நாம் பாலர் பள்ளியிலிருந்து
ஆரம்பக் கல்வி முடிக்கும்வரை தவறாமல் கையோடு கொண்டு போன பொருள்களில் ஒன்று தண்ணீர்
பாட்டில். தண்ணீர் பாட்டில் என்றால் அதில் தண்ணீர்தான் இருக்கும். எப்போதாவது ஆரஞ்சு
ஜூஸோ அல்லது சீராப்-கூட அம்மா கொடுத்துவிடுவதுண்டு. ஜில்லென்று குடிக்ககூடிய இந்த இனிப்பு
பானங்கள் நேரம் ஆக ஆக வெதுவெதுப்பு பானமாக
ஆகியிருக்கும். அதற்கு தண்ணீரே பரவாயில்லை என்றே தோன்றும். தண்ணீர் பாட்டில்களில் தேனீர்,
நஸ்காப்பிக்கூடகொடுத்து விடுகிறார்களாம் இன்றையப் பெற்றோர்கள். இதன் சுகாதாரக் கேடுகுறித்து
நான் இன்னொரு பதிவில் வாய்ப்பு இருந்தால் பேசுகிறேன்.
என் கேள்வி என்னவென்றால்
பிள்ளைகள் தண்ணீரை அருந்துகிறார்களா? அருந்துகிறார்கள் என்றால் அதன் அளவு என்ன? இதேக்
கேள்வியை உங்களை நோக்கியும் கேட்கிறேன். நீங்கள் தாகத்திற்கு தண்ணீர் அதாவது பச்சைத்
தண்ணீர் குடிக்கிறீர்களா? ஆமாம் என்றால் அதன் அளவு என்ன? நீங்கள் அருந்தும் தண்ணீரை
எங்கிருந்து பெறுகிறீர்கள்? குழாய் தண்ணீரா அல்லது பாட்டில் தண்ணீரா? வீட்டில் குழாய்த்
தண்ணீர் அருந்துபவர்கள், வீட்டிற்கு வெளியேயும் குழாய்த் தண்ணீர்தான் அருந்துகிறீர்களா?
அல்லது தாகம் எடுக்கும்போதோ - தண்ணீர் குடிக்கலாம் என்ற எண்ணம் வரும்போதோ கடையில் பாட்டில்
தண்ணீரை வாங்கிகொள்கிறீர்களா? நமது நாட்டில் தண்ணீர் பாட்டில் இல்லாதக் கடையை காண முடியுமா
என்ன?
50 சென்-னிலிருந்து
3.00 ரிங்கிட் வரை 500 மில்லிலிட்டர் பாட்டில் தண்ணீர் விற்பனைக்கு இருகிறது. கஷ்டப்பட்டு
உழைத்தப் பணத்தில், நீங்கள் பாட்டில் தண்ணீரை
வாங்கி குடிக்கிறீர்கள், அந்தத் தண்ணீரோ கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் உயிரைக்
குடித்துக்கொண்டிருக்கிறது. இதென்ன புதுக்கதை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.
கையில் இருக்கும் அந்த நெகிழி பாட்டில் தண்ணீரை கீழே வைத்துவிட்டு, ஒரு பகீர் ரிப்போர்ட்
தருகிறேன். வாசிக்கத் தயாராகுங்கள்.
தமிழ்நாட்டைச்
சேர்ந்த சூழலியல் எழுத்தாளர் தோழர் நக்கீரன் அவர்கள் ‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’
என்று ஒரு புத்தகத்தையே ஆவணமாக கொடுத்திருக்கிறார். ஆதாரங்களோடு எழுதப்பட்ட அப்புத்தகத்தின்
சில விஷயங்களை முதலில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். “கண்களை மூடி 8 வினாடிகள் அஞ்சலி
செலுத்துவோம். 8 வினாடிகளுகுப் பிறகு கண்களை திறந்துவிட்டீர்களா? தூய்மையற்ற நீரை அருந்துவதால்
ஏற்பட்டிருக்கும் நோயினால் உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு குழந்தை இப்போது இறந்திறக்கலாம்.
நாம் அஞ்சலி செலுத்தியது அந்தக் குழந்தைக்குதான். குழந்தை அருந்தியதாக நம்பப்படும்
தூய்மையற்ற நீர் சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைச் செய்யப்படாத நீராக இருக்க வேண்டும்
என்பதல்ல. அது கடையில் நாம் வாங்கிக் குடிக்கும் பாட்டில் நீராகக்கூட இருக்கலாம்.”
இதில் உண்மையிருக்க வாய்ப்பே இல்லை என நீங்கள்
முனுமுனுத்தால் உங்களுக்கு மேலும் சில சிறப்புச் செய்திகளை இந்தப் புத்தகம் சொல்கிறது.
கடந்த 2008 மார்ச்
மாதத்திலிருந்து அரசு அலுவலகங்கள் எதிலும் புட்டிநீர்ப் பயன்பாடு கூடாது என பிரிட்டன்
பிரதமர் கார்டன் உத்தரவிட்டார். ஐக்கிய அமெரிக்காவின் கன்கார்ட் நகரத்தின் எந்தவொரு
கடையிலும் புட்டிநீரை விற்பது சட்டவிரோதம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற
நகரங்களான சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகியவற்றிலும், நியூ சவுஸ் வெஸ்ட் மாநிலத்தின்
அரசுத் துறைகள் அனைத்திலும் புட்டிநீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஐக்கிய மேயர்களின்
மாநாட்டில் புட்டிநீர் வாங்குவதை ஊக்குவிக்க கூடாது எனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுபோன்று மேலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
புட்டிநீர் பாதுகாப்பானது
எனில் உலகின் முன்னணி நாடுகள் ஏன் அதைத் தடை செய்ய முனைகின்றனர் என தோழர் நக்கீரன்
கேள்வி எழுப்புகிறார். புட்டிநீர் பாட்டிகளின் உறையில் பெருவாரியாக நீல நிறத்தில் தூய்மையான
நீர் அல்லது பனிமலைகளின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும். தூய்மையான நீர்நிலையிலிருந்து
எடுக்கப்பட்ட தண்ணீர் என எண்ணம் பதியும். உண்மையில் பலநிறுவனங்கள் குழாய்நீரையே நமக்கு
பாட்டிலில் அடைத்து தருகின்றன. அல்லது மலை பிரதேசங்கள் அல்லாத ஏதோ ஓர் இடத்திலிருந்து
எடுக்கப்படுகிறது.
அமெரிக்கன் சொசைட்டி
ஆஃப் மைக்ரோபயாலஜி (american society of microbiology) என்ற அமைப்பு 88 நிறுவனங்களின்
புட்டிநீரை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதில் 40% புட்டிநீரில் பாக்டீரியா பூஞ்சைகள்
இருந்தன. ஐக்கிய அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் அளவுகோலின்படி இவை
குடிப்பதற்கு பாதுகாப்பானது என்றாலும் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு இவை
பரிந்துரைக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இதேபொல நெதர்லான்ந்து
நாட்டில் யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் அமைப்பின் Dr.Rocuc Clant என்பவர் 68 பிராண்டுளை ஆய்வு செய்தபோது அவற்றில்
பெனிசிலியமும், நிமோனியா காய்ச்சலை வரவழைக்கும் பாக்டீரியாவும் இருந்தன.
இதைவிட ஒரு பரபரப்பான
சம்பவம் 2004-ஆம் ஆண்டு நடந்தது. பிரிட்டனின் உனவுப் பாதுகாப்பு ஆணையத்தால் இப்படி
ஒரு உத்தரவு இடப்பட்டது. கோக் நிறுவனத்தின் 5 இலட்சம் டாசனி நீர்ப் புட்டிகளைக் கடைகளிலிருந்து
உடனே அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்தப்புட்டி நீரில் சிறுநீரகம், காது, வயிறு ஆகியவற்றைப்
பாதிக்கக்கூடியதும், அளவு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் புரோமேட் கலந்திருந்ததே
அதற்கு காரணம். இதேபோல ஐக்கிய அமெரிக்காவிலும் இப்படியொரு நிகழ்வு நடந்தது. அங்குள்ள
புகழ்பெற்ற புட்டிநீர் நிறுவனமான பெர்ரியர் தனது 28 கோடி புட்டிநீரில் புற்றுநோயை வரவழைக்கும்
பென்சீன் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக இருந்ததால் ஏறத்தாழ ஏழரை இலட்சம் கடைகளிலிருந்து
அவற்றை அவசரமாக திரும்பப் பெற்றது.
இதெல்லாம் வளர்ந்த
நாடுகளில் புட்டிநீருக்கு எதிரான சில உதாரணங்கள். முறையான சரியான அடுக்குகளின் வழியில்
புட்டிநீரை தூய்மையாக்கல் நடைமுறையை மேற்கொள்ளாமல் அவர்களுக்கு வசதியான ஒருசில நடைமுறைகளை மட்டும் மேற்கொண்டு சந்தைக்கு கொண்டு வருவதால் அவை
சுகாதாரமற்றதாக ஆகிவிடுகின்றன. தவிர புட்டிதண்ணீரின் தயாரிப்பில் கலக்கப்படுகின்ற மற்றும்
மேற்கொள்கின்ற நடவடிக்கைகளால் நன்மை-தீமை இரண்டையுமே தோழர் நக்கீரன் இந்தப் புத்தகத்தில்
மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார்.
ஒரு உதாரணத்திற்கு
தண்ணீரின் ‘ஓசோனேற்றம்’.
நிறைகள்: பாக்டீரியாவை
அழிக்க வழக்கமான குளோரினுக்கு மாற்றாக ஓசோன் வளி பயன்படுத்தப்படுகிறது. இது நச்சுயிரிகளைத்
திறனுடன் அழிக்கும். இரும்பு, கந்தகம், மாக்கனீசுத் தாதுகளை நீக்குவதோடு, நீரின் தேவையற்ற
சுவை, மணத்தையும் நீக்கும்.
குறைகள்: ஓசோனேற்றம்
சரியான கட்டுப்பாட்டில் இல்லாவிடில் ஃபார்மால்டிஹைட், ப்ரோமேட் போன்ற தேவையற்ற துணைப்பொருள்களை
உருவாக்கிவிடும். குளோரினைப் போல அல்லாது ஓசோன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நச்சுயிரி
நீக்கத்திறணைக் கொண்டிருக்கும். ஏனேனில், ஓசோன் என்பது அதிக வலுவுள்ள உயிர் வளி. அது
திரும்பவும் உயிர்வளியாக (ஆக்சிஜன்) மாறிவிடமுடியும். புட்டிநீர் பல வாரங்களுக்கு விநியோகத்தில்
இருக்கும்போது இது நடந்துவிடுகிறது. அவற்றை அதெவெட்பச் சூழலில் வைத்திருந்தால் தரமும்
மோசமாகிவிடும்.
இப்படி 6 உதாரணங்கள்
‘உயிரைக் குடிக்கும் புட்டிநீர்’ புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின்
வழி குறிப்பிட்டிருக்கும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், புட்டிநீர் குளிர்ச்சியான
நீர் மட்டுமல்லாது, புவியைச் சூடாக்கும் பசுமை இல்ல வளிகளும் அடங்கியுள்ளன. அதனால்,
புவியை மாசுபடுத்தும் தொழிற்துறை, புட்டிநீர் தொழிற்துறை என்கிறார் நீரியல்துறை எழுத்தாளரான
மாட் பார்லோ.
புட்டிநீரின் நெகிழிப்
புட்டிகளே அதற்குக் காரணம். அவற்றைத் தயாரிக்க ஆண்டுக்கு 250 கோடி நெகிழி தேவைப்படுகிறது.
நெகிழியின் மூலப்பொருள் பெட்ரோலியம். ஒரு இலட்சம் நெகிழிப் புட்டிகள் மூலம் மட்டுமே
ஏறத்தாழ 1800 கிலோ கரிக்காற்று வெளியாகிறது. 1 லிட்டர் அளவுள்ள நெகிழிப் புட்டியை உருவாக்க
162 கிராம் பெட்ரோலியம் தேவை. உதிலிருந்து வெளியாகும் கரிக்காற்றின் அளவு 100 கிராம்.
மேற்கொண்ட பத்தியைப் படிக்க உங்களுக்கு 10 நொடிகள் தேவை. அதற்குள் ஐக்கிய அமெரிக்காவில்
மட்டும் பத்தாயிரம் நீர்ப் புட்டிகள் தூக்கியெறியப்பட்டுவிட்டன.
காலிப்புட்டிகளால்
உருவாகும் குப்பைகள் மாபெரும் சிக்கல். அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது பொய்.
முன்னேறிய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிளேயே 88%, 86% புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. எனில்
பிற நாடுகளைப் பற்றிச் சொல்ல என்ன உள்ளது. நெகிழிப் புட்டிகளை தயாரிப்பது மற்றும் மறுசுழற்சி
காரணத்தினால் அதிலிருந்து வெளியேறும் மாசுகள் காரணமாக அமிலமழை ஏற்படும் சாத்தியம் உள்ளது.
அது நிலத்தையும் எதிர்காலத்தலைமுறையும் பாதிக்கும். இத்தகைய கேடு நிகழ்வில் இன்றைக்கு
புட்டிநீர் அருந்துபவர்களின் பங்கு இருக்கிறது என்று நம்மை எச்சரிக்கிறார் தோழர் நக்கீரன்.
நமது நாட்டில்
புட்டிநீர் பயன்பாடு என்பது கட்டுகடங்காமல் போய்கொண்டிருக்கிறது. பேரிடர் காலத்தில்
மற்றும் வேறு வழியே இல்லாத இக்கட்டான ஒரு நேரத்தில் புட்டிநீர் பயன்படுத்துவது தேவையாக
இருக்கலாம். ஆனால், விழாக்காலங்கள், அல்லது இலவசமாக உதவி செய்கிறோம் அல்லது தானம் செய்கிறோம்
எனும் பேரில் பெட்டி பெட்டியாக நெகிழிபாட்டில் தண்ணீரை கொடுக்கும் நாம் இனி சிந்தித்து
செயல்பட வேண்டும். மரணத்தை தானமாக கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு நமக்கு
வரவேண்டும். புட்டிநீர் உற்பத்தி செய்து 6 மாதமாகிவிட்டால் 90% நச்சுக்கள் அதன் நெகிழியிலிருந்து
வெளியேறுகிறதாம்.
நமது நாட்டிலும்
புட்டிதண்ணீர் முறைக்கேடு நடந்த சம்பவங்கள் இருக்கின்றன. வழக்கம்போல சுலபமாக நீங்கள்
மறந்திருப்பீர்கள், தயவு செய்து அதை அடுத்த தலைமுறைக்கும் ஞாபகப்படுத்துங்கள். நமக்கு
அரசாங்கத்திடமிருந்து நல்ல சுகாதாரமான நீர்தான் கிடைக்கிறது. நாம் அதை கொதிக்க வைத்து
அல்லது வெயிலில் ஒரு மணிநேரம் வைத்திருந்து அப்படியே குடிக்கலாம். அல்லது ‘Filter’
பொருத்திக்கொண்டு நாம் தண்னீரை குடிக்கலாம். கண்ணாடி பாட்டிகளை நமது தண்ணீர் பாட்டிகளாக
பயன்படுத்துவது என்றைக்குமே ஆரோக்கியமாக இருக்கும். எல்லா பிரச்னைகளும் நாம் தொடங்கியதுதான்.
தீர்வையும் நம்மாள் கொண்டு வர முடியும். உலகை குப்பையாக்கும் புட்டிநீர் மனித உடலையும்,
கால்நடைகளின் உயிரையும், பூமியின் உயிரையும் சேர்த்தே அழித்துக்கொண்டிருக்கிறது. புட்டிநீர்
வியாபாரிகள் இதை உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள், ஒவ்வொரு மாநிலத்திலும், கேளிக்கை
நிறுவனங்கள்கூட விதவிதமான லேபில்களில் புட்டிநீர் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. நாம்
மரணத்திற்கு விலை கொடுத்துகொண்டிருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக