வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 3


1950-களில் ஈயம் எடுப்பதற்காக சீனர்கள் சிலரை  பூர்வக்குடிகள் கிராமம் இருக்கும் சுவா ஆற்றங்கரையருகே குடியமர்த்தியிருக்கின்றனர் பிரிட்டிஷார். சில சீன ஆண்கள் பூர்வக்குடி பெண்களை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகளும் பிறந்திருக்கிறது. எனது தந்தையும் சீனர்தான் என்று பூர்வக்குடியான ஜெப்ரி தெரிவித்தார். பிரிட்டிஷ், ஆட்சிக்குப் பிறகு சீனர்கள் போஸ் லானாய் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு முந்திய வரலாறும் அதாவது பஹாங் சுல்தான் வரலாற்றிலும் செமாய் பூர்வக்குடிகளின் தொடர்பு இருப்பதாக செமாய் மக்கள் ஆதரப்பூர்வமாக நம்புகிறார்கள். பஹாங் மாநில சுல்தான்களில் ஒருவரான ராஜா புக்கிட் பேதோங், செமாய் மக்கள் வம்சாவழி என்று சொல்லப்படுகிறது.

இப்படி பல வரலாறுகளை, ஆதாரப்பூர்வமாகவும், எழுத்துப்பூர்வமாகவும், வாய்வழிப் பதிவாகவும்  செமாய் பூர்வக்குடிகாள் வைத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கான  கிராமத் தலைவரை இரண்டு வழிகளில் தேர்ந்தெடுக்கிறார்கள். முதலாவதாக பரம்பரை அடிப்படையிலும், இரண்டாவதாக அவர்களின் கெட்டிக்காரத்தனம்,  புரிதல், சமூகம் குறித்த தெளிவு, பிறரோடு உரையாடுதல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இப்போது தூணி என்பவர் அவர்களுக்கு ‘பாதின்’ (தலைவர்) ஆக இருக்கிறார்.

செமாய் மக்கள் கிராமத் தலைவர்களில் ‘ராஜா துப்பாய்’ என்பவர் முகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் இருந்தவர் அணிலைப் போல படு வேகமாக மரம் ஏறுவதற்கும், மரத்திற்கு மரம் தாவுவதற்கும் வள்ளுனராம். அதனால் அவருக்கு அந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு தடவை parachute-டில் பறந்துவந்து மரத்தில் சிக்கிய ஆங்கிலேயரை ராஜா துப்பாய்தான் காப்பற்றியுள்ளார்.



இப்படியான பல சுவாரஸ்யமான கடந்த கால வரலாறுகளை செமாய் மக்கள் பகிர்ந்துக்கொண்டனர்.  இந்த உரையாடல் முடிய மாலை ஆகிவிட்டது. எங்களுக்கு உணவு சமைப்பதற்காக மூன்று பெண்கள் பரப்பாக இருந்தனர். நான் அவர்களுக்கு உதவச் சென்றேன். பூர்வக்குடிகள் சமைக்கும் உணவு மட்டுமல்ல, பூர்வக்குடிகளின் உணவு என்பது வித்தியாசமாகத்தானே இருக்கும் என்ற ஆர்வம்தான். உண்மையில் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. காரணம் அவர்களின் உணவு மலாய்க்காரர்களின் உணவை ஒத்தியிருந்தது. ஆனால், ஒரே ஒரு உணவு மட்டும் வித்தியாசமானது பூர்வக்குடிகளுக்கானது. அவர்கள் மூங்கில் சோறு செய்திருந்தனர். அதாவது பதமான மூங்கிலை உடைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் உணவு. அது வெண்மையான வர்ணத்தில் மீ போல இருந்தது. அதை வேக வைத்து, மஞ்சள்-பால்  சோறாகவும், வெள்ளை சோறாகவும் தந்தார்கள். அதில் குழம்பு, தொட்டுக்கொள்ள பொறித்த மீன், இடி சம்பல் என்று விருந்து தடல்புடலாக இருந்தது. ருசியாகவும் இருந்தது. பூர்வக்குடிகள் இப்படிதான் சமைக்க பழகிக்கொண்டு விட்டனர் என்று அவர்கள் பின்பு சொன்னார்கள். நாகரீக மாற்றம் அவசியம்தானே. மனித இனமே கற்கால தொடக்கம்தான் இல்லையா…

உணவு வேளை வந்தது, செமாய் பெண்கள் சமைத்த உணவு, பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வரவேற்பறையின் நடுவில் வைத்தனர். உட்காருவதற்கு பாயை விரித்தனர். சோலார் விளக்கின் ஒளி எந்த நேரமும் நிற்றுவிடும் நிலையில் கண்ணை சிமிட்டிக் கொண்டிருந்தது. 8 மணிக்குமேல் விளக்கு எதுவும் எரியாது, தேவைக்கு மெழுகுவர்த்தி பயன்படுத்திக்கொள்ள பூர்வக்குடி தோழர் எங்களுக்கு அறிவுறுத்தினார்.


சாப்பிட அமர்ந்தோம். சாப்பிட்டோம். அப்போதுதான் ஒன்றை கவனித்தேன். பெண்கள் யாரும் அங்கு ஆண்களோடு அமரவில்லை. அவர்கள், சமைக்கும் இடத்தில் தனியே உட்கார்ந்து சாப்பிட்டனர்.

உணவுக்குப் பிறகு, சிறிது நேரத்தில் சோலார் விளக்கு அணைந்துக்கொண்டது. வீட்டிற்கு வெளியே தீ மூட்டப்பட்டது. அன்று பௌணமி என்பதால் நிலா  வெளிச்சம் அந்த அடர் கானகத்தின் நதியில் பட்டு மின்னிக்கொண்டிருந்தது.  என்னைச் சுற்றியே மிகப் பிரகாசமாக இருந்தது.  கூடவே மின்மினி பூச்சிகள் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.  இந்த ரம்மியமான சூழலை என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை வரும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. தனிமைதான் இந்நேரத்திற்கு  எத்தனை இனிமையைக் கொடுக்கிறது.

பக்கத்தில் ஒரு வீட்டிற்கு போயிட்டு சீக்கிரத்தில் வந்திடலாம் என்று பூர்வக்குடி பெண் என்னை அழைத்தார். இந்த இருட்டு நேரத்திலா? என்றதும் சிரித்தவர் எங்களுக்கு எல்லாமே ஒன்றுதான் என்றார். மோட்டார் படகில்தான் போகப்போகிறோம். சீக்கிரம் வந்திடலாம் என்றார்.  பூர்வக்குடி பெண்கள் கிட்டதட்ட எல்லாருமே படகை செலுத்துகிறார்கள்.  மூங்கிலால் கட்டப்பட்ட பூர்வக்குடிகளின் குடிலிலிருந்து  படகுக்குச் செல்லும் பாதை மிகவும் சறுக்கலானது.  நான் வரும்போதே மிகவும் சிரமப்பட்டுதான் ஏறி வந்தேன். அது ஞாபகத்திற்கு வரவே இரவு நேரத்தில் நான் அபாயத்தை நினைத்து, ஆசை இருந்தாலும் தவிர்த்து விட்டேன்.  தவிர எனக்கு  செமாய் மக்களின் தகவல்களை சேகரிக்க சில உரையாடல்கள் அவசியமாக இருந்தது.  அந்த உரையாடலுக்கான நேரம் எனக்காக  கடந்துக்கொண்டிருக்கும்போது எப்படி அதை தவிர விடுவேன்.

நெருப்பு வெளிச்சத்தில்  அவர்களோடு உரையாடத் தொடங்கினேன்.  நான் அவர்களின் விருந்தாளி என்பதால், மிகவும் மகிழ்ச்சியாகவே அவர்கள் என்னை அணுகினார்கள்.  நவீனத்திற்கு பழகிவிட்ட அவர்கள் பொருளாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள உரையாடலை தொடங்கினேன்.

தொடரும்..

பாகம்1: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html

பாகம்2: https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக