வரலாற்றுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாற்றுக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஏப்ரல், 2022

Anarchism தோழர்களால் மலாயாவில் முதல் மே தின பேரணி நடந்தது

தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம் அல்லது மே தினம் என்பது உழைக்கும் மக்களுக்காகவும், இப்படி ஒரு தினம் கொண்டாடுவதற்கு காரணமானவர்களின் வரலாற்றை நினைவுக்கூர்ந்து மனுசரிக்கும் ஒரு நாளாகும் முன்னெடுக்கப்படுகிறது. நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல தொழிலாளர் தினம் என்பது ஒரு நாள் பொது விடுமுறையோடு முடிவதில்லை. 8 மணிநேர வேலை, உழைப்புக்கேற்ற சம்பளம் இந்த அடைப்படைத் தேவைகாக புரட்சி வெடித்தது. அதன் காரணத்தினால் சில தொழிலாளர்களின் உயிர்களும் காவுக் கொள்ளப்பட்டது. அந்தத் தியாகத்தின் மீது நின்றுக்கொண்டுதான் நாம் உழைப்பாளர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தோழர்களே உங்களுக்கு எங்களது நாட்டில் எப்போது-எங்கு முதன் முறையாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது என்ற வரலாறு தெரியுமா?      

ஒவ்வொரு ஆண்டும், மே 1 ஆம் தேதி பன்னாட்டு ரீதியில் கொண்டாடும் தொழிலாளர் தினம் அல்லது மே தினம், முதன்முறையாக  மலாயாவில் 1921- ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தின்  ஈப்போ நகரில் இடதுச்சாரி தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது.  முதல் தொழிலாளர் தினம் அல்லது நாட்டின் முதல்  மே தினம் கூட்டத்தில் ஈப்போ நகரின் தொழிலாளர்களும்              மாணவர்களும்   கலந்து கொண்டனர் என்பது வரலாறு.

முதலாளித்துவத்தின் ஆதிக்கம் என்பது, உழைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் எல்லாம் தலைவிரித்தாடியது. பிரிட்டிஷ் பிடியில் இருந்த எங்கள் நாடு, அவர்களிடம் சிக்கியிருந்த காலத்தில் தொழிலாளர் தினமெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான்  1908- ஆம் ஆண்டு, மலாயாவில் சீனாவைக் அடிப்படையாகக் கொண்ட Anarchism என்கிற அரசு மற்றும் நாடு மறுப்பாளர்கள் குழு உருவானது.

கிளர்ச்சிக்காரர்களாக அறியப்பட்ட இவர்கள் புரட்சிகரமான சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபட்டனர். 1918 ஆம் ஆண்டு, இந்த அமைப்பின் கிளைகள்  Truth Society என்ற பெயரில் சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் ஈப்போவில் நிறுவப்பட்டு, சீன மொழியில் எழுதப்பட்டிருந்த இந்த அமைப்புச் சார்ந்த தத்துவங்களும் செய்திகளும் படைப்புகளும் மக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

 மலாயாவில் வெளியிடப்பட்ட Anarchism அமைப்புச் சார்ந்த சில புரட்சிகரமான புத்தகங்களின் தலைப்புகள் இவை :

"அரசின்மையும் சோசலிசமும்" (Anarchism and Socialism)

"ரசின்மை தத்துவம் மற்றும் கருத்துக்கள்" (The Philosophy and Ideas of Anarchism)

"அரசின்மை வாதத்தின் எளிய விளக்கங்கள்" (Simple Explanations of Anarchism)

"உழைக்கும் மக்களுக்கான அரசின்மை பற்றிய உரையாடல்கள்" (Conversations Regarding Anarchism for Working Men)

"உழைக்கும் ஆண்கள் சங்கங்களின் கொள்கை" (The Principle of Working Men’s Unions)

கோலாலம்பூரில் செயற்பட்ட Anarchism  தோழர்களின் தொடர் முயற்சியாக சீன மொழியில்  Yik Khuan Poh என்ற தலைப்பில் செய்தித்தாளையும் வெளியிட்டனர்.     Yik Khuan Poh   என்றால் வெகுஜனங்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதாகும்.  1919 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செய்தித்தாள்  வெளியிடப்பட்டது.  மலாயாவில் மிகவும் தீவிரமான செய்தித்தாள் என்று மக்களாலும் இடதுச்சாரி தோழர்களாலும் அப்பத்திரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. Anarchism -வாதியான கோ துன் பான், இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து அவ்வமைப்பின் தத்துவங்களையும் புரட்சிகரமான கருத்துக்களையும்  விடாமுயற்சியுடன் மக்களிடத்தில் பரப்பினார்.


1919-ஆம் ஆண்டு மலாயாவில் முதன் முதலாக மாபெரும் தொழிலாளர் ஒன்றுகூடலை நடத்துவதற்கு இந்த அமைப்பு திட்டம் வகுத்தது
அதனை முன்னிட்டு மே 1, 1919 அன்று   கோ துன் பான்,     உலகளாவிய தொழிலாளர் இயக்கம் குறித்த சிறப்புக் கட்டுரையை    செய்தித்தாளில் வெளியிட்டார். அந்தக் கட்டுரைக்காக அவர்  ஜூலை 1919-  இல் கைது செய்யப்பட்டு  புடுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் அவர் கிளர்ச்சிக்காரர் என்று முத்திரைக் குத்தப்பட்டு Anarchism செயல்பாட்டிற்காக நவம்பர் 1919 இல் பிரிட்டிஷாரால் நாடுகடத்தப்பட்டார். இந்தச் சம்பவமானது Anarchism செயற்பாட்டுத் தோழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களின் அமைப்பை மேலும் பலமாக்க கோலாலம்பூர்,  பினாங்கு, ஈப்போ சிரம்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகி மாநிலங்களைச் சேர்ந்த தோழர்கள்  மலாயா முழுவதும் Anarchism கருத்துகளைப் பரப்பும் பரப்புரையை தொடங்கினர்.


அந்நோக்கத்திற்காக ‘’மலாயன் Anarchism கூட்டமைப்பு (MAF)  என்ற வலையமைப்பை நிறுவினர்.  ஒவ்வொரு ஆண்டும் மே 1 தொழிலாளர் தினத்தில் மே தின துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவது MAF இன் நோக்கங்களில் ஒன்றாகும். அவர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களில் ஒன்று "பாட்டாளி வர்க்கத்தின் சக்தி" என்ற தலைப்பில் இருந்தது. இப்படியாக Anarchism தோழர்களின் செயற்பாடுகள் மக்கள் குறிப்பாக சீன மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

1920-இதன் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக மே 1, 1921 அன்று, பேராக் மாநிலத்தின்  ஈப்போ நகரில், Anarchism-வாதிகள் மலாயாவின் வரலாற்றில் முதல் "மே நாள்" தொழிலாளர் தினப் பேரணியை ஏற்பாடு செய்தனர். தொழிலாளர் தினத்திற்காக  நம் நாட்டில் Anarchism  தோழர்கள் செய்த மிகப்பெரிய பங்களிப்பு இதுவாகும்.



இந்த அமைப்பில் செயற்பாடுகளைக் கண்டு பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளே மிரண்டு போனார்கள். Anarchism தோழர்கள் அச்சு ஊடகங்கள் வழியாக முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஆயுதமாக பிரசுரிக்கப்பட்ட சிற்றிதழ்கள், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் அச்சு பிரசுரங்களை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நோக்கில் புதியச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இப்போது மலேசியாவில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் அந்தச் சட்டம்தான் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

உலகலாவிய ரீதியில் உழைக்கும் மக்களுக்கான போராங்களுக்கு ஆண்டுகள் 200 கடந்தாலும், உழைக்கும் பாமர மக்களுக்காக போராட்டங்களை இன்னும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இடதுச்சாரி கட்சிகள் இருக்கின்றன. நமது நாட்டைப் பொருத்தவரை இடதுசாரி கட்சியான மலேசிய சோசலிசக் கட்சி ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களுக்கான தொழிலாளர் பேரணியை முன்னெடுக்கிறது. இன்றும் நாம் குறைந்த பட்ச சம்பளத்திற்காகவும், முதலாளிகளால் சம்பளம் வழங்காத பிரச்னைகளுக்காகவும் வீதியில் இறங்கி போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். தொழிலாளர் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் இருக்கும் வரை அதை எதிர்க்கும் தொழிலாளர் வர்க புரட்சி நடந்துக்கொண்டே இருக்கும்.   

மூலம்: தோழர் Fahmi Reza

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 1/5/2022

 

 

 

செவ்வாய், 16 நவம்பர், 2021

இளம் தேசிய போராட்டவாதி ரோஸ்லி டோபி (Rosli Dhoby)

 

ரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரம் என்று மலேசிய சுதந்திரம் குறித்து நான் படித்ததுண்டு. உண்மை அப்படியல்ல என்பது நான் சில கேள்விகளுக்கு விடைகண்டதின் மூலமாக அறிந்துகொண்டேன். சில சரித்திரங்களை நம்மால் வெளிப்படையாக பேசமுடிகிறது. சில சரித்திரங்களுக்கு பேச்சு சுதந்திரங்கள் மறுக்கப்படுகிறது. ஊடக சுதந்திரமும் சில வேளை மறுக்கப்படும் பட்சத்தில் நான் என் எழுத்து சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திகொள்ள நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையை கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளலாம். பில்லா அரண்மனை குறித்தக் கட்டுரையில் 2009-ஆம் ஆண்டு அந்த அரண்மனையில் தொடராக எடுக்கப்பட்ட “வர்க்கா தெராகிர்தொலைக்காட்சி நாடகம் குறித்து கூறியிருப்பேன். அந்த தொடர் நாடகம் சரவாக் மாநிலத்தின் தேசிய போராட்டவாதியான ரோஸ்லி டோபியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு உண்மை சம்பவமாகும். 

யார் அந்த ரோஸ்லி டோபி?

18 மார்ச் 1932-ஆம் ஆண்டு சிபுவில் உள்ள கம்போங் பூலோ எனும் இடத்தில் ரோஸ்லி டோபி பிறந்தார். உடன்பிறப்புகள் 4 பேரில் இவர் இரண்டாவது குழந்தை. இவரின் தந்தை டோபி இந்தோனேசியாவின் ரேடன் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் இவரின் தாயார் ஹபிபா முகா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ரோஸ்லி டோபிக்கு ஃபாத்திமா என்ற தமக்கையும், ஐனி என்ற தம்பியும் இருந்தனர்.

யாரையும் எளிதில் அனுகக்கூடியர் என்று ரோஸ்லி டோபியின் குணாதிசயம் குறித்து அவர்கள் நண்பர்கள் கூறினாலும், அதிகம் பேசாதவர்; அமைதியானவர் என்றும் அவரைக் குறித்து கூறுகிறார்கள்.


ரோஸ்லி டோபியின் தொடக்க காலம்

ரோஸ்லி சுயமாக இயங்ககூடியவர். பெற்றோரை மதித்து நடப்பவர்.  யாரையும் கஷ்டப்படுத்தமாட்டார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவரின் கவிதைகள் சரவாக் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பவரான ரோஸ்லி ஓர் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். முன்னதாக அவர் சரவாக் பொதுப்பணிதுறையிலும் உத்துசான் சரவாக் பத்திரிக்கை துறையிலும் பணிபுரிந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் அவர் ஒரு தேசியவாதியாகவும் கவிஞராகவும் தன்னை உயர்த்திக்கொண்டார். லிட்ரோஸ் எனும் புனைப்பெயரில் சில புரட்சிமிகு கவிதைகளை எழுதியவாரன ரோஸ்லி 28/2/1948 அன்று உத்துசான் சரவாக் இதழில் வெளியிடப்பட்ட ‘panggilan mu yang suci' ' என்ற தலைப்பில் எழுதிய கவிதை அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதோடு அக்காலக்கட்டத்தில் புனைப்பெயர்களின் பயன்பாடு பரவலாக இருந்தது, ஏனெனில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக வார்த்தைகளை பரப்புவதற்கான எந்தவொரு முயற்சியையும் தீவிரமாக கண்காணித்தனர்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் சிரத் ஹாஜி யமன் என்பவரின் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த சிபு மலாய் இளைஞர் இயக்கத்தில் ரோஸ்லி சேர்ந்தார். 1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி ‘ருக்கூன் 13’ இயக்கத்தில் தன்னையும் ரோஸ்லி இணைத்துக்கொண்டார். ‘ருக்கூன் 13’ இயக்கம் ஒரு ரகசிய இயக்கமாகும். ரோஸ்லியின் நீண்ட நாள் நண்பரான ஆவாங் ரம்லி மூலம் அவ்வியக்க செயல்பாடுகள் குறித்து ரோஸ்லி அறிந்துக்கொண்டார். அன்றிலிருந்துதான் பிரிட்டிஷ்-க்கு எதிரான அவரின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.


‘ருக்கூன் 13’ ரகசிய இயக்கம் உருவானது எப்படி?

ப்ரூக்ஸ் அரச குடும்பம் 1841 முதல் சரவாக்கை கைப்பற்றி நீண்ட நாள் ஆட்சி செய்து வந்தது. இந்த குடும்பம்தான் 1941-ல் சரவாக் அரசியலமைப்பின் மூலம் சரவாக்கிற்கு சுதந்திரமும் அளித்தது. இருப்பினும், சார்லஸ் வைனர் ப்ரூக்ஸ் 1946 பிப்ரவரி 8 அன்று ஆங்கிலேயரிடம் சரவாக்கை காலனியாக ஒப்படைக்க அரசியலமைப்பை மீறி செயல்பட்டார்.

ப்ரூக்ஸ் குடும்பத்தால் சரவாக்கை மேம்படுத்த முடியவில்லை, அதே வேளையில் சரவாக்கும் சுயராஜ்யத்திற்கு தன்னை தயார்படுத்தியது; இந்நிலையில் சரவாக்கை கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களின் அழுத்தம் ப்ரூக்ஸ் குடும்பத்தினருக்கு அதனை அவர்கள் கையில் ஒப்படைக்க ஒரு காரணமாக இருந்தது.

இந்த நடவடிக்கையானது சரவாக் சரணடைதலை கடுமையாக எதிர்க்கும்  எதிர்வினைக்கு வழிவகுத்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கவே உள்ளூர்வாசிகளால் ‘சரவாக் சரணடைதல் எதிர்ப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்களின் நடவடிக்கையாலும் ஆதிக்கத்தாலும் கொதிப்படைந்திருந்த ரோஸ்லி டோபி, ‘சிபு மலாய் இளைஞர் இயக்கம்’ எனப்படும் சரணடைதலுக்கு எதிரான குழுவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

இந்த இயக்கத்தில் இருந்து, 13 உறுப்பினர்கள்தான் இறுதியில் ‘ருக்கூன் 13’ என அழைக்கப்படும் ஒரு இரகசிய குழுவை உருவாக்கினர். ஆரம்பத்தில் அப்போதைய பிரிட்டிஷ் கவர்னரான Charles arden-chake-கை படுகொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர், ஆனால் இந்தத் திட்டம் செயலாக்குவதற்கு முன்பே அவர் கானாவுக்கு மாற்றப்பட்டார்.


Duncan Stewart படுகொலை

Charles arden-chake-கை அடுத்து சரவாக்கின் இரண்டாவது கவர்னராக Sir Duncan Stewart 3.12.1949 அன்று பதவிக்கு வந்தார். அவர் பதவி ஏற்று முதல்முறையாக சரவாக் மக்களை பார்வையிட அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டார். அன்றைய தினம் ருக்கூன் 13 இயக்கத்தின் தோழர்களான ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக், அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் ஆகியோர் களத்தில் நின்றனர். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிரான அவர்களின் திட்டம் தொடங்கியிருந்தது.

பதிவின் படி, புகைப்படம் எடுப்பதற்காக ரோஸ்லி கவர்னரோடு நிற்க மோர்ஷிடி சிடேக் புகைப்படம் எடுப்பது மாதிரி கவனத்தை தம் பக்கம் ஈர்க்கும் தருணத்தில், சந்தர்ப்பம் பார்த்து, விஷம் தடவிய கத்தியை ரோஸ்லி கவர்னரின் வயிற்றில் குத்திவிடுகிறார். இரண்டாவதாக கத்தியால் குத்துவதற்கு முயற்சிக்கும்போது அருகில் இருந்த போலீஸ் அதிகாரி அம்முயற்சியை தடுத்துவிடுவதோடு களத்திலேயே கொலை முயற்சயில் ஈடுபட்ட இருவரையும் போலீஸ் களத்திலேயே கைது செய்கின்றனர். மோசமான நிலையில் Sir Duncan Stewart கூச்சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். பின்பு தீவிர சிகிச்சைக்கு அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாளும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மரணமடைந்துவிடுகிறார்.


சம்பவத்திற்கு பிறகு…

ரோஸ்லி டோபி, மோர்ஷிடி சிடேக் ஆகியோரின் கைதுக்குப் பிறகு ‘ருக்கூன் 13’ இயக்கம் குறித்து பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரனையை தொடங்கினர். அதன்பிறகு அவாங் ரம்லி மற்றும் புஜாங் சொத்தோங் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். Sir Duncan Stewart படுகொலையை மிகவும் கடுமையாக பார்த்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ‘ருக்கூன் 13’ இயக்கத்தினர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தில் ஈடுபடும்போது ரோஸ்லிக்கு வயது 17-தான் என்றாலும் அவரை வயது குறைந்தோர் குற்றவாளியாக பிரிட்டிஷ் அதிகாரிகள் விசாரிக்கவில்லை. விசாரணைக்குப் பிறகு Sir Duncan Stewart கொலையில் தொடர்பு இருக்கும் அனைவருக்கும் தூக்கு தண்டனையை கொடுத்தது. கூச்சிங் சிறைச்சாலையில் சில மாதங்கள் தண்டனையை அனுபவித்து மார்ச் 2, 1950 இல் ரோஸ்லி தூக்கிலிடப்பட்டார்.


அவர் சிறைவாசம் அனுபவித்த காலத்தில்தான் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய ஒரு வரிதான் ‘வர்க்கா தெராக்ஹிர்’ (கடைசி கடிதம்). இந்த வார்த்தையைத்தான் 2009-ஆம் ஆண்டு போராட்டவாதி ரோஸ்லி டோபி குறித்து எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடருக்கும் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட தொடரில் 60 சதவிகிதம் மட்டுமே துல்லியமானது என்றும் கவர்னரின் வயிற்றில் குத்திவிட்டு  ரோஸ்லி தப்பி ஓடுவதைக் காட்டும் காட்சி உள்ளிட்டது வரை கிட்டதட்ட  40% உண்மைக்கு புறம்பாக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இன்றும் உயிரோடு இருக்கும் ரோஸ்லியின் சகாக்கள் கூறியிருக்கின்றனர். அவர்களின் கூற்றுக்கு ஆதாரங்களையும் அவர்கள் கையில் வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.


ரோஸ்லி டோபி தூக்கில்போடுவதற்கு முன்பு, தூக்கிலிடுவதற்கான தேவையான பொருட்கள் அனைத்தும் சிங்கப்பூரிலிருந்து வரவைக்கப்பட்டிருந்தன. அப்போது கூச்சிங் சிறைச்சாலையில்  தூக்கிடுவதற்கான வசதியில்லை. மேலும் தூக்கில் போடுபவரும் சிங்கப்பூர் Changi சிறைச்சாலையிலிருந்துதான்  அழைத்துவரப்பட்டார். தூக்கிலிடப்பட்ட போராட்டவாதியான ரோஸ்லியின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அவரின் உடல் கூச்சிங் சிறைச்சாலை வளாகத்திலே புதைக்கப்பட்டது.

புதைக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு, சிறை வளாகத்திலிருந்து  ரோஸ்லி டோபியின் உடல்  மார்ச் 2, 1996 அன்று தோண்டி எடுக்கப்பட்டு அவரது சொந்த ஊரான சிபுவில் உள்ள கம்போங் சிபு மசூதிக்கு அருகில் உள்ள சரவாக் மாவீரர்களின் கல்லறையில் சரவாக் அரசாங்கத்தால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஓர் இளம் போராட்டவாதியாகவும் தனது நாடு மற்றும் நாட்டு மக்களின் விடுதலைக்காகவும் தன் உயிரையே பணையம் வைத்ததோடு உயிரையே கொடுத்த போராட்டவாதி ரோஸ்லி  டோபியின் பெயரில் சிபுவில்  ஒரு தேசிய  உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.  

நன்றி தமிழ்மலர் : 21/11/2021  

பில்லா அரண்மைனையைக் குறித்து தெரிந்துக்கொள்ள 

  

 

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

கள்ளுக்கடை போராட்டம், பேசும் அரசியல் என்ன?

மலாயாவுக்கு செளர்ண பூமி என்ற ஒரு அடைமொழி உள்ளது.  இந்தச் செளர்ண பூமியில் சிந்திய செங்குருதி பெருவாரியாக கம்யூனிச சிந்தாந்தத்தைப் பேசுவதால் அவை வலதுசாரிகளால் புறக்கணிக்கப்படுகின்றன. புறக்கணிக்கப்படும் வரலாறுகளை மக்களிடம் பேசுவதும், பதிவு செய்வதும் கம்யூனிச செயற்பாடுகளாக பார்க்கப்படுமானால், நான் ஒரு கம்யூனிசவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே கொள்கிறேன். காரணம் உண்மையின் நிறம் என்றுமே சிவப்புதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.  நான் சிவப்புக்கு பக்கத்தில்தான் நின்றுக்கொண்டிருக்கிறேன்.

மலேசியா மண் தொழிலாளர் போராட்டம், அரசியல் போராட்டம், உரிமைப் போராட்டம், வர்கப் போராட்டம்  என  பதிவு செய்யப்பட்ட மற்றும் முறையாக பதிவு செய்யப்படாத பல போராட்டங்களை உள்வாங்கியபடி இன்னும் அதன் நிலைத்தன்மை மாறாமலேயே இருக்கிறது.  இந்தியர்கள் அதிகமாக பங்கெடுத்தப் போராட்டங்கள் என வரிசைப் படுத்தும்போது  தொழிலாளர் வர்க போராட்டமே மிக அதிகமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசக்கூடிய பலப் பதிவுகளை மலேசியர்கள் கிட்டதட்ட எல்லா மொழியிலுமே பதிவு செய்திருக்கிறார்கள். 

ஆனாலும், மலேசிய இந்தியர்களின் நல்வாழ்வுக்கு மிகப் பெரிய எதிரியாக இருந்த கள்ளுக்கடையை ஒழித்துக்கட்டும் போராட்டம் குறித்து மிக அரிதாகவே பேசப்பட்டிருக்கிறது. மலேசிய சீனத் தொழிலாளர்களை   ஓப்பியம் என்ற மது அடிமையாக வைத்திருந்தது போல நம்மவர்களை கள்ளு எனும் மதுபானம் அடிமைப்படுத்தியிருந்தது.


கள்ளுக்கு அடிமையான தொழிலாளர்களின் விவகாரத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவதாக ஒவ்வொரு தோட்டத்திலும் கள்ளுக்கடை இருந்ததற்கான காரணம் முதலாளிகளின் ஒரு தந்திர யுக்தியாக பார்க்கப்படுகிறது.  1924-ஆம் ஆண்டுகளில் ஓர் ஆண் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 35 காசும், பெண் தொழிலாளிக்கும் 27 காசும் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. 1939-ஆம் ஆண்டுகளில் ஓர் ஆண் தோட்டத் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு 50 காசும் பெண் தொழிலாளிக்கு 40 காசும் ஊதியமாக பெற்றுள்ளனர்.

இவ்வளவு குறைந்த சம்பளத்தைப் பெரும் ஒரு சராசரிக் குடும்பம், அதன் ஒரு பகுதியை கள்ளு குடித்தே அழிக்கிறது என்றால் அந்தக் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களின் நிலை என்ன என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்?

மலேசிய தமிழர்களின் வர்க போராட்டம் தொடர்பாக வரலாற்று ஆய்வாளர் தோழர் சாமிநாதன் மெய்நிகர் வழியே தொடர் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகிறார்.  கிள்ளான் கலவரம் தொடர்பாக நடந்த ஒரு கலந்துரையாடலில்  KDIU எனப்படும் கிள்ளான் தொழிற்சங்கத்தில்,  ஆர்.எச்.நாதன் தலைமையில்  போராட்டவாதி வெள்ளையன் மற்றும் 60 மிட்லன்ஸ் தோட்ட பாட்டாளிகள்  ஒன்றிணைந்து  12 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதை கலந்துரையாடலில் கூறியவர் அந்த 12 கோரிக்கைகளையும்  தெளிவு படுத்தினார். அவர் கொடுத்தப் பட்டியலில் 6-வது கோரிக்கையாக இருந்தது  “கள்ளுக் கடைகள் மூடல்”  எனும் கோரிக்கையாகும்.  அக்கோரிக்கையானது 1941-ஆம் ஆண்டு 13 பிப்ரவரி மாதத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்படியென்றால் மலேசியாவுக்கு கூலியாக வந்த நம்மவர்களிடம் இந்தக் கள்ளு எனும் மது எப்போதிலிருந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது?  எப்போதிலிருந்து அது தீவிரமடைந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் சில முக்கியத் தகவல்கள் நமக்கு கிடைக்கிறது.

தீபகற்ப மலாயாவிற்கு, கள்ளு 1886-ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷாரால் கூலியாட்களாக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மற்றும் கேரள மக்களால் பிரபலமடைந்திருக்கிறது. ரப்பர் தோட்டங்களில் அதிகாலையில் பால்மரம் வெட்டச் செல்லும் ஆண்களில் பெரும்பான்மையினரின்  ஒரு சமூக நடவடிக்கையாகக் கள்ளு குடிப்பது இருந்திருக்கிறது. கள்ளும் எனும் மதுபானம் எளிமையாக கிடைக்ககூடிய வகையிலும், மலிவாகவும் அதே வேளையில் தென்னைமரத்திலிருந்து இறக்கி, வேறு  எந்த உற்பத்தி செயலாக்கமும் தேவையில்லாத அளவுக்கு  எளிமையான ஒன்றாகவும் இருந்திருக்கிறது.

கூலியாட்களை அதிகம் சிந்திக்க விடாமல் கட்டுப்படுத்தி, தோட்டத்து கூலி தொழிலாளர்களை கள்ளுக்கு அடிமையாக வைத்திருக்கும் யுத்திக்குப் பின்னால் பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இருக்கிறது.  ஒவ்வொரு தோட்டத்திலும் கோயில், ஆயாக் கொட்டகை கட்டாயம்  உள்ளதுபோல கள்ளுக்கடையும் இருந்திருக்கிறது.  கள்ளின் ஆதிக்கம் ஓர் இனத்தையே அடையாளப்படுத்தும் அளவுக்கு, காலனித்துவ காலத்தில் சிக்கல்களில் வேரூன்றிய ஒரு பெரிய பிரச்சனையாகவும் அது மாறியது.

முதல் கள்ளுக்கடை எங்கே தொடங்கப்பட்டது, கள்ளுக்கடைக்கான கட்டுப்பாடுகள் எப்போது முதன்முதலில் தொடங்கப்பட்டன என்பதற்கான சரியான விவரங்கள் தெரியாவிட்டாலும்,  நுகர்வோரின் புகார்கள் மற்றும் கள்ளு விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான  உத்தரவுகளை பிரிட்டிஷாரால்  கடை உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதங்கள் 1900-1909களில் கிடைத்திருக்கின்றன.




சீனர்கள் ஓப்பியத்தை குடித்து, அந்த மயக்கத்திலேயே அதிகநேரம் தோட்டத்தில் வேலை செய்தார்கள். அது பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் லாபத்தையே கொடுத்தது.  அவர்களின் சுயலாபத்திற்காக  ஓப்பியத்தை பெரிய அளவில் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை. சீன தொழிலாளர்களின் நலனில் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால், புலம்பெயர்ந்த இந்தியத் தொழிலாளர்களின் "தீவிர குடிப்பழக்கம்" அவர்களுக்கு பிரச்னையாக இருந்தது. தோட்டத்து இளைஞர்களால்   தீவிரமாக செயற்பட்ட தொண்டர் படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் நிறைய புகார்களும் கள்ளுக்கெதிரான எதிர்ப்புகளும் அதிகரித்தன.   

இது எந்த அளவுக்கு தீவிரமடைந்தது என்றால் , 1916-ஆம் ஆண்டு  மலாயா தோட்டக்காரர்கள் சங்கத்திற்கு (PAM) டாக்டர் மால்கம் வாட்சன் எழுதிய அறிக்கையின் சாரம் இப்படி இருக்கிறது. “கள்ளு கடுமையான விஷம்.  இந்திய கூலியாட்கள் சுகாதரமற்ற பாதையில் செல்கிறார்கள்.  தொழிலாளர்களுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு, வயிறுசார்ந்த பிற கோளாருகளுக்கு  இந்திய  தொழிலாளர்களின் வர்க்க கலாச்சாரம் மற்றும் இந்தியாவிலிருந்து  புலம்பெயர்ந்தோரின் சுகாதாரமற்ற பழக்கங்களும் ஒரு காரணம்.  மிகவும் பழமைவாதிகளான அவர்களை மேம்படுத்துவது மிகவும் கடினமாக உள்ளது” என்று  எழுதினார். நாட்டில் ஏற்பட்ட  சுகாதார பிரச்சினைகளுக்கு இக்காரணங்ளையும் அவர் தொடர்புபடுத்தினார்.


பிரச்னை தீவிரத்தை எட்டினாலும் கள்ளுக்கெதிராக எந்தத் தடையையும் பிரிட்டிஷ் அரசு பிறப்பிக்கவில்லை. தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த ஒரு வழியாக அதை பாவித்துக் கொண்டார்கள். மேலும், பிரிட்டிஷ் அரசுக்கும் கள்ளு விற்பனையிலிருந்து நிறைய லாபமும் கிடைத்திருக்கிறது.  அதாவது கள்ளு விற்பனையின் இலாபத்தில், ஐந்தில் இரண்டு பங்கு  அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள மூன்று பங்கை தொழிலாளர்களின் பொது நலனுக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு நிதியாக மாற்றப்பட்டதாகவும், மலாயாவில் கள்ளுக்கடை குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கும் பரமேஸ்வரி கிருஷ்ணனின் என்பவரின் அறிக்கை கூறுகிறது.

ஒரு கட்டத்தில் தீபகற்ப மலாயா முழுதும் கள்ளுக்கடைக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்திருக்கிறது. அந்தப் போராட்டங்களுக்கு பெண்களும் தீவிரமாக ஆதரவு கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கியமாக கெடா, பேடோங்கில் 1947-ஆண்டு நடந்த கள்ளுக்கைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் மற்றும் போராட்டவாதிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்டு 13 பேரை போலீசார் கைது செய்தனர்.  கள்ளுக்கடைக்கான எதிர்ப்பு அறிக்கைகள் ‘ஜனநாயக’ பத்திரிகையில் தொடர்ந்து  செய்தியாக வந்திருக்கின்றன.  ஆனாலும் கள்ளுக்கடை சங்கங்கள் எந்தச் சரிவும் இல்லாமல் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கின்றன.  எந்தப் போராட்டமும் சொற்பொழிவுகளும் கள்ளுக்கடைக்கான மூடுவிழாவை கொண்டுவர முடியவில்லை.

மலேசிய சோசலிச கட்சியின் துணைதலைவர் அருட்செல்வத்திடம் இதுகுறித்து ஒரு நாள் பேசுகையில், அவர் தம் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.  ஒரு தோட்டத்தில் கள்ளுக்கடைக்கு எதிரான  பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது,  கள்ளுக்கடைக்கு ஆதரவாக இருக்கும் சில ஆண்கள்  “இது ஏழைகள் அருந்தக்கூடிய, மலிவாக கிடைக்ககூடிய ஒரு மதுபானம்” என்றும் “இதை ஒழித்துவிட்டால் இதற்கு மாற்றுவழியைத் தேடி தோட்டத்து மக்கள் இன்னும் மோசமான விஷயங்களை நாடி போகலாம்” என்றும் கருத்து கூறுகிறார்கள் என்றார். இன்னும் சிலர் “வசதியுள்ளவர்கள் உயர்ரக மதுபானத்தை குடிக்கிறார்கள். அதற்கு எதிராக எந்தப் போராட்டமும் வருவதில்லையே, ஏன் கள்ளுக்கு மட்டும் இத்தனை எதிர்ப்பு” என்று குறைபட்டுக்கொண்டதையும்  அருள் தெரிவித்தார்.  

இதுதான் இரண்டாவது பார்வையாகும். மட்டமான தரம் குறைவான மதுபானம் போல கள்ளை கூற இயலாது. மருந்தாக எடுத்து கொண்டால் உடல் உஷ்ணம் போன்ற உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. ஒற்றை மரத்துக் கள்ளுக்கும் அந்திக் கள்ளுக்கும் எப்போதுமே தனி மவுசுதான்.  அளவுக்கு மீறும் போதுதான் அது போதையாகிறது. 

தோட்டத்து வாழ்க்கையிலிருந்து நாம் மாறிபோயிருந்தாலும்,  அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளுக்கடைகள் இருக்கவே செய்கின்றன.  நமது நாட்டில் கள்ளுக்கடைச் சங்கங்களும் புதுப்பிக்கப்பட்டு உயிர்ப்புடனே இருக்கின்றன.  என்றாலும் அச்சங்கங்களின் செயற்பாடுகள் என்ன? சங்கங்களை புதுப்பிக்கும் வரையரைகள் என்ன? அரசாங்கத்திடம் எந்த மாதிரியாக கோரிக்கைகளை இச்சங்கங்கள் கோருகின்றன? உள்ளிட்ட விவரங்களை கலந்துரையாடினால் தகவல்கள் பெறலாம்.

மலேசிய மண்ணில் 100 ஆண்டுகள் கடந்தவிட்ட கள்ளு எனும் பானத்தின் வரலாறு இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. குடிபோதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்தவர்களின் கதை வெளிப்படையாகவே பேசிக்கொண்டிருப்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

 

தரவுகள்: 

 - ஓவியக் காட்சிகள்:  "The History of Toddy Drinking and Its Effects on Indian Labourers in Colonial Malaya, 1900–1957".

-நாளிதல் ஆதாரம்: ஆர்கிப் நெகாராவில் நானே (யோகி) எடுத்தது.

-நன்றி தோழர் சாமிநாதன் 

நன்றி தமிழ் மலர் 19/9/2021