வியாழன், 26 ஆகஸ்ட், 2021

போர்களத்திலும் அரசியல் களத்திலும் நின்ற போராட்டப் பெண்கள்

சுதந்திரம் என்பது மிக எளிமையாக பெறக்கூடியது இல்லை.  சுதந்திரம் என்பது சுக்கா மிளகா? என்று கேள்வி கேட்கிறது பாரதிதாசனின் ஒரு கவிதை. இன்று நோகாமல் நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் 1957-க்கு முன் ஜப்பானியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் பலர் சிந்திய ரத்தத்திலும், வேர்வையிலும் கண்ணீரிலும் உருவானது. பலரின் தியாகத்தில் கிடைத்த இந்தச் சுதந்திர நாளை  நாம் ஒருநாள் விடுமுறையில்  குதூகளித்து மகிழ்கிறோம்.

சுதந்திரத்திற்கு பிறகான நமது மலேசிய அரசியல் வரலாறு என்ன? அதில் நம்மவர்களின் பங்களிப்பு மற்றும் தியாகங்கள் என்ன? வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் நம்மவர்கள் குறித்த பதிவுகளை முறையாக கையாள்கிறோமா?  வரலாற்றில் இடம் பிடிக்காத ஓர் சிப்பாயாக பணியாற்றியவர்களின் குறிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறதா? இவற்றை குறித்த நம் புரிதல்கள் என்ன?  இருக்கும் ஆவணங்களும் செய்திகளும்  சரியாக நாம் புரிந்துக்கொள்ளும்படிதான் இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா?  நம் தாய் மொழியில் அதை வாசிக்க முடியுமா? உள்ளிட்ட பல்வேறான கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடிந்தால் வரலாற்றில் அறிந்துக்கொள்வதிலும் நாட்டின்மீதான விசுவாசத்திலும் உங்களுக்கு சிறிதாவது ஈடுபாடு உள்ளது என்று சொல்லிக்கொள்ளலாம்.

இந்நிலையில் மலேசிய வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு குறித்து இன்னும்கூட  சரியான முறையில் பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது.  இரண்டாம் உலகப்போரின்  காலக்கட்டத்தில் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு ஆளான சிபில் காத்திகேசு முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக இங்கிருந்து ஐ.என்.ஏ இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையில் முக்கிய அங்கம் வகித்த ஜானகி ஆதிநாகப்பன் மற்றும் அதே படையில் ஒரு சிப்பாயாக போராடிய ‘ராஜாத்தி’ வரை சரியாக  இந்த மலேசிய மண்ணில் பேசப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு பத்திரிக்கை துறைக்கு வந்த காலத்திலிருந்தே இருந்துவருகிறது.

வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சுதந்திர தினத்தின் சிறப்பு மலரை அலங்கரிக்க மட்டும்தான், சுதந்திர போராட்டவாதிகளும் மலேசிய அரசியலில் முத்திரைப் பதித்தவர்களும் தேவைப்படுகிறார்களா?  இன்றைய நியூஸ் ‘பேப்பர்’ நாளைய வேஸ்ட் பெப்பர் என்ற ஆங்கில பதம் ஏனோ மனதைச் சுடுகிறது.  இருந்த போதிலும்  மக்களுக்கு நினைவுபடுத்தும் பொருட்டு அவர்களை தொடர்ந்து பதிவு செய்ய வேண்டிய கடப்பாடும் ஊடகங்களுக்கு இருக்கிறதும் மறுப்பதற்கில்லை.

அந்த வகையில் மலேசிய அரசியலில் ஈடுபட்ட நம் பெண்களை கௌரவிக்கும் வகையிலும் இந்த 64-வது சுதந்திர தினத்தில் அவர்களின் சேவையை போற்றும் வகையிலும் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன். 


சிபில் கார்த்திகேசு

சிபில் கார்த்திகேசு  மலேசியாவில் சீனர்கள் மத்தியில்  மிகவும் புகழ்பெற்ற ஒரு வீரபெண்ணாவார்.  இந்தோனேசியா,  சுமத்திராவில் இருக்கும் மேடானில் 1899-ஆம் ஆண்டு அவர் பிறந்தார்.  சிபிலின் வாழ்க்கை வரலாறு மலேசியாவில் தொடங்கி  இங்கிலாந்தில் முடிந்ததாகும். அவர் மலேசியராகவே கருதப்படுகிறார். 1941- ஆம் ஆண்டில்  மலாயாவில் ஜப்பான்  ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  லட்சக் கணக்கான மக்கள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்கு  ஆளானார்கள்.  இதனால், ஜப்பானிய ஆதிக்க  எதிர்ப்புப் போராளிகள்  மறைந்திருந்து  ஜப்பானியர்களை  தாக்கினர். அத்தாக்குதலில்  போராளிகளும் காயமடைந்தனர். அவர்களுக்கு ரகசியமான முறையில்  டாக்டர் கார்த்திகேசுவும், சிபில் கார்த்திகேசுவும் மருத்துவம் பார்த்தனர். ஜப்பானியர்களுக்கு இவ்விவகாரம் தெரிய வந்தால், இருவரையும் கைது செய்து சித்ரவதை செய்யத் தொடங்கினர். “போராளிகள் பெயரைச் சொன்னால்  போதும்” என்றும்  விட்டு விடுகிறோம் என்றும்  மன்னித்து விடுகிறோம் என்றும் ஜப்பானியர்கள் ஆசை காட்டினர். உண்மையைச் சொன்னால் அதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எத்தனை எத்தனை என்று  அந்த சரித்திர நாயகி உணராமல் இல்லை.  தனக்கு தெரிந்த உண்மையைச் சொல்லாமல் எல்லா வகை சித்ரவதைகளையும்  தாங்கிக் கொண்டார். பின்நாளில் சிகிச்சைக்காக இங்கிலாந்து சென்றவர் அங்கேயே மரணத்தை தழுவினார். அவருடைய நல்லுடல் ஸ்காட்லாந்தில்  புதைக்கப்பட்டது. பின்னர் அவரின் பூதவுடல் சமாதியிலிருந்து 20.3.1949-ல் தோண்டி எடுக்கப்பட்டு, கப்பல் வழியாக பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு ஈப்போவில் அடக்கம் செய்யப்பட்டது.

 


எலிஸி சோமசுந்தரம்

1952-ஆம் ஆண்டு நாட்டில் முதல் முனிசிபல் தேர்தல்  கோலாலம்பூரில் நடந்தது. அதில் மூன்று இந்தியப் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.  தேர்தலில் வெற்றி பெற்ற டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணனைதான்  நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அந்தத் தேர்தலில் அம்னோவை பிரதிநிதித்து போட்டியிட்ட  எலிஸி சோமசுந்தரத்தையும், மலாயா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்து போட்டியிட்ட திருமதி இராமச்சந்திரனையும் அறிந்ததும் இல்லை. அது குறித்த தெளிவான பதிவுகளும் இல்லை. அம்னோவின் தலைவர், அம்னோவின் பெண் வேட்பாளராக எலிஸியை  நிறுத்தியது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  அந்த வகையில் இன்று மலாய்க்காரர்களின் தேசிய கட்சியாக இருக்கும் அம்னோவில் முதல் பெண் வேட்பாளராக தேர்தலில் களம் இறங்கிய முதல் பெண் வேட்பாளர் என்ற பட்டியலில் இடம் பிடிப்பவர் இந்தியப் பெண்ணான எலிஸி என்று வரலாறு பேசுகிறது. அந்தத் தேர்தலில் அவர் பெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்.  எலிஸி சோமசுந்தரம் பொதுபணிகளில் அதிகம் ஈடுபட்டவர் என்ற குறிப்பை தவிர வேறு எந்த தகவல்களும் கிடைக்கபெறவில்லை.  1950-களில் அவருடைய கணவர் சோமசுந்தரம் ம.இ.காவில் மத்திய செயலவை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது.

 


திருமதி இராமச்சந்திரன்

1952-ஆம் ஆண்டு நாட்டில் நடந்த  முதல் முனிசிபல் தேர்தலில் போட்டியிட்ட மூன்று இந்தியப் பெண்களில் திருமதி இராமச்சந்திரனும் ஒருவர். இவரின் சொந்தப் பெயர் என்ன வென்று தெரியவில்லை. தனது கணவரின் பெயரிலேயே அவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.  திருமதி இராமச்சந்திரன் மலாயா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்து போட்டியிட்டார்.  அம்னோவிலிருந்து விலகி மலாயா சுதந்திரக் கட்சியை தொடங்கிய டத்தோ ஓன் பின் ஜபாரின் தேர்வாக திருமதி இராமச்சந்திரன் இருந்ததும் ஒரு வரலாற்று பதிவுதான். இவரைக் குறித்தும் வேறு எந்தப் பதிவுகளும் பெறமுடியவில்லை.

 


டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன்

 மலேசிய வரலாற்றில் 1952-இல்  நடந்த முதல் முனிசிபல் தேர்தலில்அரசியல் வேட்பாளராக விண்ணப்பித்து வெற்றிப்பெற்ற முதல் பெண் என்பதுடன், டான்ஶ்ரீ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் நகர மன்ற உறுப்பினராக இடம்பெற்ற முதல் மலேசிய இந்தியப் பெண் என்ற பெருமைக்கும் உரியவராவார். அவருக்குப் பிறகு டான்ஶ்ரீ விருதை இந்தியப் பெண்கள் எவரும் இன்னும் பெறவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. முனிசிபல் தேர்தலில் மலாயா சுதந்திரக் கட்சி சின்னத்தில் ம.இ.கா வேட்பாளராக களமிறங்கிய  தேவகி கிருஷ்ணன், அதே ஆண்டில் நடந்த முனிசிபல் சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் பெண்களுக்கு கிடைக்கும் உயரிய விருதுகளான  ‘தொக்கோ வனிதா’ விருதும் ‘துன் பாத்திமா’ விருதும் டான்ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் பெற்றிருக்கிறார் என்பதும் பெருமைக்குறிய விஷயமாகும்.

புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்

 புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் தனது 18-வது வயதிலேயே  இந்திய சுதந்திர போராட்டத்திற்காக களமிறங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர போராட்ட செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இவர் ஜான்சிராணி படைப் பிரிவில் சேர்ந்து பயிற்சி பெற்று பர்மாவரை சென்று போர்களத்தில் போராடியிருக்கிறார். 1980களில் ம.இ.காவின் மேலவை உறுப்பினராக இரு தவணைகள் இருந்திருப்பதோடு செனட் சபையில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண்  ஜானகி ஆதிநாகப்பன்தான். 1997-ல் புதுடில்லியில் கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர பொன்விழாவில், இவருக்கு உயரிய விருதான பத்மஶ்ரீ பட்டத்தை வழங்கி இந்திய அரசாங்கம் கௌரவப்படுத்தியது. இந்திய நாட்டில் அந்நாட்டின் உயரிய விருதை பெற்ற முதல் மலேசியர்  புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன்தான்.

சத்தியவதி நாயுடு

இந்திய சுதந்திர போராட்டத்தின் (ஐ.என்.ஏ) ஜான்சிராணிப்  படைப் பிரிவில் சக்தியவதி நாயுடுவும் ஒரு வீராங்கனையாக போராடியவர்தான். அவர் ஜான்சிராணி படையில் ‘துணைத் தளபதியாக இருந்தார்.  ம.இ.கா மத்திய செயலவையின் முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.  கட்சியின் மாதர் பிரிவில் இருந்த இவர், பிரச்னையோடு கட்சியை நாடி வரும் பெண்களை சந்தித்து நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பினையும் பெற்றிருந்தார்.


ராஜாத்தி (‘ஜான்சிராணிப்  படைப் பிரிவில் மலேசிய சிப்பாய்’)

 கோலாலம்பூர் பத்து வட்டாரத்தில் அம்பாட் டின் அடுக்குமாடியில் வசித்து வந்த இவரை நான்  புவான் ஶ்ரீ ஜானகி ஆதிநாகப்பன் மறைவின் போது அவரின் உறுதி சடங்கில் கலந்துக்கொள்ள வந்திருந்தபோது சந்தித்தேன். நடுத்தர குடும்ப சூழலைக் கொண்டிருந்த அவரை நேர்காணல் எடுக்க சம்பதமும் பெற்றிருந்தேன். ஆனாலும், அம்முயற்சிக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமலே போனது. ஆனாலும் கிடைத்த தகவலை பதிவு செய்வதும் அவசியமானதுதானே.

 

ராசம்மா பூபாலன்

மலாயாவில் சுதந்திரத்திற்காக போராடிய பெண் போராளிகளில் ராசம்மாவும் ஒருவர். அவர் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சிராணிப்படையில் இருந்த இவர் இரண்டாம் உலகப் போரின்போது 16 வயதில் பர்மாவில் பணியாற்றினார். மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளியில் தனது ஆசிரியப் பணியைத் தொடங்கினார். அவர் மலாயா மகளிர் ஆசிரியர்கள் கூட்டமைப்பை (WTU) 1960 இல் நிறுவினார்.  பெண் ஆசிரியர்களுக்கு சமமான ஊதியத்தைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் அந்த கூட்டமைப்பு. இவர்கள் மேற்கொண்ட முயற்சியிலும் போராட்டத்திலும் 1964 இல், ஆண்களுக்கு  சமமான ஊதியத்தை அடைவதில் அந்த அமைப்பினர் வெற்றி பெற்றனர்.

 


தோ புவான் உமா சம்பந்தன்

ஒரு பட்டதாரியான உமா சுந்தரி , 1956-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி துன் வீ.தி.சம்பந்தனை கரம் பிடித்து உமா சம்பந்தன் ஆனார். தோட்ட துண்டாடலுக்குப் பிறகு, தோட்டத் தொழிலாளர்களும் முதலாளிகள் ஆகலாம் என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்த துன் சம்பந்தன், தோட்ட மக்களிடம் பத்து வெள்ளி பிரச்சாரத்தை தொடங்கினார். அந்தப் பிரச்சாரத்தில் துன்னோடு இணைந்து சேவை செய்தார் உமா சம்பந்தன். அந்தப்  பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்.  துன் சம்பந்தன் காலமானப்பிறகு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக பத்து ஆண்டுகள் சேவை செய்தார் தோ புவான் உமா சம்பந்தன். பின் சில குறிப்பிடவிரும்பாத காரணங்களுக்காக  விலகிக்கொண்டார்.  பெண்களின் முன்னேற்றத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவின் பெண்கள் மாநாடுகளில் கலந்துக்கொண்டிருக்கிறார் உமா சம்பந்தன். 1992-ஆம் ஆண்டு துன் பாத்திமா தங்கப் பதக்க விருது இவருக்கு வழங்கி கௌரவித்தார்கள். 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ புவான் உமா சம்பந்தனுக்கு கோலாலம்பூர் இந்திய சங்கம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி சிறப்பித்ததுடன், அஞ்சல் தலையையும் வெளியிட்டது. 

 மீனம்பாள் ஆறுமுகம்

ம.இ.காவின் நீண்ட நாள் உறுப்பினரான இவர், 1975 முதல் 1978 வரை மத்திய செயற்குழுவில் இடம் பிடித்திருந்தார். ம.இ.கா- வின் முதல் தேசிய மகளிர் பகுதி தலைவர் என்ற பெருமைக்குரியவரும் இவரே. இவரின் கணவர் ஆறுமுகமும் பினாங்கு ம.இ.கா கிளையின் தலைவராக இருந்தார். மீனம்பாள் ஆறுமுகத்திற்கு 2014-ஆம் ஆண்டு ம.இ.கா நேத்தா ஜி அரங்கத்தில் சிறப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில்தான் நான் அவரை முதல் முறையாக பார்த்ததோடு, அவரைக் குறித்து தெரிந்தும் கொண்டேன். பிரபல பாடகர்களான எலிகேட்ஸ் சகோதரர்களின் தாயாரான மீனம்பாள் ஆறுமுகத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்த பதிவுகளும் சரியாக எழுதப்படவில்லை.

போராட்டங்களில் பெண்கள்

அடிப்படை உரிமைக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் தோட்டங்களில் வேலை செய்த பெண்கள் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுவும் விடுதலையை நோக்கிய ஒரு போராட்டமாகவே நான் காண்கிறேன்.  நாட்டில் ஒரு சில மாநிலங்களில் தொடங்கிய இந்திய சங்கங்களில் இணைந்து இந்தியப் பெண்கள் பல்வேறு சேவைகளிலும், போராட்டங்களிலும் களம் கண்டிருக்கின்றனர். 1947-ல் கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டத்தை பெண்களே ஒன்று கூடி நடத்தியதை ஜனநாயக  நாழிதல் பதிவு செய்திருக்கிறது.  

இன்றுவரை பல கட்சிகளிலும் அமைப்புகளிலும் நமது பெண்கள் ஈடுபட்டுக் கொண்டும் சேவையாற்றிக்கொண்டும் இருக்கின்றனர். அவர்களை காலத்தால் பதிவு செய்ய வேண்டிய கடப்பாட்டையும் அந்தக் கட்சிகளும் அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி : தமிழ்மலர் 29/8/2021

மேற்கோள்: 200 ஆண்டுகள் தமிழர் வரலாறு

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக