‘LAND OF CELESTIAL BEAUTY’ என்று அந்தப் மாநிலத்திற்கு ஒரு
சிறப்பு பெயர் உண்டு. தெய்வீக அழகை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கம்போடியா,
இந்தோனேசியா, தைலாந்து, என் சொந்த நாடான மலேசியாவில்கூட தெய்வீக அழகுடைய பல இடங்கள்
இருக்கின்றன. ஆனால் தெய்வங்களே வாழ்ந்துவிட்டுப் போனதாக சொல்லப்படும் ஒரு
நிலபரப்பு எப்படி இருக்கும்? கற்பனைதிறன் என்பது நமக்கு எதுவரை போகும் என ஒரு முறை
அந்த நிலபரப்பை கற்பனை செய்துவிட்டு பார்த்தோமானால், கற்பனைக்கு ஏன் இத்தனை கஞ்சத்தனம்
வைத்திருக்கிறோம் என தோன்றும்.
கேதர்நாத்-பத்ரிநாத்-கங்கோத்ரி-யமுனோத்ரி என்கிற அந்த பூமியின் நிலப்பரப்பு பாண்டவர்கள் வாசம் செய்த பூமியாகவும், சிவன் பல அவதாரங்களை எடுத்த புண்ணிய பூமியாகவும் போற்றப்படுகிறது. மகாபாரதமும் ராமாயணமும் கற்பனை கதைகள் என சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில், பாண்டவர்கள் வந்தார்கள், பாவத்திலிருந்து முக்தியடைய இந்தக் கோயிலை கட்டினார்கள், சிவனும் பார்வதியும் இந்தக் கோயிலில்தான் திருமணம் செய்துகொண்டார்கள், இப்படியான தெய்வக்கதைகளும், அதற்கான சாட்சி இதோ இந்தக் கோயில்கள்தான் என்றும் குறிப்புகளை காட்டி ஆச்சரியமூட்டுகிறது மத்திய ஹிமாசல உத்தரப் பிரதேசம்.
‘தமிழ்நாடு’ விரைவு ரயிலில் சென்னையிலிருந்து 40 பேர் கொண்ட குழு
டெல்லியையை நோக்கி பயணித்தோம். இரண்டு இரவுகளுக்குப் பிறகு 12-ஆம் தேதி காலை 8
மணிக்கு நாங்கள் டெல்லியில் இறங்க வேண்டும். டெல்லியில் ஓய்வெடுத்துவிட்டு மாலை 7 மணிக்குதான் ஹரித்துவார் செல்வதாய் பயணத் திட்டம்.
நாங்கள் பயணித்திக்கொண்டிருக்கும் இரயில் காலை 4 மணிக்கு ஆக்ராவை சென்றடையும். அங்கு இறங்கி தாஜ்மகாலை பார்த்துவிட்டு பின்னர் டெல்லிக்கு ரயிலேறி, பயணக் குழுவுடன் இணைந்து கொள்ள சிக்கல்
இருக்காது. இந்தத் திட்டம் கொஞ்சம் விவேகமானதாகவும் இருந்தது. அன்றைய நாள் பக்ரீத்
பண்டிகை வேறு. இந்தப் பயணத்தில் எங்களோடு பங்கெடுத்த நண்பர் சாகுல், சிறப்பு
தொழுகையை மேற்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். இதை
பரீசீலித்துக்கொண்டிருக்கும்போதே இணையத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது.
தாஜ்மகாலை சுற்றிப்பார்ப்பதற்காக இந்தியர்களுக்கு 250 ரூபாயும்,வெளிநாட்டவருக்கு 1300 ரூபாயும் கட்டணம் விதிக்கிறார்கள். ஆனால் பக்ரீத் தினம் என்பதால் அன்று மட்டும் நுழைவு கட்டணம் இலவசம்.
நாங்கள் அதிகாலையில், ஆக்ரா இரயில் நிலையத்தில் இறங்கினோம். காலை 7 மணியளவில் தாஜ்மகால் இருக்கும் அந்த நடையை நோக்கிப் பயணித்தோம். வாகன போக்குவரத்திற்கு அங்கு அனுமதியில்லை. பக்ரீத் தொழுகைக்காக முஸ்லீம் மக்களின் நடமாட்டமும் அதிகமாகவே காண முடிந்தது. உத்தர பிரதேசத்தில், அம்மாநில அரசு முஸ்லிம் சமூகத்தினரை நடத்தும் விதம் உலக மக்கள் அறிந்ததே. அதே வேளை, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை உலக நாடுகள் கொண்டாடும் வேளையில, அந்தக் கூற்றை இந்துத்துவா சமூகத்தினர் மறுத்து பேசியதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியதும் உலக மக்கள் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்மாநிலத்தில் அவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பத்ரீத் பெருநாளின்போது இயல்பாகவே ஒரு கவனக் குவியல் இஸ்லாமிய சமூகத்தின் மேல் எனக்கு இருந்தது.
வெந்நிற ஆடையில் இஸ்லாமிய மக்கள் தாஜ்மகாலை நோக்கி
போய்கொண்டிருந்தனர். ஒரு சமாதியை நோக்கி மக்கள் ஏன் இவ்வளவுக் காலையில் போக
வேண்டும்? அவர்கள் சென்ற பாதை தாஜ்மகாலை நோக்கியதாக இருக்கலாம், ஆனால், அவர்கள்
சுற்றுப்பயணத்திற்குச் செல்ல வில்லை, காலை சிறப்பு தொழுகைக்காக மசூதியை நோக்கிப்
போய்க்கொண்டிருந்தனர். அந்த மசூதி தாஜ்மகால் வளாகத்திலேயே இருந்தது.
தூரப் பார்வையில் மசூதியின் முன்வாசலின் வடிவம் மொத்தமும்
கண்களுக்குள் அடங்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலும் மிகப் பெரிய மசூதி
இது என இணையத் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன. அதாவது ஒரே நேரத்தில் 25,000 பேர்
தொழக்கூடிய அளவு பிரமாண்டமான மசூதி அது. அதன் பெயர் ஜாமா மசூதி.
முகலாயப் பேரரசின் 5-வது அரசனான சாஜகான், முன்னெடுத்த தாஜ்மஹால் கட்டுமானப்பணி 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு
இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் ஜாமா மசூதி 1650 – 1656 ஆண்டுக்கிடையில் ஒரு மில்லியன்
ரூபாய் செலவில் மூன்று பிரதான வாசல்கள், 4 கோபுரங்கள் வைத்து கிட்டதட்ட 5000 கட்டுமானத்
தொழிலாளர்களைக்கொண்டு கட்டப்பட்டுள்ளது இந்த மசூதி. தாஜ்மஹாலின் மேற்தளத்தில்
நின்று பள்ளிவாசலை நோக்கி பார்த்தால் அதன் பிரதான நுழைவாயிலை எந்தப் பிரச்சனையும்
இல்லாமல் பார்க்கலாம். நுழைவாயிலின் முன்புறத்தில் இருக்கும் சிறிய குளத்தில்
புலன்களை சுத்தம் செய்துக்கொண்டு இஸ்லாமியர்கள் தொழுகைக்கு செல்கின்றனர். சில
பறவைகள் அதில் நீர் அருந்தியும் செல்கின்றன. தாஜ்மஹாலின் பின்புறத்தில், கண்ணுக்கு
எட்டாமல் சத்தமில்லாமல் யமுனா நதி ஓடிக்கொண்டிருக்க, பக்கவாட்டில்
நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ஜாமா மசூதியில் தொழுகையை மேற்கொள்ளும்
அற்புதக் காட்சியை கண்டது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த நேரங்களில் ஒன்றென மனம்
பரவசமடைந்தது. இப்போதும்கூட அக்காட்சியை மனக்கண்ணில் கொண்டு வரும்போது, அதை
எழுத்துகளால் விவரிக்க என்னால் முடியவில்லை.
மலேசிய பள்ளிவாசல்களில் ஆண்-பெண் இருபாலரும் தொழுகச் செல்லலாம்.
ஆனால், இந்தப் பள்ளிவாசலில் பெண்களை என்னால் காண முடியவில்லை. ஒரு வேளை சிறப்பு
நாள் என்பதால் பெண்கள் வரவில்லையோ என்னவோ. ஆனால் தந்தையின் கைப்பற்றிக்கொண்டு
தொழுகைக்கு வந்த சிறுமிகளைக் கண்டேன். எனக்கு ஆச்சரியமாகவும் அதைப் காண ஆசையாகவும்
இருந்தது. அவற்றை புகைப்படம் எடுக்க மனம் ஆர்வப்பட்டாளும், அவர்களுக்கு அதை
சங்கடத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற எண்ணத்தில் தவிர்த்துவிட்டேன்.
செந்நிறம் கொண்ட இந்த மசூதி இஸ்லாமிய, இந்திய, பாரசீகம் மற்றும் முகலாய
பாணி கட்டிடக்கலை தாக்கங்களுடன் கூடியதாக பிரதிபலிக்கிறது.
அதோடு குர்ஆனின் ஒரு பழைய பதிப்பு இந்த மசூதியில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
செங்கோட்டை என்றும் இந்த மசூதிக்கு மற்றுமொரு பெயர் உண்டு.
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிளர்ச்சிக்குப் பிறகு ஜமா மசூதியை
அவர்கள் அழிக்க நினைத்தார்கள் என்றும் மக்களின் பலமான எதிர்ப்பை சந்தித்ததால் அந்த
எண்ணம் நிறைவேறவில்லை என்றும் பதிவுகள் சொல்கின்றன. அனைத்தையும் கடந்து
தாஜ்மஹாலுக்கு இணையாக மக்கள் அதிகம் பார்த்து வியக்கும் நினைவுச்சின்னமாக
விளங்குகிறது ஜாமா மசூதி..
காதல் சின்னம் என்று கொண்டாடக்கூடிய தாஜ்மகால், என் முதல் பார்வையில்
ஏற்படுத்திய தாக்கம் என்ன? அதை அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.