வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வெளிப்படும் உண்மைகள்

நான் வசிக்கும் அறையில்
கதவுகளோ ஜன்னல்களோ
இல்லை

வாசலும் குசினியும் கூட
இருந்ததாக ஞாபகம் இல்லை

நான் அறியாமலே நிகழ்ந்துகொண்டிருந்தது
அவ்வறையில் எனது
பிரவேசித்தலும் வெளியேறுதலும்

ஒரு முறை
எங்கிருந்தோ வந்த புயலின் வீரியத்தை
சமாளிக்க தெரியாத
அறையின் கூரை
கழன்று பறந்தது

அப்போதுதான்
இல்லை என்று நான் நினைத்திருந்த
கதவுகளும் ஜன்னல்களும்
தன்னை வெளிக்கொணர்ந்து கொண்டிருந்தன..
மிக மெதுவாய்.

வியாழன், 28 ஏப்ரல், 2016

முதல் கவிதை

சாத்தானின் ஓவியம்

சைத்தான் ஒன்று
என்னிடம் அனுமதி வாங்கிக் கொண்டே
என் உடலில் புகுந்தது
எதற்கோ முடிவைக் கட்டிவிட எண்ணி
தேடியதில்
விரலில் சிக்கியது பென்சில்
எதையோ கிறுக்கித் தள்ளியதில்
முழுமை அடைந்து வெளிபட்டது
ஒரு மகாத்மாவின் ஓவியம்
இமைகள் உடைந்துவிடும் அளவுக்கு
உயர்ந்தும் தளர்ந்தும்
தர்கம் செய்கிறது
சாத்தானின் சேட்டைகள்
வரைந்ததை அழித்த போது
மெல்ல மெல்ல
என் உடலைவிட்டு வெளியே வந்து
வானத்தில் பறந்தது சாத்தான்
என்னிடம் தோற்றபடி...
-யோகி (2006)
ஜூன் 2006-ஆம் ஆண்டு காதல் என்ற மலேசிய சிற்றிதழில் வெளிவந்தது இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் வழிதான் எனது இலக்கிய பயணம் அதாவது நவீன இலக்கிய வெளிக்குள் எனது பயணத்தை தொடங்கினேன்.

இந்தத் தெளிவு எனக்குள் வந்ததற்கு கவிஞர் மனுஷப்புத்திரனும் ஒரு காரணம். அதை சொல்வதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மலேசிய கவிஞர் அகிலன் லெட்சுமணனின் மூட்பு புத்தக வெளியீட்டிற்கு வந்திருந்த போதுதான் அவருடனான இலக்கியஉரையாடலில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. எனக்கு நவீன இலக்கியம் தெரிந்திருக்கவில்லை. மனுஷின் கவிதைகள் வாசித்திருந்தும் அதை விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அப்போது இல்லை. சந்திப்பிற்குப் பிறகு, எனக்குள் போர்த்தியிருந்த திரை விளகியிருப்பதை உணர்ந்தேன். அன்றைய இரவே மீண்டும் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். 

விளங்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. என் புரிதல் சரிதானா? மீண்டும் மனுஷின் உரையை கேட்பதற்கான வாய்ப்பு அமைந்தது. மூன்றாவது முறையும் அமைந்தது. கவிதைக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை தேரிந்துக்கொண்டேன். மனதில் ஏற்பட்ட பாதிப்பை எழுத தோன்றியது. எழுத்து வரிகளாக வந்தது. வரிகள் கவிதையானது. கவிதை அச்சில் ஏறியது. இன்று வரலாறாக இருக்கிறது. 

இந்தியக் கார்ட்டூனீஸ்ட் ஓவியர் மெட்

எனக்கு அறிமுகமான முதல் இந்தியக் கார்ட்டூனீஸ்ட் ஓவியர் மெட் தான். அவரது கார்ட்டூன்கள் உண்மையில் தனித்துவமானது. மலாய்க்காரர்களின் பாணியில் அதாவது ‘gila-gila’ ‘ujang’ போன்ற மலாய் கார்ட்டூன் நகைச்சுவை புத்தகங்களில் வருவதைப் போன்று இருந்தாலும் மெட் உடைய கார்ட்டூன்கள் இந்தியப் பின்னணியைக் கொண்டதாக இருக்கும். அவருடைய மெயின் கதாப்பாத்திரங்கள் தவிர்த்து 'சப்போர்ட்' கதாபாத்திரங்களும் கவனிக்ககூடியதாக இருக்கும். எதுவும் ஊர்ந்து பார்க்காதவரை அதில் இருக்கும் தீவிரம் நமக்குதெரியாது. மேலோட்டமாக பார்க்கையில் நகைச்சுவை மட்டுமே தெரியும். மெட்-டின் ஓவியத்தைப் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் உதடு விரிய ஒரு புன்னைகையை உதிர்க்காமல் போக முடியாது. அது அவருடைய தனித்துவமான டச் என்றும் சொல்லலாம்.
‘கார்ட்டூனிஸ்’ அல்லது ஓவியர் மெட் தனது இளமைக்காலத்தில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர்தான். ஆனால், அவரைத் தமிழ் ஊடகங்கள் சரியாகப் பயன்படுத்தவுமில்லை. அதற்கான முயற்சியை ஓவியர் ‘மெட்’டும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
இன்று ‘மெட்’டின் வெளிவராத கார்ட்டூன்கள் அவரின் தூரிகைகள் அடைக்காத்துக்கொண்டிருக்கின்றன.
நல்ல திறமையான ஒரு கார்ட்டூனீஸை மலேசிய மக்கள் எப்போது அங்கிகரிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஒரு புறமிருந்தாலும் ஓவியர்களுடனான அல்லது கார்ட்டூனீஸ்களுடனான நட்பு மலேசிய இந்திய ஓவியர்களிடத்தில் உள்ளதா என்று கேட்டால் ஆள் ஆளுக்கு முகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 'Mad'e in Malaysia' என்ற ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வெளியிட்டு அதோடு முடங்கியிருக்கும் ஓவியர் மெட் ‘மீண்டு’ம் வர வேண்டும் என்பது ஒரு தோழியாகவும் சகோதரியாகவும் ஆவல் கொள்கிறேன்.

தெரு ஓவியம்..


தெரு ஓவியர்கள் என்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் வரும் street artist என்பவர்களை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஏறக்குறைய மலேசியர்களுக்குக் குறிப்பாக மலாய் சமூகத்தினரிடத்தில் தெரு ஓவியர்கள் குறித்த புரிதல்கள் சிறிதாவது இருக்கிறது எனலாம். தலைநகர் வாசிகளைத் தவிர்த்து மற்றவர்கள் எப்படி இந்தக் கலையைக் காண்கிறார்கள்? அவர்களின் எண்ணத்தில் தோன்றுவது என்னவென்பது கொஞ்சம் ஆய்வு செய்யத்தான் வேண்டியுள்ளது.
எனது இந்திய, இலங்கைப் பயணங்களில் தெரு ஓவியங்களை எங்கும் காணவில்லை. அதுவும் தமிழ்நாட்டுப் பயணங்களில் சுவர்களில் பனியன் விளம்பரத்தையும், சிமெண்ட் விளம்பரத்தையும் சில இடங்களில் திருக்குரள் மட்டுமே காண முடிந்தது. பல சுவர்கள் சிறுநீர் கழிக்கும் கழிப்பிடங்களாகத்தான் இருக்கின்றன.
அண்மையில் டிஸ்கவரிச் சேனலில் பம்பாய் நகரின் சுவர் ஓவியர்கள் குறித்துச் சில நிமிடங்கள் காட்டினார்கள். ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து மாநிலத்தில் புழக்கத்தில் இருக்கும் இந்தப் பழக்கம் ஏன் தமிழ்நாட்டுக்கு இன்னும் வந்து சேரவில்லை என்றுதான். இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் தெரு ஓவியர்களின் கலாச்சாரம் ஒன்று போலவே எங்கும் உள்ளது என்பதுதான். நாடு, மொழி, இனம், கலாச்சாரம் என மொத்தமாக வேறுபட்டிருந்தாலும் இவர்களில் கொள்கைகள், வரையும் பாணி எனப் பல விஷயங்கள் ஒன்று படுகிறது.
தெரு ஓவியர்கள் தனக்கான அங்கீகாரத்தை எங்கும் தேடுவதில்லை. அதைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதுமில்லை. தேவையெல்லாம் வரைவதற்கான சுவரும் ஸ்ப்ரேயும்தான். மலேசியாவைப் பொருத்தவரை தெரு ஓவியர்கள் வரைவதற்கு இரவு நேரத்தைத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவர்களின் கருப்பு நிழகள் அசைய வண்ணங்களில் சாம்ராஜியத்தை நடத்துகின்றனர். விடிவதற்குள் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். திரும்பவும் அவர்கள் அங்கு வருகிறார்களா என்பது தெரியவில்லை.
பெரும்பாலும் கார்ட்டூன் பாணியில் அமையப்பெரும் தெரு ஓவியங்களில் அவ்வப்போது நாட்டு நடப்பையும், அதனால் ஏற்படும் அதிருப்திகளையும் சில ஓவியர்கள் வெளிப்படுத்துவதுண்டு. குறிப்பாகப் பிரதமரைப் பகடிச் செய்யும் ஓவியங்கள் அதில் அடங்கும். ஆனால், அவை சட்டத்திற்குப் புறம்பான செயல்களாகக் கருதப்படுவதால் மாநகர மன்றம் அதை ‘துடை’த்தொழிக்கும் வேலையில் ஈடுபட்டு அழித்து விடும் என்பது தனிக்கதை.
நான் இதுவரை ஓர் இந்திய ஓவியரையும் தெரு ஓவியர்களாகக் கண்டதில்லை. எந்த ஒரு ச்கெச்சும் போடாமல் மனம் போகும் போக்கில் மூளைக்கு வேலைகொடுத்து நுனுக்கமான ஓவியங்களைத் தெரு ஓவியர்கள் அசால்ட்டாகப் படைக்கிறார்கள். இது மலேசிய தலைநகரை அலங்கரிக்கும் சில தெரு ஓவியங்கள்.
நான் மலேசிய தெரு ஓவியர்களைச் சந்தித்திருக்காவிட்டாலும், மலேசிய இந்தியக் கார்டூனீஸை சந்தித்திருக்கிறேன். 

ஜிப்ரானுக்கு ஓரு கடிதம்

அன்பின் கலீல் ஜிப்ரான்...

நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன் என நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் இல்லையா? உண்மையில் நானும் அதை எதிர்பார்க்காத ஒன்றுதான் ஜிப்ரான்.
பிறருடைய கடிதத்தை மட்டுமல்ல, பிறருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் தலையிடக்கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால், இன்று உங்களுடைய கடிதத்தை மட்டுமே வாசித்துக்கொண்டிருக்கிறேன். கிட்டதட்ட 50 கடிதங்கள். 

கனவுகளைப் போல மறைந்து போன அந்த நாட்களின் காட்சிகளை நீங்கள் கடிதத்தில் வகைபடுத்தி இருப்பது என்னையும் சேர்த்து வதைத்துக்கொண்டிருக்கிறது. உங்களுடைய சகோதரர் நகிலுக்கு எழுதிய கடிதத்தில் "மனதில் சோகத்தை உருவாக்கும் அந்தக் கடந்த கால நினைவுகளை நிரந்தரமாக வைத்துக்கொண்டிருப்பேன் என்றும் இதயத்திலுள்ள சோகத்தை எதற்கு ஈடாகவும் தர மாட்டேன்" என்றும் கூறியிருந்தீர்கள்.
அறிவீர்களா ஜிப்ரான், கலைஞர்கள் சோகத்தை கொண்டாடுபவர்களாகவே இருக்கிறார்கள். உங்களை போலவே.
எனதன்பு ஜிப்ரான்...
நீங்கள் மே-க்கு எழுதிய கடிதங்களிலெல்லாம் பாரிசுக்கு பயணம் போவதுபற்றி நிறைய எழுதியிருக்கிறீங்கள். நான் செல்ல நினைக்கும் கனவு நாடும் அதுதான். வாழ்க்கை சாம்பல் போன்ற வெறுமை நிறைந்தது என்று நீங்கள் குறிப்பிட்டது மட்டும் எனக்கு வருத்ததை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் சாம்பல் நிறத்தை கொண்டாடுபவள் இல்லையா?
1921-ஆம் ஆண்டு போஸ்டனில் இருந்த மீஷாவுக்கு எழுதிய கடிதத்தில் பைத்தியக்கார நிலை பற்றி எழுதியிருந்தீர்கள். பைத்தியக்கார நிலை என்பது அருமையான செய்தி என்று நீங்கள் கூறியதை படித்தவுடன் முதலில் சிரித்துவிட்டேன். ஆனால், "பைத்தியக்காரத்தனம் என்பது, தன்னலம் இல்லாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லும் பாதையில் முதல் அடி எடுத்து வைப்பதைப் போன்றது. பைத்தியக்காரராகவே இருந்து விடுங்கள்" என மீஷாவுக்கு கூறியது நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு கூறும் ஆலோசனையாகவே நினைக்கிறேன்.

இந்த 50 கடிதங்களில் நீங்கள் ஒன்றையாவது செல்மாவுக்கு எழுதியது இருக்குமா என தேடிப்பார்க்கிறேன். ஒன்றுக்கூட இல்லை. ஆனால் பெய்ரூட் நகரில் நீங்களும் செல்மாவும் ரகசியாம சந்தித்துக் கொள்ளும் அந்த பழைமையான கோயில் பற்றி அறிவேன். ஏழு நிர்வாண கன்னியர்கள் சுற்றியிருக்க அரியணையில் அமர்ந்திருக்கும் காதல் தேவதை இஷ்தாரை நீங்களும் செல்மாவும் எத்தனை முறை வணங்கியிருப்பீர்கள். உங்களின் நிறைவேறாத காதலை நினைத்து வருத்தப்படாதவர்கள் இந்த நூற்றாண்டில் இல்லை என நினைக்கிறீர்களா ஜிப்ரான்...
இனியவனே ஜிப்ரான்...
உங்கள் கடிதங்களை பொக்கிஷம் என பாதுகாக்கவிருக்கிறேன். நான் உங்களுக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதத்திற்கான பதில் கடிதம் இந்த 50 கடிதங்களில் ஒன்றாக மறைந்துகிடக்கலாம். அது கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருக்கிறேன் உங்களை....
-யோகி
குறிப்பு: பன்முக ஓவியம் (கடிதங்கள்)
எழுதியவர் : கலீல் ஜிப்ரான்
வெளியிடு: கண்ணதாசன் பதிப்பகம்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

காமம்..

காமம் 1
காளி கோயிலில் பலியிட்டஆட்டின் கண்களிலிருந்து
பிரியும் உயிரைப்போல
துளிர தொடங்குகிறது
காமம்...

காமம் 2
சிதையில்
வெந்து மீந்த
அஸ்தியைப்போல
சாம்பலாய்
ஆறிக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 3
தட்டாணின்
உடல்நுனியில்
கட்டிய நூலில்
அறுந்து விழும் -அதன்
சிறு பாகம் போல
அறுந்து விழுகிறது
ஒரு துண்டு
காமம்...

காமம் 4
பூக்கும் வியர்வை
துளிகளைப்போல
தெறித்து அடங்குகிறது
காமம்....

காமம் 5
தாழையைக்
கழிக்கும்போது
எழும்
பச்சை வாசனையைப் போல
மனம் எங்கும்
மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 6
ஓவியனின்
பிழையான ஓவியம்போல
தன்னை தானே
திருத்திக்கொண்டிருக்கிறது
காமம்...

காமம் 7
தலைப்பிரட்டைகளை
கண்ணாடி குடுவையில்
மிதக்கவிட்டு
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
காமத்தை





"யோகி" எல்லையில்லா வானம்



"யோகி" எல்லையில்லா வானத்தை பனித்துளியொன்று அறிமுகப்படுத்துவதாய் உணர்கிறேன் 
என்றாலும், ஞானக்குகையில் சாதமின்றி மூழ்கியிருப்போருக்கு இவளைக்கண்டால் ஒரு பெருமூச்சாவது வெளியாகிடலாம் என்ற ஆவலில்..
இவள் ஒரு விருட்சம். எல்லையில்லா பரிமாணங்கள் கொண்டவள்.
மனிதத்தை மையாக்கி எழுதுபவள்
-பரீட்சன் 
ஏப்ரல் 20 
நேரம் மாலை 6.13
------------------------------------------------------------------
நான் கரைய தொடங்கியிருக்கிறேன்
அது பனியோ அல்லது
குழந்தைகள் உண்ணும் ஐஸ்கிரீம்
மாதிரியோயான கரைதல் அல்ல
ஒரு பாறையில்
சின்ன எறும்பு ஊர்ந்து
கரைதல் மாதிரியான கடினமானது
சொல்வதற்கு வேறெதுவும்
இல்லை எனும்படியால்
யாரும் கேள்விகள் கேட்பதற்கு முன்
நான் கரைந்துவிடுகிறேன்
குழந்தை ஒன்று 'அ' வை
தவறாக எழுதிவிட்டதாக
அழித்துக்கொண்டிருந்தது...
-யோகி-

நன்றி பரீட்சன்
https://www.facebook.com/profile.php?id=100010263431411&fref=ts

யோகி என அழைக்கமாட்டேன் எனது யட்சியை (- தேன்மொழி தாஸ்)

'யட்சி'  யோகியின் முதல் கவிதை தொகுப்பு . தேக்குத் தோப்பின் தலைக்கனமற்ற சருகுகள் மேல் இக்காலை தனது வசீகர ஒளியை தெளித்துக் கொண்டிருக்கையில் வாசிக்கத் துவங்கினேன். யட்சியின் கால்கள் மிக இரகசியமானவை எனச் சொல்லியபடி "யட்சி" அமர்ந்தாள்.
யட்சியின் மொழி சிறகடித்துக்கொண்டே காற்றையும் கடந்து, உண்டு, உயிர்க்கும் வெளி. யட்சி தன்னை யட்சியாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறாள். இப்படித்தான் அவளது மூலச்சிறகை மொழியினால் கோதுகிறாள். தனது கூட்டுக்குள் பிசாசும் திருடனும் மறைந்திருப்பது பற்றியும், தரும் இம்சை பற்றியும் யாரோடும் பகிர்ந்து கொள்ள மனமின்றி கவிதையின் பூமியில் புதைக்கிறாள். யட்சியின் கருவறை அறுபடுவதையும், கேள்வியாக்கப்படுவதையும் எண்ணிப் புன்னகைக்கிறாள். யட்சியின் நிலம் யாரால் வடிவமைக்கப்பட்டாலும் அதனை பெருநிலமாக்கி பின் வனமாக்கி யட்சியாகவே அமர்கிறாள். கடவுள், மிருகம், சாத்தான், மனிதன் என எல்லோரிடமும் மிக எளிமையான கேள்வியை கேட்கும் யட்சியிடம் தனது கூடு போல் மிக நேர்த்தியான சில பதில்கள் இருப்பதை பாடுகிறாள் .
'முன்னொரு காலம் இருந்தது 
அது வரையறுக்கப்பட்ட காலம்'

என ஒலிவமரத்து இலையோடு ஆதியில் ஆபிரகாமிற்காய் வந்த புறாவைப் போல் பேசுகிறாள் .

'என் பாதையை
என் பயணத்தை
என் நடனத்தை
பிறர் முடிவு செய்தால்
அவை என் கால்கள் அல்ல'

என தன் கால்களால் நடக்கிறாள். அவளிடம் சாத்தான் ஆசீர்வதித்து அனுப்பிய பெட்டியும் இரகசியமான நாட்குறிப்பேடும் உண்டு .
ஒரு நாளும் யோகி என அழைக்கமாட்டேன் எனது யட்சியை.
ஏனெனில் யட்சியின் ஆன்ம உணவு அவள் சிறகின் சுதந்திரம் தான் . வானத்தின் தூண்களை அறிந்தவன் யார்?
வானத்தை முழுதாய் வரையப்போகிறவன் யார்?
கவிதை உலகமும் முடிவற்றது. 
பறந்து பாடு யட்சி
மனம் நிறைந்த வாழ்துகள்

- தேன்மொழி தாஸ். 25.3.2016
'யட்சி' - உயிர்மை பெருமையுடன் சமீபத்தில் வெளியிட்ட பத்து கவிதை நூல்களுள் ஒன்று .
நன்றி 

கவிதையும் தேன்மொழி தாஸும் வேறல்ல

புத்தகம்: நிராசைகளின் ஆதித்தாய் (கவிதை தொகுப்பு) 
ஆசிரியர்: தேன்மொழி தாஸ்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

தேன்மொழி தாஸ், எளிமையான தோற்றம், தன்னலமற்ற உபச்சரனைகள், கலங்கமில்லாத சிரிப்பு. இப்படியாகத்தான் அறிமுகமானார் கவிஞரும் பாடலாசியருமான தேன்மொழி தாஸ். மிக அண்மையில் உயிர்மை வெளியீடாக அவரின் ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. அது அவரது நான்காவது கவிதை தொகுப்பாகும். அன்றைய தினம்தான் முதன்முதலாகத் தேன்மொழி தாஸ் எனக்கு அறிமுகமானார். அவரைவிடவும் அவரின் கவிதைகளில் நமக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. தேன்மொழி தாஸின் கவிதைகளைக் குறித்துப் பேசினாலே தேன்மொழி தாஸ் யார் என்பதைக் கண்டுக்கொள்ளலாம். 
மேற்குறிப்பிட்ட அந்தக் கவிதைத் தொகுப்பில் மொத்தம் 34 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2008-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டுக் கால இடைவெளியில் தனது சிந்தனையில் உதித்த, தன்னைப் பாதித்தவைகளை அவர் தமது கவிதையில் பேசியுள்ளார். முக்கியமாகத் தமது கவிதையின் வரிகளுக்கு வலுச் சேர்க்க இயர்கையைப் புனைவாகக் கையில் எடுத்து அதில் சொற்களைக் கோர்த்திருக்கிறார். அந்த வரிகள் நம்மிடம் கேள்விகளை எழுப்புகின்றன; தர்கம் செய்கின்றன; சில வேளைகளில் அதிலிருந்து கடக்கவிடாமல் ஸ்தம்பிக்க நிற்கவிடுகின்றன. பல கவிதைகள் துயரங்களையே பேசுகின்றன. தொடக்கவரிகளிலிருந்து வாசிக்கும் போது உங்கள் கவிதைகள் பேசிக்கொண்டிருக்கும் ஒன்று தொடர்ந்து அதன் வரிகள் மாறுபட்டு வேறு ஒன்று பேசப்படுவதாக உணர நேர்கிறது. மீண்டும் ஒரு முறை மறுவாசிப்புச் செய்யும் போது வேறு ஒரு புரிதலைத் தருகிறது. இப்படியான நிலை ஏற்படுவதற்கான காரணம் என்ன?” என்று நான் தேன்மொழிதாஸிடம் ஒரு முறை கேட்டேன்.
“நான் என்னேரமும் கவிதை வரிகளுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். சராசரியாக 20 கனவுகள் என்னைச் சூழ்ந்தபடி உள்ளன. அதனோடு நடக்கும் எனது சஞ்சாரங்கள் சில வேளைகளில் கவிதைகளாகவும் உயிர் பெறுகின்றன. ஆனால் அவை கவிதைகளைக் குழப்புவதில்லை. நான் என் கவிதைகளைத் திட்டமிட்டு எழுதுவதில்லை. என் மனநிலையைத்தான் எழுதுகின்றேன். அவை எனக்கு மிக எளிமையானக் கவிதைகளாகத்தான் உள்ளன. மேலும்இ ஓரு வாசிப்பாளினியாக நீங்கள் அப்படிப் புரிந்துக்கொண்டால் அப்படியான கவிதைகளைப் புனைவது தேன்மொழி தாஸின் பாணி என எடுத்துக்கொள்ளுங்களேன்” என்றார். அப்படியாயின் தேன்மொழி தாஸின் கவிதைகள் தனித்துவம் வாய்ந்ததுதான்.

‘உன் வீட்டின் உச்சியில் தங்குகிற 
மேகத்தோடு தவித்ததையும் 
இளமை யாராலும் மீட்டெடுக்க இயலாத 
வெறுமைக்குள் இடறியதையும் 
ஒரு மெல்லிய அப்பத்தை 
விழுங்குவதெனச் சுவைத்துக்கொள்’ 
என எதார்த்தத்தைப் பேசிக்கொண்டிருக்கும் போதே 
‘நான் என் நாய் குட்டிகளின் கண்களுக்குள் 
வசிப்பதில் நிறைவுறுகிறேன்’
என்கிறார். தொடர்ந்து தன்னுடைய வாழ்கையில் உடன் வரும், தொடர்ந்து பயணம் செய்யும் யாரையும் கவிதைகளில் அடக்கி அவர்களுக்கென்று தனியிடத்தைத் தந்துவிடுகிறார் தேன்மொழி தாஸ். குறிப்பாக அவர் கவிதைகளில் வரும் நாய்குட்டி. தன் அன்புக்கு பாத்திரமான அந்தச் செல்ல நாய்குட்டி இறந்து விடுகிறது. அல்லது அதன் மரணம் ஒரு விபத்துபோல நிகழ்ந்துவிடுகிறது. அதன் பிரிவையும் துயரத்தையும் பல இடங்களில் தன்னிச்சையாகப் பதிவாகிவிடுவதைக் கவிஞரால் தவிர்க்க முடியவில்லை.
‘வீட்டுக் கதவைத் தட்டிய விரல்கள் 
என் இளமையோடு உதிர்ந்து விட்டன 
வெகு தூரம் வந்துவிட்டேன் 
அறிவு தெளிவு நிதானம் 
மிக நீண்டதொரு மௌனம் 
எல்லாவற்றையும் ஒரு மரத்தினடியில் 
இறந்த என் நாய்க் குட்டியைப் போல் புதைக்கிறேன் 
இப்போது உங்களுக்குப் புரியக்கூடும் 
என் மனது தவிர மற்றவை மரித்துப் போனதும்’
என்கிறார். ‘பில்லியன் ரகசியமாய்க் கொல்லப்பட்டவன்’ என்ற கவிதை மிக வலி நிறைந்த கவிதையாக இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. முக்கியமான கவிதை என்றும் அதைக் கூறலாம். பில்லியன் எனும் மகன் மெர்சியால் கொல்லப்படுகிறான். மகனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என அறியாத தாய் அது குறித்து ஒரு மாதத்திற்குப் பிறகு அறிகிறாள். ஒரு மாதத்திற்குப் பிறகு மெர்சியை விவரிக்கச் சொல்லி அந்த மரணத்தைக் கேட்டறிகிறாள். அப்போது அவள் மெர்சிக்கு உணவை பரிமாரிக்கொண்டிருக்கிறாள். 
இந்தச் சம்பவங்களை ஒரு காட்சி படிமமாக நினைத்துப்பாருங்கள். இதயம் பதற்றமாவதை உணர முடிகிறது இல்லையா? அந்தச் சம்பவத்தில் பங்கு பெற்றிருக்கும் தேன்மொழி தாஸ் அதிகாலை 3.13 மணிக்கு மீளா அத்துயரத்தை கவிதையில் எழுதி கடந்துவந்திருக்கிறார்.
ஃதேவதைகளின் ஆடைகளாய் அவிழ்ந்து விழுகின்றன 
சாம்புராணி மரத்துப் பூக்கள்ஃ
ஃஆலி மழை பெய்யும் தூவானக் காடு 
உறைந்த மழையின் பண்டகசாலைஃ 
ஃதனிமையைத் தண்ணீரெனக் குடித்து 
எளிமையாய்க் கடக்கிறது என் காலம்ஃ 
ஃஇன்றைக்கும் நட்சத்திரத் துளிகளென 
கண்ணீர் பெருகுகிறதுஃ 
ஃஎனது கண்ணீர் துளிகளை 
பறவைகளாகப் பறக்க விட்டிருக்கிறேன்ஃ
இப்படியாக ஒவ்வொரு கவிதையிலும் இயற்கைகளை ஒன்றுகூட்டி தன் துயரத்திற்கு மருந்து கட்டியிருக்கிறார் கவிதாயினி. தனது கனவுகளில் வரும் கதாப்பாத்திரங்கள் தன்னுடன் துயரங்களைப் பேசுவதாகவும் அவர்களின் துயரங்களுக்குக் காரணம் தெரியவில்லை எனத் தேன்மொழி தாஸ் கூறிய போது கனவுகள் சரியான மருந்தைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறது என எனக்கு நினைக்கத் தோன்றியது. தேன்மொழி தாஸின் கவிதைகளில் வரும் சூசன், லத்தா, ஜெசி, சூனு போன்றவர்கள் வாழும் கதாபாத்திரங்களாக இன்னும் அவரோடு பயணம் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய இருத்தல் மட்டுமல்லாமல் உடன் பயணிப்பவர்களையும் ஒரு புகைப்படம்போலக் கவிதையில் பதிவு செய்திருப்பது அழகு. செவிலியர் பட்டப்படிப்பு முடித்திருக்கும் தேன்மொழி தாஸ் கவிதை, சிறுகதை, சினிமா, தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விருதுகளையும் பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். பல சவால்களுக்கிடையில் தொடர்ந்து தன் எழுத்துகளால் இயங்கிக்கொண்டிருக்கும் தோழி தேன்மொழி தாஸ் தொடர்ந்து கொண்டாட்ட நிலைகளையும் பதிவு செய்ய வேண்டும். நிறைய துயரங்கள் அடங்கிய வரிகள் நாளடைவில் வாசகருக்கு சலிப்பு தட்டலாம். என்னேரமும் தனது கவிதை உலகில் நிரந்தரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தோழிக்கு வாழ்த்துகள்.
யோகி
(மலேசியா)
நன்றி ஊடறு

வியாழன், 7 ஏப்ரல், 2016

கொடைக்கானல் நாட்கள் 1

மார்ச் 16
 ஊட்டியைப் போலவே மிக அழகான ரம்மியமான இயற்கை அழகை கொண்டுள்ளது கொடைக்கானல். எனது இரண்டு நாள் கொடைக்கானல் திட்டமிடலில் சென்னையிலிருந்து கொடைக்கானல் போய்ச் சேர்வதற்கே ஒரு நாள் முழுசாக முடிந்தது. அடுத்த ஒரு நாள் முழுக்கக் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தேன். சுற்றிக் காட்டுவதற்காகவே அங்கே ஏகப்பட்ட வசதியிருக்கு. வண்டியோடு ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஒரு நாள் முழுக்கச் சுற்ற நியாமான விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. 
தற்போது கோடைகாலம் பிண்ணியெடுப்பதால் அத்தனை குளுமையைக் கொடைக்கானலில் உணர முடியவில்லை. ஆனால் அந்த மலையைக் கடக்கும்போது அத்தனை குதூகலமாக இருந்தது. எங்க ஊர் கெந்திங் மலையில் ஏறுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் அந்தச் சாலை வளைவுகள் அத்தனை பாதுகாப்பானதாகத் தெரியவில்லை என்றாலும் சாலையைத் தினமும் பயன்படுத்துபவர்களுக்கு அதன் வளைவு சுழிவுகள் நன்றாகத் தெரிகிறது. அது ஒரு சாகசம்தான் என்னைப் போன்ற சுற்றுலாப்பயணிகளுக்கு. அதுவும் அரசு பேருந்தில் செல்ல வேண்டும். அந்த ஓட்டுனரின் திறமையும் ஹோர்ன் சத்தமும் இப்போது நினைத்தாலும் எந்தப் பாரபட்சமும் இல்லாமல் கேட்க தொடங்கிவிடுகிறது எனக்கு.
சாலையின் வளைவில் இருக்கும் டம்டம் பாறையின் அருகே வண்டியை நிறுத்துகிறார்கள். எத்தனை உயரத்தில் இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கோடைவெயிலிலும் மலைகள் பச்சை ஆடைக்கட்டி நமக்குக் காட்சி கொடுப்பது அத்தனை இன்பமாக இருக்கிறது. அங்கிருந்து தொலைவில் எங்கே ஓரு நீர் வீழ்ச்சி பாய்வதை ஒற்றை வெள்ளை கோடுபோல அல்லது மலைமகள் ஒரு வெள்ளை தாவணி கட்டி வந்ததுபோல அதை எப்படி வர்ணிப்பது எனத் தெரியவில்லை எனக்கு.
முன்பு அந்த இடத்தில் இளைப்பாற அழகாகப் பராமரித்திருக்கிறார்கள். இப்போது அந்த இடம் பராமரிப்பின்றி உள்ளது. அங்கிருக்கும் டீக்கடையில் டீ வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் தடுப்பு சுவர்மேல் அமர்ந்து அந்தக் காட்சியை ரசிக்க வேண்டும்.

அடுத்து நான் வெள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்றேன். அந்த நீர்வீழ்ச்சிதான் கொடைக்காலின் Landmark-க்காக இருக்கிறது. வெள்ளி நீர்வீழ்ச்சிதான் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளைச் சாரலைத் தூவி வரவேற்கிறது.

அதற்கு முன்பு இந்தப்பயணத்தில் பனிகரையைக் கடக்கும்போது, காட்டெருமைகளைக் காண முடிந்தது. ஆனால், சாலை வளைவில் இருந்த முனீஸ்வர ஆலயம்தான் என் கவனத்தை ஈர்த்தது. சிறுதெய்வ வழிபாடு செய்பவர்கள் பாணியில் அங்கு வழிபாடு நடப்பதற்கான சான்றுகளை காண முடிந்தது. திருவிழா நடந்ததற்கான விஷயங்களும் தெரிந்தது. சுற்றிலும் நம்மை ஆக்கிரமித்திருந்த வனத்தில் எங்கும் அமைதியாக இருந்தாலும் வாகனங்கள் எழுப்பும் சத்தம் பெரிய இடைஞ்சலாகத்தான் இருந்தது.
அடுத்து வண்டி வெள்ளி நீர்வீழ்ச்சியில்தான் நின்றது. கொஞ்சம் மழை பெய்து விட்டிருந்ததால் நீர்வீழ்ச்சியில் கொஞ்சம் தண்ணீரோட்டம் இருந்ததாக அங்கிருந்தவர்களிடம் உரையாடுகையில் தெரிய வந்தது. மிக அழகான அந்த நீர்வீழ்ச்சியில் முன்பெல்லாம் குளிக்க அனுமதித்திருந்தார்களாம். இப்போது அனுமதியில்லை. ஏதோ ஒரு பாதரச தொழிற்சாலையின் கழிவு இந்த நீர்வீழ்ச்சியோடு கலப்பதாகவும் அதனால் தோல்வியாதி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தால் போராட்டங்கள்கூட நடந்ததாம். இப்போ வெறும் பார்வைக்கு மட்டுமே இருக்கிறது. மிக வேதனையான விஷயம் இது. அந்த நீர்வீழ்ச்சியின் ஊற்று பார்க்க அகன்றும் பரந்தும் இருந்தது. ஆனால் தண்ணீர் ஒரு கயிறு அளவே கொட்டிக்கொண்டிருந்தது.
சிலர் அருவியின் முன் நின்றுப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். எனக்கு அருவிக்கு முன் காப்பி டீ, கேரட், கடலை என்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடத்தில் ஆர்வம் சென்றது. சுடச்சுட முட்டை வறுவல் செய்து கொடுக்கிறார்கள். அத்தனை சுவையாக இருக்கிறது. பெண்கள் தரையில் உட்கார்ந்தோ அல்லது நாற்காலியில் அமர்ந்தோ வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் பொருள்களை வைத்திருக்கும் மேல் இடத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்களை அப்படியே கூவியழைக்கிறார்கள். விறகு உள்ளிட்ட கடைக்குத் தேவையான பொருள்களை மூட்டையாகக் கட்டி அவர்களே சுமந்து வருகிறார்கள். வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருள்கள் சுத்தமாகவும் புதுசாகவும் இருந்தது. முட்டை வறுவலையும் காப்பியையும் சுவைத்துவிட்டு கிளம்பினேன். 


(தொடரும்)