புதன், 14 செப்டம்பர், 2016

தொலைவிலிருந்து ஒலிக்கும் பெண்களின் குரல் 1

 வேடந்தாங்கல் பறவைகள், தங்கள் பயணத்திற்காக காத்திருப்பது போல ஊடறு இணையத்தளம் மேற்கொள்ளும் பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளப் பெண்ணியலாளர்கள் காத்திருப்பதை நான் உணர்வேன். அந்த உணர்தல் இரண்டாவது சந்திப்பிலேயே எனக்கு ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இரண்டாவது சந்திப்பைச் சந்திக்கவிருக்கும் எனக்கே இப்படி என்றால் 21 சந்திப்புகளை நடத்தி முடித்திருக்கும் ஊடறு இணையத் தளத்தின் ஆசிரியர் றஞ்சியின் மனநிலையை என்னவென்று சொல்வது. சில மாதங்களுக்கு முன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட றஞ்சி 2016-ஆம் ஆண்டுக்கான பெண்கள் சந்திப்பை மலேசியாவில் செய்யலாமா என்று கேட்டபோது என்னைவிட யாரும் மகிழ்ச்சியடைந்திருக்க வாய்ப்பு இல்லை.
முதல் பெண்கள் சந்திப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பிறகு திட்டமிடப்பட்ட பயணமும் குறுகிய நாட்கள் என்றாலும், என் வாழ்க்கையிலிருந்து அதைத் தனியே பிரித்து எடுத்துவிட முடியாது. அந்த அளவுக்கு   முக்கியமான பயணமாகவும் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்குமான திறவுகோலாகவும் அமைந்தது.

மீண்டும் தோழிகளை என் சொந்த மண்ணில் சந்திக்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே, மனதிற்கு அத்தனை சுகமாக இருந்தது. பெண்ணியச் சந்திப்புக்கு ஆவலாகக் காத்துக்கொண்டிப்பதும் தனிச் சுகம்.

முதல்முறையாக இப்படியான சந்திப்பை ஏற்பாடுச் செய்வதில் ஏற்பட்ட  படிப்பினை, சோர்வுகள் அனைத்தும் எனக்கு அனுபவங்களையே ஏற்படுத்திக் கொடுத்தன. அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தி, சோர்விலிருந்து நிவாரணம் கொடுத்த றஞ்சி எனக்கு ஓர் ஊக்க மருந்தாகவே இருந்தார்.




பினாங்கில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் சில தோழிகளை முதல் முறையாகவும் சில தோழிகளை இரண்டாவது முறையாகச் சந்தித்தாலும் என் வரையில் அவர்களோடு பல ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளவர்கள் போலவே எண்ணம் இருந்தது. இந்தச் சந்திப்பில் கலந்துகொள்பவர்களின் தனிச்சிறப்பாகவும் அது அமைந்துவிடுகிறது.

கடந்த வருடம் மலையகத்திலிருந்த இடவசதியும், பெரிய அரங்க வசதியும் இல்லாமல் இருந்தாலும், சின்னக் கூட்டுக்குள் கூடிவாழும் பறவைகளைப் போலச் சுமார் 25 தோழிகள் அந்த இடத்தில் தங்கிக் கொண்டோம். அதில் இரண்டு குழந்தைகள் வேறு இருந்தனர்.

ஆஸ்ரோலியாவிலிருந்து ஆழியாளும் சௌந்தரியும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியே பினாங்கில் வந்திறங்கினர். அவர்களை வரவேற்க மணிமொழி 24-ஆம் தேதியே கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டிருந்தார். சுவிஸிலிருந்து றஞ்சி 25-ஆம் தேதி காலையில் பினாங்கு வந்திறங்கிய நேரம் நான் அவருக்காகப் பினாங்கு விமான நிலையத்தில் காத்துகொண்டிருந்தேன். கிட்டதட்ட சரியாக 15 மாதங்களுக்குப் பிறகு அம்மாவை (இது கொஞ்சம் மிகையாகத் தோன்றலாம், எனக்கு இதைத் தவிர வேறு சொல்ல தெரியவில்லை) சந்திக்கப்போகும் தருணம் எப்படிதான் இருக்குமோ என நினைத்துக் கொண்டேன். நேரம் செல்லச் செல்ல என் கண்கள் வருகையை நோக்கியே நிலைகுத்தி நின்றன. றஞ்சி வரவே இல்லை. முகவரி இல்லாமல் வந்த ஒரு தொலைபேசி அழைப்பையும் நான் எடுக்கவில்லை. எந்த நொடியையும் வீணடிக்க நான் விரும்பவில்லை.

ஆழியாள் (அம்மா)-வின் மலேசிய  தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “றஞ்சி வந்துவிட்டார்; நீங்கள் எங்கே இருக்கிங்க?” என்று. என்னைத் தாண்டி றஞ்சி எப்படிப் போனார் என்ற கேள்வியுடன் ஓடினேன். புன்னை மாறாமல் றஞ்சி நின்றுகொண்டிருந்தார். கொழும்பு விமான நிலையத்தில் பிரிந்த போது,  தொடரும் என்று எழுதப்படாத வரி, பினாங்கு விமான நிலையத்தில் தொடங்கியது போல இருந்தது. அன்றுதான் ஆழியாள், சௌந்தரி இருவரையும் நான் முதன்முதலில் பார்க்கிறேன்.


இப்படியாக நாங்கள் இணைந்த வேளையில் சந்திப்புக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினோம். மறுநாள் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சந்திப்பில் கலந்துகொள்ளும் எல்லாத் தோழிகளின் கரமும் இணைந்தது. முக்கியமாக நான் எதிர்பார்த்திருந்த என் செல்ல விஜயா அம்மாவும் பாசத்திற்குறிய செல்லத்தங்கை பாரதியும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். வழக்கறிஞர் ரஜனி மஹி இருக்கும் இடமெல்லாம் சிரிப்பொலி எதிரொலிக்கும். வந்திறங்கிய நொடியிலிருந்து அவர் அதற்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அதே கொஞ்சலோடும் பகடியோடும் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டினார்.

கவிஞர் மாலதி மைத்திரியின் அறிமுகம் இருந்தாலும் அவரை அன்றுதான் முதன்முதலில் பார்த்தேன். கல்பனா (அம்மா)வின் அறிமுகமும் அன்றுதான் கிடைத்தது. எளிமையான  மனுஷி அவர்.

மறுநாள் நடக்கவிருக்கும் சந்திப்பு மற்றும் தற்போது தங்குமிடத்தில் இருக்கும் வசதியை எவ்வாறு பகிரப்போகிறோம் உள்ளிட்ட விஷயங்களை இரவு பகிர்ந்துக்கொண்டோம். பினாங்கு கடற்கரையின்  வானத்தில் விழித்திருந்த அரைநிலா, எங்கள்  பயணம் தொடர்பான கதைகளையும் சில மீள் கதைகளையும் இரவு முழுதும் கேட்டுக் கொண்டிருந்தது.

(தொடரும்)



7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி தோழர்...
      கடந்தாண்டு நான் இலங்கை மண்ணுக்கு சென்று வந்த பிறகு எழுதினேன். இந்த முறை என் சொந்த நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தை பகிரவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

      நீக்கு
  2. வானத்தில் விழித்திருக்கிறது முழுநிலா
    அடுத்து என்ன எனும் ஆவலோடு

    பதிலளிநீக்கு
  3. வானத்தில் விழித்திருக்கிறது முழுநிலா
    அடுத்து என்ன எனும் ஆவலோடு

    பதிலளிநீக்கு
  4. வானத்தில் விழித்திருக்கிறது முழுநிலா
    அடுத்து என்ன எனும் ஆவலோடு

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு