திங்கள், 11 மார்ச், 2024

ஆயுதம் ஏந்திய மலேசியப் பெண் போராளிகள்

                                   Members of the 8th Regiment. Courtesy of Mahani Awang.

மலேசியா கம்யூனிசத்தை ஆதரிக்காத ஒரு நாடு மட்டும் அல்ல கம்யூனிச சிந்தனை மற்றும் கம்யூனிச சித்தாந்தத்தையே தடை செய்திருக்கும் ஒரு நாடாகும். இந்நிலையில்தான் மலேசியாவில் சோசலிச சிந்தனையும் இடதுச்சாரி சிந்தனையும் மிகப்பெரிய சவாலோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. மலேசியர்களுக்கு குறிப்பாக தேசியவாதிகளுக்கு, கம்யூனிசம் மற்றும் சோசலிசம் இரண்டையும் வேறுபடுத்துவதில் ஒரு தெளிவில்லாத மயக்கம் இருக்கிறது. அதன் காரணத்தினாலேயே சோசலிச சித்தாந்தவாதிகளாலும் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்களாலும், கொண்டுவரப்படும் பல ஆக்கபூர்வமான திட்டங்கள் பரீசீலனைக்கு கூட எடுத்துகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது.

இந்நிலையில் மலேசியா சுதந்திரம் அடையாத முன்பே, நாட்டின் சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய பெண் தோழர்கள் குறித்தும், அவர்களின் அமைப்பு குறித்தும் இந்திய பரப்பில் இன்னும் யாரும் பேசவில்லை. அதோடு,  மாற்றுச்சிந்தனையோடு இயங்கிய மலேசியப் பெண்களையும், தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பெண்களையும், அவர்களின் வட்டத்திற்கு வெளியே யாரும் பேசுவதாக இல்லை. அவர்களை இம்மாதிரியான பெண்கள் சந்திப்பில் அடையாளப்படுத்துவது ஒரு பெண்நிலை செயற்பாட்டாளராக எனது கடமையாக கருதுகிறேன்.

தவிர, சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், நாட்டின் எதிரியை எதிர்கொள்ளும் போது ஆயுதம் ஏந்துவதற்கு அஞ்சாத பெண்கள் மலாயாவிலும் இருந்தனர். இருப்பினும், அவர்களின் பெயர்கள், ஓர் ஆண் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்டாடுவதுபோல எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. சொல்லப்போனால், ரத்தம் சிந்தாமல் மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற தவறாக கூறப்படும் வரலாற்றில் ஆண் ஆயுத போராளிகளும் மறக்கடிக்கவே படுகின்றனர். இதில் பெண்கள் பெயரை பேசுவார்களா என்ன?  

மலேசியா 1957-ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. சுதந்திர பிரகடன அறிக்கையில் கையெழுத்திட மூவின தலைவர்களின் பிரதிநிதிகள் பிரிட்டிஸ் சென்று வந்தார்கள். பெண்கள் ஒருவருக்கும் அங்கு அழைப்பில்லை. ஆனால், சுதந்திர போராட்டத்தில், கைகளில் ஆயுதம் ஏந்தி போராடவும்  இன்னுயிரைக் கொடுக்கவும் மலேசியப் பெண்கள் யோசிக்கவே இல்லை.

 

சூரியனி அப்துல்லா

Suriani

Eng Ming Ching எனும் இயற்பெயர் கொண்டவரான இவர்  1941-1945-ல் ஜப்பானியர்களுக்கு எதிராகவும் பின்னர் 1948-1957ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராடினார். ஜப்பானியர்களை எதிர்த்து போராடியதால் அவருக்கு "ஜப்பானிய எதிர்ப்பு தேசபக்தர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த வகையில், பட்டம் பெற்ற முதல் பெண் போராளியாக அவர் கருதப்படுகிறார். சீனரான இவர் பேராக்கின் சித்தியவானில் பிறந்தார். உடன் பிறந்த 5 பேரில் இவர் ஒருவரே பெண்ணாவார்.  Nan Hwa உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்புவரை  பயின்றவர், அங்கு சின் பெங் உட்பட மற்ற கம்யூனிஸ்டு தோழர்களைச் சந்தித்து அரசியல் ரீதியாக தீவிரமயமாக்கப்பட்டார். 1940-இல் ஈப்போவில் இயங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பெண் தொழிலாளர்களை ஒறுங்கிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். அந்தக் கட்சி மறைமுகமாக இயங்கி வந்தது குறிப்பிடதக்கது.  அப்போது அவருக்கு 16 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. வசீகர ஈர்ப்பு மற்றும் நகைச்சுவை உணர்வு கொன்டவர் என்றும் சூரியானி  வர்ணிக்கப்படுகிறார்.

மலாயாவை ஜப்பான் ஆக்கிரமித்திருந்த போது, Kesatuan Melayu Muda (KMM) மற்றும் Malayan Communist Party (MCP) ஆகிய இரண்டு ஜப்பானிய எதிர்ப்பு மாணவ இயக்கங்கள் இருந்தன. Malayan Communist Party-யில் ரெஜிமென்-10 இல் சூரியானி சேர்ந்தார். அங்குதான் அக்கட்சியின் மூத்த தலைவரான ரஷித் மைதீன் மற்றும் அப்துல்லா சிடி போன்றவர்களை சந்தித்தார். 

அவருக்கு 21 வயதாக இருந்தபோது ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. பின்நாளில் கொம்யூனிஸ் போராட்டவாதியான அப்துல்லா சி.டி-யை 1955-இல் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார்.     

இறுதியாக ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, சூரியானி அப்துல்லா கம்யூனிஸ் கட்சியிலேயே இருந்தார். இறுதிகாலத்தை தனது கணவர் மற்றும் மகளுடன் தாய்லாந்தில் கழித்தவர் மார்ச் 21-ஆம் தேதி 2013 தனது 89-வது வயதில் அங்கேயே காலமானார். 

ஷம்சியா ஃபக்கே (1924-2008)



சுமத்திராவில் சமயக் கல்வியை கற்றவரான இவரை தேச துரோகி என்ற பெயரோடுதான் சித்தரிக்கப்படுகிறார், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து போராடியதே அதற்கு காரணமாகும். சம்சியா தமது குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்திருக்கிறார்.  பிகேஎம் உறுப்பினரான இப்ராகிம் முகமட்டை அவர் மறுமணம் செய்துகொண்டார்.

இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்த காலக்கட்டத்தில் இவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தனது போராட்டத்தைத் தொடர அவர் காட்டுக்குள் பதுங்கினார். பிறகு அவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டு சீனாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.  காட்டுக்குள் இருந்தக் காலத்தில் தனது சொந்த மகனையே அவர் கொன்றார் என்று பிகேஎம்எம் முன்னாள் தலைவர் மூசா அகமது பின்னர் ஒரு பேட்டியில் கூறினார். அதை சம்சியா மறுத்தாலும், அவ்வுண்மையை நிறுபிக்கத் தவறியதில் அது ஒரு சர்ச்சையாகவே இன்றுவரை இருந்து வருகிறது.

1941 முதல் நாட்டில் அராஜகம் செய்துக்கொண்டிருந்த ஜப்பானிய ராணுவத்தையும் அதனைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷ் ராணுவத்தையும் பெண்கள் எதிர்த்து போராடிகொண்டிருந்தாலும், அதுவரை பெண்களுக்கு தனியாக எந்த அமைப்பும் இல்லை. 1946-இல் பெண்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் Angkatan Wanita Sedar (AWAS). (சக்திமிக்க/ உணர்வுமிக்க பெண்கள் படை).. தமிழில் ‘ஆவாஸ்’ (AWAS)  என்றால் கவனம் என்று அர்த்தம்). இது PKMM என்ற கட்சியின் பெண்கள் பிரிவாகும்.

பிரிட்டிசுக்கு அடிபணிந்து போன கட்சிகளான அம்னோ மற்றும் ம.இ.கா நிறுவப்பட்ட இதே காலகட்டத்தில்தான்  API – AWAS போன்ற பிரிட்டிஸாரோடு சமரசம் செய்துகொள்ளாத அமைப்புகளும் கிளர்ந்தெழுந்தன. AWAS அமைப்பின் முதல்  தலைவியாக ஐஸா கனி இருந்தார். எதன் பொருட்டோ அதே ஆண்டு, ஐஸா கனி அந்த அமைப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பிறகு சம்சியா ஃபாகே அமைப்பின் தலைமைத்துவத்திற்கு வந்தார்.

ஜப்பான் இராணுவம் மலேசியாவில் சர்வதிகாரம் புரிந்துகொன்டிருந்தவரை, அவர்களை எதிர்த்து சமர் புரிந்துக்கொண்டிருந்தார்கள் கம்யூனிஸ் தோழர்கள். ஜப்பானியர்கள் மலாயாவை பிரிட்டிசாரிடம் ஒப்படைத்து சென்றபோது, ஆங்கிலேயர்கள் கம்யூனிஸ் தோழர்களை துடைத்தொழிக்க நினைத்தார்கள். கம்யீனிஸ்ட்கள் பயங்கரவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் நாடு முழுதும் அறிவிக்கப்பட்டது.  அதன் நீட்சியாக 1948-ஆம் ஆண்டு பெண்கள் அமைப்பான ‘ஆவாஸ்’ மற்றும் பல இடதுசாரிக் கட்சிகளை ஆங்கிலேயர்கள் தடை செய்தனர் என்பது வரலாறு.

கதீஜா சிடெக்

கதிஜா சிடேக் [1918-1982] ஜப்பானுக்கு எதிராக மகளிர் ராணுவத்தை உருவாக்கியதோடு மலேசியாவின் தொடக்க காலத்து பெண்கள் சார்ந்த உரிமை போராட்டவாதியாகவும் அறியப்படுகிறார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இவர் மலாயாவில் பிறக்கவில்லை.  இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் பிறந்தார். சிறந்த முறையில் கல்வி கற்றாலும், இந்தோனேசிய சுதந்திரத்திற்காக தன்னை அதிக அளவில் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டதால் பல்கலைக்கழகம் செல்ல கல்வி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனாலும் கதீஜாவின் போராட்ட குணம் மலாயாவின் தேசியவாதிகளான தஹாரி அலி மற்றும் ஹாஜி அப்துல்லா செங்கோரா ஆகியோரின் காதுகளை எட்டியது. எனவே மலாயாவின் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்யவும்

 சுதந்திர உணர்வைத் தூண்டவும் கதீஜா மலாயாவிற்கு அழைக்கப்பட்டார்.

அவ்வழைப்பை ஏற்று மலாக்கா நீரிணையின் வழி மலாயாவிற்கு அவர் வந்திருக்கிறார். அதோடு, 1946 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு நன்கொடைகளை சேகரிப்பதற்காக அவர் சிங்கப்பூர் வரையிலும் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கதிஜா டாக்டர் ஹம்சா தைப் என்பவரை காதல் மணம் புரிந்துகொண்டார். அந்தக் காலக்கட்டத்தில்தான் காலனித்துவவாதிகளுக்கு எதிராக செயற்பட்டதால் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் விடுதலையானதும் கதீஜா தனது மாமியார் வீட்டில் வசித்தார், அங்கு அடிக்கடி அவரை முன்னாள் குற்றவாளி என்றும் மாமியார் குடும்பத்திற்கு தான் ஒரு சுமையாகக் கருதப்பட்டதாலும் அவர் ஜொகூர்பாருவிற்கு குடி பெயர்ந்தார்.

அங்குதான் அவரின் அடுத்தகட்ட அரசில் பிரவேசம் ஆரம்பமானது. துங்கு அப்துல் ரஹ்மான் கதீஜாவை Kaum Ibu Umno- கட்சியின் மகளிர் பிரிவில் சேர அழைப்புவிடுத்தார். துங்குவின் இந்த முடிவை பலர் விரும்பவில்லை என்றாலும் கதீஜா கட்சியில் தீவிரமாக செயல்பட்டார்.

10 மாதங்களுக்குள், கதிஜா அம்னோவின் பெண்கள் உறுப்பினர் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்தியதோடு, அப்பிரிவின் மூன்றாவது மகளிர் தலைவியானார்.   

​​1954 தேர்தலில் பெண்களின் பிரதிநிதிகளை  ஐந்து இடங்களுக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்தில் (DUN) பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது கடுமையான அணுகுமுறைக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்படி பல்வேறு போராட்டங்கள் மற்றும் சவால்களை சந்தித்தவர் 1982-ஆம் ஆண்டு தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

தகவல்கள் : cilisos இணையத்தளம்,  solidaritas , orangperak