், உலக நாடுகளின் தேசிய வங்கிகளையே தன் கட்டுக்குள் கொண்டுவரும் வல்லமை கொண்டது இந்த நிறுவனம் என்றால் அது மிகை இல்லை.

இந்த உலகத்தையே கட்டுப்படுத்தக்கூடிய சக்தி கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அது ‘பிளேக்ராக்’.நிறுவனம்தான். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் உலகியே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா நாளையே திவாலாகிறது என்றால் அதை மீட்க கடன் கொடுக்கும் திறன் கொண்டதும் தேவையென்றால் அந்த அமெரிக்காவையே விலை கொடுத்து வாங்கும் சக்தி கொண்ட ஒரு நிறுவனம்தான் இந்த ‘பிளேக்ராக்’. இத்தனைக்கும் இந்த நிறுவனம் 1988-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

அது தவிர, உலகப் புகழ்பெற்ற பல முதன்மை நிறுவனங்களில் குறிப்பாக ஆப்பில், ஃபாக்ஸ், அமெசோன், கொக்கோ கோலா இப்படி பெரிய பெரிய நிறுவனங்களின் முதல் 5 நிறுவனங்களுக்கு உள்ளாக Vanguard Fiduciary Trust Co, BlackRock Advisors LLC, Berkshire Hathaway INC, State Street Corporation ஆகிய நிறுவனங்கள் வந்துவிடும் என்றால் இந்த நிறுவனங்களின் பலத்தை நீங்களே அனுமானித்துக் கொள்ளுங்கள்.

நிறுவன மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கக்கூடியதான் இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனத்தின் பணியாகும். எப்படி ஒரு நிறுவனத்தை வழி நடுத்துவது, பண முதலீடுகளை மேற்கொள்வது, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவது, எம்மாதிரியான மாற்றத்தை தன் நிறுவனத்தில் கொண்டு வருவது என இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் தனது அலோசனைகளை வழங்கும். என்றாலும், பெரிய பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகளுக்கு ஆலோசனை சொல்லும் இந்த ‘பிளேக்ராக்’. நிறுவனம் வைக்கும் ஒரு நிபந்தனை என்னவென்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குதாரராக மாறுவதுதான். அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் சிரமத்தில் இருக்கும் நிறுவங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ கடன் கொடுப்பதிலிருந்து அதை லாபகரமான நிறுவனமாக மாற்றுவது வரை  அதன்வழியை காட்டுகிறோம் என்கிறது இந்த நிறுவனம்.

இந்த ‘பிளேக்ராக்’ நிறுவனம் எப்படி தன் ஆதிக்கத்தை மேற்கொள்கிறது என்று பார்ப்போம். இதை எளிமையாக சொல்வதற்கு இணையத்தில் நான் அறிந்துக்கொண்ட ஒரு செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

உக்ரைன் நாட்டின் சட்டப்படி தன் நாட்டின் விளை நிலங்களை அல்லது விவசாய நிலங்களை வெளிநாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கும், தனிநபருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்பதாகும். ஏறத்தாழ 32 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலங்களை உக்ரைன் 2014-ஆம் ஆண்டுவரை கொண்டிருந்தது. இதை இன்னும் எளிமை படுத்தி அதன் பிரமாண்ட அளவை சொல்வதென்றால், ஐரோப்பாவின் 27 நாடுகளின் விவசாய நிலங்களை ஒன்றுகூட்டி, மூன்றாக பிரித்தால், அதில் ஒரு  பங்கு உக்ரைன்னுடையது ஆகும். மேலும், உக்ரைனில் விளைவிக்கும் விளை பொருள்கள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

2014-ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா – கிரிமியா பிரச்னையின்போது, உக்ரைன்னுக்கு ஆதரவளிக்க பல நாடுகள் முன்வந்தன. International Monetary Fund (IMF) உக்ரைன்னுக்கு 17 மில்லியன் கடனுதவி செய்ய முன் வந்தது. இங்கேதான் ‘பிளேக்ராக்’ அதன் தந்திரத்தை கையாண்டது. நிற்க. IMF -க்கும் ‘பிளேக்ராக்’-குக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்கு தோன்றலாம். தற்போது IMF-இன் அறங்காவலராக விளங்குவதே ‘பிளேக்ராக்’தான்.  உக்ரைன் அந்த 17 மில்லியன் கடனுதவி பெறுவதற்கு ‘பிளேக்ராக்’ வைத்த நிபந்தனை அந்நாட்டு விளை நிலங்கள்மீது நின்றது.

அதாவது உக்ரைனின் விளைநிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு வைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என அவை கேட்டன. அந்நாட்டு அரசு சாசனத்தை மாற்றி எழுத அந்த இரு நிறுவனகளும் உக்ரைனை வலியுருத்தினர். மிகப்பெரிய தொகையை கடனாக பெறுவதற்கு உக்ரைன்னும் தனது அரசு சாசனத்தை மாற்றி எழுதியது. அதன் விளைவு, கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவிகித நிலத்தை இழந்து நிற்கிறது உக்ரைன்.

இதுதான் ‘பிளேக்ராக்’ எனும் மேலாண்மை நிறுவனத்தின் தந்திரமாகும். இன்று பற்பலகோடிகளின் அதிபதியாக இருக்கும் இந்நிறுவனம் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக மாறியிருக்கிறது.

(நன்றி, பொக்கிஷம் இணையத்தளம்)

சமூக ஆர்வளர் மைத்திரேயன் ஏன் உண்ணா விரதம் இருக்கிறார்? 

நமது நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வளர் மைத்திரேயன் கடந்த 7 நாள்களா டத்தாரான் மெர்டெக்காவில் உண்ணாநிலை போராட்டத்தில் உள்ளார். பாலஸ்தீன் -இஸ்ரேல் போர் இன்னும் முடிந்தபாடில்லை. தினமும் இதுகுறித்து அங்கிருந்து வரும் செய்திகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. இந்தப் போரில் காசா மக்கள் லட்சக்கணக்கில், இஸ்ரேலால் ராணுவத்தால்  கொன்று குவிக்கப்பட்டுவிட்டனர். பிற நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், தன் பிடிவாத போக்கை இஸ்ரேல் விடுவதாக இல்லை. இதற்கிடையில் மலேசியாவும் பாலஸ்தின் மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு காந்திரமான கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.  

இந்நிலையில்தான் MAHB என்று சொல்லக்கூடிய மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டுக்கு சொந்தமான பங்குகள் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திற்கு விற்பதற்கு அம்மலேசிய நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. இஸ்ரேலுடன் தொடர்புடையது என்று நம்பப்படும் ‘பிளேக்ராக்’ நிறுவனத்திடம் நம் நாட்டுக்கு தொடர்புடைய பங்குகளை விற்கக்கூடாது என்று நமது நாட்டைச் சேர்ந்த பல சமூக ஆர்வளர்கள் எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


 அதற்கும் ஒரு படி மேலே போய் மைத்ரேயன் தனி நபராக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் தண்ணீர் மட்டும் அருந்துகிறார். இருந்தபோதும் அவர் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே வருகிறார்.      

 

டிக் டோக் சமூக ஊடகத்தில் இந்த போராட்டம் தொடர்பான சில பதிவுகளை காணும்போது அருவருக்க தக்கதாக இருக்கிறது. அது மலேசியர்களின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாகவும் இருக்கிறது. ஈழப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது இவர் எங்கு இருந்தார் என்று பலர் கேள்வி கேட்டிருப்பதை நான் பார்த்தேன்.

‘நம் நாடு’ எனும் பத்திரிக்கையிலும் ‘தினக்குரல்’ (புதியபார்வை) ஆகிய பத்திரிக்கைகளிலும் தலைமை நிருபராகவும், ஆசிரியர் குழுவிலும் நான் இருந்திருக்கிறேன். ஈழப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது தமிழ்பத்திரிக்கை அலுவலகங்கள் எந்தமாதிரியான பதட்டத்தில் இருந்தன என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஈழப் போராட்டம் என்பது அதன் ஆதரவாளர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது.

செய்தியாக வாசித்து கடந்து செல்பவர்களுக்கும், சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியில் ஈழப்படுகொலைச் செய்தியைப் பார்த்துவிட்டு கை கழுபவர்களுக்கும் அந்த உணர்வு இருக்குமா என எனக்கு உறுதியாக சொல்லத் தெரியவில்லை. காரணம் நமது நாட்டில் இன்னும் எத்தனை எத்தனையோ ஈழ அகதிகள் இருக்கிறார்கள். சாப்பாட்டிற்கே சிரமப் படுகிறார்கள். சில ஈழ உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டி எடுக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள். ஈழத்திற்கு என்ன செய்தீர்கள் என்று சமூக ஊடகங்களில் வாய் பேசுபவர்கள், இங்கே தனது வாழ்வாதாரத்திற்கே போராடுகள் அகதிகளுக்கு என்ன செய்தார்கள்? 

ஆனால், மைத்திரேயன் ஈழப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் பல மகஜர்களை அரசுக்கும், ஶ்ரீலங்கா தூதரகத்துக்கும் வழங்கினார். அதன் நகலை கொடுப்பதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நடையாக நடந்திருக்கிறார். இப்படிதான் எனக்கு மைத்திரேயன் அறிமுகம். ஶ்ரீலங்கா கண்டனப் போராட்டம் நடக்கும் எல்லா இடங்களிலும் மைத்திரேயனை காண முடியும். தவிர தமிழ்பள்ளிகள் தொடர்பான போராட்டம், தமிழர்களுக்கான போராட்டங்களில் மைத்திரேயனை அவ்விடத்தில் பார்க்கலாம். குழுவாக இல்லாமல் தனித்தே செயல்படுவார். இந்த உண்ணாநிலை போராட்டமும் அப்படியானதுதான்.

 -யோகி

 குறிப்பு : பத்திரிக்கை செய்திக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. 16 ஜூலை 2024 மைத்திரேயனின் உண்ணாநிலை போராட்டத்தின்போது எழுதியது. ஆனால், பத்திரிக்கை இந்தச் செய்தியை வெளியிடவில்லை.