ஒரு தேடலோடு தொடர்ந்து செல்கையில் ஜன்னல் வழியே ஒரு காட்சித் தட்டுப்பட்டது.
குழந்தைகள் தரையில் அமர்ந்தவாறுப் படித்துக்கொண்டிருந்தனர். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் ஒரு வெளிப் பார்வையாளினியாக அனைத்தையும் தாண்டிப்போய்க் கொண்டிருந்தேன்…
இனி...
மறுநாள் இராமநதி அணையிலிருந்து கல்யாணியம்மன் கோயில்வரை பார்த்து வரலாம் என்று கிளம்பினோம். பாரதிக்கும் கல்யாணியம்மன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நண்பர் கூறியிருந்தார். பாரதியின் இறைபக்தியைக் குறித்து விவாதிக்கத் தேவையில்லை. ‘பராசக்தி’ என அவர் எழுத்தின் வழியே கேட்டக் கேள்விகள் மனசாட்சியுள்ளவர்களைக் குத்திக்குடையக் கூடிய வரிகளாகும். எனக்கு என்னவோ அவர் இறைவனை ஓர் உவமையாகத் தான் பயன்படுத்தியிருப்பாரோ என்ற கேள்வித் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், பாரதியை யாரும் புரிந்துக் கொள்ளாத காலகட்டத்தில் அவர் தஞ்சமடைந்தது கோயில்களில் தானே. அதுவும் கல்யாணியம்மன் கோயிலுக்குப் பின்புறமிருக்கும் மலையில் தான் அவர் பல கவிதைகளை வடித்திருக்கிறாராம். ‘பாரதி’திரைப்படத்திலும் அந்த இடத்தை அழகாகப் படமாக்கியிருந்தார்கள். இப்போது என்னவர் கால்பதித்த அந்த மலையில் அவரின் ரசிகையாக, ஓர் உண்மையான தோழியாக நானும் கால் பதிக்கவுள்ளேன் என்பது எனக்கு உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு விடயமாகவே இருந்தது. அந்த இடத்தைத் திரையில் முன்கூட்டியேப் பார்த்திருந்தாலும் நேரில் அதைப் பார்ப்பதற்கு என்னுள் கற்பனைகள் பல கிளைகளை வளர்த்து ஜாடைக் காட்டிக் கொண்டிருந்தன.
மறுநாள் காலை 6 மணியளவில் கிளம்பினோம். அது அழகான, மிக முக்கியமான, என் வாழ்கையில் ஓர் அர்த்தமுள்ள காலை. வானிலையும் எனக்குச் சாதகமாகவே இருந்தது. தெளிந்த நீல வானத்தைப் பார்த்தபடியே இராமநதி அணையை நோக்கிக் கிளம்பினோம். போகும்போதே மேற்கு-தெற்கு எனப் பசுமையான இயற்கை வளங்களையும், வயல் வெளிகளையும் பார்க்க முடிந்தது. கால்நடைகளை விரட்டியவாறுச் சிலரும், ஏதோ பேசிக்கொண்டு நடந்தவாறுச் சில பெண்களும் இயற்கையின் எந்தச் சலனமும் இல்லாதவர்களாகப் போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு தானே இடம் புதிது, காணும் மனிதர்களும் புதியவர்கள். அன்றாடம் இந்த இயற்கையைப் பார்த்து வாழ்பவர்களுக்குக் காணும் அனைத்தும் பழையதுதானே என நானே ஒரு பதிலைக் கூறிக் கொண்டேன்.
போகும் வழியெங்கும் ஒருபுறம் பல வருடங்கள் வாழ்ந்த விருட்சங்கள், அதன் முரட்டுக் கம்பீரத்துடன் நின்றன. மறுபுறம் தோட்டம், புல் மண்டிய நிலம் என இருந்தன. எங்கும் பசுமைதான். அதைத் தாண்டி நின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக் கடையத்திற்கே அழகு சேர்த்துக்கொண்டிருந்தது. இவற்றுடன் நான் அதிகம் ரசிக்கும் பறவைகள் இருந்தன. விதவிதமான பறவைகள். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட பறவை வகைகள். மயில், குயில், மரக்கொத்தி, பருந்து, சிட்டு, புள்ளிப்புறா, பனங்காடை, கரிச்சான் குருவி, கல் குருவி என எனக்குப் பெயர் தெரிந்தப் பறவைகளும் பெயர் தெரியாத பறவைகளும் அதன்தன் ஒலிகளை எழுப்பிக் கொண்டு என்னை உற்சாகப்படுத்தின.
காலை வெய்யில் கொடுக்கும் உற்சாகத்தை விடத் தன்வசம் சிக்காமல் ஓடிக் கொண்டிருக்கும் பறவைகள் கொடுக்கும் உற்சாகம் சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுக்கவல்லது. Bird Watch-க்குப் போக விரும்பும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தைக் கடையம் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
முதலில் நான் போனது இராமநதி அணைக்குத்தான். நீர் காக்கைகளும், வாத்துகளும் அணையில் கிடந்த குறைந்த அளவு நீரில் அலவலாகிக் கொண்டிருந்தன. ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் மிகமிக அமைதியான சூழல் அமைந்திருந்தது அன்று எனக்குக் கிடைத்த வரம். ஒரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலை, மறுபுறம் அடர்ந்த அழகான மலைப்பகுதியுடன் கூடிய வனம். என் நிலையை என்னாலே விவரிக்க முடியவில்லை. அழகான காலையில் இது மாதிரி, யட்சிக்கு விருந்தைப் படைக்க முடியாது. மலை மீது சூரியன் விழுந்துக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்த காட்சியை என் புகைப்படக்கருவியில் படமெடுத்த வண்ணம் இருந்தேன். மேட்டிலிருந்து சுற்றிப்பார்த்தால் எங்கும் வனம், எங்கும் மலை, எதிலும் பசுமை. எத்தனைப்பேர் இந்தக் காட்சியை ரசித்திருப்பார்கள் எனத் தெரியாது. என்னால், அந்தத் தனிமையை ஆலிங்கனம் செய்யாமல் இருக்க முடியவில்லை. என் கால்களை அணையில் நனையவிட்டுக் கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன்.
கல்யாணியம்மன் கோயில்
அதன்பிறகு, நான் கல்யாணியம்மன் கோயிலுக்குப் போனேன். ஊரின் எல்லையில் தனித்து இருக்கிறது கோயில். அந்தக் கோயிலுக்கும் எம் பாரதிக்கும் நிறையச் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான ஆதாரத்தை அந்தக் கோயிலின் கல்வெட்டிலும் ஒரு வரியில் இருந்தது. தற்போது கோயிலை நன்குப் புதிப்பித்திருக்கிறார்கள். வண்ணத்தில் பொழிவாக இருந்தாலும், தன் மொத்தச் சந்தோஷத்தையும் கோயில் இழந்து நிற்பதை நம்மால் உணர முடிந்தது. கோயிலைச் சுற்றி உலர்ந்திருக்கும் பெருக்கப்படாத அரச மரத்து இலைகள், கோயிலுக்கு வரும் பத்தர்களின் எண்ணிகையைக் கூறிவிடும். தெப்பக்குளம் காய்ந்து வறண்டிருந்தது.
நான் கோயிலின் உள்ளே சென்றேன். 63 நாயன்மார்கள் வரிசையில் நின்று வரவேற்றார்கள். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று எழுதப்பட்டிருந்தது. என்ன செய்வது? நான் நிருபர் என்று யாருக்கும் தெரியாது அல்லவா…? கர்ப்பக்கிரக அம்மனிடம் எனக்கு எந்தவொரு வேண்டுதலோ அல்லது கோரிக்கையோ இல்லை. அர்ச்சகர் தட்டோடு நின்றார், கையிலிருந்த சிறுதொகையைத் தட்டில் போட்டேன், திருநீருக் கொடுத்தார்.
நான் கோயிலுக்குப் பின்னால் இருந்த சின்னக் குன்றுக்குச் சென்றேன். அதைப் பொத்தைன்னுச் சொல்லுவாங்கலாம். அங்குதான் எம் பாரதிப் பல கவிதைகளை எழுதினாராம். போதைப்பொருளை உட்கொண்டு மயங்கி விழுந்துக் கிடந்தாராம். ‘பாரதி’ படத்தில் வரும் சில காட்சிகள் அந்தக் குன்றின்மீது தான் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிற்பதுவே, நடப்பதுவே பாடல் மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டது அங்குதான். என்னால் ஏறமுடிந்த அளவுக்கு அந்தக் குன்றின்மீது ஏறி வலம் வந்தேன். அமர்ந்திருந்தேன். பாரதியின் நினைவுகளில் கொஞ்சம் திளைத்திருந்தேன். எனக்கு எந்தக் கவிதையும் வரவில்லை. நினைவுகளை மட்டுமே சேமித்தேன். காலம் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பை எண்ணி அகம் மகிழ்ந்துக் கொண்டேன். என் வாழ்கையில் நடக்கும் இந்த விந்தைச் செயல்கள் மீண்டும் இடம்பெறாமலே போகலாம். இப்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு, இந்த நேரம், இந்தக் காட்சி ஒரு கவிதையைவிட அற்புதமில்லையா?
அங்கிருக்கும் மிகப்பழம்பெரும் சிலைகளைப் புகைப்படம் எடுத்தேன். அதைப்பற்றிய எந்தக்குறிப்பும் இல்லை. அவை மழையிலும் வெயிலிலும் தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன. அதைப்பற்றிய எந்தக்கவலையும், ஆவண நஷ்டமும் யாருக்கும் புரிவதாக இல்லை. சிலைகளும் அதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை. ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’என என்னவன் அந்தக் கோயிலில் இருந்து தானே பாடினான். கோயிலைப் புதுப்பிப்பதில் காட்டும் ஆர்வம் அந்தச் சிலைகளைப் பாதுகாப்பதிலும் காட்டலாமே.. என்ற கேள்வியோடு நான் திரும்பினேன்.
புதுப்பித்த கோயிலில் பாலியல் சிற்பம் சேர்க்கப்பட்டிருந்தது என்னை வெகுவாக ஈர்த்தது. ஆனால், அது அந்தக் கோயிலுக்கு எந்த அளவுக்கு முக்கியமெனத் தெரியவில்லை. நாவல் மரங்களும் அரச மரங்களும் காய்ந்த இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்க நான் அதில் களிப்புற்றிருந்தாலும் பாரதி என்ற அந்தச் சாமானியனின் அடையாளம் இல்லை என்றால் இந்தக் கடையத்திற்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன பெருமை சேர்ந்திருக்கும்? இத்தனைக்கும் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பெற்றதும் பட்டதும் கொஞ்ச நஞ்சமல்லவே? இப்படியான கேள்விகளோடு நான் விடைபெற்றேன். அப்போது நான் அறியவில்லை, சென்னையில் என் பாரதி வாழ்ந்த இறுதிகால வீட்டில் என் பயணத்தை முடிப்பேன் என்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக