பனிமொழி
பட்சிகள் துயிலெழாத கருக்கலில்
முடிகின்றன பயணங்கள்.
மூடுபனியில் மூழ்கிய வீட்டின் கதவுகள்
திறக்கையில்
கீச்சு மொழிபேசி எழுப்பி விடலாம்
விடிவிளக்கின் ஒளிவீச்சில்
துயிலும் என் உயிர்க்குஞ்சை.
திரள்கனவில் கடவுளோடான
வாதத்தில் எப்போதும் வெல்பவளுக்கு
தோல்வியின் உக்கிரத்தில்
அவர் விடுக்கும் சாபமே பசியாக
நிந்திக்க இயலாமல்
அலறியழுது தாய்மடி அடைவாள்.
பசி தணிய ஊசலாட்டமாய்
மாராப்பினுள்ளும் புறமும்
தலையசைத்து
அடுத்தொரு மாயவாதம்
தன் தாயோடு அவள் நிகழ்த்துகையில்
கூட்டினுள் நுழைவேன்.
அதுகாறும்
பனி தின்னட்டும் என் பாழுடலை
தூக்கத்திலிருந்து விழித்தால் அதிகம் அழுது முரண்டு செய்வாள் என் மகள், இரும்புக்கிராதிகளாலான தலைவாசல் கதவின் ஒரு பகுதி நாராசமாகத் தரையில் உரசும், ஒரு பயணத்தை முடித்துவிட்டு அதிகாலை 2:30 மணிக்கு வீடு திரும்பினேன், நவம்பர் மாதக்குளிர், சிறுமகள் விழித்துவிடக்கூடாது எனப் பனியில் முழங்கால்களைக் கட்டியபடி அவளை அந்தக் கிராதிகளின் இடைவெளிகளின் வழியாகத் தூழியில் துயில்வதைப் பார்த்துக் கொண்டு.... வீட்டுக்கு வெளியே அமர்ந்து அதிகாலை. 2:30யிலிருந்து ஒரு 5:45 வரை காத்திருந்த அந்தப் பொழுது இந்த கவிதை.
-- பாம்பாட்டி சித்தன் --
‘குற்றவுணர்வின் மொழி’ என்ற இதழில் இடம்பெற்றுள்ள கவிதைகள் பெருவாரியாக அந்தப் படைப்பாளனின் முதல் தொகுப்புதானா என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் ஆச்சரியப்படுத்துகிறது. இருந்தபோதும் கவிதைகளுக்கு அவர் புதியவர் இல்லை என்பது வாசிக்கும்போதே உணரமுடிகிறது. இந்தத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியிருக்கும் சி.மோகன் “ ஏழெட்டு வருடங்களாகக் கவிதைப் பரப்பில் இயங்கிவரும் இவரின் முதல் தொகுப்பு இது. புத்தகங்களில் தங்கள் முகங்களை உடனடியாகக் காண விழையும் இன்றைய அசுர வேகத்துக்கும் படபடப்புக்கும் நடுவில் இவருடைய நிதானமான காத்திருப்பு ஆறுதலான ஒன்று” என்கிறார்.
இந்த விஷயத்தில் பாம்பாட்டிச் சித்தனின் நிதானமும் உழைப்பும் தெரிகிறது. புத்தகம் பதிப்பிற்கும் எண்ணத்தையும் தாண்டி எழுத்தினூடே வாழ்ந்து அனுபவித்துப் பின் அதைத் தொகுப்பிற்குள் கொண்டு வந்திருக்கிறார் படைப்பாளர்.
‘பார்வையற்ற மனிதன்
வார்த்தைகளைக் கைத்தடியாய்
தட்டிச் செல்கிறான்’
இப்படியாகத் தான் காணும் காட்சிகளைக் கவிதைகள் கொண்டு வந்து அதற்குப் புதிய தேடலை நம்மிடம் ஏற்படுத்துகிறார். இதில் எழுதப்பட்டிருக்கும் அதிகமான கவிதைகள் யாருக்கானவை என்ற கேள்வி எழும்போது அது அவருக்கான கவிதைகளாக இருக்குமோ என்றுதான் காண முடிகிறது. ‘டிசம்பர் 13, 2003’ கவிதையை வாசித்தபோது இந்த முடிவுக்குதான் நான் செல்ல வேண்டியிருக்கிறது.
இருந்தபோதும், தலைப்பிடப்படாத கவிதைகளில் ஒன்றான
‘அவன் ஒரு தோல்வியாளன்
போராடித் தோற்பது அவன் வழக்கம்
தோற்பதெனப் போய் எதிராளியற்ற களத்தில்
வென்றவன் ஆனவன்
தோல்விகளில் அவன் கடிக்கும்
நகங்கள் கூட அத்தகு
வெற்றிப் பெருமிதங்களில் வளர்ந்தவையே
அவன் கடிக்கும் நகங்களில் இடுக்குகளில்
தட்டுப்படும் சதைத்துணுக்குகள்
வெற்றியாளனுடையவை
அவை தோல்வியாளனுக்குள்
வெற்றியின் ருசியூட்டத் தவறுவதேயில்லை
இப்போது மீண்டும்
ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறான்
அவனைத் தோல்வியாளன்
என்றழைக்கத் தகாது என்கிறான்
வாழ்க்கையை வெல்வது சுலபமென்கிறான்
நகங்கடிப்பது நல்லதா,கெட்டதா
எனும் என் கேள்வியை
அவன் தவிர்த்துவிட்டான்.’
இந்தக் கவிதை பாம்பாட்டிச் சித்தனுக்கு மட்டுமேயான வரிகளாக என்னால் பார்க்க முடியவில்லை. போராடி தோற்பதும், தோல்வியிலிருந்து வெற்றியை சம்பாதிக்கும் கலையையும் பலர் அறியவே செய்கின்றனர். நகங்கடிப்பதை புனைவாகவும் அது குழப்பத்தின் அடையாளமாகவும் தான் நான் பார்க்கிறேன்.
பாம்பாட்டிச் சித்தனின் இயற்பெயர் சௌரிராஜன். தேனி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது குவைத் நாட்டில் ஆசிரியராகப் பணியில் இருக்கிறார். இல்வாழ்க்கை, பெண்-ஆண் என இரு குழந்தைகள் எனத் தன் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் பலவிஷயங்களைக் கவிதைகளில் அனுபவங்களாக மாற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.
‘சொல் வலைக்குள் சிக்காத
சிறுபறவை கூட்டத்தில்
ஒன்றைப்போல் அல்ல இன்னொன்று
சிருஷ்டியின் கூறுகளில்
ஒவ்வொன்றும் தனித்தனி
சிறு அதிர்வு பரவ
கால்களில் படவிருப்பது
நிலமா, நீரா என்பதையறியாமல்
இந்தக் கணத்தில்
பறத்தலில்
மூழ்கியுள்ளன யாவும்’
தன் சுயத்தைப் பேசும் கவிதையாகத்தான் நான் இந்தக் கவிதையைப் பார்க்கிறேன். கவிதைகளில் சில வரிகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கிறது.
‘இறந்தவர்கள் காத்திருக்கிறார்கள் நெடுஞ்சாலை ஓரங்களில்’ (பக் 36)
‘கருக்கலில் வரும் கருத்த பால்காரியைக் கூடும்
புணர்ச்சியில் பூரணப்படுகிறது என் புலரி’ (பக் 52)
இப்படிச் சில வரிகளை வாசிப்பின்போது கண்டடையலாம்.
தீவிரம் கொள்ளும் கவிதை எழுத்துக்குத் தாட்சண்யம் காட்டுகிறார் சௌரி ராஜன். இந்தக் கவிஞனின் முலைச்சுரப்பில் மனது நனைகிறது என்கிறார் யூமா.வாசுகி. அதில் நானும் உடன்படவே செய்கிறேன்.
தான் படைக்கும் கவிதைகள் ஒரு படைப்பாளனுன்னு என்னவாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு படைப்பாளனும் தன்னைத் தானே கேட்டுத் தெளிவு பெற வேண்டும். இந்தக் கேள்வியை நான் சௌரிராஜனிடம் கேட்கும் போது அவர் வழங்கிய பதில் இது.
“ஆதிசங்கரரின் ஒரு வாக்கியம் "நீ பார்க்கும் போதே உருவாகிறது ஆகாயம்" என்று. அப்போ அதுக்கு முந்தி அங்கு ஆகாயம் இருந்ததா இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. கவிதையின் நிலையது. அது அங்கு இல்லை/இருக்கிறது இதில் படைப்பாளி ஒரு medium தான்... பாவம். அவனுக்கு அதை எழுதுவதுதான் வேலை,முடிந்தது. அதற்குப்பின் அந்த கவிதை தான் பேசணும்” என்றார்.
இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த கவிதை இது..
'கடும் வெயிலணிந்த விருட்சத்தின்
கிளைப்பூக்களை விடுத்து
டயர் காலணிகளோடு
தார் கொதிக்கும்
அடுப்பருகில் நிற்பவனிடம்...
புழுதிப்புகை சுவாசித்தபடி
ஜல்லிக்கல் நிரவுபவனிடம்...
பிருஷ்டங்களாகி வரும் இடுப்பில்
நீர் சுமந்து தெளிப்பவனிடம்...
பிசுபிசுத்து இழையிழையாய்
சருமத்தின் மேற்படியும்
கருந்திரவத்தைப் பாதையெங்கும்
ஊற்றிச் செல்பவனிடம்...
உருளியை மேற்செலுத்தி
சாலையை சமமாக்குபவனிடம்...
தார்படிந்த உதிரிக் கற்களை
முடிப்பிசிறெனக் களைபவனிடம்...
வெயிலில் நிற்கவிரும்பாமல்
வேலையைத் துரிதப்படுத்தும் மேஸ்திரியிடம்...
நீண்டதோர் சர்ப்பமாய் உருவாகும்
புதியதோர் சாலையில்
தாழப்பறக்கும் வெளிர்நிறத் தட்டானிடம்...
துவக்கலாம் ஒரு கவிதையை..
அன்னம் பதிப்பக வெளியீடான இதன் முதல் தொகுப்பு 2007-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு புத்தகங்களை வெளியீடு செய்துள்ளார் சௌரிராஜன் எனும் பாம்பாட்டிச் சித்தன்.
"கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
பதிலளிநீக்குஎன்ஆற்றுங் கொல்லோ உலகு."
நன்று.. அன்பு தோழரே
நீக்கு