வெள்ளி, 15 மே, 2015

மௌனம் உறைந்த தேசம் 7

சிதைந்த கட்டடச் சுவரில் சாம்பற் பறவை

தொடர் 7


கழிப்பறைக்குப் போனேன். அங்கே விளக்கோ தண்ணீரோ இல்லை. தண்ணீரை ஒரு வாளியில் கொண்டுச் செல்ல வேண்டும். ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் வசதிகள் இவ்வளவு குறைவாக இருக்கிறதே என்று நினைக்க தொடங்கினேன். என்னால், என்ன செய்திட முடியும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு மாறுதல் வந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும் என தோன்றியது. வெளியில் வந்து மலையை வெறித்து பார்த்தபடி இருந்தேன். கண்ணுக்கெதிரே ரயில் என்னைத் தாண்டிச் சென்றது. அன்றைய நாளும் நிகழ்வும் இப்படியாக முடிவுக்கு வந்துக்கொண்டிருக்க பொழுது மெல்ல இருட்ட தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் பார்வையாளர்கள் அனைவரும் தங்களின் அன்பைப் பகிர்ந்துக்கொண்ட படியும் புகைப்படங்கள் எடுத்தப்படியும் இருந்தனர். பலருக்கு நிகழ்ச்சியைக் குறித்து கருத்து பரிமாற நிறைய விஷயங்கள் இருந்தன. கும்பல் கும்பலாக பேசிக்கொண்டும் விடைபெற்றுக்கொண்டும் மெல்ல கூட்டமும் நிகழ்ச்சியும் கலையத்தொடங்கியது. அன்றைய நாளை இன்னும் மகிழ்ச்சிகரமாக விடைகொடுக்க கிங்ஸ்லி-சந்திரலேகா வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கியிருந்த தங்கும் விடுதியின் எதிர்புறம் ஒரு மேட்டின் மீது ஏறி கிங்ஸ்லி வீட்டிற்குச் செல்ல வேண்டும். கிட்டதட்ட 20 நிமிடங்கள் நடந்தால் அவரின் வீட்டிற்குச் செல்லலாம். வனத்தின் ஊடாக ஒத்தயடிப்பாதையில் செல்ல வேண்டும். மழை பெய்த இரவு. நிலா வெளிச்சம் மங்கலாக இருந்தது. நான், றஞ்சி, ச.விஜயலெட்சுமி அம்மா, தோழி லறினா அவர் குழந்தைகள், புதிய மாதவி, ரஜனி, யாழினி, பிறெளவ்பி, விஜயா, தினக்குரல் பத்திரிகை நிருபர் ஒருவர், ஶ்ரீ என அனைவரும் அவர் வீட்டிற்குப் போனோம். எஸ்டேட் சாயலில் இருந்த வீடு அது. வாசலில் அழகிய பூந்தோட்டம் இருந்தது. பெரிய வேலைபாடுகள், அலங்காரம் இல்லாத வீடு அவர்களுடையது. ஆனால், அந்த வீட்டில் கணவன் –மனைவி அந்நியோனியமும் பிள்ளைகள்-பெற்றோர்கள் புரிந்துணர்வும் நிறைந்திருந்தது. கிங்ஸ்லி முகத்தில் மலரும் சிரிப்பு நிரந்தரமானவையாக இருந்தன. சந்திரலேகா அதே பொறுப்புணர்ச்சியுடன் எங்களுக்காக சமைத்துக் கொண்டிருந்தார். மலையகத்தின் கடைசி இரவு எனக்கு உற்சாகமானதாக அமைந்திருந்தது. பாடல்களைப் பாடினோம்.. ஆடினோம். அந்நிய மண்ணில் இருக்கிறேன் என்ற பிரக்ஞையற்று சொந்தங்களோடு இருக்கிறேன் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த நம்பிகையை மலையக மண் இவ்வளவு எளிதில் பெற்று தந்ததும் ஆச்சரியமான விடயம்தான். நான் முதல் நாளிலிருந்து இன்று வரையிலான சம்பவங்களை மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்தி கொண்டேன். நான் ஓர் இரு வார்த்தைகள் இலங்கை தமிழர்கள் மாதிரி கதைக்கவும் தொடங்கியிருந்தேன். அது இயல்பாகவே வந்தது. விருந்து முடிய நள்ளிரவில் விடுதிக்குத் திரும்பினோம். யாருக்கோ அட்டை கடித்துவிட எல்லாரும் உஷார் ஆனோம். அனைவருமே அட்டை ஏறியிருக்கிறதா என்று பார்வையிடும்போதே புதிய மாதவிக்கு காலில் அட்டை ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. கொஞ்சம் வெடவெடுத்து போய்விட்டார் அவர். புதிய மாதவி ஒரு குழந்தையைப் போல காணப்பட்டார். அப்போது 'அப்படியே அட்டையைப் பிடுங்கினால் ரத்தம் நிக்காது' என்று லறினா சொன்னார். அட்டை உள்ள இடத்தைச் சுற்றி சவர்க்காரம் தடவிவிட அட்டை தானே விழுந்தது. அட்டை தொல்லை இருக்கும் இடத்தில் இது நல்ல டிப்ஸ் அல்லவா..
விடிந்ததும் யாழ்பாணம் போவதற்கு நாங்கள் முடிவெடுத்திருந்தோம். இந்தப் பயணத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கம் யாழ்பாணம் போவதுதான் என்று எனக்குத் தோன்றியது. இந்தக் கட்டுரையை எழுத தொடங்கிய காலத்திலிருந்து இந்த இடத்திற்கு எப்போது வரபோகிறேன் என்ற தவிப்பும் எனக்கு இருந்தது. யாழ்பாணம் பயணத்தைத் தொடங்குவதற்கு முன், மலையகத்தில் வசிக்கும் தோழி ஶ்ரீ-தினகரன் வீட்டில் காலை உணவும், தோழி லறினா வீட்டில் மதிய உணவும் உண்பதற்கு தோழிகள் அன்பு கட்டளை இட்டிருந்தனர். மறுக்க முடியாத பாச சங்கிலியை உடைக்க முடியாததால், யாழ்பாணம் போய் சேர நள்ளிரவு ஆகும் என தெரிந்தும் ஏற்றுக்கொண்டோம். தோழி ஶ்ரீயும்-தினகரனும் மலையக பாரம்பரிய உணவுகளை எங்களுக்காக தயாரித்திருந்தனர். அவர்களின் வீடு மலையக குடியானவர்களின் வீடு போல இல்லை என்றாலும் அந்தக் கலாச்சாரம் மாறாமல் இருந்தார்கள். வீட்டில் இன்னும் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. தோழர் தினகரனின் அம்மா, சேலையோடுதான் வீட்டில் இருந்தார். அதே திடகாத்திரத்துடன் சுழன்றுக்கொண்டிருந்தார். எங்களுக்குக் கொடுத்த உணவில் தோழர் தினகரன்-தோழி ஶ்ரீ, அவர்கள் குடும்பத்தார் காட்டிய அக்கறையே பிரதானமாக இருந்தது. அந்தச் சுவை இன்னும் என் மனதில் மறக்க முடியாதவையாக இருக்கிறது. தோட்டம் சார்ந்த வேலையைச் செய்யவில்லை என்றாலும் தோட்டப்புற வாழ்கையோடுதான் அவர்கள் தினசரி இருந்தது. தோழர் தினகரன் வீட்டைச்சுற்றி அழகிய பூந்தோட்டமும், பழத் தோட்டமும் அதில் வந்தமரும் பறவைகளும் அதிகமாக இருந்தது. தோழர் தினகரன் எங்களின் வருகையை புகைப்படம் எடுத்தவாறே இருந்தார். பின், நாங்கள் ஒரு குழுப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம். யாழ்பாணம் போகும் சாலையை சந்திப்பில்தான் தோழி லறினாவின் வீடு இருந்தது. லறினா ஒரு தைரியமான பெண். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இஸ்லாம் மார்க்கத்துக்குக் கட்டுப்பட்டவர். அதன் அடிப்படையிலேயே வாழ்ந்து வருகிறார். தனது கருத்தினை தனது மார்க்கத்தைக் கொண்டே போட்டுடைக்கிறார். வெளிச்சத்துக்கு வர வேண்டிய படைப்பாளி இவர். புத்தகங்களும் வெளியிட்டுள்ளார். லறினாவைப் போன்றே அவரின் மாமி-மாமா மிகவும் இயல்பானவர்கள். நாங்கள் வீடு போய் சேர்வதற்குள் சமைத்து முடித்து பரிமாற காத்திருந்தனர். லறினா தனது மாமனாரை அப்பா என்றுதான் அழைக்கிறார். அவர் எங்கள் வருகைக்காக காட்டிய ஆர்வம் இருக்கே. அது எனக்கு இப்பவும் ஆச்சரியம்தான். மனிதம் மட்டுமே நான் பார்த்த மக்களிடத்தில் இருந்தது. அங்கு மதத்தையோ, வேறுபாட்டையோ பார்க்கவே இல்லை. மேலும் லறினாவைப் போன்று வெளிப்படையாக தனது கருத்தினை முன் வைக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சவால்கள் இங்கு சொல்லி தெரியவேண்டியது அல்ல. லறினாவின் புகுந்த வீடு அவருக்கு தூண் போல் நிற்கின்றனர். மலேசியாவில் இம்மாதிரி ஒரு இந்திய முஸ்லிம் பெண்ணை நான் பார்த்தே இல்லை. சுவையான உணவோடு, கொஞ்சம் இளைப்பாறி பயணத்தைத் தொடர்ந்தோம். யாழ்ப்பாண வாழ்க்கையையும், அங்கு சந்தித்த மனிதர்களும் என் வாழ்கையில் என்று மறக்க முடியாது. அங்கு போவதற்கான தொடக்க பயணம் மிகவும் கொண்டாட்டமாக தொடங்கியது. ஆனால், போகப்போக அது கொண்டாட்ட மனநிலையிலிருந்து விடுபட்டு, ஒருவித பயம் மட்டுமே இருந்தது. போய் சேர்ந்தால் போதும் என்ற நிலை அது. பதற்றநிலை வாகனத்தை ஓட்டி போன ஓட்டுனர்களுக்கு இருந்ததா என தெரியவில்லை. றஞ்சிக்கும் யாழினுக்கும் அவர்களை நம்பி வந்த எங்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்ற தவிப்பே அதிகம் இருந்தது. அந்த தவிப்பு அவர்களையும் அறியாமல் ஊமை பாஷையில் பேசியது. அதை நான் கேட்டுவிட்டேன்.

(தொடரும்)
கிங்ஸ்லி -சந்திரலேகா  வீட்டில் 

கிங்ஸ்லி -சந்திரலேகா  வீட்டில் 

மலையகத்தில் 

தோழர் தினகரன்-ஸ்ரீ வீட்டில் 


தோழர் தினகரன் தயார் 

தோழி லறீனா இல்லத்தில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக