திங்கள், 11 டிசம்பர், 2017

வேடந்தாங்கல் பறவைகள் விட்டுசென்ற ஞாபகங்கள்...1



பெண்களை ஒருங்கிணைப்பது என்பது சுலபமான காரியமா எனக்கெடடால், அது எளிமையாக நடக்க கூடிய விஷயமில்லை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. தமக்கு விதிக்கப்பட்டிருக்கும்  கடமைகள் பொறுப்புகள் தாண்டி பணிக்கும் போய்வந்து ஓய்வாக இருக்கப்போகும் ஒரு நாளிலும் முழுக்க அவர்களுக்கான நேரம் கிடைக்காமலே இருக்கும். இதற்கிடையில் பெண்கள் சந்திப்பு வைக்கிறோம்  கலந்து பேசுவோம்  என  அழைத்தால், அது நடக்கும் காரியமா என்ன? 

பெண்களே ஏற்பாடு செய்து, பெண்களே ஒருங்கிணைத்து, அவர்களே பயணித்து , வழிநடத்தி, நிகழ்ச்சியில் பங்குபெற்று அதிலிருக்கும் குறை நிறைகளை பொதுவில் வைக்கும் ஒரு நிகழ்வாக ஊடறு பெண்கள் சந்திப்பு இருக்கிறது. பன்னாட்டு ரீதியில் நான்காவது ஆண்டாக இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றான பம்பாயில் இவ்வருடத்திற்கான சந்திப்பை ஊடறு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. அதுவும் 5 நாடுகளைச் சேர்ந்த பெண் ஆளுமைகளோடு பம்பாய் பெண்களையும் ஊடறு ஒருங்கிணைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்புக்கான தலைமை பொறுப்பை  பம்பாயை சேர்ந்த புதிய மாதவி(மா) ஏற்றிருந்தார். நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிடுந்த இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டுப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போகும் தோழியர்கள், விவாதிக்கப்போகும் தலைப்புகள், இடப்பெறும் அங்கங்கள் என ஒவ்வொன்றும் விவாதத்திற்கு பிறகும் அவ்வங்கம்  இடம்பெறுவதற்கான வலுவான காரணம் முன்வைக்கப்பட்ட பிறகும்தான் சந்திப்பில் இடம்பெற தகுதி பெற்றன.    



 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் நடைபெறபோகும் நிகழ்வுக்காக தோழியர் நவம்பர் 19-ஆம் தேதியிலிருந்தே மும்பை நகரை நோக்கி வரத்தொடங்கியிருந்தனர்.


காசியிலிருந்து புறப்பட்டு சுமார் ஒண்றரைநாள் (1515 ஆயிரம் கிலோமீட்டர்)  ரயில் பயணத்திற்குப் பிறகு பம்பாய் நகரின் டாடரில் இறங்கினேன். எனக்காக புதிய மாதிவி அம்மாவும் லண்டனிலிருந்து வந்திருந்த ஆனந்தி சுரேஷ் அம்மாவும் வரவேற்றனர். அங்கிருந்து மற்றோரு  ரயிலை மாறி புதிய மாதவியம்மா இல்லத்திற்கு சென்றோம். பம்பாய் நகரெங்கும் ரயில் ஓடும் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. அல்லது தொடந்து ரயில் பயணங்கள் செய்துகொண்டிருப்பதால் அது எனது பிரம்மையா என அறிய புதிய மாதவி அம்மாவிடம் கூறினேன். மெல்ல புன்னகைத்தவர் பிரிடிஷ் காலனித்துவத்தில் 100 ஆண்டு திட்டமாக முன்னெடுக்கப்பட்டது இந்த ரயில் போக்குவரத்து என்றார். ரயில் பயணத்தை எடுத்து விட்டால் இந்த பம்பாய் நகரமே ஒன்றுமில்லாத சூனியமாக தெரியும் என்றார்.  இளைஞர் கூட்டம் ஒன்று திரைப்படத்தில் வருவதுபோலவே ரயிலின் படியில் தொங்கிக்கொண்டு போகும் காட்சி எங்களை கடந்துச் சென்றுகொண்டிருந்தது. எனக்கு வாய்த்த இந்திய ரயில்பயணங்களை குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் முன்பே எனக்கு இருந்தது. தற்போது அதற்கான காலம் கனிந்திருப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

பெண்கள் சந்திப்புக்கு வரும் பெண்கள் தங்குவதற்காக எல்லா வசதிகளும் கொண்ட ஒரு வீடும், எங்களுக்கு மூன்று வேளை சமையல் செய்துக்கொடுக்க ஒரு மஹாராஷ்ட்ரா அம்மாவும், வீட்டு வேலைகளுக்கு உதவியாக மேரி என்ற பெண்ணும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள்.  அவர்களும் பெண்கள் சந்திப்பின்  ஒரு அங்கமாகவே திகழ்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பம்பாயின்  பாண்டூப் ஈஸ்ட்  பல்வேறு நாடு மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட பெண்களோடு பம்பாய் பெண்களையும் இணைத்து அழகுப்பார்த்துக் கொண்டிருந்தது. 

(தொடரும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக