புத்தகத் தலைப்பு : ஆசிரியர்: அ.பாண்டியன்
முதற்பதிப்பு ஆண்டு : 2015
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், இந்தியா
புத்த பிரிவு : கட்டுரை
ஒரு மொழியின் இலக்கியத்தை வாசிப்பதின் வழியும் அறிந்துக்கொள்வதின் வழியும் அந்த மொழிக்கு சொந்தமான இனத்தின் கலாச்சாரம் – பண்பாடு உள்ளிட்ட விவரங்களை ஓரளவு புரிந்துக்கொள்ள வகைசெய்கிறது என நினைக்கிறேன்.
மலேசியாவைப் பொறுத்தவரை பல இன மக்கள் இருந்தாலும் குறிப்பாகத் தொன்மை மொழி என்றும் செம்மொழி அந்தஸ்து கொண்ட மொழியின் இனத்துக்காரர்கள் என்றும் தமிழர்கள் மற்றும் சீனர்கள் இருந்தாலும் நாட்டின் தேசிய மொழி மலாய்தான். அதோடு அது ஆட்சி மொழியாகவும் இருக்கிறது. பல இன மக்கள் வாழும் மலேசிய நாட்டின் பாரம்பரியத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் நிச்சயமாக மலாய் இலக்கியம் அதற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆனால், மலாய் இலக்கியத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அறிய பணியினைச் செய்பவர்கள் நாட்டில் மிகக்குறைவாக இருக்கிறார்கள். அவ்வப்போது சில நவீன மலாய் கவிதைகளைத் தமிழுக்கு மொழி பெயர்க்கும்போது, அந்தச் கவிதையிருக்கும் சில விஷயங்கள் நம்மைப் பிரமிக்கக்வைப்பதுண்டு. மலாய் இலக்கிய உலகில் முக்கியமான கவிஞர்களாக எ.சமாட் சையிட், நோர் எஸ்.எம், கெமலா, சல்மியா இஸ்மாயில், ஷாஃபி அப்துல் பாகர் உள்ளிட்ட மேலும் சிலரையும் குறிப்பிடலாம்.
அதே போல, மலாய் வாழ்வியல், அறிவுத்தளம், பண்பாடு முன்னிருத்திய கதைகளும் நாவல்களும் மலாய் மொழியில் எழுதிய எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கும் வகையில் சிலக்கட்டுரைகளை அ.பாண்டியன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகத்தில் காணலாம். மலேசிய இணையத் தளமான வல்லினத்தில் வெளிவந்த கட்டுரைகள் அவை.
இந்தக் கட்டுரை தொகுப்பில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எல்லாமே மலாய் இலக்கியத்தைப் பேசக்கூடிய கட்டுரைகள் இல்லை என்றாலும் சில கட்டுரைகள் மலாய் இலக்கிய அறிமுகத்தையும், மலாய் இலக்கியவாதிகளையும் அவர்களின் முக்கியப் படைப்புகளோடு மிக எளிமையாக அறிமுகப்படுத்திவைக்கிறது. குறிப்பாக ‘மனதுக்குள் ஒரு மிருகம்’ (பக்கம் 17) என்ற கட்டுரையில் மலாய் இலக்கியத்தில் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான ஷஹனூன் அமாட் குறித்த அறிமுகம் நமக்குக் கிடைக்கிறது. அவர் எழுதிய ‘Gelungnya Terpokah’ அதாவது ‘வறண்ட வயல்’ என்ற கதை மலாய் நெற் விவசாயிகள் இருவரின் பழிவாங்கும் எண்ணத்தைக் கொண்ட கதையாகும். ஒரு கால்நடையும், ஒரு பெண்ணும், விவசாயத்தின் முக்கியமும் மலாய் சமுதாயத்தில் எவ்வாறான எதிர்வினையை உண்டு பண்ணும் என்பதில் இந்தக் கதை ஓர் உதாரணம். அதை மிக அழகாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் அ.பாண்டியன்.
மலேசியாவில் தமிழ் சிறுகதை வரலாறு 1930-களில் தொடங்குகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், மலாய் சிறுகதை வரலாறு 1920-களில் இருந்து பேசப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகமெங்கும் ஏற்பட்ட பல்வேறு சிந்தனை அலைகளும் சுதந்திர வேட்கையும் மலாய் சமூகத்தையும் தாக்கி, அவற்றை இலக்கியத்தில் வெளிபடுத்தின. சில மலாய் இலக்கியவான்களின் படைப்புகள் மலேசிய மலாய்க்காரர்களிடையே சுதந்திரச் சிந்தனையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றின என்ற கூற்றுகளில் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப்பாளிகளின் முன்னோடியாவார். மேலும், ஜோசப் செல்வம், என்.எஸ்.மணியம், ஆ.நாகப்பன், ஜி.சூசை, பி.பழனியப்பன் ஆகியோர் மலாய் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தவர்கள். இந்தியர்களின் வாழ்கையை மலாய் மொழியில் பதிவு செய்திருக்கும் இந்த எழுத்தாளர்களைக் குறித்து மலேசிய தமிழர்களே பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை என்பது வருத்தமான விஷயமாகும்.
மலாய் இலக்கியம், மலாய் எழுத்தாளகள் மட்டுமல்லாமல் மலேசிய அரசியல் பார்வை, தேசியம் எனத் தனது தனது பேனாவிருந்து கொஞ்சம் மைகளைச் சிந்த விட்டிருக்கிறார் அ. பாண்டியன்.
(நன்றி, மலைகள் இணைய இதழ். http://malaigal.com/?p=9172 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக