1990-க்கு முன்பு காட்டுப் பிரம்பு, தவளை, பிசின் உள்ளிட்ட வன உருப்பிடிகளை விற்று, அப்பணத்தைக் கொண்டு தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்திருக்கின்றனர். 1990-க்குப் பிறகு பூர்வக்குடிகள் ரப்பர் மரம் நட்டு அதன் வழியே பொருளாதாரத்தை ஈட்டுகின்றனர். ரப்பர் விதைகளை அரசே அவர்களுக்கு வழங்குகிறது. அதுப்போக வனத்தை விட்டு வெளியிலும் சிலர் வேலை செய்கின்றனர். பள்ளியில் பாதுகாவலராகவும், சமையல்காரர்களாகவும் அவர்கள் வேலை செய்கின்றனர்.
மேலும்
சிலர், சின்னதாக மீன், இறால் ஆகியவற்றை வளர்த்து
உணவுக் கடைகளுக்கு விற்கிறார்கள். சீசன்
காலத்தில் டுரியான் பழம் இவர்களுக்கு நல்ல வருமானத்தை ஈட்டிக்கொடுகிறது. எதிர்பாராத இயற்கை சீற்றம் சமையங்களில் மட்டும் சற்று சிரமத்தை எதிர்கொள்ளகூடியதாகி விடுகிறது என்று
அவர்கள் தங்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டனர்.
பிறப்பு-இறப்பு-திருமணம்
உள்ளிட்ட விஷயங்களிலும்கூட நவீனம் எட்டிப்
பார்த்தாலும், முழுமையாக அவர்கள் நவீனத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்துவிடவில்லை. ஒரு சில சடங்குகளில் அவர்களின் பாரம்பரிய சடங்குகள் மிகத் தீவிரமாக கடைபிடிக்கவேப்
படுகிறது.
இறப்பு
செமாய் இனக்குடி மக்களில் யாராவது இறந்துவிட்டால், அவரின் உடலை குளிப்பாட்டி, பாயில் சுற்றி, புதைத்துவிடுகின்றனர். இப்போதெல்லாம் பாத்தேக் துணியுடுத்தி இறந்தவர் உடலை தங்களின் குடும்ப முன்னோர்களை புதைத்த இடத்திலேயே புதைக்கின்றனர். எரிக்கும் வழக்கம் இவர்களுக்கு இல்லை. கண்டிப்பாக 6 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 6 நாட்களுக்குப் பிறகு, புதைத்த இடத்தில் நீர் வார்க்கின்றனர். நெருப்பு மூட்டமும் போடுகின்றனர். மேலும், இறந்தவர் வீட்டில் சில விலக்குகளுடன் 2-3 மாதங்கள்வரை துக்கம் நீட்டிக்கவும் படுகிறது. இறந்தவரின் நினைவு இருக்கும்வரை துக்கம் இருக்கவே செய்யும் என்கின்றனர் செமாய் சமூகத்தினர். மண்ணை வெட்டுவது, காட்டில் மரங்களை வெட்டுவது உள்ளிட்ட விஷயங்களில் இந்த துக்க காலங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. எல்லா சமூகங்களைப் போலவும் இவர்களும் இறந்தவர்களை வழிபடுகின்றனர். உலகம் முழுக்கவே இருக்கும் பூர்வக்குடிகள் ஒன்று சேரும் புள்ளியாக நான் பார்ப்பது ஆவி வழிப்பாட்டைதான்.
திருமணம்
காதல்
திருமணமாகவே இருந்தாலும்கூட பெற்றோர்கள் சம்மதம் மிக அவசியம். அதை ஒரு சடங்காகவே நிறைவேற்றுகின்றனர். சொந்தத்தில் மற்றும் தங்கள் சமூகம் இல்லாத பிற சமூகத்தோடும்
திருமணம் அனுமதியில்லை. ஆனால், இப்போது அதெல்லாம் யாரும் பின்பற்றுவதில்லை. பூர்வக்குடி
அல்லாதவர்களைக்கூட இப்போது திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால், வெளிநாட்டவர்களுக்கு திருமணம் செய்துகொடுப்பதில்லை. அப்படியான சிக்கல்
வரும்போது நீதிமன்றம் வரைக்கும்கூட சென்று அந்த திருமணத்தை ரத்து செய்கின்றனர்.
திருமணம்
நிச்சியிக்கப்பட்டுவிட்டால், திருமணத்திற்கு அனுமதி கோரி ஊர் பெரியவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது.
6 நாட்களுக்குப் பிறகு இரு குடும்பத்திற்கும் சம்மதம் என்றால் திருமண வேலை தொடங்கப்படும். விருப்பம்
இல்லை என்றால் திருமணத்தை விண்ணப்பித்தக் குடும்பம் அபராதத் தொகையை கோரிக்கை கொடுத்த குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும்.
அதற்கு ‘Duit buang malu’ (அவமானத்தை கலைதல்) என்று சொல்லப்படுகிறது.
இரு
குடும்பங்களும் சம்மதித்த திருமணத்தை பெண் வீட்டார் ஏற்று நடத்த வேண்டும். மேலும், பணமும் கொடுக்க வேண்டும். திருமணச் சடங்கில் கைக்குட்டை கொடுத்து தங்க மோதிரம்
அணிவது இன்று நடைமுறையில் இருக்கும் சடங்காகும். தென்னை ஓலையில் மேலாடை, தலைக் கிரீடம், என்று உடை செய்து அணிந்தவர்கள், தற்போது திருமணத்தில் நாகரீகமாக உடுத்திக்கொள்கின்றனர். ஓலையால் செய்யப்பட்ட
தலைக் கிரீடம் மட்டும் தவறாமல் அணிகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு கணவன் – மனைவிக்கிடையே
மனக்கசப்பு ஏற்படும்போது அதை ஊர் பெரியவர்களிடம்
தெரிவிக்கிறார்கள். தவறு இருக்கும் பட்சத்தில்
தவறு செய்தவர் பணமாக தண்டம் செலுத்த வேண்டும்.
விவாகரத்து என்பது இவர்கள் சமூகத்தில் இல்லை.
குழந்தை
பிறப்பு
கர்பமாக
இருக்கும் பெண்கள் சில பத்தியம் மற்றும் விலக்குகளை
கடைபிடிக்கிறார்கள். பிரசவிக்கும் வரை பன்றி
இறைச்சி, மான், மாட்டிறைச்சி, முள்ளம் பன்றி இறைச்சி, கெழுத்தி மீன் இவைகளை உண்பதில்லை. அதோடு, கணவர்
வேட்டையாடுவதும், கோழி உட்பட உணவுக்காககூட மிருகங்களை கொல்வதை தவிர்கிறார்கள். குழந்தை வயிற்றில் இருக்கும் காலம் தொடங்கி பிரசவிக்கும்
வரை, கிராமத்து பெண்களே பேருகால நடைமுறைகளை செய்கின்றனர். அதாவது பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்துப்
பெண்கள் இந்த கடமையில் மேற்கொள்கின்றனர். வீட்டில் பிரசவிக்கும் குழந்தைகள்தான் அதிகம்.
பிரசவத்திற்கு பிறகு, அம்மாவின் அடிவயிற்றுப் பகுதியில் சக்கரவல்லி கிழங்கு இலையை சூடு பண்ணி வைக்கிறார்கள். அது ஒரு பிரசவ மருத்துவம். அதோடு குழந்தையுன் தொப்புல்
கொடியையும் மூங்கிலில் அடைத்து, மரத்தில் சொறுகி விடுகின்றனர். 6 நாட்கள் பத்தியத்திற்கு பிறகு இயல்பு வாழ்கையை
மேற்கொள்கின்றனர் செமாய் பழங்குடியினர்.
தொடரும்..
பாகம் 1 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/1.html
பாகம் 2 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/2.html
பாகம் 3 : https://yogiperiyasamy.blogspot.com/2021/08/3.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக