செவ்வாய், 30 ஜூன், 2015

நானும் மகாகவி பாரதியும்...


பாரதி என்ற அந்தச் சாமானியனின் அடையாளம் இல்லை என்றால் இந்தக் கடையத்திற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன பெருமை சேர்ந்திருக்கும்? இத்தனைக்கும் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பெற்றதும் பட்டதும் கொஞ்ச நஞ்சமல்லவே? இப்படியான கேள்விகளோடு நான் விடைபெற்றேன். அப்போது நான் அறியவில்லை, சென்னையில் என் பாரதி வாழ்ந்த இறுதிகால வீட்டில் என் பயணத்தை முடிப்பேன் என்று.

ஆம். கடையத்தில் நான் நினைத்ததுபோல என் பாரதிக்குப் பெரிதாக எந்த ஆவணப்பதிவும் இல்லை. என் நண்பர் சொன்னார். இங்கே ஊறுகாய் அளவுதான் பாரதியைத் தொட்டுக்கொள்கிறார்கள் என்று. அது ஒரு வகையில் உண்மை என்றுதான் நினைக்கிறேன். பெயரளவுக்கு மட்டுமே அவரின் பெயர் அங்கு இருக்கிறது. மேலும் கடையத்தின் பெருமையைப் பேசவும் அவரின் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. காலச்சுவடு பத்திரிக்கையில் 2010-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சுப்ரமணிய பாரதியின் ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில், அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த யாரவது ஒருவர் கிடைக்கமாட்டார்களா என அதன் படப்பிடிப்பு குழுவினர் தேடிப்போக, 90 வயதைத்தாண்டிய ஒருவரை சந்தித்தது ஆவணக்குழு. அதைப்பற்றிய நீண்ட கட்டுரையை அந்த சிற்றிதழ் வெளியிட்டிருந்தது. என் பதிவுக்காக நான் இணையத்தில் மீண்டும் தேடியபோது அந்தப் பதிவு கிடைத்தது. அதில் கடையத்தில் பாரதியின் காலத்தில் அவரோடு சுற்றித்திருந்த 12 வயது சிறுவனான க.பி.கல்யாணசுந்தரம் என்பவர், தான் நேரடியாக கடையத்தில் பாரதியுடன் அனுபவித்த பல சம்பவங்களை நினைவுகூர்ந்து சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன பலவிடயங்களைப் படிக்கும்போது வேறு எங்குவிடவும் அதிக புரட்சி செய்தது கடையத்தில்தானோ என்று தோன்றுகிறது. ஊராரும் தன்னை சார்ந்தவர்களும் முற்றாக அவரை ஒதுக்கிவிட, மிக பிடிவாதமாக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாதவன் என் பாரதி. அந்த கடையத்து மண்ணின் கழுதைகளுடனும் பறவைகளுடனும் நட்பு பாராட்டியவன் அவன் என்பதை க.பி.கல்யாணசுந்தரம் தனது பதிவில் கூறியிருக்கிறார்.  அந்த ஆவணப்படம் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கடையம் என்ன செய்திருக்கிறது? செல்லம்மா அங்கு பிறந்தவள்தானே?  ஒரு வகையில் வரலாறு செல்லமாவையும் பேசத்தானே செய்கிறது? பாரதி கடையம் வருவதற்கு ஒரு வகையில் செல்லம்மாதான் மூலக்காரணமாக இருக்கிறார். செல்லம்மாவின் தாய்மண் அவளுக்காக என்ன செய்து கொடுத்துள்ளது?   கடையத்தின் வரலாற்றைச் செல்லம்மாவையும் பாரதியையும் தவிர்த்துவிட்டு எழுத முடியுமா? இப்போது க.பி.கல்யாணசுந்தரம் இயற்கையை எய்துவிட்டார். க.பி.கல்யாணசுந்தரத்தின் பதிவை படிக்க  http://www.kalachuvadu.com/issue-108/page27.asp  இணையதளத்தைப் பாருங்கள்.

நான் மனதில் எழுந்த கேள்விகளுடனும், ஏமாற்றத்துடனும் சென்னைக்குக் கிளம்பினேன். சென்னையில் என் நண்பரும், சகோதருமான விளம்பர பட இயக்குனர் மகுடபதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னார் உங்கள் பாரதியின் நினைவு இல்லம் இங்குதானே இருக்கிறது.. போகவில்லையா என்று. அவர் சொல்லும்வரை அந்த நினைவு இல்லம் அவ்வளவு அருகில் இருப்பது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாதே என்றேன். நானும் அந்த இல்லத்தைப் பார்த்து வெகுநாள்
ஆகிவிட்டது, உங்களுக்கு விருப்பம் என்றால் நான் உங்களை அழைத்து போகிறேன் என்றார். யோகி மறுப்பாளா அந்த வாய்ப்பை. தயாராக இருக்கிறேன் என்றேன். அவர் அழைத்துக்கொண்டு போனார். சாலையில் வாகன நெரிசல் சொல்லி மாளவில்லை. குறிப்பிட்ட ஒரு சாலையில் எங்களின் வாகனம் நுழைந்த போது நிறைய முஸ்லிம் மக்களையும்-பார்ப்பனர்களையும் காண முடிந்தது. சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி இதோ நினைவு இல்லம் என்றார். சென்னை, திருவல்லிக்கேணியில் பாரதியார் இறுதிகாலத்தில் வாழ்ந்த வீட்டைதான் நினைவு இல்லமாக புதுப்பித்திருக்கிறது தமிழக அரசு.

முதல் பார்வையில் எனக்குள் ஒரு பூரிப்பு இருந்தது. பெரிய வீடு அது. அதை புதுப்பித்து நினைவு இல்லம் ஆக்கியிருக்கிறார்கள். வெளியில் சிலர் நாளேடு படித்துக்கொண்டிருந்தார்கள். வாசலில் பாரதியின் நினைவுச்சிலை இருந்தது. பக்கவாட்டில் பார்வையாளர்களின் பதிவு புத்தகம் இருந்தது. பாரதி இறுதிகாலத்தில் வாழ்ந்த அந்த இல்லம், முதலில் தனியாரிடம்தான் இருந்திருக்கிறது. அதை தமிழக அரசு ரூ.3 லட்சத்துக்கு வாங்கி பின் 5 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்ததாம். அந்த இல்லத்தை 1993-ஆம் ஆண்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தாராம். இன்றும் அரசு ஆதரவோடுதான் அந்த இல்லம் இயங்கிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது.

ஆனால், பராமரிப்பு என்ற சொல்லிற்க்கு ஏற்ற எந்த பராமரிப்பும் அங்கு இல்லை. தூசி மண்டிய புகைப்படங்களோடு கட்டடமும் பராமரிப்பும்கூட தூசியாகத்தான் இருக்கிறது. ஒரு பக்கத்தில் மூட்டை மூட்டையாக தூசி மண்டிய நிலையில் புத்தக மூட்டைகள். எடைக்கு போடபோகிறார்களா என்ற சந்தேகம் எழவே, விற்பனைக்கு என்றால் நான் சில புத்தகங்களை வாங்கி கொள்கிறேனே என்று பொறுப்பாளரிடம் கேட்டேன், அது விற்பனைக்கு அல்ல, நூல்நிலையம் அமைக்க பெற்ற புத்தகங்கள் என்றார். எப்போது நூலகம் அமைக்க போகிறீர்கள் என்று கேட்டேன்.. "அந்தக் கேள்வி உனக்கு எதற்கு" என்பதைப்போல ‘அமைக்கனும்’ என்று மட்டும் சுருக்கமாக சொன்னார் பொறுப்பாளர். அதற்குப்பிறகு என்னிடத்தில் அவரிடம் கேட்பதற்கு கேள்விகள் இல்லை.

அந்த வீட்டின் ஒரு மூலையில் தலைசாய்க்க ஆசை இருந்தது. அதற்கான எந்த வசதியும் அங்கில்லை. நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அந்த சூழலில் அங்கு கொஞ்சம் அமர்ந்து போகலாம் என்று மனம் அலைக்கழித்தது. அமர்ந்தேன். மறுவினாடியே நீங்கள் இங்கு எல்லாம் அமரமுடியாது. வெளியில் போய் அமருங்கள் என்றார். நான் எதையும் பேசவில்லை. வெளியில் அமர்ந்துக்கொண்டேன். பாரதி வாழ்ந்த வீடு, அதன்பிறகு தனியாரிடமிருந்தபோது இருந்த தோற்றம், அதன்பிறகு புதுப்பித்து இப்போது இருக்கும் வீடு என புகைப்பட வரிசை அங்கு மாட்டப்பட்டிருந்தது. புகைப்படம் எடுக்கக்கூடாது என நினைவு இல்ல பொறுப்பாளர் முன்பே கூறியிருந்ததால் அனைவரின் முன்னணியிலும் நான் படமெடுக்கவில்லை.

மகுடபதி சார் என்னை வீட்டின் முன்புறம் வைத்து படமெடுத்தார். அவருக்கு நான் அப்போது நன்றி சொல்லவில்லை. இப்போது அவருக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். எனது பாரதிக்கும் எனக்குமான உறவுக்கு எது காரணமாக இருக்கிறது என்று நானே அடையாளம் காண முடியாத மர்மமாக இருக்கும்போது 1910-ஆம் ஆண்டு ‘கர்மயோகி’ என்ற பத்திரிகையை பாரதி நடத்தி வைந்திருக்கிறார் என்ற செய்தி எனக்குள் பேரானந்தத்தை கொடுத்தது. அன்புக்கு எப்போதும் காரணம் தெரிவதில்லை என்று நான் பொதுவாகவே கூறுவது உண்டு. அதை உறுதிபடுத்தும் உதாரணம் நானும்-பாரதியும்தான்.

முற்றும்.







திங்கள், 29 ஜூன், 2015

மீனாவின் ‘சித்திரம் பேசேல்’


சித்திரம் பேசேல்ஔவையின் ஆத்திச்சூடியில் வரும் வரியாகும். இதைத்தான் கட்டுரையாளர் மீனா தனது புத்தகத்திற்குப் பெயராகச் சூட்டியுள்ளார். சமீபத்தில் நான் படித்த புத்தகங்களில் இந்தப் புத்தகம் என் வரையில் முக்கியமானதாக இருக்கிறது.

மீனா என்றப் பெயரை இந்தப் புத்தகம் படிக்கும் வரையில் நான் அறிந்ததே இல்லை. 2013-ஆம் ஆண்டு வாங்கி வைத்திருந்த புத்தகத்தை இப்போதுதான் வாசிக்கக் கையில் எடுத்திருக்கிறேன். காலதாமதம்தான். ஆனால், புத்தகத்தில் இருக்கும் விஷயமும் எழுத்து நடையும், அதன் அழகியலும் எந்தக் காலத்திலும் விவாதத்திற்கும், கலந்துரையாடலுக்கு உட்படுத்தும் தரத்தோடு பதிவாகியுள்ளது.
சித்திரம் பேசேல்மீனாவின் முதல் புத்தகமாகும். 2013-ஆம் ஆண்டு எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கட்டுரைகள், விமர்சனங்கள், ஊடக அவதானிப்புகள் என மீனா தீராநதி, உயிரெழுத்து மேலும் இணையதளத்தில் எழுதி வெளியிட்ட மொத்தம் 27 கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புத்தகத்தில் மீனா எழுதிய முன்னுரையைப் படிக்கும்போது, 2000-ஆம் ஆண்டிற்க்குப் பிறகுதான் , மீனா இலக்கியப் பிரபஞ்சத்திற்குள் வந்தது தெரியவருகிறது. ஆனால், கட்டுரைகளை வாசிக்கும்போது அதன் எழுத்துநடையும் அவர் பயன்படுத்தும் மொழியாற்றலும் பண்பட்ட எழுத்தின் தரம்கொண்டதாக அமைந்திருக்கிறது.
எழுத்தை ஒரு சவாலாகவே தான் எடுத்துகொண்டதாக மீனா ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர் வைக்கும் காரணம் பெண் எழுத்தாளர்கள் சிந்திக்ககூடிய விடயமாக எனக்குப் பட்டது. மீனா இப்படிக் கூறுகிறார்,

 பெண்கள் கவிதைகளைத் தாண்டி வேறொன்றும் எழுதமாட்டார்கள்; உடல், காமம் வேட்கை இவைகளைக் கடந்து எதுவும் பேசமாட்டார்கள்; அரசியல், விமர்சனம் என இயங்கிக் கொண்டிருந்த பெண்களும் இப்போது தேங்கி விட்டார்கள்என்பதாகவே அவை இருந்தன. வாழ்க்கையே ஒரு சவாலாகிப் போனபின்பு இந்த விமர்சனங்களையும் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டேன்
-மீனா

 ஒரு வீம்புக்குச் சவால் எடுத்துக்கொண்டேன் என மீனாக் கூறவில்லை. அதற்கான உழைப்பை 90 சதவிகிதம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் தனது விமர்சனக் கட்டுரைகளை முன்வைக்கும் போது அதற்கான தரவுகளைத் திரட்டி மிகக்காந்திரமாகவே முன்வைக்கிறார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நான் மீனாவை மதிக்கும் விதமாக இரண்டு கட்டுரைகள் இருந்தன. அந்தக் கட்டுரைகளில் அவரின் பொறுப்புணர்ச்சி மட்டுமல்ல, ஓர் எதிர் விமர்சனத்தை வைக்கும்போது அதில் இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் பார்த்தேன். தனக்கு உவப்பில்லாத அல்லது இந்தக் கூற்றை இப்படி அணுகி இருக்கக்கூடாது என்று மீனா எண்ணிய கட்டுரைக்கு அவர் வைத்த எதிர்விமர்சனம் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அதுவும் அவர் விமர்சனம் வைத்தது முக்கியப் பெண் எழுத்தாளர்களான அம்பை மற்றும் வாஸந்தி மீது. காஷ்மீர்ப் பிரச்னைக் குறித்துத் தனது எதிர்வினையைத் தெரிவித்ததற்காக அம்பைக்கும், இந்தியச் சூழலில் வரலாற்றுப் பெண் ஆளுமைகள் குறித்துத் தீராநதியில் பேசியதற்காக வாஸந்திக்கும் தனது எதிர்வினையை மிகத் தைரியமாகப் பதிவு செய்திருக்கிறார் மீனா. இந்தக் கட்டுரைகளை நான் படித்து முடித்தபோது ஓர் எதிர்வினையை எப்படியாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்துக்கொண்டேன்.

இந்தக் கட்டுரைத் தொகுப்பில், பாலியல் கலகம்: நொறுங்கும் கலாச்சாரம் என்ற கட்டுரையும், ராதிகா சாந்தவனம் எனும் கட்டுரையும் என்னை வெகுவாகக் கவர்ந்தக் கட்டுரையாகும். குறிப்பாகப் பெண்கள் வெளிப்படையாகப் பேசு மறுக்கும் விஷயமாகப் பாலியல் இருக்கிறது. அதைப் பெண்கள் பேசக்கூடாத, அப்படியே பேசினால் அதில் அவர்களின் சுயவாழ்க்கையை நோக்கக்கூடிய விடயமாக இருப்பதால்தான் அதைப் பேசப் பெண்கள் சங்கடப்படுகின்றனர். மீறிப் பேசியவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சிக்கப்படுவது இன்றும் தொடரும் விடயமல்லவா..
ஆனால், மீனா மிக அழகாக அதைப் பேசியிருக்கிறார். குறிப்பாக ராதிகா சாந்தவனம் கட்டுரையில் பலமரபுக் கூறுகளை உடைத்துக் காட்டியிருக்கிறார். ராதைக்கும் கண்ணனுக்குமானக் காதலை மட்டுமே பார்த்துச் சிலாகித்து, அதன் கற்பனைகளில் காதல் வளர்த்தவர்களுக்கு ராதையின் ஊடலும், அதன் நீட்சியாக அவள் கண்ணனிடம் காட்டும் கடுமையும், கண்ணன்ராதை ரசிகர்களை அதிரவைக்கும் செய்தியாகும்.

18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காவியமானராதிகா சாந்தவனம்எனும் நூல் கவிதை வெளிப்பாடும், சொற்செட்டும் பாலியல் விவரணைகளும் கொண்டுள்ள ஒரு படைப்பாகும். இன்றைய பெண்ணிய உடல்மொழிகளுக்கு எல்லாம் முன்னோடி என மீனா அந்தக் காவியத்தைக் குறிப்பிடும் வேளையில், அவசியம் படித்தறிய வேண்டும் எனவும் கூறுகிறார்.
18-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்டப் பிரதாபசிம்மனின் அரசவை நர்த்தகியாக இருந்தவர் முத்துப்பழனி. அவர் இயற்றிய இக்காவியத்தைத் தேவதாசி மரபில் உதித்த இன்னொரு அறிஞரும் கலைஞருமானப் புட்டலஷ்மி நாகரத்தினம்பாள் 1911-ஆம் ஆண்டு முழுமையாக மறுபதிப்புச் செய்தார் என்ற தகவலோடு அது தடைசெய்யப்பட்ட விவரங்களையும் ஓர் ஆவணப் பதிவாக மீனா நமக்குத் தந்திருக்கிறார். அந்தக் காவியத்தில் இடம்பெற்ற கவிதைகளில் சிலவற்றை இந்தப் பதிவில் இடம்பெறச் செய்திருப்பது முக்கிய விடயமாகும்.

 அவர் எழுத வந்தக் காலக்கட்டங்களில்  நடந்த முக்கிய விடயங்களையும் அதன் முக்கியத்துவமறிந்துத் தன் பார்வையை மீனாப் பதிவு செய்திருக்கும் விதம் ஒரு சமூதாய அக்கறை உள்ள எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியோடு வெளிப்பட்டிருக்கிறது. இதை மீனாவிடமிருந்து நான் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயமாகக் கருதுகிறேன்.

மீனாவை நான் பார்த்ததில்லை. அவரின் எழுத்தைகூட இந்தப் புத்தகத்தின் மூலம்தான் முதன் முதலாக வாசித்திருக்கிறேன். ஒருவருக்குத் தாராளமாகப் பரிந்துரைக்கூடிய அல்லது பரிசளிக்கக்கூடிய புத்தகமாக நான்சித்திரம் பேசேல்பரிந்துரைசெய்வேன். அதோடு மீனாவின் அடுத்தப் புத்தகத்தையும் எதிர்பார்க்கும் ஒரு வாசகியாகவும் நான் காத்திருக்கிறேன்.




ஞாயிறு, 28 ஜூன், 2015

நானும் மகாகவி பாரதியும்... ( பாகம் 2)


ஒரு தேடலோடு தொடர்ந்து செல்கையில் ஜன்னல் வழியே ஒரு காட்சித் தட்டுப்பட்டது.
குழந்தைகள் தரையில் அமர்ந்தவாறுப் படித்துக்கொண்டிருந்தனர். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு வெளிப் பார்வையாளினியாக அனைத்தையும் தாண்டிப்போய்க் கொண்டிருந்தேன்…

இனி...
மறுநாள் இராமநதி அணையிலிருந்து கல்யாணியம்மன் கோயில்வரை பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். பாரதிக்கும் கல்யாணியம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நண்பர் கூறியிருந்தார். பாரதியின் இறைபக்தியைக் குறித்து விவாதிக்கத் தேவையில்லை. ‘பராசக்தி’ என அவர் எழுத்தின் வழியே கேட்டக் கேள்விகள் மனசாட்சியுள்ளவர்களைக் குத்திக்குடையக் கூடிய வரிகளாகும். எனக்கு என்னவோ அவர் இறைவனை ஓர் உவமையாகத் தான் பயன்படுத்தியிருப்பாரோ என்ற கேள்வித் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாரதியை யாரும் புரிந்துக் கொள்ளாத காலகட்டத்தில் அவர் தஞ்சமடைந்தது கோயில்களில் தானே. அதுவும் கல்யாணியம்மன் கோயிலுக்குப் பின்புறமிருக்கும் மலையில் தான் அவர் பல கவிதைகளை வடித்திருக்கிறாராம். ‘பாரதி’திரைப்படத்திலும் அந்த இடத்தை அழகாகப் படமாக்கியிருந்தார்கள்.  இப்போது என்னவர் கால்பதித்த அந்த மலையில் அவரின் ரசிகையாக, ஓர் உண்மையான தோழியாக நானும் கால் பதிக்கவுள்ளேன் என்பது எனக்கு உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு விடயமாகவே இருந்தது. அந்த இடத்தைத் திரையில் முன்கூட்டியேப் பார்த்திருந்தாலும் நேரில் அதைப் பார்ப்பதற்கு என்னுள் கற்பனைகள் பல கிளைகளை வளர்த்து ஜாடைக் காட்டிக் கொண்டிருந்தன.
மறுநாள் காலை 6 மணியளவில் கிளம்பினோம். அது அழகான, மிக முக்கியமான, என் வாழ்கையில் ஓர் அர்த்தமுள்ள காலை. வானிலையும் எனக்குச் சாதகமாகவே இருந்தது. தெளிந்த நீல வானத்தைப் பார்த்தபடியே இராமநதி அணையை நோக்கிக் கிளம்பினோம். போகும்போதே மேற்கு-தெற்கு எனப் பசுமையான இயற்கை வளங்களையும், வயல் வெளிகளையும் பார்க்க முடிந்தது. கால்நடைகளை விரட்டியவாறுச் சிலரும், ஏதோ பேசிக்கொண்டு நடந்தவாறுச் சில பெண்களும் இயற்கையின் எந்தச் சலனமும் இல்லாதவர்களாகப் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு தானே இடம் புதிது, காணும் மனிதர்களும் புதியவர்கள். அன்றாடம் இந்த இயற்கையைப் பார்த்து வாழ்பவர்களுக்குக் காணும் அனைத்தும் பழையதுதானே என நானே ஒரு பதிலைக் கூறிக் கொண்டேன்.
போகும் வழியெங்கும் ஒருபுறம் பல வருடங்கள் வாழ்ந்த  விருட்சங்கள், அதன் முரட்டுக் கம்பீரத்துடன் நின்றன. மறுபுறம் தோட்டம், புல் மண்டிய நிலம் என இருந்தன. எங்கும் பசுமைதான். அதைத் தாண்டி நின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக் கடையத்திற்கே அழகு சேர்த்துக்கொண்டிருந்தது. இவற்றுடன் நான் அதிகம்  ரசிக்கும் பறவைகள் இருந்தன. விதவிதமான பறவைகள். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட பறவை வகைகள்.  மயில், குயில், மரக்கொத்தி, பருந்து, சிட்டு, புள்ளிப்புறா, பனங்காடை, கரிச்சான் குருவி, கல் குருவி என எனக்குப் பெயர் தெரிந்தப் பறவைகளும் பெயர் தெரியாத பறவைகளும் அதன்தன் ஒலிகளை எழுப்பிக் கொண்டு என்னை உற்சாகப்படுத்தின.
காலை வெய்யில் கொடுக்கும் உற்சாகத்தை விடத் தன்வசம் சிக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் பறவைகள் கொடுக்கும் உற்சாகம் சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கவல்லது. Bird Watch-க்குப் போக விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தைக் கடையம் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
முதலில் நான் போனது இராமநதி அணைக்குத்தான்.  நீர் காக்கைகளும், வாத்துகளும் அணையில் கிடந்த குறைந்த அளவு நீரில் அலவலாகிக் கொண்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் மிகமிக அமைதியான சூழல் அமைந்திருந்தது அன்று எனக்குக் கிடைத்த வரம். ஒரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலை,  மறுபுறம் அடர்ந்த அழகான மலைப்பகுதியுடன் கூடிய வனம். என் நிலையை என்னாலே விவரிக்க முடியவில்லை. அழகான காலையில் இது மாதிரி,  யட்சிக்கு விருந்தைப் படைக்க முடியாது. மலை மீது சூரியன் விழுந்துக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்த காட்சியை என் புகைப்படக்கருவியில் படமெடுத்த வண்ணம் இருந்தேன். மேட்டிலிருந்து சுற்றிப்பார்த்தால் எங்கும் வனம், எங்கும் மலை, எதிலும் பசுமை. எத்தனைப்பேர் இந்தக் காட்சியை ரசித்திருப்பார்கள் எனத் தெரியாது. என்னால், அந்தத் தனிமையை ஆலிங்கனம் செய்யாமல் இருக்க முடியவில்லை. என் கால்களை அணையில் நனையவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.
கல்யாணியம்மன் கோயில்
அதன்பிறகு, நான் கல்யாணியம்மன் கோயிலுக்குப் போனேன். ஊரின் எல்லையில் தனித்து இருக்கிறது கோயில். அந்தக் கோயிலுக்கும்  எம் பாரதிக்கும் நிறையச் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆதாரத்தை அந்தக் கோயிலின் கல்வெட்டிலும் ஒரு வரியில் இருந்தது. தற்போது கோயிலை நன்குப் புதிப்பித்திருக்கிறார்கள். வண்ணத்தில் பொழிவாக இருந்தாலும், தன் மொத்தச் சந்தோஷத்தையும் கோயில் இழந்து நிற்பதை நம்மால் உணர முடிந்தது. கோயிலைச் சுற்றி உலர்ந்திருக்கும் பெருக்கப்படாத அரச மரத்து இலைகள், கோயிலுக்கு வரும் பத்தர்களின் எண்ணிகையைக் கூறிவிடும். தெப்பக்குளம் காய்ந்து வறண்டிருந்தது.
நான் கோயிலின் உள்ளே சென்றேன். 63 நாயன்மார்கள் வரிசையில் நின்று வரவேற்றார்கள். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று எழுதப்பட்டிருந்தது. என்ன செய்வது? நான் நிருபர் என்று யாருக்கும் தெரியாது அல்லவா…?  கர்ப்பக்கிரக அம்மனிடம் எனக்கு எந்தவொரு வேண்டுதலோ அல்லது கோரிக்கையோ இல்லை. அர்ச்சகர் தட்டோடு நின்றார், கையிலிருந்த சிறுதொகையைத் தட்டில் போட்டேன், திருநீருக் கொடுத்தார்.
நான் கோயிலுக்குப் பின்னால் இருந்த சின்னக் குன்றுக்குச் சென்றேன். அதைப் பொத்தைன்னுச் சொல்லுவாங்கலாம். அங்குதான் எம் பாரதிப் பல கவிதைகளை எழுதினாராம். போதைப்பொருளை உட்கொண்டு மயங்கி விழுந்துக் கிடந்தாராம். ‘பாரதி’ படத்தில் வரும் சில காட்சிகள் அந்தக் குன்றின்மீது தான் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிற்பதுவே, நடப்பதுவே பாடல் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டது அங்குதான். என்னால் ஏறமுடிந்த அளவுக்கு அந்தக் குன்றின்மீது ஏறி வலம் வந்தேன். அமர்ந்திருந்தேன். பாரதியின் நினைவுகளில் கொஞ்சம் திளைத்திருந்தேன். எனக்கு எந்தக் கவிதையும் வரவில்லை. நினைவுகளை மட்டுமே சேமித்தேன். காலம் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை எண்ணி அகம் மகிழ்ந்துக் கொண்டேன். என் வாழ்கையில் நடக்கும் இந்த விந்தைச் செயல்கள் மீண்டும் இடம்பெறாமலே போகலாம். இப்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, இந்த நேரம், இந்தக் காட்சி ஒரு கவிதையைவிட அற்புதமில்லையா?
அங்கிருக்கும் மிகப்பழம்பெரும் சிலைகளைப் புகைப்படம் எடுத்தேன். அதைப்பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை. அவை மழையிலும் வெயிலிலும் தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன. அதைப்பற்றிய எந்தக்கவலையும், ஆவண  நஷ்டமும் யாருக்கும் புரிவதாக இல்லை. சிலைகளும் அதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை. ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’என என்னவன் அந்தக் கோயிலில் இருந்து தானே பாடினான். கோயிலைப் புதுப்பிப்பதில் காட்டும் ஆர்வம் அந்தச் சிலைகளைப் பாதுகாப்பதிலும் காட்டலாமே.. என்ற கேள்வியோடு நான் திரும்பினேன்.

புதுப்பித்த கோயிலில் பாலியல் சிற்பம் சேர்க்கப்பட்டிருந்தது என்னை வெகுவாக ஈர்த்தது. ஆனால், அது அந்தக் கோயிலுக்கு எந்த அளவுக்கு முக்கியமெனத் தெரியவில்லை. நாவல் மரங்களும் அரச மரங்களும் காய்ந்த இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்க நான் அதில் களிப்புற்றிருந்தாலும் பாரதி என்ற அந்தச் சாமானியனின் அடையாளம் இல்லை என்றால் இந்தக் கடையத்திற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன பெருமை சேர்ந்திருக்கும்? இத்தனைக்கும் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பெற்றதும் பட்டதும் கொஞ்ச நஞ்சமல்லவே? இப்படியான கேள்விகளோடு நான் விடைபெற்றேன். அப்போது நான் அறியவில்லை, சென்னையில் என் பாரதி வாழ்ந்த இறுதிகால வீட்டில் என் பயணத்தை முடிப்பேன் என்று.


(தொடரும்)

வெள்ளி, 26 ஜூன், 2015

நானும் மகாகவி பாரதியும்...

மேற்கு தொடர் மலையை ஒட்டிய கடையம்

மகாகவிப் பாரதி, என் வாழ்க்கையோடு என் குழந்தைப் பருவம் தொட்டே பயணித்து வருவது என் எழுத்தைப் பின்தொடர்பவர்கள் அறிவார்கள். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான எனது தாத்தா பாரதியார் கவிதைகளைத்தான் எனக்குப் பாடலாகப் போதித்தார்.

7 வயதில் ஆரம்பக்கல்வியைக் கற்க என் அப்பா சேர்த்துவிட்ட பள்ளிக்கூடம் பாரதித் தமிழ்ப்பள்ளி. பெரிய முண்டாசுடன், மிரட்டும் மீசையும் விழியைக் கொண்ட அவரின் புகைப்படம் பள்ளியின் நுழைவாயிலேயே இருக்கும். அதைப் பார்த்தபடிதான் உள்நுழைய வேண்டும். எனக்கு விவரம் தெரியாத அந்தப் பால்யப்பருவத்திலிருந்து பாரதியைப் பார்த்தே வளர்ந்தவள் நான். ஆரம்பக் கல்வியை முடித்து இடைநிலைப்பள்ளிக்கு நான் போகும்போது அதிகம் சிலாகிக்கும் என் மானச்சீகக் காதலனாகப் பாரதி எனக்குள் வளர்ந்திருந்தான்.

பள்ளிப் பாட படைப்புகளில் நான் எழுதும் கட்டுரையோ, கதையோ எதுவாகினும் பாரதி ஒரு வரியிலாவது வந்து போவார். பள்ளியில் நடக்கும் நாடகம், பரிசளிப்பு விழா என நான் பங்கு கொள்ளும் எதிலும் பாரதியின் வரிகளோ அல்லது பிரச்சாரங்களோ உள்புகுத்த முடியுமா என யோசிப்பேன். சில சமயம் இது என் குழுவினருக்குச் சலிப்பையும் அலுப்பையும் தட்டியதுண்டு. எனக்கு மட்டுமே திகட்டாதவனாகப் பாரதி இருந்தான்.
எனக்குச் சங்கடமோ மனகுழப்பமோ ஏற்படும் எல்லாக் காலத்திலும் என் அலைப்பேசியில் இருக்கும் பாரதியார் பாடலை ஒலிக்கவிட்டுத் தனிமையில் வெகுநேரம் அமர்ந்து என் சோகமாற்றுவேன். இன்றும் அவர் மேல் ஒரு பித்துநிலைக் கொண்டவள் நான். ஏன்? எப்படி ஏற்பட்டது என்பதற்கெல்லாம் என்னிடத்தில் பதில் இல்லை. காதலுக்குக் காரணம் தெரிவதில்லை. எனக்கும் பாரதிக்குமான உறவை வலுப்பெறச் செய்யும் சம்பவங்கள் இயற்கையே அமைத்துக் கொடுக்கும்.

அப்படிதான் அமைந்துபோனது எனது முதல் இந்தியப் பயணமும். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இயற்கை வரையும் கோலத்தில் இயற்கையே புள்ளியை வைத்து, கோட்டையும் ஒன்றிணைக்கிறது. யோகி அதன் நேர்கோட்டில் பயணம் செய்து அதிசயத்தைப்  பதிவிடுகிறாள். ஆம். என்னைப் பொறுத்தவரையில் அதிசயம் தான் அது. எனது 6 நாள் இந்தியப் பயணத்தில் 2 நாட்கள் கடையத்தில் இருந்தேன்.
கடையம், பாரதியின் கண்ணம்மா பிறந்த ஊர். அங்குதான் 7 வயது கண்ணம்மாவை, தனது 14 வயதில் கரம் பிடித்தாராம் பாரதி. இப்படியான விஷயங்களை நான் ஏட்டில் படித்துத் தெரிந்துக் கொண்டவை. தென்காசியின் பேருந்து நிறுத்துமிடத்தில் நான் இறங்கி, கடையத்திற்குச் செல்வதற்கான பேருந்து எடுத்த போது பலதரப்பட்ட மக்களைப் பார்த்தேன்; அந்தக் காலை நேரத்திலும் அவர்கள் பரபரப்பாகவே இருக்கிறார்கள், சிரிப்பை மறந்த முகங்கள் அல்லது சிரிப்பைக் கழட்டி வைத்துவிட்டு வந்த முகங்கள் அவை.

சுற்றுச்சூழல் குறித்துப் பேசினால் வீண் சங்கடமே மிஞ்சும். இன்று தலைக் கவசத்தின் முக்கியத்தைப் பற்றி இந்தியாவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆண்கள் பெண்கள் பள்ளிப் பிள்ளைகள் எனச் செருப்பு அணியாத பலதரப்பட்ட கால்களைப் பார்த்தேன். சுகாதாரமற்ற சாலையில் அவர்கள் நடப்பது எனக்கு அருவறுப்பை ஏற்படுத்தவில்லை. சங்கடத்தைத் தான் ஏற்படுத்தியது. இயற்கையோடு வாழும் வாழ்க்கைக்கு நவீனம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், செருப்பை அப்படி ஒதுக்க முடியாது அல்லவா.
பேருந்தில் டிக்கெட் வாங்குபவர்கள்  “கடையத்திற்கு”  என்றதும், எம் பாரதி வாழ்ந்த ஊர், நான் அங்கு தானே போய்க் கொண்டு இருக்கிறேன் என்று மனதோடு பேசிக் கொண்டேன். அதுவரை  இருந்த சிந்தனை மொத்தமும் பாரதியிடமே திரும்பிக் கொண்டது. எனக்கும் பாரதிக்குமான முடிச்சி, விழுந்த இடம் எதுவென நான் அறியவில்லை. ஆனால், அவன் என்னைப் பின்தொடர்வதும், யாம் அவனைத் தொடர்ந்து செல்வதும் நிறுத்த முடியவில்லை. நான் கடையத்தில் இறங்கினேன்.

பழைய பிராமணத் தெரு (பழைய கிராமம்) வழியாக நடந்துச் சென்றோம். வீட்டுக்கு வீடு சின்னதாகக் கோலம் போட்டிருந்தார்கள். சிறியது-பெரியது எனப் பலதரப்பட்ட வீடுகள். சில வீடுகள் வண்ண வண்ணச் சாயத்தோடும் இருந்தன. ஆனால், பிராமணர்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. பெயருக்கு ஏற்றமாதிரி ஆட்கள் இல்லையே என்றேன்.
ஆம், இப்போது பிராமணர்கள் யாரும் இங்கு வசிக்கவில்லை. அவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. ஆனால், தெருவின் பெயர் மட்டும் அப்படியே நின்று விட்டது என்றார்  நண்பர். புதிதாகச் சாயம் பூசப்பட்ட ஒரு வீட்டைக் காட்டி, இந்த வீட்டில்தான் பாரதியாரும் கண்ணம்மாவும் வாழ்ந்தார்கள். இப்போது இந்த வீட்டைப் புதுப்பித்து யாரோ வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நண்பர் சொன்னதும் எனக்குப் பகீர் என்றது. எப்படி முடியும்? இது ஆவணப்படுத்த வேண்டிய வீடு அல்லவா?
பாரதியைப் பற்றி ஆய்வுச் செய்பவர்களுக்கு இந்த வீடும் ஓர் ஆவணம் அல்லவா? அதோடு இதை ஆவணம் செய்வதின் வழி, சுற்றுப்பயணிகள் இந்த ஊருக்கு வருவதற்கும் ஒரு வாய்ப்பு அமையுமே? என்றேன்.  உங்களுக்குத் தெரிந்தது இந்த நாட்டு அரசுக்குத் தெரியாமலா இருக்கும்?  விஷயம் தெரிந்தப் பலருக்கும் இது ஆதங்கமாக இருக்கும்தான். ஆனால், என்ன செய்ய முடியும் என்றார் மிகச் சாதாரணமாக. நான் அந்த வீட்டைப் பார்த்தபடியே தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்.

அழகான கிராமமாகக் கடையம் இருந்தது. அதைச்சுற்றி இன்னும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறதாம். போகும் வழியில் சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தேன். அவரின் நினைவாக இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி என்று நண்பர் சொன்னார். சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாலும் பொலிவிழந்த கட்டிடம்போல் அது காட்சிக்கொடுத்தது. அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் பலகல்விக் கூடங்கள் பாரதியின் நினைவாக அவரின் பெயரில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் பார்க்க முடிந்தது.
ஒரு தேடலோடு தொடர்ந்து செல்கையில் ஜன்னல் வழியே ஒரு காட்சித் தட்டுப்பட்டது. குழந்தைகள் தரையில் அமர்ந்தவாறுப் படித்துக்கொண்டிருந்தனர். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு வெளிப் பார்வையாளினியாக அனைத்தையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தேன்…
(தொடரும்)

குறிப்பு:
இராமநதி அணையிலிருந்து கல்யாணியம்மன் கோயில் வரை, நான் பார்த்ததும் பெற்றதும் அடுத்த தொடரில்.