புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 பிப்ரவரி, 2023

'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ - புத்தக விமர்சனம்

2019-ஆம் ஆண்டிலிருந்து தேடிக்கொண்டிருந்த புத்தகம், பல பதிப்பகங்களிடமும் கேட்டுப்பார்த்தும் இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஈராண்டுகள் கொரானா காலமாக இருந்தாலும், வாசிப்புக்கு எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. ஆனாலும் அந்தப் புத்தகம் மட்டும் கைக்கு எட்டவே இல்லை.  இந்நிலையில்தான் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினை இப்புத்தக்திற்கு அறிவித்தார்கள். சரியான ஒரு புத்தகத்திற்காகத்தான் காத்திருக்கிறோம் என்று மனம் மீண்டும் புத்தகத்தை இன்னும் தீவிரமாக தேடத் தொடங்கியது. சென்னையிலிருந்து மலேசியாவுக்கு வந்த நண்பர் மூலமாக கடந்த ஆண்டு புத்தகம் கைக்கும் வந்தது.  அடுத்த சில நாட்களில் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன்.

வாசிக்கும் எல்லாப் புத்தகத்திற்கும் நான் குறிப்பு எழுதுவதில்லை. நான் குறிப்பு எழுதுவதற்காக வாசிப்பதும் இல்லை. பாதித்த புத்தகத்தின் பாத்திரங்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை,  எழுதினாலே தவிர அதை இறக்கி வைக்கமுடியாது. அந்தப் பாரத்தை அப்படியே சுமந்து திரிவதும் சுலபமல்ல. வேறு எந்தப் புத்தகத்தின் பாத்திரங்களையும் உள்வாங்க முடியாமல் வாசிப்பு  மட்டுப் படும் அபாயம் இருக்கிறது.

 சைரஸ் மிஸ்திரி எழுதிய ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்றப் புத்தகத்தில் கதைச் சொல்லியாக வரும் ஃபெரோஸ் எல்சிதானா; என்னுள் கிடத்திய பாரத்தை இப்போது இறக்கி வைக்கிறேன்.

எழுத்தாளர் மாலன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம், ஒரு தனிப்பட்ட சமூகத்தின், அடையாளத்தைப் பேசும் புத்தகம் என்றே சொல்லலாம். பாரசீக நாட்டில் தோன்றிய இம்மதத்தை,   பம்பாயில் பின்பற்றுபவர்களால் எப்படி வழிநடத்தப்படுகிறது என்பதை நேரடி சாட்சியாகவும் காட்சிகளாகவும்  நம் முன் விரிகிறது.

புத்தகத்தின் கதைக்குள் போகும் முன்பு, நாம் பார்சி மதத்தை சுறுக்கமாக  தெரிந்துக்கொள்ள வேண்டும். பார்சி மதத்தைக் குறித்து தெளிவு இருக்கும் பட்சத்தில் கதையை இன்னும் ஆழமாக உள்வாங்க வகை செய்யும்.  

பாரசீகத்தில் தோன்றிய மதம் என்பதால் ஒருசில விஷயங்கள் இஸ்லாமிய சமையத்தை ஒத்து இருக்கிறது. ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.  ஈரான், அம்மக்களை முஸ்லிமாக மாற்ற முயற்சி செய்தததாகவும்,  அதனால்  அவர்கள் பல நாடுகளுக்கு தப்பித்து புலம் பெயர்ந்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.  அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  பார்சிகள் இந்திய மேற்கு கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர் என்றும் சுமார்  6000 பேர் குஜராத் மாநிலத்தில் உள்ள உட்வாடா பகுதிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இணையத் தகவல் சொல்கிறது.

இவர்கள் தங்கள் மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்றுவர்களாக இருப்பதால், மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இம்மதத்தினரின் மக்கள் தொகை இருக்கிறது. உலகத்தில் சுமார் 70,000 பார்சி மக்கள் மட்டுமே  வாழ்கின்றனர் என்று ஒரு இணையத் தளம் செய்தி சொன்னாலும், இந்தியாவில் மட்டும் 1 50,000 பார்சிகள் இருக்கிறார்கள் என்று இன்னொரு இணையச்செய்தி சொல்கிறது.  

இவர்களின் ஆண்கள் பாராசீக உடையையே பாரம்பரிய உடையாக அணியும் அதே வேளையில் பெண்கள் புடவை அணிகிறார்கள்.  ஆண்கள் தலைக்கு குல்லா அணியும் வழக்கமும் இருக்கிறது.  1795-ல் பார்சிகள் தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்திருக்கின்றனர். ராயப்புரத்தில் தஞ்சமடைந்த அவர்கள் பின்னாளில் அவர்களின் பாரம்பரிய  நெருப்புக் கோயிலையும் ராயப்புரத்திலேயே கட்டிக்கொண்டனர்.  நூறாண்டுக்கும் மேலாக அங்கு நெருப்பு அணையாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.  தவிர இந்தியா முழுவதும் சுமார் 100 நெருப்புக் கோயில்கள் இருக்கிறதாம்.  மிகவும் கட்டுப்பாடுகள் கொண்டிருக்கும் இந்த மதத்தில் அவர்கள் மட்டுமே அந்தக் கோயிலுக்குள் செல்ல முடியும். சென்னையில் 300 பார்சி மதத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனராம்.

உலகின் பழமையான மதம் என்று சொல்லக்கூடிய இம்மதத்தைச் சேர்ந்தவர்களின் இறந்தவர்களுக்குரிய இறுதிச் சடங்கு வித்தியாசமானது. அது வேரு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று. இவர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான இடங்களில் வைத்து கழுகு மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி விடுகிறார்கள். அந்த உயரமான இடத்தைதான் அவர்கள் அமைதி கோபுரம் என்று அழைக்கிறார்கள்.  

இந்தியாவில்  தொழில்துறை மற்றும் வியாபார வர்த்தகத்தில் பார்சி மக்களே ஆதிக்கம் செலுத்துகின்றனராம். குறிப்பிடத்தக்க அவர்கள் யார் யார் என்று இணையத்தில் தகவல்கள் இருக்கின்றன.  தேவையானவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

பார்சி  மதத்தின் புனித நூலுக்கு 'அவஸ்தா' என்றுப் பெயர்.  அவர்களுக்கான முக்கிய மதச் சடங்குகளும் உள்ளன. தனி நாள்காட்டியும் உள்ளது. இவர்கள் பண்டிகையை நவ்ரூஸ் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. பாரசீக நாட்டில் தோன்றிய மற்றுமொரு மதமான பஹாய் சமையத்தின் பண்டிகையும் நவ்ரூஸ் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது மார்ச் மாதத்தில் வரும். பார்சிகளின் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது. நவ்' என்றால் புதியது, 'ரோஸ்' என்றால் நாள் என்று பொருள்படுகிறது.

இப்போது நாம் நாவலுக்குச் செல்லலாம்.

இதை ஒரு பிணந்தூக்கியின் வலியைப் பேசக்கூடிய புத்தகம் என்று மட்டும் சொல்லிவிடமுடியாது. இது ஒரு காதல் கதை.  மிக முக்கியமான தகவல் என்ன வென்றால்,  இந்த நாவல் கர்பனையால் புனையப்பட்டக் கதை அல்ல. பம்பாயில் வாழும் பார்சி சமூகத்தினர் பற்றிய ஆவணப்படம் தயாரிப்புக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள், அந்நோக்கம் நிறைவேறாத காரணத்தினால்,  தன் நினைவில் நின்றுவிட்ட இந்தச்  சமூகத்தில் நடந்த சில முக்கியச் சம்பவங்கள்  நாவாலாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டன;  என்று இந்தப் புத்தகத்தின் அசல் எழுத்தாளரான சைரஸ் மிஸ்திரி குறிப்பு எழுதியிருக்கிறார்.

துறைமுகத் தொழிலாளியும், பிணம் தூக்கியின் மகளும் காதல் வயப்பட்டு திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிணம் தூக்கியாக மாற வேண்டும் பெண்ணின் தந்தை கட்டளை இடுகிறார்.  (துறைமுகத் தொழிலாளியின் குடும்பத்தை பழித்தீர்க்கும் காரணம் இதில் இருக்கிறது. ) துறைமுகத் தொழிலாளி காதலுக்காக கட்டளையை ஏற்று தன் வாழ்கையின் திசையை மாற்றிக்கொள்கிறார் என்பது நடந்த உண்மைச் சம்பவம்.

நாவலில்,  ஒரு ஆச்சாரமான கோயில் குருக்களின் பிரியமான இளைய மகன்,  பிணந்தூக்கியின் மகளை காதலித்து, அவள் தந்தையின் கட்டளையின் பேரில்  ஒரு  பிணந்தூக்கியாக மாறிவிடுகிறான்.  பார்சி சமூகத்தில் ஒடுக்கப்பட்டோரை அச்சமூகம் எப்படி நடத்துகிறது, தனது சொந்தக் குடும்பத்திலேயே அவன் எப்படி ஒதுக்கி வைக்கப்படுகிறான், எதெல்லாம் தீட்டாக பார்க்கப் படுகிறது, தீட்டிலிருந்து தூய்மைப் படுத்திக்கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் கதையின் ஓட்டத்தில் கட்சிதமாக பேசப்பட்டிருக்கிறது.

மிகவும் கட்டுப்பாடுகொண்டவர்கள் என்று அரியப்படும் பார்சிகள், அவர்களுக்குள்ளாகவே சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்படுகின்றனர். அதில் ஒடுக்கப்பட்ட குழுவினர்தான் பிணம் தூக்குபவர்கள். தீண்டத்தகாதவர்களாக அக்குழுவினரை பார்சிசமூகம் பிரித்தும் வைக்கிறது.  

கதையின்படி பார்சி மதகுருவின் மகன் பிணம் தூக்கும் ஒருவரின் மகளை விரும்பி கல்யாணம் செய்வதிலிருந்து அச்சமூகத்தின் இருண்மையான பக்கங்கள் நமக்கு காட்டப்படுகிறது. தனக்கு பிறக்கும் குழந்தை, காதல் மனைவி மரணம், தொழில் சுரண்டல், போராட்டம் என தங்குதடையின்றி நாவல் நம்மை உள்ளே இழுத்து உட்கார வைத்து விடுகிறது.

பிணந்தின்னும் கழுகுகளுக்கு இறந்த உடலை அர்பணிப்பது, புனிதமான காரியமாக பார்க்கும் பார்சி சமூகத்தினர், சூழலியல் காரணத்தினால் அழிவை நோக்கிப்போய்கொண்டிருக்கும் கழுகுகளால் தனது சமூகமே எப்படி பாதிக்கிறது என்பதையும், இந்த நாவல் பேசிச் செல்கிறது.

ஃபெரோஸ், செப்பி, டெமூரு, மதகுரு, அவரின் மனைவி, ஃபெரோஸின் சகோதரன், ஃபெரோஸின் மகள், ஃபெரோஸின் நண்பர்கள் என முக்கிய கதாப் பாத்திரங்களோடு நாமும் ஒரு பாத்திரமாக எங்கோ ஒரு மூலையில் இவர்களோடு இந்த நாவலில் இருப்போம்.

நமக்கு அறிமுகமில்லாத ஒரு மதம், எங்கோ ஒரு தேசத்தில் தோன்றி இந்திய தேசத்திற்கு வந்து, மாறுபட்ட மண்ணில், அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு கலாச்சாம் என முற்றிலும் மாறுபட்ட ஒரு வாழ்வியலை  ஆவணமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தேசிய விருதுக்கு தகுதியான நாவல்தான் என்று ஒரு வாசகனை திருப்தி படுத்திருக்கும் இந்த நாவலை மொழிபெயர்த்துகொடுத்த எழுத்தாளர் மாலன் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்..

வியாழன், 28 ஜனவரி, 2021

வால்காவிலிருந்து கங்கை வரை

 

2019-ஆம் ஆண்டிலிருந்து அதிகமானோர் வால்காவிலிருந்து  கங்கை வரை எனும் இப்புத்தகத்தை முகநூலில் பதிவதையும் சிலாகித்துப் பேசுவதையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.  அதே ஆண்டு நான் திருவண்ணாமலைக்கு போயிருந்த நேரத்தில்  எனது அருமை நண்பரும் தோழருமான சரவணன் கருணாநிதி அந்தப் புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அந்தப் புத்தகத்தை மட்டுமல்ல சில முக்கிய இடதிசாரி புத்தகங்களை எனக்கு அவர் பரிசளித்தார். 

வால்காவிலிருந்து  கங்கை வரை என்ற இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கும்போது ஒரு மனநிலை இருந்தது.  நல்ல தொடக்கம். என்பதுமாறியான மனநிலை அது.  20 பெயர்கள்.  20 பெயர்களுக்கும் 20 கதைகள். சில கதைகளுக்கு கிளைக் கதைகளும் இருக்கின்றன.  சிலப் பெயர்கள் எங்கோ எதிலோ வாசித்த மாதிரியாக எனக்கு தோன்றினாலும்,  என்னால்  உறுதி செய்ய முடியவில்லை.  சிலப் பெயர்கள் புதியவையாக தோன்றினாலும், கதையை எங்கோ வாசித்த மாதிரியான மாயை. அதையும் எங்கே என என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

மூன்றாவது பெயரை வாசித்து முடிக்கும்போது, சிறு குழப்பம் தொடங்கி முதல் பாகம் முடியும்வரை அந்தக் குழப்பம் நீடித்தது.  கற்கால மனித வரலாறு தொடங்கி உலோகத்தினாலான ஆயுத காலத்தையும் கடந்து போகும்போது  டைனோசர்களின் வரலாற்றையும் ஒரு சொல்லில் கடந்து போகிறது.  இப்படி வால்கா நதியிலிருந்து கங்கைக்கு பெரும் பாய்ச்சலில்  பதிவு போய்கொண்டிருக்கிறதே, என்ற குழப்பத்தோடு தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தாலும், 11-வது கதையான பிரபாவிலிருந்து  மதம், ராஜியம்,  அடிமை, ஜாதி உள்ளிட்ட, முதலாளித்துவம் என அதே பாய்ச்சலோடு கதைகள் அமைந்திருக்கின்றன. இறுதி பகுதிகளில் குழப்பநிலை நீங்கி, இந்தப் புத்தகத்தை எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவான பார்வை எனக்கு கிடைத்தது. 

ஆதிகால மனிதன், மனிதியின் தலைமையில், சைகை மொழியில் பேசி, குகைகளில் வசித்து, வேட்டையாடி  தொடங்கிய மனித ஜென்மம், தற்போது போர், வன்கொடுமை, கொலை போட்டி பொறாமை என்று மாறியிருப்பதை இந்தப் புத்தகம் பேசுகிறது.  

முன்னதாக பிரபாகர் சான்ஸ்கிரி எழுதியிருக்கும் 'மனிதக் கதை' மனிதன் உருவான வரலாறு வாசித்திருந்தால் 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தை புரிந்துக்கொள்வது இன்னும் எளிமையாக இருக்கும் என்பது எனது அனுமானம் ஆகும். 

புராதர இந்திய ஜோதிட சஆத்திரப்படி கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது மகாயுகம் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்தால் 43,20,000 ஆண்டுகள் மனித வரலாற்றைப் பேசுகிறது. கற்காலம் தொடங்கி, தாமிர (உலோகம்) காலத்திற்கு மாறி, அடுத்தடுத்த கட்டத்திற்கு காலம் நகரும்போது அதை ஏற்றுக்கொள்ளகூடிய மனபக்குவம் மிகவும் சர்ச்சையோடே நடந்திருக்கிறது. உடை, நகைகள், ஆபரணங்கள்கூட மிக சர்ச்சஒயோடுதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 

இப்படியான பலபல மாற்றங்கள்தான் மனிதர்களை அடிமைச் சந்தையில் விற்று-வாங்கும் அளவுக்கும், பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டவும், ஜாதி ரீதியிலும், வர்ணாஸ்ரம ரீதியிலும் பிரித்து அடிமைப்படுத்துகிற வரை இன்று வளர்ந்துள்ளது. அதை எதிர்க்கிற வர்கமும் தோன்றிவிட்டாலும், வர்ணாஸ்ரம முறையை இன்னும் தூக்கி பிடிக்கும் நிலையை நாம் காண்கிறோம். புத்தகத்தின் இறுதி அத்தியாயம் சுமேர் எனும் சக்கிலியரும், காந்தியின் சீடர் ராம்பாலக் ஓஜா என்பவும் பேசிக்கொள்ளும் உரையாடலாகும். இந்தப் புத்தகம் 1950களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும், அந்த உரையாடல் இன்றுவரை தீராமல் நடந்துக்கொண்டிருப்பதை  நாம் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.  

திங்கள், 18 ஜனவரி, 2021

ஜூதான் - ஓம்பிரகாஷ் வால்மீகி

கடந்த சில நாட்களில் வாசித்த முடித்த புத்தகம் ஓம்பிரகாஷ் வால்மீகி எழுதிய ஜூதான். ஜூதான் என்றால் எச்சில் என்று அர்த்தம். இந்தப் புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பை வாசித்தப் பிறகு, என்னை இந்தப் புத்தகம் உண்டு-இல்லை என்று செய்திவிடும் என்று தோன்றியது. தெரிந்தே அதிர்ச்சியில் விழ நான் விரும்பவில்லை. எனவே புத்தகத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்து விட்டேன். 

 ஆனால், அப்புத்தகத்தின் பின் அட்டைக் குறித்த சிந்தனையை கிளட்டி வைக்க என்னால் முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் சமூகம் என்னை பின் தொடர்ந்துகொண்டே இருந்தது. மறுநாள் அப்புத்தகத்தை வாங்கிவிட்டேன். 2020-ஆம் ஆண்டு எனக்கு மிகுந்த சோதனையான ஆண்டாக இருந்த வேளையில், 2021-தொடங்கப்போகும் நேரத்தில் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டுமா என்று தோன்றியது. தோன்றிய வேகத்தில் என் புத்தி புத்தகத்தின் முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கியிருந்தது. 



 சில பக்கங்களை கடக்க முடியாத தடுமாற்றத்துடன் மூடி வைத்தேன். சில பக்கங்களை கண்ணீரில் நனைத்துக்கொண்டேன். ஒரு சில அனுபவங்களின் வலி என்னால் உணர முடிந்தது; மிகத் துள்ளியமாகவே. மேலும், வசைகளின் காயங்களை என்னால் தொட்டுப் பார்க்கவும் முடிந்தது. மாணவர் பருவம் முதல், குடும்ப வாழ்கைக்கு பிறகும்கூட சாதியானது எவ்வாறு தனி மனிதனொருவனை ஆட்டிப் படைக்கிறது என்பதனை நம்மோடு பேசுகிறார் ஓம்பிரகாஷ். 

பார்ப்பன ஆதிக்கம் மற்றும் தம் சாதியிலேயே கூட இருக்கின்றன கலாச்சார அதிர்வுகளையும், படித்தவர்கள் தம் சாதியை மறைப்பதற்காக போட்டுக்கொள்ளும் வேஷத்தையும் வெட்ட வெளிச்சமாக பேசுகிறார். பல இடங்களில் பகுத்தறிவாதியாக செயல்படும் ஓம்பிரகாஷ், பல இடங்களில் தன் சாதிய கட்டமைப்புக்குள்லிருந்து மீற முடியாத தருணங்களை பதிவு செய்திருக்கும் விதம் ரத்தக்களரியாய் தெறித்து நம்மீதே ஒட்டிக்கிடக்கிறது.

 “பேய்கள் இல்லையென்று என் பகுத்தறிவு மறுத்து வந்தாலும், கலாச்சாரரீதியாக என் மனதின் ஆழத்தில் அது பற்றிய அச்சம் இருந்தது. அந்த அச்சத்திலிருந்து விடுபட எனக்கு நீண்ட காலம் பிடித்தது எனும் ஓம்பிரகாஷ், ஒரு முறை வயிற்றுபோக்கினால் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்றிருக்கிறார். அவரின் அப்பா இரண்டொரு மந்திரவாதிகளிடம் கூட்டிச்சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேயோட்டும் தூரத்து உறவினர் ஒருவர் பேயட்டை விரட்டுகிறேன் என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார். மிகவும் பலவீனமாக இருந்த ஓம்பிரகாஷ், வலிதாங்க முடியாமல் அடிப்பதை நிறுத்த சொல்லியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சவுக்கை பிடிங்கி தனக்கு பேய் பிடிக்கவில்லை என்று கத்தவே, சாமியாடியை பிடித்திருந்த பேய் ஓடிப்போனது. சாமியாடி ஆடுவதை நிறுத்தி தலையில் கையைவைத்துக்கொண்டு ஊருக்கே போய்விட்டார். 

 ஏழை தலித் சமூகத்தில் மருத்துவ வசதியை நாடிப்போவது அவர்களின் சக்திக்கு மீறிய ஒரு செயலாகவே இருந்திருக்கிறது. சாமியாடிகள் செய்வது ஏமாற்றுவேலை என்பது தெரியாமலே பல உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பூசாரிகள் மீதான நம்பிக்கை குறையவே இல்லை என ஓம்பிரகாஷ் பதிவு செய்கிறார். சாராயமும் பன்றி இறைச்சி சமையலும், பன்றி வளர்ப்பும், பன்றியை பலியிடுவதும் சுஹ்ரா சமூகத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதுவே அவர்களை மிகவும் தாழ்ந்த சமூகத்தின் அடையாளமாகவும் இருக்கிறது. அதை தவிர்க்க இளம் தலைமுறையினர் தன் சமூகத்தையே மறைத்து, அல்லது மறந்து தாம் ஒரு மேட்டுக்குடி சமூகத்தைபோல காட்டிக்கொள்ள முயல்கின்றனர். 

யாருமே கேட்காதவரை இவர்கள் எந்த ஜாதி என்று சொல்வதில்லை. தவிரவும் ஓம்பிரகாஷ் வால்மீகி மாதிரி யாரும் தமது சாதியை பெயரில் வைத்துக்கொள்வதில்லை. தலித்துகள் மத்தியில் உட்சாதி முரண்பாட்டுகள் என்ற பிரச்னை தீவிரமடைந்திருக்கிறது. உள்முரண்பாடுகள் குறித்து யாரும் விவாதம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மிக தீவிரமாக முன்வைக்கிறார் ஓம்பிரகாஷ். மலேசியாவில் எனக்கு ஜாதி எவ்வாறு அறிமுகமானது என்பதை முன்பே எழுத்து பூர்வமாக வைத்திருக்கிறேன். எழுதப்படாத பக்கங்களை சிக்கல்களை எழுதுவதற்கு ஓம்பிரகாஷ் தூண்டிவிட்டிருக்கிறார்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

கினோ (ஹாருகி முரகாமி)


அதிகாலை விழிப்பு, ஏதாவது வாசிக்கலாம் எனும்போது கண் சிமிடியது அந்த சிவப்பு பூனை. வீட்டு விலங்குகளில் நான் ஆர்வம் கொள்ளாதது பூனையிடம்தான். சிவப்பு அட்டைப்படத்தில் காத்திருந்த கினோவை கையில் எடுத்தேன். ஹருகி முரகாமி சிறுகதைகள்.  ஹருகி முரகாமி சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வாசித்தது எனக்கு இதுதான் முதல் அனுபவம்.

தொகுப்பின் முதல் கதையே கினோ தான். கினோ என்பவன் மது கடை நடத்துகிறான். அவன் மனைவி, பெரியம்மா, கமிதா எனும் நண்பன்  (நண்பன்தானா என உறுதியாக தெரியவில்லை) இதயத்தை வெளியில் வைத்திருக்கும் மூன்று பாம்புகள், அஞ்சல் அட்டைகள், அவனின் பயணங்கள் என தொடர்கிறது கதை.

தன் மதுகடைக்கு வந்த இருவர் கினோவுக்கு கொடுக்கும் பிரச்னை,  தன் மனைவிக்கு விவாகரத்து கொடுக்கும்போது பேசிக்கொள்ளும் உரையாடல், கமிதா கினோவுடனான உரையாடல் மிக முக்கிய அம்சமாக இந்தக் கதையில் அமைந்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் இன்னும் 9 கதைகள் உள்ளன.  அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாச கதையம்சம் கொண்டவை.  குறிப்பிட்டு பேசக்கூடியவர்களாக, ஹருகி முரகாமி கதைகளில் வரும் பெண்கள் இருக்கிறார்கள்.  ஹருகி முரகாமியின் கதைகள் வரும் பெண்கள் பெருவாரியாக கிளை பாத்திரங்களாக வந்தாலும் மிக நுனுக்கமான பாத்திரவாதிகளாக கதையை நகர்த்திச் செல்கிறார்கள்.   நேரடியாகவும்  கதைகளுக்குள் ஒரு கதையாகவும் சூழலை நகர்த்திச் செல்லும் பெண்கள் நம்மைவிட்டு நகர்ந்துச்செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஹருகி முரகாமியின் ஸ்டைல் இவ்வாறுதான் இருக்குமோ என்று நமக்கு தோற்றும்போது பிரபஞ்சனின் கதைகளில் வரும் பெண்களும், இமையம் கதைகளில் வரும் பெண்களும் சற்றே நம் சிந்தனைக்குள் நுழைந்து வரிசையில் நிற்கிறார்கள்.  

 இந்தத் தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளில்  8 கதைகள் பெண்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.  நகரும் சிறுநீரக வடிவக்கல் கதையில் வரும் கிர்ரீ  எனும் பெண் தன் லட்சியத்திற்காக தன் இலக்கை நோக்கி பயணிக்கிறாள். அதற்கு இடையில் நடக்கும் எழுத்தாளர்  ஜுன்பே உடனான தற்காலிக உறவு எப்படி இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுபோல டோனி தகிதானி என்ற கதையில் வரும் டோனியின் மனைவி உடைகள் மீது பிரியம் கொண்டவளாக இருக்கிறாள். கட்டுப்படுத்தமுடியாத உடைகள் மீதான ஆர்வம் அவர்களின் வாழ்கையை எப்படி புரட்டி போடுகிறது. இரு பெண்கள் அந்தக் கதையில் தன்னிலை பேசுகிறார்கள்.  

ஹருகி முரகாமி பதிவு செய்திருக்கும் ஆண்-பெண் உறவு பல இடங்களில் மிக அழகாகவும் புரிதலோடும் இருக்கிறது. சில சம்பவங்கள் ஜப்பானிலும் சில சம்பவங்கள் அமெரிக்காவிலும்,  நடப்பதைப்போல அமைந்தாலும்  சுதந்திரமான  வாழ்க்கையையும் அந்த வாழ்கையில் ஏற்படும் நடைமுறை சிக்கலையும் எதார்த்தையும் அனுமானிக்க முடிகிறது.

பெண் பாத்திரங்களை சரியான புரிதலோடு கொண்டுச் செல்வது ஒரு பெண்ணாக அதன் உணர்வை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.  அவ்விடம் முரகாமி மீது மதிப்பு பிறக்கிறது. அந்த மதிப்பு எல்லா எழுத்தின்மீதும் அத்தனை சுலபத்தில் வந்துவிடுவதில்லை.

இந்தக் கதைகளை தமிழில் ஸ்ரீதர் ரங்கராக் மொழிபெயர்த்திருக்கிறார். எதிர் பதிப்பகம் வெளியீடு.

 

 

சனி, 16 ஜனவரி, 2021

நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history)

தலைப்பு: நாங்கள் வரலாறு படைத்தோம் (we were making history) 
தமிழில் : பேரா.ஆர் சந்திரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்
48 பக்கங்கள் கொண்ட கையேடு மாதிரியான இந்தப் புத்தகம் ‘வீரம் செறிந்த தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் வீராங்களைகளின் பங்கை எடுத்துக்கூறும் வாய்மொழி வரலாறு’ என்று அடிக்கோடிட்டு  அறிவித்துவிட்டு பேச தொடங்குகிறது. 

இந்தப் புத்தகத்தில் பேசியிருக்கும் பெண்கள் மேட்டுக்குடி வீராங்கனைகள் அல்ல. இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்களில் முக்கியமாக இடம் பிடித்திருக்கும் தெலுங்கானா விவசாய சமூகத்தைச் சேர்ந்த கடைநிலைப் பெண்கள். நிஜாம்களும், தேஷ்முக் குகளும், தேசாய்களும் இவர்களுக்கு செய்த கொடுமைகளை பார்க்கும்போது மண்டையில் சூடு ஏறுகிறது. நில பிரபுகளிடம் கூலி கேட்காமல் கட்டாய உழைப்பை வரியாக செலுத்தியிருக்கிறார்கள் சலவை தொழிலாளிகளும், முடி வெட்டுபவரும், மரவேலை செய்பவர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பலரும். இதில் பெண்களின் நிலை படுபயங்கரமாக இருக்கிறது. நல்ல துணி உடுத்திக்கொள்ளக் கூடாது. தலையில் பூ வைத்துக்கொள்ளக்கூடாது, சாப்பிட்டுக்கொண்டிருந்தால் கூட ‘துரை’ அல்லது துரைசாணி அழைத்தால், சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஓட வேண்டும். நிலப்பிரபுவின் நிலத்தில் வேலை செய்யும்போது குழந்தைக்கு பாலூட்டக்கூட விட மாட்டார்கள். இந்தப் பெண்கள் மீது நிலப்பிரபுக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. நிலப்பிரபுகளின் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிய விவசாயப் பெண்கள் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

 1916-லிருந்து மகளிர் அமைப்புகளை அமைத்து, ஒடுக்குமுறையை எதிர்த்து செயல்பட தொடங்கியிருக்கின்றனர் பெண்கள். குறிப்பாக கல்வி, விபச்சார ஒழிப்பு, பர்தா முறை ஒழிப்பு, விதவை மறுமணம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக 1936 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாதர் சங்கம் விவசாயப் பெண்களை திரட்டும் பணியை செய்திருக்கிறது. இந்தப் புத்தகத்தில் 16 விவசாயப் பெண்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படையாக வைக்கின்றனர். 



 தெலகா இனத்தைச் சேர்ந்த கமலம்மா என்பவரின் கொள்ளுப்பாட்டி, பாட்டி, தாய் உள்ளிட்டவர்கள் தல்லதலைமுறையாக ஜமிந்தார் குடும்பத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்திருக்கின்றனர். இந்தப் பெண்களுக்கு திருமணம் என்ற ஒன்று நடக்காது. தவிர கமலம்மாவின் கொள்ளுப்பாட்டி ஒரு பிராமண குடும்பத்திற்கு ஒரு படி அரிசி மற்றும் ஒத்த ரூபாய்க்காக விற்கப்பட்டிருக்கிறாள். அந்த நிலப்பிரபு வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு அவள் பாலியல் சேவையையும் செய்ய வேண்டும். நிலப்பிரபுகளின் வீடுகளில் அடிமையாக போகும் பெண்கள் திருமணமாகாதவர்களாகவும் கன்னிகழியாதவர்களாகவும் இருக்க வேண்டும். அதனாலேயே குழந்தைகள் திருமணம் அதிகம் நடந்திருக்கிறது. இதுபோக துரை மார்களின் அட்டகாசமும் அதிகமாக இருந்திருக்கிறது. துரைமார்களின் இச்சைக்கு பலியாவதென்பது சர்வ சாதாரணம் எங்கிறார் கமலம்மா. அதை பெண்கள் வெளியில் சொல்லக்கூடாதாம் ; துரையை எதிர்த்தால் வாழ்க்கையே நரகம் ஆகும் என்கிறார். அப்படி வெளியில் சொன்னதற்காக கூட்டு பலாத்காரத்திற்கு அந்தப் பெண் ஆளானதை நினைவு கூறுகிறார் கமலம்மா. 

கமலம்மாவின் தந்தை கொஞ்சம் முற்போக்கானவர் என்று சொல்கிறார்கள். தன் மனைவியை திருமணம் செய்யாவிட்டாலும், தன் பிள்ளைகளை கவனமாக வளர்த்திருக்கிறார். படிக்க வைத்திருக்கிறார். நிலபிரபுகளிடமிருந்து காப்பாற்ற 8 வயதிலேயே திருமணம் செய்துவைத்திருக்கிறார். கால ஓட்டத்தில் தெலுங்கானா போராட்டத்தை கேள்விபட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடியிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காட்டில் தன் சொந்த குழந்தையை விட்டுவிடக்கூட துணிந்திருக்கிறார். பின் தோழர் ஒருவரின் மூலம், குழந்தை இல்லாத ஒருவருக்கு தன் குழந்தை கொடுத்துவிடலாம் என்று கேட்கவும் கொடுத்துவிட்டு இன்றுவரை அந்தக் குழந்தை குறித்த தகவலை அவரால் அறியவே முடியவில்லை. 

தயானி பிரியம்வதா என்ற போராளி கட்சியில் மிக முக்கிய பொறுப்பினையாற்றியிருக்கிறார். பெண்களுக்கு கல்வி, தற்காப்பு போன்றவற்றை சொல்லிகொடுத்திருக்கிறார். கட்சியோடு விவாதிப்பார். விவசாயிகள் அதிககூலி கேட்கவேண்டும், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் வேலையின்போது சில மணிநேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது அவர்களிம் உரிமை என்பதையும் விளக்குவார். கட்சியில் தீவிரமாக செயலாற்றியவர் சிறைவாசமும் அனுபவித்திருக்கிறார். மோசமான உணவு உள்ளிட்ட காரணங்களுக்காக அங்கும் போராட்டம் நடத்தியிருக்கிறார். 

தெலுங்கானா போராட்டம் முடிந்த பின்பு கட்சி பலபெண்களைம் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. அதில் பிரியம்வதாவும் ஒருவர். போராட்டத்திற்கு பிறகு கட்சியில் தீவிரமாக பணியாற்ற முடிந்திருந்தால் மனதிருப்தி இருந்திருக்கும் என்கிறார். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்களை அவர்களை சுற்றியிருந்தவர்கள் தாழ்வாக பார்த்ததையும் வலியோடு பதிவு செய்திருக்கிறார் பிரியம்வதா. சலவைத்தொழிலாளியான அயிலம்மா என்பவரும் தெலுங்கான போராட்டத்தில் தனித்துவமானவர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது 9 ஏக்கர் நஞ்சை நிலத்தை பாதுகாக்க பெரும்பாடு பட்டு போராடியிருக்கிறார். பெரும் ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுவை எதிர்த்து நீதிமன்றம் வழக்கு என அலைந்து 9 ஆண்டுகள் துணிவுடன் போராடியிருக்கிறார். 

அதுபோல சாலம்மா எனும் போராளியை சிங்கம் என்று சொல்கிறார்கள். ஒரு பெண் சமையல் வேலையைத்தான் செய்ய வேண்டுமா என்று கேட்கும் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என்கிறார்.

கணவனும் மனைவியுமாக கம்யூனிச இயக்கத்தில் போராளியாக இருந்த லலிதம்மா தன் கணவர் சிறைக்கு சென்ற பிறகு மிகுந்த துன்பத்தை அனுபவித்திருக்கிறார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த லலிதம்மா இயக்கத்தில் இருந்தது அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. ஓர் உதாரணம் சொல்கிறார்; 14 வயதில் மகன் பிறந்தான். கணவர் சிறையில் இருந்தார். வேறு வழியின்றி அம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். நான் அங்கு போவதற்கு முன்பு, நான் சுத்தமாவதற்கு பிராயச்சித்தம் செய்ய சொன்னார்கள். தங்க கம்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் சூடு வைப்பார்கள். இதற்கு ‘உவுலா’ என்று பெயர். இதை செய்ய மறுத்தால் பெற்றோர் செத்துவிடுவதாக மிரட்டினார்கள். எனக்கு வேறு ஆதரவு இல்லாததால் ஒத்துக்கொண்டேன்” என்கிறார். 

 கம்யூனிஸ்களை திருமணம் செய்துக்கொண்டால் வாழ்க்கை சந்தோஷமாக அமையாது என்று எண்ணியவர்களுக்கு, இந்தப் போராளி பெண்கள் அப்படியல்ல என்று வாழ்ந்துக்காட்டியுள்ளனர். மகளிர் அமைப்புகளுக்கு அரசியலும், இடதுச்சாரி சிந்தனைக்கொண்ட புத்தகங்களும் பெண்கள் வாசிக்க வேண்டும் என்று மிக அழுத்தமாக கூறுகின்றனர். 

இந்தப் பெண்கள் பேசியிருப்பதில் இயக்கம் குறித்து நிலைப்பாட்டை இரண்டு விதமாக பார்க்க முடிகிறது. சில பெண்கள் எல்லா வேலைகளியும் பால்நிலை வேறுபாடு இன்றி செய்தோம் என்று சொல்கிறார்கள். அச்சமாம்பா என்பவர் கூறும்போது துணிவைப்பது சமைப்பது என்று நிறைய வேலைகள் இருக்கும் என்கிறார். தவீர ஆண் தோழர் ஒருவரோடு இணைத்து பேசப்பட்டதையும், பின் வேறு முகாமிற்கு மாற்றப்பட்டதையும் சொல்கிறார். செய்யாத தவறை செய்ததாக ஒப்புக்கொள்ள சொன்னதும் அதை மறுத்ததிற்காக கட்சி விட்டு நீக்கியதையும்கூட அச்சமாம்பா பதிவு செய்திருக்கிறார். 

தெலுங்கானா போராட்ட காலம் முடிந்ததும், பெண்களை கட்சியிலிருந்து விடுவித்து திரும்பவும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். போராட்டத்தின் போதுவ் கையில் ஆயுதம் ஏந்தி உணவு வழங்குபவர்களாகவும், செய்திகளை தெரிவிப்பவர்களாகவும், ரகசியத்தொடர்புகளை பாதுகாப்பவர்களாகவும் இருந்திருக்கும் இந்தப் போராளிகள், இப்போது வீட்டில் தையல் மிஷின் முன்பு உட்கார வேண்டுமா? என்று கேட்டிருக்கிறார்கள். ஆண்-பெண் சமத்துவத்தை கட்சிக்கு யார் வகுப்பெடுப்பது? 

 -யோகி