சினிமா கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

தேடப்பட்ட குற்றவாளி குருதேவனும் விடுதலை திரைப்படமும்

                                       
அண்மையில் திரைக்கண்ட “விடுதலை” திரைப்படம் பலதரப்பட்ட விஷயங்களால் மக்களிடத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. தொடக்கமாக அதன் மூலக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் ”துணைவன்  சிறுகதையை தழுவியது என்று கூறப்பட்டது. படத்தைப் பார்த்த பலர், அது எழுத்தாளர் ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி நாவலை தழுவியதாக இருக்கிறது என்று விமர்சித்தனர்.  நவீன இலக்கிய வட்டாரத்தில் இது மிகப் பெரிய சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்திய வண்ணமே இருந்தது.

இதுபோக,  கடைநிலை மக்களுக்காக களத்தில் நிற்கும் தோழர்களோ,  கேராளாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், கர்நாடகாவில் நடந்த மக்கள் புரட்சிகளையும், நக்சல்பாரி போராட்டங்களையும்  நினைவு கூர்ந்து பதிவிட்டனர். 

கடந்த வாரம் “விடுதலை படத்தைப் பார்த்த  எனக்கு, அதுகுறித்த  எண்ணங்களும்,  நம் நாட்டின் வரலாற்று பதிவோடு ஒத்துப்போகும் சில சம்பவங்களையும் பதிவிடுவதற்கு   ஒரு தருணமாக அமைந்தது. அதை தமிழ்மலர் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறேன். 

கிளர்சிக்காரர்களால்   விபத்துக்குள்ளாக்கப்பட்ட ரயில்  காட்சியிலிருந்து “விடுதலை படம் தொடங்குகிறது. கிளர்ச்சிக்காரர்கள் என்று காட்டப்பட்டவர்கள்  “தொண்டர் படையை சேர்ந்தவர்கள் என்று அதிகார வர்கத்தினர் கூறுகின்றனர். பத்திரிக்கைகளிலும் செய்திகள் அவ்வாறே அச்சிடப்பட்டன.   அங்கிருந்தே அப்படம்  என்னை ஈர்க்க தொடங்கியது. காரணம் அந்த  “தொண்டர் படை தான். 

மலேசிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கும்  தொண்டர் படையைச் சேர்ந்தவர்களும்  கிளர்ச்சிகள் செய்வர்கள் என்றே பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தியிருந்தது.  நாட்டு விடுதலைக்காக பிரிட்டிஷாரையும், முதலாளித்துவத்தை எதிர்த்து நடந்த தொழிற்சங்க புரட்சிக்காகவும்  “தொண்டர் படையினர்  கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக 1940-களில் கெடாவில் நடந்த கள்ளுக்கடை போராட்டத்தில்  தொண்டர் படையின் பங்கு  முக்கியமாக பேசக்கூடியதாகும்.  1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தொண்டர் படை இயக்கம் 1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. 

தொடந்து பிரிட்டிஷ்  அரசாங்கத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்து வந்த 'மலாயா தேசிய விடுதலைப் படை'யை சேர்ந்தவர்களை  ஒழித்துக்கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.  இவ்விஷயத்தில் பிரிட்டிஷார் சந்தேகம் கொண்ட ஒருவரையும்  தயவு  தாட்சண்யம்  பார்க்கவில்லை. 

'மலாயா தேசிய விடுதலைப் படை' யின் தேடப்பட்டு வந்து முக்கிய குற்றவாளியாக குருதேவன் என்பவர் இருந்தார். அவர் யார்? எப்படி இருப்பார் என்பது யாராலும் சொல்ல முடியவில்லை. கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வருபவர்க்கு சன்மானத்தை அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.  அவருடைய அடையாளம் தெரியாததால் அவர் மாயாஜாலங்கள் தெரிந்தவர் என்றெல்லாம்  கட்டுக்கதைகள் உலாவியது.  உண்மையில் போலீசின் கழுகுப்பார்வையிலிருந்த தப்பிப்பதற்காக அவர் மாறுவேடத்திலேயே இருந்திருக்கிறார். குருதேவன் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தியப் பிரிவின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்தார் என்றும் கூறப்பட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை.

                                

அப்போது காவல் துறையின் சிறப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரியான  அகமது கான் என்பவரிடம்  சிங்கப்பூரில் வாய்வழி நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது.  அகமது கான்-தான் குருதேவனை தேடிப்பிடிப்பதற்காக  நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாவார்.  அந்த நேர்காணலில், இடது சாரி சித்தாந்தங்களை கற்ற  ஒரு  தேர்ந்த சித்தாந்தவாதி என்று குருதேவனை குறிப்பிடுகிறார். மிகவும் மூளைக்காரராக செயல்பட்ட குருதேவன் மாறுவேடத்திலேயே இருந்ததால் அவரை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதோடு குருதேவன் என்று பெயர்கூட அவரின் இயற்பெயராக இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். 

குருதேவன்  போலீசிடம் மாட்டிகொண்டதும் ஒரு விபத்துபோலவே நடந்தது. ரிச்சர்ட் கொரிண்டன் எனும் பிரிட்டிஷ் அதிகாரிதான் சிரம்பானில்  குருவை கைது செய்தார். அவர் அது குறித்து பதிவும் செய்திருக்கிறார். சம்பவத்தன்று, அங்கு  கோவில் பூசாரி போல் இருந்த ஒருவரின் மீது சந்தேகம் ஏற்படவே அவர் யார் என்று தெரியாமல் விசாரணைக்காக  காவலில் வைத்திருக்கிறார் ரிச்சர்ட். பின், அகமது கான் அந்த இடத்திற்குத் திரும்பியபோதுகுரு கைவிலங்கிடப்பட்டு போலீஸ் வண்டியில் அமர்ந்திருப்பது குருதேவந்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.

இது அகமது கானுக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. காரணம் குரு எப்போதும் உன்னிப்பாகவும் இருக்ககூடியவர். இப்படி சாதாரணமாக சிக்கிகொண்டது அவருக்கு ஆச்சரியத்தையே கொடுத்தது.

முன்னதாக குருதேவன், சிங்கப்பூரில் தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சிறிய அறையில், தொலைபேசி நிறுவன ஊழியர் சங்கத்தில் அலுவலகப் பொறுப்பாளராக இருந்திருக்கிறார். தான் கற்றுதெளிந்த சித்தாந்தக் கல்வியையும், மார்க்சிய வகுப்புகளையும் ஒத்த சிந்தனையுடைய தனது சகாக்களுக்கும் அறிவார்ந்த இடதுசாரி  குழுக்களுக்கும் போதித்தார். 

''அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற தொழிற்சங்கம் செய்த சாதனைக்குப் பின்னால் தொண்டர் படை, குருதேவன் ஆகியோர் மறைமுகமாக இருக்கின்றனர். இந்த சாதனையை வளரவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சதியால் கொல்லப்பட்ட,  தொழிற்சங்க போராட்டவாதிகளான  மலாயா கணபதி, வீரசேனன் உள்ளிட்ட தோழர்களுக்கு பின்னால்  ஓர் ஊக்கியாகவும்  குருதேவன் இருந்திருக்கிறார்.

பிரிட்டிஷுக்கு எதிரான பல போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். குருதேவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். மலாயா கணபதி புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். வீரசேனன் துப்பாக்கிச் சூட்டுக்கு இறையானார்.

திரையில் பெருமாள் என்பவர் தேடப்படும் முதன்மை குற்றவாளியாக இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத பட்சத்தில் போலீஸ் அதை கண்டுபிடிக்க சிறப்பு பிரிவுகளை அமைத்து செயற்படுவதுடன், சந்தேகம் என்ற பெயரில் மக்களையும் சித்திரவதை செய்கிறது. இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். நமது நாட்டில் (மலேசியா) காட்டுப் பெருமாள் என்ற போராட்ட வீரரும் தேடப்பட்ட குற்றவாளியாக தலைமறைவாக இருந்து, பின் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டார் என்பதை ஒரு தகவலாக கூறிக்கொள்கிறேன்.

"விடுதலை" திரைக்கதையை   நான்  நமது நாட்டுக் கதை என்று சொல்லவில்லை.  மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும், வெவ்வேறு தனி இயக்கங்களாக செயற்பட்டாலும், முடிவில் அது ஒன்றுபோலவே இருப்பதை சொல்ல வருகிறேன்.

இரண்டாம் பாகம் வந்தால்தான் இன்னும் தெளிவாக பேச முடியும். தவிர நமது நாட்டில் நடந்த போராட்டங்களை பேசுவதற்கு இதுவும் ஒரு வாய்ப்புதானே.

நன்றி: மலாயா கணபதி இணையத்தளம் மற்றும் தோழர் சாமிநாதன்.  

நன்றி தமிழ்மலர் நாளிதழ் 23/4/2023

வியாழன், 9 டிசம்பர், 2021

'ஜெய்பீம்' படம் அல்ல பாடம்


கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்மையில் மனதை வெகுவாக பாதித்த சிலத் திரைப்படங்கள் குறித்து உரையாடப்பட்டது. அந்த உரையாடலுக்கான நோக்கம் என்ன? ஏன் ஜெய்பீம், அசூரன், கர்ணன் மற்றும் பரியேறும் பெருமாள் மாதிரியான திரைப்படங்களை படமாக மட்டும் அல்லாமல் ஒரு பாடமாக பார்க்க வேண்டும்? என்றக் கேள்விகளுக்கு விடைக்காணும் நோக்கத்தில் அந்த உரையாடல் கூகை பதிப்பக நிறுவனம் மேற்கொண்டது. 

ஜாதிக் குறித்த உரையாடலை தொடங்கினாலே “நமது நாட்டில் யாருங்க ஜாதி பார்க்குரா?” என்ற  இந்த வார்த்தை ஒரு முறையாவது நமது வாழ்க்கையில் சந்தித்து கடந்திருப்போம். ஆனால், ஜாதியை ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவகையில் சந்தித்துக்கொண்டே இருப்போம். சிலருக்கு அது ஜாதி பெருமையாகவும் சிலருக்கு அது சங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் இருந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் யாருங்க நம்ம நாட்டில் ஜாதியை பார்க்கிறா என்பவர்களுக்கான பதில் ஊமையாக இருக்கும் இம்மாதிரியான நேரடி சாட்சிகள் தான்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் நேரடியாக ஜாதி அடுக்குமுறையை பேசும்போது ஜெய்பீம் பூர்வக்குடிகளின் நிரந்தரமற்ற வாழ்க்கையை பேசுகிறது. எனக்கு இந்த இரண்டு விஷயங்களிலும் நேரடியாகவே பல அனுபவங்கள் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் நிறைய பூர்வக்குடிகளின் பிரச்னைகளை நான் நேரடியாகவும் தகவல்கள் சேகரித்தும் எழுதியிருக்கிறேன், பாதிக்கப்பட்டிருக்கும் பூர்வக்குடிகளை நேரடியாகவும் சந்தித்து பேசியிருக்கிறேன். பெருவாரியாக மலேசிய பூர்வக்குடிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை அவர்களின் வனத்தை ஆக்ரமிப்பதுதான். போலீஸ் கஸ்டடியில் பூர்வக்குடிகள் இறந்த பதிவுகள் குறித்து பெரியதாக அறிய முடியவில்லை என்றாலும்  துஷ்பிரயோகம், துன்புறுத்தல் நடந்ததற்கான பதிவுகள் இருக்கிறது. அதுவும் தீபகற்பத்தைவிட சபா-சரவாக் மாநிலங்களில் அது மிகுதியாகவே இருக்கிறது.


பூர்வக்குடிகள் விவகாரத்தை மட்டும் தனியே எடுத்து பார்க்கும்போது மாநில அரசாங்கமோ, அல்லது மத்திய அரசாங்கமோ அவர்களை அவர்களின் சுயத்தை இழப்பதற்கான வேலையைத்தான் செய்கின்றன. அவர்களின் காடுகளை பிடுங்குவதிலிருந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவதிலிருந்து, அவர்கள் பூர்வக்குடிகள் என்ற அடையாளத்தை மறக்கடித்து மதச்சாயத்தை பூசி அவர்களுக்கு பண ஆசையை ஏற்படுத்தி அரசாங்கம் எஜமானர்களாகவும் சில சமையம் கடவுகளாகவும் நடந்துக்கொள்ளும்போது ஒவ்வொரு பூர்வக்குடியின் நிலை சொல்லில் விவரிக்க முடியவில்லை.

உயிரை பறிப்பதும், அடித்து காயத்தை ஏற்படுத்துவதும் மட்டும் கிரைம் அல்ல என்பது பலருக்கு புரிவதும் இல்லை. காடுகளை அழைப்பது, ஓராங் அஸ்லியின் (பூர்வக்குடியின்) வாழ்வாதாரத்தை பறிப்பது, அவர்களின் அசல் வாழ்க்கையை பிடிங்குவது இதெல்லாம் கிரைம் இல்லையா? 

பரியேறும் பெருமாள், அசூரன் உள்ளிட்ட திரைப்படங்களில் வைக்கப்படும் மிக வலிமையான செய்தி கல்வியாகும். ஒடுக்கப்படும் சமூகத்திற்கான ஒரே வலூவான ஆயிதமாக இருப்பது கல்விதான். அந்தக் கல்வி பூர்வக்குடிகளுக்கும் அவசியமானது. மலேசிய பள்ளிக்கூடங்களில் பகடிவதைக்கு ஆளாகும் பூர்வக்குடி குழந்தைகளை மலேசிய சமூகம் கண்டுக் கொள்வதே இல்லை. அதன் காரணத்தினால், கல்விக்கு முடிவு கட்டிவிட்டு கூலி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம் உண்டு. மூடப்படும் பூர்வக்குடி மாணவர்கள் கற்கும் பள்ளிக்கூடங்கள் அதற்கு சாட்சியாகும்.


நாடோடிகளாக வாழவேண்டிய பூர்வக்குடி சமூகம், பின்னாளில் ஒரே இடத்தில் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு தங்களின் இனக் குழுவினரோடு பல ஆண்டுகள் வாழ்ந்த நிலப்பரப்பை பூர்வீக நிலமாக வரையறுக்கிறார்கள். முன்னோர்களின் ஆவி மற்றும் ஆவி வழிபாடுகளில் நம்பிக்கைக்கொண்டிருக்கும் பூர்வக்குடி மக்கள், அந்த நிலப்பரப்பை கைவிடுதல் என்பது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு விஷயம். ஆனால், நமது நாட்டில் அது சர்வசாதாரண ஒரு விஷயம்.

2020 முதல் மிகக் கடுமையாக இருந்த கோவிட் பெருந்தொற்று நெருக்கடியிலும் காப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தன் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்ட பூர்வக்குடிகள்

கதைகள் வெறும் கதைகள் அல்ல. தன் பூர்வீக நிலத்தை விட்டுத்தர முடியாமலும், காப்ரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்கவும் முடியாமலும், போராட்டம் நடத்தி இறுதியில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் கொண்டுச் செல்லப்பட்ட ஓராங் அஸ்லியின் சோகக் கதைகள் ஏராளம். மலேசிய மக்கள் ஒரு செய்தியாகக்கூட அவற்றை அறிந்திருக்கவில்லை.

ஜெய்பீம் திரைப்படத்தில் சந்துரு என்கிற ஒரு வக்கீல் சட்டரீதியாக நீதிக்காக போராடுவதைப் பார்த்தோம். ஆனால், சந்துரு ஒருவரால் மட்டுமே நீதிக் கிடைத்ததா என்றால் இல்லை. கம்யூனிஸ் தோழர்கள் போராட்டம், வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், பண ஆசைக்கு மயங்காத செங்கேனி, ராஜக்கண்ணுவை கொன்று புதைத்த இடத்தில் தேனீர்கடை வைத்திருந்தவர் என சில முக்கியசாட்சிகளால்தான் இந்த வழக்கை வெற்றிக்கொள்ள முடிந்தது. நீதிகிடைப்பதற்கும் துணையாக இருந்தது.

மலேசிய சூழலில் இம்மாதிரியான களப்பணியை பி.எஸ்.எம் கட்சி மட்டுமே முன்னெடுக்கிறது. வாதியிடம் அவர்கள் பணத்தை கேட்பதில்லை. பரிசாக கொடுக்கிறேன் என்றாலும் அதை அவர்கள் ஏற்பதில்லை. வழக்குக்கு அல்லது அந்தக் களப்பணிக்கு தேவையான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். வாதிக்கு வசதியில்லாத பட்சத்தில் அவர்களின் செலவையும் கழகமே ஏற்கிறது. தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் வழக்குகளை முன்னெடுக்கும்போதும் இதே நிலையைத்தான் கட்சி/கழகம் கையாள்கிறது. வழக்குகளில் வெற்றி பெற்றால், தொழிலாளர்களே அன்பளிப்பாக ஒரு சிறுதொகையை அளிக்கிறேன் என முன்வந்தாலும் கழகம் அதை ஏற்பதில்லை, இன்னும் சொல்லப்போனால் தேனீர் செலவைக்கூட வாதியை ஏற்கவிடுவதில்லை. என்றால் இடதுச்சாரி தோழர்களின் நிலைப்பாட்டை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.

உலகம் முழுக்க செங்கொடியை ஏற்றுக்கொண்டவர்களின் நிலைப்பாடு ஒரேநேர்கோட்டில் பயணிப்பதும், அதன் தார்மீகக் கடமை மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் மீளாததும் செங்கொடியின் பலத்தை நமக்கு உணர்த்துகிறது.

எழுத்தில் ஒருசிலருக்கு புரியவைக்க முடியாத சத்தியத்தை, அறத்தை, தத்துவத்தை, படிப்பினையை, காட்சிகளால் புரியவைக்க முடியும் என்பதற்கும் பேசுபொருளாக ஆக்க முடியும் என்பதற்கும் இம்மாதிரியான திரைப்படங்கள் உதாரணமாக இருக்கின்றன. மலேசிய மண்ணிலும் இம்மாதிரியான திரைப்படங்கள் வரவேண்டும் என்பது நமது ஆவலும் கூட.

கலந்துரையாடலில் அனைவரும் அவர் அவர் அனுபவத்தோடு கலந்துரையாடியது மிகச் சிறப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே ஒத்த சிந்தனையோடு இருப்பதும் மாற்றுச் சிந்தனைக் குறித்த கருத்துப் பகிர்வுகளை வெளிப்படுத்தியதும் சிறப்பாக அமைந்ததோடு ஒடுக்குமுறையை அவரவர் எப்படி எதிர்கொள்கின்றனர் மற்றும் அதில் அவர்களின் புரிதலையும் விவாதிக்க முடிந்தது. மொத்ததில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட திரைப்படங்கள் மலேசிய சூழலோடு எப்படி பொருந்தி போகிறது என்பதையும் அவதானிக்க முடிந்தது.  

-யோகி    

நன்றி: மலேசியாகினி இணையசெய்தி   

 

சனி, 17 அக்டோபர், 2020

மிஷ்கினின் சைக்கோ

திரைப்படம் பார்க்ககூடிய சூழல் எப்போதும் எனக்கு இருப்பதில்லை. ஆனாலும் மிஷ்கின் திரைப்படம் என்றால் எனக்கு நெருக்கமான ஒன்று ஏதோ  அதில் இருப்பதாக எனக்கு தோன்றும். குறிப்பாக அந்த வயலின் இசை.. மிஷ்கின் திரைப்படத்தில் அந்த வயலின் இசையானது தனிக்கதையாகவே ஓடும்.  நான் அப்படியாகத்தான் அந்த இசையைப் பார்க்கிறேன்.

சைக்கோ திரைப்படம் குறித்து பல கருத்துகள்  உலாவிக்கொண்டிருக்கின்றன. சிலர் லோஜிக் உதைக்கிறது என்கிறார்கள். சிலர் சரியாக எடுக்கப்படாத திரைப்படம் என்கிறார்கள்.  இதெல்லாம் கருத்தில் மிஷ்கின் கொள்வதில்லையா என்று விமர்சனம் சொல்கிறார்கள்? ஆசிரியர்கள் பார்க்க வேண்டிய படம் என்கிறார்கள். ஏன் அந்த டீச்சரைக் கொல்லாமல் வைத்திருந்தான் அந்த சைக்கோ என்கிறார்கள்.. இன்னும் என்னென்னவோ… என்னென்னவோ…

நான் படம் பார்த்த மறுநாளிலிருந்து மிஷ்கின் திரைப்படம் குறித்த சில நேர்காணல்களைப் பார்த்தேன். குறிப்பாக மிஷ்கினுடைய நேர்காணல் அது ஒரு இலக்கிய வாசிப்பின் மாதிரியாக இருந்தது. எனக்கு அந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு பேசவேண்டும் என்று நினைத்தது இரண்டு விஷயங்களைத்தான். திரைப்படம் விமர்சனம் சார்ந்து ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கொடுப்பதற்கு ஏற்ற ஆள் நான் இல்லை என்றாலும், வெகுஜன மக்கள் பார்வையிலும் பொதுபுத்தியிலும் மனசுக்கு தோன்றுவதை பேசுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கிறதல்லவா…

மிஸ்கின்  திரைப்படத்தில் வரும்  சைக்கோவுக்கு இரண்டு வரலாறுகள் இருக்கிறது. ஒன்று உண்மையான சைக்கோ கில்லர் தேட் பேண்டி.  மற்றொன்று அங்குலி மாலா எனும் பெயருக்கு பின்னாள் இருக்கும் வரலாறு. 

நிஜ சீரியல் கிள்ளர் தேட் பேண்டி. 

இந்தப் பெயரை மிகச் சமீபத்தில்  ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ஒரு ஆவணபடத்தில் பார்த்தேன்.  கிரைம் சம்பந்தப்பட்ட சேனல் அது. படத்தில் சைக்கோ வில்லன் அங்குலி பெண்களை கடத்தும்போது  காலில் ஊனமுள்ளவர் போல நாடகமாடுவார்.  அது அப்படியே தேட் பேண்டியின் பாணி.  தேட் பேண்டி குழந்தை பருவத்திலேயே மனதளவில் பெரும் பாதிப்பை சந்தித்தவர். பெற்றோர்களின் புறக்கணிப்பு, முதல் காதலின் தோல்வி என அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் தோல்விகளும் அவரை ஒரு சைக்கோவாக மாற்றியது. தேட்  பேண்டி கடத்தி கொன்ற பெண்கள் அனைவரும் நெற்றியில் நடுவகிடு எடுத்து தலைசீவிய பெண்கள். சில பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார். அவர் கடத்தி கொன்ற பெண்களில் பாலியல் தொழில் செய்பவர்கள் உட்பட 12 வயது சிறுமியும் அடங்குவார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயமாகும். அவர்களை கொல்வதற்கு தேட் பேண்டி தேந்தெடுத்த காரணம் அவர்கள் நடுவகிடு எடுத்து தலைவாரியதுதான். தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்த அவரின் முதல் காதலி நடு வகிடு எடுத்து தலைசீவுபவர். பெண்களை கடத்தி கொலை செய்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவருக்கு ஒரு காதலியும் இருந்திருக்கிறார்.  வீட்டில் அவரோடு குடும்பம் நடத்திக்கொண்டு அவருக்கும் தெரியாமல் ஒரு சைக்கோ வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கிறார் தேட் பேண்டி. 


இத்தனைப் பேரை , எங்கு, எப்படி, கொலை செய்தேன் என்று  விளக்கமாக சொல்லும்வரை போலீசால்கூட அவரைப் பிடிக்க முடியவில்லை. பிறகு எப்படி போலீசில் சிக்கினார் தேட் பேண்டி? ஒரு நிதானமாக கார் ஓட்டுனர் இல்லை அவர். சாலையில் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலையில் அவர் தனது காரை செலுத்துவார். அந்த மாதிரி கார் செலுத்திக்கொண்டு வரும்போது ஒரு முறை அவர் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு காரிலிருந்த ஆயுதங்கள் சில வற்றில் படிந்திருந்த ரத்தக் கறைகள் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். தனக்காக வாதாட அரசு தரப்பு வக்கில் இருந்த போதும் அதை நிராகரித்த அவர் தனக்காக தானே வாதாடினார். ஆனால், அதில் அவர் தன்னை நிராபராதியென நிறுபிக்க தவறினார்.. இந்த வழக்கு விசாடனையில் இருந்தபோதே சிறையிலிருந்து தப்பித்து 5 நாட்கள்  காட்டின் ஒரு மறைவிடத்தில் தங்கியிருந்து மீண்டு வந்தார்.  ஒரு காரை திருடி எடுத்துக்கொண்டு வேறொரு ஊருக்கு போய்விட்டார். சில கைவேலைகளை செய்துக்கொண்டு காரிலேயே சில நாட்கள் வாழ்கை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய கிரிமினல் மூளை அவரை இயல்பு வாழ்கையை வாழவிடவில்லை. மீண்டும் கொலை செய்ய தொடங்கினார் தேட் பேண்டி. 



இந்தத் தொடர் கொலைகள் நடந்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள்,  தேட் பேண்டி  தோல்வியில் முடிந்த ஒரு கொலை முயற்சியில் ஆத்திரம் கொண்டு, ஒரு லேடிஸ் ஹோஸ்டலில் நுழைந்தார். பெண்கள் எல்லாரும் நித்திரையில் இருந்தனர். வெறிக்கொண்டு அவர்களை தாக்கினார் தேட் பேண்டி. அந்தக் கண்மூடித்தனமான தாக்குதலில் பல பெண்கள்  மரணமடைந்தனர். கடுமையான காயங்களுடன் முகம் உடைக்கப்பட்ட நிலையில்  ஒரு பெண் உயிர் தப்பினார். எங்கோ வெளியில் சென்றிருந்த வேறொருபெண், அப்போதுதான் ஹோஸ்டலுக்கு வர,  மரண ஓலங்கள் கேட்டு, ஓரிடத்தில் பதிங்கிக்கொண்டார். 

வெறியாட்டம் ஆடிய தேட் பேண்டி மிக ஆவேசமாக, ஹோஸ்டலிலிருந்து வெளியேறி, தனதுக் காரை மிக  ஆபத்தான முறையில்  ஓட்டிச் சென்றுக்கொண்டிருக்கையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன் பிறகு காரை சோதனையிட்டதில் தேட் பேண்டி வசமாக  மாட்டிக்கொண்டார்.  கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்கள்,  அதிலிருந்த ரத்தக் கறைகள் என சோதனையிட்டதில் காணாமல் போனவர்களின் அடையாளத்தை அது காட்டிக் கொடுத்தது. பின்னர், தொடங்கப்பட்ட விசாரணையில், இதற்கு முன்பு அவர் போலீசிடமிருந்து தம்பிச் சென்றது உட்பட அனைத்தும் அம்பலமானது.  இனி தப்பிக்க முடியாது என்ற முடிவு செய்தப் பிறகுதான், தான் செய்த அனைத்து கொலைகளையும் அவரே  விவரித்தார். காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இருந்தவர்கள் கொல்லப்பட்டிருப்பது அப்போதுதான்  தெரியவும் வந்தது.  அதுவும் எங்கே எப்படி என தேட் பேண்டியே போலீசைக் கூட்டிக் கொண்டு போய்  காட்டி தெரியப்படுத்தியது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். 

போலீசிடம் தேட் பேண்டி மாட்டிக் கொள்வதற்கு முன்பே, ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட, இவரின் நடவடிகையில் மாற்றம் இருப்பதாகவும், போலீஸ் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் தேட் பேண்டியிடம் லீவீங் டுகேதராக இருந்த அவரின் காதலி புகார் அளித்திருந்தார் என்பதும் சொல்ல வேண்டிய விஷயமாகும்.

அங்குலி மாலா

படத்தில் வரும் கொலைகாரனுக்கு அங்குலி மாலா என்ற பெயரை சூட்டியிருக்கிறார் மிஷ்கின். அங்குலி மாலா புத்தர் காலத்தில் வாழ்ந்த புத்தரை கொல்வதற்காக போன ஒரு சைக்கோ கில்லராவார்.  பீகார் காட்டுப்பகுதியில் வாழ்ந்த அங்குலி கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் விரலை வெட்டி மாலையாக அணிந்துக்கொள்வானாம்.  தன்னுடைய குரு 1000 சுண்டு விரல்களை தட்சணையாக கேட்டதின் பேரில் நடந்திருக்கிறது இந்தக் கொடூரம். படத்தைப் பார்த்தவர்களுக்கு தெரியும், சைக்கோ படத்தில் அங்குலிக்கு ஒருவிரல் இல்லை. சின்னதொரு நூல் இழையில் இந்தக் கதையை பேசியிருக்கிறார் மிஸ்கின்.  

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பெண் பாத்திரங்களுக்கு மிஸ்கின் சூட்டியிருக்கும் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர்களின் பெயர்கள். குறிப்பாக நித்தியா மேனனுக்கு மலையாள எழுத்தாளர் கமலா தாஸின் பெயர் சூட்டியிருந்தார். இப்படி எல்லாரின் பெயருக்கும் பின் ஒரு வரலாறைச் சத்தமில்லாமல் பேச வைத்திருக்கிறார் மிஷ்கின்.

பின்னணி இசை, உன்னை நினைச்சி நினைச்சி என்ற பாடல் வழியாக தன்னைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் மத்தியில் பேச வைத்திருக்கிறார் இசை ஞானி.  ஒரு சில லாஜிக்களை கிள்ளி எறிந்துவிட்டுப் பார்க்கிறேன், சைக்கோ எனக்கு பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.