வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உலகின் மிகப்பெரிய தீவுக்கூடம் 3

ராத்து போகோ கோயில் 



ராத்து போகோ சண்டியும் இந்திய கோயில்களின் வடிவமைப்பு சாயல் இருந்தாலும் அது இஸ்லாமிய வரலாற்று கதையைப் பேசக்கூடியதாக இருக்கிறது. அந்தச் சண்டியின் வாயில் மட்டுமே ஒரு மேடை போல மிஞ்சியிருக்கிறது. இரவில் உணவுக்குப் பின் அந்தச் சண்டியைக் குறித்த வரலாற்றை நாடகமாக நடித்துக் காட்டுகிறார்கள். ராமாயணம், மகா பாரதம் ஆகிய புராணக் கதைகளை நம்பும் அளவுக்கு இந்தக் கதையையும் நம்புகிறார்கள் ஜோக் ஜகார்த்தா மக்கள்.  அதுவும் ஒரு சுவாரஸ்யமான ஒரு கதைதான்.

மத்திய ஜாவா தீவில் ‘wonosegoro’ என்ற அரசும் ‘pengging’ என்ற அரசும் இருந்தன. ‘wonosegoro’ - வை ஆட்சி செய்தவன் போகோ மன்னன். ‘pengging’ –கை ஆட்சி செய்தவன் பிரபு டமார்மாயோ என்பவன். இவனின் மனைவி தேவி சந்ராவதி.  பேரழகி அவள். அந்த அழகியின் மேல் பிரபு போகோ ஆசைகொள்கிறான். அதை அறிந்த பிரபு டமார்மாயோ, போகோ சாம்ராஜியத்தின் மீது போர் தொடுக்கிறான். அதில் டமார்மாயோ மன்னன் கொல்லப்படுகிறார். தன் கணவன் கொல்லப்படுவதை ராணி சந்ராவதியும் மகனும் இளவரசனுமான போண்டோவோசோவும் பார்த்துவிடுகிறார்கள்.
தன் கணவனைக் கொன்றவனைப் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தன் மகனிடம் ராணி சந்ராவதி வாக்கு பெறுகிறாள். அந்தச் சத்தியத்தை நிறைவேற்ற போண்டோவோசோ மாயவித்தைகளையும் போர்க் கலைகளையும் பயின்று அதில் வல்லவனாகிறான். பிறகு சமயம் பார்த்து போக்கோ மன்னனை கொன்று விடுகிறான்.

அதே வேளையில் போக்கோ மன்னனின் மகள் ரோரோ ஜொங்ராங் மீது போண்டோவோசோ இளவரசன் காதல் வயப்படுகிறான். ஆனால், தனது தந்தையைக் கொன்றவனின் காதலை அவள் நிராகரிக்கிறாள். அந்தக் கால நியதிப்படி போரில் தோல்வியடைந்த மன்னர்களின் அனைத்துச் சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி இளவரசி ஏற்கனவே இளவரசன் போண்டோவோசோவிற்குச் சொந்தமானவளாகிறாள்.

அவனின் காதலை நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்திற்கு எப்படியாவது தடை போட வேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியாக இளவரசன் போண்டோவோசோவுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறாள்.

ஒரே இரவில் 1,000 சண்டிகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. போண்டோவோசோ இளவரசன் அந்த நிபந்தனையை ஏற்றுப் பூதங்களின் உதவியுடன் 999 சண்டிகளைக் கட்டி முடித்திருந்தான். ஆயிரமாவது சண்டியை கட்டுவதற்குத் துவங்கிய வேளையில் இளவரசி சூழ்ச்சி வலையைப் பின்னுகிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களைத் திரட்டி கிழக்குத் திசையில் சென்று பெரிய அளவில் தீயை மூட்டச் சொல்கிறாள். மேலும், விடியலை வரவேற்கும் பொருட்டுத் தங்கள் வீட்டு உரல்களில் அரிசியைக் குத்த சொல்கிறாள். பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தச் சாம்ராஜ மக்களின் வழக்கமாகும்.

கிழக்குத் திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பித்தன. இதனால் குழப்பமடைந்த பூதங்கள் விடிந்துவிட்டது என்று கருதி இறுதி சண்டி முடிவடையும் முன்பே போய்விடுகின்றன. இளவரசியின் இந்தச் சூழ்ச்சியை அறிந்துகொண்ட இளவரசன் “கடைசிச் சண்டியின் மூலக்கல்லாகப் போய்விடு” என்று இளவரசிக்குச் சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகிறாள்.

அந்தச் சிலைதான் பிராம்பனான் கோயிலின் ஒரு பகுதியில் இருக்கும் மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஜோக்ஜகார்த்தா மக்களில் சிலர் நம்புகிறார்கள். மேலும், ஜோக் ஜகார்த்தா முழுதும் இருக்கும் பல சண்டிகள் போண்டோவோசோ இளவரசனின் கட்டளையின் பேரில் பூதங்கள் கட்டியவைதான் என்றும் கூறுபவர்கள் உண்டு. அதனால்தான் இந்தக் கோயில்கள் அனைத்தும் அடங்கிய பகுதியை, ‘சண்டி ரோரோ ஜொங்கராங்’ என்று அழைக்கப்படுவதாகவும் ஜோக் ஜகார்த்தா மக்கள் நம்புகிறார்கள்.


5 கருத்துகள்: