கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை ரசிக்க நமக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, அதை கண்களால் பருகி, கைகளால் அள்ளி தமது நாட்டிற்கு கொண்டு போய்விட மாட்டோமா என அயல் நாட்டின் இயற்கை காதலர்கள் பரவசமடைகின்றனர். சுற்றுப்பயணம் என்றால், நம்மவர்கள் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே திரும்ப திரும்ப போவதற்கு ஆர்வம் கொள்கிறார்கள். கடற்கரை என்றால் போர்ட்டிக்ஷன் கடற்கரை. மலை பிரதேசம் என்றால் கேமரன் மலை அல்லது கெந்திங்மலை. தீவு என்றால் பங்கோர் தீவு. மாநிலம் என்றால் மலாக்கா அல்லது பினாங்கு மாநிலம், திருவிழா என்றால் கூட தைப்பூசத் திருவிழா என்று ஒரு சுழற்சி முறையில்தான் பயணம் இருக்கும்.
வாகன நெரிசல் இல்லாத, ஒலி
மாசு நெருங்காத, குப்பைக்கூழங்கள் இல்லாத, தேவைக்கு அதிகமாக
எதையும் வாங்க தோன்றாத ஓர்
அழகான இடத்திற்கு நான் உங்களை அழைத்துப்
போகிறேன் என்றால் வேண்டாம் என்றுதான்
சொல்லத் தோன்றுமா? மிக நீண்ட
இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம்
திரங்கானுவில் நான் எனது மூன்றுநாள்
விடுமுறையை மிக மிக சந்தோஷமாக
இதுவரை இல்லாத ஓர் அனுபவத்தோடு
கொண்டாடி வந்தேன். எனக்கு
ஏற்பட்ட சந்தோஷமும் அனுபவமும் உங்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதல்ல. புதியதாக ஓர்
உலகத்திற்குள் நீங்கள் சென்று வருவதற்கான வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.
தீபகற்ப மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற 8 தீவுகள் இருக்கின்றன.
1 தியோமான் தீவு
2. பினாங்கு தீவு
3. லங்காவி தீவு
4. தெங்கோல் தீவு
5. பெர்ஹெந்தியான் தீவு
6. ரெடாங் தீவு
7. பங்கோர் தீவு
8. லாங் தெஞா தீவு
நான் உங்களை திரங்கானு மாநிலத்திற்கும், அங்கு இருக்கும் லாங் தெஙா தீவுவுக்கும் அழைத்துச் செல்லவிருக்கிறேன். திரங்கானு என்றால் நம்மவர்களுக்கு அங்கு என்ன இருக்கிறது என்றே சொல்லத் தெரியாது. அதிகபட்சமாக கடற்கரைகள் மற்றும் கடலாமைகள் முட்டையிடுவதற்கு கரை ஒதுங்கும் என்றுமட்டுமே தெரியும். இதைப்பார்க்க அத்தனைத்தூரம் பயணம் செய்ய வேண்டுமா என்றுதான் நம்மவர்கள் நினைக்கிறார்கள். அதையும் தாண்டி என்ன இருக்கிறது என்பதை உங்களுக்கு சொல்லும் நோக்கத்தில் நானும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மனதை ஆசுவாசப்படுத்த எனது மூன்று சகதோழர்களும் திரங்கானுவிற்கு பயணப்பட்டோம். காரில் பயணம் செய்து 4 மணிநேரத்தில் திரங்கானுவை அடைந்த நாங்கள் மேலும் ஒரு மணி நேரம் பயணத்திற்குப் பிறகு கோலத்திரங்காவின் மேராங் படகுத்துறையைச் சென்றடைந்தோம்.
நோன்பு கடைபிடிக்கும் காலமாக இருந்ததால்
உணவுக்கடைகள் எங்கும் திறந்திறக்கவில்லை. என்றாலும் காராக் வட்டாரத்தில் காலை உணவை
முடித்திருந்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. மதியம் நாங்கள் கோலத்திரங்கானுவை சென்றடைந்த
நேரத்தில் நோன்பு திறப்புக்காக உணவு பொட்டலங்கள் தயாரித்துக்கொண்டிருந்த ஒரு கடையில்
மதிய உணவை வாங்கிக்கொண்டுதான் படகுத்துறைக்கு வந்தோம்.
மேராங் படகுத்துறை அமைந்திருக்கும் தென்
சீனக்கடல் மிக அமைதியாகவும், நீல ஆடை உடுத்தியும் எங்களைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டிருந்தது.
இரண்டு இரவு மூன்று பகலுக்கு எங்களின் காரை 30 ரிங்கிட் கொடுத்து, அங்கே ஏற்பாடு செய்திருக்கும்
கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தினோம். இங்கேயிருந்து 12-க்கும் மேற்பட்ட தீவுகளுக்கு
செல்வதற்கான படகு போக்குவரத்து இருக்கிறது. தீவுகளுக்கு தகுந்த கட்டணத்தைச் செலுத்தி
நாம் பயணப்படலாம். நானும் எனது தோழர்களும் Lang Tengah தீவில் விடுமுறையை கழிப்பதற்கான
முன்னேற்பாடாக படகு போக்குவரத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இணையத்திலேயே பதிவு செய்து
பணம் செலுத்தியிருந்தோம்.
எங்களின் படகு சவாரி நண்பர் தேவா எங்களை
வரவேற்க காத்திருந்தார். நோன்பின் காரணமோ அல்லது வார நாள் காரணமோ என்னவோ பயணிகள் மிகவும்
குறைவாகவே காணப்பட்டனர். Pulau Redang மற்றும் Pulau Perhentian இடையே அமைந்துள்ள ஒரு
சிறிய தீவுதான் பூலாவ் லாங் தெஙா அல்லது லாங் தெஙா தீவு. கடல் வழியே சுமார் 22 கிலோ
மீட்டர் தொலைவில் இந்தத் தீவு அமைந்திருக்கிறது. அதிலும் உலகின் மிக அழைகிய 100 தீவுகளில்
Pulau Perhentian 13-வது இடத்தில் இருக்கிறது. அதை ஒட்டியிருக்கும் லாங் தெஙா தீவு
எப்படி இருக்கும் என்று உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். மோட்டார் படகில் விரைவாக
பயணம் செய்தால் சுமார் 1 மணி நேரத்தில் நாம் அத்தீவை சென்றடைய முடியும்.
அந்த விரைவு பயணம், சொல்வதைப்போல இலகுவானது
அல்ல. கடலின் கொந்தளிப்பு மற்றும் அலைகளை கடந்து, மேல் அடிக்கும் கடலின் சாரலையும்,
உப்புக் காற்றையும் நாம் சமாளிக்க வேண்டும். அதைத் தாண்டி அங்காங்கே தென்படும் குட்டி
குட்டி தீவுகளும், கடலின் நீல நிறமும் சொல்ல முறையாத அழகினை காட்சிப்படுத்துவதோடு,
ஒரு சாகச சூழலை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது.
நாங்கள் படகின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நிற்க முயன்றோம், ஆனால் தோற்றுப் போனோம். கடலின் நடுப்பகுதிக்கு சென்றபோது கடலில் இருக்கிறோமா அல்லது வானத்தில் மிதக்கிறோமா என்ற மாயையை ஏற்படுத்தும் அளவுக்கு நீள் நிறம் நம்மை முழுவதும் ஆக்ரமிக்கிறது.
45 நிமிட இடைவிடாத மோட்டார் வாகனத்தின் பயணத்திற்குப்
பிறகு, எங்களின் படகோட்டியான தேவா சொன்னார், வானம் மழை பெய்வதற்கான அறிகுறியை கொடுக்கிறது.
கடலில் அலையின் கொந்தளிப்பும் அதிகமாவதுபோல் தெரிகிறது. அருகில் இருக்கும் ஒரு தீவில்
சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், அதற்குள் கடல் அமைதியானால் பயணத்தை தொடரலாம்
என்றார்.
கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன? ஒரு தீவைக் காண்பதற்கு வந்தோம். இப்போது இலவச இணைப்பாக இரண்டாவது தீவையும் காணப் போகிறோம் என்று நாங்கள் குதூகளித்தோம். எங்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சொல்லமுடியாத ஓர் அமைதியும் துக்கமும் எங்களை ஆட்கொண்டது. அப்படி என்னதான் அந்தத் தீவில் நாங்கள் கண்டது? அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.
(தொடரும்)
நன்றி : வானம்பாடி (3/7/2022)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக