நேர்காணல்:
ச.விஜயலட்சுமி
நேர்கண்டவர்
: யோகி
ச.விஜயலட்சுமி தமிழ் இலக்கிவாதிகள் மத்தியில் மிகவும் பரீட்சயமான
பெயர் இது. பெண்களின் எழுத்துக்கள் சுதந்திரமாக
கையாள வேண்டும் என்று கூறுபவர். பக்குவப்படாமலிருக்கும்
மனதை பக்குவப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவே கவிதையை அறிகிறேன் எனும் இந்த ஆளுமை
‘எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை’, லண்டாய், பெண்ணெழுத்து களமும் அரசியலும் உள்ளிட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு கொடுத்துள்ளார்.
எனக்கு அவருடைய
அறிமுகம் 2015-ஆம் ஆண்டுதான் ஏற்பட்டது. இலங்கையில் ‘ஊடறு’ இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த
பெண்கள் சந்திப்பில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டோம். அதன்பிறகு சென்னையில் அவர்
வீட்டில் தங்கி போகும் அளவுக்கு எங்கள் உறவு இன்று நட்பு விருட்சத்தில் கிளைவிட்டு வேர்கள் நீண்டு போய்கொண்டிருக்கிறது.
இம்முறை ஊடறு பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்புக்காக்க
மலேசியாவுக்கு முதல் முறையாக வந்தவரிடம் ‘புத்தகம் பேசுது’ இதழுக்காக ஒரு நேர்காணல் செய்தேன்.. இனி நேர்காணலிலிருந்து…
தமிழ் படைப்புலகத்தில் உங்களுக்கு கிடைத்த
அங்கிகாரம் என எதை சொல்வீர்கள்?
விஜய: தமிழ்ப்
படைப்புலகத்தில் என் கல்லூரிப் பருவம் முதல் இயங்கி வருகிறேன்.எனக்கு கிடைத்த பேராசிரியர்கள்
எனக்கான கொடை. இள்வரசு ஐயா, மறைமலை இலக்குவனார், மு.மேத்தா, அப்துல் ரகுமான், சுதந்திர
முத்து, பொன்.செல்வகண்பதி, மின்னூர் சீனிவாசன் முதலாக இன்னும் பல முக்கியமான கருத்து
ரீதியான கொள்கை மிக்க வழிகாட்டிகளை இங்கே நினைத்துக் கொள்கிறேன்.
அண்மையில்
மரபுக் கவிதையில் காதல் அலைகள் எனும் நூலினை
வெளியிட்டார் கவிஞர் பொன்.செல்வகணபதி அவரின் இந்நூல் இளவரசன், கோகுல்ராஜ் உள்ளிட்டோரின்
ஆணவக் கொலைகளைப் பேசுகிறது. இந்நூலின் மேற்கோளாக எனது லண்டாய் நூலினைப் பயன்படுத்தியுள்ளார்.
முதுகலை படிக்கும் போது எனக்குப் பேராசிரியராக ஆற்றுப் படுத்திய ப.மகாலிங்கம் ஐயா பேராசிரியர்களுக்கான
பயிற்சி வகுப்பில் பெண்ணெழுத்து குறித்தான ஆற்றுகையில் ச.விசயலட்சுமியின் படைப்புல்கம்
குறித்து உரையாற்றியதோடு எம் படைப்பில் தாம் தயாரித்த தரவுகளைக் கொண்ட சிறு நூலினை
வீட்டிற்கு வந்து கொடுத்து வாழ்த்திச் சென்றார்.
கல்லூரியைத்தாண்டி
என் சிறகை விரித்தபோது அண்ணன் அறிவுமதி, தாயும் தந்தையுமாக என்றும் தாயுமானவனாக அப்பா
நாஞ்சில் நாடன், அப்பாக்கள் சுதீர்செந்தில், சமயவேல், ஓவியர் மருது என அப்பாக்களும்
அண்ணன்களும் தோழர்களும் தோழிகளும் நண்பர்களும் தம்பி தங்கைகளும் மகள்களுமாக பயணிக்கிற
இந்த சூழல் எனக்கு வாய்த்திருக்கிறது. இலக்கியவாதிகள் என்றாலே குழுக்களும் குழு அரசியலும்
சண்டை சச்சரவுகளும் மட்டும் தான் என்கிற பொதுப் போக்கிலிருந்து இலக்கியம் படைக்கும்
உறவுகளைக் கொண்ட பெரிய குடும்பம் எம்முடையது. இத்தகு அன்பார்ந்த சூழல் எனக்கான அங்கீகாரமென
கருதுகிறேன்.
உங்களுக்கு அண்மையில் கிடைத்த விருது குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்?
விஜயா: இந்த கேள்வியும் தங்கள் முந்தைய கேள்வியோடு தொடர்புடைய
கேள்விதான். அங்கீகாரம் என்பதை விருதாகவும் பார்க்கலாம். அண்மையில் கிடைத்த விருது ஜெயந்தன் விருது. தமிழிலக்கிய சூழலில்
ஜெயந்தன் மிக முக்கியமான முன்னோடி படைப்பாளர். அவர் பெயரால் லண்டாய் நூலுக்கு சிறப்பு
விருது அளிக்கப் பட்டது. எனது எழுத்துகள் பொதுவாக விருதுக்காக வரையறுக்கப்பட்ட அளவீடுகளுக்குப்
பொருந்தாதது. எந்த ஒரு விருதையும் எதிர்பார்த்து என் எழுத்துகள் எழுதப் படுவதில்லை.
லண்டாய் நூலினை விருதுக்கு தெரிவு செய்தவர்கள் அண்ணன் சௌமா, சீராளன் அண்ணன், முனைவர்
கவிஞர் தமிழ்மணவாளன் குழுவினர். இந்நூல் ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடல்களையும்
கவிதைகளையும் மொழிபெயர்ப்பாக்க் கொண்டது. இவ்விருதினை ச.விசயலட்சுமிக்கான விருதாக நான்
கருதவில்லை. சொல்ல இயலாத வலிகளுக்குள் தன்னை புதைத்துக் கொண்டிருந்தாலும் மீண்டெழுதலின்
ஆசை மிகுந்த (அரசியல் தெளிவான கவிதைகளை சொந்தப் பெயரில் எழுதவியலாமல் புனைப் பெயரில்
எழுதிக் கொண்டிருக்கிற) ஆப்கன் பெண்களுக்கு அளித்திருக்கிற விருதாகவே நினைக்கிறேன்.
இலக்கிய படைப்பாளர்களுக்கு கிடைக்கும்
விருதுகள் இப்போது அரசியலாக்கப்படுகிறதே?
விருதுகளை
கவனிப்பதில்லை. அதன் அரசியல் எனக்கு தெரியாது. விருதுகள் தற்காலிகமானவை. மக்கள் மனங்களில்
அமர்ந்த படைப்புகளே காலம் கடந்து படைப்பாளியை கொண்டு செல்லும்.
ஓர் ஆசிரியருமான உங்களுக்கு எழுத்து
என்பது என்னவாக இருக்கிறது?
விஜயா: எழுதத்துவங்கிய காலத்தில் காற்றுக்கு வழிவிடும்
சாளரமாக தோன்றிய எழுத்து இன்று எனக்கான பெரிய வானமாக , அண்டமாக விரிகிறது. நான் தமிழாசிரியப்
பணியில் இருக்கிறேன். என் எழுத்து, போதனை இரண்டிலும் தமிழே மையம். ஆகவே என் பணியை சிறப்பாக
செய்யும் உந்துதலை மொழியின் மூலமாகப் பெறுகிறேன். ஆயினும் தமிழகத்தில் கல்வி என்பது
அண்டை மாநிலங்களோடு ஒப்பிட இயலாத பின்னடைவில் இருக்கிறது.
தமிழ் வழியில் படித்து பத்தாம்
வகுப்பு வந்த மாணாக்கரில் பெரும் பகுதியினர் தமிழைப் பிழையற எழுத இயலாதவராக இருக்கின்றனர்.
கல்வி தன்னம்பிக்கையைத் தரவேண்டும். மாறாக தேர்ச்சி விகிதம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு
செயல்படுவதால் மதிப்பெண் தவிர பிற யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆங்கிலத்தில்
பிரியாரிட்டி என சொல்வோம் எதற்கு முதன்மைத்துவம் தரவேண்டும் என்கிற தெளிவு மாணவர்களுக்கு
ஊட்டப்படாததாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைந்துள்ளார்கள் என்கிற
அடிப்படையில் அரசு வழங்கும் இலவசங்களை எதிர்பார்க்கிற
மனநிலை மாணாக்கர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
தாய்மொழியே எழுதப்படிக்க அறியாத முதல்வகுப்பு
மாணவர்கள் ஆங்கில மொழிவழி கல்வியைத் தொடர்வதை அரசே ஊக்குவிக்கிற நடைமுறையில் இன்றைய
அரசுப் பள்ளியின் நிலை உள்ளது.எப்போதும் எழுத்து என்பது நான் சந்திக்கிற சிக்கல்களை
முன்வைத்த்தாக , எதிர்கொள்ளும் பலவற்றையும் உள்ளடக்கியது. ஆசிரியராக இருக்கிற நான்
எழுத்தாளராகவும் இருப்பதால் சமகால இளந்தலைமுறையும் அத்தலைமுறையிடமிருந்து அறிவார்த்தமானவை
நீண்ட சுவரெழுப்பி பிரிக்கப் படுவதுமான ஒரு தலைமுறை மாணவர்களின் பின்னடைவை அவதானிக்கிறேன்.
அறியாமையின் மாணவர்களின் கண் கொண்டு உலகத்தைப் பார்க்கிறேன்.
மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல்
பற்றிச் சொல்லுங்கள்? எதற்காக இப்படியான சந்திப்புகள் அவசியம்?
விஜயா: மலேசியாவில் நடந்த பெண்ணிய உரையாடல் பலதலைப்புகளில்
பேசவும் விவாதிக்கவுமாக அமைந்தது. எப்பொழுதும்
செயற்பாட்டாளர்களின் வாழ்க்கைக்கும் சாமானியரின் வாழ்க்கைக்கும் இடையே காணப்படும் வித்தியாசம்
போல மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான வித்தியாசமும் உண்டு. நடைமுறையில் இருப்பவற்றை
விவாதித்து சீர்தூக்கி இனிவரும் காலங்களில் காணப்படும் சிக்கல்களை எப்படி நீக்கலாம்
என விவாதிப்பதோடு அதை அழுத்தமாக எழுதவும் எழுதுவதற்கு இணையான மாற்றத்தை துரிதப் படுத்தவும்
இத்தகு சந்திப்புகள் தேவை.
உதாரணமாக ஒரே இடத்தில் வேறு வேறு பூகோளப் பகுதிகளில் வசிப்பவர்கள்
சந்திக்கிறோம். இந்தியா, இலங்கை, ஆஸ்ரேலியா, மலேசியா, ஐரோப்பிய கண்டம் என பல தரப்பினரும்
கூடுகையில் அவரவர்கள் வெளிப்படையாக பலகோணங்களில் கலந்துரையாடுகிறோம். எல்லைக்கோடுகளைக்
கடந்து ஒன்று கலந்து விவாதிக்கையில் புதிய பார்வைகளும் கோணன்களும் வெடிப்புரும். இவை
சந்தித்த உடன் நிகழ்ந்துவிடாது. உள் அடுக்குகளில்
சுழன்று புதிய ஆக்கமாக அவை வெடிப்புறும்.
‘எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்’
என்ற தலைப்பில் உங்கள் உரை அமைந்தது. அது குறித்து பகிர்ந்து
கொள்ளுங்கள். எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் எப்படி இருப்பாள்?
விஜயா: எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் என்பதில் பெண்ணின் வாழ்க்கையில்
ஊடுறுவிய கலாச்சாரத்தின் தாக்கம் குறித்து உறையாற்றினேன். இரும்பு எப்படி மின் கடத்தியாக
செயல்படுகிறதோ அதுபோலவே பெண் மூத்த தலைமுறையின் உணவு, உடை, பழக்கவழக்கம், சடங்குகள்,
வழிபாடு உள்ளடக்கிய அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கடத்துவதோடு அவற்றைப் பயிற்றுவிக்கவும்
செய்கிறாள். ஆணாதிக்கத்தின் கூறுகளை இன்னது என அறியாமலேயே பின்பற்றுகிறாள். கட்டுடைப்பு
செய்யவேண்டிய மிக முக்கியமான இடம் இது. இவ்வகையில் பெண் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம்
என்பதை அறிந்துகொண்டால் ஆணாதிக்கத்தின் வேர்களை அறுப்பது எளிது.
இது கட்டுடைப்பின்
காலம். ஆகையால் இனிவரும் காலங்களில் பெண் மிகுந்த வீச்சுடன் இருப்பாள். கட்டுடைகிற
சூழலை தாங்க இயலா ஆணாதிக்க நிலை ஆணவக் கொலைகளை நிகழ்த்துகிறது. பெண்களின் உறுதியை உடைக்க
இயலாமல் உயிரைப் பறிக்க முடிவெடுக்கிறார்கள். காவல்துறையின் திடமான பணி ஆளுமை விஷ்ணுப்பிரியாவின்
மரணமாக முடிவு கட்டப் பட்டிருக்கிறது. அடுத்த பாய்ச்சலுக்கிடைப்பட்ட நேரமிது.
நடந்த சந்திப்பில் உங்கள் மகள் பாரதியும்
கலந்துகொண்டு பேசினார். உங்கள் இருவருக்கும்
இருக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கலந்து பேசுகிறீர்கள்? அல்லது விவாதிக்கிறீர்கள்?
உங்களின் இலக்கிய வாரிசாக பாரதியை எடுத்து கொள்ளலாமா?
விஜயா: பாரதி கலந்து கொண்டார். அழைப்பிதழில் அவர் பேசுவதாக
பெயரிடப்படாதநிலையில் ஊடகம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள திடீரென கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பாரதி என்
இலக்கிய வாரிசு இல்லை. எம் முற்போக்கு
கொள்கையை மதிப்பதோடு அவளாக புரிந்துகொண்டு தானும் கடைபிடிக்க ஆர்வம் செலுத்துபவள்.
சமூகப் பிரக்ஞை நிரம்பியவள். ஊடகவியலாளர். இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.
மகளும் நானும் ஒருபோதும் அம்மா மகள் என்ற நிலையில் மட்டுமே இல்லை. இருவரும் தோழிகள்.
மகளோடு நேரம் கொடுக்க முடியாத சூழலை புரிந்து கொள்வார். என் சமையல் நேரத்தில் எங்களுக்கான
உரையாடல் அதிகமிருக்கும். முரண்பாடுகள் என
பெரிதாக வந்ததில்லை. விவாதங்கள் எமக்குள் நடக்கும்.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின்போது
நீங்கள் களத்தில் இறங்கி வேலைகளை செய்தீர்கள்.
அந்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?
பெரும் இழப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி விட்டார்களா?
விஜயா: ‘சென்னை எழும்’ வாட்ஸ் அப் குழுவை ஆரம்பிக்கலாம்
என மகள் பாரதியிடம் சொன்னதும் உடனடியாக உருவாக்கினார். கடலூர் வெள்ளத்தில் சிக்கிக்
கிடந்தது. கடலூருக்காக களத்தில் இறங்க ஆயத்தம் நடந்துகொண்டிருந்தது. ‘கடலூர் எழும்’
நட்புக் குழுவிற்குள் செயல்பட்டு வந்ததால்
‘சென்னை எழும்’ குழுவை ஆரம்பித்தவுடன் துரிதமாக செயல்பட்டோம். என் குழுவினருக்கு தொடர்பு
சாதங்களை பயன்படுத்த அத்தியாவசியமாக மின்சாரம் தேவைப்பட்டது. குழுவினருக்கு ‘டாப் அப்’
செய்ய அரபுநாட்டில் பணிபுரியும் தம்பி திவான் உதவினார்.
வடசென்னையில் செயல்பட முடிவெடுத்தவுடன்
தோழி ஹேமாவதியை தொடர்புகொண்டோம். அவர் இடுப்புவரை கழிவுநீரில் சென்று மக்களுக்கான உணவு
மற்றும் தேவையான பணிகளை மிக வேகமாக செய்யத்தொடங்கினார். தங்கை சாரா செயற்பாட்டாளர்.
கூவம் ஆற்றில் நடை பயணம் மேற்கொண்டபோது அறிமுகமானவர். இவரின் அயராத உழைப்பால் முதல்
சந்திப்பிலேயே மனசுக்குள் அமர்ந்தவள். தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் இறங்கி நீந்தி
மீட்க சென்றவர் பிணங்களையும் எடுத்து வெளியேற்றினார். இவரும் வடசென்னைக்கு வந்து சேர்ந்தார்.
தகவல் தொடர்பு மிக முக்கியமான தேவையாக இருந்தது. அதனால் நான் பிஏஸ் என் எல் தொலைபேசி,
முகநூல்,வாட்ஸ் அப் இவற்றின் துணையோடு தகவல்களை
உடனுக்குடன் பறிமாறினோம்.
சாராவும் ஹேமாவும் களத்தில் நின்றார்கள். இவர்களோடு விலாசினி,
உமாதேவி முதலான நட்புகள் கரம்கோர்த்தனர். தம்பி ப்ளோரன் களத்திலேயே நின்றார். பசியும்
உறக்கமும் பார்க்காத உழைப்பு அது. நுழைந்து வாங்க இயன்ற இடங்களில் எல்லாம் ஓடோடி பெற்று
மக்களிடம் சேர்த்தோம். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக எம் குழு மக்களுக்கு உதவியது. நடிகை
ரோகினி எம் குழுவினரைப் பாராட்டினார். சங்கம் விருது ‘சென்னை எழும்’ குழுவிற்கு அளிக்கப்பட்டது.
கோவையில் இருந்து ஓசை அண்ணன் காளிதாஸ் ஓசை வண்டியையும் ஓசை சையதையும் ஒரு நாள் முழுக்க
எமக்கு உதவியாகக் கொடுத்தார்.
மலேசியாவுக்கு இது உங்களின் முதல் பயணம். அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?
விஜயா: மலேசியா மிக அழகான நாடு. ஊடறு நடத்திய பெண்கள் சந்திப்பிற்காக பினாங்கு சென்றோம்.
விமானத்திலிருந்து தரையிறங்க போகையில் கடல் நீர் நகருக்குள் பின்வாங்கி ஓடுகிற பேக்
வாட்டர் ஸ்பேஸ் அத்தனை அழகு. இந்தப் பயணம் மலேசிய கிராமங்களை , அடித்தட்டு மக்களை சந்திப்பதற்கான
வாய்ப்பினை ஏற்படுத்தும் படியாக இல்லை. நான் சந்திப்பு முடிந்த பின் மூன்று நாட்கள்
மட்டுமே தங்கியிருந்தேன். நகர்ப்புற வாழ்க்கை முறையை அங்கு சீன, மலாய், தமிழர்களின்
வாழ்க்கையை நகரம் சார்ந்து பார்க்க முடிந்தது. சீனர்களின் கோவில்கள் , இந்துகளின் முருகன் கோவில், புத்தர் கோவில்கள் பார்த்தேன்.
வழிபாட்டின் விருப்பத்தினால்
அல்ல. மக்களின் நம்பிக்கை சார்ந்த பயணம் மதன்களின் அடிப்படையில் எப்படி இருக்கிறது
என அறிய உதவும் என்பதால். மேலும் மலேசிய ,சீன உணவுகளை ருசித்தோம். மீகோன், நாசி லெமாக்
, தேனில் ஊறவைத்த சுட்ட கோழி இரைச்சியான ‘சாத்தே’ சீனர்களின் சாமந்தி பூ சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட
குடிநீர் இப்படி பல வகை.
தங்கை மணிமொழி
எம் பயணதிட்டத்தை வகுத்ததோடு இறுதிவரை தன் நேரத்தை ஒதுக்கி சுற்றிக்காட்டினாள். இரவு
நேரப் பயணத்தை விரும்புகிற எனக்கு பினாங்கிலிருந்து கோலாலம்பூர் வரையான மகிழுந்து பயணம்
மறக்க இயலாதது. மலேசிய சாலைகள் பயண விதிமுறைகளை
துள்ளியமாக கடைபிப்பவை. சாலைகள் தூய்மையானவையாக சீராக இருந்தன. நானூறு மீட்டர் பயணம் அங்கே சிறுகளைப்பையும் ஏற்படுத்தவில்லை,சென்னையில்
நாற்பது மீட்டர் பயணமே முதுகெலும்பை பதம்பார்த்து வலிக்க வைத்துவிடும்.
மலேசிய படைப்பாளர் வழி மலேசிய பெண் எழுத்தை எப்படிஉணர்கிறிர்கள் ?
மலேசியாவில்
கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே எழுதத்
தொடங்கியிருக்கிறார்கள். சிலரின் கவிதைகளைப்
படித்திருக்கிறேன். ஆரம்பகால தமிழகப் பெண்
எழுத்தாளர்களைப் போலவே பெண்ணியப் படைப்பாக இல்லாமல் சமரசம் செய்து கொள்ளும் எழுத்தாக
ஆண் எழுத்தாளர்களின் எழுத்தைப்போல எழுதப்பட்டதாக உணர்கிறேன். முத்தம்மா பழனிச்சாமியின்
‘நாடுவிட்டு நாடு’ நூல் அவரது 60 வயதுக்கு
மேலாக எழுதப்பட்டாலும் மிக முக்கியமான எழுத்து. யோகி சந்துரு, பூங்குழலி, மணிமொழி முதலான
பெண் கவிஞர்களை அவ்வப்போது நெருங்கி வாசிக்கையில் இவர்களது எழுத்து முந்தைய தலைமுறையின்
எழுத்திலிருந்து மாறி உரிமை பேசும் எழுத்துகளாக
இருக்கின்றன.
மலேசிய தமிழ் படைப்புலகம் எப்படி இருக்கிறது?
முந்திய தலைமுறையினரின்
எழுத்துகள் மாறத் தொடங்கியுள்ளன. வல்லினம் போன்ற நவீன எழுத்துகளைத்தாங்கிய இதழ்கள் வருவதையும் பார்க்கிறோம். நவீன இதழ்களிலும் மலேசி
ய படைப்புலகம் குறித்த விரிவான கட்டுரை வாசிக்கக் கிடைக்கிறது. மலேசிய தமிழ் எழுத்துக்கென தனித்த இலக்கிய வரலாறு இருக்கிறது. மலேசிய தமிழ் எழுத்துகளில் தமிழக, ஈழப் படைப்பாளர்களின் பங்களிப்புகளும் உள்ளன. சீனர்களும் மலாய்க்காரர்களும் பெருமளவு வாழுகிற மலேசியாவில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழை அவர்கள் மிக நேர்த்தியாக வாசிக்கிறார்கள். அறுபடாத தொடர்ச்சியை விதைக்கிறார்கள். முற்போக்கு எழுத்தாளர் அமைப்புகள் அங்கே செயல்படுகின்றன. திராவிட அமைப்பினராக பெரியாரை பின்பற்றுபவர்கள் இருந்து வருகிறார்கள்.
நன்றி: புத்தகம்
பேசுது நவம்பர் மாத இதழ்
நன்றி : ஊடறு றஞ்சி (மா)
நன்றி: முத்து
தோழர் மற்றும் விஜயலட்சுமி (மா)
தேர்ந்த கேள்விகள். அழகான பதில்கள்.
பதிலளிநீக்கு