பூர்வக்குடிகளை மலேசியாவில் ‘அசல் மனிதர்கள்’ என்றும் பெயருண்டு. இந்த அசல் மனிதர்களின் தற்போதைய வாழ்க்கை முறை அசலாக இருப்பதில்லை. இருந்த போதிலும் சில பூர்வக்குடிகள் இந்தப் போலி வாழ்க்கை முறையை ஏற்காமல் காட்டின் உள்பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கையும் வாழத்தான் செய்கின்றனர்.
அண்மையில் நான் மேற்கொண்ட வனப்பயணம் மிக முக்கியமானது. அதற்கும் முன்னதாகத் தமிழ்நாட்டில் முதுமலை- நீளகிரி பகுதியில் வசித்துவரும் பழங்குடியினர்களைச் சந்தித்துப் பேசிய அனுபவத்தை நான் எனது அகப்பக்கத்தில் தொடராக எழுதியிருக்கிறேன். அந்தச் சந்திப்பில், எல்லாப் பழங்குடியினரிடத்திலும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணமுடிந்தது. குறிப்பாக அவர்களின் முகத்தோற்றம் ஆப்பிரிக்கப் பழங்குடியினர் சாயலை கொண்டிருப்பது. மற்றொன்று அவர்கள் வேட்டையாடும் முறை.
மலேசிய பழங்குடியினரில் 18 பிரிவினர் இருக்கின்றனர். பஹாங், பேராக், கிளந்தான், திரெங்கானு சபா-சரவாக் உள்ளிட்ட இன்னும் சில மாநிலங்களின் அடர்ந்த வனங்களில் அவர்கள் வாழ்கின்றனர். கிழக்கு மலேசியா- மேற்கு மலேசியா என வாழும் பழங்குடி மக்களிடத்தில் சில ஒற்றுமைகளும் வேறுபாடுகளும் உண்டு.
ஒரு மலேசியர், மலேசிய பழங்குடியினரை அடையாளம் காணுதல் என்பது மிக எளிதான ஒன்று. ஒன்று அவர்களின் முகத்தோற்றம்; மற்றது அவர்களின் தலையை ஒட்டியிருக்கும் சுறுண்ட கேசம். சிலருக்கு ஆப்பிரிக்கரை போலவே தடித்த உதடுகளும் இருக்கும். பழங்குடி சமூகத்தின் புதிய தலைமுறை குழந்தைகள் காட்டை விட்டு வெளியில் வந்து இன்று பல்கலைக்கழகக் கல்விவரை உயர்வு பெற்றிருந்தாலும், அவர்களின் மாற்ற முடியாத முகத்தோற்றம் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் ஓராங் அஸ்லி (பழங்குடி அல்லது அசல் மனிதர்கள்) எனக் காட்டிக் கொடுத்துவிடும்.
சில விஷமிகளால் காட்டுவாசிகள் எனவும் சக்காய்கள் எனவும் கொச்சையாக வர்ணிக்கபடும் பூர்வக்குடிகள், பல்கலைக்கழகம் வரை சென்றாலும் தொடர்ந்து ஒரு ஏளனப்பார்வையை அவர்கள் மீது வைக்கப்படுகிறது. மேலும், மலேசிய பழங்குடியினர்களைச் சுயநலத்திற்காகச் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்களோ என எண்ணவும் தோன்றுகிறது. ஓட்டுருமைக்காக அரசும், மதம் உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சில அமைப்பினரும் அவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை.
மலேசியாவின் தேசிய வனத்தின் (தாமான் நெகாரா) மூன்று நாள் குறுகிய பயணத்தில் ஓர் அங்கமாகப் பழங்குடிகள் வசிக்கும் கிராமத்திற்குச் செல்வதாகத் திட்டம் இருந்தது. இந்தப் பயணத்தை நான் மேற்கொள்வதற்கும் அதுவே முதன்மை காரணமாகவும் இருந்தது.
குறிப்பிட்ட வனப்பகுதியில் ‘பாத்தேக்’, ‘பங்கான்’ என இரு பழங்குடியினர் வசிக்கின்றனர். தாமான் நெகாரா வனத்திற்கு வரும் சுற்றுப்பயணிகளை ‘பாத்தேக்’ இன பழங்குடிகள் வசிக்கும் சிறிய கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
தாமான் நெகாரா வனத்தைச் சுற்றுலாப்பயணிகள் அதிகம் கவரவைக்கும் நோக்கத்திலும் மலேசிய பழங்குடிகளின் வாழ்கை முறையை வெளிநாட்டவர்கள் தெரிந்துக்கொள்ளும் நோக்கத்திலும் 2000-ஆம் ஆண்டு மலேசிய அரசு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ‘பாத்தேக்’ பழங்குடிகளை நிரந்தரமாகக் குறிப்பிட்ட இடத்தில் தங்க வைக்கும் பரிந்துரையை மலேசிய அரசு அவர்களிடத்தில் வைத்தது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
சாலை வழியாகவும், கடல் வழி படகு பயணவழியாகவும் ‘பாத்தேக்’ பூர்வக்குடிகள் கிராமத்திற்குச் செல்லலாம். இது ஒரு கட்டமைக்கப்பட்ட கிராமம்தான். சுமார் 10 குடிகள் அங்கு இருக்கின்றன. ‘பாத்தேக்’ பழங்குடிகள் மூங்கில்களாலும் ஓலைகளாலும் தங்களின் குடிகள்களை அமைத்திருக்கிறார்கள். ஆனால், எந்த வீட்டிற்கும் கதவுகளை வைக்கவில்லை. ஒரு மெல்லிய துணியை மட்டும் திரையாகத் தொங்க விட்டுள்ளனர்.
நடைபழகாத குழந்தைக்குப் பெம்பர்ஸ் அணிவிப்பதிலிருந்து உள்ளாடை அணிந்த பெண்கள், காற்சட்டை- சட்டை –கைகடிகாரம் அணிந்திருக்கும் ஆண்கள் வரை ஆங்கில நாகரிகத்திற்குப் பழகியிருக்கும் பழங்குடிகளாக அவர்கள் மாறியிருந்தாலும், வரையறுக்கப்பட்ட அவர்களின் பாரம்பரியத்தையும் பின்பற்றவே செய்கிறார்கள்.
மூங்கில் பாலத்தில் ஏறிச் சுற்றுலாப்பயணிகள் நடந்து வருவதைப் பார்க்கும்போதே அங்கிருக்கும் பழங்குடி பெண்கள் தங்களைக் குடிகளில் மறைத்துக்கொள்ளவும், குழுவாகக் கூடி பேசவும் தொடங்குகின்றனர். மேலும், அவர்களின் முகசுழிப்பையும் காட்டாமல் இல்லை.
தங்களை ஒரு காட்சி பொருளாகச் சுற்றுலாப்பயணிகள் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களின் முகசுழிப்புக்கு காரணமா என்ற எண்ணம் தோன்ற அங்கு எங்களை அழைத்துச் சென்ற நடத்துனரிடம் இது குறித்து வினவினேன்.
‘பாத்தேக்’ மக்கள் குறித்த தவறான புரிதல் இது. ‘பாத்தேக்’ இனத்தைச் சேர்ந்த பழங்குடிகள் பிறரோடு நட்பு கொள்ள விருப்பம் காட்டுவார்கள். ஆனால், அதற்கான வழிமுறைதான் அவர்கள் அறிவதில்லை.”
அதற்கு ஓர் உதாரணமாகத் தனக்கு நடந்த சம்பவத்தை அவர்சொன்னார். முதல் முறையாக இந்தப் பழங்குடிகள் கிராமத்திற்கு வரும்போது அவர்கள் அதை விரும்பவில்லை எனவும் அவரை எச்சரித்ததாகவும் அவர் கூறினார். ஆனால், தொடர்ந்து அவர்களிடத்தில் உரையாடும் சந்தப்பங்கள் ஏற்பட்டபோது அவர்களில் ஒருவராகத் தன்னை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
‘பாத்தேக்’ இன பழங்குடிகள் ஒரே இடத்தில் வசிப்பவர்கள் அல்ல. தொடர்ந்து அவர்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் பயணம் செய்துக்கொண்டே இருப்பவர்கள். அரசாங்கம் இம்மக்களைக் உள்காட்டிலிருந்து கொஞ்சம் வெளிப்பகுதிக்கு அழைத்து வந்து புதிய வாழ்க்கை முறையை அமைத்துகொடுத்துள்ளது. ஆனால், இன்னும் சுமார் இரண்டாயிரம் பாத்தேக் பூர்வக்குடியினர் உள்காட்டினுள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த வாழ்கை முறை பிடிக்கவில்லை. மேலும் அதில் பலர் வனத்திற்கு அப்பால் இருக்கும் மனிதர்களை அறியாதவர்கள் என்றார்.
இது குறித்த நம்பகத்தன்மையை அறிய அங்கிருந்த பழங்குடிகளிடத்தில் உரையாடுகையில் அதை அவர்களும் உறுதிபடுத்தினர். இந்தச் சிறு குழுவினர் இங்கே தங்கியிருப்பதற்குச் சில பொருளாதாரத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலிருந்து சிறு மாநியம் இவர்களை வந்தடைவதாகவும் மேலும் சில தன்னார்வ இயக்கங்கள் இவர்களுக்கு அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருவதாகவும் அவர்கள் கூறினர்.
சில இன பூர்வக்குடிகளிடத்தில் உறவு முறைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், பாத்தேக் இனங்களுக்கிடையில் உறவு முறை காக்கப்படுகிறது. இவர்களின் திருமண முறை நீலகிரியில் வசிக்கும் தோடர்கள் வழக்கத்தோடு சிறிது ஒத்துப் போகிறது. அதாவது பாத்தேக் இனத்திலுள்ள ஆணும் பெண்ணும் ஓருவர் மீது ஒருவர் விருப்பம் கொள்கிறார்கள் என்றால் அதை முதலில் பெரியவர்களிடத்தில் தெரியப்படுத்துகிறார்கள். தொடர்ந்து அந்த ஆண் பெண் இருவரையும் தனியே ஒரு குடிலில் தங்க வைக்கின்றனர். ஒரு வாரத்திலிருந்து 10 நாட்கள் வரை அந்த உறவை எந்தச் சிக்கலுமின்றி அவர்கள் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றால், ஒரு எளிமையான விருந்து ஏற்பாடு செய்து அவர்களைக் கணவன் மனைவியாக அறிவிக்கிறார்கள். இதுதான் அவர்களின் திருமணச் சடங்காகும்.
உடை கலாச்சாரத்தைப் பார்க்கும்போது ‘பாத்தேக்’ இன ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிப்பதால் காற்சட்டை சட்டை அணிந்து முழுமையாக இருக்கிறார்கள். அல்லது அதற்கு வேறு ஏதும் காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால், பெண்கள் இடுப்புக்கு கீழே தன்னை மறைப்பதை காட்டும் அக்கரையை, மார்பை மறைப்பதில் காட்டுவதில்லை. உண்மையில் சுற்றுப்பயணிகளும், சில வேளைகளில் அந்நியர்களும் வருவதால்தான் அவர்கள் மேலாடை அணிகிறாகளோ எனத் தோன்றுகிறது.
கைகுழந்தை வைத்திருந்த ஒரு பூர்வக்குடி பெண், மார்பு கச்சையும் கைலி மட்டுமே அணிந்திருந்தார். மேலும் சில பெண்கள் கைலியை மட்டும் மார்போடு கட்டியிருந்தனர். சிலர் கைலியையும் டி-சட்டையையும் அணிந்திருந்தனர். ஆனால், ஒரு மலேசிய பூர்வக்குடியின் அடையாள உடையாக ஓலைகளால் நெய்யப்பட்ட ஆடைகள் இருக்கின்றன. தலை கவசத்தையும் அவர்கள் ஓலையில் பின்னுவர். அதுவே அவர்களின் பாரம்பரிய உடையும் ஆகும். ஆனால், நாங்கள் சென்ற போது ஒருவர்கூட அந்த உடையில் இல்லை.
‘பாத்தேக்’ பழங்குடிகள் தங்களின் குடில்களைக் குள்ளமாக அமைத்திருந்தனர். அங்கே இருக்கும் பெண்களிடம் உரையாடி கொஞ்சம் விவரங்களைப் பெறலாம் எனச் செல்கையில் அத்துமீறி அங்குச் செல்ல வேண்டாம் என நடத்துனர் எச்சரிக்கை செய்தார். இருந்தாலும் ஒரு வகைக் குறுகுறுப்பு மனதில் இருந்துக்கொண்டே இருந்தது. பிளக்கப்படாத விறகில் அடுப்பெரித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் என் கவனத்தை ஈர்க்க அத்துமீறியே அங்குச் சென்றேன். சுற்றியிருந்த பெண்கள் உடனே விலகிச் செல்ல விறகடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்த பெண் மட்டுமே அங்கு இருந்தார். அடுப்பிற்குக் கொஞ்சம் தள்ளி முதுகை காட்டியபடி அமர்ந்திருந்த மூதாட்டி திரும்பி ஒரு முறை என்னைப் பார்த்து மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.
இந்த விறகுகளை யார் கொண்டு வருவார்கள் எனக்கேட்டேன். தண்ணீர் எடுப்பது, விறகு கொண்டு வருவது உள்ளிட்ட வேலைகளைப் பெண்களே பார்த்துக்கொள்வோம் என்றார். ஆண்கள் வெளியில் சென்று சம்பாதிக்கிறவர்களாகவும் மான் உள்ளிட்ட மிருகங்களை இறைச்சிக்காக வேட்டையாடி கொண்டு வருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அந்தப் பெண் மேலும் கூறினார்.
மூங்கிலால் செய்யப்படும் தங்களின் கலாச்சாரம் சார்ந்த சில கைவினைப்பொருள்களை அங்கிருக்கும் பெண்கள் செய்துக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. அதை வாங்கும் ஆட்கள் குறைவு என்பதால் பெரிய அக்கரையோடு அவர்கள் அப்பொருட்களை செய்வதில்லை என்பது விற்பனைக்கு வைத்திருந்த தூசியேரிய பொருள்களைப் பார்வையிடும்போது தெரிந்தது. பூர்வக்குடிகளிடத்திலும் பெண்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதை அனுமானிக்க முடிந்தது.
கூர்மையான பார்வையைக் கொண்டே அவர்கள் அனைவரையும் அனைத்தையும் நோக்குகிறார்கள். ‘பாத்தேக்’ பழங்குடிகளிடத்தில் அவர்களுக்கே உண்டான மொழி இருந்தாலும் அனைவரும் மலாய் மொழியைச் சரளமாகவே பேசுகின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் பழங்குடிகள் தமிழ் பேசுவது போல. அவர்களின் இறை வழிபாடு குறித்துக் கேட்டேன். தங்களுக்கென்று எந்த இறைவழிபாடும் மதமும் இல்லை என்று அந்தப் பெண் கூறினாள்.
ஆனால், சிலர் இஸ்லாமியர்களாக மதம் தழுவியிருப்பது குறித்து அவளிடம் கேள்வி எழுப்புகையில் மிக நிதானமாகவே அவள் பதில் சொன்னாள், “அது அவர் அவர் மனநிலையைப் பொருத்தது. அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மதம் தழுவியர்கள் கிராமத்திற்கு வெளியில் இருக்கும் பள்ளிவாசலில் தொழுகின்றனர். எங்கள் கிராமத்தில் அதற்கான இடமில்லை என்றார். அவளின் பேச்சில் காணப்பட்ட இறுக்கம் மேலும் அவளிடத்தில் கேள்விகளை எழுப்ப துணிவில்லாமல் என்னைச் செய்தது.
‘பாத்தேக்’ இனத்தவர்களின் இறப்பு குறித்தான சடங்கு சற்று வினோதமானது. சடலத்தை நேர்த்தியாகப் பொதித்து உயரமான மரத்தில் கட்டிவிட்டு வந்துவிடுவார்களாம். இதைக் கேட்பதற்கே அதிர்ச்சியாகவும் அமானுஷயமாகவும் இருந்தது. ஆனால், தற்போது அந்தப் பாரம்பரிய முறையிலிருந்து மாறி அவர்கள் சடலங்களைப் புதைத்து வருவதாகவும் அதற்கான ஓரிடத்தை அவர்களே ஏற்படுத்திக்கொண்டனர் என்றும் நடத்துனர் கூறினார். ஆனால், உள்பகுதியில் இருக்கும் பாத்தேக் இனத்தவர்கள் பழைய முறையை இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்; இஸ்லாமியர்கள் அவ்வாரான சடலங்களைக் காணுவது நல்லதல்ல என்று நினைப்பதால் நாங்கள் அதைக் காண துணிவதில்லை என்று நடத்துனர் என்னிடம் தெளிவிபடுத்தினார்.
பழங்குடிகளை ஒரு நகர மனிதன் தேடிப்போவதற்குப் பலகாரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியக் காரணம் செய்வினை செய்வதற்காக இருக்கலாம். மலேசியாவில் பழங்குடிகள் ஆவி வழிபாட்டில் அதிகம் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களிடத்தில் செய்யும் செய்வினைகளுக்கு சக்தி அதிகம் எனவும் கூறுவர். இதுகுறித்துக் கேட்கும்போது ‘பாத்தேக்’ இனத்தவர்கள் அதுமாதிரியான செய்வினைகளில் ஈடுபடுவதில்லை என நடத்துனர் கூறினாலும் அவர்கள் ஆவி வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர் ஒப்புக்கொண்டார். ‘பாத்தேக்’ இனத்தவர்கள் தங்களின் முன்னோர்களை வழிபடுவதை ஒரு பாரம்பரிய சடங்காகவே கொண்டிருப்பது தெரிந்துகொள்ள முடிந்தது.
மேலும் காட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்தே அவர்கள் மருத்துவம், தீயை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட சில தேவைகளைப் பூர்த்திச் செய்துக்கொள்கிறார்கள். அவர்கள் நெருப்பை உற்பத்தி செய்யும் விதம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் சாமானியர்களால் அதற்கான உடல் பலத்தை வழங்குவது சிரமம். மூங்கில்களும் மூங்கில் இலைகளும் பழங்குடிகளின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
வேட்டைக்கு அவர்கள் பயன்படுத்தும் மூங்கில் குழாயும், மூச்சுக்காற்றினால் அழுத்தம் கொடுத்து அதனிலிருந்து வெளிபடும் ஊசியையும் அவர்கள் எவ்வாறு செய்கிறார்கள் மற்றும் அதை எவ்வாறு வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும் பார்வையாளர்களுக்குக் காட்டப்பட்டது. அது ஒரு நல்ல அனுபவம். அவர்கள் விஷம் கலந்த ஊசி விஷமில்லாத ஊசி என்று கறுப்பு-வெள்ளை நிறத்தில் வேட்டைக்குப் பயன்படுத்துகிறார்கள். கைவினைபொருள்களைச் செய்யும் பிஸினைப்போன்ற திரவத்தைக் காட்டிலிருந்த ஒரு மரத்திலிருந்து எடுக்கின்றனர். கொசு விரட்டிக்குக் காட்டிலிருந்த ஒருவகை இலையைப் பயன்படுத்திக் கோசுகடியிருந்து நிவாரணம் பெருகின்றனர். இப்படிக் காடுகளையே வணங்கி காட்டுடனேயே இன்னும் அனுக்கமான உறவை பாராட்டுகிறார்கள்.
கடலை ஒட்டி அமைந்திருக்கும் அவர்களின் கிராமம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது. அடந்த அந்த வனத்தோடும் கடலோடும் அவர்கள் சினேகமுடன் நட்பும் கொண்டிருக்கின்றனர். முறையான எந்தப் பதிவு அறிக்கையும் இல்லாத அவர்களிடத்தில் இறப்பும் பிறப்பும் ஒன்றுபோலயே இருக்கிறது. சில சமயம் இவர்களின் வனவாழ்கையைக் காணும்போது ஜெயமோகனின் காடு நாவலும் அதில் வாழ்ந்திருந்த ‘நீலி’ யையும் அவளின் தந்தையையும் ஞாபகப்படுத்துகிறது. தாமான் நெகார வனத்தில் இருக்கும் ஒவ்வொரு பழங்குடி பெண்ணும நீலிதான். மலைக்காடானா தாமான் நெகாரா தினமும் மழைப்பூக்களை தூவி அசல் மனிதர்களை ஆசீர்வதித்தபடியே உள்ளது.
நன்றி: மலைகள் ஆகஸ்ட் மாத இதழ்..
http://malaigal.com/?p=8881
நன்றி: மலைகள் ஆகஸ்ட் மாத இதழ்..
http://malaigal.com/?p=8881
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக