சிதைந்த கட்டடச்
சுவரில் சாம்பற்
பறவை
(தொடர் 2 )
இப்படித்தான் இலங்கை மண் என்னை வரவேற்று என் முதல் நாளைத் தொடக்கிவைத்தது.
யாழினியும், றஞ்சியும் சொன்னார்கள், புதிய மாதவி காலையில்தான் வந்தார்; இப்போது உறங்கிக்கொண்டிருக்கிறார் என்று. எனக்குப் புதிய மாதவி (மா) மீது அதிக ஈடுபாடு உண்டு. அவரின் ‘திறந்திருக்கும் முதுகுகள்' என்ற கதையின் மூலம் என்னை வெகுவாக ஈர்த்தவர். ( அந்தக் கதையை படித்து பல ஆண்டுகள் ஆனாலும், அதன்பிறகு அவர் பல கதைகள் எழுதிவிட்டாலும் ‘திறந்திருக்கும் முதுகுகள்' என்ற கதையே இன்னும் என் நினைவில் நிற்கிறது.)
றஞ்சி என் கையைப் பிடித்தவாறே வாகனத்திற்கு அழைத்துச் சென்றார். எங்கள் மூவரின்
முகத்திலும் புன்னகை குறையவே இல்லை. நீங்கள் வந்து சேர்ந்ததை வீட்டாருக்குச்
சொல்லிவிடுங்கள் என தனது அலைபேசியைக் கொடுத்து றஞ்சி கூறினார். நான்
அழைத்துக்கூறுகிறேன் என்றேன். முதல் சந்திப்பு, பலநாள் பிரிந்திருந்த உயிர் நண்பர்கள்
இணைந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. எனக்கு 100 சதவிகித நம்பிக்கை வந்தது.
நான் போய் இறங்கியது கொழும்பில் உள்ள றஞ்சியின் மாமாவின் வீடு. அது அழகான 80-களின் சாயல் மாறாமல் இருந்தது.
வீட்டுப் பொருள்கள், அவை
வைக்கப்பட்டிருந்த டிசைன் எல்லாம் மேல்தட்டு சாயல் கொண்டது. பிறகுதான் றஞ்சி
சொன்னார், அவரின் மாமா
வெளிநாடுகளில் வேலை செய்தவர் என்று. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் புதிய மாதவி
உறங்கிக்கொண்டிருந்தார். நான் வந்த பிறகு அவர் எழுந்துகொண்டார். நான் அவரை
முதல்முறையாகப் பார்த்தேன். மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி. அதை அவர் உணர்ந்திருக்க
மாட்டார். என்னை அணைத்து வரவேற்றார். மேலும் (அண்ணன்) ஆதவன் தீட்சண்யா, உங்களை பார்த்துக்கொள்ளச்
சொல்லியிருக்கிறார் என்றார், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அன்றே நாங்கள் மலையகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்தது. மேலும் வழக்கறிஞர்
ரஜனி, ஓவியா, ச.விசயலட்சுமி, நர்மதா ஆகியோர் ஏர்போட்டில்
வந்திறங்கியவுடன் அனைவரையும் அப்படியே அழைத்துக்கொண்டு மலையகத்திற்குப்
புறப்படலாம் என்பது திட்டம். இதில் ரஜனி தனியே வர, மற்ற மூவரும் ஒரே விமானத்தில்
வருவதாகச் சொன்னார்கள். நான், யாழி, புதிய மாதவி, றஞ்சி ஆகியோர் குளித்து கிளம்பி
மதிய உணவு உண்ணச் சென்றோம்.
எனக்கு அங்குதான் சிக்கலே தொடங்கியது. நான் உணவை
வெளுத்துக்கட்ட, சற்றும் பொருத்தம் இல்லாத ஆள். ரொம்பவும் தேர்ந்தெடுத்து உண்பேன்.
இலங்கையின் உணவு குறித்த பிரக்ஞை எனக்கு நிறையவே இருந்தது. அவர்களின் உணவுப் பழக்க
வழக்கங்கள் குறித்து படிக்கும்போதும் பேசும்போது, எனக்கு அது உவப்பில்லாத
விஷயமாகவே இருந்தது. ஒரு வாரத்திற்கு பழங்கள் கிடைத்தாலே போதும், வண்டியை ஓட்டி விடலாம் என்று
நினைத்தேன். அதோடு அங்குள்ள உணவு பழக்க வழக்கம் ஒத்துவராது; பேதி மாத்திரைகளை கூட இங்கேயே
வாங்கிச் செல்லுங்கள்; காரணம் அங்குள்ள
மாத்திரைகளும் நமக்கு ஒத்துவராது என்று நண்பர்கள் எச்சரித்திருந்தனர். எனக்கு
அதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை. எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற
தைரியத்தில் வந்துவிட்டேன். அந்தச் சமயத்தில்தான் புதிய மாதவி றஞ்சியிடம் சொன்னார், றஞ்சி சாதாரணமாக நாங்கள் சாப்பிடும் உணவுகள் எங்களுக்கு வேண்டாம். இங்கே பாரம்பரிய உணவு என்ன? அதைக்கொடுங்கள். அதைத்தான் நாங்கள் சுவைக்க வேண்டும் என்றார். என் மனநிலை இன்னும் மோசமானது. ஆனால், முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு மேல்தான் றஞ்சியின் இன்னொரு மாமா வீடு இருந்தது. அவர்தான் எங்களை ஏர்போட்டிற்கும் வீட்டிற்கும் சிரமம் பார்க்காமல் அழைத்துப் போய் வந்துகொண்டிருந்தார். அந்த மாமா வீட்டில்தான் எங்களுக்கான மதிய உணவு தயாரிக்கப்பட்டிருந்தது.
உணவுகுறித்துக் கூறுவதற்கு முன், மாமாவைப் பற்றியும் அவரின் துணைவியார் பற்றியும் கூறியே ஆகவேண்டும். மாமா மிகவும் சுவாரஸ்யமானவர். செம்ம ஜாலியானவர். "என்ன மலேசியா" என்று என்னையும், "என்ன சுவிஸ்" என்று றஞ்சியையும், "என்ன பம்பாய்" என்று புதிய மாதவியையும் கலாய்த்துக்கொண்டிருந்தார். நாட்டின் நிலவரம் முதல் எங்களின் அறிமுகம்வரை அவரின் பாணியில் மிகச் சாதாரணமாக உரையாடினார். அவர் வயதானவர் என்றாலும், அதைக் கொஞ்சமும் தன் முகத்திலும், உடலிலும் காட்டவில்லை. வீட்டிற்கு வந்திருக்கும் எங்களை அவரின் முக்கிய விருந்தாளிகளாக அத்தனை மரியாதையாக நடத்தினார். இந்தப் பண்பு என்னை வியக்கவைத்தது. நானும் அவரை மாமா என்றே அழைத்தேன்.
அவரின் துணைவியார் செய்திருந்த உணவு கமகம வாசத்தை கொடுத்தது. குத்தரிசி என்ற சிவப்பு நிற அரிசி சாதம், சம்பா அரிசியில் சாதம், பருப்பு, பீட்ரூட் பிரட்டல், மாங்காவில் கெட்டி குழம்புபோல் ஒன்று, உருளைக்கிழங்கு பிரட்டல், முருங்கைக் கீரை பிரட்டல், அப்பளம் என பார்ப்பதற்கே எனக்கு எச்சில் ஊற ஆரம்பித்தது. எனக்கு பழக்கம் இல்லாத உணவில் துணிந்து கையை வைக்க மாட்டேன். ஆனால், அந்த உணவைப் பார்த்ததும் பழக்கம் இல்லை என்றாலும் சாப்பிட மனம் விரும்பியது. அந்த உணவில் இருக்கும் சத்துக்கள் குறித்து அந்த வீட்டு அம்மா கூறினார்.
உணவின் ருசியைவிட அந்த அம்மாவின் அன்பு இன்னும் சுவை கூடியதாக இருந்தது . என் பெரியம்மா எனக்கு எப்படி உணவு பரிமாறுவாறோ அப்படி இருந்தது அவரின் கவனிப்பு. ஆனால், சாதத்தைத் தவிர எல்லா பதார்த்தமும் அவ்வளவு காரம். பிறகுதான் தெரிந்தது இலங்கையில் காரம் அதிகம் சேர்ப்பார்கள் என்று. ஆனால், நான் அந்த உணவுகளை விரும்பிச் சாப்பிட்டேன். உணவுக்குப்பிறகு அங்கிருந்த கிளம்பினோம். மாமா அவரின் நண்பர் ஒருவரோடு எங்களை மலையகத்திற்கு அழைத்துச் செல்வதாக திட்டம். முதலில் ஏர்போர்ட் சென்று, அங்கே ரஜனி, ஓவியா, நர்மதா மற்றும் ச.விஜயலட்சுமி ஆகியோரை கூட்டிக்கொள்ள வேண்டும்.
ரஜனி வந்து
இறங்கும் நேரம் நெருங்கவே அவரை வரவேற்க்க நாங்கள் அங்கு இருக்க வேண்டும் இல்லையா?
மாமா விரைவாக போய்க்கொண்டிருந்தார். ஆனால்,
சாலையில் அதிக வாகன நெரிசல் இருந்தது. றஞ்சி பதற்றமாகக்
காணப்பட்டார். அதே வேளையில் ரஜனியின் துணிகரமான செயற்பாட்டையும் கூறிக்கொண்டே
வந்தார். எனக்கு அவரைக் குறித்தான பிம்பம் எழத்தொடங்கியது. நாங்கள் ஏர்போர்ட்டை
அடைந்த நேரம், பயணிகளை வரவேற்க வாயிலின்
ஓரத்தில் இருக்கும் புத்தத் திருத்தலத்தில் காக்கைகள் பறந்த வண்ணம் இருந்தன.
எனக்கு அந்த புத்தர் சிலை ஒரு வகையான நிம்மதியை கொடுத்தது. றஞ்சி ரஜனியை
கூட்டிவந்தார். அவ்வளவு எளிமையான ஒரு மனிஷயை நான் எதிர்பார்க்கவேயில்லை.
என்னைப்போன்றே உயரம் கொண்ட, ஓர் ஆளுமை.
இதுதான் யோகி என அறிமுகப்படுத்தினார் றஞ்சி. ரஜனி கட்டி அணைத்து
அறிமுகமாகிக்கொண்டார். நான் ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை. யாழினிக்கு
எல்லாரிடத்திலும் முன்பே ஓர் அறிமுகம் இருந்ததால் அவள் உரிமையோடு
பேசிக்கொண்டிருந்தாள். நாங்கள் ரஜினிக்கு உண்பதற்கு உணவு வாங்க ஏர்போர்ட் அருகில்
இருக்கும் ஒரு சிங்கள உணவுக்கடைக்கு போனோம். றஞ்சி அழகாக சிங்களம் கதைத்தாள். அவர்
பேசும்போது நான் அவரின் முகத்தையேப் பார்த்தேன். அது வசீகர முகம். அங்கே இருந்த
பலகாரங்களில் ஒன்றுகூட மலேசியாவில் பார்த்ததில்லை. உனக்கு ஏதாவது வேண்டுமா என்று
ரஞ்சி கேட்டார். வேண்டாம் என்றேன். பிறகு ஓவியா, நர்மதா
மற்றும் ச.விஜயலட்சுமி ஆகியோரும் வந்து சேர்ந்தனர். நாங்கள் மலையகத்திற்கு பயணத்தை
தொடங்கியபோது மாலையாகியிருந்தது.
இடையில், ஓரிடத்தில்
(சிங்கள உணவகத்தில்) தேனீர் அருந்தினோம். சும்மா சொல்லக்கூடாது எல்லா இடங்களிலும்
தேனீர் அருமையாக இருந்தது. நான் ஒரு தேனீர் பிரியை என்பதால்,
தேனீர் என்னை ஏமாற்றவில்லை. அப்போதுதான் ஒன்று விளங்கியது,
உலகின் உயர்ரக டீ என்று ஏன் இலங்கையை சொல்கிறார்கள் என்று.
மாலை 7 மணிக்கெல்லாம் இரவு 9 மணிபோல்
இருட்டிவிடுவதால் மலையக பயணத்திற்கான சுற்றுவட்டார அழகை ரசிக்கமுடியவில்லை. பனி மெல்ல வாகனத்தின் உள் படர தொடங்கியது.
(தொடரும்..)
பதிலளிநீக்குமிக இயல்பான மொழி நடையில் ரசிக்கும் படி எழுதி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்!.
YOU ARE A GREAT STORY TELLER..PUBLISH THIS AS A BOOK!
பதிலளிநீக்கு