நாம் வெளியில்
இருக்கிறோம்; அல்லது ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போகிறோம். திடீரென வயிறுக்குப் பசிப்பதுபோல் உள்ளது.
அவசரத்திற்கு ஒரு தண்ணீர் பாட்டில் அல்லது பழச்சாரை வாங்கிக்கொள்கிறோம். கூடவே கிரீம்
ரொட்டி, நொறுக்கு தீனி, அல்லது வெட்டி வைத்திருக்கும் பழங்கள் இப்படி ஏதாவது வாங்கிக்கொண்டு
பயணித்துக்கொண்டே சாப்பிடுகிறோம். அப்பாடா பசி தீர்ந்தது என நிம்மதியடைகிறீர்கள் தானே...
வேலைக்குச் செல்லும்
தாய்மார்களே, வீட்டுக்கு வந்து சமைப்பதற்காக போலிஸ்ரின் தட்டுகளில் நேர்த்தியாக வெட்டி
அடுக்கி அதை மெல்லிய பிலாஸ்டிக் பையினால் மூடியிருக்கும் காய்க்கறிகளையும், மீன், கோழி,
பழங்களையும் வாங்கி வந்து சமைத்து குடும்பத்திற்கு உணவளிக்கிறீர்களா? இந்த வயிற்றுக்காகத்தானே
உழைக்கிறோம் என என்றாவது நீங்களும் சொல்லியிருப்பீர்கள் தானே. அதில் உண்மையில்லாமல்
இல்லை.
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் நிறைய தீனிப் பண்டங்களை வாங்கி வருவார்கள். விதவிதமான வண்ண நெகிழிக் கவர்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சுவையான பலகாரங்கள், பழரச பாட்டில்கள். நாமும் அப்படித்தானே அவர்களின் வீட்டிற்கு செல்லும்போது வாங்கி போயிருப்போம். இதெல்லாம் உபச்சாரங்கள், பண்பாடு என்று அழகாக பெயரும் வைத்திருக்கிறோம்.
நண்பர்களே, இந்த உணவுப் பொருள்களை நாம் எப்படி பிரித்து பயன்படுத்துகிறோம்? சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நெகிழிக் கவரில் அடைப்பட்டிருக்கும் அந்த உணவுப் பொருளை எப்படி பிரித்து விடுதலை செய்கிறோம்? பற்களாலேயே ஒரு முனையில் கவரை கடித்து இழுத்து துண்டாக்கி, பிள்ளைகள் உள்ளே இருப்பதை சாப்பிட தொடங்குவார்கள். பெரியவர்கள், கத்தரி அல்லது கத்தியால் ஒரு பகுதியை வெட்டி போட்டுவிட்டு உணவை பயன்படுத்த தொடங்குவார்கள்.
நெகிழிப் பையினால்
ஏற்படும் விளைவுகள் நாம் அறிந்ததுதான். ஒரு நெகிழிப் பை மக்குவதற்கு 500 ஆண்டுகள் ஆகும்
அல்லது சில நெகிழிப் பைகள் மக்கவே மக்காது. இந்த மாதிரியான பல விவரங்களுக்கு நாம் யாருக்கும்
பாடம் நடத்தத் தேவையும் இல்லை. ஆனால், இந்தப் பெரிய நெகிழிப் பையைவிட, நாம் கத்திரிக்கும்,
அல்லது பற்கலால் கடித்துத் துப்பும் மைக்ரோ பிளாஸ்டிக் (MICRO PLASTICS) அல்லது நுண்
நெகிழிகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை நமது நாட்டைப் பொருத்தவரை நாம்
உணருவதுமில்லை; பேசுவதும் இல்லை. மிக சிறிய அளவிளான இந்த நெகிழிகள் மிக வேகமாக அதன்
தொடர்சங்கிலி வேலையை முடித்துக்கொண்டு நம் உடலுக்கு வந்துவிடுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?
மனதை இரும்பாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் சில அதிர்ச்சியான விஷயங்களை சொல்ல
வந்திருக்கிறேன்.
2008-ஆம் ஆண்டு
எரிக்சன் மற்றும் பிரவுனி ஆகியவர்களின் ஆய்வின் முடிவில், நுண் நெகிழிகள் எப்படி பாதிப்பை
ஏற்படுத்தி வருகின்றன என்பதை இந்த உலகிற்கு தெரிவித்தனர். அதுவரை பெரிய அளவில் பேசாப்
பொருளாகவே இந்த நுண் நெகிழிகள் தொடர்பான பாதிப்புகள் இருந்தன. இன்னும் சொல்லப்போனால்
அதனால் பாதிப்பு ஏதும் வராது என்றுதான் நம்பிக்கொண்டிருந்தார்கள். வடக்கு பசிபிக் கடல் பகுதியில்
இருந்து பிடிக்கப்பட்ட மீனின் உடலுக்குள் 18 வகையான
நுண் நெகிழிகள் இருந்ததை எரிக்சன் படம் பிடித்து உலகை
அதிர வைத்தார்.
சென்னையில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட ஏழு மீன் வகைகளில் நுண் நெகிழிகள் கலந்து இருப்பதை கண்டறிந்தனர். நெதர்லாந்தில் 22 பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் 17 பேரின் ரத்தத்தில் நுண் நெகிழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
‘அறிவியல் பலகை’
எனும் மாதந்திர இதழில் இது தொடர்பாக வெளிவந்திருந்த சில தகவல்களைத்தான் மேலே உங்களோடு
பகிர்ந்துக்கொண்டேன். ரத்த அணுக்களில்கூட மைக்ரரோ
பிளாஸ்டிக்குகள் காணமுடிகிறது என்றால் நாம் இந்தச் சூழலை எங்கு கொண்டுவந்து
விட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நமது நாட்டில் இம்மாதிரியான ஆய்வுகள் பெரிய
அளவில் செய்யப்படுவதில்லை. அப்படியே செய்தாலும் அது பெரிய அளவில் மக்களிடத்தில் கவன
ஈர்ப்பு ஏற்படுவதில்லை.
சினிமாவும், கேளிக்கைகளும்,
இலவசப் பொருள்களும் கொடுக்கின்ற போதையில் நம்மவர்கள் சிக்கிக்கொண்டு மயங்கியிருக்கும்போது
உணவோடு நெகிழிகளையும் வாங்கி சாப்பிடுகிறீர்கள் என்று கூறும் என் போன்றவர்கள் மனநோயாளிகளாகத்தான்
தெரிகிறோம்.
பிறந்தக் குழந்தையின்
தொப்புல் கொடியில், குழந்தைகளின் மலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை ஆய்வாளர்கள்
கண்டுபிடித்திருக்கின்றனர். பால் பாட்டில்களில்
இருந்து நுண் நெகிழிகள் உணவுக் குழாய்க்குள் சென்றிருக்கலாம். அவை இரத்தத்தில் கலக்காமல்
மலத்தில் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கையாக முன்பு இருந்தது. அது உண்மையல்ல என்று
ஆய்வுலகம் நம்மை இப்போது எச்சரித்திருக்கிறது.
கடல், நிலம் தொடங்கி
காற்றில் கூட நுண் நெகிழிகள் கலந்திருப்பதை நாம் உணர வேண்டும். இதை தவிர்ப்பதற்கான
வேலைகளை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். குழந்தைகளிடம்
இதுகுறித்து பேச வேண்டும். பள்ளியிலும் இதற்கான பயிற்சியினை வழங்க வேண்டும். எதிர்காலத்தை
கருத்தில் கொண்டு அவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் இதை செய்தேஆக வேண்டும்.
நெதர்லாந்தில்
மனிதர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அணுக்களில் மைக்ரரோ பிளாஸ்டிக்குகள் இருந்தது என்றேன் அல்லவா? அது எந்த
வகை பிளாஸ்டிக் தெரியுமா? Polyethylene Terephthalate (PET). இது பெரும்பாலும் தண்ணீர்
பாட்டில் தயாரிக்க உதவும் பிளாஸ்டிக் ஆகும்.
‘மினரல் வாட்டர்’ அல்லது ‘டிரிங்கின்
வாட்டர்’ என்று ‘லேபில்’ செய்திருக்கும் தண்ணீர் பாட்டில் தானே நமக்கு வசதியாக வாங்கி
ஸ்டைலாக அருந்துகிறோம். தண்ணீரோடு நெகிழித் துகள்களையும் நமது வயிற்றுக்கொண்டு போகிறோம்
என்பது அறிக.
கொதிக்க வைத்த
தண்ணீரை கண்ணாடி பாட்டில்களில் கொண்டு போவதால் நாம் எதை இழந்துவிடுவோம்? தினமும் கடையில்
ஒரு வேளையாவது உணவு வாங்கும் நபராக இருந்தால், சாப்பாட்டிற்கான பாத்திரத்தை நாம் வீட்டிலிருந்தே
கொண்டு போகலாம். நம் பிள்ளைகளுக்கும் இதையே நாம் பழக்கப்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளாக
என் பழக்கங்களில் இதுவும் ஒன்று. கடையில் தேனீர் வாங்கி வருவதாக இருந்தாலும் என் சொந்த
பாட்டிலைத்தான் கொண்டுபோய் வாங்கி வருகிறேன். என் இந்தியப் பயணங்களில்கூட என் தேனீர்
பாட்டில் என்னோடு பயணம் வரும்.
இதனால் இழப்பதற்கு
ஒன்றும் இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதுகாப்பிற்கு நமது பங்களிப்பை
இதன்வழி வழங்க முடியும்.
ஒரு புள்ளி விவரப்படி
குறைந்தது எட்டு மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கிறது
என்று கூறப்பட்டுள்ளது. கடலில் கலக்கும் நெகிழிகளால்
ஆண்டிற்கு 10 லட்சம் கடல்வாழ் பறவைகளும், 1 லட்சம் கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழப்பதாக
கணக்கிடப்படுகின்றன. நுண் நெகிழிகளை உண்ணும் மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி நாம்
தான் உண்கிறோம். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என பெரியவர்கள் சொன்ன வார்த்தைக்கு
உண்மை விளங்குகிறதா? நமது அழகான இந்த பூமியில் எதை நாம் விதைத்தோமோ, இப்போது அதைத்தான்
அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம்.
மிக அண்மையில்
நான் கடல் மக்கள் என்று கூறக்கூடிய செலெத்தார் பழங்குடி மக்கள் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
கடலிலேயே வீடு கட்டிக்கொண்டு வாழும் மக்கள் அவர்கள். அவர்களின் வாழ்வாதாரமும் அந்தக்
கடல்தான். மிக அழகான அந்தக் கிராமம் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. கடலிலும்
அள்ளப்படாத குப்பைகள் கடைலையே மூடும் அளவிற்கு இறைந்துக்கிடக்கிறது.
பெண்கள் துணிவைக்கவும்,
பாத்திரங்கள் கழுவவும் அந்தத் தண்ணீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம் தண்ணீர்
வசதியில்லாத கிராமம் அது. சிறுகுழந்தைகள் குப்பைகளுக்கு நடுவே குதித்து குளித்து மகிழ்கிறார்கள்.
இயற்கையை நேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் என்னால் இந்தக் கட்டுரையைத்தான்
எழுத முடிகிறது. கிராமத்தை தூர்வாறி சுத்தம்
செய்ய நடந்துக்கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை.
காலதாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நுண் நெகிழிக்கும், நொகிழிகளின் ஆதிக்கத்திற்கு நாம்
நம்மைத்தான் பணையம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.
-யோகி
நன்றி தமிழ்மலர் 10/4/2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக