சனி, 31 ஜூலை, 2021

நாட்டின் முதல் ரப்பர் மரமும் தோட்டத் தொழிலாளர்களும்

 

மலேசியாவில் முக்கிய விவசாயமாக  ரப்பர் இருந்தது உலக மக்கள் பலருக்கு தெரிந்த ஒன்றுதான். மலேசியாவில் ரப்பர் மரம் என்றதும் அகிலன் எழுதியபால்மரக் காட்டினிலேஎன்ற நாவல் நினைவில் வருவதையும் பலரால் தவிர்க்க முடியாது. பால்மரக் காடுகளாக இருந்து, இந்தியர்களின் பல கதைகளைச் சுமந்திருந்த பேராக் மாநிலத்தின் பெரும் நிலப் பகுதி தொழிற்சாலைகளாக மாறிய பின்பும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ரப்பர் தோட்டங்கள் இன்னும் பழைய சரித்திரத்தை ஞாபகப் படுத்துபவையாகவே இருக்கின்றன.

இந்நிலையில் மலேசியாவில் ரப்பர் வரலாறு 1877 ஆம் ஆண்டுத் தொடங்குகிறது.  பிரேசிலிருந்து லண்டனுக்கு அருகிலுள்ள கியூ எனுமிடத்தின் தாவர ஆராய்ச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின் அங்கிருந்து இலங்கையிலுள்ள பெரடின்னியாத் தாவர ஆராய்ச்சி தோட்டத்திற்கும், 1877-ல் அங்கிருந்து சிங்கப்பூர் தாவர ஆராய்ச்சி தோட்டத்திற்கும் ரப்பர் செடிகள் இடம் மாறின.   மலேசியாவிற்கு சிங்கப்பூரிலிருந்து தான்  ரப்பர் மரக் கன்றுகள் கொண்டுவரப்பட்டு பேராக் ஆராய்ச்சி தோட்டத்தில் நடப்பட்டன. அன்று தொடக்கம் மலேசியாவில் முக்கிய உற்பத்தி பொருளாக ஆனது ரப்பர் மரம். தொடக்கத்தில் 345 ஏக்கரில்தான்  முதல் ரப்பர் தோட்டம் உருவாகியிருக்கிறது.



ரப்பரின் ஆரம்பக் கதை

‘ரப்பரின் ஆரம்பக் கதை 1870-ல் தொடங்கியது. ஹென்ரி விக்ஹெம் என்பவர் 70,000 ஹெவியா பிரேசிலியேன்சிஸ் ( ) என்ற தாவரத்தின் விதைகளை இங்கிலாந்தில் உள்ள கியூ கார்டன்ஸ்சில் பயிர் செய்தார். இதிலிருந்து 1876-ல் கணிசமான விதைகள் சிலோன் பொட்டனிக்கல் கார்டனுக்கு அனுப்பப்பட்டது.

1878-ல், 22 ரப்பர் மரக் கன்றுகள் சிங்கப்பூருக்கும் பேராவிலுள்ள கோலகங்சாருக்கும் அனுப்பப்பட்டன. 1880-ல் கோலகங்சாரில் பயிரிடப்பட்ட ரப்பர் மரங்கள் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கின. இவற்றின் விதைகாள் 1883-ல் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டன. 1888-ல் சிங்கப்பூர் வந்த ஹென்றி ரிட்லி என்பவரால் ரப்பர் ஒரு வியாபாரப் பயிராகியது. ரிட்லி ரப்பர் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் மரம் வெட்டும் முறைகளைச் சீர்ப்படுத்தினார்.

1890-ல் காப்பி விலை வீழ்ச்சியும் ரப்பர் விலைகளின் அதிகரிப்பும் ஐரோப்பியர்களை ரப்பரினால் ஈர்த்தது. 1899-ல் லண்டன் சந்தையில் மலாயாவின் ரப்பர் ஒரு பவுண்டு 46 பென்ஸ் விலையைப்பெற்றது. இவற்றின் முதலாளிகளாக ஐரோப்பியர்களும் சீனர்களும் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்களும் இருந்தனர். 1921ல் ஒன்றில் ஐந்து பங்கு தோட்டங்கள் சீனர்கள் கைவசம் இருந்தன. ஒரு சராசரி தோட்டத்தின் அளவு 400-முதல் 500 ஏக்கர்வரை இருக்கும்.


இருபதாம் நூற்றாண்டின் ரப்பர் சம்பந்தப்பட்ட  கண்டு பிடிப்புகளால் ரப்பரின் பயன் மிகுந்தது. காற்றடைக்கப்பட்ட டயர் இதில் முக்கியமானது. ரப்பரின் தேவையினால் உந்தப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கவனத்தை மலாயாவின் மீது செலுத்தியது. 1918-ல் மலாயாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ரப்பர் உலகத் தேவையின் 50 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்தது.

இந்த ஞாபகத்தைப் பதிவு செய்யும் வகையில் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னும் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு ரப்பர் மரம்  கோலகங்சாரில் இருக்கிறது. பால் கிண்ணம், உறைந்த ரப்பர் பாலை, சீட்டாகக் கொண்டு வரும் இரண்டு இயந்திரங்களோடு ரப்பர் விதைகள் சிதறிகிடக்கக் கம்பீரத்துடன் நிற்கிறது அந்தத் தாய் மரம்.’

மேற்குறிப்பிட்டிருக்கும் இந்தத் தகவல்கள் மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வும் போராட்டங்களும் என்ற புத்தகத்தில் பேராசிரியர் பி.ராமசாமி ஆய்வு செய்து பதிவு செய்திருப்பதாகும்.

HN Ridley and Henry Wickham

1877-ஆம் ஆண்டு 345 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட ரப்பர் மரங்கள் 1940-ஆம் ஆண்டு 3,464,000 ஏக்கர் வரை பயிர்செய்யப்பட்டு பெருந்தோட்டமாக உருவாகியது. ரப்பரின் ஆதிக்கம் மலேசிய மண்ணில் வேரூன்றி செழிப்பதற்கு முன்பு 1800-களில் மிளகு மற்றும் வாசனைத்திரவியங்களும், 1840-களில் மிளகு மற்றும் காப்பி, 1845-களில் அன்னாசி, 1876-களில் காப்பி மற்றும் கரும்புத் தோட்டமும்  இதற்கிடையில் நெல் விவசாயமும் முதன்மை விவசாயமாகவும் பெரிய அளவில் வருமானம் ஈட்டக்கூடிய உற்பத்தியாகவும் இருந்திருக்கிறது. என்றாலும் ஒரு காலக்கட்டத்தில் அதன் தேவை- ஆதிக்கம்-விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் உலக சந்தையில் அதன் மதிப்பு சரிந்தது.

19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில்தான் மலாயா என்கிற நாட்டை  ரப்பர் தோட்டங்களால் உலக நாடுகள் அறிந்துகொண்டதோடு,  அந்நாடுகளின் ரப்பர் பயன்பாட்டுத் தேவையின் 50 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்யும்  அளவுக்கு உற்பத்தியிலும் தீவிரமடைந்திருக்கிறது.

இந்தியர்கள் வசிக்கும் தோட்டங்களில்தான் ரப்பர் மர நடவு பெரிய அளவில் நடந்திருக்கிறது. அதன் காரணத்தினாலேயே இந்தியர்களையும் ரப்பர் மரங்களையும் தவிர்த்துவிட்டு மலேசிய இந்திய வரலாற்றை பேச முடியாது. 

‘’சிங்கப்பூர் தாவர ஆராய்ச்சித் தோட்ட அதிபராகப் பதவியேற்ற  ஹென்றி ரிட்லி தம்முடைய ரப்பர் மரங்களில் அதிக சிரத்தை உடையவராய் இருந்தார். காப்பித் தோட்டக்காரர்கள் தங்கள் கவனத்தை ரப்பரில் திருப்ப வேண்டுமென்று சில வருடடங்களாக ஆலோசனை கூறிவந்தார். அவர் தம் சட்டை நிறைய ரப்பர் வித்துக்களை வைத்துக்கொண்டு நாட்டைச் சுற்றித்திரிந்து வித்துகளை பெற விரும்புவோருக்கெல்லாம் வினியோகித்து வந்தார். அவரும் அவருடைய சிப்பந்திகளும் பால் வெட்டுவதிலும் ரப்பர் பாலைப் பக்குவப்படுத்துவதிலும் மரங்களைப் பரிசோதனை செய்வதிலும், தயாரிக்கப்பட்ட ரப்பரை எல்லா வருடாந்திர விவசாயப் பொருட்காட்சியிலும் வைத்துப் பிரச்சாரம் செய்வதிலும் ஈடுபட்டு வந்தார்கள். என்றாலும் 1896-ஆம் ஆண்டு வரையில் தோட்டக்காரர்களை ரப்பரில் கவனம் செலுத்தும்படி தூண்ட முடியாத நிலையில் இருந்தது’’ என்று பதிவு செய்திருக்கிறார் தோழர் சுரதாதாசன். 

1899-க்குப் பிறகு மோட்டர் வண்டிகளின் அதிவேக உற்பத்திக்குப் பிறகுதான் புறக்கணிக்கப்பட்டு வந்த  ஹென்றி ரிட்லியின் ஆலோசனை திரும்பிப்பார்க்கப்பட்டது. ஆனாலும், மரம் வளர்ந்து பால் சீவுவதற்கு 5 ஆண்டுகள் கால அவகாசம் ஒரு சிக்கலாக இருந்திருக்கிறது. வருமானம் இல்லாத 5 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடை  காலம் வந்ததும் அதற்கான உபகரணப்பொருட்கள் வாங்க வழியில்லாமல் கையாண்ட விதத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.  காலி பாட்டில்களும் , சமையல் அறையில் பயன்படுத்தும் உருளையும் ரப்பர் சீட்டுகளைப் பக்குவப்படுத்தும் உருளைகளாகவும், இரண்டாக வெட்டிய மண்ணெண்ணெய்த் தகரங்கள் பால்வாளியாகவும், காலி பால்டின் குவளைகள் பால் கிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதோடு வீடுகளுக்கு அடியில் அகன்ற சட்டிகளில் கரியைப்போட்டு எரித்து உலர்த்திப் புகையிட்டு ரப்பர் சீட்டுகள் தயாரிக்கப்பட்ட ஆரம்பகாலக் கதையை மிக தெளிவாகவே தோழர் சுரதாதாசன்  பதிவு செய்திருக்கிறார்.

நாடு சுதந்திரத்திரம் அடைந்த பிறகுதான் ரப்பர் மர காடுகளில் வேலை செய்யும் தோட்ட மக்களுக்கு ஒரு ஒழுங்கு நிலை ஏற்பட்டது. காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் அவர்கள் மரம் சீவ சென்று விடுவார்கள். தோட்டத்து கங்காணி காலை 6.00 மணியளவில் வேலைக்கு வந்தவர்களின் பெயர்களை கணக்கெடுத்துச் செல்வார். காலை 9.00-10.00 க்கெல்லாம் மரம் சீவி முடிக்கப்பட்டவுடன் தொழிலாளர்கள் சிறிது ஓய்வு எடுப்பார்கள்.  காலை 10 மணிக்கு பிறகு ரப்பர் பால் சேகரித்து சேகரத்தில் (store) சேர்த்து விடுவார்கள்.  காண்டா வாளிகளில் பால் சேகரிக்கப்பட்டு மிக பாதுகாப்பாக கொண்டு வரவேண்டும். கீழே தடுக்கி விழுந்து பால் விரையமானால், அன்றைய சம்பளத்தில் கை வைக்கப்படும். இதற்கிடையில் ஒட்டுப்பாலும் சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்.  இதுவும் சந்தையில் நல்ல விலைபோகிற ஒரு பொருள்தான்.

மரத்திற்கு உரம் போடுதல், பொட்டு வைத்தல் போன்ற வேலைகளும் தொழிலாளர்கள் மேற்கொள்வார்கள்.

தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்களின் உடை அதுவும் இந்தியப் பெண்களின் உடை, இன்றும் தோட்ட தொழிலாளர்களின் அடையாளம் என சொல்லலாம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு நேரடியாக கூலி வேலைக்காக இந்தியாவிலிருந்து வந்தவர்கள், ஆண்கள் மடித்துக்கட்டிய வேட்டியுடனும் பெண்கள்  புடவையுடனுமே ரப்பர் மர ‘’தீம்பாருகளில்” வேலை செய்தனர்.  அவர்களின் வாரிசுகள் அடுத்த தலைமுறை கூலி தொழிலாளர்களாக வந்தபோது மலேசிய சூழலுக்கு வாழ்க்கை மாறியிருந்தது. பெண்கள் கைலி- சட்டை அணிந்து தலையிலிருந்து முகத்தோடு சேர்த்துக் கட்டிய துணியோடு வேலைக்கு செல்வார்கள். அவர்களுக்குப் பிறகு வந்த வந்தவர்கள் முழுக்க தோட்ட வேலைக்கு ஏற்ற உடைக்கு மாறியிருந்தனர்.

அப்போது தோட்ட வேலைக்குச் சென்ற பெண்கள் சட்டை, அதன் மீது ஒரு முழுக்கை சட்டை, காற்சட்டை, அதன் மீது பாவாடை, நீண்ட காலுரை (காற்சட்டையின் உறுதி பகுதி காலுரையின் உள்ளே விட்டு அதற்கு மீது இருக்கமான ‘கித்தா’ போட்டிருப்பார்கள். அட்டை கடியிலிருந்த தடுக்க இந்த வழி) ஒரு கொண்டை போட்டு அதில் ஏதாவது பூவையும் சொருகி  வெயில் வந்தால் போடுவதற்கு  சீனத் தொப்பியும் வைத்திருப்பார்கள். என் பாட்டியையும் அம்மாவையும் நான் இப்படித்தான் தோட்ட வேலைக்கு போகும்போது பார்த்திருக்கிறேன். மண் வெட்டியை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மறுகையில் சாப்பாட்டு கூடையுடன் அவர்கள் வேலைக்குச் சென்று வந்தார்கள். 



"அன்னை வளர்த்தது ரப்பரை!-எங்கள்

அப்பன் வளர்த்தது கொப்பரை!

அண்ணன் வளர்த்தது செம்பனை-எங்கள்

ஆயிரம் சோதரிமார்கள் குருதியில்

ஆனது தானடா தேயிலை!

என்ற கவிஞர் சங்கு சண்முகத்தின் கவிதை வரிகள் நம்மவர்களின் உழைப்பை பறைச்சாற்றும் படி இன்றும் உரைக்கிறது.   

தற்போது ரப்பர் மரங்கள் நம் நாட்டில் அதன் மதிப்பை இழந்திருக்கலாம். ஆனால் நம்மவர்களுக்கும் ரப்பர் மரங்களுக்குமான உறவு என்றும் பிரிக்க முடியாதது.   கொடிய மிருகங்களுக்கும், நச்சு உயிர்களுக்கும் பலியானவர்களின் கதைகள் ரப்பர் காடுகளில் ஏராளம். யாராவது ‘கித்தா மரம்’ என்றால் அந்தக் காலத்து ஆளா நீங்கள் என கதைக்கேட்க அமர்ந்துவிடுகிறேன்.  இன்னும் பதிவு செய்யாத  தோட்டக் கதைகள் மிச்சம் இருக்கவே செய்கின்றன.  

நன்றி:  தமிழ்மலர் 1/8/2021

 

 


சனி, 24 ஜூலை, 2021

EO6 மலேசிய செங்கொடியின் போராட்டமும் வெற்றியும்

 

தீவிரமாக முன்னெடுத்தப் போராட்டங்களும் அதன் வெற்றி தோல்விகளும் பூட்டி வைத்து அழகுபார்க்கவோ அல்லது ரகசியமாக மௌனம் காப்பதற்கோ அல்ல. காலத்தால்  அவை பேசப்பட வேண்டும். ஒரு போராட்டத்தின் தாற்பரியம்  அறிந்து பல நாடுகளின் ஆதரவு அதற்காக திரள்கிறது என்றால் அந்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.  உதாரணத்திற்கு கிள்ளான் தொழிலாளர் போராட்டம், பத்து ஆராங் போராட்டம், ஹிண்டாப் பேரணி, பெர்சே பேரணி ஆகியவற்றை சொல்லலாம். 

இந்தப் போராட்டங்களைப் போலவே வரலாற்றில் பேசக்கூடிய ஒரு  ஒரு போராட்டம்தான் EO6.    

ஜூலை 2011- ஆம் ஆண்டில்  மலேசிய  சோசலிச கட்சியின்  (பிஎஸ்எம்) செயற்பாட்டாளர்கள் 6 பேரை 28 நாட்கள்  தடுத்து வைத்திருந்த சட்ட விவகாரம்தான்  EO6.   EO என்பது Emergency Ordinance அவசர சட்டமாகு.  9 ஜூலை 2011 அன்று கோலாலம்பூரில் பெர்சே அமைப்பு மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. பெர்சே 2.0 அமைதி பேரணி என்ற அதற்கு நாடு தழுவிய நிலையில் மக்களின் ஆதரவும் திரட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதே காலக்கட்டத்தில் 13-வது பொது தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முயற்சியில் மக்களை ஒருங்கினைக்கும் பிரச்சாரத்தில் பி.எஸ்.எம் பரப்புரைக்காக  செயற்படுத்திய ஒரு வார்த்தைதான் “Udahlah tu, Bersaralah BN!”. நேர்மையான தேர்தலுக்காகவும் புதிய அரசாங்க மாற்றத்திற்காகவும் மக்களிடம்  பரப்புரையை  கொண்டு சேர்க்க பி.எஸ்.எம் தலைமைத்துவத்தில் அந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன் காரணமாக நடந்தேறிய கைது நடவடிக்கை நாட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பி.எஸ்.எம் கட்சியின் அரசியல்  வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான சம்பவமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.  அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. 

1.      1. பி.எஸ்.எம் அரசியல்  தோழர்களின் கைது நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் வேறு எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. இந்தச் சட்டம் கொலை-தீவிரவாதம் போன்ற பயங்கர குற்றங்களை செய்பவர்கள் மீது பாயக்கூடியது.

2.    2.  பி.எஸ்.எம் தோழர்களின் கைது நடவடிக்கைக்குப் பிறகு ஓர் ஆண்டில் இந்தச் சட்டம், சட்டத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டது. 

3. 3.இந்த கைது நடவடிக்கையை முன்னிட்டி பி.எஸ்.எம், காவல்துறை மீது  மானநஷ்ட வழக்கு தொடுத்தது. பின் இரண்டு இலட்ச வெள்ளியை இழப்பீடாக அரசு காவல்துறை பி.எஸ்.எம்க்கு வழங்கி  இந்த வழக்கு நீதிமன்றம் ஏறாமல் முடிவுக்கு கொண்டு வந்தது. (அந்தப் பணத்தை கட்சியின் வளர்ச்சிக்காக கட்சிக்கே தோழர்கள் கொடுத்துவிட்டனர்.)  

முன்னதாக  EO6 கைது நடவடிக்கையின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பி.எஸ்.எம்  மேற்கொண்ட பிரச்சாரத்திற்காக மக்கள் அணிதிரட்டி, ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி ஒரு பேருந்தும், பேராக்கிலிருந்து பினாங்கு மற்றும் பெர்லிஸை நோக்கி மற்றுமொரு பேருந்தும் புறப்பட்டது.  

தொடக்கத்திலிருந்தே அதிகாரத்தில் உள்ளவர்களால் பி.எஸ்.எம்-இன் இந்த பிரச்சாரமும், மக்களுக்கு விநியோகித்த துண்டுப்பிரசுரங்கலும் மிகுந்த தொந்தரவை கொடுத்தன. இதன் காரணத்தினால் போலீஸ் துறையின் பார்வை பி.எஸ்.எம் மீது இருந்ததோடு அதன் முன்னெடுப்புகளையும் கண்காணித்துக்கொண்டே இருந்தது.  இடதுசாரி தோழர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கான காரியங்களையும் போலீஸ் மேற்கொள்ளவும் செய்தது.   பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்ட இரண்டு பேருந்துகளை பல இடங்களில் நிறுத்தி விசாரனை மேற்கொள்ளப்பட்டன.   ஜொகூரிலிருந்து தலைநகரை நோக்கி வந்துக்கொண்டிருந்த பேருந்தை விசாரனை செய்து சிலமணி நேரத்தில் விடுவித்தார்கள். ஆனால், பினாங்கை நோக்கி சென்ற பேருந்தில் இருந்த தோழர்கள் 30 பேரும் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மறுநாள் பினாங்கு நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்கள்.

அங்குதான் யாரும் எதிர்பார்க்காத விதமாக பி.எஸ்.எம் தோழர்கள் மீது வீண்பழி  சுமத்தப்பட்டது. அதாவது நேர்மையான தேர்தலுக்காக முன்னெடுத்த  போராட்டம் நாட்டின் மாமன்னருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று திரித்து குற்றஞ்சாட்டப்பட்டது.  அக்குற்றம் நிறுபிக்கப்பட்டால் ஆயுல் தண்டனை கிடைக்க வகைச் செய்யும் சட்டத்தின் கீழ் பேருந்தில் இருந்த 30 பேரும் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் 6 பேர்  விசாரனைக்குப் பிறகு  ஜூலை 4-ஆம் தேதி காவலிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பின் அவர்கள் 6 பேரையும்  அவசர சட்டம்  அதாவது  Emergency Ordinance – EO கீழ் வழக்கு பதிவு செய்து, புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் அன்றே மீண்டும் கைது செய்து கோலாலம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.  இந்த  Emergency Ordinance சட்டம்  இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற விசாரனை  மேற்கொள்ளாத வகையில் யாரையும் கைது செய்து 60 நாள் விசாரனைக்கு உட்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் கொடுக்கிறது என்பது குறிப்பிடதக்கது. கிட்டதட்ட தேச நிந்தனை சட்டத்திற்கு இணையான ஒன்றுதான் இதுவும்.

(பினாங்கு தடுப்புக்காவலில் இருந்த மற்ற தோழர்கள்  பினாங்கு நீதிமன்ற விசாரனைக்குப் பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.)

சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர்  ஜெயகுமார்,  பி.எஸ்.எம் உதவித்தலைவராக இருந்த சரஸ்வதி, பிஎஸ்எம் மத்திய செயற்குழு உறுப்பினர்களான சூ சொன் கை மற்றும் சுகுமாரன், சுங்கை சிபுட் வட்டார பி.எஸ்.எம் செயலாளர் லெட்சுமனன் மற்றும் பி.எஸ்.எம் இளைஞர் பிரிவைச் சேர்ந்த  ஆர். சரத்பாபு ஆகிய தோழர்கள்தான் இந்த  Emergency Ordinance  சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

பி.எஸ்.எம்  சோசலிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு நேர்மையான முறையில் மக்களுக்காக போராடும் ஒரு கட்சி என அரசு தெரிந்துக்கொள்ள 35 நாட்கள்  பிடித்தது. அதுவரை ஒவ்வொரு நாளும் சிறையில் இருந்த தோழர்களுக்காக போராட்டங்கள் நடந்தன.  உண்மையில் அனைவருக்குமே தெரியும்; மாமன்னருக்கு எதிராக  பி.எஸ்.எம் மீது விழுந்த குற்றச்சாட்டும், அதனைத் தொடர்ந்து 6 தோழர்கள் மீது சுமத்தப்பட்ட Emergency Ordinance அவசர சட்டமும்  அர்த்தமற்றது ஆதாரமற்றது என்று. காரணம் 1998-ஆம் ஆண்டிலிருந்து பி.எஸ்.எம் முன்னெடுத்த மக்கள்  பிரச்னைகளுக்கான போராட்டங்களை நாடு அறியும். தோட்ட மக்கள் பிரச்னைகள், நகர மக்களின் பிரச்னைகள் என இன மத பேதம் இல்லாமல் களத்தில் நின்று போராடியிருக்கிறது மலேசிய சோசலிச கட்சி. 

எந்த ஒரு அசம்பாவிதத்தையும் பி.எஸ்.எம் தம் போராட்டங்களில் இதுவரை கொண்டிருக்கவில்லை. உண்மையில் பெர்சே 2.0 பேரணியை தடுக்கும்  சூழ்ச்சியில் தேசிய காவல்துறை பி.எஸ்.எம் மை கருவியாக பயன்படுத்த எண்ணினார்கள். ஆனால், அதில் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். பல லட்சம் பேர் பெர்சே பேரணியில் கலந்துக்கொண்டு பேரணியை வெற்றி பெற செய்தார்கள். 


ஆனால், EO சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த  பி.எஸ்.எம் தோழர்கள் பெர்சே பேரணி முடிந்தும்கூட கிட்டதட்ட ஒரு மாதம் சிறையில் தண்டனையை அனுபவித்தார்கள். அந்த அநியாயத்தை  எதிர்த்து பி.எஸ்.எம் தோழர்கள்  அரசுக்கும் நீதிதுறைக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் பல போராட்டங்களையும் நெருக்குதலையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருந்தனர்.  உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்தும் பி.எஸ்.எம்-க்கு ஆதரவு குரல் எழுந்தது. எதிர் கட்சிகளும் பி.எஸ்.எம்-காக ஆதரித்து களத்தில் நின்றனர்.  28 நாட்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு  எந்த நிபந்தனையும் இல்லாமல் 29 ஜூலை 2011 அன்று சிறையில் இருந்த 6 தோழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டம் நடந்து இந்த ஜூலை மாதத்தோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.  இது ஒரு கருப்பு தினம் அல்ல. மாறாக நேர்மையான ஒரு போராட்டத்தில்   இருக்கும் சவால்களை எதிர்கொள்வதுதான் மக்கள் புரட்சியாக மாறுகின்றன.  அந்த வகையில் இது மலேசிய செங்கொடிக்கு கிடைத்த வெற்றியாகும்.

-யோகி (நன்றி தமிழ்மலர் நாளிதழ் 25/7/2021)

சனி, 17 ஜூலை, 2021

மரணங்களை வேட்டையாடிய புடு சிறைச்சாலை

 

இலக்கு இல்லாத பயணத்தின் போது ஓர் நாள் 'மோனோ' மின்ரயில் வண்டியில் ஏறினேன். உட்கார இருக்கை இருந்தும், அமர மனம் இல்லை. சிந்தனைகள் எங்கோ இருக்க, நின்றபடியும் வானத்தை வெறித்துப் பார்த்தபடியும் நின்றுகொண்டிருந்தேன். 'இம்பி' ஸ்டேஷனை தாண்டியதும் சிந்தனை சிதறும் விதத்தில் கலைத்துபோட்டது 'புடு' சிறைச்சாலையின் இன்றையை நிலை

'சிறைச்சாலை' ஒன்றும் பெருமை தரக்கூடிய இடமில்லை. குற்றவாளி என நிறுபிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்ற கொண்டுச் சென்று, அங்கு தங்கவைக்கும் இடத்தைக்குறித்த  பெருமைகளை சேகரிக்க என்ன இருக்கிறது? 1895-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட அந்தச் சிறைசாலையில்தான் மலேசியாவின் முதல் நிலை குற்றவாளி என கருதப்படும் போத்தா சின் என்பவரை 1981-ஆம் ஆண்டு தூக்கிலிட்டார்கள். அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்க சம்மேளனத் தலைவரும் தொழிற்சங்க போராளியுமான தியாகி 'மலாயா கணபதி' அவர்களை 4.5.1949 -ஆம் ஆண்டு பிரிட்சிஷ் ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்டதும் இதே புடு சிறையில்தான்.

பலபேருக்கு தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, இன்னும் என்னென்னவோ தண்டனைகள்  நிறைவேற்றப்பட்ட சிறைச்சாலை இன்று, முன் வாசலின் முகப்பை மட்டும் விட்டுவிட்டு,   முழுகட்டிடமும்  தரைமட்டமாக்கப்பட்டு ஏதோ சொகுசு கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொரானா காலத்திலும் கட்டுமான வேலைகள் துரிதமாகவே செயற்பட்டுக்கொண்டிருப்பதை பார்க்கும்போதே கட்டுமானத்தின் மென்னேற்றம் நமக்கு கூறிவிடும்.

என்னுடைய நிருபர் பணியில் நிறைவேறாத ஆசையாக புடு சிறைச்சாலைக்கு ஒரு முறைகூட   போகாததைதான்  சொல்வேன்.  சிறைச்சாலையை முழுவதும் காலி செய்து, அக்கட்டிடம் நிர்கதியாக விடப்பட்டக் காலங்களில் அங்கிருந்து அமானுஷ்யமாக மனித ஓலங்கள் கேட்பதாக பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். சிறைச்சாலை அறைகளில் கைதிகளின் கிறுக்கல்களை இணையத்தில் காணும்போதெல்லாம் சிறைச்சாலையின் உள்பகுதியை ஒரு முறையாவது பார்க்க போயிருக்கலாமே என்ற என் நிறைவேற ஆசை மறுபடியும் விழித்துக்கொள்கிறது.


இதுப்பற்றி நினைத்துக்கொண்டிருந்த ஒருநாளில், என் கைத்தொலைபேசிக்கு இணைய செய்தியிலிருந்து புதிய செய்தி வந்ததற்கான notification வந்தது. அது கபாலி திரைபடத்தைக்  குறித்த செய்தி. பெந்தோங் காளியின் கதை தழுவல்தான் கபாலி திரைப்படம் பேசுகிறது என்றது அச்செய்தி. பெந்தோங் காளி மலேசியாவின் இரண்டாம் நிலை பயங்கர குற்றவாளி என்று ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.  கபாலி திரைப்படம் திரைக்கண்டபோது மலாயா கணதியின் கதை தழுவல் என்ற சலசலப்பும் இங்கு இருந்தது. இருந்தபோதும் யாருடைய சுயசரிதையை தழுவியது கபாலி திரைப்படம்? என்பதற்கு உறுதியான காட்சிகள் இல்லை. அதை திரைப்படக் குழுவினரும் சொல்லவில்லை.

'புடு' சிறைச்சாலை சிலரை மனிதர்களாக மாற்றிய புனிதமான இடமாகவும் சிலருக்கு நரகமாகவும் இருந்திருக்கிறது.  புடு சிறைச்சாலையை இடிக்கப்போகும் தகவலை வெளியிட்டதும் அதை மறுத்து கண்டனம் தெரிவித்து கிட்டதட்ட ஆயிரம் பேர் அங்கு ஒன்று கூடினர்.  சிலர் அதை இடிக்கப்படுவதை  ஆதரிக்கவும் செய்தனர் என்பது வேறுக்கதை.  இதை வாசிக்கும் எத்தனைப் பேருக்கு தெரியும் இரண்டு கின்னஸ் உலக சாதனை விருதுகளை கொண்டிருக்கிறது புடுச் சிறைச்சாலை என்று. உலகின் மிக நீளமான சுவரோவியத்திற்காக ஒரு உலகசாதனை விருதும்,  அந்த ஓவியத்தை வரைந்த சிறைக்கைதி கோங் யென் சோங் என்பவருக்கும் Guinness Stout Effort Award என்ற விருதும் வழங்கப்பட்டது.  


பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் ’X’ வடிவ அமைப்போடு வடிவமைக்கப்பட்டு1891 ஆம் ஆண்டில் அதன் கட்டுமானப் பணி தொடங்கியது. முன்னதாக அந்த நிலப்பரப்பு சீனர்களின் சடலங்களை புதைக்கும் சுடுகாடாகவும், புலிகளும் காட்டு விலங்குகளும் நடமாடும் வனமாகவும் இருந்திருக்கிறது. நான்கு ஆண்டுகளில் சிறைக்கைதிகளின் உதவியோடுதான் சிறைச்சாலை கட்டி முடித்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு.

தொடக்கத்தில் 600 கைதிகளுக்கு தண்டனைச் சாலையாக இருந்தது பின்னாளில் 6500 கைதிகள் வரை தண்டனை பெறுவதற்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றால் சிறைச்சாலையின் மொத்த பரப்பளவு குறைத்த கேள்வியும் ஒரு அறையில் எத்தனை கைதிகள் தங்க வைக்கப்பட்டிருப்பார்கள் என்ற கேள்வியும் எனக்கும் எழவே செய்கிறது. 600 கைதிகள் அறைகளைக் கொண்டிருந்தது புடு சிறைச்சாலை.

காலை 7 மணியளவில் சிறைக்கதவுகளின் பூட்டு நீக்கப்பட்டு திரும்ப மாலையில் பூட்டு மாட்டும் வரை சிறைக்கைதிகளில் வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அங்கும் குண்டல் கும்பல் சண்டைகள், பலிவாங்கும் நடவடிகைகள், தற்கொலைகள் ஆகியவை நடக்கும் என்பதை முன்னால் கைதியும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவருமான தான் ஆக் லேக்  ஒரு வரலாறு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி பதிவில் கூறியிருந்தார். அவரேக்கூட தற்கொலைக்கு முயற்சித்து அதில் தோல்வி அடைந்ததையும் பதிவு செய்திருந்தார். கேங் கே.எல் மற்றும் கேங் கிள்ளான் ஆகிய குழுக்களுக்கிடையே நடந்த சண்டையை இப்படி அவர் விவரித்தார்.

‘’இம்மாதிரியான குழு சண்டை மாலையில் நடக்கும். அப்படி நடக்கும்போது நிச்சயமாக யாருக்காவது மரணம் ஏற்படும். அதை தவிர்க்க முடியாது. கைதிகள் சிறையில் வேலை செய்யும் இடங்களில் ஆதாவது ஆயுத்ததை தயார் செய்துக்கொள்வார்கள். பல் துலக்கும் தூரிகைகூட ஆயுதமாக மாறும்” என்கிறார். இந்தக் கூற்றை மற்றொரு கைதியான ஊஜாங் உறுதி செய்திருக்கிறார்.

இப்படி ஏதாவது அசம்பாவிதம் நேரும்போது, வாடன் சம்பந்தப்பட்ட கைதியை தனிமைப்படுத்தும் நோக்கில் தனிச்சிறையில் அடைத்துவிடுவார். வெறும் ரொட்டியும் தண்ணீரும் மட்டுமே அவருக்கு உணவாக வழங்கப்படும். அந்த அறை சிறியதாகவும் இருட்டாகவும் ஒரு வகை நாற்றம் வீசியபடியே இருக்குமாம்.  அங்கு 14 நாட்கள் இருக்க வேண்டும். எத்தனை மன உறுதி கொண்டவராக இருந்தாலும் அந்த அறை தரும் அனுபவம் அவரை ஒன்றுமில்லாமல் துவம்சம் செய்துவிடும் என்கிறார்கள். 

புடுச் சிறைச்சாலையில் நிறைய மறக்க, மறுக்க, மறைக்க முடியாத கருப்பு வரலாறுகள் இருக்கின்றன. அதில் முக்கியமாக சொல்லக்கூடியது சிறைச்சாலை கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த ஆண்டான 1895-லேயே நடந்தது. சுடுகாடு இருந்தபோது பயன்பாட்டில் இருந்த கிணற்று நீர்தான் சிறைக்கைதிகளின் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலிருந்த விஷக்கிருமிகளால் சிறைச்சாலையில் பரவிய  காலரா நோய் நூற்றுக்கணக்கான கைதிகளின் உயிரை குடித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

மலேசிய சிறைச்சாலை வரலாற்றில் பேசக்கூடிய இன்னொரு கருப்பு தினத்திற்கு சொந்தக்காரர் ஜிம்மி சுவா. சிறைச்சாலை மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஒருவர் என இருவரை சுமார் 6 நாட்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு நெருக்கடி கொடுத்தவர்தான் ஜிம்மி சுவா. சிங்கப்பூர் நாட்டுக்காரரான அவர் குண்டல் கும்பல், பயங்கரவாத நடவடிக்கைகள், துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கான்ஸ்டபிள் மொஹட் யாசின் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில் புடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 1986 அக்டோபர் 17 அன்று, சிறையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் ஜிம்மி சுவா தலைமையிலான ஆறு கைதிகள் ஈடுபடுத்திய பணயக்கடத்தலில் அவ்விருவரும் சிக்கிக்கொண்டனர். ஆறு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 22 தேதியன்று மலேசிய காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவு குழுவினரால் எந்த ஒரு அசம்பாவிதமும் நேராமல் அவர்கள் மீட்கப்பட்டு பணயக்கடத்தல் ஒரு முடிவுக்கு வந்தது. மலேசிய சிறைச்சாலை வரலாற்றில் அதற்கு முன்னும் அதன் பின்னும் இம்மாதிரியான ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பது குறைப்பிடத்தக்கது. அதன் பின் சில நாட்களிலேயே ஜிம்மி சுவா தூக்கிலிடப்பட்டார்.   

புடு சிறைச்சாலை பிரம்படி தண்டனைக்கும் தூக்கு தண்டனைக்கும் பெயர்போன சிறைச்சாலையாகும். அதனாலேயே மலேசியாவின்மீது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்கூட விமர்சனங்கள் இருக்கின்றன.  புடு சிறைச்சாலையில் வியாழக்கிழமைதான் யாரை தூக்கில் போடப்போகிறார்கள் என்பதை அறிவிக்கும் நாள். அதனால் புதன்கிழமையே கைதிகள் ஒருவகை மிரட்சியில் இருப்பார்களாம். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். அதிகப்பட்சமாக மூன்று பேருக்கும், சில வேளை இருவர் என ஒருவருடமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.  தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.



பேராக் மாநில போலீஸ் அதிகாரியை கொலை செய்த குற்றத்தின் பேரில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. அவர்களை தூக்கில் போட கொண்டுச் செல்லும்போது பாடிக்கொண்டே சென்றார்களாம். அவர்கள் பாடிய அந்தப் பாடல் பிற கைதிகளுக்கும் தெரியும் என்பதால் அவர்களும் சிறைக்கதவுக்குப் பின்னே அந்தப்பாடலை பாடினார்களாம். கைதியின் கழுத்தில் கையிரை மாட்டும்போதும், தொங்கவிடும்போதும்கூட அந்தப் பாடலை பாடுவதை கைதி நிறுத்தவில்லையாம். பாடல் அவர்களுக்கு மரணத்திற்கான தைரியத்தை கொடுத்திருக்கலாம் என்கிறார் புடு சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர்.  

1986-இல் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கெவின் பார்லோ, பிரியான் சேம்பர்ஸ் எனும் இரு ஆஸ்திரேலியர்களை புடு சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றியது இரு நாடுகளுக்குமான நட்புறவில் கிட்டதட்ட 10 ஆண்டுகள் சுனக்கம் ஏற்பட்டிருந்தது.

மலேசியாவில் 33 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மிக அதிகமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது  போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்குதான். இத்தனைக்கும் 1976-இல் தான்  மலேசியாவில் போதைப்பொருள் சட்டம் அமலுக்கு வந்தது.

அக்டோபர் 2019  Amnesty International’s அறிக்கை என்ன சொல்கிறது என்றால்  2018 பிப்ரவரி நிலவரப்படி 1,281 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர் என்றும், அவர்களில் 73% பேர் போதை மருந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என்றும் கூறுகிறது. தண்டனை பெறப்பட்டிருக்கும் 89% ஆண் கைதிகளில் 568 பேர் வெளிநாட்டினர். நைஜீரியா (21%), இந்தோனேசியா (16%), ஈரானியர்கள் (15%), இந்தியா (10%), பிலிப்பைன்ஸ் (8%) மற்றும் தாய்லாந்து (6%).  

மரண தண்டனையை ஒழிப்பதற்கு உலகப் போக்கைப் பின்பற்றுவதற்காக பல ஆண்டுகளாக அழுத்தங்களுக்கு உள்ளாகிய மலேசிய அரசாங்கம், 11 குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக 2018 இல் அறிவித்தது இங்கு குறிப்பிடதக்கது. இருப்பினும், மலேசியர்கள் மரண தண்டனையை தக்கவைக்க ஆதரவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடவேண்டிய விஷயமாகும்.


தலைநகரின் மிக முக்கியமானா மையத்தில் அமைந்திருந்த புடு சிறைச்சாலை  1996ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அங்கிருந்த  கைதிகள் சுங்கை பூலோகாஜாங் சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். அதன் பின்னர் புடு சிறைச்சாலை ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்கு அருங்காட்சியகமாகச் திறந்து விடப்பட்டது.  2010 ஜூன் மாதம் 22ஆம் தேதி புடு சிறைச்சாலையின் சுவர்கள் தகர்க்கப்பட்டன. அந்தக் கட்டிடத்தை உடைக்க வேண்டாம் என்று குரல் எழுப்பியவர்களுக்கு பல ஆயிரம் உயிர்களைக் காவு கொண்ட ஒரு சிறைச்சாலை வரலாற்றுச் சின்னமாக மாற முடியாது என்றும் சிறைச்சாலை  பெருமைப்படக்கூடிய இடமல்ல என்றும் அரசு பதில் அளித்தது.

மரணங்கள் ஆரம்பத்தில் இருந்தே அந்த இடத்தை வேட்டையாடிவருகிறது. கின்னஸ் சாதனை பெற்ற ஓவியச் சுவர்கள் இப்படிதான் இடிந்து வேட்டையாடப்பட்டு மண்ணாகி காற்றில் கலந்தன.

நன்றி: தமிழ்மலர் நாளிதழ் (18/7/2021)

வியாழன், 8 ஜூலை, 2021

தாமரைக் கொக்கி பாதத்தில் நுனிக்கால் நடனம்

''கால்களுக்கு பொய் பேச தெரியாது'' என்று சொல்பவள் நான்.  உண்மையாக வாழ்வதென்றால் கால்களாக வாழ்ந்துவிடலாம் என்ற வரியை நான் எழுதுகிறேன் என்றால் அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று  சிந்திக்க தொடங்கினால் அச்சிந்தனையை நிறுத்துவது உங்களுக்கு கடினமாகும்.  வளர விடாமல் பல ஆண்டுகளாக இறுக கட்டிக்கொண்ட காரணத்தினால்  ஊனமடைந்த கால்களில் காமயுணர்ச்சியை ஒரு சமூகம் கண்டிருக்கிறது என்றால் அந்த மனநிலையை யோசித்துப் பாருங்கள்?  இதைப் பற்றி பேசுவதற்கு முன்னதாக…   

பல இன மக்கள் வாழும் மலேசியாவில், அவர்களின் கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் பிற இனத்தவர்கள் தெரிந்துகொள்கிறார்களா? அப்படியே இருந்தாலும் அவர்களின் புரிதல் சரியாகத்தான் இருக்கிறதா? என் கேள்விக்கான காரணம், பள்ளி பாடப்புத்தகங்களிலும் பிற இனத்தவர்கள் குறித்த வரலாறு என்பது மேலோட்டமாகத்தான் இருக்கிறதே தவிர 50 சதவிகிதம்கூட  அதிகப்படியான தகவல்கள் இல்லை. உதாரணத்திற்கு  நம் நாட்டில் வாழும்பாபா ஞோஞா’ சமூகம் குறித்தும்  மலாக்கா செட்டி’ சமூகம் குறித்தும்  எழுதச்  சொன்னால் சிறு குறிப்பாவது மலேசியர்களால் எழுத முடியுமா என்பது  தெரியவில்லை.  

நாட்டில் இரண்டாவது பெரிய சமூகம்,  சீனச் சமூகம்தான். மூட நம்பிகைக்கும், கடவுள் நம்பிகைக்கும் கலை-கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்திய பாரம்பரியத்தை காட்டிலும் எவ்வகையிலும் குறைந்தது இல்லை சீனர்களின் கலாச்சாரமும் பண்பாடும். கூடவே மூட நம்பிக்கைகளும் சடங்குகளும்.  அதே போல பெண்களை ஒடுக்குவதிலும், பாலியல் ரீதியில் சுரண்டுவதிலும் அடிமைப்படுத்துவதிலும் சற்றும் சலைத்தவர்கள் இல்லை இவர்கள். இந்தியர்களிடையே தேவதாசி முறை இருந்தது போன்று இவர்களிடத்திலும் இருந்திருக்கிறது. உடன்கட்டை ஏறுவதற்கு பதிலாக இறந்த கணவனோடு (அரசனை) பல மனைவிகளை ஒரே குழியில் உயிரோடு புதைக்கும் பழக்கம்  இருந்திருக்கிறது.


கற்பனைக்கு எட்டாத எத்தனையோ எத்தனையோ ஒடுக்குமுறைகளோடு வாழ்ந்து அதை உடைத்து, போராடி வெளியில் வந்திருக்கும் பெண்கள் குறித்த நிறைய சம்பவங்களும் ஆவணங்களும்  நம்மிடையே இருக்கின்றனவிண்ணுலக கதைகளிலிருந்து மண்ணுலக கதைகள்  வரை இந்த  உலகம்  பெண்களுக்கு கொடுத்திருக்கும் அடிமை முறை வழக்கத்தில் மாறுபட்டிருந்தாலும் வலி ஒன்றுதான்.  அந்த வரிசையில் சீன சமூகத்தில் பிரபலமாக இருந்த கால்கட்டும் கலாச்சாரம் சம்பந்தமான ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை.  ஊனமடையும் இந்தக் கால்களுக்கு  தாமரைப் பாதங்கள் அல்லது தாமரைக் கொக்கிப் பாதங்கள் (lotus hooks)  என்று பெயர்.

மேலை நாட்டுப் பெண்கள்  தங்களின் உடையை அணிவதற்கு முன்பு தங்களின் உடலை இறுக்கி கட்டுவார்கள். உடல் எடை கூடாமல் இருப்பதற்காகவும் சின்ன இடைக்காகவும் அப்படி கட்டுவார்கள். அப்படி கட்டும்போது அவர்களால் ஓர் அளவுக்கு மேல் உண்ணவும் முடியாது. உடல் எடை சிறுத்துப்போய் இருக்கும். பழைய ஆங்கிலப் படங்களில் உடலை  இறுக்கி கட்டும் காட்சிகளை காண முடியும். அது வலி நிறைந்த ஒன்று மட்டுமல்ல அதற்கு பின்னாலும்கூட அடிமைத்தனமும் பெண் உடல் சுரண்டலும் இருக்கிறது. 

அதுபோலவே சீனாவில் பெண்கள் தங்கள் கால்களை வளர விடாமல் கட்டிப்போடும் பழக்கம் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. அதை ஒரு சடங்காகவே பெண்களுக்கு வைத்திருந்திருக்கிறார்கள்.  அந்தப் பழக்கத்தை  மலேசியாவுக்கு வரும்போதும் கூடவே கொண்டும் வந்திருக்கிறார்கள் சிலப் பெண்கள்.  சில காலம்வரை இங்கு வாழ்ந்த சீன பெண்களிடத்தில் அந்தக் கலாச்சாரம்  இருந்திருக்கிறது. கால்களை கட்டுவதென்பது பெண்களின் பாதங்களை மடித்து கட்டுவதாகும்.  தன் இயல்புக்கு வளரவிடாமல் தடுக்கும் போன்சாய் மரங்களைப்போல,  கால்களை வளரவிடாமல் பெண்கள் தங்கள் கால்களை குழந்தை கால்களைப் போல  வைத்துக்கொள்வார்கள். இப்படி கட்டும்போது அவர்களால் இயல்பாக நடக்கவோ, வேலை செய்யவோ முடியாது.      

பெண்களுக்கு கால்களைக் கட்டும் சீன கலாச்சாரம் பழங்காலத்திலிருந்தே சீனாவில் பரவலாக நடைமுறையில்  இருந்திருக்கிறது.   சியா வம்ச ஆட்சியில் இந்த நடைமுறை தொடங்கியதாக நம்பப்படுகிறது.  அதே வேளையில் பத்தாம் நூற்றாண்டில் ‘தாங்க்’  ஆட்சியிலும் இந்தக் கலாச்சாரம் இருந்திருக்கிறதாக விக்கிபீடியா தகவலில் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்தக் கலாச்சாரம் தொடர்பாக விக்கிபீடியாவில் சொல்லப்பட்டிருக்கும் பல தகவல்களில் அதிர்சியான தகவல் ஒன்று இருக்கிறது.  ‘சோங்’  பேரரசின் இறுதி காலக்கட்டத்தில் ஆண்கள்,   தாமரை பாதங்கள் கொண்டிருந்த பெண்களின் ஊனமடைந்த கால்களுக்கு அணியும் சிறப்பு காலணியில் நேரடியாகவே மது ஊற்றி அருந்துவார்களாம்.

 சீனர்களைப் பொறுத்தவரை, பண்டைய சீன ஆண்கள் சிறிய கால்களைக் கொண்ட பெண்களைத்தான் அதிகம்  விரும்புவதாக  கூறப்படுகிறது, ஏனெனில் அவை பெண்ணின் அழகையும் வளத்தையும் அடையாளப்படுத்துகிறதாம்.  மிக நேரடியாக அவை காமத்தில் திறப்புக்கோலாக இருக்கிறது. சீனப் பெண்கள் சமுதாயத்தில் தங்கள் நிலையை நிலைநிறுத்திக்கொள்ள கால்களைக் கட்ட வேண்டும்.  அதுவும்  இந்தக் கலாச்சாரமானது  உயர்குடி மக்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தது.  மேட்டுக்குடிகளின் சடங்காக இருந்த இந்தக்  கலாச்சாரம் பின் அனைத்து  சீன பெண்களிடத்திலும் அழகுக்குரிய அடையாளமாக  ஏற்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கால்களுக்கான தயாரிப்பை பெண்கள்  4 வயது  தொடங்குவதற்கு முன்பே ஆயுத்தப்படுத்த வேண்டும்.  அதுவரைதான் பெண்களுக்கு சுதந்திரமாக தங்கள் பாதங்களை பூமியில் பதிக்க அவர்களின் சமூகம்  அனுமதித்திருக்கிறது.  இயல்பு நிலையில் நடமாடிக்கொண்டிருந்த பிஞ்சுக் கால்கள்  மிகவும் நேர்த்தியாக மூடப்படும். வசதி படைத்த மேட்டுகுடி பெண்களின் பாதங்கள் பட்டுத்துணியாலும், வசதியற்றவர்கள் சாதாரண துணியாலும், கட்டைவரலை மட்டும் விட்டுவிட்டு மற்ற  விரல்களை  வளைத்து பாதத்தோடு சேர்த்து கட்டப்படுகிறது.  அதற்கு முன்பு அந்தச் சின்னக் கால்களை  மூலிகை, சிறுநீர் அல்லது  மாமிச ரத்தங்களால் நிரம்பிய குடுவையில் ஊறவைத்து   சிறுமியின்  கால்விரல் எலும்புகள் உடைக்கப்படும்.  சரியாக உடையாத எழும்புகள்  மடித்து நடக்கும்போது மெல்ல மெல்ல தானாக உடைபடும். இச்சடங்கிற்கு அவர்கள் குளிர் காலத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.  உடைத்த பாதங்கள் துணியால் இழுத்து இறுக்கி மூடி கட்டப்படும்.   

இவர்களுக்காக பிரத்தியேக காலணிகள் தைக்கப்படும். அவை துணியால் ஆனவையாகவும் வேளைபாடு கொண்டவையாகவும் இருக்கும். மூன்று அங்குல கால்கள் சாத்தியப்பட்டால் அதுதான் முதல் தர தாமரைக் கால்களாக அந்தப் பெண் “டிமாண்ட்”  செய்யப்படுவாள்.  நடக்கவே சிரமமாக இருக்கும் இந்தக் கால்களால் ஒரு பெண் நடனமாடுவது யோசித்து பார்க்க முடியாத ஒன்று. ஆனாலும், இந்தக் கால்களில் ஆடும் நுனிக்கால் நடனம் சீன வம்சத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது. அப்படி ஆடும் பெண்ணும் உயர்ந்த அந்தஸ்துக் கொண்டவளாக  அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறாள்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றுமொரு விடயம் என்னவென்றால் பெண்களுக்கு  பாத எழும்புகள் உடைக்கப்பட்டு மடித்து கட்டியிருந்தாலும் கூட சிறிய இடைவெளிவிட்டு இரு கால்களையும் துணியில் கட்டிவிடுவார்கள். இதன் காரணத்தினால் தரையை தேய்த்த படிதான்  அவர்களால் நடக்க முடியும்.  வேகமாக அடியெடுத்து வைக்க முடியாது.  இதற்கெல்லாம்  மூலகாரணத்தை ஆராய்ந்தால் பெண்களின் கன்னித்தன்மையில் வந்து நிற்கிறது. சீனப் பெண்களின் கன்னித்தன்மை  கிழியக்கூடாது என்பதற்கான காப்பு அது. மேலும் அவர்களின் அந்தரங்க உறுப்பு  சுறுங்கி இறுக்கமாக இருக்கவும் இந்த முறை பின்பற்றப்பட்டிருக்கிறது.  இந்த அனைத்துச் சடங்குகளும் தேவையும் ஆண்களின் பாலியல் தேவைக்காக மட்டுமே தயார் படுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு அவர்களிடத்தில் காமசூத்திரத்திற்கு  முன்னுரிமை இருந்திருக்கிறது. தீராத நோயையும் பாலியல் உறவைக்கொண்டு தீர்க்க முடியும் என்று சீன சாஸ்திரம் சொல்கிறது.

சாகும்வரையும் தங்கள் கால்களைக் கட்டிகொண்டு வாழும் பெண்கள் தன்னோடு இணையும் ஆணுக்கு மட்டுமே அந்தக் கால்களை திறந்து காட்டுகின்றனர்.  தனக்கு மட்டுமே திறக்கப்படும் அந்த ஊனமான குட்டையான  கால்களை காணும் ஒரு ஆணுக்கு  காமவுணர்வு உச்சத்தை தொடும் அதே வேளையில் அக்கால்கள் அதிர்ஷ்டத்தின்  வாசல் கதவாகவும் அவர்களுக்கு இருப்பதாக நம்பப்பட்டிருக்கிறது.   

மிக எளிதான நடமுறையில்லை இந்தப் பாதம் கட்டுதல், கால் அழுகி போகுதல், தொடர்ந்து கால்களில் ரத்தம் வெளியேறுதல் காரணமாக மரணம் கூட நிகழும். வலி என்பது மூச்சு இழுத்து விடுவதுபோல நிரந்தரமான ஒன்றாகிவிடுகிறது.    

இந்தக் கற்பனைக்கு எட்டாத கலாச்சாரமானது 20 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியபோது  படிப்படியாக மறைய தொடங்கியிருக்கிறது.  1911- ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உண்டானப் பிறகு பல பெண்கள் இந்த பண்டைய பாரம்பரியத்தை படிப்படியாக கைவிடத் தொடங்கியிருக்கின்றனர்.  ஆனாலும் ஒரு சாரார் அதை பின்பற்றிதான் கொண்டிருந்திருக்கின்றனர்.  இந்தக் கால்கட்டும் சடங்கின் ஈடுபாடு மற்றும் எதிர்ப்புக்கு பின்னால்  தாவோ மற்றும் கன்ப்ஃயூஷியஸ் மத தலையீடுகளும் இருக்கிறது.   மலேசியாவில் இந்த மாதிரியான குட்டை கால்கள் கொண்ட பெண்களை கண்டிருப்பதாக பலர் கூறி நான் கேட்டதுண்டு.  

என்னுடைய பெரியப்பா ஒரு சீனர்.  பெரியப்பாவின் அம்மாவின் கால்கள்  குட்டி கால்களாக இருப்பதைப் பார்த்து பெரியம்மா  அவரிடம் விசாரித்ததற்கு குழந்தையிலிருந்து கால்களை கட்டி இப்படி ஆக்கி கொண்டதாக அவர் சொல்லியிருக்கிறார். இது 1985-ஆம் ஆண்டு நடந்த உரையாடலாகும். பெரியம்மா அவரைக் காணும்போது கால்கள் குழந்தை கால்களைக் போல இருந்ததே தவிர, கால்களை கட்டுவதையும் அடுத்த தலைமுறைக்கு  அதை கொண்டுச் செல்வதையும் அவர்கள் நிறுத்தியிருந்தனர்.

1947 ஆண்டு எழுதப்பட்ட ‘கடல் கடந்த தமிழன்’ என்ற புத்தகத்தில் சீனப் பெண்கள் கால்களில் இரும்பு கவசம் போட்டும், கால் வளராமல் செய்து குறுகிய கால்களுடனும் இருந்தனர் (ப.107) என்று பதிவு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடதக்கது.  

நாட்டிற்குள் வணிகம் செய்ய சீனர்கள் வந்திறங்கிய மலாக்கா மாநிலத்திலிருந்து இந்த தாமரைக் கொக்கி பாத கலாச்சாரத்தையும் பெண்கள் கொண்டு வந்ததோடு சில காலங்கள் வரை இங்கே பின்பற்றி வந்ததற்கான தரவுகள் இருக்கின்றன. குறிப்பாக மலாக்கா மாநிலத்தின் பட்டணத்தில் தாமரைக் கொக்கி பாதங்களுக்கு காலணி தைத்து விற்பனை செய்யும் காலணி கடை இன்னும் செயற்பாட்டில் இருக்கிறது.  தாமரை பாதத்தின் காலணிகள் தற்போது நினைவுச்சின்னங்களாக விற்கப்படுவதோடு அந்தக் கடை  சுற்றுப்பயணிகளுக்கு  அருங்காட்சியகமாகவும் இருக்கிறது. 


2010-ஆம் ஆண்டு இணைய செய்தி நிறுவனம் செகின்ச்சான் எனும் வட்டாரத்தில் வசித்து வந்த 93 வயது தாமரைக் கொக்கி பாதம் கொண்ட சீனப்பெண்ணை சந்தித்து செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். லிம் குவான் சியூ என்ற பெயர் கொண்ட அந்த முதிய பெண்மணி அதுகுறித்து பேசுகையில்  தாமரை கொக்கி பாதம் உயர்தர அழகுக்கொண்டது என்று சீனாவில் கூறுவார்கள், உண்மையில் அது தவிர்க்க வேண்டிய தலைவிதி என்கிறார் குவான் சியூ. அதோடு தனக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால் இந்தக் கால் கட்டும் சடங்கை நான் நிராகரிப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மரண தண்டனைக்கும் இணையான ஒரு தண்டனையாகத்தான் இந்தப் பாதம் கட்டும் சடங்கு எனக்கு தெரிகிறது. ஒரு இஞ்ச் அளவு சிறிய காலணியை அணிந்தாலே கால்வலி உயிரை எடுத்துவிடும். எப்போது அதை கிளட்டி எறிவோம் என்று மனம் அலைக்கழிக்கும்போது  இந்தப் பெண்கள் வாழ்நாள் முழுவதும்  வலியை அனுபவிக்க தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் புரையோடிப்போன அடிமைத்தனத்திற்கு வேறு என்னதான் சாட்சி.        

-யோகி

 நன்றி உயிர் எழுத்து இதழ் (ஜூலை 2021)