"தேனீர் என்பது இவ்வளவுதான்
முதலில் தண்ணீரைக் கொதிக்கவிடு
பிறகு தேயிலையைப் போட்டுக் கலக்கு
பிறகு
உரிய விதத்தில் அருந்து
இது தெரிந்தால் போதும் உனக்கு"
- sen-no-rikyu
ஜென் கவிதைத் தொகுப்பில் இருக்கும் இக்கவிதையானது பல்வேறுக்காலக்கட்டங்களில் எனக்கு பல்வேறு புரிதலைக் கொடுத்திருக்கின்றன. முகநூலில் நான் இக்கவிதையை பகிர்ந்த காலத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டு அதன் memori வரும்போதெல்லாம் என் வாழ்க்கையின் சூழல் வெவ்வேறு திசையை நோக்கி வீசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஜென் நிலைக்கு என் மனதை நான் இன்னும் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், சுவையான தேனீர் கலக்குவது சுலபமல்ல என்பதை உணர்வேன். அதோடு தேயிலைத் தோட்டத்தின் கண்ணீர்க் கதைகளை உள்வாங்கினால், அது தேனீர் அல்ல, நம் சமூதாயத்தின் ரத்தமும் கண்ணீரும் என்று புரிந்துவிடும். பின் தேனீரை அருந்தவே மாட்டோம்.
எரியும் பனிக்காடு அளவிற்கு தொடக்கமே இவ்வளவு தீவிரமாக போக வேண்டாம். தற்போது தேனீரோ அல்லது காப்பியோ இல்லாமல் ஓர் அனுவும் நமக்கு அசைவதில்லை என்பது உண்மை. ஆனாலும் சுவையான ஒரு தேனீரையோ அல்லது காப்பியையோ கலப்பது என்பது ஒரு கலை. சுவைத்து அருந்துவது என்பது மற்றொருக் கலை. இயந்திர மனிதர்களுக்கு இதெல்லாம் புரியாது; தெரியாது.
உலகின் எல்லா மனிதர்களிடமும் மாறாத தினமும் மேற்கொள்ளும் கடமைகள் என்று ஒருசில இருக்கின்றன. கடமையாக இல்லாமல் காதலோடு மேற்கொள்ளும் ஒரே விஷயம் தேனீர் அல்லது காப்பி அருந்துவதுதான். ஆவி பறக்கும் அந்தக் கிண்ணத்தை கையிலெடுப்பதிலிருந்து அதன் மணத்தை முகர்ந்து சுவாசத்தை வெளியேற்றும்வரை அத்தனையும் காதலாகும்; கசிந்து உருகும். காண்பதெல்லாம் இன்பமாகும். காலைத் தேனீர் நாசம் என்றால் அன்றைய நாளே சிலருக்கு சர்வநாசம்.
அதனால்தான், தேனீர் என்பது வெறும் தேனீர் அல்ல என்கிறேன் நான்.
மலேசியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தேயிலை பிராண்ட் BOH. இந்த ஆண்டோடு 93 ஆண்டுகள் நிறைவை எட்டுகிறது இந்த தேயிலை நிறுவனம். அதே போல மலேசியாவில் பிரபலமான இன்னொரு தேயிலை பிராண்ட் CAMERON VELLEY TEA. பாரத் குடும்ப நிறுவனமான இந்த தேயிலைத் தோட்டம் சுமார் 4 தலைமுறையை கண்டிருக்கிறது. இரண்டு தேயிலைத் தோட்டங்களும் கேமரன்மலையின் அடையாளமாகும். தவிர தனித்த வரலாறுகளை இந்தத் தேயிலைத் தோட்டங்கள் கொண்டிருக்கின்றன. இது தவிர Blue Vally தேயிலைத் தோட்டம் (தற்போது இந்தத் தோட்டம் இல்லை), தனியார்களுக்கு சொந்தமான சிறிய அளவிலான தேயிலைத் தோட்டங்களும் இருந்திருக்கின்றன.
நாம் கேமரன்மலைத் தேயிலைத் தோட்டத்திற்கு போவதற்கு முன்பாக கோமரன் மலையின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளலாம். 1885-ஆம் ஆண்டு மலாயாவை ஆட்சிசெய்துக்கொண்டிருந்த பிரிட்ஷாரிடமிருந்து கேமரன்மலை வரலாறு தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டில் பிறந்து போர் சம்பந்தப் பட்ட இராணுவத் துறையில் அதிகாரியாக பணியாற்றிய வில்லியம் கார்டன் கேமரனை, மலாயா தீபகற்பத்தில் இருக்கும் திதிவாங்சா மலைத்தொடரை வரைபடமாக்கும் பணியை மேற்கொள்ள பிரிட்டிஷ் கவுன்சில், உத்தரவிட்டது. இக்காரணத்திற்காகவே அவர் மலாயாவுக்கு வரவழைக்கப்பட்டார்.
1885 இல் மேற்கொள்ளப்பட்ட இந்த பயணத்தின் போதுதான் அவரும் அவரது குழுவினரும் இந்த அழகிய மலைப்பகுதியைக் கண்டுபிடித்தனர். உயரமான மற்றும் தாழ்வான சமவெளியைக் கண்டறிந்த ஆய்வுக் குழுவினர் அந்தச் சதுக்கம் சுவாரஸ்யமாகவும், வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்டதாக இருப்பதையும் கண்டறிந்தனர். இயற்கையின் கண்ணாமூச்சியாட்டத்தால் அவரும் அவரது குழுவினரும் அப்பகுதியின் உண்மையான இருப்பிடத்தை துள்ளியமாக பதிவு செய்ய முடியவில்லை. மாறாக, அங்கு செல்வதற்கான வழியை மட்டுமே வில்லியம் கேமரன் பதிவு செய்தார். வரலாற்றில் முதன்முதலாக அதைப் பதிவு செய்ததற்காக அவரின் பெயரையே இந்த அழகிய மலைக்குச் சூட்டினார்கள். அதற்கு முன்பு ஹில் ஸ்டேஷன் என்று மட்டுமே இம்மலை அழைக்கப்பட்டது.
மலைத்தொடரை வரைபடமாக்கும் பணி அந்தக் காலக்கட்டத்தில் சுலபமாக நடக்கவில்லை. சாலைகள் இல்லாத விலங்குகள் வாழும் வனமாக இருந்தது அந்த மலைத்தொடர். வில்லியம் கேமரனுக்கு உதவியாக Kulop Riau என்பவரும் உடன் இருந்தார். இருவரும் தன் குழுவினருடன் பலமாத காலங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த வரைப்படமாக்கும் பணியில் பொருள்களை சுமந்துவருவதற்கு யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆராய்ச்சிக்கும் வரைப்படத்திட்டத்திற்கும் தேவையான பொருள்கள் மற்றும் பலமாதப் பயணத்திற்கு தேவையான உணவுப்பொருள்கள், உடமைகள் என யானைகள் அம்மலைக்குச் சுமந்துச்சென்றிருக்கின்றன.
அவர்கள் தொடக்கத்தில் தஞ்சோங் ரப்புத்தானின் ஒரு பகுதியிலிருந்து இப்பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இப்பயணத்தின் போதுதான் அக்குழு கிந்தா ஆற்றினையும் ஆய்வுக்கு உட்படுத்தினர். கிந்தா ஆறு உற்பத்தியாகும் கிணறுக்கொண்ட மலையை இவர்கள்தான் கண்டுபிடித்திருக்கின்றனர். கிந்தா ஆறு என்பது பேராக் மாநிலத்தின் குறிப்பாக ஈப்போவாசி மக்களுக்கு மிக முக்கியமான ஆறு ஆகும். மலையில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் நீரோட்டமானது ஈப்போ வழியாக பயணித்து பேராக் ஆற்றில் சங்கமிக்கிறது. விவசாய நிலங்களுக்கு இந்த ஆற்று நீரின் பங்கு மிகத் தேவையானது.
நீண்டப் பயணத்திற்குப் பிறகு இவர்கள் challi மலையின் உச்சியை அடைந்தனர். அங்கிருந்து பலவித மலைமுகட்டுகளை வில்லியம் கெமரன் பதிவு செய்தார். அதோடு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் ஒரு சதுக்கப் பகுதியைக் கண்டுப்பிடித்தார். கடுமையான குளிரின் காரணமாக அவரால் அப்பகுதியை துள்ளியமாக பதிவு செய்ய முடியவில்லை. 8 முதல் 25 செல்சியஸ் குளிர் இருந்தது என்கிறார்கள்.
1920-ஆம் ஆண்டு அந்த இடம் மீண்டும் அடையாளம் காணப்பட்டு, பின் கேமரன் ஹைலேண்ட்ஸ் என்று அவரது நினைவாக பெயர் சூட்டப்பட்டு இன்று வரை அப்படியே அழைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலைக் கொண்ட இந்த மலைப்பகுதி தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் விடுமுறைக்கான ஓய்வு இடமாக பயன்படுத்தி வந்தனர். அவர்களின் பாரம்பரிய கட்டுமான வடிவில் பங்களாக்களையும், தேவாலயங்களையும், சொகுசு வீடுகளையும் அங்கு கட்டினர். தேனீர் பிரியர்களான ஆங்கிலேயர்கள், தேயிலை தோட்டம் அமைக்க கேமரன்மலை சிறந்த இடம் என்று நம்பினர். அங்கு தேயிலைத் தோட்டம் அமைக்க திட்டமிட்டனர்.
உலகப் பிரசித்திப் பெற்ற கேமரன்மலை BOH தேயிலை
கேமரன் மலையில் தேயிலை சாகுபடி நடவடிக்கைகள் 1920 களில் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடைபெற்றன. பிரிட்டிஷரான J.A. Rusell மற்றும் அவரது சகாவான A.B. Milne இருவரும் முதன் முதலாக கேமரன்மலை தேயிலை சாகுபடிக்கு ஏற்ற இடம் என்பதை கண்டறிந்து அதற்காக விண்ணப்பம் செய்தனர். A.B. Milne தான் இலங்கை தேயிலைத் தோட்டத்தின் நிர்வாகியாக வேலைசெய்த அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது. J.A. Rusell இவரும் சாதாரனமானவர் இல்லை. பிரிட்டிஷராக இருந்தாலும் மலாய் மற்றும் சீன மொழியைப் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்றுக் கூறப்படுகிறது. சீனர்களை கூலிகளாகக் கொண்டு ஈய வியாபாரமும் நம்மவர்களைக்கொண்டு ரப்பர் வியாபாரமும்கூட இவர் செய்திருக்கிறார். உலகளவில் இவ்வியாபாரங்களுக்கு பெரும் மந்தநிலை ஏற்பட்டபோது இவர் தேயிலைப் பயிரிட முடிவுச் செய்தார்.
கேமரன்மலையின் அழகிய கன்னிக்காடு நிலப்பரப்பு நாட்டின் முதல் தேயிலைத் தோட்டமாக மாற்றப்பட்டது. தேயிலைப் பயிர்கள் இந்தியாவிலிருந்துதான் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. பின் 1929-ஆம் ஆண்டு அதற்கு BOH தோட்டம் என பெயர் சூட்டப்பட்டு இன்றுவரை அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறது. BOH என்ற பெயர் " Bohea" என்பதிலிருந்து பெறப்பட்டது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு மலையின் பெயர் அது. Wuyi Hills என்றும் அம்மலைக்கு இன்னொருப் பெயர் உண்டு. இங்குதான் பேரரசர் Shennong, தேயிலையைக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. BOH என்றால் மாண்டரின் மொழியில் விலைமதிப்பற்ற மகிழ்ச்சி என்று பொருள்.
ஒரு ஸ்டீம்ரோலர், சில தொழிலாளர்கள் மற்றும் சில கழுதைகளைப் பயன்படுத்தி, அவர்கள் செங்குத்தான பாறைகள் மற்றும் கன்னி காடுகளை சீர்செய்து, திருத்தி மலைப்பகுதிகளை தேயிலை தோட்டங்களாக மாற்றினர். அப்போது தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கில் இந்தியத் தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தங்குவதற்காக எஸ்டேட்-களும் உருவாகின. தரமான தேயிலையை பெற தேயிலைக் கொழுந்துகளை பார்த்து பார்த்து கையிலேயே பறித்திருக்கிறார்கள். முதுகில் சுமந்திருக்கும் பிரம்பால் செய்யப்பட்ட கூடையில் அல்லது கோணியில் கிள்ளிய தேயிலைகள் சேகரிக்கப்பட்டு மலையிலிருந்து கீழே இறக்கவேண்டும். அனைத்தும் மனித உழைப்புதான். தேயிலைத் தொழிலாளர்களின் கஷ்டங்கள், மாதச் சம்பளம், அடிப்படை தேவைக்கான போராட்டம் எல்லாமே இங்கிருந்த இந்தியத் தொழிலாளர்கள் அனுபவித்தார்கள். சமயத்தில் விஷ ஜந்துக்களாலும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
BOH என்று பெயர் சூட்டப்பட்ட 4 ஆண்டுகளில் அதன் தோற்றுனர், தனது 50-வது வயதில் சிங்கப்பூரில் காசநோயால் இறந்தார். அவரின் மனைவியான Kathleen நிதிச் சிக்கல்கள் இருந்தபோதிலும் BOH நிறுவனத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அவரின் முயற்சி வீணடியவில்லை. ஆணாலும் இரண்டாம் உலகப் போரின் போது, தேயிலைத் தோட்டம் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் பெரும்பாலும் பராமறிப்பு இல்லாமல் தோட்டங்கள் கைவிடப்பட்டது. தொடர்ந்து மலாயா அவசரநிலையின் போது, கேமரன்மலை கம்யூனிஸ்ட்டுகளின் முதன்மையான பதுங்கு மண்டலமாகவும் இருந்திருக்கிறது.
இந்நிலையில்தான் Rusell-ளின் மகன் டிரிஸ்டன் தனது 21வது வயதில் தனது குடும்பத் தொழிலை கையில் எடுக்கிறார். தோட்டங்களைச் சுற்றி பாதுகாப்பு துருப்புக்கள் நிறுத்தப்பட்டன, தோட்டத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் முயற்சிக்கு அது உதவியது. மலேசியா வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றப்பிறகு, பல பிரிட்டிஷ்க்காரர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனாலும், BOH-வின் ஸ்தாபகக் குடும்பம் மலேசியாவிலேயே தங்குவதற்கு முடிவு எடுத்தனர். அதேபோல், இந்தியாவிலிருந்து கூலியாக வந்த தமிழர்கள் பல்வேறுக் காரணங்களால் அவர்களால் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. நிரந்தர குடியேற்றவாசிகளாக அவர்கள் மலாயாவிலேயே தங்க முடிவெடுத்தனர். அவர்களுக்காக BOH நிறுவனம் தமிழ்பள்ளிகள் மற்றும் கோயில்களையும் கட்டிக்கொடுத்தனர். தற்போது தேசிய வகை BOH தமிழ்ப்பள்ளி பிரிவு 1- பிரிவு 2 இரு பள்ளிகளையும் மலேசிய அரசாங்கமே எடுத்து நடத்துகிறது. என்றாலும் தோட்டத்தில் நமது மக்கள் மிகக் குறைந்த அளவே இருப்பதால் பிரிவு 1 பள்ளியில் தற்போது 4 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். பிரிவு 2 பள்ளியில் பூர்வக்குடி மாணவர்களும் தமிழ் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று Rusell-ளின் பேத்தி Caroline Russell இந்நிறுவனத்தின் ஸ்தாபகராக இருக்கிறார். இவர் மலேசியாவில் பிறந்தபடியால் BOH நிறுவனம் ஒரு மலேசியருடையது என்று இந்த நாடு கூறிக்கொள்கிறது. பயண வழிகாட்டிகள் இப்படி கூறிதான் பலருக்கு BOH தோட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். BOH நிறுவனம் கொண்டிருக்கும் நான்கு தேயிலைத் தோட்டங்கள் மொத்தமாக 1200 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 மில்லியன் கிலோ தேயிலை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
CAMERON VELLEY TEA
1933-ல் பாரத் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ரிங்லெட்டிலிருந்து தானா ராதா வரை செல்லும் பிரதான சாலையில் பாரத் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. தாப்பாவிலிருந்து கேமரன்மலையை நோக்கி பயணித்தோமானால் சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் அந்நிறுவனத்தின் தேநீர் கடை, நினைவு பரிசு கடையை மற்றும், தேயிலைத் தோட்டத்தின் பிரமாண்ட அழகைக் காணாமல் செல்ல முடியாது. ஒரு நீண்டப் பயணத்திற்குப் பிறகு, வரும் அந்த தேனீர் கடையை கண்டதுமே தேனீர் பிரியர்களால் அமைதிக்கொள்ளவும் முடியாது.
CAMERON VELLEY TEA நிறுவனத்தின் தோற்றுனர் வட இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான ஆக்ராவைச் சேர்ந்த சுபர்ஷத் பன்சால் அகர்வால் என்பவர். 1910-ஆம் ஆண்டு வணிகம் செய்ய மலேசியாவிற்கு வந்தவர், தைப்பிங் நகரிலிருந்த அவரது மாமாவின் மளிகைக் கடையில் வியாபாரத்திற்கு உதவினார், பின்னர் ஒரு ரப்பர் தோட்டத்தை வாங்கி சில்லறை வணிகத்தை நடத்தினார். கேமரன்மலையை நன்கு தெரிந்துக்கொண்டவர் 1933-ஆம் ஆண்டு, பாரத் நிறுவனத்தை தொடங்கி, தேயிலைப் பயிரிட்டு, தேயிலை இலைகளை அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனைச் செய்தார்.
1937-ஆம் ஆண்டு பாரத் குழுமத்தின் ஸ்தாபகர் சுபர்ஷத் மறைவிற்குப் நிறுவனத்தின் அடுத்த வாரிசாக அவரது 9 வயது மகன் பிரிஜ்கிஷோரை விட்டுச் சென்றார். சிறுவனான பிரிஜ்கிஷோர் இந்தியாவில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். அக்காலக்கட்டத்தில் அவரின் உடன்பிறந்த சகோதரர்களான நந்தகிஷோர் மற்றும் கைலாஷ்சந்த் ஆகியோர் நல்லவிதமாக நிறுவனத்தை வழிநடத்தினர். இரண்டாம் உலகப் போர் மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பை இந்நிறுவனமும் எதிர்கொண்டது.
பிரிஜ்கிஷோர் தனது 20வது வயதில் இந்தியாவில் படிப்பை முடித்துவிட்டு மலேசியா திரும்பினார். தற்போது MARDI நிலையமாக இருக்கும் நிலையம்தான் அப்போது தேயிலை விவசாய ஆராய்ச்சி மையமாக இருந்தது. தேயிலை தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரிஜ்கிஷோர் பெற்றார். அவரது நிறுவனம் அதன் சொந்த தேயிலை இலைகளை பதப்படுத்தத் தொடங்கியதோடு அவற்றை சந்தைப்படுத்துவதில் வெற்றியும் கண்டது. முழுக்க குடும்ப ஆட்களையே அவர்கள் பங்காளிகளாக வியாபாரத்தில் சேர்த்துக்கொண்டனர். அவர்களின் இந்த கூட்டு வியாபாரம் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. படிப்படியாக தமது வியாபாரத் துறையில் முன்னேறி இன்று வெவ்வேறுப் பிரிவுகளில் மொத்தம் எட்டு நிறுவனங்களை பாரத் குழுமம் கொண்டுள்ளது. அதில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் என்றால் Cameron Bharat Platations தான். பிரிஜ்கிஷோர் 2006- ஆண்டு காலமானார். அவரது இரண்டு மகன்களான டத்தோ கேசவ் மற்றும் டத்தோ வினோத் ஆகியோர் இப்போது வரை பாரத் குழுமத்தை அதன் பாரம்பரியம் மாறாமல் வெற்றிகரமாக இயங்கி வருகிறார்கள்.
BOH மற்றும் CAMERON VELLEY TEA இருநிறுவனங்களுமே தொடக்ககாலத்தில் பாரம்பரிய முறைப்படி கைகளில் தேயிலை கொழுந்திகளை பறித்தனர். அதிக உடலுழைப்பு தேயிலைத் தோட்டங்களுக்குத் தேவைப்பட்டது. ஆண்-பெண் இருவருமே குறைந்த சம்பளத்தில் கடுமையாக உழைத்தார்கள். உலகத்தரம் வாய்ந்த தேயிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாட்டுச் சந்தைகளிலும் சந்தைப்படுத்தப்பட்டன.
இந்தக் கடும் உழைப்பை பதிவு செய்யும் விதமாக சங்கு சண்முகம் என்பவர் இப்படி ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
“அன்னை வளர்த்தது ரப்பரை-எங்கள்
அப்பன் வளர்த்தது கொப்பரை!
அண்ணன் வளர்த்தது செம்பனை-எங்கள்
ஆயிரம் சோதரிமார்கள் குருதியில்
ஆனது தானடா தேயிலை”
ஒருகாலக்கட்டத்திற்குப் பிறகு பழைய பாரம்பரிய மரபுகளில் அவர்கள் தேயிலைகளை பறிப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இயந்திரத்தை பயன்படுத்தி தேயிலைகளை கண்டபடிக்கு வெட்டி எடுத்தார்கள். தற்போது பெரிய பெரிய கத்தரிகளைக் கொண்டு வெட்டியெடுக்கிறார்கள். தரம் குறித்தோ அல்லது சுவை குறித்தோ இரு நிறுவனங்களுக்கும் பெரிதாக அக்கரைக் கொள்ளாவிட்டாலும், விளப்பரப்படுத்தும்போது உலகத்தரம் கொண்ட தேயிலை என்றே சொல்கிறார்கள்.
தற்போது இந்தியத் தொழிலாளர்களோ அல்லது மலேசியர்களோ தேயிலை பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவதில்லை. முழுக்கவே அந்நிய தொழிலாளர்களைக் கொண்டுதான் வேலை நடக்கிறது. குறிப்பாக பங்களாதேசத் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளத்திற்கு கடுமையாக வேலை செய்கிறார்கள். 30 கிலோ மூட்டைகளாக கத்தரித்த தேயிலைகளை நிரப்பி அவர்களே மலையிலிருந்து மூட்டைகளை தோளில் சுமந்துவந்து இறக்குகிறார்கள். இலைகளை பதப்படுத்தும் தொழிற்சாலையில் நம்மவர்கள் சிலர் வேலை செய்வதைப் அங்கு பார்க்க முடியும்.
அண்மையில் நான் BOH நிறுவனத்தின் தேயிலை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலை மற்றும் காப்பிக்கடைக்குச் சென்றிருந்தேன். இதற்கு முன்பும் நான் பலமுறை சென்றிருக்கிறேன். என்றாலும் இக்கட்டுரைக்காக ஒரு தேடலுடன் சுங்கை பாலாஸ் தேயிலை உற்பத்திச் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தேன்.
இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட அல்லது சிலோன் என்று பெயர் பொறிக்கப்பட்ட தேயிலைப் பதப்படுத்தும் steamroller இன்றும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பார்வைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடக்ககாலப் புகைப்படங்களும் அங்கு காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிலக் காட்சிகள் BOH மற்றும் CAMERON VELLEY TEA தேயிலை நிறுவனங்களிடையே கடுமையான வியாபாரப் போட்டி இருந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. உள்ளூர் வியாபாரத்திற்காக BOH நிறுவனம் ‘புலி’ பிராண்டிலும், CAMERON VELLEY TEA ‘மான்’ பிராண்டிலும் தமது தேயிலைகளை சந்தைப்படுத்தியிருக்கின்றனர்.
தற்போதும்கூட இந்த இரு தேயிலை நிறுவனங்களுக்குள் போட்டியிருக்கலாம். ஆனால், மலேசிய மக்களைப் பொருத்தவரை அவர்களின் ஒரேத் தேர்வு நிச்சயமாக BOH தேயிலையாகத்தான் இருக்கிறது. அவ்விஷயத்தில் BOH நிறுவனம் மலேசிய மனங்களை வெற்றிக்கண்டிருப்பது உண்மை. தவிர சுற்றுப்பயணிகளைக் கவர்வதற்காக BOH நிறுவனமும், CAMERON VELLEY TEA நிறுவனமும் பல்வேறுச் சுவைகளில் தேயிலைகளை வணிக ரீதியில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும், சுற்றுப்பயணிகளுக்கு விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் கேமரன்மலையை நோக்கி படையெடுக்கும் சுற்றுப்பயணிகள் அதிகரித்தபடியே இருக்கிறார்கள். என்றாலும்கூட பழைய கேமரன்மலை கொண்டிருந்த அதன் அழகும் பொலிவும் இழந்து வெகுநாள் ஆகிவிட்டது. அதன் சீதோஷன நிலையும் பாரிய அளவில் மாற்றமடைந்து விட்டது. விவசாயத்திற்காக பெருமளவு காடுகள் சூரையாடப்பட்டுவிட்டன. என்றாலும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் இந்த தேயிலைத் தோட்டங்களுக்காகவும், எஞ்சியிருக்கும் சிறிய அளவிளானக் காட்டில் மலையேறவும் வருகிறார்கள். , கேமரன் மலையின் அழகில் மனதைப் பறிகொடுத்தக் கதையையும் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களின் பேச்சு முழுக்க தேயிலை வாசம் கலந்தே இருக்கிறது.
குறிப்பு: edit செய்யசெய்யப்பட்ட இந்தக் கட்டுரை
https://wowtam.com/ta_in/3-malaysia-mount-cameron-precious-joy/11755/ என்ற
இணையத் தளத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக