சூழலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூழலியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

"பூமியே என்னை மன்னித்துவிடு" -சூழலியல் உரையாடல்

 

ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில், இந்திய மாணவர்களுக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தன்னாளுமை முகாம் பயிற்சி முகாமில்,  மூன்றாம் நாளில் (14/2/2022)  ஒரு பயிற்றுநராக நான் (யோகி)  கலந்துகொண்டேன்.

இரு வெவ்வேறு தலைப்புகளில் உரையாடிய நான், அம்மாணவர்களோடு கிட்டதட்ட  9 மணித்தியாலங்கள்  இருந்தேன். அவர்களுக்கு பயிற்சியை வழங்கிய அதே வேளையில் நானும் அவர்களிடமிருந்து பாடம் கற்றேன் என்பது மறுப்பதற்கில்லை.

இதற்கு முன் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத்தியில் சூழலியல் சார்ந்து பரவலான உரையாடலைக் கொண்டு செல்ல வேண்டும் என்று  தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஓரளவு அதற்கான விழிப்புணர்வை விதைக்கத்தான் செய்திருக்கிறேன்.

அந்தவகையில் இம்மாணவர்கள் மத்தியில் அவர்களிடத்திலிருந்தும், அவர்களில் ஒருவராக இருந்தும் உரையாடியது எனக்கு எந்தத் தயக்கமோ,  சிரமமோ ஏற்படவே இல்லை.  தவிர அன்று நான் சூழலியல் சார்ந்து பேசிய அனைத்தையுமே மாணவர்கள்  வியப்பாகவும் அதே வேளையில் ஒரு சிலருக்கு  குற்ற உணர்வு ஏற்படுவதையும் உணர்ந்தேன்.  50 மாணவர்களில்  10 பேருக்காவது  இந்த பூமியின் மீது அன்பும் அக்கரையும் ஏற்பட்டிருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். அதுவே இந்த பயிற்சியின் வெற்றியுமாகவும் கருதுகிறேன்.

உறுதியாக இந்த நம்பிக்கையை நான் கொள்வதற்கான காரணங்கள் இரண்டு.  “நாம் இஷ்டத்திற்கு  அகலும் போது,  இந்த பூமி நம்மை ஒரு போதும் இகழ்ந்ததே இல்லை, விசுவாசமற்றவர்கள் நாம்” என்று நான் கூறியபோது ஒருவரும் சில வினாடிகள் பேசவே இல்லை. “மன்னிப்புக் கேளுங்கள்” என்று நான் சொன்னதற்கு அனைவருமே ஒருசேர மன்னிப்புக் கேட்டனர். அதில் ஒருவர் பூமியை தொட்டு வணங்கி மன்னிப்புக்கேட்டதையும் நான் கண்டேன்.

இரண்டாவது அவர்களுக்கு அளித்தப் பயிற்ச்சியின் போது அவர்கள் வரைந்த ஓவியமும், அதை முன் நின்று பேசிய விதமும்  என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது மட்டுமல்ல, அன்று நான் உரையாடியது பாழாகவில்லை என்பதை எனக்கே உணர்த்தியது. 

நான் கொண்டு வந்திருந்த சில சூழலியல் புகைப்படக்காட்சிகள், அதில் நம்ப முடியாத மலேசியப் புகைப்படங்கள், தண்ணீர் குறித்து அறியாத தகவல்கள், ஒலி மற்றும் ஒளி மாசு குறித்தான விஷயங்கள் அனைத்தும் அவர்களை  சிந்திக்க வைத்தன. 

இறுதியாக இனிமேல் நாங்கள் ஞெகிழி தண்ணீர் புட்டியை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினாலும்,  அதை எந்த அளவுக்கு அவர்களால் பின்பற்ற முடியும் என்று என்னால் சொல்ல  முடியாது.  காரணம் சின்னக் குழந்தைகள் எடுக்கும் ஒரு சரியான முடிவுக்கு,  குடும்பம் மற்றும் அவர்களின் சுற்றம் ஆதரவு தரவில்லை என்றால்  அவர்கள் என்னதான் செய்வார்கள்?


ஆனாலும், நான் அந்த section-னை முடிக்கும்போது ஒரு மாணவி, “நாளையிலிருந்து நாம் வீட்டிலிருந்து  தண்ணீர் அருந்தக் குவலையைக் கொண்டு வருவோம். உயிரைக் கொல்லும் ஞெகிழியைக் பயன்படுத்த வேண்டாம்” என்று சொன்னார்.  அவரின் இந்தச் சிந்தனையை நாம் மதிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும். குழந்தைகளை அதற்கு பழக்க வேண்டும். நாளை இந்த பூமிக்காகவும் இயற்கைக்காகவும் சூழலியலுக்காகவும் போராடப்போகும் தலைமுறை  காரைநகர் நட்புறவு மையத்தில் இருக்கிறார்கள்.  தொடர்ந்து அவர்களிடத்தில் இந்தச் சுற்றுச்சூழல் குறித்து உரையாடுவது மிகவும் அவசியமான ஒன்று.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த சகோதரர் மோகன் , தோழர் சாந்தா பெருமாள், அன்பு பாராட்டிய  நண்பர் செல்வராஜ் ஆகியோருக்கு எனது அன்பு.  மற்றும் அங்கே பொறுப்பில் இருந்தும் கவனித்துக்கொள்ளும் சகோதர சகோதரிகள்  அனைவருக்கும் பாராட்டுக்கள்.  


மாணவர்களின் தன்னாளுமையை உயர்த்த,   இடைநிலைப் பள்ளியில் அவர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும் கவனமுடனும்  தொடர  மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சிக்கு என்றென்றும் தொடர வேண்டும். இந்த முயற்சியை மேலும் விரிவு படுத்த வேண்டும்.

நான் முழுமையாக அங்கிருந்து பார்த்ததில் குறை என்று சொல்ல எதுவும் இல்லை. முடிந்த அளவு ஞெகிழி பயன்பாட்டை மட்டும் கழகத்தினர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் தலை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு அடுத்தடுத்த பயிற்சிகளில் மாணவர்கள் இன்னும் ஆழமாக சூழலியலைப் புரிந்துக்கொள்ள அவர்களை வெளியில் அழைத்துச் செல்லலாம். அரைநாள் பசுமை பயணத்தை மேற்கொள்வதுடன், இந்த பூமியை மனிதர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கும் பறவை, புழு, எறும்பு, மரங்கள், செடி கொடிகள்  முதலான உயிரிகளின் பங்கு என்ன என்பதையும் இளைய தலைமுறையினருக்கு விளக்கலாம்.  இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி

யோகி

புதன், 31 ஆகஸ்ட், 2022

இயற்கைக்கு நீங்கள் விசுவாசிதானா?


கடந்த மாதத்தில் ஜூலை 18-ஆம் நாள் புலனத்தில் மற்றும் இணையத்தில் பலரும் பகிந்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை நீங்களும் கவனித்திருக்கலாம். ஐரோப்பா நாடுகளில் வெப்ப அளவைக்காட்டும் அப்புகைப்படம் பூமியின் ஒருபகுதி சுற்றி எரிவது போன்றே இருந்தது. “போன்றே இருந்தது” என்று நான் சொல்வதும் தவறுதான்.

உண்மையில் ஐரோப்பா நாடுகளின் பல இடங்கள் வெட்ப அளவு தாங்கிக்கொள்ளமுடியாமல் ஆங்காங்கு எரிந்துக்கொண்டுதான் இருக்கிறது. தெற்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான இடங்களில் 40-47°C (104-117°F) வரை வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை அறிவியலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். அந்த எச்சரிக்கை அவர்களுக்கு மட்டுமல்ல என்பதை “என்னா வெயிலு” என்றும் “ என்னா சூடு” என்றும் புலம்பும் நாமும் உணர வேண்டும்.

இது தொடர்பான ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையின் செய்தி இவ்வாறு சொல்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், குரோஷியா, கிரீஸ், துருக்கி எங்கிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. ஒரு வானிலை ஆய்வாளர் பிரான்சின் தென்மேற்கு பகுதியை 'வெப்ப பிரளயம்' என்று விவரித்தார், பிரெஞ்சு அரசாங்கம் ஏற்கனவே 25,000 பேரையும், துருக்கி 3,500 நபர்களையும், போர்ச்சுகல் 800 பேரையும் கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர். தெற்கு ஸ்பெயினில் சுமார் 3,200 பேர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்,  இதை ஸ்பெயினின் ABC பத்திரிகை 'திடீர் நெருப்புப் பொழிவு' என்று குறிப்பிட்டது. (தரவு (தமிழில்) : உலக சோசலிச இணையத்தளம்)

இந்த இணையத்தளம் மேலும் ஒரு அபாயகரமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறது. அதாவது நெருப்பால் ஏற்படும் அழிவுக்கு அப்பாற்பட்டு, இந்த வெப்ப அலையானது ஏற்கனவே வெப்பத்தால் ஏற்படும் மரணங்களின் ஓர் அலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது, பொதுவாக மாரடைப்பு அல்லது வலிப்பு ஆகியவற்றால் இது ஏற்படுத்தி வருகிறது

போர்ச்சுகல் இதுவரை 650 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிவித்துள்ளது, ஜூலை 7 மற்றும் 13 க்கு இடையில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருவர் இறந்துள்ளார்

ஸ்பெயின் 510 க்கும் அதிகமான இறப்புகளை அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் இன்னும் உயரும். 2003 ஐரோப்பிய வெப்ப அலையின் போது, அதிகபட்ச மட்டங்களை எட்டிய வெப்பநிலைகள் நீண்ட காலத்திற்கு நீடித்தன, ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிபரங்களின்படி, அப்போது கண்டம் முழுவதும் 72,000 பேர் இறந்ததாக ஒரு மதிப்பீடு உள்ளது. பிரான்சில் சுமார் 15,000 பேரும் ஸ்பெயினில் 13,000 பேரும் அதில் உள்ளடங்குவர்.

அத்தகவலின் கூற்றுப்படி நமது நாட்டில் கடந்த ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் மரணங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காரணம் எப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும் வெப்பமயமாதலில் சிக்கி தவிக்கிறது. மேலும் சீதோஷன நிலையும் மிகக் கடுமையாக மாறியிருக்கிறது. வெயிலாக இருக்கவேண்டிய காலத்தில் மழை பெய்துக்கொண்டிருந்தது. மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழையும் வெய்யிலுமாக மாறிமாறி இருக்கிறது. இதன் காரணமாக இரவு பகல் என்று மனித இனம் வெட்கையோடு இருக்கிறது. திடீர் மரணங்களும் ஏராளமாக நிகழ்ந்துள்ளன. 

இந்நிலையில் தலைநகரில் புதியதாக வெள்ளப்பேரிடரை தவிர்க்கும் முயற்சியாக ஒரு சில இடங்களில் முகாம்கள் அமைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஒருமணி நேரம் மழை பெய்தாலே தலைநகரமே ஸ்தம்பித்து விடுகிறது. தலைநகரை சுற்றியிருக்கும் முக்கிய கால்வாய்களில் தண்ணீர் நிறைந்து நம்மை எச்சரிக்கிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பேரிடரை சமாளிக்கத் தெரியாமல் திணறியது மாதிரி ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும்தான் அந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. எனது கேள்வி என்னவென்றால் மக்களான நமது கடமையென்ன? இந்த இயற்கைக்கு நீங்கள் காட்டும் விசுவாசம் என்ன?  நீங்கள் இயற்கைக்கு விசுவாசிதானா?

நெகிழியை குறைக்கிறோமா? குப்பையை கண்ட இடங்களில் போடுவதை தவிர்க்கிறோமா? தண்ணீரை வீணாக்காமல் இருக்கிறோமா? மினரல் பாட்டில் தண்ணீரை வாங்காமல் இருக்கிறோமா? மின்சாரத்தை தேவைக்கு ஏற்பத்தான் பயன்படுத்துகிறோமா? இப்படி பல “றோமா”-கள் இருக்கிறது. ஏதாவது ஒன்றுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் “ஆம் நான் இதை செய்வதில்லை” என்று உங்களால் சொல்ல முடியுமா?

நாம் இயற்கைக்கு செய்யும் சீர்கேட்டினால் புவி வெப்படைந்து ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்குகிறது. காலநிலை மாற்றம் இன்று உணவுப் பற்றாக்குறைக்கும் வறட்சிக்கும் புவி வெப்பமடைதலும் மிகப் பெரியக் காரணமாகும். இக்காரணங்களும் இணைந்துதான் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. அதில் நமது பங்கும் கணிசமாகவே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கோவிட் 19 பெருந்தொற்றின்போது நமக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நிறுதப்பட்டு, பயணங்கள் மறுக்கப்பட்டு, மருத்துவமனை நியமனம் தள்ளிப்போடப்பட்டு முடங்கிக்கிடந்தோம். ஆனால், பிரிட்டனில் வெட்பத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.  முன்பில்லாத வகையில் அதன் முதல் 'தீவிர வெப்ப சிவப்பு எச்சரிக்கையை' அறிவித்தது பிரிட்டன்.  அதே நாளில், வெப்பப் பாதிப்புகள் காரணமாக இரயில் சேவைகள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டன, அறுவைச் சிகிச்சை அறைகள் செயல்பட முடியாத அளவுக்கு வெப்பமாக இருந்ததால் மருத்துவமனைகளால் அறுவைச் சிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டன.

வடக்கு இத்தாலி 70 ஆண்டுகளில் இல்லாதளவில் மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது, Po மற்றும் Serchio போன்ற பெரிய ஆறுகள் கிட்டத்தட்ட முற்றிலும் வறண்டு விட்டன என்று இணைய செய்தி குறிப்பிடுகிறது.

நாம் இதுவரை எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மாசுபாடு என்பது நம் வீட்டுக்குள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்பது மூடத்தனம். நமது வாசலையும் தாண்டி நிற்கும் அதை எதிர்கொள்ள நாம் வீட்டிலிருந்துதான் போராட வேண்டும். கோவிட் 19 காரணமாக ஊரடங்கு சூழலுக்கு தள்ளப்பட்ட நாம் வெட்பத்தின் காரணமாக ஊரடங்கெல்லாம் வராது என்று நினைக்ககூடாது. வளர்ச்சியடைந்த நாடுகள், நவீனமாகிவிட்ட நாடுகள் என்று உதாரணம் காட்டும் நாடுகளில் இது நடந்தே விட்டிருக்கிறது. நாம் அலட்சியப் போக்கை தூர வீசிவிட்டு இயற்கைக்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருப்போம்.


வியாழன், 14 ஏப்ரல், 2022

மரணத்தை தானமாக கொடுக்கும் புட்டிநீர்



நாம் பாலர் பள்ளியிலிருந்து ஆரம்பக் கல்வி முடிக்கும்வரை தவறாமல் கையோடு கொண்டு போன பொருள்களில் ஒன்று தண்ணீர் பாட்டில். தண்ணீர் பாட்டில் என்றால் அதில் தண்ணீர்தான் இருக்கும். எப்போதாவது ஆரஞ்சு ஜூஸோ அல்லது சீராப்-கூட அம்மா கொடுத்துவிடுவதுண்டு. ஜில்லென்று குடிக்ககூடிய இந்த இனிப்பு பானங்கள்  நேரம் ஆக ஆக வெதுவெதுப்பு பானமாக ஆகியிருக்கும். அதற்கு தண்ணீரே பரவாயில்லை என்றே தோன்றும். தண்ணீர் பாட்டில்களில் தேனீர், நஸ்காப்பிக்கூடகொடுத்து விடுகிறார்களாம் இன்றையப் பெற்றோர்கள். இதன் சுகாதாரக் கேடுகுறித்து நான் இன்னொரு பதிவில் வாய்ப்பு இருந்தால் பேசுகிறேன்.

என் கேள்வி என்னவென்றால் பிள்ளைகள் தண்ணீரை அருந்துகிறார்களா? அருந்துகிறார்கள் என்றால் அதன் அளவு என்ன? இதேக் கேள்வியை உங்களை நோக்கியும் கேட்கிறேன். நீங்கள் தாகத்திற்கு தண்ணீர் அதாவது பச்சைத் தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆமாம் என்றால் அதன் அளவு என்ன? நீங்கள் அருந்தும் தண்ணீரை எங்கிருந்து பெறுகிறீர்கள்? குழாய் தண்ணீரா அல்லது பாட்டில் தண்ணீரா? வீட்டில் குழாய்த் தண்ணீர் அருந்துபவர்கள், வீட்டிற்கு வெளியேயும் குழாய்த் தண்ணீர்தான் அருந்துகிறீர்களா? அல்லது தாகம் எடுக்கும்போதோ - தண்ணீர் குடிக்கலாம் என்ற எண்ணம் வரும்போதோ கடையில் பாட்டில் தண்ணீரை வாங்கிகொள்கிறீர்களா? நமது நாட்டில் தண்ணீர் பாட்டில் இல்லாதக் கடையை காண முடியுமா என்ன?

50 சென்-னிலிருந்து 3.00 ரிங்கிட் வரை 500 மில்லிலிட்டர் பாட்டில் தண்ணீர் விற்பனைக்கு இருகிறது. கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தில், நீங்கள் பாட்டில் தண்ணீரை  வாங்கி குடிக்கிறீர்கள், அந்தத் தண்ணீரோ கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்கிறது. இதென்ன புதுக்கதை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. கையில் இருக்கும் அந்த நெகிழி பாட்டில் தண்ணீரை கீழே வைத்துவிட்டு, ஒரு பகீர் ரிப்போர்ட் தருகிறேன். வாசிக்கத் தயாராகுங்கள்.    

தமிழ்நாட்டைச் சேர்ந்த சூழலியல் எழுத்தாளர் தோழர் நக்கீரன் அவர்கள் ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ என்று ஒரு புத்தகத்தையே ஆவணமாக கொடுத்திருக்கிறார். ஆதாரங்களோடு எழுதப்பட்ட அப்புத்தகத்தின் சில விஷயங்களை முதலில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். “கண்களை மூடி 8 வினாடிகள் அஞ்சலி செலுத்துவோம். 8 வினாடிகளுகுப் பிறகு கண்களை திறந்துவிட்டீர்களா? தூய்மையற்ற நீரை அருந்துவதால் ஏற்பட்டிருக்கும் நோயினால் உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு குழந்தை இப்போது இறந்திறக்கலாம். நாம் அஞ்சலி செலுத்தியது அந்தக் குழந்தைக்குதான். குழந்தை அருந்தியதாக நம்பப்படும் தூய்மையற்ற நீர் சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைச் செய்யப்படாத நீராக இருக்க வேண்டும் என்பதல்ல. அது கடையில் நாம் வாங்கிக் குடிக்கும் பாட்டில் நீராகக்கூட இருக்கலாம்.”  இதில் உண்மையிருக்க வாய்ப்பே இல்லை என நீங்கள் முனுமுனுத்தால் உங்களுக்கு மேலும் சில சிறப்புச் செய்திகளை இந்தப் புத்தகம் சொல்கிறது.



கடந்த 2008 மார்ச் மாதத்திலிருந்து அரசு அலுவலகங்கள் எதிலும் புட்டிநீர்ப் பயன்பாடு கூடாது என பிரிட்டன் பிரதமர் கார்டன் உத்தரவிட்டார். ஐக்கிய அமெரிக்காவின் கன்கார்ட் நகரத்தின் எந்தவொரு கடையிலும் புட்டிநீரை விற்பது சட்டவிரோதம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற நகரங்களான சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகியவற்றிலும், நியூ சவுஸ் வெஸ்ட் மாநிலத்தின் அரசுத் துறைகள் அனைத்திலும் புட்டிநீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய மேயர்களின் மாநாட்டில் புட்டிநீர் வாங்குவதை ஊக்குவிக்க கூடாது எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுபோன்று மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

புட்டிநீர் பாதுகாப்பானது எனில் உலகின் முன்னணி நாடுகள் ஏன் அதைத் தடை செய்ய முனைகின்றனர் என தோழர் நக்கீரன் கேள்வி எழுப்புகிறார். புட்டிநீர் பாட்டிகளின் உறையில் பெருவாரியாக நீல நிறத்தில் தூய்மையான நீர் அல்லது பனிமலைகளின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும். தூய்மையான நீர்நிலையிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் என எண்ணம் பதியும். உண்மையில் பலநிறுவனங்கள் குழாய்நீரையே நமக்கு பாட்டிலில் அடைத்து தருகின்றன. அல்லது மலை பிரதேசங்கள் அல்லாத ஏதோ ஓர் இடத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மைக்ரோபயாலஜி (american society of microbiology) என்ற அமைப்பு 88 நிறுவனங்களின் புட்டிநீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 40% புட்டிநீரில் பாக்டீரியா பூஞ்சைகள் இருந்தன. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அளவுகோலின்படி இவை குடிப்பதற்கு பாதுகாப்பானது என்றாலும் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு இவை பரிந்துரைக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதேபொல நெதர்லான்ந்து நாட்டில் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் அமைப்பின் Dr.Rocuc Clant  என்பவர் 68 பிராண்டுளை ஆய்வு செய்தபோது அவற்றில் பெனிசிலியமும், நிமோனியா காய்ச்சலை வரவழைக்கும் பாக்டீரியாவும் இருந்தன.

இதைவிட ஒரு பரபரப்பான சம்பவம் 2004-ஆம் ஆண்டு நடந்தது. பிரிட்டனின் உனவுப் பாதுகாப்பு ஆணையத்தால் இப்படி ஒரு உத்தரவு இடப்பட்டது. கோக் நிறுவனத்தின் 5 இலட்சம் டாசனி நீர்ப் புட்டிகளைக் கடைகளிலிருந்து உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்தப்புட்டி நீரில் சிறுநீரகம், காது, வயிறு ஆகியவற்றைப் பாதிக்கக்கூடியதும், அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் புரோமேட் கலந்திருந்ததே அதற்கு காரணம். இதேபோல ஐக்கிய அமெரிக்காவிலும் இப்படியொரு நிகழ்வு நடந்தது. அங்குள்ள புகழ்பெற்ற புட்டிநீர் நிறுவனமான பெர்ரியர் தனது 28 கோடி புட்டிநீரில் புற்றுநோயை வரவழைக்கும் பென்சீன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக இருந்ததால் ஏறத்தாழ ஏழரை இலட்சம் கடைகளிலிருந்து அவற்றை அவசரமாக திரும்பப் பெற்றது.



இதெல்லாம் வளர்ந்த நாடுகளில் புட்டிநீருக்கு எதிரான சில உதாரணங்கள். முறையான சரியான அடுக்குகளின் வழியில் புட்டிநீரை தூய்மையாக்கல் நடைமுறையை மேற்கொள்ளாமல் அவர்களுக்கு வசதியான ஒருசில நடைமுறைகளை  மட்டும் மேற்கொண்டு சந்தைக்கு கொண்டு வருவதால் அவை சுகாதாரமற்றதாக ஆகிவிடுகின்றன. தவிர புட்டிதண்ணீரின் தயாரிப்பில் கலக்கப்படுகின்ற மற்றும் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளால் நன்மை-தீமை இரண்டையுமே தோழர் நக்கீரன் இந்தப் புத்தகத்தில் மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.

ஒரு உதாரணத்திற்கு தண்ணீரின் ‘ஓசோனேற்றம்’.

நிறைகள்: பாக்டீரியாவை அழிக்க வழக்கமான குளோரினுக்கு மாற்றாக ஓசோன் வளி பயன்படுத்தப்படுகிறது. இது நச்சுயிரிகளைத் திறனுடன் அழிக்கும். இரும்பு, கந்தகம், மாக்கனீசுத் தாதுகளை நீக்குவதோடு, நீரின் தேவையற்ற சுவை, மணத்தையும் நீக்கும்.

குறைகள்: ஓசோனேற்றம் சரியான கட்டுப்பாட்டில் இல்லாவிடில் ஃபார்மால்டிஹைட், ப்ரோமேட் போன்ற தேவையற்ற துணைப்பொருள்களை உருவாக்கிவிடும். குளோரினைப் போல அல்லாது ஓசோன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நச்சுயிரி நீக்கத்திறணைக் கொண்டிருக்கும். ஏனேனில், ஓசோன் என்பது அதிக வலுவுள்ள உயிர் வளி. அது திரும்பவும் உயிர்வளியாக (ஆக்சிஜன்) மாறிவிடமுடியும். புட்டிநீர் பல வாரங்களுக்கு விநியோகத்தில் இருக்கும்போது இது நடந்துவிடுகிறது. அவற்றை அதெவெட்பச் சூழலில் வைத்திருந்தால் தரமும் மோசமாகிவிடும்.

இப்படி 6 உதாரணங்கள் ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் வழி குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், புட்டிநீர் குளிர்ச்சியான நீர் மட்டுமல்லாது, புவியைச் சூடாக்கும் பசுமை இல்ல வளிகளும் அடங்கியுள்ளன. அதனால், புவியை மாசுபடுத்தும் தொழிற்துறை, புட்டிநீர் தொழிற்துறை என்கிறார் நீரியல்துறை எழுத்தாளரான மாட் பார்லோ.

புட்டிநீரின் நெகிழிப் புட்டிகளே அதற்குக் காரணம். அவற்றைத் தயாரிக்க ஆண்டுக்கு 250 கோடி நெகிழி தேவைப்படுகிறது. நெகிழியின் மூலப்பொருள் பெட்ரோலியம். ஒரு இலட்சம் நெகிழிப் புட்டிகள் மூலம் மட்டுமே ஏறத்தாழ 1800 கிலோ கரிக்காற்று வெளியாகிறது. 1 லிட்டர் அளவுள்ள நெகிழிப் புட்டியை உருவாக்க 162 கிராம் பெட்ரோலியம் தேவை. உதிலிருந்து வெளியாகும் கரிக்காற்றின் அளவு 100 கிராம். மேற்கொண்ட பத்தியைப் படிக்க உங்களுக்கு 10 நொடிகள் தேவை. அதற்குள் ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் பத்தாயிரம் நீர்ப் புட்டிகள் தூக்கியெறியப்பட்டுவிட்டன.

காலிப்புட்டிகளால் உருவாகும் குப்பைகள் மாபெரும் சிக்கல். அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது பொய். முன்னேறிய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிளேயே 88%, 86%  புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எனில் பிற நாடுகளைப் பற்றிச் சொல்ல என்ன உள்ளது. நெகிழிப் புட்டிகளை தயாரிப்பது மற்றும் மறுசுழற்சி காரணத்தினால் அதிலிருந்து வெளியேறும் மாசுகள் காரணமாக அமிலமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது. அது நிலத்தையும் எதிர்காலத்தலைமுறையும் பாதிக்கும். இத்தகைய கேடு நிகழ்வில் இன்றைக்கு புட்டிநீர் அருந்துபவர்களின் பங்கு இருக்கிறது என்று நம்மை எச்சரிக்கிறார் தோழர் நக்கீரன்.

நமது நாட்டில் புட்டிநீர் பயன்பாடு என்பது கட்டுகடங்காமல் போய்கொண்டிருக்கிறது. பேரிடர் காலத்தில் மற்றும் வேறு வழியே இல்லாத இக்கட்டான ஒரு நேரத்தில் புட்டிநீர் பயன்படுத்துவது தேவையாக இருக்கலாம். ஆனால், விழாக்காலங்கள், அல்லது இலவசமாக உதவி செய்கிறோம் அல்லது தானம் செய்கிறோம் எனும் பேரில் பெட்டி பெட்டியாக நெகிழிபாட்டில் தண்ணீரை கொடுக்கும் நாம் இனி சிந்தித்து செயல்பட வேண்டும். மரணத்தை தானமாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு நமக்கு வரவேண்டும். புட்டிநீர் உற்பத்தி செய்து 6 மாதமாகிவிட்டால் 90% நச்சுக்கள் அதன் நெகிழியிலிருந்து வெளியேறுகிறதாம்.

நமது நாட்டிலும் புட்டிதண்ணீர் முறைக்கேடு நடந்த சம்பவங்கள் இருக்கின்றன. வழக்கம்போல சுலபமாக நீங்கள் மறந்திருப்பீர்கள், தயவு செய்து அதை அடுத்த தலைமுறைக்கும் ஞாபகப்படுத்துங்கள். நமக்கு அரசாங்கத்திடமிருந்து நல்ல சுகாதாரமான நீர்தான் கிடைக்கிறது. நாம் அதை கொதிக்க வைத்து அல்லது வெயிலில் ஒரு மணிநேரம் வைத்திருந்து அப்படியே குடிக்கலாம். அல்லது ‘Filter’ பொருத்திக்கொண்டு நாம் தண்னீரை குடிக்கலாம். கண்ணாடி பாட்டிகளை நமது தண்ணீர் பாட்டிகளாக பயன்படுத்துவது என்றைக்குமே ஆரோக்கியமாக இருக்கும். எல்லா பிரச்னைகளும் நாம் தொடங்கியதுதான். தீர்வையும் நம்மாள் கொண்டு வர முடியும். உலகை குப்பையாக்கும் புட்டிநீர் மனித உடலையும், கால்நடைகளின் உயிரையும், பூமியின் உயிரையும் சேர்த்தே அழித்துக்கொண்டிருக்கிறது. புட்டிநீர் வியாபாரிகள் இதை உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும், கேளிக்கை நிறுவனங்கள்கூட விதவிதமான லேபில்களில் புட்டிநீர் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. நாம் மரணத்திற்கு விலை கொடுத்துகொண்டிருக்கிறோம்.

 நன்றி : தமிழ்மலர் 17/4/2022

 

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

நெகிழியை விதைத்தோம்! அதையே அறுவடை செய்கிறோம்

 

நாம் வெளியில் இருக்கிறோம்; அல்லது ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போகிறோம். திடீரென வயிறுக்குப் பசிப்பதுபோல் உள்ளது. அவசரத்திற்கு ஒரு தண்ணீர் பாட்டில் அல்லது பழச்சாரை வாங்கிக்கொள்கிறோம். கூடவே கிரீம் ரொட்டி, நொறுக்கு தீனி, அல்லது வெட்டி வைத்திருக்கும் பழங்கள் இப்படி ஏதாவது வாங்கிக்கொண்டு பயணித்துக்கொண்டே சாப்பிடுகிறோம். அப்பாடா பசி தீர்ந்தது என நிம்மதியடைகிறீர்கள் தானே...

வேலைக்குச் செல்லும் தாய்மார்களே, வீட்டுக்கு வந்து சமைப்பதற்காக போலிஸ்ரின் தட்டுகளில் நேர்த்தியாக வெட்டி அடுக்கி அதை மெல்லிய பிலாஸ்டிக் பையினால் மூடியிருக்கும் காய்க்கறிகளையும், மீன், கோழி, பழங்களையும் வாங்கி வந்து சமைத்து குடும்பத்திற்கு உணவளிக்கிறீர்களா? இந்த வயிற்றுக்காகத்தானே உழைக்கிறோம் என என்றாவது நீங்களும் சொல்லியிருப்பீர்கள் தானே. அதில் உண்மையில்லாமல் இல்லை.

வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நிறைய தீனிப் பண்டங்களை வாங்கி வருவார்கள். விதவிதமான வண்ண நெகிழிக் கவர்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சுவையான பலகாரங்கள், பழரச பாட்டில்கள். நாமும் அப்படித்தானே அவர்களின் வீட்டிற்கு செல்லும்போது வாங்கி போயிருப்போம். இதெல்லாம் உபச்சாரங்கள், பண்பாடு என்று அழகாக பெயரும் வைத்திருக்கிறோம். 

நண்பர்களே, இந்த உணவுப் பொருள்களை நாம் எப்படி பிரித்து பயன்படுத்துகிறோம்? சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நெகிழிக் கவரில் அடைப்பட்டிருக்கும் அந்த உணவுப் பொருளை எப்படி பிரித்து விடுதலை செய்கிறோம்? பற்களாலேயே ஒரு முனையில் கவரை கடித்து இழுத்து துண்டாக்கி,  பிள்ளைகள் உள்ளே இருப்பதை சாப்பிட தொடங்குவார்கள். பெரியவர்கள், கத்தரி அல்லது கத்தியால் ஒரு பகுதியை வெட்டி போட்டுவிட்டு உணவை பயன்படுத்த தொடங்குவார்கள்.

நெகிழிப் பையினால் ஏற்படும் விளைவுகள் நாம் அறிந்ததுதான். ஒரு நெகிழிப் பை மக்குவதற்கு 500 ஆண்டுகள் ஆகும் அல்லது சில நெகிழிப் பைகள் மக்கவே மக்காது. இந்த மாதிரியான பல விவரங்களுக்கு நாம் யாருக்கும் பாடம் நடத்தத் தேவையும் இல்லை. ஆனால், இந்தப் பெரிய நெகிழிப் பையைவிட, நாம் கத்திரிக்கும், அல்லது பற்கலால் கடித்துத் துப்பும் மைக்ரோ பிளாஸ்டிக் (MICRO PLASTICS) அல்லது நுண் நெகிழிகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை நமது நாட்டைப் பொருத்தவரை நாம் உணருவதுமில்லை; பேசுவதும் இல்லை. மிக சிறிய அளவிளான இந்த நெகிழிகள் மிக வேகமாக அதன் தொடர்சங்கிலி வேலையை முடித்துக்கொண்டு நம் உடலுக்கு வந்துவிடுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? மனதை இரும்பாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் சில அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல வந்திருக்கிறேன்.  

2008-ஆம் ஆண்டு எரிக்சன் மற்றும் பிரவுனி ஆகியவர்களின் ஆய்வின் முடிவில், நுண் நெகிழிகள் எப்படி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதை இந்த உலகிற்கு தெரிவித்தனர். அதுவரை பெரிய அளவில் பேசாப் பொருளாகவே இந்த நுண் நெகிழிகள் தொடர்பான பாதிப்புகள் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் அதனால் பாதிப்பு ஏதும் வராது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். வடக்கு பசிபிக் கடல் பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட மீனின் உடலுக்குள் 18 வகையான நுண் நெகிழிகள் இருந்ததை எரிக்சன் படம் பிடித்து உலகை அதிர வைத்தார்.


சென்னையில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட ஏழு மீன் வகைகளில் நுண் நெகிழிகள் கலந்து இருப்பதை கண்டறிந்தனர். நெதர்லாந்தில் 22 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 17 பேரின் ரத்தத்தில் நுண் நெகிழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

‘அறிவியல் பலகை’ எனும் மாதந்திர இதழில் இது தொடர்பாக வெளிவந்திருந்த சில தகவல்களைத்தான் மேலே உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். ரத்த அணுக்களில்கூட மைக்ரரோ  பிளாஸ்டிக்குகள் காணமுடிகிறது என்றால் நாம் இந்தச் சூழலை எங்கு கொண்டுவந்து விட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நமது நாட்டில் இம்மாதிரியான ஆய்வுகள் பெரிய அளவில் செய்யப்படுவதில்லை. அப்படியே செய்தாலும் அது பெரிய அளவில் மக்களிடத்தில் கவன ஈர்ப்பு ஏற்படுவதில்லை.

சினிமாவும், கேளிக்கைகளும், இலவசப் பொருள்களும் கொடுக்கின்ற போதையில் நம்மவர்கள் சிக்கிக்கொண்டு மயங்கியிருக்கும்போது உணவோடு நெகிழிகளையும் வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்று கூறும் என் போன்றவர்கள் மனநோயாளிகளாகத்தான் தெரிகிறோம்.

பிறந்தக் குழந்தையின் தொப்புல் கொடியில், குழந்தைகளின் மலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.  பால் பாட்டில்களில் இருந்து நுண் நெகிழிகள் உணவுக் குழாய்க்குள் சென்றிருக்கலாம். அவை இரத்தத்தில் கலக்காமல் மலத்தில் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கையாக முன்பு இருந்தது. அது உண்மையல்ல என்று ஆய்வுலகம் நம்மை இப்போது எச்சரித்திருக்கிறது. 

கடல், நிலம் தொடங்கி காற்றில் கூட நுண் நெகிழிகள் கலந்திருப்பதை நாம் உணர வேண்டும். இதை தவிர்ப்பதற்கான வேலைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.  குழந்தைகளிடம் இதுகுறித்து பேச வேண்டும். பள்ளியிலும் இதற்கான பயிற்சியினை வழங்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் இதை செய்தேஆக வேண்டும்.

நெதர்லாந்தில் மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அணுக்களில் மைக்ரரோ  பிளாஸ்டிக்குகள் இருந்தது என்றேன் அல்லவா? அது எந்த வகை பிளாஸ்டிக் தெரியுமா? Polyethylene Terephthalate (PET). இது பெரும்பாலும் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் ஆகும். ‘மினரல் வாட்டர்’ அல்லது ‘டிரிங்கின் வாட்டர்’ என்று ‘லேபில்’ செய்திருக்கும் தண்ணீர் பாட்டில் தானே நமக்கு வசதியாக வாங்கி ஸ்டைலாக அருந்துகிறோம். தண்ணீரோடு நெகிழித் துகள்களையும் நமது வயிற்றுக்கொண்டு போகிறோம் என்பது அறிக.

கொதிக்க வைத்த தண்ணீரை கண்ணாடி பாட்டில்களில் கொண்டு போவதால் நாம் எதை இழந்துவிடுவோம்? தினமும் கடையில் ஒரு வேளையாவது உணவு வாங்கும் நபராக இருந்தால், சாப்பாட்டிற்கான பாத்திரத்தை நாம் வீட்டிலிருந்தே கொண்டு போகலாம். நம் பிள்ளைகளுக்கும் இதையே நாம் பழக்கப்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளாக என் பழக்கங்களில் இதுவும் ஒன்று. கடையில் தேனீர் வாங்கி வருவதாக இருந்தாலும் என் சொந்த பாட்டிலைத்தான் கொண்டுபோய் வாங்கி வருகிறேன். என் இந்தியப் பயணங்களில்கூட என் தேனீர் பாட்டில் என்னோடு பயணம் வரும்.

இதனால் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதுகாப்பிற்கு நமது பங்களிப்பை இதன்வழி வழங்க முடியும்.

ஒரு புள்ளி விவரப்படி குறைந்தது எட்டு மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.  கடலில் கலக்கும் நெகிழிகளால் ஆண்டிற்கு 10 லட்சம் கடல்வாழ் பறவைகளும், 1 லட்சம் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழப்பதாக கணக்கிடப்படுகின்றன. நுண் நெகிழிகளை உண்ணும் மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி நாம் தான் உண்கிறோம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கு உண்மை விளங்குகிறதா? நமது அழகான இந்த பூமியில் எதை நாம் விதைத்தோமோ, இப்போது அதைத்தான் அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம்.

மிக அண்மையில் நான் கடல் மக்கள் என்று கூறக்கூடிய செலெத்தார் பழங்குடி மக்கள் கிராமத்திற்கு சென்றிருந்தேன். கடலிலேயே வீடு கட்டிக்கொண்டு வாழும் மக்கள் அவர்கள். அவர்களின் வாழ்வாதாரமும் அந்தக் கடல்தான். மிக அழகான அந்தக் கிராமம் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. கடலிலும் அள்ளப்படாத குப்பைகள் கடைலையே மூடும் அளவிற்கு இறைந்துக்கிடக்கிறது.

பெண்கள் துணிவைக்கவும், பாத்திரங்கள் கழுவவும் அந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் தண்ணீர் வசதியில்லாத கிராமம் அது. சிறுகுழந்தைகள் குப்பைகளுக்கு நடுவே குதித்து குளித்து மகிழ்கிறார்கள். இயற்கையை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் என்னால் இந்தக் கட்டுரையைத்தான் எழுத முடிகிறது.  கிராமத்தை தூர்வாறி சுத்தம் செய்ய நடந்துக்கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. காலதாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நுண் நெகிழிக்கும், நொகிழிகளின் ஆதிக்கத்திற்கு நாம் நம்மைத்தான் பணையம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

-யோகி     

நன்றி தமிழ்மலர் 10/4/2022