வியாழன், 15 செப்டம்பர், 2022

மலேசியாவில் தோழர் தொல்.திருமாவளவன்

 

 “விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், தமிழ் நாடு, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் தொல் திருமாவளவனுடன் ஓர் சந்திப்புக்கு வருகிறீர்களா?” என்ற அழைப்பு வந்தவுடன் முதல் ஆளாக என் பெயரை பதிந்துக்கொண்டேன். ஓர் அரசியல் கட்சித் தலைவராகவும், இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் மக்கள் உறுப்பினராகவும், ஒடுக்கப்படும் மக்களுக்கு குரல் கொடுப்பவராகவும் அவரின் நிலைப்பாடுகளை அவரின் உரைகளின் வழியே நான் அறிந்துக்கொண்டேன். பலரும் அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.  தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், தோழர் தொல் திருமாவளவன் மீது பலருக்கு தனி மரியாதையும் மதிப்பும் இருக்கிறது. அதற்கு அவரின் அரசியல் தீர்மானங்கள் மிகப்பெரிய காரணம் எனலாம்.

மலேசிய சந்திப்பில் கலந்துக்கொண்ட அவரிடம் ஒருசில கேள்விகள் முன்வைக்கப்பட்டது.  அனைத்திற்கும் அவர் தெளிவான பதில் சொன்னார்.  உங்களுக்கு திருமணம் எப்போது? அடுத்த முறை தம்பதியராக உங்களை காண விரும்புகிறோம் என்கிற அர்த்தமில்லாத கேள்விகளைச் சட்டை செய்யாமல் அப்படியே கடந்துச் சென்றார் தோழர் திருமா அவர்கள். ஒருவரின் பெர்செனலை கேட்கக்கூடாது என்கிற இங்கிதம்கூட தெரியாத ஜனங்கள் என்று அவர் நினைத்திருக்ககூடும். கேள்வியை செவிமடுத்த எங்களுக்கே எரிச்சலாகத்தான் இருந்தது.

அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியை மட்டும் நான் இங்கு பதிவு செய்ய நினைக்கிறேன். தெளிவாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு மிக நீண்ட விளக்கத்தை அவர் தந்திருந்தார். அதைச் சுருக்கித்தான்  இங்கு எழுதியிருக்கிறேன். அக்கேள்வி….


தமிழ்தேசியம் குறித்து உங்கள் கருத்து என்ன?

தோழர் திருமா : தேசம் என்பதிலிருந்துதான் தேசியம் உருவாகிறது. தேசம் என்பது எதன் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும் என்கிற பார்வையிலிருந்து தேசியம் உருவாகும். வெள்ளையர்கள் ஆண்டபோது காந்தியடிகள் தலைமையில் விடுதலைப் போராட்டம் நடந்தது. பகத் சிங் ஒரு புரட்சிகரமான தேசியத்தைக் கட்டமைக்கப் போராடினார். காங்ரஸ் எந்த வகையான தேசியத்தை முன்வைத்தது என்றால் பல மதங்கள் இருந்தாலும் பல மொழிகள் இருந்தாலும் பலக் கலாச்சாரம் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்களாக வாழ்வோம். இந்தியன் என்ற உணர்வோடு வெள்ளையர்களை விரட்டியடிப்போம். இந்தியன் என்ற அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டமைப்போம் என்று இருந்தது. இதை நாம் நாட்டினம் என்று புரிந்துக்கொள்ளுதல் வேண்டும். நாட்டினம் என்றால் தேசிய இனம் . மொழியின் அடிப்படையில் தேசிய இனம் என்று சொல்கிறோம். மரபு அடிப்படையில் மரபினம் என்று சொல்கிறோம். இந்தியாவின் ஆரிய இனம் திராவிட இனம் இது இரண்டும்தான் மரபினம் என அடையாளப்படுத்தப்படுகிறது

தமிழ் என்பது ஒரு மொழி இனம். அது மரபினம் இல்லை. இதனால்தான் ஆரியன், திராவிடன், மொழி, மதம் இதையெல்லாம் விட்டுவிட்டு, காங்கிரஸ் இந்தியன் நேஷனலிசத்தை பேசியது. அதனால்தான் இந்தியா முழுக்க தன் பார்வையை தேசியப் பார்வையாகவும், தேசிய நீரோட்டமாகவும், தேசியவாதியாகவும் அவர்கள் செலுத்துகிறார்கள் என்றும் தமிழர்கள் குறுகியப் பார்வையில் தமிழ்நாட்டைப் மட்டும் பார்ப்பதாகவும், தமிழர்கள் மொழியின வெறியர்கள் என்றும்  கூறினர்.  மேலும், அவர்கள் தமிழர்களை tamil chauvinism என்று  வகைப்படுத்துகின்றனர். இன்று இந்த தேசத்தை ஹிந்துராஸ்ட்ரா  என்று மோடி அரசு அறிவிக்க திட்டமிட்டு வேலை செய்கிறது. எல்லாரும் இந்துக்களாக வாழ வேண்டும் என்றும் இந்து என்ற ஒரே அடையாளம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அதன் நோக்கமாகும். ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்று அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். ஒரே கலாச்சாரமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மதமாக இருந்தால்தான் அது சாத்தியப்படும். இதை மத தேசியம் (ஹிண்டு நேஷனலிசம்) என்று அடையாளப்படுத்துகிறோம். இயற்கையிலேயே மரபினம் என்பதை தவிர்க்க முடியாது. ஆனால்,  மரபினம் வழி தேசியத்தை கட்டமைக்க முடியுமா?

 நிலபரப்பு, நிலபரப்புக்குள்ளே ஒரு கலாச்சாரம், அதை பின்பற்றும் மக்கள், தொகுதி, ஒரு குறிப்பிட்ட மொழியை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். தங்களை தாங்களே ஆண்டுக்கொள்ளக்கூடிய ஓர் இறையான்மையை கொண்டிருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் ஒரு தேசத்தை உருவாக்க முடியும். தேசம் என்கிற வரையறைக்குள் உட்பட்ட ஒருநிலவரத்தை அந்த நிலவரத்தில் வாழும் மக்கள் தொகுதியை அல்லது அந்த இடத்தை தேசிய இனம் என்று அழைக்கப்படுகிறது.  எனவே, மரபினம் வழி தேசியத்தை உருவாக்க முடியாது என்பது இதன்வழி தெரியவருகிறது.  மொழியின் அடிப்படையில் தேசியமும் தேசங்களும் உருவாகின்றன. 

மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அது ஒரு நிறுவனம்.  ஆனால், மொழி இயற்கையாகவே உருவாகியது. இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு அதை தனது தாய்மொழி என்று சொல்ல முடியாது. எனவே தேசிய இனம் என்பதும் இயற்கையில் மனித குலத்தில் உருவான ஓர் அடையாளம். அந்த தேசிய இனத்தின் அடிப்படையில் தேசத்தை உருவாக்குவதும், உருவாக்கியிருப்பதும் உருவாகப்போராடுவதுமான அடிப்படையில் பார்க்கும்போது தமிழ்மொழியைப் பேசக்கூடிய நாம் தமிழ் தேசிய இனம் என்று நம்மை அடையாளப் படுத்திக்கொள்கிறோம். என்றால் தமிழ் தேசியம் எப்படி உறுவாகும்? மொழி உணர்வு, இன உணர்வு தமிழ் தேசியமாகுமா? தமிழ் தேசியம் என்பது உருவாக்கப்பட வேண்டுமானால் அதற்கு சிலவரையரைகள் தேவைப்படுகிறது. 

தமிழ் தேசியத்தை எப்படிப் பார்ப்பது? தமிழர் ஒற்றுமையை வென்றெடுப்பது மூலமாகத்தான் தமிழ் தேசியம் சாத்தியமாகும். தமிழர் ஒற்றுமையை எப்படி சாத்தியப்படுத்துவது? தமிழரை ஒன்றுபடாமல் தடுப்பது எது? உள்ளபடியாக நாம் தமிழர்களாக ஒன்றினைய முடிகிறதா? எந்த ஒன்றுமையாக இருந்தாலும் கருத்து ஒத்து இருக்க வேண்டும். கருத்தியல் அடிப்படையில் ஒன்று சேர வேண்டும். கருத்தியல் என்றால் என்ன? மொழி என்பதுதான் கருத்தியலா? அல்லது இடம் என்பதுதான் கருத்தியலா? கருத்தியல் என்றுவரும்போது தமிழர்களை ஒன்றுபடாமல் தடுப்பது சாதி என்பதாகும். 



நாம் தமிழ் தேசியத்தைப் பேசுவதால் தமிழர்களை ஒன்றுமையாக இருக்கவிடாமல் தடுப்பது சாதி. நாம் பேசுவது தமிழாக இருந்தாலும் நமது வாழ்க்கை முறை என்பது சாதி அடிப்படையில் இறுகிக் கிடக்கிறது. இந்த எதார்த்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தடையாக இருப்பது சாதி. சாதி ஒழிப்பு என்பது ஒரு கருத்தியலாக இருந்தால்தான் அது தமிழ் தேசியம். சாதி ஒழிப்பை கருத்தியலாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அது தமிழ் தேசியம் ஆகாது. சாதியை எப்படி ஒழிப்பது என்றால் சாதியைக் கட்டி காப்பாற்றுவது எது என்றும் சாதிக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது எது என்றும் சாதி எப்படி வாழ்க்கை முறையாக மாறியது என்று பல கேள்விகளைக் கேட்டால்தான் நாம் அதை ஒழிக்க முடியும்.

சாதி உருவானதிலிருந்து சாதி காப்பாற்றப்படுகிற இந்த நொடி வரையில் இதற்கு ஊக்கம் தருகிற கருத்தியல் எதுவாக இருக்கிறது? சாதியின் இருப்புக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது,  பெரியாரும் அம்பேட்கரும் கண்டறிந்து சொன்ன வரலாற்று உண்மை பார்ப்பனியம். பெரியாரும் அம்பேட்கரும் பார்ப்பனியம் என்று சொல்வதற்கு முன்பு அது சனாதனமாக அங்கீகரிக்கப்பட்டது. சனாதன எதிர்ப்புதான்  தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும். சனாதன எதிர்ப்பு இல்லாத ஒரு கருத்தியல் தமிழ் தேசியமாக இல்லை. எனவே நான் தமிழன், நான் பேசுவது தமிழ் என்ற மொழி பற்றும் இடப்பற்றும் மட்டும் தமிழ் தேசியமாக இருக்க முடியாது.

குறிப்பு: மலேசிய தோழர்களுடனான இச்சந்திப்பை மலேசிய திராவிடர் கழகம் 21/8/2022-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக