வியாழன், 9 ஜூன், 2022

நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா) ( பாகம் 4 ) Lang Tengah Terengganu


என்னைப்போல இயற்கை விரும்பிகளுக்கு லாங் தீவைப் பார்க்கும்போதே ரொம்பவும் ஸ்பெஷலாக இருக்கும்போது, அதற்கும் மேலே ஸ்பெஷலாக என்ன இருக்கிறது என சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக இருக்கிறது.

பயணத்தின் இரண்டாம் நாளில் நாங்கள் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்துக்கொண்டு மலையேற்றத்திற்கு தயாராறோம். தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 20-30 நிமிடங்களில் மலையேறி முடிந்த இடம் சூரியன் உதிக்கும் இடமாகும். இருண்மையிலிருந்து மெல்ல வெளிச்சத்தைத்தை நோக்கி இந்த பூமி மலர்வதை, கடலிலிருந்து கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்துக்கொண்டு நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். மலையிலிருந்து பார்க்ககூடிய அனைத்தும் மனதில் பரவசத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. 

மெல்ல வெள்ளி முளைத்து, மிக நிதானமாக மேலிருந்து வெளிவந்ததை நாங்கள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் பதிவு செய்துக்கொண்டோம். திரைப்படங்களுக்கு பாடல் காட்சிகளை எடுக்க இடம் தேடுவார்கள் அல்லவா அதுமாதிரியான இயற்கையாகவே மிக அழகான ரம்மியமான காட்சிகளை பதிவு செய்யக்கூடிய இடமாக அது இருந்தது. சூரிய உதயத்தைப் பார்த்தப் பிறகு நீச்சல் தெரிந்தவர்கள் மலையிலிருந்து கடலில் குதித்து நீந்திக்கொண்டே லாங் தெஞா தீவை வந்தடைவார்களாம். நமக்கு அந்த அளவுக்கு திறமையில்லை. ஆதலாம் வந்த வழியே திரும்பி நடந்தோம்.


காலை உணவிற்குப் பிறகு, எங்களின் பயண வழிகாட்டி நாங்கள் செல்லவிருக்கிற வேறொரு உலகத்திற்கு எங்களை தயார் படுத்தும் நோக்கில் விளக்கத் தொடங்கினார். அந்த உலகம் தண்ணீருக்கு அடியில் இருக்கிறது. எனக்கு அப்போதிலிருந்தே மனதில் நடுக்கமும் அச்சமும் எழுந்தது. நான் கடற்கரையை ரசித்துப்பார்ப்பதும், புகைப்படம் எடுப்பதும் கால் நனைப்பதும், அதிகபட்சமாக இடுப்புவரை கடலில் நனைந்து, ஓடி வந்துவிடுவேன். எனக்கும் கடலுக்குமான நெருக்கம் அதுவரைதான்.

தற்போது snorkeling என்று சொல்லக்கூடிய முக்குளித்து கடலில் உள்ளிருக்கும் வேறொரு உலகத்திற்கு செல்வதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனக்கு நீச்சலும் தெரியாது, மூச்சை கட்டுப்படுத்தி வைக்கவும் பயிற்சி போதாது. நீச்சல் தெரியாதது அந்த நேரத்தில் கவலையை கொடுத்தாலும், இப்போது அதற்கு ஒன்றும் செய்ய முடியாது அல்லவா? எனவே எதையும் யோசிக்காமல் நான் பின் வாங்கினேன்.

நீச்சல் தெரியாதவர்களுக்கும் snorkeling  செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை பயண வழிகாட்டி வழியுறுத்தினார். என்னுடன் பயணத்தில் இருந்த தோழர் சோக் வ்வாவும் எனக்கு துணை புரிவதாக தெரிவித்தார்.  snorkeling-க்கு தேவையான பொருள்களை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட விளக்கங்கள் சொல்லிகொடுக்கப்பட்டது.

யார் யாருக்கு நீச்சல் தெரியாதோ, ஒருவருக்கு ஒருவர் வீதம் ஒரு நீச்சல்வீரர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு பாதுகாப்பு உணர்வு தட்டுப்பட்டதும், எத்தனையோ காரியங்களை அசால்டாக செய்துவிடும் நாம் ஏன் முயன்று பார்க்ககூடாது என்று நான் கடலில் இறங்குவதற்கு துணிந்துவிட்டேன். அலை மற்றும் கடல் கொந்தளிப்பு குறைவாக இருக்கும் இடத்தை தேடி, சகல பரிவாரங்களோடு எங்களை கடலில் இறக்கினார்கள். கர்ணருக்கு கவச குண்டலம் போல தண்ணீரின் மேலே மிதப்பதற்கு கவசமாக எங்களுக்கு வழங்கப்பட்ட FLOATING JACKET இருந்தது.

உடலை அதிக இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல், லேசாக விட்டுவிட்டாலே நமது உடல் தாமாக தண்ணீரில் மிதக்கிறது. எனக்கு இதெல்லாம் ரொம்பவும் புதிய அனுபவமாக இருந்தது. பின் மற்ற மற்ற பொருள்களின் உதவியோடு நீச்சல் வீரர் சொல்வதை செயல்படுத்த தொடங்கி முதல் முறையாக நான் என் தலையை கடலுக்குள் கொண்டு போனேன்.

அந்த கீழ் உலகத்தின் வாசல் அழகாக திறந்துக்கொண்டு என்னை அதனுள் இழுத்துக்கொண்டது. சுவாசத்திலும், கடலுக்குள் அடியில் இருப்பதைக் காண்பதிலும் எனக்கு எந்த சிக்கலும் எழவில்லை. நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் coral என்று சொல்லக்கூடிய ராட்ஷசப் பவளப்பாறைகளையும், கடல் பாசிகளையும், வண்ண வண்ண மீன்களையும் கண்டு கழித்தேன்.

சிலவேளை தொலைக்காட்சியில் கடல் சார்ந்த ஆய்வுகளை பார்க்கும்போது ஏற்படக்கூடிய ஆச்சரியத்தைவிட நேரில் ஏற்படும் அனுபவம் பல மடங்காக இருக்கிறது. இன்னொரு விஷயத்தையும் நான் பதிவு செய்ய வேண்டும். கடலுக்கடியில் எந்தக் குப்பையும், கழிவுகளும் இல்லாமல் மிக சுத்தமாக இருக்கிறது. அதை அந்தத் தீவை பராமரிக்கும் மற்றும் அங்கே இருக்கும் இயற்கை சார்ந்த சில தன்னார்வ அமைப்பு மற்றும் அரசின் உதவியாலுமே இது சாத்தியமாக இருக்கிறது.

சுமார் அரைமணி நேரத்திற்குப்பிறகு நாங்கள் வேறொரு இடத்திற்கு snorkeling-காக சென்றோம். இம்முறை எனக்கு அடிப்படைப் பயிற்சி இருந்ததால் மிக இலகுவாக அதன் உதவியோடு snorkeling செய்தேன். நிச்சயமாக உடன் நீச்சல்வீரரும் இருந்தார் என்பதையும் கூறிக்கொள்கிறேன். அதுவேகூட எனக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத்தது.

கரைக்கு வந்த எங்களிடம் இரவு snorkeling செய்ய தைரியமிருக்கிறதா? ஒரு குழு வருகிறார்கள். அவர்களோடு நீங்கள் இணைந்துக் கொள்ளலாம் என வழிகாட்டி தேவா அழைப்பு விடுத்தார். அந்த அளவுக்கு தைரியம் இல்லை என்பதே உண்மை. ஆனால், இரவு அதுவும் ஆழ்கடலுக்கு snorkeling செய்ய மக்கள் கிளம்பி வருகிறார்கள். வெளிநாட்டினரும் இதற்காகவே வருகிறார்கள். ஆக்சிஜன் நிரப்பட்ட சிலிண்டர்களை நத்தையைப்போல முதுகில் சுமந்துக்கொண்டும், நெற்றியில் பேட்டரி விளக்கை அணிந்துக்கொண்டும் அவர்கள் கடலுக்குள் இறங்குவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். 

பௌர்ணமி நிலவு எங்களையும் சேர்த்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தது.  


(முற்றும்)  

 

 

 


நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா பாகம் 3 ) Lang Tengah Terengganu

 

எங்களின் சுற்றுலா வழிகாட்டியும் மோட்டார் படகோட்டியுமான தேவா நியமித்த ஹேப்பி என்ற படகோட்டி எங்களுக்காக படகில் காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் செல்லக்கூடிய லாங் தெஙா தீவுக்கு படகு புறப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் இருக்கும் நாங்கள் அந்த அழகியத் தீவில் தரை இறங்கினோம். எத்தனை பச்சை நிறங்கள், எத்தனை நீல நிறங்கள் என்று தெரியவில்லை. கடலைக் காணும்போது அடுக்கடுக்காக நீலமும் பச்சையும் மாறிமாறி மாயாஜாலம் செய்துக்கொண்டிருந்தன.

அதிகமான மனிதர்கள் நடமாட்டம் இல்லை என்பது பார்த்த மாத்திரத்திலேயே உணர முடிந்தது. தவிர இத்தனை சுத்தமான, அழகான, அதிகமாக மாசுப்படியாத ஒரு தீவையும் கடலையும் நான் முதல்முறையாக பார்க்கிறேன். மின்னியல் பயன்பாட்டுக்கு சோலார் மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்துகிறார்கள். தங்குவதற்கும் உண்பதற்கும் அவரவர் வசதிக்கும் பணத்திற்கும் தகுந்தாற்போல் ஒரு சில தங்கும்விடுதிகள் இருக்கின்றன. அதற்குமேல் உங்கள் பேராசைகளை பூர்த்திசெய்ய அந்தத் தீவில் இடமில்லை, அதற்கு அது அனுமதிப்பதும் இல்லை. தவிர கொரானா காலத்தில் மேலதிகமாக இருந்த ஓர் இரு தங்கும் விடுதிகளும் உணவுக்கூடங்களும் மூடுவிழா கண்டு விட்டதுடன் அவை இனி பயன்பாட்டுக்கு உதவாத அளவிற்கு பழுதடைந்தும் விட்டிருக்கின்றன.

நாங்கள் லாங் தெஙா தீவைச் சென்றடைந்ததும் முதல் வேளையாக கடலாமைகளின் முட்டைகளை சேகரிக்கும் எங்கள் தோழரை சந்திக்கச் சென்றோம். கடற்கரையை ஒட்டினார் போல நடந்துச்சென்று மலைமீது ஏறி 10-15 நிமிடங்களுக்கு காட்டுவழியே, நடந்து நடந்து தடமாக மாறியிருந்த வழியில் நடந்து சென்று கீழ் இறங்கினால் கடலாமைகள் முட்டையிடுவதற்காக ஒதுங்கும் இடத்திற்கு சென்று விடலாம். அங்கிருந்து சற்றுத் தள்ளி குடில் அமைத்து, மிகமிக சொற்பமான வசதிகளுடன் கடல் ஆமைகளுக்காக சேவையாற்றுகிறார்கள்  ‘lang tengah turtle watch’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வ குழுவினர்.

எங்களின் தோழர் என்று சொன்னேன் இல்லையா? அவர் பெயர் யாஸ்மீன். அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, இயற்கைக்கு சேவையாற்ற  தன்னார்வலராக இத்தீவுக்கு வந்துவிட்டார். எங்கள் வருகையை முன்கூட்டியே அவருக்கு தெரிவித்திருந்ததால் எங்களுக்காக காத்திருந்து எங்களை வரவேற்றார் யாஸ்மின். கடலாமைகளின் முட்டைகளை சேகரிக்கும் மற்றும் அதை எப்படி பாதுகாத்து ஆமைக் குஞ்சுகளாக கடலுக்குள் திருப்பியனுக்கிறார்கள் என்ற முறையினை யாஸ்மின் எங்களுக்கு விளக்கினார். அது ஒன்றும் இலகுவான முறையில்லை.

நமது நாட்டில் மொத்தம் 7 வகையான கடலாமைகள் இருக்கின்றன. மிக அதிகமாக Hawksbill Turtle ஆமைகளும், Green Turtle ஆமைகளும் தற்போது இருக்கின்றன. Leatherback எனும் ஆமையினம் பல்வேறுக்காரணங்களால் நம் மண்ணிலிருந்தே அழிந்துபோய்விட்டது. 1990-களுக்குப் பிறகு அந்த இன ஆமையை யாருமே காணவில்லை. யாரும் எதிர்பாரத விதமாக 2017-ஆம் ஆண்டு அழிந்துவிட்டது என்று நம்பிய Leatherback turtle 2017-ல் லாங் தெஙா தீவில் கரையேறியது. ஆனால் முட்டை இடாமல் போய் விட்டது. அதன்பிறகு இன்றுவரை அந்த ஆமை காணப்படவில்லை. எனவே அது அழிந்திவிட்ட இனம் என்றே பட்டியலில் இருக்கிறது. 


 Hawksbill turtle ஒரு தடவைக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். Green turtle 80 முதல் 120 முட்டைகள் வரை இடும். முட்டைகளை இடுவதற்கு அவை முதலில் இடத்தை தேர்ந்தெடுத்து அதன் கால்களைக் கொண்டு குழியை தோண்டிக்கொள்ளும். முட்டைகள் இட்டப் பிறகு மீண்டும் கால்களைப் பயன்படுத்தி குழியை மூடிவிட்டுப் போய்விடும்.

முட்டையை சேகரிக்கும் தன்னார்வளர்கள் ஆமை வந்துச் செல்லும் நேரம்வரை மிகத் துரிதமாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஆமை இரவு 9 மணியிலிருந்து விடியற்காலை 5 மணிவரை எந்த நேரத்திலும் முட்டையிடுவதற்காக கரையேறலாம். அதனால் ஷிப்ட் முறையில் தன்னார்வளர்கள் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆமை முட்டையிட்டுக் கொண்டிருக்கும் போதோ அல்லது முட்டையிட்டப் பிறகோ அவற்றை சேகரித்து, நண்டு, முதலை அல்லது மற்ற உயிரினங்கள் அவற்றை நாசம் செய்துவிடாமல் இருக்கவும், சாப்பிட்டு விடாமல் இருக்கவும்  பாதுகாப்பான இடத்தில் வைத்து அவற்றைப் பாதுகாப்பார்கள். மணலில் குழி தோண்டி முட்டைகளை எண்ணி குழியில் வைத்துமூடி, அதன்மீது வலைக்கொண்டு பாதுகாப்பாக மூடி வைத்து கண்காணிக்கிறார்கள். இங்கே முதலைகள் முட்டைக்காகவே அதிகமாக சுற்றுகின்றன.

சிலவேளை பூர்ணம் பூத்து சில முட்டைகள் வீணாய் போய்விடுவதும் உண்டு. ஆமை முட்டையிட,  கரையேரும் காரணத்தினால் அங்கு குறைந்த வெளிச்சம் கொண்ட  சிவப்பு நிற கைவிளக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

ஆமையின் குணங்கள் மிகவும் வித்தியாசமானதாகும். அவை 25-30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இணை சேரும். முட்டையிடும் காலத்தில் சில ஆமைகள் ஒரே தடவை 100- 200 முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடும். சிலது ஒருவாரம் வரை விந்தணுக்களை சேகரித்து வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக முட்டையிடும். தாய் ஆமையின் கடமை முட்டையிடும்வரைதான். முட்டையிட்டு முடித்துவிட்டு கடலில் இறங்கினால் பின் எப்போதும் அதை திரும்பிப் பார்ப்பதில்லை. ஆண் ஆமைகளுக்கோ இணை சேர்வதைத்தவிர வேறு எந்தக் கடமையும் இல்லை.

முட்டைகள் குஞ்சு பொரித்து கடலில் இறங்கும்வரையும், இறங்கிய பின்னும் அந்த ஆமைக் குழந்தைகள் பல போராட்டங்களை கடந்துவர வேண்டும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் பெண் ஆமைகள் எங்கு இருந்தாலும்; அவை எந்த எல்லைக்கு போயிருந்தாலும்; முட்டையிடும்போது தாய்வீட்டிற்கே திரும்பி வருகின்றன. அதாவது தனக்கு எங்கு உயிர் கிடைத்ததோ அந்த இடத்திற்கு வந்து முட்டையிடுகின்றன. ஆச்சரியமாக இருக்கிறதா? 

பாதுகாத்து வைத்திருக்கும் முட்டைகள் குஞ்சுப் பொறித்து கடலில் இருங்கும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கும். ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் இறங்கினால், பின்னாளில் ஒன்றே ஒன்றுதான் பிழைத்திருக்கும் என்பது ஆய்வு. மற்றது எல்லாம் மற்ற கடல் உயிரினங்களுக்கு இறையாகி விடுகின்றன. குறிப்பாக கடல் சுறாவும் அதை வேட்டையாட காத்துக்கொண்டே இருக்கிறது.

யஸ்மின் சொன்னார், கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடலை நம்பிவாழும் உயிரினங்களுக்கும் மனிதர்கள் உட்பட கடலாமைகளின் வாழ்தல் அல்லது தேவை அதிகமாகவே இருக்கிறது. Keystone species என்று கடலாமைகளை இதனால்தான் சொல்கிறார்கள். நாங்கள் மேற்கொண்டிருப்பது ஒரு லட்சியத் திட்டத்தின் தொடக்கம்; இது, வரும் ஆண்டுகளிலும் வெற்றிகரமாக இந்த இயக்கம் இயங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். கடல் ஆமைகளை அழிவிலிருந்து காப்பாற்றும் எங்கள் பணியில் நீங்களும் சேர்ந்துக்கொள்ளலாம் என யாஸ்மின் அழைப்பு விடுக்கிறார். Internship-பும் இருக்கிறது.

கடலாமைகள் குறித்து தெரிந்துக்கொண்டதோடு தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களையும் தோழர் யஸ்மின் எங்களோடு பகிர்ந்துக்கொண்டார். புதிய தகவல்கள் மற்றும் அனுபவங்களோடு நாங்கள் விடைபெற்று தங்கும் விடுதிக்கு திரும்பினோம்.

சித்திரைப் பௌர்ணமியின் முழு நிலவு மெல்ல எழுந்துவந்து கடலுக்கு மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது. விடிந்தால் நாங்கள் வேறொரு உலகில் காலடி எடுத்துவைக்கப் போவது அதுக்கு தெரிந்திருக்குமோ?

(தொடரும்)

 

புதன், 8 ஜூன், 2022

நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா) ( பாகம் 2 ) Lang Tengah Terengganu

 எங்கள் கடற்பயணத்தின் படகோட்டியும் வழிகாட்டியுமான தேவா, ஓய்வு எடுக்க எங்களை இறக்கிவிட்ட தீவின் பெயர் புலாவ் பீடோங். இதை வாசிக்கும் உங்களுக்கு எப்போதோ எங்கேயோ இந்தத் தீவு குறித்து அறிந்துக்கொண்ட விஷயங்கள் ஞாபகத்திற்கு வரலாம். இன்றுதான் அப்படி ஒரு தீவின் பெயரையே கேள்விப்படுகிறோம் என பலர் முனுமுனுக்கலாம். பல ஆயிரம் பேர் வாழ்ந்து தற்போது அதன் நினைவுகளை மட்டுமே சுமக்கும் கைவிடப்பட்ட ஒரு தீவுதான் அது.

1975-ல் வியட்நாமிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரின் போது, வியட்நாமியர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்தார்கள். மலேசியாவில் அவ்வாறு தஞ்சம் அடைந்த ஆயிரங்கணக்கான அகதிகளை குடியேற்றிய இடம்தான் பீடாங் தீவு.


கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம்.

சைகோன் வீழ்ந்த சில நாட்களுக்குள், முதல் படகு 1975 மே மாதம் 47 அகதிகளை ஏற்றிக்கொண்டு மலேசியக் கரையை வந்தடைந்தது.

1978-ஆம் ஆண்டு, 2,400 வியட்நாமிய அகதிகளோடு ஹை ஹாங் என்ற கப்பல் சிலாங்கூர் போர்ட் கிள்ளானில் கரை ஒதுங்கியது. இதேவே நாட்டில் மிக பெரிய அளவில் தஞ்சம் அடைந்த  அகதிகள் குழுவாகும். நாளுக்கு நாள் அகதிகளின் வருகை அதிகரிக்கவே, ஆகஸ்ட் 8, 1978 அன்று புலாவ் பிடோங்கில் அவர்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு தற்காலிக முகாமை அமைத்தது.  4,500 அகதிகளுக்கு தங்குமிடமாக அத்தீவு வடிவமைக்கப்பட்டது, ஆனால் ஜனவரி 1979 க்குள் மொத்தம் 18,000 அகதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டனர்; ஜூன் மாதத்திற்குள் அவ்வெண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்தது. பிடோங் தீவு மிக அதிகமான அகதிகள் கொண்ட இடமாக மாறியது.


உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தஞ்சம் அடைந்த அம்மக்களுக்கு Orang Vietnam Hanyut (OVH) அதாவது வியட்நாம் படகு மக்கள் என்று புதிய பெயர் கொடுக்கப்பட்டது.     

12 ஆண்டுகளில் சுமார் 252,390 அகதிகளுக்கு மலேசியா தஞ்சம் வழங்கியதோடு, சுமார் 4,535 குழந்தைகள் இந்த முகாமில் பிறந்திருக்கிறார்கள். தீவைச் சுற்றி ​​பள்ளிக்கூடம், நீண்ட வீடுகள், தேவாலயம், பௌத்த கோயில், வைத்தியசாலை, தபால் நிலையம், காப்பிக்கடை, இறந்தவர்களுக்கான நினைவிடங்கள் என பல கட்டிடங்கள் தற்காலிகமாக கட்டப்பட்டு செயல்பட்டிருக்கிறது.

சுற்றிலும் கடலால் சூழப்பட்டு மத்தியில் இருக்கும் இந்தச் சின்னத் தீவில் தஞ்சம் அடைந்திருந்த அகதிகளின் திடீர் குடியேற்றம் உள்ளூர் மீனவர்களின் மீன் பிடிக்கும் தொழிலுக்கு பிரச்னையாக இருந்ததால் அவர்கள் மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துக்கொண்டிருந்தனர். மீனவர் சங்கம் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுக்கு கொடுத்து தங்கள் பிரச்னையை நாளுக்கு நாள் தீவிரமாக முன்னெடுத்தனர்.


மலேசியாவும் அகதிகளை பராமரிக்கும் எண்ணத்தை நீண்ட நாள் கொண்டிருக்கவில்லை. 1979-ஆம் ஆண்டு, துணைப் பிரதமராக இருந்த துன் மகாதீர், மலேசியா 70,000 அகதிகளை முகாமில் இருந்து வெளியேற்றி மீண்டும் கடலுக்கே அனுப்பும் என்றும், தரையிறங்க முயலும் அகதிப் படகுகளைக் கண்டால் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.

‘’Being humane has not paid off for us at all… All we are getting is a further inflow of Vietnamese illegal immigrants, and we have every right to expel them.” – Tun Mahathir, in 1979, as reported by the New York Times.

உண்மையில் அகதிகளை சுட மாட்டோம் என்று அரசாங்கம் பின்னர் தெளிவுபடுத்தியிருந்தாலும் (துன் அகதிகளை '‘shoo’ செய்வோம் என்று கூறினார், ' shoot’ ' இல்லை), அந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட அகதிகளை வெளியேற்றியதாக ஒப்புக்கொண்டனர். தஞ்சம் அடைந்தவர்கள் நிரந்தரமாக நாட்டிலேயே தங்கக்கூடிய அச்சம் இருப்பதால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இறுதியாக அக்டோபர் 1991-ல் புலாவ் பீடாங் அகதிகள் முகாம் மூடப்பட்டது, அகதிகள் கோலாலம்பூரில் உள்ள சுங்கை பெசி அகதிகள் மையத்திற்கு மாற்றப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் கட்டங்கட்டமாக வியட்நாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடைசி வியட்நாமிய அகதி ஆகஸ்ட் 30, 2005 அன்று மலேசியாவிலிருந்து வெளியேறினார்.

புலாவ் பீடோங் அகதிகள் முகாம் அருங்காட்சியமாக செயல்படுகிறது என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். ஆதலால் அதுக்குறித்த என் கற்பனை வேறாக இருந்தது. இந்தப் பயணத்தில் எதிர்பாராத விதமாக புலாவ் பீடோங்கை காணக்கூடிய சந்தர்ப்பம் ஒரு விபத்துபோல நடந்தது. ஆனால், அந்த விபத்தில் என் கற்பனைகள் முழுதும் தவிடுபொடியாகும் அளவிற்கு அடி விழுந்தது.

பல அகதிகளின் ஞாபகங்களாக மாறியிருக்கும் அந்தத் தீவில் மிச்சம் இருப்பது பாழடைந்த ஒரு சில நினைவுச்சின்னங்கள்தான். மிக நீண்டகாலம் கைவிடப்பட்ட நிலையில் அவை மெல்ல மெல்ல அழிந்துக்கொண்டிருக்கின்றன. மிச்சமிருக்கும் புத்த விக்ரகங்களும், இறந்தவர்களின் பெயர் சுமந்த பதாகைகளும், திறந்தவெளியாக மாறிவிட்ட தேவாலயமும், அகதிகள் முகாம் என்ற நினைவு தூபியும் இன்னும் சில நாட்களில் காணாமல் போய்விடலாம். அப்படி வரலாற்றை அதுவாகவே அழிந்துபோகட்டும் என கைவிடுவது எந்த அளவுக்கு சரியாகும் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த நினைவிடத்தை நோக்கி நம் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளும், அகதிகளுடன் தொடர்புடையவர்களும், பயணிகளும் பார்வையாளர்களும் அங்கு வருகிறார்கள். கடல்வழியே நாம் பயணம் செய்யும்போது மலை உச்சியில் ஏசுவின் சிலை கையை நீட்டி ரட்சிப்பதுபோல காட்சி கிடைக்கும். அருகில் வந்தப் பிறகுதான் தெரிகிறது அவரின் இருப்பை நினைவுப்படுத்தவே அவர் அழைக்கிறார் என்று.   

இந்தத் தீவை ஒரு சுற்றுலாத் தளமாகவே மாற்றியிருக்கலாம். இன்னும் சில நாட்களில் அல்லது ஆண்டுகளில் பார்வையிடுவதற்கு பாதுகாப்பு இல்லாத ஒரு இடம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு சிதிலடைந்துவருகிறது.

அங்கு எங்களை மிகவும் பாதிக்க இன்னொரு விஷயம் வியட்நாமிய அகதிகள் நினைவாக நிறுத்தியிருக்கும் தூபியில் எழுதியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள் (pendatang-pendatang haram) என்ற வார்த்தை. சட்டவிரோத குடியேறிகளுக்கும், உயிரை பாதுகாத்துக்கொள்ள சொந்த நாட்டிலிருந்து வேறொரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா? சட்டவிரோதிகள் ஏதிளிகள் இவர்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை கணக்கில் எடுக்காமல் ஒட்டுமொத்தமாக சட்டவிரோத குடியேறிகள் என்று நிற்கிறது அந்த தூபி. பின் மலேசியாவின் சரணாலயம் என ஏன் அந்த முகாமை குறிப்பிட வேண்டும்?

ஒரு மணிநேர ஓய்வுக்குப் பின் நாங்கள் படகிற்கு திரும்பினோம். எங்களிடம் ஒரு நீண்ட மௌனம் இருந்தது. தனிமை வேண்டி சில நிமிடங்கள் கடற்கரையை என் கண்கள் ஆழமாக ஊடுருவிருந்தது. வண்ண மீன்கள் துள்ளி விளையாடியபடி இருந்தன. கண்ணாடிபோல பளிச்சென்று இருந்தது கடல். இன்னும் உற்று நோக்கினேன். கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த நீல தோட்டமாக மாறி அதன் உடலிலிருந்து நீல ஒளியை வெளியிட்டுக்கொண்டிருந்தது கடல்.

(தொடரும்)

( பாகம் 1 ) 

https://yogiperiyasamy.blogspot.com/2022/06/1-lang-tengah-terengganu.html 

நன்றி: வானம்பாடி 17/7/2022


    

நீலம் தொடும் நிலங்கள் (லாங் தெஙா பாகம் 1 ) Lang Tengah Terengganu

 

கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை  ரசிக்க நமக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, அதை கண்களால் பருகி, கைகளால் அள்ளி தமது நாட்டிற்கு கொண்டு போய்விட மாட்டோமா என அயல் நாட்டின் இயற்கை காதலர்கள் பரவசமடைகின்றனர். சுற்றுப்பயணம் என்றால், நம்மவர்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே திரும்ப திரும்ப  போவதற்கு ஆர்வம் கொள்கிறார்கள். கடற்கரை என்றால் போர்ட்டிக்ஷன் கடற்கரை. மலை பிரதேசம் என்றால் கேமரன் மலை அல்லது கெந்திங்மலை. தீவு என்றால் பங்கோர் தீவு. மாநிலம் என்றால் மலாக்கா அல்லது பினாங்கு மாநிலம், திருவிழா என்றால் கூட தைப்பூசத் திருவிழா என்று  ஒரு சுழற்சி முறையில்தான் பயணம் இருக்கும்.

வாகன நெரிசல் இல்லாத,  ஒலி மாசு நெருங்காத, குப்பைக்கூழங்கள் இல்லாத, தேவைக்கு அதிகமாக எதையும் வாங்க தோன்றாத ஓர் அழகான இடத்திற்கு நான் உங்களை அழைத்துப் போகிறேன் என்றால் வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுமா?  மிக  நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் திரங்கானுவில் நான் எனது மூன்றுநாள் விடுமுறையை மிக மிக சந்தோஷமாக இதுவரை இல்லாத ஓர் அனுபவத்தோடு கொண்டாடி வந்தேன்.  எனக்கு ஏற்பட்ட சந்தோஷமும் அனுபவமும் உங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதல்ல. புதியதாக ஓர் உலகத்திற்குள் நீங்கள் சென்று வருவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு எப்போதும்போல என்னுடனான உங்களின் பயணத்தில் வரலாறும் பேசப் போகிறதுவரப்பிரசாதமும் கிடைக்கப்போகிறது. பயணம் போவோமா?


 தீபகற்ப மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற 8 தீவுகள் இருக்கின்றன.

1 தியோமான் தீவு

2. பினாங்கு தீவு

3. லங்காவி தீவு

4. தெங்கோல் தீவு

5. பெர்ஹெந்தியான் தீவு

6. ரெடாங் தீவு

7. பங்கோர் தீவு

8. லாங் தெஞா தீவு

 

நான் உங்களை திரங்கானு மாநிலத்திற்கும், அங்கு இருக்கும் லாங் தெஙா தீவுவுக்கும் அழைத்துச் செல்லவிருக்கிறேன். திரங்கானு என்றால் நம்மவர்களுக்கு அங்கு என்ன இருக்கிறது என்றே சொல்லத் தெரியாது. அதிகபட்சமாக கடற்கரைகள் மற்றும் கடலாமைகள் முட்டையிடுவதற்கு கரை ஒதுங்கும் என்றுமட்டுமே தெரியும். இதைப்பார்க்க அத்தனைத்தூரம் பயணம் செய்ய வேண்டுமா என்றுதான் நம்மவர்கள் நினைக்கிறார்கள். அதையும் தாண்டி என்ன இருக்கிறது என்பதை உங்களுக்கு சொல்லும் நோக்கத்தில் நானும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மனதை ஆசுவாசப்படுத்த எனது மூன்று சகதோழர்களும் திரங்கானுவிற்கு பயணப்பட்டோம். காரில் பயணம் செய்து 4 மணிநேரத்தில் திரங்கானுவை அடைந்த நாங்கள் மேலும் ஒரு மணி நேரம் பயணத்திற்குப் பிறகு கோலத்திரங்காவின் மேராங் படகுத்துறையைச் சென்றடைந்தோம்.



நோன்பு கடைபிடிக்கும் காலமாக இருந்ததால் உணவுக்கடைகள் எங்கும் திறந்திறக்கவில்லை. என்றாலும் காராக் வட்டாரத்தில் காலை உணவை முடித்திருந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. மதியம் நாங்கள் கோலத்திரங்கானுவை சென்றடைந்த நேரத்தில் நோன்பு திறப்புக்காக உணவு பொட்டலங்கள் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு கடையில் மதிய உணவை வாங்கிக்கொண்டுதான் படகுத்துறைக்கு வந்தோம்.

மேராங் படகுத்துறை அமைந்திருக்கும் தென் சீனக்கடல் மிக அமைதியாகவும், நீல ஆடை உடுத்தியும் எங்களைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தது. இரண்டு இரவு மூன்று பகலுக்கு எங்களின் காரை 30 ரிங்கிட் கொடுத்து, அங்கே ஏற்பாடு செய்திருக்கும் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தினோம். இங்கேயிருந்து 12-க்கும் மேற்பட்ட தீவுகளுக்கு செல்வதற்கான படகு போக்குவரத்து இருக்கிறது. தீவுகளுக்கு தகுந்த கட்டணத்தைச் செலுத்தி நாம் பயணப்படலாம். நானும் எனது தோழர்களும் Lang Tengah தீவில் விடுமுறையை கழிப்பதற்கான முன்னேற்பாடாக படகு போக்குவரத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இணையத்திலேயே பதிவு செய்து பணம் செலுத்தியிருந்தோம்.

எங்களின் படகு சவாரி நண்பர் தேவா எங்களை வரவேற்க காத்திருந்தார். நோன்பின் காரணமோ அல்லது வார நாள் காரணமோ என்னவோ பயணிகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர். Pulau Redang மற்றும் Pulau Perhentian இடையே அமைந்துள்ள ஒரு சிறிய தீவுதான் பூலாவ் லாங் தெஙா அல்லது லாங் தெஙா தீவு. கடல் வழியே சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் தீவு அமைந்திருக்கிறது. அதிலும் உலகின் மிக அழைகிய 100 தீவுகளில் Pulau Perhentian 13-வது இடத்தில் இருக்கிறது. அதை ஒட்டியிருக்கும் லாங் தெஙா தீவு எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். மோட்டார் படகில் விரைவாக பயணம் செய்தால் சுமார் 1 மணி நேரத்தில் நாம் அத்தீவை சென்றடைய முடியும்.

 

அந்த விரைவு பயணம், சொல்வதைப்போல இலகுவானது அல்ல. கடலின் கொந்தளிப்பு மற்றும் அலைகளை கடந்து, மேல் அடிக்கும் கடலின் சாரலையும், உப்புக் காற்றையும் நாம் சமாளிக்க வேண்டும். அதைத் தாண்டி அங்காங்கே தென்படும் குட்டி குட்டி தீவுகளும், கடலின் நீல நிறமும் சொல்ல முறையாத அழகினை காட்சிப்படுத்துவதோடு, ஒரு சாகச சூழலை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது.

நாங்கள் படகின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நிற்க முயன்றோம், ஆனால் தோற்றுப் போனோம். கடலின் நடுப்பகுதிக்கு சென்றபோது கடலில் இருக்கிறோமா அல்லது வானத்தில் மிதக்கிறோமா என்ற மாயையை ஏற்படுத்தும் அளவுக்கு நீள் நிறம் நம்மை முழுவதும் ஆக்ரமிக்கிறது.

45 நிமிட இடைவிடாத மோட்டார் வாகனத்தின் பயணத்திற்குப் பிறகு, எங்களின் படகோட்டியான தேவா சொன்னார், வானம் மழை பெய்வதற்கான அறிகுறியை கொடுக்கிறது. கடலில் அலையின் கொந்தளிப்பும் அதிகமாவதுபோல் தெரிகிறது. அருகில் இருக்கும் ஒரு தீவில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், அதற்குள் கடல் அமைதியானால் பயணத்தை தொடரலாம் என்றார்.

கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன? ஒரு தீவைக் காண்பதற்கு வந்தோம். இப்போது இலவச இணைப்பாக இரண்டாவது தீவையும் காணப் போகிறோம் என்று நாங்கள் குதூகளித்தோம். எங்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சொல்லமுடியாத ஓர் அமைதியும் துக்கமும் எங்களை ஆட்கொண்டது. அப்படி என்னதான் அந்தத் தீவில் நாங்கள் கண்டது? அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)

நன்றி : வானம்பாடி (3/7/2022)