வியாழன், 26 ஆகஸ்ட், 2021

போர்களத்திலும் அரசியல் களத்திலும் நின்ற போராட்டப் பெண்கள்

சுதந்திரம் என்பது மிக எளிமையாக பெறக்கூடியது இல்லை.  சுதந்திரம் என்பது சுக்கா மிளகா? என்று கேள்வி கேட்கிறது பாரதிதாசனின் ஒரு கவிதை. இன்று நோகாமல் நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் 1957-க்கு முன் ஜப்பானியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் பலர் சிந்திய ரத்தத்திலும், வேர்வையிலும் கண்ணீரிலும் உருவானது. பலரின் தியாகத்தில் கிடைத்த இந்தச் சுதந்திர நாளை  நாம் ஒருநாள் விடுமுறையில்  குதூகளித்து மகிழ்கிறோம்.

சுதந்திரத்திற்கு பிறகான நமது மலேசிய அரசியல் வரலாறு என்ன? அதில் நம்மவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகங்கள் என்ன? வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் நம்மவர்கள் குறித்த பதிவுகளை முறையாக கையாள்கிறோமா?  வரலாற்றில் இடம் பிடிக்காத ஓர் சிப்பாயாக பணியாற்றியவர்களின் குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா? இவற்றை குறித்த நம் புரிதல்கள் என்ன?  இருக்கும் ஆவணங்களும் செய்திகளும்  சரியாக நாம் புரிந்துக்கொள்ளும்படிதான் இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?  நம் தாய் மொழியில் அதை வாசிக்க முடியுமா? உள்ளிட்ட பல்வேறான கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடிந்தால் வரலாற்றில் அறிந்துக்கொள்வதிலும் நாட்டின்மீதான விசுவாசத்திலும் உங்களுக்கு சிறிதாவது ஈடுபாடு உள்ளது என்று சொல்லிக்கொள்ளலாம்.

இந்நிலையில் மலேசிய வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்து இன்னும்கூட  சரியான முறையில் பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது.  இரண்டாம் உலகப்போரின்  காலக்கட்டத்தில் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு ஆளான சிபில் காத்திகேசு முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக இங்கிருந்து ஐ.என்.ஏ இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையில் முக்கிய அங்கம் வகித்த ஜானகி ஆதிநாகப்பன் மற்றும் அதே படையில் ஒரு சிப்பாயாக போராடிய ‘ராஜாத்தி’ வரை சரியாக  இந்த மலேசிய மண்ணில் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு பத்திரிக்கை துறைக்கு வந்த காலத்திலிருந்தே இருந்துவருகிறது.

வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சுதந்திர தினத்தின் சிறப்பு மலரை அலங்கரிக்க மட்டும்தான், சுதந்திர போராட்டவாதிகளும் மலேசிய அரசியலில் முத்திரைப் பதித்தவர்களும் தேவைப்படுகிறார்களா?  இன்றைய நியூஸ் ‘பேப்பர்’ நாளைய வேஸ்ட் பெப்பர் என்ற ஆங்கில பதம் ஏனோ மனதைச் சுடுகிறது.  இருந்த போதிலும்  மக்களுக்கு நினைவுபடுத்தும் பொருட்டு அவர்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டிய கடப்பாடும் ஊடகங்களுக்கு இருக்கிறதும் மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் மலேசிய அரசியலில் ஈடுபட்ட நம் பெண்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த 64-வது சுதந்திர தினத்தில் அவர்களின் சேவையை போற்றும் வகையிலும் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். 


சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு  மலேசியாவில் சீனர்கள் மத்தியில்  மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரபெண்ணாவார்.  இந்தோனேசியா,  சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ஆம் ஆண்டு அவர் பிறந்தார்.  சிபிலின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் தொடங்கி  இங்கிலாந்தில் முடிந்ததாகும். அவர் மலேசியராகவே கருதப்படுகிறார். 1941- ஆம் ஆண்டில்  மலாயாவில் ஜப்பான்  ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  லட்சக் கணக்கான மக்கள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு  ஆளானார்கள்.  இதனால், ஜப்பானிய ஆதிக்க  எதிர்ப்புப் போராளிகள்  மறைந்திருந்து  ஜப்பானியர்களை  தாக்கினர். அத்தாக்குதலில்  போராளிகளும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரகசியமான முறையில்  டாக்டர் கார்த்திகேசுவும், சிபில் கார்த்திகேசுவும் மருத்துவம் பார்த்தனர். ஜப்பானியர்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்தால், இருவரையும் கைது செய்து சித்ரவதை செய்யத் தொடங்கினர். “போராளிகள் பெயரைச் சொன்னால்  போதும்” என்றும்  விட்டு விடுகிறோம் என்றும்  மன்னித்து விடுகிறோம் என்றும் ஜப்பானியர்கள் ஆசை காட்டினர். உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை என்று  அந்த சரித்திர நாயகி உணராமல் இல்லை.  தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லாமல் எல்லா வகை சித்ரவதைகளையும்  தாங்கிக் கொண்டார். பின்நாளில் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றவர் அங்கேயே மரணத்தை தழுவினார். அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில்  புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது.

 


எலிஸி சோமசுந்தரம்

1952-ஆம் ஆண்டு நாட்டில் முதல் முனிசிபல் தேர்தல்  கோலாலம்பூரில் நடந்தது. அதில் மூன்று இந்தியப் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.  தேர்தலில் வெற்றி பெற்ற டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனைதான்  நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அந்தத் தேர்தலில் அம்னோவை பிரதிநிதித்து போட்டியிட்ட  எலிஸி சோமசுந்தரத்தையும், மலாயா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்து போட்டியிட்ட திருமதி இராமச்சந்திரனையும் அறிந்ததும் இல்லை. அது குறித்த தெளிவான பதிவுகளும் இல்லை. அம்னோவின் தலைவர், அம்னோவின் பெண் வேட்பாளராக எலிஸியை  நிறுத்தியது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  அந்த வகையில் இன்று மலாய்க்காரர்களின் தேசிய கட்சியாக இருக்கும் அம்னோவில் முதல் பெண் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கிய முதல் பெண் வேட்பாளர் என்ற பட்டியலில் இடம் பிடிப்பவர் இந்தியப் பெண்ணான எலிஸி என்று வரலாறு பேசுகிறது. அந்தத் தேர்தலில் அவர் பெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.  எலிஸி சோமசுந்தரம் பொதுபணிகளில் அதிகம் ஈடுபட்டவர் என்ற குறிப்பை தவிர வேறு எந்த தகவல்களும் கிடைக்கபெறவில்லை.  1950-களில் அவருடைய கணவர் சோமசுந்தரம் ம.இ.காவில் மத்திய செயலவை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

 


திருமதி இராமச்சந்திரன்

1952-ஆம் ஆண்டு நாட்டில் நடந்த  முதல் முனிசிபல் தேர்தலில் போட்டியிட்ட மூன்று இந்தியப் பெண்களில் திருமதி இராமச்சந்திரனும் ஒருவர். இவரின் சொந்தப் பெயர் என்ன வென்று தெரியவில்லை. தனது கணவரின் பெயரிலேயே அவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.  திருமதி இராமச்சந்திரன் மலாயா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்து போட்டியிட்டார்.  அம்னோவிலிருந்து விலகி மலாயா சுதந்திரக் கட்சியை தொடங்கிய டத்தோ ஓன் பின் ஜபாரின் தேர்வாக திருமதி இராமச்சந்திரன் இருந்ததும் ஒரு வரலாற்று பதிவுதான். இவரைக் குறித்தும் வேறு எந்தப் பதிவுகளும் பெறமுடியவில்லை.

 


டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்

 மலேசிய வரலாற்றில் 1952-இல்  நடந்த முதல் முனிசிபல் தேர்தலில்அரசியல் வேட்பாளராக விண்ணப்பித்து வெற்றிப்பெற்ற முதல் பெண் என்பதுடன், டான்ஶ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் நகர மன்ற உறுப்பினராக இடம்பெற்ற முதல் மலேசிய இந்தியப் பெண் என்ற பெருமைக்கும் உரியவராவார். அவருக்குப் பிறகு டான்ஶ்ரீ விருதை இந்தியப் பெண்கள் எவரும் இன்னும் பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. முனிசிபல் தேர்தலில் மலாயா சுதந்திரக் கட்சி சின்னத்தில் ம.இ.கா வேட்பாளராக களமிறங்கிய  தேவகி கிருஷ்ணன், அதே ஆண்டில் நடந்த முனிசிபல் சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் பெண்களுக்கு கிடைக்கும் உயரிய விருதுகளான  ‘தொக்கோ வனிதா’ விருதும் ‘துன் பாத்திமா’ விருதும் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் பெற்றிருக்கிறார் என்பதும் பெருமைக்குறிய விஷயமாகும்.

புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்

 புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் தனது 18-வது வயதிலேயே  இந்திய சுதந்திர போராட்டத்திற்காக களமிறங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர போராட்ட செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவர் ஜான்சிராணி படைப் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பர்மாவரை சென்று போர்களத்தில் போராடியிருக்கிறார். 1980களில் ம.இ.காவின் மேலவை உறுப்பினராக இரு தவணைகள் இருந்திருப்பதோடு செனட் சபையில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்  ஜானகி ஆதிநாகப்பன்தான். 1997-ல் புதுடில்லியில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர பொன்விழாவில், இவருக்கு உயரிய விருதான பத்மஶ்ரீ பட்டத்தை வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவப்படுத்தியது. இந்திய நாட்டில் அந்நாட்டின் உயரிய விருதை பெற்ற முதல் மலேசியர்  புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்தான்.

சத்தியவதி நாயுடு

இந்திய சுதந்திர போராட்டத்தின் (ஐ.என்.ஏ) ஜான்சிராணிப்  படைப் பிரிவில் சக்தியவதி நாயுடுவும் ஒரு வீராங்கனையாக போராடியவர்தான். அவர் ஜான்சிராணி படையில் ‘துணைத் தளபதியாக இருந்தார்.  ம.இ.கா மத்திய செயலவையின் முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.  கட்சியின் மாதர் பிரிவில் இருந்த இவர், பிரச்னையோடு கட்சியை நாடி வரும் பெண்களை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பினையும் பெற்றிருந்தார்.


ராஜாத்தி (‘ஜான்சிராணிப்  படைப் பிரிவில் மலேசிய சிப்பாய்’)

 கோலாலம்பூர் பத்து வட்டாரத்தில் அம்பாட் டின் அடுக்குமாடியில் வசித்து வந்த இவரை நான்  புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் மறைவின் போது அவரின் உறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வந்திருந்தபோது சந்தித்தேன். நடுத்தர குடும்ப சூழலைக் கொண்டிருந்த அவரை நேர்காணல் எடுக்க சம்பதமும் பெற்றிருந்தேன். ஆனாலும், அம்முயற்சிக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமலே போனது. ஆனாலும் கிடைத்த தகவலை பதிவு செய்வதும் அவசியமானதுதானே.

 

ராசம்மா பூபாலன்

மலாயாவில் சுதந்திரத்திற்காக போராடிய பெண் போராளிகளில் ராசம்மாவும் ஒருவர். அவர் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சிராணிப்படையில் இருந்த இவர் இரண்டாம் உலகப் போரின்போது 16 வயதில் பர்மாவில் பணியாற்றினார். மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். அவர் மலாயா மகளிர் ஆசிரியர்கள் கூட்டமைப்பை (WTU) 1960 இல் நிறுவினார்.  பெண் ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் அந்த கூட்டமைப்பு. இவர்கள் மேற்கொண்ட முயற்சியிலும் போராட்டத்திலும் 1964 இல், ஆண்களுக்கு  சமமான ஊதியத்தை அடைவதில் அந்த அமைப்பினர் வெற்றி பெற்றனர்.

 


தோ புவான் உமா சம்பந்தன்

ஒரு பட்டதாரியான உமா சுந்தரி , 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்து உமா சம்பந்தன் ஆனார். தோட்ட துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்த துன் சம்பந்தன், தோட்ட மக்களிடம் பத்து வெள்ளி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்தப் பிரச்சாரத்தில் துன்னோடு இணைந்து சேவை செய்தார் உமா சம்பந்தன். அந்தப்  பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்.  துன் சம்பந்தன் காலமானப்பிறகு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் சேவை செய்தார் தோ புவான் உமா சம்பந்தன். பின் சில குறிப்பிடவிரும்பாத காரணங்களுக்காக  விலகிக்கொண்டார்.  பெண்களின் முன்னேற்றத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவின் பெண்கள் மாநாடுகளில் கலந்துக்கொண்டிருக்கிறார் உமா சம்பந்தன். 1992-ஆம் ஆண்டு துன் பாத்திமா தங்கப் பதக்க விருது இவருக்கு வழங்கி கௌரவித்தார்கள். 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ புவான் உமா சம்பந்தனுக்கு கோலாலம்பூர் இந்திய சங்கம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி சிறப்பித்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டது. 

 மீனம்பாள் ஆறுமுகம்

ம.இ.காவின் நீண்ட நாள் உறுப்பினரான இவர், 1975 முதல் 1978 வரை மத்திய செயற்குழுவில் இடம் பிடித்திருந்தார். ம.இ.கா- வின் முதல் தேசிய மகளிர் பகுதி தலைவர் என்ற பெருமைக்குரியவரும் இவரே. இவரின் கணவர் ஆறுமுகமும் பினாங்கு ம.இ.கா கிளையின் தலைவராக இருந்தார். மீனம்பாள் ஆறுமுகத்திற்கு 2014-ஆம் ஆண்டு ம.இ.கா நேத்தா ஜி அரங்கத்தில் சிறப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில்தான் நான் அவரை முதல் முறையாக பார்த்ததோடு, அவரைக் குறித்து தெரிந்தும் கொண்டேன். பிரபல பாடகர்களான எலிகேட்ஸ் சகோதரர்களின் தாயாரான மீனம்பாள் ஆறுமுகத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்த பதிவுகளும் சரியாக எழுதப்படவில்லை.

போராட்டங்களில் பெண்கள்

அடிப்படை உரிமைக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் தோட்டங்களில் வேலை செய்த பெண்கள் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுவும் விடுதலையை நோக்கிய ஒரு போராட்டமாகவே நான் காண்கிறேன்.  நாட்டில் ஒரு சில மாநிலங்களில் தொடங்கிய இந்திய சங்கங்களில் இணைந்து இந்தியப் பெண்கள் பல்வேறு சேவைகளிலும், போராட்டங்களிலும் களம் கண்டிருக்கின்றனர். 1947-ல் கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டத்தை பெண்களே ஒன்று கூடி நடத்தியதை ஜனநாயக  நாழிதல் பதிவு செய்திருக்கிறது.  

இன்றுவரை பல கட்சிகளிலும் அமைப்புகளிலும் நமது பெண்கள் ஈடுபட்டுக் கொண்டும் சேவையாற்றிக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களை காலத்தால் பதிவு செய்ய வேண்டிய கடப்பாட்டையும் அந்தக் கட்சிகளும் அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி : தமிழ்மலர் 29/8/2021

மேற்கோள்: 200 ஆண்டுகள் தமிழர் வரலாறு

 

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 5

செமாய் மக்களின் நம்பிக்கைகள்

சற்று ஆராய்ந்துப்பார்த்தால் கனவு குறித்த நம்பிக்கையும், கனவுப் பலன்களும் மனிதர்களிடத்தில் நிரம்பி இருக்கிறது. குறிப்பாக சீனர்களின் சமூகத்தில் மூட நம்பிக்கைகளும் கனவு நம்பிக்கைகளும் பெரிய அளவில் அவர்களின் வாழ்க்கையோடு  பிணைந்திருக்கிறது. பூர்வக்குடிகளுக்கு மட்டும் அது விதிவிலக்கு அல்ல. ஆனால், அனைத்து பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.  மா மேரி பூர்வக்குடி சமூகத்தினரின் கனவு நம்பிக்கையை ஆராய்ந்தால் மிக ஆச்சரியமாக இருக்கும்.  அவர்களின் கனவுக் குறித்து ஆங்கிலேயர் ஒருவர் புத்தகமே போட்டுள்ளார்.  செமாய் பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கை நமக்கு விசித்திரமாக தோன்றும். அது அமானுஷ்யத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. 

கொண்டாட்டம் அல்லது பண்டிகையில்லாத நாட்களில் அவர்கள் போலியாக ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை செய்வதில்லை. அது கெட்ட சகுனமாக அமைந்துவிடும் என்று நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. பாடுவதுப் போல கனவுக் கண்டால், உற்சாகம் கொடுக்ககூடிய சம்பவம் நடக்குமென்று  அவர்கள் நம்புகிறார்கள்.  



அதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு கடந்த தேர்தலையே உதாரணம் சொன்னார்கள்.  கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பூர்வக்குடி கிராமத்திற்கு வந்திருக்கிறார்.  ஒரு கலாச்சார நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அவர்களின் பாரம்பரிய நடனத்தை தவிர்த்துவிடலாம் என்ற பூர்வக்குடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்  வேறு வழியில்லாமல் அவர்கள் நடனம் ஆடியிருக்கின்றனர். தேர்தலில் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.

ஆவி நம்பிக்கை மாதிரியே இவர்களிடத்தில் கடவுள் நம்பிகையும் இருக்கிறது. இவர்களின் கடவுள்  இயற்கைதான்.  யாராவது தவறு செய்தால், கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று நம்புகிறார்கள்.

பூமியை பிளக்ககூடிய சூழலில் (விவசாயத்திற்குகூட)  அனுமதி வேண்டியே மண் வெட்டியை பூமியை நோக்கி பாய்ச்சுகின்றனர்.  அதேபோல் காட்டில் இருக்கும் சமயங்களில் வாய்விட்டு சிரிக்கவோ, புன்னகைக்கவோ கூடாது. அதோடு வனத்தில் இருக்கும் எல்லா நேரத்திலும் யாரையும்  கிண்டல் செய்யவோ, பகடி வதை செய்யவோ கூடாது. அது மிருகமாக இருந்தாலும் சரி பிராணியாக இருந்தாலும் சரி. ஓர் உயிரை வனத்தில் கவலை கொள்ள செய்வது செமாய் பூர்வக்குடிகளுக்கு கெட்ட சகுனமாகும்.



செமாய் மக்கள் பூர்வீக கிராமமான போஸ் லானாய் எனும் கிராமம் தற்போது பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்களின் வழிவழியாக  உடனிருக்கும்  தெலோம் நதி, கேமரன்மலையிலிருந்து மாசடைந்து, மிகவும் அசுத்தமாக ஓடி வருகிறது.  காட்டுமரங்களை காட்டுத்தனமாக வெட்டி வெளியாட்கள் கொண்டு போகிறார்கள்.  இவர்களை வெளியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என நிறைய பிரச்னைகளை தற்போது செமாய் இன பூர்வக்குடி மக்கள் சந்தித்து வருகின்றனர்.  அதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.


நான் முன்பே சொல்லியதுபோல, அவர்களின் சமூகத்தோடு நேரத்தை செலவழிக்கக்கூடிய இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமல் போகலாம்.  அதை மனதில் நிறுத்தியே ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

பூர்வக்குடிகள் பெண்கள் குறித்து எனக்கு சற்று கவலை ஏற்பட்டது. எனக்கு உணவு பரிமாரிய பெண்கள் குறித்து சொல்லியிருந்தது நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பெண்கள் அடுப்பாங்கரையில் சாப்பிட்டதாக சொல்லியிருந்தேன்.  அந்தக் காட்சி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. பூர்வக்குடிகள் மத்தியில் ஆண்-பெண் பேதமில்லை என்று கூறிக்கொண்டிருந்த மத்தியில், அவர்கள் பழகிவரும் நாகரீகம் ஆண்-பெண் பேதத்தையும் கற்று கொடுத்துவிட்டதோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. 

கலந்துரையாடலின்போது கூட அவர்கள் தனியே தான் அமைர்ந்திருந்தனர்.  இதுக்குறித்து நான் ஆழமாக எதையும் கேட்கவில்லை. அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டால், உரையாடலில் தடைபடுமோ என்ற ஐயப்பாடு இருந்தது.


செமாய் பெண்களிடம் விடைபெற்று கிளம்பும்போது,  மிகவும் நெரிழ்சியான   தருணமாக இருந்தது. என் பெயரை அவள் சொல்லும்போது,  உச்சரிப்பு வேறுமாதிரியாக இருந்தது. நான் கட்டி அணைத்து விடைபெற்றேன்.  அவர்களிடமிருந்து  கொண்டு வருவதற்கு  நான் எதையும் வேண்டுவரவில்லை. அவர்களின் போராட்டங்களில் பங்கு எடுத்துக்கொள்வதைத் தவிர.  அங்கிருக்கும் ஒரு மரத்தில் வனத்திடம் அனுமதி வாங்கி என் அடையாளத்தை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

முற்றும்..

பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html 

பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html

பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html

பாகம் 4 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/4.html 


செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 4


1990-க்கு முன்பு காட்டுப் பிரம்பு, தவளை, பிசின் உள்ளிட்ட வன உருப்பிடிகளை விற்று, அப்பணத்தைக் கொண்டு தங்கள் பொருளாதார தேவையை  பூர்த்தி செய்திருக்கின்றனர். 1990-க்குப் பிறகு  பூர்வக்குடிகள் ரப்பர் மரம் நட்டு அதன் வழியே பொருளாதாரத்தை ஈட்டுகின்றனர்.  ரப்பர் விதைகளை அரசே அவர்களுக்கு வழங்குகிறது.  அதுப்போக வனத்தை விட்டு வெளியிலும் சிலர் வேலை செய்கின்றனர். பள்ளியில் பாதுகாவலராகவும், சமையல்காரர்களாகவும்  அவர்கள் வேலை செய்கின்றனர். 

மேலும் சிலர், சின்னதாக மீன், இறால் ஆகியவற்றை வளர்த்து  உணவுக் கடைகளுக்கு விற்கிறார்கள்.  சீசன் காலத்தில் டுரியான் பழம் இவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுகிறது.  எதிர்பாராத  இயற்கை சீற்றம் சமையங்களில் மட்டும்  சற்று சிரமத்தை எதிர்கொள்ளகூடியதாகி விடுகிறது என்று அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டனர்.

பிறப்பு-இறப்பு-திருமணம்  உள்ளிட்ட விஷயங்களிலும்கூட நவீனம் எட்டிப் பார்த்தாலும், முழுமையாக அவர்கள் நவீனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிடவில்லை.  ஒரு சில சடங்குகளில்  அவர்களின் பாரம்பரிய சடங்குகள் மிகத் தீவிரமாக கடைபிடிக்கவேப் படுகிறது.



இறப்பு

செமாய் இனக்குடி மக்களில் யாராவது இறந்துவிட்டால், அவரின் உடலை குளிப்பாட்டி, பாயில் சுற்றி, புதைத்துவிடுகின்றனர்.  இப்போதெல்லாம் பாத்தேக் துணியுடுத்தி இறந்தவர் உடலை தங்களின் குடும்ப முன்னோர்களை புதைத்த இடத்திலேயே புதைக்கின்றனர்.  எரிக்கும் வழக்கம் இவர்களுக்கு இல்லை. கண்டிப்பாக 6 நாட்களுக்கு  துக்கம் அனுசரிக்கப்படுகிறது.  6 நாட்களுக்குப் பிறகு, புதைத்த இடத்தில் நீர் வார்க்கின்றனர்.  நெருப்பு மூட்டமும் போடுகின்றனர். மேலும்,  இறந்தவர் வீட்டில் சில விலக்குகளுடன் 2-3 மாதங்கள்வரை  துக்கம் நீட்டிக்கவும் படுகிறது.  இறந்தவரின் நினைவு இருக்கும்வரை துக்கம் இருக்கவே செய்யும் என்கின்றனர் செமாய் சமூகத்தினர்.  மண்ணை வெட்டுவது, காட்டில் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் இந்த துக்க காலங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை.  எல்லா சமூகங்களைப் போலவும் இவர்களும் இறந்தவர்களை வழிபடுகின்றனர்.  உலகம் முழுக்கவே இருக்கும் பூர்வக்குடிகள் ஒன்று சேரும் புள்ளியாக நான் பார்ப்பது ஆவி வழிப்பாட்டைதான்.  



திருமணம்

காதல் திருமணமாகவே இருந்தாலும்கூட பெற்றோர்கள் சம்மதம் மிக அவசியம். அதை ஒரு சடங்காகவே நிறைவேற்றுகின்றனர்.  சொந்தத்தில் மற்றும் தங்கள் சமூகம் இல்லாத பிற சமூகத்தோடும் திருமணம் அனுமதியில்லை. ஆனால், இப்போது அதெல்லாம் யாரும் பின்பற்றுவதில்லை. பூர்வக்குடி அல்லாதவர்களைக்கூட இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு  திருமணம் செய்துகொடுப்பதில்லை. அப்படியான சிக்கல் வரும்போது நீதிமன்றம் வரைக்கும்கூட சென்று அந்த திருமணத்தை ரத்து செய்கின்றனர்.  

திருமணம் நிச்சியிக்கப்பட்டுவிட்டால், திருமணத்திற்கு அனுமதி கோரி ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. 6 நாட்களுக்குப் பிறகு இரு குடும்பத்திற்கும் சம்மதம் என்றால் திருமண வேலை தொடங்கப்படும்.  விருப்பம்  இல்லை என்றால் திருமணத்தை விண்ணப்பித்தக் குடும்பம் அபராதத் தொகையை  கோரிக்கை கொடுத்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். அதற்கு ‘Duit buang malu’ (அவமானத்தை கலைதல்) என்று சொல்லப்படுகிறது.  

இரு குடும்பங்களும் சம்மதித்த திருமணத்தை பெண் வீட்டார் ஏற்று நடத்த வேண்டும்.  மேலும், பணமும் கொடுக்க வேண்டும்.  திருமணச் சடங்கில் கைக்குட்டை கொடுத்து தங்க மோதிரம் அணிவது இன்று நடைமுறையில் இருக்கும் சடங்காகும். தென்னை ஓலையில் மேலாடை, தலைக் கிரீடம்,  என்று உடை செய்து அணிந்தவர்கள், தற்போது திருமணத்தில்  நாகரீகமாக உடுத்திக்கொள்கின்றனர். ஓலையால் செய்யப்பட்ட தலைக் கிரீடம் மட்டும் தவறாமல் அணிகின்றனர்.  திருமணத்திற்கு பிறகு  கணவன் – மனைவிக்கிடையே மனக்கசப்பு ஏற்படும்போது  அதை ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்கிறார்கள்.  தவறு இருக்கும் பட்சத்தில் தவறு செய்தவர் பணமாக தண்டம் செலுத்த வேண்டும்.  விவாகரத்து என்பது இவர்கள் சமூகத்தில் இல்லை.

குழந்தை பிறப்பு

கர்பமாக இருக்கும் பெண்கள் சில  பத்தியம் மற்றும் விலக்குகளை கடைபிடிக்கிறார்கள்.  பிரசவிக்கும் வரை பன்றி இறைச்சி, மான், மாட்டிறைச்சி, முள்ளம் பன்றி இறைச்சி, கெழுத்தி மீன் இவைகளை உண்பதில்லை.  அதோடு, கணவர்  வேட்டையாடுவதும்,  கோழி உட்பட  உணவுக்காககூட மிருகங்களை கொல்வதை தவிர்கிறார்கள்.  குழந்தை வயிற்றில் இருக்கும் காலம் தொடங்கி பிரசவிக்கும் வரை,  கிராமத்து பெண்களே பேருகால நடைமுறைகளை  செய்கின்றனர். அதாவது பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்துப் பெண்கள் இந்த கடமையில் மேற்கொள்கின்றனர். வீட்டில் பிரசவிக்கும் குழந்தைகள்தான் அதிகம். பிரசவத்திற்கு பிறகு,  அம்மாவின்  அடிவயிற்றுப் பகுதியில் சக்கரவல்லி கிழங்கு  இலையை சூடு பண்ணி  வைக்கிறார்கள்.  அது ஒரு பிரசவ மருத்துவம். அதோடு குழந்தையுன் தொப்புல் கொடியையும் மூங்கிலில் அடைத்து, மரத்தில் சொறுகி விடுகின்றனர்.  6 நாட்கள் பத்தியத்திற்கு பிறகு இயல்பு வாழ்கையை மேற்கொள்கின்றனர் செமாய் பழங்குடியினர்.

தொடரும்..

பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html 

பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html

பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html


செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 3


1950-களில் ஈயம் எடுப்பதற்காக சீனர்கள் சிலரை  பூர்வக்குடிகள் கிராமம் இருக்கும் சுவா ஆற்றங்கரையருகே குடியமர்த்தியிருக்கின்றனர் பிரிட்டிஷார். சில சீன ஆண்கள் பூர்வக்குடி பெண்களை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகளும் பிறந்திருக்கிறது. எனது தந்தையும் சீனர்தான் என்று பூர்வக்குடியான ஜெப்ரி தெரிவித்தார். பிரிட்டிஷ், ஆட்சிக்குப் பிறகு சீனர்கள் போஸ் லானாய் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு முந்திய வரலாறும் அதாவது பஹாங் சுல்தான் வரலாற்றிலும் செமாய் பூர்வக்குடிகளின் தொடர்பு இருப்பதாக செமாய் மக்கள் ஆதரப்பூர்வமாக நம்புகிறார்கள். பஹாங் மாநில சுல்தான்களில் ஒருவரான ராஜா புக்கிட் பேதோங், செமாய் மக்கள் வம்சாவழி என்று சொல்லப்படுகிறது.

இப்படி பல வரலாறுகளை, ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும், வாய்வழிப் பதிவாகவும்  செமாய் பூர்வக்குடிகாள் வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கான  கிராமத் தலைவரை இரண்டு வழிகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலாவதாக பரம்பரை அடிப்படையிலும், இரண்டாவதாக அவர்களின் கெட்டிக்காரத்தனம்,  புரிதல், சமூகம் குறித்த தெளிவு, பிறரோடு உரையாடுதல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்போது தூணி என்பவர் அவர்களுக்கு ‘பாதின்’ (தலைவர்) ஆக இருக்கிறார்.

செமாய் மக்கள் கிராமத் தலைவர்களில் ‘ராஜா துப்பாய்’ என்பவர் முகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் இருந்தவர் அணிலைப் போல படு வேகமாக மரம் ஏறுவதற்கும், மரத்திற்கு மரம் தாவுவதற்கும் வள்ளுனராம். அதனால் அவருக்கு அந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை parachute-டில் பறந்துவந்து மரத்தில் சிக்கிய ஆங்கிலேயரை ராஜா துப்பாய்தான் காப்பற்றியுள்ளார்.



இப்படியான பல சுவாரஸ்யமான கடந்த கால வரலாறுகளை செமாய் மக்கள் பகிர்ந்துக்கொண்டனர்.  இந்த உரையாடல் முடிய மாலை ஆகிவிட்டது. எங்களுக்கு உணவு சமைப்பதற்காக மூன்று பெண்கள் பரப்பாக இருந்தனர். நான் அவர்களுக்கு உதவச் சென்றேன். பூர்வக்குடிகள் சமைக்கும் உணவு மட்டுமல்ல, பூர்வக்குடிகளின் உணவு என்பது வித்தியாசமாகத்தானே இருக்கும் என்ற ஆர்வம்தான். உண்மையில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. காரணம் அவர்களின் உணவு மலாய்க்காரர்களின் உணவை ஒத்தியிருந்தது. ஆனால், ஒரே ஒரு உணவு மட்டும் வித்தியாசமானது பூர்வக்குடிகளுக்கானது. அவர்கள் மூங்கில் சோறு செய்திருந்தனர். அதாவது பதமான மூங்கிலை உடைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் உணவு. அது வெண்மையான வர்ணத்தில் மீ போல இருந்தது. அதை வேக வைத்து, மஞ்சள்-பால்  சோறாகவும், வெள்ளை சோறாகவும் தந்தார்கள். அதில் குழம்பு, தொட்டுக்கொள்ள பொறித்த மீன், இடி சம்பல் என்று விருந்து தடல்புடலாக இருந்தது. ருசியாகவும் இருந்தது. பூர்வக்குடிகள் இப்படிதான் சமைக்க பழகிக்கொண்டு விட்டனர் என்று அவர்கள் பின்பு சொன்னார்கள். நாகரீக மாற்றம் அவசியம்தானே. மனித இனமே கற்கால தொடக்கம்தான் இல்லையா…

உணவு வேளை வந்தது, செமாய் பெண்கள் சமைத்த உணவு, பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வரவேற்பறையின் நடுவில் வைத்தனர். உட்காருவதற்கு பாயை விரித்தனர். சோலார் விளக்கின் ஒளி எந்த நேரமும் நிற்றுவிடும் நிலையில் கண்ணை சிமிட்டிக் கொண்டிருந்தது. 8 மணிக்குமேல் விளக்கு எதுவும் எரியாது, தேவைக்கு மெழுகுவர்த்தி பயன்படுத்திக்கொள்ள பூர்வக்குடி தோழர் எங்களுக்கு அறிவுறுத்தினார்.


சாப்பிட அமர்ந்தோம். சாப்பிட்டோம். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். பெண்கள் யாரும் அங்கு ஆண்களோடு அமரவில்லை. அவர்கள், சமைக்கும் இடத்தில் தனியே உட்கார்ந்து சாப்பிட்டனர்.

உணவுக்குப் பிறகு, சிறிது நேரத்தில் சோலார் விளக்கு அணைந்துக்கொண்டது. வீட்டிற்கு வெளியே தீ மூட்டப்பட்டது. அன்று பௌணமி என்பதால் நிலா  வெளிச்சம் அந்த அடர் கானகத்தின் நதியில் பட்டு மின்னிக்கொண்டிருந்தது.  என்னைச் சுற்றியே மிகப் பிரகாசமாக இருந்தது.  கூடவே மின்மினி பூச்சிகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.  இந்த ரம்மியமான சூழலை என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை வரும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. தனிமைதான் இந்நேரத்திற்கு  எத்தனை இனிமையைக் கொடுக்கிறது.

பக்கத்தில் ஒரு வீட்டிற்கு போயிட்டு சீக்கிரத்தில் வந்திடலாம் என்று பூர்வக்குடி பெண் என்னை அழைத்தார். இந்த இருட்டு நேரத்திலா? என்றதும் சிரித்தவர் எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான் என்றார். மோட்டார் படகில்தான் போகப்போகிறோம். சீக்கிரம் வந்திடலாம் என்றார்.  பூர்வக்குடி பெண்கள் கிட்டதட்ட எல்லாருமே படகை செலுத்துகிறார்கள்.  மூங்கிலால் கட்டப்பட்ட பூர்வக்குடிகளின் குடிலிலிருந்து  படகுக்குச் செல்லும் பாதை மிகவும் சறுக்கலானது.  நான் வரும்போதே மிகவும் சிரமப்பட்டுதான் ஏறி வந்தேன். அது ஞாபகத்திற்கு வரவே இரவு நேரத்தில் நான் அபாயத்தை நினைத்து, ஆசை இருந்தாலும் தவிர்த்து விட்டேன்.  தவிர எனக்கு  செமாய் மக்களின் தகவல்களை சேகரிக்க சில உரையாடல்கள் அவசியமாக இருந்தது.  அந்த உரையாடலுக்கான நேரம் எனக்காக  கடந்துக்கொண்டிருக்கும்போது எப்படி அதை தவிர விடுவேன்.

நெருப்பு வெளிச்சத்தில்  அவர்களோடு உரையாடத் தொடங்கினேன்.  நான் அவர்களின் விருந்தாளி என்பதால், மிகவும் மகிழ்ச்சியாகவே அவர்கள் என்னை அணுகினார்கள்.  நவீனத்திற்கு பழகிவிட்ட அவர்கள் பொருளாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள உரையாடலை தொடங்கினேன்.

தொடரும்..

பாகம்1: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html

பாகம்2: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html 

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 2



உள்
வனத்தின் உள்ளிருக்கும் அந்த கிராமத்திற்கு, ‘தெலோம்’ நதி வழியாக செல்ல வேண்டும். தெலோம் நதி  செமாய் பூர்வக்குடிகளின் வாழ்க்கையோடு பிண்ணி முடிஞ்சிருக்கும் ஒரு நதியாகும். மோட்டார் படகெடுத்து சுமார் 1 மணி நேரம் பயணம் செய்து வனத்திற்குள் செல்ல வேண்டும்.

இப்படியாக படகில் பூர்வக்குடி கிராமத்திற்குச் செல்வது எனக்கு இரண்டாவது அனுபவமாக இருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். மிகப்பழமையான காட்டுமரங்கள், செடிகள், கொடிகள், அரிய வகைப் பறவைகள், தும்பிகள், வண்ணத்துப்பூட்சிகள், என மனதை சிதறடிக்கிறது அந்தப் பயணம். நதியில் காணப்படும் கற்பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமிக்ஞைகளாக பூர்வக்குடிகளுக்கு இருக்கிறது. அந்த சமிக்ஞயை அவர்கள் வரும்போதும்-போகும் போதும் மீறுவதேயில்லை. சீரான ஒரு ஒழுங்கு இருந்தது.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே அவர்கள் கிராமத்திற்கு படகைச் செலுத்துகிறார்கள். இந்த நேரம் தவறினால் மறுநாள்தான் நாம் பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆண்-பெண் இருபாலருமே படகைச் செலுத்துகிறார்கள். நான் படகில் ஏறுவதற்கு முன்பு, பதின்மவயது மதிக்கதக்க சிலரைப் பார்த்தேன். கழுத்துவரை தண்ணீர் நிற்க கையில் ஏதோ தூக்கி பிடித்தபடி 5-6 பேர் நதியில் நடந்துபோய்கொண்டிருந்தனர். கரை வந்ததும் கையில் இருந்ததை உதறி மேல் சட்டையாக அணிந்துக்கொண்டு நடையைக் கட்டினர். இதிலிருந்து நதி ஆழமில்லை என்பதும் தெரியவருகிறது.




சுமார் ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு, மூங்கிலால் அமைக்கப்பட்ட குடில்கள் அமைந்தப் பகுதியில் படகு நின்றது. வானின் நீல நிறத்தில் புதிய ஓர் உலகிற்கு வந்துவிட்டமாதிரி நான் உணர்ந்தேன். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவீன நாகரீகத்திற்கு நன்கு பழகிவிட்டவர்களாக இருந்தார்கள். இவர்களின் வீடு, தனி அறைகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. சமையல் அறையும் இருந்தது. கழிப்பறை மற்றும் குளியலறையை வீட்டிற்கு வெளியில்  கட்டியிருந்தார்கள். தண்ணிர் பயன்பாட்டுக்கு  மலைப்பகுதியிலிருந்து குலாய் இணைத்திருந்தனர். பனியுருகி நீராக வருவதுபோல், வனத்திலிருந்து வந்த தண்ணீர் ஜில்லென இருந்தது. இவர்களில் பலர் நன்கு படித்திருந்தனர். சில பூர்வக்குடியின் வாரிசுகள் பலகலைக்கழகத்தில் பயில்வதையும் அறியமுடிந்தது.

மற்ற பூர்வக்குடிகளைக் காட்டிலும் இந்த செமாய் பழங்குடி சமூகம் மலேசிய  வரலாற்றில் வழுவான இடத்தைப் படிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரிலிருந்து இவர்கள் மலேசிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடத்தினை பிடித்திருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது மலேசிய நாட்டில் ஊரடங்கை ஜப்பான் அறிவித்திருந்த காலத்தில், ஜப்பான்காரர்கள் செமாய் மக்கள் வசித்த வன குடியிருப்பின் வழியே, கம்யூனிஸ்ட் போராளிகளான சீனர்களை தேடிப்பிடிக்க போயிருக்கின்றனர். அந்நேரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க, ஜப்பானியர்கள் செமாய் குடியிருப்பில் ஒதுங்குவது உண்டு. அப்பொழுதுவீட்என்பவர் பழங்குடிகளின் தலைவராக இருந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் போராளிகளை பிடிப்பதற்கு பூர்வக்குடிக்ளின் உதவியையும் நாடியிருக்கின்றனர் ஜப்பானியர்கள்.  

அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆதரவாக ஒரு படையாகவே செயலாற்றியிருக்கின்றனர் செமாய் பூர்வக்குடிகள். வரலாற்றில் பெரிதாக  இந்த விஷயங்கள்  பேசப்படவில்லை என்றாலும் அவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தலைவலியாக இருந்தபோது, காட்டில் மறைந்திருந்த அவர்களை பிடிப்பதற்கு பிரிட்டிஷார் நாடியது பூர்வக்குடிகளைத்தான் . காட்டில் மூலை முடுக்கையெல்லாம் விரல் நுனியில் வைத்திருந்த பூர்வக்குடிகளின் உதவி மிக அவசியமானதாக பிரிட்டிஷாருக்கு இருந்தது. பூர்வக்குடிகளின் தலையீட்டால், கம்யூனிஸ்களும் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவான பூர்வக்குடி படையில், குழுவுக்கு  8 பூர்வக்குடியினர் அங்கம் வகித்தனர். இந்தக் தகவல்கள் எழுத்து பூர்வமாக பதிவில் இருந்தாலும், மறக்காமல் தங்களின் அடுத்த சந்ததியினருக்கு கிடத்துவதை தவறுவதில்லை. மேலும்,  அந்தக் காலக்கட்டத்தில்  விமானத்திலிருந்து உணவு கொண்டு வந்து பூர்வக்குடிகள் வசிக்கும் கிராமத்தில் போட்டுச் சென்றதையும் அவர்கள் நினைவு படுத்தினர். விமானம் தரையிரங்கும் இடம்கூட பிரத்தியேகமாக அந்த வனத்தில் இருந்திருக்கிறது.



இந்த சமூக மக்கள் வரலாற்றில் பேசுவதற்கு மற்றுமொரு காரணம், Fort Dixon எனும்காட்டு டிக்சன் கோட்டை’. பிரிட்டிஷ் கட்டிய இந்தக் கோட்டை பழங்குடி மக்களின் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டிருக்கிறது. நாம் சந்தித்த பலர் அங்கு கல்வி பயின்றவர்களாகத்தான் இருந்தார்கள். அதோடு, கிளினிக், தங்கும் விடுதி, ராணுவ ஆயுதங்களை வைக்கும் கிடங்காகவும் டிக்சன் கோட்டை இருந்திருக்கிறது. அங்கு வேலை செய்யும் பழங்குடிகளுக்கு மாதச் சம்பளமாக 75 ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்டை காட்டின் மையப்பகுதியில், 1955-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. டிக்சன் என்பவர் அங்கு கொலைசெய்யப்பட்ட ஒரு பிரிட்டிஷ் அதிகாரியாவார். அவரின் ஞாபகமாகவே கோட்டைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.  கோட்டை பயன்பாட்டில் இருந்தபோது டாக்டர் போல்டன்  என்கிற ஆங்கிலேய மருத்துவர் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். அவர் பூர்வக்குடிகளுக்கும் டாக்டராக இருந்திருக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்தக் கோட்டை மலாயா ராணுவத்தினரின் வசம் வந்தது.

தொடரும்..

பாகம் 1 வாசிக்க  https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html