வியாழன், 1 மார்ச், 2018

வாரணாசி 6 ('மணிகர்ணிகா காட்', 'அரிச்சந்திரா காட்' )




'மணிகர்ணிகா காட்', 'அரிச்சந்திரா காட்' என இரண்டு பிணமெரிக்கும் இடங்களும் 24 மணிநேரம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அரிச்சந்திரன், காசி நகரத்து கங்கைக் கரையில் அமைந்த மயானத்தில் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டு பணியாளராக பணிபுரிந்ததால் இப்படித்துறை அரிச்சந்திரா காட் என்றும் பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியை தேடிய சம்பவத்தை நினைவு கூறும் முகமாக அந்த படித்துறைக்கு மணிகர்ணிகா காட் என்றும் (மணிகர்ணிகா என்றால் காதணி என்று அர்த்தமாம் ) பெயர் விளங்குவதாக வரலாறு கூறுகிறார்கள்.

அரிச்சந்திர புராணம் , நல்லூர் வீரகவிராயர் இயற்றியதில்  காசி காண்டம் மற்றும் மயான காண்டம் மிகவும் உருக்கமான, சுவாரஸ்யமான காண்டங்க ளாக வடிக்கப்பட்டுள்ளது. ஆனால், காசி மக்கள்  சொல்வது போல அரிச்சந்திரா காட் என்பது கங்கையை ஒட்டி இருந்ததாக அதில் ஏதும் குறிப்பு கள் இல்லை



மேலும் அரிச்சந்திரன் சுடலை காவலனாக இருந்தான் என்று தான் அப்புராணம் கூறுகிறது. அவனுக்கு வரும் பிணத்திடமிருந்து ஆடையும் கால்பணத்தையும் வீரபாகு என்ற புலையனுக்கு கொடுத்து விட்டு, வாய்க்கரிசியை வைத்துதான் பிழைத்தான் என்றும் இருக்கிறது
சூரியன் அஸ்தமனமாகிக்கொண்டிருந்தது. 'அரிச்சந்திரா காட்' இருக்கும் படித்துறை அமைதியாக இருந்தது. நேரே நடந்து மணிகர்ணிகா காட் வந்தடைந்தேன். எரிந்த சிதையிலிருந்து சூடான வாயூ வெளியாகியபடி இருந்தது. கொழுத்த ஆடு ஒன்று கேப்பாரற்று படித்துறையில் இளைப்பாறிக்கொண்டிருந்தது. மூன்று எருமைமாடுகளை ஒருவர் படித்துறை வழியாக ஓட்டிச் சென்றார்.


ராம், ராம்' என சத்தம் வந்த திசையை பார்த்தேன். நால்வர் பிரேதத்தை தூக்கிவர குடுமி வைத்த ஒருவர் முன் நடந்துவந்தார். பிரேதத்தை அப்படியே கங்கை நதியில் முக்கி எடுத்து, மந்திர உச்சாடனம் செய்து சிதை மூட்டப்படும் இடத்தில் வைத்து அவசர அவசரமாக தீ மூட்டி, திரும்பி பார்க்காமல் கிளம்பி செல்றார்கள். எதை வைத்து நெருப்பு மூட்டுகிறார்கள் என தெரியவில்லை. கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு. மரித்தவர் நல்ல உயரமானவராக இருக்க வேண்டும். அவரின் கால் அடங்கமாட்டாமல் வெளியில் நீட்டிக்கொண்டிருந்தது. வெள்ளை துணியில் அதை போர்த்தி மறைத்தார்கள். வெந்து தணிந்தது உடல்.

பிணங்களை கங்கை நதியில் யாரும் தூக்கி எறியவில்லை. அல்லது வெந்த மிச்சமீதியை எறியவில்லை. அதற்கு அரசு தடைவிதித்திருப்பதுதான் காரணம். பூக்கள் மற்றும் நெகிழி கழிவுகள் அதிகமாகவே நதியில் வீசப்படுகிறது. முன்னோர்களுக்கு நீத்தார் கடன்கள்ளை நிறைவேற்றுபவர்கள் குப்பைகளை பரிசாக கங்கைக்கு வழங்குவது வேதனைதான்.
பிரேதங்களை எரிப்பதற்கு மின் வசதியையும் அரசாங்கம் செய்து கொடுத்திருக்கிறது. 500 ரூபாய் மின்வசதிக்கும் 1000 ரூபாய் விறகினால் எரிப்பதற்கும் பணம் வசூலிக்கப்படுகிறது.

இருட்டுவதற்குள் நிறைய பிரேதங்கள் மணிகர்ணிகா காட்-டுக்கு வந்து சேர்ந்திருந்தன. மிக தொலைவிலிருந்தெல்லாம் பிரேதங்களை கொண்டுவந்திருந்தார்கள். சுற்றுப்பயணிகள் நிறைய பேர் வேடிக்கை பார்ப்பதற்கு குழுமியிருந்தனர். நான் குளிர்பானதோடு புகைப்படம் எடுக்க வசதியாக இடம்பிடித்து அமர்ந்துகொண்டேன். இந்திய முக அம்சத்தோடு இருந்த என்னை ஒருவர் "இங்கெல்லாம் பெண்கள் வரக்கூடாது, போ" என்றார். நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன், மறுமொழி பேசவில்லை. "படம் எடுக்காதே" என்று சைகையில் சொன்னார். நான் அப்போதும் மறுமொழி பேசவில்லை. ஆண்கள் - பெண்கள் என சுற்றி அத்தனை பேர் வெளிநாட்டவர் இருக்க, நான் ஏன் இருக்க கூடாது?
காசி நகரில் பிணங்கள் எரிக்கப்படும் இந்த இரண்டு படித்துறைகளை பற்றி பேசுகையில் வெளிநாட்டில் இருக்கும் என் நண்பர் இந்த பாடல் வரிகளை எனக்கு அனுப்பி வைத்தார். ஏனோ எரிந்துகொண்டிருந்த அந்த சிதையை பார்த்துக்கொண்டிருக்கையில் எந்த பாடல் வரிகள் நினைவுக்கு வந்து தொலைத்தன...அரிசந்திரனின் மனைவி சந்திரமதி தன் மகனின் பிணத்தை எடுத்துக் கொண்டு போகும் போது எழுதப்படட பாடல்...
 
பாடல் 1
காடுமே டும் செறிந்த செந்நாய் முன்னே
கௌவிஇழுத் திடப் பறந்து கழுகு மோதப்
போடு போடெனப் பலபேய் தொடரக்கொண்டு
போகேனீயெனக் கொடிய பூதம்சூழ
மாடுதோறும் பறிக்க நரிகடாவ
வார்குழலும் சோர்துகிலும் வனந்தொட்டீர்க்க
ஈடுபாடித்தனையும் பட்டு நீண்முள்
இடுகாடு நீந்திநெடுஞ் சுடுகா டுற்றாள்.

(உரை)
 காடுகளிலும் மேடுகளிலும் நெருங்கிய செந்நாய்கள் முன்னே
கௌவி இழுக்கவும் பறந்துவந்து கழுகுகள்  மோதவும், இப் பிணத்தைக்
கீழே போடு போடு என்று பல பேய்கள் தொடர்ந்து செல்லவும், கொண்டு போகாதே நீ என்று  கொடிய பூதங்கள் சூழ்ந்து செல்லவும், பக்கந்தோறும் பறிக்க நரிகள் தாவிச் செல்லவும், நீண்ட கூந்தலையும் தொங்குகின்ற ஆடையையும் காட்டுச்செடிகள் தொட்டு இழுக்கவும், இத்தனை ஈடுபாடுகளிலும் துன்புற்று நீண்ட முள்ளையுடைய இடுகாட்டை  விட்டு நீங்கி நீண்ட சுடுகாட்டை அடைந்தாள்.
பாடல் 2

பிணங்கள்சுடும் கடும்புலைய ரரவத் தாலும்
பிளந்துதலை வெடித்திடுபே ரமலை யாலும்
நிணங்கருகிச் சுறுநாறு முடையி னாலும்
நெடுங்கனலின் கொழுந்தெழுந்த நிவப்பி னாலும்
கணங்கள்மிகக் களித்தாடுந் துழனி யாலும்
கனற்பொறியின் மலிவாலும் புகையி னாலும்
சுணங்குபல பிணங்குபெருங் குரைப்பி னாலும்
தோகைஅறிந் துணர்ந்துகொடுஞ் சுடலை சேர்ந்தாள்.

(உரை)

பிணங்களைச் சுடுகின்ற கடுமையான புலையருடைய ஒலியினாலும்,
பிணங்கள் தலைபிளந்து வெடிக்கின்ற பெரிய ஒலியினாலும் பிணங்களின் கொழுப்புக் கருகி நாறுகின்ற முடைநாற்றத்தாலும்,
நெடிய நெருப்பின் கொழுந்து எழுந்து வளர்ந்த உயரத்தாலும் பூதம் முதலியவற்றின் கூட்டங்கள்  மிகவும் மகிழ்ந்து ஆடுகின்ற ஒலியாலும் புகை மிகுதியாக இருத்தலினாலும்,நாய்கள் பல தம்முள் மாறுபட்டுக் குரைக்கின்ற
பெருங் குரைப்பு ஒலியாலும், தோகைமயில்போன்ற சந்திரமதி உணர்ந்து கொடுமையான சுடலையை அடைந்தாள்.


குளிர்பானம் குடிக்க தோணவில்லை எனக்கு. அங்கேயே இருந்த டீ கடையில் ஒரு காப்பியை வாங்கி குடித்துவிட்டு கங்கை ஆரத்தியை பார்க்கச் சென்றேன்.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக