வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செமாய் சமூகத்தினர் (மலேசிய பூர்வக்குடியினர்) பாகம் 2



உள்
வனத்தின் உள்ளிருக்கும் அந்த கிராமத்திற்கு, ‘தெலோம்’ நதி வழியாக செல்ல வேண்டும். தெலோம் நதி  செமாய் பூர்வக்குடிகளின் வாழ்க்கையோடு பிண்ணி முடிஞ்சிருக்கும் ஒரு நதியாகும். மோட்டார் படகெடுத்து சுமார் 1 மணி நேரம் பயணம் செய்து வனத்திற்குள் செல்ல வேண்டும்.

இப்படியாக படகில் பூர்வக்குடி கிராமத்திற்குச் செல்வது எனக்கு இரண்டாவது அனுபவமாக இருந்தாலும் இது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். மிகப்பழமையான காட்டுமரங்கள், செடிகள், கொடிகள், அரிய வகைப் பறவைகள், தும்பிகள், வண்ணத்துப்பூட்சிகள், என மனதை சிதறடிக்கிறது அந்தப் பயணம். நதியில் காணப்படும் கற்பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமிக்ஞைகளாக பூர்வக்குடிகளுக்கு இருக்கிறது. அந்த சமிக்ஞயை அவர்கள் வரும்போதும்-போகும் போதும் மீறுவதேயில்லை. சீரான ஒரு ஒழுங்கு இருந்தது.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே அவர்கள் கிராமத்திற்கு படகைச் செலுத்துகிறார்கள். இந்த நேரம் தவறினால் மறுநாள்தான் நாம் பயணத்தை மேற்கொள்ள முடியும். ஆண்-பெண் இருபாலருமே படகைச் செலுத்துகிறார்கள். நான் படகில் ஏறுவதற்கு முன்பு, பதின்மவயது மதிக்கதக்க சிலரைப் பார்த்தேன். கழுத்துவரை தண்ணீர் நிற்க கையில் ஏதோ தூக்கி பிடித்தபடி 5-6 பேர் நதியில் நடந்துபோய்கொண்டிருந்தனர். கரை வந்ததும் கையில் இருந்ததை உதறி மேல் சட்டையாக அணிந்துக்கொண்டு நடையைக் கட்டினர். இதிலிருந்து நதி ஆழமில்லை என்பதும் தெரியவருகிறது.




சுமார் ஒரு மணிநேர பயணத்திற்குப் பிறகு, மூங்கிலால் அமைக்கப்பட்ட குடில்கள் அமைந்தப் பகுதியில் படகு நின்றது. வானின் நீல நிறத்தில் புதிய ஓர் உலகிற்கு வந்துவிட்டமாதிரி நான் உணர்ந்தேன். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவீன நாகரீகத்திற்கு நன்கு பழகிவிட்டவர்களாக இருந்தார்கள். இவர்களின் வீடு, தனி அறைகள் வைத்து கட்டப்பட்டிருந்தது. சமையல் அறையும் இருந்தது. கழிப்பறை மற்றும் குளியலறையை வீட்டிற்கு வெளியில்  கட்டியிருந்தார்கள். தண்ணிர் பயன்பாட்டுக்கு  மலைப்பகுதியிலிருந்து குலாய் இணைத்திருந்தனர். பனியுருகி நீராக வருவதுபோல், வனத்திலிருந்து வந்த தண்ணீர் ஜில்லென இருந்தது. இவர்களில் பலர் நன்கு படித்திருந்தனர். சில பூர்வக்குடியின் வாரிசுகள் பலகலைக்கழகத்தில் பயில்வதையும் அறியமுடிந்தது.

மற்ற பூர்வக்குடிகளைக் காட்டிலும் இந்த செமாய் பழங்குடி சமூகம் மலேசிய  வரலாற்றில் வழுவான இடத்தைப் படிக்கின்றனர். இரண்டாம் உலகப் போரிலிருந்து இவர்கள் மலேசிய வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடத்தினை பிடித்திருக்கின்றனர்.

இரண்டாம் உலகப் போரின் போது மலேசிய நாட்டில் ஊரடங்கை ஜப்பான் அறிவித்திருந்த காலத்தில், ஜப்பான்காரர்கள் செமாய் மக்கள் வசித்த வன குடியிருப்பின் வழியே, கம்யூனிஸ்ட் போராளிகளான சீனர்களை தேடிப்பிடிக்க போயிருக்கின்றனர். அந்நேரத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்க, ஜப்பானியர்கள் செமாய் குடியிருப்பில் ஒதுங்குவது உண்டு. அப்பொழுதுவீட்என்பவர் பழங்குடிகளின் தலைவராக இருந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் போராளிகளை பிடிப்பதற்கு பூர்வக்குடிக்ளின் உதவியையும் நாடியிருக்கின்றனர் ஜப்பானியர்கள்.  

அதே வேளையில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆதரவாக ஒரு படையாகவே செயலாற்றியிருக்கின்றனர் செமாய் பூர்வக்குடிகள். வரலாற்றில் பெரிதாக  இந்த விஷயங்கள்  பேசப்படவில்லை என்றாலும் அவை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடவேண்டிய விஷயமாகும். கம்யூனிஸ்ட் போராளிகள் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு தலைவலியாக இருந்தபோது, காட்டில் மறைந்திருந்த அவர்களை பிடிப்பதற்கு பிரிட்டிஷார் நாடியது பூர்வக்குடிகளைத்தான் . காட்டில் மூலை முடுக்கையெல்லாம் விரல் நுனியில் வைத்திருந்த பூர்வக்குடிகளின் உதவி மிக அவசியமானதாக பிரிட்டிஷாருக்கு இருந்தது. பூர்வக்குடிகளின் தலையீட்டால், கம்யூனிஸ்களும் மிக கவனமாக இருக்க வேண்டியதாக இருந்தது. பிரிட்டிஷாருக்கு ஆதரவான பூர்வக்குடி படையில், குழுவுக்கு  8 பூர்வக்குடியினர் அங்கம் வகித்தனர். இந்தக் தகவல்கள் எழுத்து பூர்வமாக பதிவில் இருந்தாலும், மறக்காமல் தங்களின் அடுத்த சந்ததியினருக்கு கிடத்துவதை தவறுவதில்லை. மேலும்,  அந்தக் காலக்கட்டத்தில்  விமானத்திலிருந்து உணவு கொண்டு வந்து பூர்வக்குடிகள் வசிக்கும் கிராமத்தில் போட்டுச் சென்றதையும் அவர்கள் நினைவு படுத்தினர். விமானம் தரையிரங்கும் இடம்கூட பிரத்தியேகமாக அந்த வனத்தில் இருந்திருக்கிறது.



இந்த சமூக மக்கள் வரலாற்றில் பேசுவதற்கு மற்றுமொரு காரணம், Fort Dixon எனும்காட்டு டிக்சன் கோட்டை’. பிரிட்டிஷ் கட்டிய இந்தக் கோட்டை பழங்குடி மக்களின் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டிருக்கிறது. நாம் சந்தித்த பலர் அங்கு கல்வி பயின்றவர்களாகத்தான் இருந்தார்கள். அதோடு, கிளினிக், தங்கும் விடுதி, ராணுவ ஆயுதங்களை வைக்கும் கிடங்காகவும் டிக்சன் கோட்டை இருந்திருக்கிறது. அங்கு வேலை செய்யும் பழங்குடிகளுக்கு மாதச் சம்பளமாக 75 ரிங்கிட் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்டை காட்டின் மையப்பகுதியில், 1955-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. டிக்சன் என்பவர் அங்கு கொலைசெய்யப்பட்ட ஒரு பிரிட்டிஷ் அதிகாரியாவார். அவரின் ஞாபகமாகவே கோட்டைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.  கோட்டை பயன்பாட்டில் இருந்தபோது டாக்டர் போல்டன்  என்கிற ஆங்கிலேய மருத்துவர் மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறார். அவர் பூர்வக்குடிகளுக்கும் டாக்டராக இருந்திருக்கிறார். நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு அந்தக் கோட்டை மலாயா ராணுவத்தினரின் வசம் வந்தது.

தொடரும்..

பாகம் 1 வாசிக்க  https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக