சூழலியலாளர்கள் இப்படி அச்சத்தோடும் அக்கரையோடும், இப்பூவுலகிற்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசிற்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் இயற்கைக் குறித்தான புரிதல் எப்படி இருக்கிறது என்று அறியும்போது பகீர் என இருக்கிறது. “உண்மையான நண்பனை ஆபத்தில் அறி” என்று சொல்வார்கள். இயற்கை மீது உண்மையான நேசம் கொண்ட அரசியல்வாதிகளை பேசவிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவர்கள் அரசியல்வாதிகளா அல்லது அரசியல் வியாதிகளா என்று.
குறிப்பாக கடந்த
டிசம்பரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின்போது, பஹாங் மாநிலத்தில் சில இடங்களில் காடுகளில்
வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துக்கொண்டுவந்து சிலரின் வீடுகளை பதம்
பார்த்தன. சாலைகளிலும் புற நகரங்களிலும் வெட்டப்பட்ட மரங்கள், வெள்ளத்தில் அடித்துக்கொண்டு
வந்து, பஹாங்கில் சட்டவிரோதமாக மரமே வெட்டுப்படுவதில்லை என்று நகைச்சுவைக்கு முற்று
புள்ளி வைத்தன.
குடியிருப்பாளர்களின்
வீடுகளை பதம் பார்த்த காட்டுமரங்கள் எங்கிருந்து வந்தன என பாதிக்கப்பட்டவர்களும் இயற்கை
ஆர்வளர்களும் கேள்விகேட்கும்போது, வனத்துறையினர் இதுவரை உலக மக்கள் கேட்டிடாத பதிலை
சொல்லினர்…
கண்டெடுக்கப்பட்ட மரங்கள் மரம் வெட்டும் நடவடிக்கையின் விளைவாக இல்லை, என்றும் அவை வெள்ளத்தின் காரணமாக அறுபட்டு சாய்ந்தவை என்று கூறினர். இதன் அர்த்தம் வெள்ளத்தால் அவை வெட்டப்பட்டு கிராமங்களுக்குள் நுழைந்தன என்று பொருள் படுகிறது இல்லையா?
கற்பனைக்கு எட்டாத
இந்த பொறுப்பில்லாத பதிலால், மனம் கொதிப்படைகிறதே தவிர அதைத் தாண்டி இந்த இக்கட்டான
வேளையில் ஏதும் செய்ய முடியவில்லை. வனத்தை பாதுகாத்து, சட்ட விரோதமாக மரம் வெட்டுவதை
தடுக்கவும்தானே வனத்துறை இருக்கிறது? அதுவே இப்படியான பதிலை சொல்லும்போது யாரிடம் நாம்
இயற்கைக்காக அடைக்கலம் நாடுவது?
நாட்டில் இன்னொரு
சூழலியல் நகைச்சுவையை பேசியிருப்பவர் Plantation Industries and
Commodities Minister ஜுரைடா
கமாருடின். Malaysian Palm Oil Council’s 2022 மாநாட்டில் அவர் என்ன சொல்கிறார்
என்றால், செம்பனை எண்ணெய் தொழில்
உற்பத்தியினால், விலங்கினங்கள் (ஓராங் ஊத்தான்கள்) கொல்லப்படுகிறது
என்ற கருத்தை மறுத்து, மலேசியாவில்
இன்னும் பல ஒராங் ஊத்தான்கள்
இருக்கின்றன. ஓராங் ஊத்தான்-னும்
மனிதர்களும் சந்திக்க நேர்ந்தால் அங்குரங்குகளே முதலில் மனிதர்களைக் கொல்லும்,
மனிதர்கள் அதை கொல்ல மாட்டார்கள்.
வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (வனவிலங்குதுறை) , ஒராங் ஊத்தான்கள், புலிகள் மற்றும் சிங்கங்களை வெறுமனே கொல்லவில்லை என்றும், மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு "விலங்குகளை மயக்கமடையச் செய்யும்" கொள்கையைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
1973-களில்
போர்னியோவில் 288,500 ஒராங் ஊத்தான்கள் இருந்ததாக
மதிப்பிடப்பட்டது, 2025 ஆம் ஆண்டில், அது
47,000 ஆக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. வேட்டையாடப்படவில்லை
என்றால் எப்படி அவை அழியக்கூடிய மிருகங்கள் பட்டியலில் வந்தன என்பதின் விளக்கத்தையும்
ஜுரைடா
கமாருடின்தான் சொல்ல வேண்டும்.
சூழலியலாளர்கள் மனதைக் காயப்படுத்திய மற்றுமொரு பதிவு, கிளந்தான் மாநில துணை முதல்வர் அமார் நிக் கூறியிருப்பதாகும்.
“காட்டில் மரங்கள்
வெட்டப்படுவதால் புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி ஓராங் அஸ்லி கிராமங்களுக்குள்
நுழைகின்றன. வனத்துறையின் கூற்றுப்படி, புலிகள் முதுமையடையும்போது அவைகளால் மிருகங்களை
வேட்டையாட முடியாது. அவைகளின் சுலபமான இலக்கு மனிதர்கள்தான்; காரணம் மனிதர்களால் மிருகங்களை
போல வேகமாக ஓட முடியாது”
உணவுச் சங்கிலி
சுழற்ச்சியின் தொடக்கம் புலியில் இருந்துதான் தொடங்குகிறது. புலி அழிந்துபோனால், மனித
இனமேக்கூட அழிவை நோக்கிப் போகும் அபாயம் உண்டு.
ஆனால், உலகளவில்
மிக கொடூரமாக வேட்டையாடப்பட்ட இன்னும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் மிருகம் எது
என்றால் அது புலிதான்.
மலேசியாவின் மலாயா
புலிக்கு என்றே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதைப் பற்றி பேசினால் தனி ஒரு கட்டுரையே எழுத
வேண்டும். தனித்துவமான மலாயா
புலி தற்போது அழிந்தே போகும் அபாயத்தின்
பட்டியலில் இருக்கிறது.
புலியின்
தோல், எழும்பு, இறைச்சி வரை கள்ளச்சந்தையில் பெருவிலைக்கு விற்கப்படுவதை பிபிசி செய்தி
நிறுவனம் வெளியிட்டிருக்கும் சிறப்பு செய்தி அம்பலப்படுத்தியிருக்கிறது.
எப்பேர்பட்ட வன
ஆர்வளர்களை நமது நாடு கொண்டிருக்கிறது பாருங்கள். வனம் தொடர்பான அறிக்கை, வனத்தை பாதுகாக்ககூடிய
நடவடிக்கைகள் என இவர்கள்தான் சில முடிவுகளுக்கு சூத்திரதாரிகளாக இருக்கப்போகிறார்கள்
அல்லது இருந்திருக்கிறார்கள். அழகிய இயற்கை வளங்களை கொண்டிருந்த நமது நாட்டின் தற்போதையை
நிலையை உங்களில் யாராவது திரும்பி பார்த்திருக்கிறீர்களா?
காடுகள், மலைகள், பூர்வக்குடிகள் என அழிக்கப்பட்டு, கரைக்கப்பட்டு, விரட்டப்பட்டு எல்லாம் பட்டு போய்கொண்டிருக்கும் நாடு; எம் அடுத்த தலைமுறைக்கு வாழ தகுதியுள்ளதாக இருக்குமா?
நன்றி : தமிழ்மலர் 31/1/2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக