வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 5

செமாய் மக்களின் நம்பிக்கைகள்

சற்று ஆராய்ந்துப்பார்த்தால் கனவு குறித்த நம்பிக்கையும், கனவுப் பலன்களும் மனிதர்களிடத்தில் நிரம்பி இருக்கிறது. குறிப்பாக சீனர்களின் சமூகத்தில் மூட நம்பிக்கைகளும் கனவு நம்பிக்கைகளும் பெரிய அளவில் அவர்களின் வாழ்க்கையோடு  பிணைந்திருக்கிறது. பூர்வக்குடிகளுக்கு மட்டும் அது விதிவிலக்கு அல்ல. ஆனால், அனைத்து பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கையும் ஒரே மாதிரி இருப்பதில்லை.  மா மேரி பூர்வக்குடி சமூகத்தினரின் கனவு நம்பிக்கையை ஆராய்ந்தால் மிக ஆச்சரியமாக இருக்கும்.  அவர்களின் கனவுக் குறித்து ஆங்கிலேயர் ஒருவர் புத்தகமே போட்டுள்ளார்.  செமாய் பூர்வக்குடிகளின் கனவு நம்பிக்கை நமக்கு விசித்திரமாக தோன்றும். அது அமானுஷ்யத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. 

கொண்டாட்டம் அல்லது பண்டிகையில்லாத நாட்களில் அவர்கள் போலியாக ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளை செய்வதில்லை. அது கெட்ட சகுனமாக அமைந்துவிடும் என்று நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. பாடுவதுப் போல கனவுக் கண்டால், உற்சாகம் கொடுக்ககூடிய சம்பவம் நடக்குமென்று  அவர்கள் நம்புகிறார்கள்.  



அதற்கு ஓர் உதாரணம் சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு கடந்த தேர்தலையே உதாரணம் சொன்னார்கள்.  கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பூர்வக்குடி கிராமத்திற்கு வந்திருக்கிறார்.  ஒரு கலாச்சார நிகழ்ச்சி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  அவர்களின் பாரம்பரிய நடனத்தை தவிர்த்துவிடலாம் என்ற பூர்வக்குடியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்  வேறு வழியில்லாமல் அவர்கள் நடனம் ஆடியிருக்கின்றனர். தேர்தலில் என்ன நடந்தது என்று நாம் அறிவோம்.

ஆவி நம்பிக்கை மாதிரியே இவர்களிடத்தில் கடவுள் நம்பிகையும் இருக்கிறது. இவர்களின் கடவுள்  இயற்கைதான்.  யாராவது தவறு செய்தால், கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று நம்புகிறார்கள்.

பூமியை பிளக்ககூடிய சூழலில் (விவசாயத்திற்குகூட)  அனுமதி வேண்டியே மண் வெட்டியை பூமியை நோக்கி பாய்ச்சுகின்றனர்.  அதேபோல் காட்டில் இருக்கும் சமயங்களில் வாய்விட்டு சிரிக்கவோ, புன்னகைக்கவோ கூடாது. அதோடு வனத்தில் இருக்கும் எல்லா நேரத்திலும் யாரையும்  கிண்டல் செய்யவோ, பகடி வதை செய்யவோ கூடாது. அது மிருகமாக இருந்தாலும் சரி பிராணியாக இருந்தாலும் சரி. ஓர் உயிரை வனத்தில் கவலை கொள்ள செய்வது செமாய் பூர்வக்குடிகளுக்கு கெட்ட சகுனமாகும்.



செமாய் மக்கள் பூர்வீக கிராமமான போஸ் லானாய் எனும் கிராமம் தற்போது பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்களின் வழிவழியாக  உடனிருக்கும்  தெலோம் நதி, கேமரன்மலையிலிருந்து மாசடைந்து, மிகவும் அசுத்தமாக ஓடி வருகிறது.  காட்டுமரங்களை காட்டுத்தனமாக வெட்டி வெளியாட்கள் கொண்டு போகிறார்கள்.  இவர்களை வெளியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என நிறைய பிரச்னைகளை தற்போது செமாய் இன பூர்வக்குடி மக்கள் சந்தித்து வருகின்றனர்.  அதற்காக குரல் கொடுத்தும் வருகின்றனர்.


நான் முன்பே சொல்லியதுபோல, அவர்களின் சமூகத்தோடு நேரத்தை செலவழிக்கக்கூடிய இன்னொரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காமல் போகலாம்.  அதை மனதில் நிறுத்தியே ஒவ்வொன்றையும் நான் மிக கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

பூர்வக்குடிகள் பெண்கள் குறித்து எனக்கு சற்று கவலை ஏற்பட்டது. எனக்கு உணவு பரிமாரிய பெண்கள் குறித்து சொல்லியிருந்தது நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பெண்கள் அடுப்பாங்கரையில் சாப்பிட்டதாக சொல்லியிருந்தேன்.  அந்தக் காட்சி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத்தான் கொடுத்தது. பூர்வக்குடிகள் மத்தியில் ஆண்-பெண் பேதமில்லை என்று கூறிக்கொண்டிருந்த மத்தியில், அவர்கள் பழகிவரும் நாகரீகம் ஆண்-பெண் பேதத்தையும் கற்று கொடுத்துவிட்டதோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. 

கலந்துரையாடலின்போது கூட அவர்கள் தனியே தான் அமைர்ந்திருந்தனர்.  இதுக்குறித்து நான் ஆழமாக எதையும் கேட்கவில்லை. அவர்களுக்கு சங்கடம் ஏற்பட்டால், உரையாடலில் தடைபடுமோ என்ற ஐயப்பாடு இருந்தது.


செமாய் பெண்களிடம் விடைபெற்று கிளம்பும்போது,  மிகவும் நெரிழ்சியான   தருணமாக இருந்தது. என் பெயரை அவள் சொல்லும்போது,  உச்சரிப்பு வேறுமாதிரியாக இருந்தது. நான் கட்டி அணைத்து விடைபெற்றேன்.  அவர்களிடமிருந்து  கொண்டு வருவதற்கு  நான் எதையும் வேண்டுவரவில்லை. அவர்களின் போராட்டங்களில் பங்கு எடுத்துக்கொள்வதைத் தவிர.  அங்கிருக்கும் ஒரு மரத்தில் வனத்திடம் அனுமதி வாங்கி என் அடையாளத்தை மட்டும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

முற்றும்..

பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html 

பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html

பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html

பாகம் 4 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/4.html 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக