நாங்கள் விஜிசேகர் (மா) வீட்டிலிருந்து வவுனியாவிற்கு கிளம்புவதற்கு முன்பாக இரண்டு முக்கியமான சந்திப்புகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலாவதாக மட்டக்களப்பில் இயங்கிவரும் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தைப் பார்வையிடுதல். இது நட்பு நிமித்தமாக நடந்த திடீர் சந்திப்பு என்றாலும் அவ்வமைப்பானது முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்தும் இதுவரை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்தும் நேரடியாகக் கேட்டு தெரிந்துகொள்ளக்கூடிய சூழல் அமைந்தது. சூரிய பெண்கள் செயற்பாடுகளைத் தாங்கி பதிப்பித்திருக்கும் 'கூற்று' பெண்களின் குரல் 25 ஆண்டுகள் என்ற புத்தகம் பெண்கள் சந்திப்புக்கு வந்திருந்தவர்களுக்கு இலவசமாகவே கொடுத்தார்கள். அப்புத்தகம் குறித்த அறிமுகப்பதிவை ச.விசயலட்சுமி (மா) எழுதியிருக்கிறார். அதை வாசிக்க
https://peruvelipenn.wordpress.com/2018/10/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%8d/ சொடுக்கவும்.
தொடர்ந்து நாங்கள் செயற்பாட்டாளர் அமரா அக்கா வீட்டில்
மௌனகுரு அப்பாவுடனும் ( நான் அப்படித்தான் அவரை அறிமுகமான நாளிலிருந்து அழைக்கிறேன்) சித்திரலேகா அம்மாவுடனும் சிறு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபெரும் ஆளுமைகளை ஒரே இடத்தில் சந்திக்கப்போகும் ஆர்ப்பரிப்பு என்னும் இருந்துகொண்டே இருந்தது.
இருவரின் அனுபவப் பகிர்வுகளை கேள்வி -பதில்கள் மூலம் தெரிந்துகொண்டோம். அது ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் எளிமையும், அன்பும், எதார்த்தமும் எனக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தன. சுமார் இரண்டு மணிநேர கலந்துரையாடலுக்குப்பிறகு நாங்கள் விடைபெற்றுக் கொள்ளும்போது ராமாயணப் பாடலை எனக்காகப் பாடும் படி கேட்டேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னுடைய இராவணக்குரலில் பாடத்தொடங்கினார் மௌனகுரு அப்பா. இராவணன் இறுதியுத்தத்திற்கு புறப்படும் பாடல் அது. தொடர்ந்து சூர்ப்பனகை பாடலையும் பாடுங்களேன் எனக் கேட்டேன், அவளுக்குப் பாடல் இல்லை எனக் கூறிவிட்டார். ஆனாலும் மண்டோதரிக்கான பாடலை பாடினார். மண்டோதரி இராவணனுடன் தர்க்கிக்கும் பாடலும், யுத்தம் முடிந்தபின் இழப்பின் துயரத்தால் அவள் பாடும் பாடலையும் பாடிக்காட்டினார். இறுதியாகக் கிஷ்கிந்தை பாடலையும் பாடி சந்திப்பை நிறைவு செய்தார்.
அதன் காணொளியை இந்த லிங்கில் சொடுக்கிக் கேட்டுப்பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=0tcwVO37JEI&t=4s
பல சரித்திரங்களை கொண்டிருக்கும் மட்டக்களப்பையும் எங்கள் விஜிசேகர் அம்மா அன்பையும் கண்ணீரோடு பிரிந்து நாங்கள் வவுனியா புறப்பட்டோம். வழியில் திருகோணமலையை சந்திக்கும் நோக்கில் கன்னியாவில் உள்ள சுடுதண்ணீர் கிணறுகளைப் பார்வையிட்டோம். இயற்கையாகத் தோன்றிய வெந்நீர் குளத்தை தடுப்பு கட்டி வசதி செய்திருந்தார்கள். ஆனாலும் சுடுதண்ணீர் என்று சொல்லும் அளவுக்கு அதில் சூடு இல்லை.
ராமேஸ்வரத்தில் இருக்கும் கிணறுகளில் நீராடுவது புண்ணியம் என்று சொல்வதுபோலயே இங்கும் சிலர் புண்ணியம் என்றும், நோய் தீரும் என்றும், உடம்புக்கு நல்லது என்றும் சொல்லி நீராடுகிறார்கள். வந்திருந்த பெண்ணியவாதிகளுக்கு அந்தக் கிணற்று குளியலும், புனித நீரும் அவசியப்படவில்லை. நீரின் தன்மையை உணரவும் நீண்ட பயணத்தின் களைப்பு நீக்கவும் தண்ணீரில் முகம் கழுவி கை கால்களைக் கழுவிக்கொண்டோம்.
அருகில் சிவன் கோயில் மூடிய நிலையில் இருந்தது. பூஜை எப்போதாவது நடக்கும் போலிருந்தது அதன் தோற்றம். ஆனாலும் எங்களின் கவனம் அந்தக் கோயிலின் முன்பு இருந்த சிதைந்த கற்குவியலின் மீது விழுந்தது. அதைப் பார்ப்பதற்கு சாதாரண கற்குவியல்போல இல்லை. புராதன சிவன் கோயிலாக இருந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், அதன் வரலாறு தெரியாததாலும் அதைக் கேட்பதற்கான சூழல் அமையாததாலும் புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். நாங்கள் வவுனியா சென்றடைந்த போது இரவு ஆகியிருந்தது. அங்கு சுவிஸ் " ஆதரவு " (SUPPORT) அமைப்பின் அங்கத்துவரும் றஞ்சி மற்றும் ரவியின் நண்பருமான ராஜன்( சுவிஸ்) அண்ணா எங்களை வரவேற்று உபசரித்தார்.
சுவிஸ் ராஜன் அண்ணா, நாங்கள் தங்குவதற்கான இடம் மற்றும் உணவு ஆகியவற்றைச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துகொடுத்தார். அவருக்கு இந்த வேளையில் நன்றியினை பதிவு செய்துகொள்கிறேன். (செய்துகொள்கிறோம்)
தொடரும்.. ஆறாம் பாகம் வாசிக்க
https://yogiperiyasamy.blogspot.com/2018/10/6.html