பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக்கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 ஜனவரி, 2023

தேக்கடிக்கு ஒரு அத்தியாயம்

உங்களால் ஒருநாள் முழுக்க மின்சாரம் மற்றும் மின்னியல் சாதனங்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? இப்பரீட்சையோடு இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு காட்டில், உங்களை விட்டுவிட்டால், “இயற்கையை ரசித்துவிட்டு வருவேன்” என்று உங்களால் உறுதியாகக் கிளம்பிப்போக முடியுமா?

அப்படி இருக்கத்தான் முடியுமா? அதை முயற்சி செய்துதான் பார்த்துவிடலாமே? என்று புறப்பட்ட ஒரு பயணத்துக்குதான் இந்த கட்டுரையில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன்.

தமிழ்நாட்டிலிருந்து மூணாறு – தேக்கடி செல்வதற்குச் சாலை மார்க்கமாக இருவழிகள் இருக்கின்றன. பொதுவாகப் பயணிகள் மதுரையிலிருந்து தேனி – கம்பம் – கூடலூர் – தேக்கடி வந்து மூணாறு இப்படிதான் திட்டமிடுவார்கள். இரண்டாம் வழி, தேனி – போடிநாயக்கனூர் – போடிமேடு வழியாக மூணார் – தேக்கடி.

தேக்கடி என்றாலே கேரளா, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் எல்லைப் பகுதியாகவும், கேரளா மாநிலத்தின் சுற்றுலாத்துறை, வனத்துறை இரண்டுமே இணைந்து செயலாற்றும் படகுத்துறை, படகு பயணம்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அதோடு பெரியாறு புலிகள் சரணாலயம். யானைகள், மான்கள், மிளா, காட்டு மாடுகள்,செந்நாய்கள் உள்ளிட்ட ஆபத்தான வன விலங்குகளும் பலவிதமான பறவைகளும் இந்த தேக்கடி வனத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் இணையத்தில், தேக்கடி என்று தேடினாலே நம் கண்முன் காட்சிகளாகவே திரையில் வந்துவிடுகின்றன. அக்காட்சிகள் கொக்கி போட்டு நம்மை தேக்கடிக்கே இழுத்து செல்லவும் செய்கிறது.

காடு, மலைகள், நீர்ச்சுனைகள், பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்தது தேக்கடி. கேரளா வனத்துறையினர் ஏற்பாடு செய்திருக்கும் இரண்டடுக்கு மோட்டார் படகில் இயற்கையை ரசித்தபடி, அங்கே நீர் குடிக்க வரும் வன விலங்குகளை நாம் பார்க்கலாம், எப்போதும் காணக் கிடைக்கக்கூடிய விலங்காக யானையும் மானும் இருக்கின்றன. நாரை, காட்டு வாத்து உள்ளிட்ட பறவைகள் இளைப்பாறுவதைப் பார்க்கவும் மிகவும் அழகாகவே இருக்கிறது. புலி, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் கால நேர நிர்ணயம் இல்லாமல் நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே தரிசனம் கொடுக்கின்றன.

ஆனால், படகு போக்குவரத்துக்குக் கால அட்டவணை இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு படகு கிளம்புகிறது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் வரையில் படகுச்சவாரி போகலாம். சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பாளர்களால் கவனமாகப் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

எனது நண்பர் பசுமை ஷாகுல் உதவியோடு வனத்தில் தங்குவதற்கு வனத்துறையில் அனுமதி வாங்கியிருந்தேன். படகுச் சவாரியின் போது நான் உட்பட வனத்தில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்த பயணிகள் சிலரை ஏடப்பாளையம் அரண்மனை அருகே அதிகாரிகள் இறக்கிவிட்டனர். அதில் நான் அங்கிருந்து இன்னும் சில கிலோமீட்டர் தொலைவில் வனத்தின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் தங்குவதற்காக அனுமதி பெற்றிருந்தேன். அதற்கு நடந்துதான் செல்ல வேண்டும். பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய பயிற்சிபெற்ற ஒரு வன அதிகாரியும், ஒரு நாளுக்குச் சமையல் செய்து தருவதற்கு வனத்துறையைச் சேர்ந்த ஒருவரும், மேலும் ஒரு வனத்துறையைச் சேர்ந்தவரும் இந்தப் பயணத்தில் உடன் வந்தனர். மலையாளிகளான அவர்கள் தமிழ் பேசக் கூடியவர்களாக இருந்தது எனக்குப் பேருதவியாக இருந்தது.


ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை பகிர்வதற்கு முன் ஏடப்பாளையம் அரண்மனை குறித்துச் சொல்லிவிடுகிறேன். இந்த அரண்மனை 1927ஆம் ஆண்டு சிறுவயதிலிருந்த பலராம வர்மா காலத்தில் சேது லக்ஷ்மி பாயின் ஆட்சியின்போது கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனைக்கு கோடைக்கால அரண்மனை என்ற பெயரும் உண்டு.

ஒவ்வொரு வருடமும், குறிப்பாகக் கோடைக் காலத்தில் அரசு குடும்பத்தினர் இளைப்பாற இந்த ஏரி அரண்மனைக்கு வருகை தருவார்களாம். அதோடு அவர்களின் பிரத்தியேக விருந்தினர்களுக்கு இயற்கையுடன் கூடிய விருந்து படைக்கவும் இந்த இடத்தை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தற்போது அந்த அரண்மனை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்குச் சொகுசு மாளிகையாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நான் அரண்மனையின் உட்புறம் சென்று பார்த்தேன். மன்னர் காலத்துப் பழைய தளவாடப் பொருள்கள் சில இருக்கின்றன. அதையும் தாண்டி அங்கே மாட்டப்பட்டிருக்கும் மன்னர் காலத்துப் பழைய புகைப்படங்கள் இன்னும் கூடுதல் வரலாற்றை நம்மோடு பேசுகிறது. அலங்கரித்த யானைகளின் படைசூழ மன்னர் பெருவாழ்வு வாழ்ந்திருக்கிறார்.

அந்த அரண்மனையிலிருந்து கால்நடையாக கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் நடந்துசென்றால் காட்டின் மையப்பகுதியை அடைந்துவிடலாம். அங்குதான் ஏடப்பாளையம் கண்காணிப்பு கோபுரம் இருக்கிறது. 1970களில் கட்டப்பட்ட கோபுரம் என்றாலும் தேவைக்கருதி பழுதான பாகங்களைச் சரி செய்து இன்னும் கோபுரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கக் கோபுரத்தைச் சுற்றி அகழி வெட்டப்பட்டுள்ளது.

நாங்கள் கோபுரத்தை அடைந்த நேரம் மதியம் கடந்திருந்தது. படியேறிப் போய் நான் கோபுரத்தின் மேலிருந்து காட்டைப் பார்த்தேன். சூடான தேநீர் தயாராகிக் கொண்டிருந்த வேளை, தூரத்தில் ஒரு புறம் மான்கள் கூட்டத்தையும், மறுபுறம் காட்டு மாடுகள் கூட்டத்தையும் காண முடிந்தது. அறையில் மெத்தையுடன் கூடிய ஒரு கட்டில், சின்ன தேநீர் மேஜை ஒன்றும் இருந்தது. சுவரில் கண்காணிப்பு கோபுரத்தின் பழைய புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. அறைக்கு வெளியில் இரண்டு நாற்காளிகள்; தேனிக் கூட்டம் ஒன்று கதவருகில் அடைக்கலம் கொண்டிருந்தது.

மின் வசதி இல்லை. கீழ்த்தளத்தில் கிணறு வெட்டி குழாய் வழியாக இணைப்பு கொடுத்து தண்ணீர் பயன்பாட்டுக்கு வசதி செய்திருந்தார்கள். குளிப்பதற்கும் கழிப்பறையில் பயன்படுத்திக்கொள்ளவும் அந்த தண்ணீர்.

மெல்ல இருட்டத் தொடங்கியதும் கலைப்பு மிகுதியாக இருந்தாலும், இன்று என்னென்ன வனவிலங்குகளை வனம் கண்முன் கொண்டு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாகிறது. கண்காணிப்பு கோபுரத்திலிருந்து வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக ‘கை லாம்பு’ (டார்ச் லைட்) ஒன்றை  வனத்துறையினர் கொடுத்திருந்தனர். வனவிலங்குகளை காண்பதற்கு வசதியாக இருந்ததோ இல்லையோ, இரவில் என் பயன்பாட்டுக்கு அந்த கை லாம்பு உற்ற தோழனாகவே இருந்தது.

சுவையான கோழி கறி சமையல், கூடவே எனக்குப் பிடித்த தேநீருமாக என் ஒருவளுக்கான விருந்து தடபுடலாகவே இருந்தது. வனத்துறை அதிகாரிகளிடம் மலேசிய வன அரசியலைப் பேசிக்கொண்டு இருக்கும்போது, அதிகாரி சொன்னார், “புலி மிக அருகில் எங்கேயோ இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. கோபுரத்தை விட்டு தனியே எங்களுக்கு தெரியாமல் போக வேண்டாம்.” அவர்களின் துணையில்லாமல் கண்காணிப்பு கோபுரத்தை தாண்டவே கூடாது என்று அங்கு வருவதற்கு முன்பே என்னை எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவைக்கு ஒரு மெழுகுவர்த்தி கொடுத்திருந்தனர். கூடவே ஒரு கொசு வர்த்தியும். மெழுகுவர்த்தியின் உதவியோடு கொண்டு வந்திருந்த நாவலை சிறிது நேரம் வாசித்தேன். மனம் வனத்தை நோக்கியே இருந்தது. கை தொலைப்பேசி, மடிக் கணினி, தொலைக்காட்சி, ஒளி – ஒலி மாசு எதுவும் இல்லாத ஓர் அற்புதமான இரவு. கண்காணிப்பு கோபுரத்திற்கு நேர் எதிரே நெட்டையான ஒரு மரத்தில் இரட்டைவால் குருவி ஒன்று விட்டு விட்டு ஏதோ பாடிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் கனமிழந்து காற்றைப்போல லேசாகியிருந்தது. மான் மற்றும் காட்டுமாடுகள் கூட்டத்தைத் தவிர வேறு எந்த வனவிலங்கையும் என்னால் அன்று காண முடியவில்லை.

மறுநாள் காலையில் வனத்திற்குள் செல்வதற்கான திட்டத்தை அதிகாரி முன்கூட்டியே என்னிடம் கலந்தாலோசித்திருந்தார். அதன்படி விடியற்காலையில் (கடுங்குளிர்) எழுந்து வனவாசியாக வலம் வருவதற்குத் தயாரானேன். மொத்தமான ஒரு ஜீன்ஸ் காற்சட்டையும், இரண்டு முழுக் கை சட்டையும் அணிந்துகொண்டேன். கைக்கு கையுறை, முழங்கால்வரை காலுறைபோல ஒரு காக்கி துணியைக் கொடுத்து அதை இறுக்கமாகக் காலோடு சேர்த்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.

துப்பாக்கிய ஏந்திய அதிகாரி முன்னே செல்ல, நான் அவர் பின்னாலும் எனக்குப் பின்னே மேலும் இருவரும் வனத்திற்குள் சென்றோம். நீர்நிலையை ஒட்டியே எங்களின் பயணம் இருந்தது. கிட்டதட்ட 3இலிருந்து 4 மணி நேரப் பயணம் அது. இரண்டடி எடுத்து வைத்தால் குறைந்தது 5 அட்டையாவது பிடுங்கிப் போட வேண்டிருந்தது. எதற்காக வனத்துறையினர் காக்கி துணியைக் கொடுத்தார்கள் என்பது அப்போதுதான் விளங்கியது. அட்டைகளைப் பிடுங்கிப் போடுவதில் என் கவனம் இருந்தாலும், இந்தப் பயணத்திலிருந்து பின்வாங்க எனக்குக் கொஞ்சம்கூட எண்ணம் வரவே இல்லை.

சுமார் ஒரு மணிநேரத்தில் பூர்வக்குடிகள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வன அதிகாரி காண்பித்தார். அவர்களிடத்தில் மலிவான விலையில் மீன் வாங்கிக்கொள்ளலாம். அதை வனத்துறையை சேர்ந்த சமையல் செய்யும் சகோதரர் சமைத்துக் கொடுக்க தயாராக இருந்தார். மிக அருகில் இருவாச்சி கத்தும் சத்தம் கேட்டது, சாம்பல் நிற இந்தியன் இருவாச்சியைக் கண்டோம். தெளிவாக இல்லை என்றாலும் ஒரு புகைப்படத்தை எடுக்க முடிந்தது. மேலும், சில பெயர் தெரியாத பறவைகள், காட்டு மாட்டினுடைய மண்டை ஓடு என்று புதியதாக சில காட்சிகளையும் அந்த வனம் எனக்குக் காட்டி கொடுத்தது.

அதிகாரிகள் நிர்ணயித்திருந்த நேரம் முடியவே நாங்கள் திரும்பவும் கண்காணிப்பு கோபுரத்திற்குச் சென்றோம். ஆடை முழுக்க அட்டை ஊர்ந்து கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் உடல் கூசத்தான் செய்கிறது. அனைத்தையும் பிடுங்கி எறிந்துவிட்டு, நான் குளித்து தயாரானேன். பூர்வக்குடிகளிடம் வாங்கிய மீனைக் குழம்பும் பொறித்தும் இருந்தனர். ருசி என்றால் இதுவரை சாப்பிடாத ருசி. மதியம் 2 மணியளவில் பால் இல்லாத டீ அருந்திவிட்டு, மனமே இல்லாமல் நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

என்னுடைய வன அனுபவத்தில் ஒரு அத்தியாயம் நிச்சயமாக இந்த தேக்கடிக்கு உண்டு.

நன்றி : வாவ் தமிழ்  https://wowtam.com/ta_in/3-a-day-in-thekkady-forest/15774/  (4/1/2023) 


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 5

ஓரிரு நாள் பாலி பயணத்தில் நிறைய காட்சிகளும் அனுபவங்களும் எனக்கு கிடைத்தது. அனைத்தையும் பதிவு செய்வது என்பது சாத்தியமாகாத ஒன்று. ஆனால், விடுப்படகூடாத ஒரு சில சம்பவங்களை சுறுக்கமாக இந்த 5 பாகத்தில் பதிவு செய்து தொடரை நிறைவுச் செய்து விடுகிறேன்.  

பாலியின் பயணக் கட்டுரையின் முதல் பாகத்திலேயே அங்கே நடந்த குண்டு வெடிப்பு பற்றி கூறியிருந்தேன். அதை இன்னும் கொஞ்சம் தெளிவாக பதிவு செய்து விடுவது நல்லது என நினைக்கிறேன்.  2002-ஆம் ஆண்டு பாலியில் குதா நகரில் நடந்த குண்டு வெடிப்பு ஜாமயா இஸ்லாமியா அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டது என்பதை அந்த அமைப்பே ஒப்புக் கொண்டது. வெளி நாட்டினரை குறிவைத்து நடத்திய தீவிரவாதத் தாக்குதல் என்பது ஒருபுறம் இருந்தாலும்  பாலித் தீவில் வாழும் உள்நாட்டு மக்கள் பெரும்பான்மையாக இந்துக்களாக இருப்பதை எதிர்க்கும் அல்லது எச்சரிக்கும் விதமாக இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.   

தவிர, குண்டுவைக்க பாலியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது நடந்த இஸ்லாமிய படுகொலைக்கு பழிவாங்குவதற்குத் தானாம். தேதிகளைப் பார்க்க குஜராத் படுகொலைகள் பாலி குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்தவை என்று அறியும் போது அவனுடைய வாக்குமூலம் உண்மை தான் என்றும் தோன்றுகிறது, பாலியில் குண்டு வைத்த கும்பலில் ஒருவன் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் சுறுக்கத்தை இணையப் பதிவர் ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.  உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

இரவு நேரங்களில் இந்தச் சாலையை பாதச் சாரிகளின் சாலையாக மாற்றிவிடுகிறார்கள். வாகனங்களை அனுமதிப்பதில்லை. தவிர முழுக்க கேளிக்கை மையமாகவே அந்தச் சாலை மாறிவிடுகிறது. இறந்தவர்களுக்கான நினைவுத் தூபி அங்கே அமைத்திருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயரும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் அந்த தூபியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோப்பு படம்

பாலி இதிகாச மேடை நாடகங்கள்

பாலி பயணத்தில் நான் பதிவு செய்ய உத்தேசிப்பது அங்கு நான் பார்த்த நாடகமாகும். இந்தோனேசியாவில் உள்நாட்டு மக்களால் நடத்தப்படும் மகாபாரத மேடை நாடகம் உலகப் பிரசித்திபெற்றது என்பது பலருக்கு தெரிந்ததுதான். மகாபாரதம் அல்லாத கூத்து வகை வேஷம் கட்டி  செய்யப்படும்  இதிகாச மேடை நாடகங்களும் பாலியில் நடத்தப்படுகிறது. இந்த வகை நாடகங்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தே பெருவாரியாக நடத்தப்படுகிறது. கதையும் கரு என்ன என்பது புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவர்களின் உடை மற்றும் முக அலங்காரங்களும் நகை ஆபரணங்களும் அந்நாட்டு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தையும் பேசுகின்றன. 

அதோடு முகமூடிகள் கொண்ட கூத்துவகை ஆபரணங்கள், பாலி நாடகத்துறை ஆய்வுக்கு ஒரு பேச்சுபொருள் ஆக்கலாம். இந்த நாடகங்கள் அரங்கேற்றம் காணும்போது இந்தோனேசிய பாரம்பரிய இசைக்கருவிகளால் live இசை இசைக்கப்படுவது. மலேசியாவிலும் மலாய்க்காரர்கள் இந்தவகை இசைக்கருவிகளையே அவர்களின் பாரம்பரிய இசைக்கருவியாக பயன்படுத்துவதால் எனக்கு அது பரிச்சயமான இசையாகவே இருந்தது. எனக்கு இந்த மேடை நாடகத்தில் பிடிக்காத விஷயமாக இருந்தது அதில் ஆபாசத்தை கலந்ததுதான். இதிகாச நாடகத்தின் இடையில் கேலிசெய்யும் பாத்திரம் ஏற்ற இருவர் ஆபாச செய்கைகளை  நகைச்சுவையாக அரங்கேற்றியது முகம் சுழிக்கும் படியாகவே ‘எனக்கு’ இருந்தது.


எரிமலை

உயிருடன் மற்றும் இறந்த எரிமலை இரண்டையுமே சுற்றுப்பயணிகள் காண்பதற்கு இந்தோனேசியா சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து தருகிறது. மொத்தம் 130 எரிமலைகளை இந்தோனேசியா கொண்டிருக்கிறது.

பாலித்தீவை பொறுத்தவரை ஆகங் எரிமலை முக்கியமானதாக கருதப்படுகிறது. எங்களுடைய பாலி பயணத்தில் இந்த எரிமையை காண்பதற்கான திட்டம் வரையப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் பாலி பயணித்தின் சில நாட்களுக்கு முன்தான் (ஜூன் 30 2018)  இந்த எரிமலை புகையத் தொடங்கியிருந்தது.  கற்றில் பயங்கரமான மாசு ஏற்பட்டதாலும், பாதுகாப்பு கருதியும் பாலித் தீவுக்குச் செல்லும் பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலை இரண்டு நாட்களில் சீரானதை தொடர்ந்து ஜுலை 2 ம் தேதியிலிருந்து பாலிக்கான விமான சேவை சுமூக நிலைக்கு திரும்பியது. எனது பயணம் ஜூலை 4-ஆம் தேதி என்பது குறிப்பிடதக்கது.

நாங்கள் தங்கியிருந்த குதா நகரிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆகங் எரிமலை இருந்தது. அங்குச் செல்வது பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சுற்றுப்பயணிகளுக்கு மறுப்பு சொல்லியிருந்தார்கள். அதனால், நாங்கள் 'Kintamani valcano'  எரிமலை காணச் சென்றோம். மலைக்கு நேர் எதிரே, கிண்டாமணி மலையை முழுமையாக காண கூடிய அளவுக்கு கொஞ்சம் தொலைவில் மலை உச்சியில் சுற்றுலாவாசிகளுக்காக உணவு விடுதி இருக்கிறது. ஒரு டீ அல்லது காப்பியை சுவைத்துக்கொண்டு குளிர் காற்றை அனுபவித்தபடியும் எரிமலையை ரசித்தபடியும்  இருப்பது புது அனுபவத்தை கொடுக்கும். தவிர வாழ்க்கையில் மறக்க மூடியாத காட்சியாகவும் அது அமையும்.

 ஆகங் எரிமையை பார்க்கவில்லையே என்ற குறை பாலியிலிருந்து மலேசியாவுக்கு விமானத்தில் திரும்பும்போது தீர்க்கப்பட்டது. காரணம் அந்த எரிமையை கடந்துதான் விமானம் வந்தது. பயணிகள் அறிந்துக்கொள்வதற்காக விமான ஓட்டி அதை அறிவிப்பு செய்தது எல்லாரும் அதைக் கண்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.  

 குட்டித் தகவல்

50 வருடங்களுக்கு பிறகு 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த ஆகங் எரிமலை அதன் சீற்றத்தை கக்கியிருக்கிறது. முன் எச்சரிக்கையாக கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் மக்கள் அங்கிருந்து வெளியற்றப்பட்டனராம்.

மந்திரமா ? தந்திரமா?

கட்டுரையை தொடங்கும்போதே ‘கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை’ என்று எழுதியிருப்பேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு பணம் மாற்றும் நிகழ்ந்தது. முன்னூறு மலேசிய ரிங்கிடை இந்தோனேசிய ரூபியாவாக மாற்றுவதற்கு குதா நகரில் இருக்கும் பணம் மாற்றும் நிலையங்களில் ஒற்றை ஆளாக சுற்றிக்கொண்டிருந்தேன். மூன்று கடைகளில் விசாரித்தப்பிறகு ஒரு கடையில் நல்ல ரேட் கிடைத்தது. பணத்தை மாற்றியும் விட்டேன். பின் நடந்த கண்கட்டி வித்தையில் மலேசிய ரிங்கிடை திரும்ப கொடுங்கள் என வாங்கிகொண்டு வந்தேன். நடந்தது இதுதான்.

மலேசிய ரிங்கிட் 300-க்கு அவர்கள் ஒரு தொகையை சொன்னார்கள். அது திருப்திகரமாக இருக்கவே சரி என பணத்தை மாற்ற சொன்னேன். அவர்கள் நான் கொடுத்த பணத்தை கையில் தொடவே இல்லை. கவுண்டரில் ஒவ்வொரு நூறு ரிங்கிட்டையும் பிரித்து வைக்க சொன்னார்கள். வைத்தேன். அந்த ரேட்டுக்கு உண்டான இந்தோனேசியப் பணத்தை ஒவ்வொரு தாளாக அவர்கள் எண்ணி என்னிடம் காண்பித்து கவுண்டரில் வைத்தார்கள். என்னை தொட அனுமதிக்கவில்லை. சரியா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் சரி என்றதும் அப்படியே பணத்தை மொத்தமாக கொடுத்துவிடுகிறார்கள். கண் முன்னே எண்ணியதில் என்ன பிழை இருக்கப் போகிறது. அப்படியே பண பையில் வைத்தேன். அப்போதுதான் ஷாகுல் அங்கு வந்து சேர்ந்தார்.

 அவர் வேறு எங்கோ பணம் மாற்றியிருந்தார்.  நானும் பணத்தை மாற்றிவிட்டதாக சொன்னேன். சரியாக இருக்கிறதா? எண்ணிப் பார்த்தீர்களா என்றார். சரியாகத்தான் இருக்கும் என்றேன். எதற்கும் எண்ணிப் பாருங்கள் என்று அவர் சொன்னதும் பார்த்தால் அதில் 100 ரிங்கிட்டுக்கான பணம் உண்மையில் குறைவாகவே இருந்தது.  இவ்வளவும் பணம் மாற்றும் இடத்திலேயே நடந்ததால் பணம் மாற்றுபவர்களிடம் போனேன். அவர்கள் அப்பணத்தை வாங்கிகொண்டு அவர்களின் பாணியில் எண்ணும்போது மீண்டும் சரியாக இருந்தது. எனக்கும் ஷாகுலுக்கும் இது என்ன வித்தை என்பதுபோல இருந்தது. பணத்தை இம்முறை ஷாகுல் வாங்கி எண்ணினார். 100 ரிங்கிட்டுக்கான பணம் குறைவாக இருந்தது.

இது மந்திரமா தந்திரமா அல்லது மேஜிக்-கா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு தோன்றவில்லை. அதிக பணம் அங்கு தண்ணியாக செலவு ஆகிறதை என்னால் உணர முடிந்தது. 100 ரிங்கிட் பற்றாக்குறையை எல்லாம் என்னால் சமாளிக்க முடியாது என்பதால் நான் வேறு கடைக்கு நடையை கட்டினேன்.

இறுதியாக, 

பாலியில் நான், அவர்களின் பாரம்பரிய விவசாய முறையையும் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்களின் உணவு முறை, இந்தியர்கள் என்றாலும் இனத்தால் நம்மிடமிருந்து வேறு பட்டிருக்கும் அவர்களின் இந்திய பாரம்பரியத்தை ஓரளவு பார்த்தும் கேட்டும் உரையாடியும் அறிய முடிந்தது. இந்த அனுபவங்களோடு நாங்கள் விடைபெற்றோம்...

முற்றும் 

சனி, 31 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 4


பாலியில் 'லூவாக் காப்பி'

ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 14 சுவைகளின் இந்தக் காப்பி கிடைக்கிறது. பாலிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்தக் காப்பியை அருந்துகிறார்களோ இல்லையோ நிச்சயமாக இந்தக் காப்பி தயாரிக்கும் இடத்திற்கு வராமல் அவர்களின் பயணம் முழுமையடையாது. காப்பி தயாரிப்பை சொல்வதற்கு முன் இந்தக் காப்பியில் கிடைக்கும் நன்மைகளை பார்த்துவிடலாம். பின் அதன் இருண்ட பக்கத்தையும் காணலாம்.

லுவாக் காபியின் 3 ஆரோக்கிய நன்மைகள்

மற்ற காப்பிகளோடு ஒப்பிடும் போது, இந்தக் காப்பி மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படை கொண்டதாக அடையாளப்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இந்தக் காப்பியின் மிக நீண்ட உற்பத்தி செயல்முறையின் விளைவாக மற்ற காப்பிகளிலிருந்து வேறுபட்ட குணங்கள் கொண்டுள்ளன. காப்பியின் உற்பத்திக்கு முக்கியத் தேவை புனுகு பூனையாகும். அதை இந்தோனேசிய மொழியில் kucing luwak என்றும் மலேசியர்கள் மூசாங் பூனை என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்தில் Asian palm civet என்றும் தமிழர்கள் புனுகு பூனை என்றும் சொல்கிறார்கள். 

லுவாக் காப்பி குறைந்த அளவு அமிலத்தன்மை மட்டுமே கொண்டிருக்கிறது. இதனால் வயிற்றில் அமில பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தக் காப்பி எப்பிரச்னையையும் தருவதில்லை. அதோடு இந்தக் காப்பி  ஒற்றைத் தலைவலியையும் குறைக்குமாம்.

லுவாக் காப்பி சீரான செரிமானம், உடலில் புற்றுநோய் அல்லது புற்றுநோயைத் தூண்டக்கூடிய அமிலத்தையும் குறைக்க வழிசெய்கிறதாம். இதனால் லூவாக் காப்பியை புற்றுநோய் தடுப்பு காரணிகளில் ஒன்றாகவும் சொல்கிறார்கள்.


காப்பி தோட்டம்

இந்தக் காப்பி வெளிப்படையான முறையில்தான் தயாரிக்கப்படுகிறது. எந்த ஒளிவு மறையும் அதன் தயாரிப்பில் இல்லை.  மொத்தம் 14 வகையான ப்ளேவரில் தயாரிக்கும் இந்தக் காப்பியை அங்கு வரும் நமக்கு  அருந்த சிறிய கிண்ணங்களில் தருகிறார்கள். பின் நமக்கு பிடிக்கும் சுவையை நாம் பெரிய பாக்கெட்டுகளில் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.   

100% ஆர்கானிக் என்றால் லூவாக்  காப்பிதான் என்று சொல்லும் அளவுக்கு இந்தக் காப்பி பிரசித்திபெற்றுவிட்டது.  மேலும் உலகிலேயே விலை உயர்ந்த காப்பியும் இதுதான்.  காப்பித் தோட்டக்காரர்கள் காப்பி மரத்தோடு புனுகு பூனையையும் சேர்த்தே பராமரிக்கிறார்கள்.

புனுகு பூனைக்கு இரவில்தான் கண் தெரியுமாம். அதனால், பகல் முழுக்க தூங்கும் அப்பூனையை கூண்டில் அடைத்து வைத்திருந்து இரவில் இரைக்காக திறந்து விடுகிறார்கள்.  பூனை தேர்ந்தெடுத்து உண்ணும் காப்பி பழங்கள்,  செரிமானம் ஆகி காப்பிக் கொட்டைகள் அது கழிக்கும் கழிவுகளில் வெளியேறும். அதை சேகரித்து பல கட்டமாக இயற்கை முறையில் கழுவப்பட்டு வெய்யிலில் நன்றாக காய வைக்கிறார்கள். 

பின், விரகடுப்பில் வறுத்து,  கல்உரலில் இடித்து காப்பி கொட்டைகளை பொடியாக்கப்படுகிறது. உலகத்தரமான காப்பி தூள்  விற்பனைக்கு இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது.  

லுவாக் காப்பி தயாரிப்பின் இருண்ட பக்கம்

இந்தோனேசிய சுற்றுலாத்துறை அதிக விளம்பரம் செய்யும் இந்தக் காப்பியினால், சுற்றுப்பயணிகளும் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். அதனால் வணிக ரீதியாக அதன் தேவையும், காப்பி பண்ணைகளுமே அதிகரித்திருக்கிறது. 

இதன் காரணமாக புனுகு பூனைகள் அதிகமாக சிறை வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. சிறிய கூண்டில் அவை பகல் முழுதும் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு காப்பி எக்ஸிகியூடிவ் அதிகாரியான tony wild குரல் எழுப்பினார். 

TRAFFIC Southeast Asia அமைப்பைச் சேர்ந்த  கிறிஸ் ஸ்டிப்பெர்ட்  கூற்றுப்படி, புனுகு பூனைகள் காடுகளிலிருந்து பிரிக்கப்பட்டு மிக பயங்கரமான சூழலுக்கு தள்ளப்படுவதாகவும், அவை தன் இனங்களோடு ஒன்றாக இருப்பதற்கு போராடுவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், அவை மிகச் சிறிய கூண்டுகளில் அடைக்கபடுவதுடன் குறைந்த அளவிலான உணவே பூனைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. இவ்வகை விலங்குகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாலும், விலங்குகள் தொடர்பான கட்டுப்பாடுகள் மீறப்படுவதாலும், விலங்குகளுக்கு மரணங்களும் அதிகமாகவே நிகழ்கிறது. ஆனால், மக்களுக்கு இது குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லை என கிறீஸ் கூறியிருக்கிறார்.  

அதே வேளையில் மனிதர்களின் நாவின் ருசிக்காக  பல்லாயிரக்கணக்கான புனுகு பூனைகள் கூட்டில் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதை மக்கள் தெரிந்துகொண்டால் அவர்கள் இந்தக் காப்பியின் மோகத்தை நிறுத்தக்கூடும் என்றும் அவர் மக்கள் அவையில் தெரிவித்தார். 

ஆனால், உண்மையில் நிலைமை மேலும் மோசமாகிதான் இருக்கிறது, PETA மற்றும் BBC போன்ற பல நிறுவனங்கள் , லூவாக் காப்பி விற்பனை நிலையங்கள் மற்றும் பண்ணைகள் மீது விசாரணை நடத்தியதில்,  சுகாதாரமற்ற நிலை மற்றும் கூண்டில் அடைக்கப்பட்ட பூனைகள் தீரா துயரத்தில் இருப்பதையும் அம்பலப்படுத்தினர்.  

லுவாக் காப்பியை மேற்கத்திய நாடுகளில் அறிமுகப்படுத்துவதற்கு பொறுப்பான காப்பி நிர்வாகியான tony wild, அக்காப்பி  தயாரிப்புக்கு எதிராக பரப்புரை செய்யும் நபராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. 

என்னுடைய நண்பர் பசுமை ஷாகுல் 14 சுவையையும் ருசி பார்த்தார். ஆனாலும்  எந்தக் காப்பி பொட்டலத்தையும்  வாங்கவில்லை. நான் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்தக் கருத்த பூனையையே பார்த்துகொண்டிருந்தேன். 

(தொடரும்)

வெள்ளி, 30 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 3


Pura Taman Ayun

சைலேந்திர அரசு,  ஸ்ரீவிஜயா அரசு, என மத்திய ஜாவாவை ஆக்கிரமித்த இந்திய அரசுப் பெயர்களை  பாலி தீவுகளில் காண்பது அரிது.  பாலி தீவில் புகழ்பெற்ற 7 கோயில்களில் ஒன்றான  Pura Taman Ayun மெங்வி தேசத்து ராஜகுடும்பத்தை  சேர்ந்த இந்து கோயிலாகும். பாலினீஸ் கட்டிடக்கலை வடிவமைப்பில் இந்தக் கோயிலை கட்டியிருப்பதாக கூறினாலும் நாம் அதைக் காணும்போது கேரளா கட்டிடக் கலையையே நினைவுபடுத்துகிறது. வைக்கோலால் வேயப்பட்டிருக்கும் கூரையில்  தொடங்கி, அதன் அடுக்கடுக்கான கோபுரங்கள்வரை கேரள கட்டிட வடிவமைப்போடு நிறைய ஒத்துப் போகிறது. ஆனாலும் இதன் வரலாற்றை படிக்கையில் சீன கட்டிட கலையம்சத்தில் புனரமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Mengwi  சாலையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலை சுற்றி பெரிய அகழி உள்ளது. அதில் தாமரை இலைகளை காண முடிந்தது. கோயிலை சுற்றிலும் 'ஆர்கிட்' பூ மரங்கள் பல வண்ணங்களில் பூத்து, ரம்மியமான வாசத்தை பரப்பியபடி இருந்தன. 

1634- ஆம் ஆண்டில்  மெங்வி ராஜ்யத்தின் ஆட்சியாளரான  Gusti Agung Putu என்பவரால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. ராஜ குடும்பத்திற்கான ஆலயமாகத்தான் இதை கட்டியுள்ளார்கள். குடும்பத்தின்  முன்னோர்களை வழிபடும் பாரம்பரியத்தை மெங்வி ராஜ்யமும் பின்பற்றியுள்ளது கூடுதல் தகவலாகும். முன்னோர்களுக்காக தனி தனி சந்நிதி ஒதுக்கி கோயிலை எழுப்பியிருக்கிறார்கள் என்ற தகவல் அவர்கள் வழங்கிய கோயில்பற்றிய சரித்திரக்குறிப்பில் இருந்தது.  

கோயிலை சுற்றியெழுப்பட்டிருக்கும் மதில் சுவருக்கு அப்பாற் இருந்துதான்  கோயிலின் உட்புறத்தை காண முடிந்ததே தவிர, இங்கும் கருவறைக்குடில்கள் அமைந்திருக்கும் உட்பகுதியை காண அனுமதிக்கவில்லை. 

வருடாந்திர திருவிழாவின்போது... 

கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கூடத்தில் சேவல் சண்டை நடக்கும்படியான ஒரு காட்சியை சிலை வடிவில் வைத்துள்ளனர். இஸ்லாமிய நாட்டில் சூது ஹராம் ஆயிற்றே? இன்னும் இங்கு சேவல் சண்டை நடக்கிறதா என கேட்டதற்கு, அனுமதி இல்லை. என்றாலும் திருவிழாவின்போது மட்டும் நடத்தப்படும் எனக் கூறினார்கள். விவசாய பூமி என்பதற்கு அடையாளமாக ஸ்ரீதேவி எனும் அன்ன தேவிக்கு, இந்த கோயிலுக்கு வெளியில் சிலை வைத்திருக்கிறார்கள்.  

Pura Alas Kedaton 

குரங்கு கோயில் என அறியப்படும் இந்தக் கோயிலை நாம் அனுமார் கோயில் என அழைக்கலாமா எனக் கேட்டால் தேவையில்லை என்றுதான் நான் சொல்வேன். காரணம் இதிகாச குரங்கிற்கு அங்குக் கோயில் எழுப்பவில்லை. குரங்கிற்குத்தான் அங்குக் கோயில் வைத்திருக்கிறார்கள். அதிகமான குரங்குகள் வாழும் வனத்தை ஒட்டினாற்போல் அந்தக் கோயில் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான குரங்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெரிய வௌவால்கள் அங்கு வாழ்விடம் கொண்டிருக்கின்றன. 


இந்தவனத்தில் இருக்கும் குரங்குகள் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் அவை சில வேளைகளில் கோபமாக தாக்கக் கூடுபவை எனக் கோயிலை பற்றிய விவரங்கள் கொடுக்கவந்தவர் சொன்னார். இந்து கோயில் என்று சொன்னதும் அதன் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கிறது எனக் காணும் ஆவலில் உட்புறம் செல்ல நினைத்தோம். பாரம்பரிய உடை இல்லாமல் செல்ல முடியாது என மறுத்துவிட்டனர்.

 இந்தக் கோயில்களை காண்பதற்கு மூன்று விஷயங்கள் தடையாக இருப்பதை மிக நன்றாகவே உணர்ந்துகொண்டேன். ஒன்று 6 மணிக்குள் போய்விட வேண்டும். இல்லையேல் கோயிலை அடைத்துவிடுகிறார்கள். இரண்டாவது அவர்கள் வரையறுத்து வைத்திருக்கும் பாரம்பரிய உடையில் போக வேண்டும். இல்லையேல் நேரம் இருந்தாலும் இந்தக் காரணத்தை சொல்லியே மறுக்கிறார்கள். மூன்றாவது கோயிலை அவர்கள் திறப்பதே இல்லை. பயணிகளால் அது பாழ் படாமல் இருக்கக் கோயில் திருவிழாவிற்கு மட்டும் திறக்கிறார்கள். 

இந்த விவரங்களைப் பாலி சுற்றுலா முகவர்கள் நம்மிடம் தெரிவிப்பதில்லை. அங்குப் போனதும்தான் தெரிய வருகிறது. இதை நேரிடையாக எங்கள் முகவரிடம் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. நல்ல காடு , அதைச் சுற்றிப்பார்க்க எங்களுக்கு வாய்ப்புதான் அமையவில்லை.

(தொடரும்)


வியாழன், 29 டிசம்பர், 2022

பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா ? பாகம் 2

குட்டா கடற்கரை

பாலியுனுடைய அழகே அதன் கடற்கரையில்தான் இருக்கிறதோ என எனக்கு நினைக்கத் தோன்றியது. கண்ணுக்குக் குளிர்ச்சியாக பெண்கள் சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்தனர். கடற்கரைக்கு நுழையும் வாசலெங்கும் வாசலை இரண்டாகப் பிரித்தது போன்ற கட்டிட அமைப்பு கொண்டிருந்தது.

வந்ததிலிருந்தே என்னை எந்த வகையிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத இந்த நகரத்தைக் கடற்கரையின் வழி வெறித்துப் பார்த்தபடியே இருந்தேன். பெரிய பெரிய அலைகள் என்னைச் சுருட்டி இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்று தோன்றியது. கடற்கரைகளில் குளிப்பதற்கு எனக்கு எப்போதும் ஓர் அச்சம் இருக்கும். கால்களை நனையவிட்டு பாதங்கள் பதிய நடந்து, அதைப் பின் நோக்கிப் பார்க்கவும் அலைகள் அதை அழித்துச்செல்ல வருவதைப் பார்த்து ரசிக்கவும் பிடிக்கும். அலைகள் மேலடிக்க, கரையில் அமர்ந்தபடி அந்த அணைப்பை உள்வாங்கி கிடப்பேன்.


தவிரவும் சூரியன் கடலுக்கு அப்பால் மெல்ல விழுந்து மறைவதைப் பார்ப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அம்மாதிரியான சூரிய உதயத்திடம் தனிமையில் எத்தனைக் கதைகளை பேசியிருப்பேன். அது ஓர் ரசனைதான். என்னையே மறக்கடிக்கும் அமானுஷ்ய நிகழ்வு ஒவ்வொரு தடவையும் நிகழ்த்திக் காட்டி விடுகிறது சூரிய அஸ்தமனம் .

கடலிலிருந்து எழுந்துவந்து பெரிய பெரிய அலைகள் மிரட்டியபடியே இருந்தன. இந்த ராட்சச அலைகளோடு surfing என்ற விளையாட்டை விளையாடுவதற்காகவே வெள்ளைக்காரர்கள் தனது சொந்த சறுக்கு பலகையைச் சுமந்துகொண்டு வருகிறார்கள். மயாமி கடற்கரையில் விளையாடும் இந்தக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கும் எனக்கு நேரில் பார்க்க இந்த குட்டா கடற்கரை உபாயம் செய்திருந்தது. சின்ன குழந்தைகள்கூட அவர்களுக்கு ஏற்ற மாதியான சறுக்கு பலகையை சுமந்து வந்து அலைகளை வம்புக்கு இழுத்து அதோடு போட்டி போட்டுக்கொண்டு சில முறை வெல்வதும் சிலமுறை அதனோடு தோற்பதும் பின் மீண்டும் பந்தயம் வைப்பதுமாக இருந்தனர்.


ஒரு இந்தோனேசியா அம்மா ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கையே உனக்கு நான் தலையை பிடித்துவிடுகிறேன். அல்லது தோளை பிடித்துவிடுகிறேன். 10 டாலர் கொடு என்றார். நான் வேண்டாம் என்று சொல்லியும் விட்டபாடில்லை . பின் ஒருவாறாக பேரம்பேசி தலையை மட்டும் பிடித்துவிட சொன்னேன். வெயிலுக்குக் கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது. அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரிடம் நல்ல காயாக தேடிக் குடித்துவிட்டு கிளம்பும் முன் கடற்கரையை மீண்டும் பார்த்தேன். சிலர் பட்டம் விட்டுக்கொண்டிருந்தனர். சூரியன் மறைவதற்கு இன்னும் நேரம் இருந்தது. சுருண்டு வந்த அலையின் வளைவிலிருந்து வெற்றிகரமாக வெளியில் வந்த வீரன் ஒருவன் தன்னைத்தானே ஊக்கப்படுத்தியபடி கரைக்கு எறிவந்தான். நான் அவனைப் பார்த்தபடியே திரும்பி வந்தேன்.

பூரா தானா லோட்

பாலி மொழியில்  'பூரா' என்றால் கோயில் என அர்த்தம். இந்தோனேசிய மொழியில் கோயிலை சண்டி என்றும் குறிப்பிடுவார்கள். குறிப்பாக ஜோக்ஜகார்தாவில் சுற்றியிருக்கும் எந்த இந்து கோயிலையும் அவர்கள்  பூரா எனச் சொல்வதில்லை. சண்டி என்றே வரலாறு கூறுகிறது. 

இந்து கோயில் எனச் சொல்லப்படும் தானா லோட், பாலி நகரைச் சுற்றியிருக்கும் 7 கடற்கோயில்களில் ஒன்றாகும்.  16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் பக்தரான  'டாங்யாங் நிரார்த்தா' என்கிற  சைவ சமய போதகரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டதென இணையத் தகவல் கூறுகிறது.

தானா லோட் கோயில் கடலுக்கு நடுவில் இயற்கையாகத் தோன்றிய மலையில் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் கோயில் திருவிழா காலங்களை தவிர்த்து மற்ற உபரி நாட்களில்  அதை பொது மக்களுக்குத் திறந்துவிடுவதில்லை. முட்டிவரை தண்ணீர் நிறைய அப்படியே கடலில் இறங்கித் தான் கோயிலை அடைய வேண்டும். அலைகளின் வேகம் அதிகமாகவே இருக்கிறது. கடல் நாகங்கள்தான் அலைகளாக மாறி  நம்மைத் தாக்குகிறதோ என எண்ணத் தோன்றியது. தீய சக்திகளிடமிருந்தும் கெட்ட ஆவிகளிடமிருந்தும் மக்களை   அங்கிருக்கும் கடல் பாம்புகள் பாதுகாத்து வருவதாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் பாலி வாசிகள்.  இப்போது அங்கு  எந்தக் கடல் பாம்புகளும் இல்லை.

மேலும் கோயிலின் வெளித்தோற்றத்தையும் முழுமையாகக் காண்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. ஒரு பகுதியை மேம்பாட்டுக்காகவும் மற்றோரு பகுதியைப் பாதுகாப்பு கருதியும் முடி வைத்திருந்தனர். கோயிலின் உட்ப்பிரகாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை.  

முன்னதாக கோயிலை பார்வையிடுவதற்கு முன்பு அங்கு குழாய்வழியே வரும் புனித நீரில் கைகால்களை கழுவி சுத்தம் செய்யச் சொல்கிறார்கள். பின் பூவையும் நெற்றியில் அரிசியையும் வைத்துவிடுகிறார்கள். அதன்பின்புதான் கோயிலைக் காண அனுமதிக்கப்படுகிறது.

(தொடரும்)


பாலி தீவுக்கு பயணம் போகலாமா வேண்டாமா? பாகம் 1


கொஞ்சோண்டு ரசனை, கேள்வி கேட்கும்போது முகத்தில் கொஞ்சம் கடுமை, கொஞ்சம்  புத்திசாலித்தனம்  நிறைய பணமிருந்தால் போதும்; பாலித்தீவையையும் ஒரு கை பார்த்துவிட்டு வந்துவிடலாம். 4 நாட்களுக்கு 300 டாலர் (1200 ரிங்கிட்) மற்றும் மேற்கொண்டு 300 ரிங்கிட் எனக்கு மட்டுமே அங்கே செலவாகியிருக்கிறது. இத்தனைக்கும் தங்குமிடத்தை நான் இணையத்தில் புக் செய்துக்கொண்டேன். அது போக ஏற்பட்ட செலவு இது. மேலும் இதுவரை நான் மேற்கொண்ட நிதிநிலை பயணங்களில் அதிகப் பணம் செலவாகியிருப்பது பாலியில்தான். கொஞ்சம் விவேகமுடன் நடந்துகொண்டால் பாலியில் நிதி நெருக்கடியில் பலியாகாமல் திரும்பி வந்திடலாம். பாலியல் சேவைகள் , மதுபானக் கொண்டாட்ட விரும்பிகளுக்குப் பாலி சரியான தேர்வு. தேனிலவுக்கு ஏன் பாலியை தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் என்னால் பதில் காண முடியவில்லை.

 குட்டிக் குட்டி தீவுகளும்கடற்கரைகளும் நிறையவே  இருக்கின்றன. அதைத் தவிர தேன்நிலவு கொண்டாட்டத்திற்கு சிறந்த இடமாக என் வரையில் தோன்றவில்லை.  பாலி தீவில் நான் ரசித்தது என்ன ?

2018-ஆம் ஆண்டு நான் சென்ற பயணத்தை பதிவு செய்கிறேன்.

மிகவும் பாதுகாப்பாக உணரக்கூடிய நண்பர்களில் ஒருவரான அருமை நண்பர் சாகுல் இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்தார். ஏர் ஏசியா விமானத்தில், 3 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணத்திற்கு பிறகு  தீவின் Ngurah Rai International விமான நிலையத்தை அடைந்தபோது இரவாகியிருந்தது. 10 டாலரில் தனியார் வாடகை வண்டி ஏற்பாடு செய்து குட்டா (KUTA) நகரை அடையலாம் என இணையத்தில் உறுதியான தகவல் இருந்தது. குட்டா நகருக்குச் செல்வதற்கு 20 நிமிடங்கள் எடுக்கும்.  அங்கே  வாடகை வண்டி ஓட்டுநர்கள் 20-லிருந்து 25 டாலர் வரை பேரம் பேசுகிறார்கள். விமானநிலையத்தை விட்டு வெளியில் வந்து விசாரித்தாலும் விலை ரொம்ப வித்தியாசமாகவே இருக்கிறது.

ஒரு வாடகை வண்டி  நிறுவனத்தில் 85,000 இந்தோனேசிய ரூபியா கேட்டார்கள்.  தெரிந்தவரை அது மட்டுமே குறைவான கட்டணம். நமது பணப்பையிலிருந்து பணம் கரையப்போகிறது என்பதற்கான பிள்ளையார் சுழியும் அங்குதான் தொடங்குகிறது.

நான் இணையத்தில் பதிவு செய்திருந்த தங்கும் விடுதி, கேளிக்கை மையம்கள் நிறைந்திருந்த மையப்பகுதியாகும். அதன் தொடக்கம் 2002 -ஆம் ஆண்டு அங்கு நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்தக் குண்டு வெடிப்பில் 22 உலக நாடுகளைக் சேர்ந்த 202 பேர் பலியாகியிருந்தனர். 324 பேர் படுகாயமடைந்தனர் என்பது வருத்தமான செய்தியாகும்.

விமான நிலையத்திலிருந்து குட்டா வந்தடையும்  சாலை முச்சந்திகளில் மஹாபாரத  கதாபாத்திர சிலைகள் பிரமாண்டமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். சிலைகளில் அழகு மற்றும் நேர்த்தியைக் காண முடிந்தது. மலேசியாவில் இம்மாதிரியான சிலைகளை, இந்திய நாட்டுச் சிற்பிகளால் செய்யப்பட்டு விமானம் வழி கொண்டுவரப்படும். அல்லது சிற்பியை வரவழைத்தே இங்குச் செய்வார்கள். இந்தோனேசிய உடை, ஆயுதம் மற்றும் கலாச்சார பாணியில் சிலையை வடிவாக வடித்திருக்கிறார்கள். மஹாபாரத கதா பாத்திரங்களான அர்ஜுனனும் கடோட்கஜனும் சீதை உபதேச சிலையும் கண்கள் விரியும் ஆச்சரியத்துடன் சாலை முச்சந்திகளுக்கு அழகூட்டுகின்றன.

பாலியில் வந்திறங்கிய அன்றே ஒரு சிம் கார்டுக்கு ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. காரணம் எங்குப் பயணிப்பதாக இருந்தாலும் இணையம் உங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். வழி கேட்டவர்களிடத்தில் வந்த முதல் ஆலோசனையே GOOGLE MAP உபயோகியுங்கள் என்பதுதான். பரவலாக  குறைந்த விலையில் கிடைக்கும் வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு GOOGLE MAP உதவியுடன் உணவு விடுதியிலிருந்து சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கு போய்வரலாம். மேலும் GRAB செயலி அங்கு உபயோகத்தில் இருக்கிறது . அதுவும் பயணிக்க உதவியாக இருக்கும்.

இந்தோனேசியா நாட்டுக்கு நான் இதற்கு முன்பு இருமுறை போயிருந்தாலும், பாலி தீவுக்கு சென்றது இதுதான் முதல் முறை. இந்தோனேசியா கொண்டிருக்கும் 33 மாகாணங்களில்,  பல அழகிய சுற்றுலாதளங்களும் தீவுகளும்  இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனிதனியே பல சிறப்பு அம்சங்கங்களைக் கொண்டதாக இருக்கின்றன. மேலும் சில தீவுகள்  தனி நாடுபோல செயற்படக்கூடியதாக இருக்கும். பாலியும் அவ்வாறான தீவுதான்.  கலை கலாச்சாரம், மதம், உணவு மற்றும் பணம் பட்டுவாடா வரைக்கும் மற்ற மாகாணங்களைக் காட்டிலும் அதிக வித்தியாசங்களை  பாலி கொண்டிருக்கிறது.

டென்பசார் இதன் தலைநகரமாகும். குடியரசு நாடான இந்தோனேசியா, இஸ்லாமிய சமயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது என்றாலும் பாலி தீவை மட்டும் கணக்கெடுக்கையில் 90% இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.  நாம் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அவர்கள் பின்பற்றும் இந்து சமயத்திற்கும் அதிக வேற்றுமைகளும்   சில ஒற்றுமைகளும் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஜோக் ஜகார்தாவில் இருக்கும் இந்து கோயில்களுக்கும் பாலியில் இருக்கும் கோயில்களுக்கும்கூட வித்தியாசங்கள் இருக்கின்றன.

இந்தியர்கள் வாசலில் கோலம் வரைந்து, பூ வைப்பதுபோல, பாலி மக்கள்,  தென்னை ஓலையில் செய்த சிறிய கிண்ணத்தில் பூ பலகாரங்களை வைத்து வாசலில் வைக்கிறார்கள். சிலர் ஊதுவர்த்தியையும் கொளுத்தி வைக்கின்றனர்.  குறிப்பிட்ட நேரமென்று இல்லாமல் எந்த நேரத்திலும் அவர்கள் அப்படி வைக்கின்றனர் . பெண்கள் கூந்தலில் பூ சூடிக்கொள்கின்றனர் .  இறை வழிபாட்டுக்குப் பிறகு நெற்றியில் பூசிக்கொள்ளும்  விபூதியாக அவர்கள் பயன்படுத்துவது உடைத்த அரிசியை.  ஒரு கிண்ணத்தில் பிசின் மாதிரியான ஒரு திரவத்தோடு உடைத்த அரிசையை கலந்து வைத்திருக்கிறார்கள்.  நெற்றியில் இட்டுக்கொள்ளும்போது அது அப்படியே ஒட்டிகொண்டு இருக்கிறது.

பாலி மக்கள் பாரம்பரிய உடை அணியாதவர்களை  கோயில் வளாகத்திற்குள் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. மேலும் வழிபாடு இல்லாத நாட்களில் அவர்கள் கோயிலையும் திறப்பதில்லை. சுற்றுப்பயணிகள் கோயிலின்  வெளித் தோற்றத்தை மட்டும் காணலாம். கோயிலை அவர்கள் 'பூரா' (PURA) என்று சொல்கிறார்கள். ஜோக்ஜகார்தாவில் சண்டி எனக் குறிப்பிடுவார்கள் .

கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் சோறு  பிரதான உணவாக அங்கு இருக்கிறது. டீ மற்றும் காப்பி வகைகள் கடைக்கு கடை மாறுபட்ட சுவையில் இருக்கிறது.

பாலியின்  உயிர் நாடியாகப் பாலி கடற்கரை இருக்கிறது. பணம் மாற்றும்போது மிகுந்த கவனம் தேவை.  தெருவுக்குத் தெரு அதன் விலை நிர்ணய  அளவு மாறுபடுகிறது.  குறிப்பாக 1. அமெரிக்க டாலருக்கு 14,899 இந்தோனேசிய ரூபியா மாற்றுகிறார்கள். நான்கு கடை தள்ளிப்போனால் 1. அமெரிக்க டாலருக்கு 14,000 ரூப்பியவாக குறைவாக இருக்கிறது அல்லது அதைவிடக் கூடுதலாகவும் இருக்கிறது. பணம் மாற்றும் இடத்தில் எனக்கு நேர்ந்த வித்தியாசமான அனுபவத்தை பிறகு சொல்கிறேன்.   

(தொடரும்)