‘கடாரம்' ராஜேந்திர சோழனுடையதா? 2
-யோகி
சோழனின் பொக்கிஷங்கள் மறைக்கப்பட்டனவா? அழிக்கப்பட்டனவா?
நான் அப்படி நினைத்தற்கு வழுவான காரணங்கள் உண்டு. காரணம், நான் இந்தேனேசியாவின் ஜோக் ஜகார்த்தாவுக்குச் சென்று வந்து இரு மாதங்கள்தான் ஆகின்றன. ஓர் இஸ்லாம் நாடான அங்கு, இந்து மதத்தையும் பௌத்த மதத்தையும் அவர்கள் ஆழமாக நம்பவே செய்கின்றனர். சோழர்களோ, பல்லவர்கள்களோ, பாண்டியர்களோ எந்த மன்னரின் பதிவையும் அல்லது அடையாளத்தையும் அவர்கள் அழிக்கவில்லை. பல முறை எரிமலைக்கும், நிலநடுக்கத்திற்கும் இடிந்து விழும் சீட்டுகட்டு மாளிகையைப்போல் அடையாளம் தெரியாமல் சிதைந்தாலும், மீண்டும் மீண்டும் புதுப்பித்தே வருகிறார்கள். அவர்களுக்கு சோர்வு தட்டவில்லை. அகழ்வாராச்சி அவர்களுக்கு தெவிட்டவில்லை. மின்சாரம் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அங்கிருக்கும் கற்சிலைகளுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்றஞ்சி அவ்வரசாங்கம் மின்சார வசதியையும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. தேவைக்கேற்ப மிக அறிதாக பயன்படுத்தியிருக்கும் மாற்று கற்களுக்குக்கூட இது போலிஎன அடையாளம் வைக்கிறார்கள். ராமாயணத்தை போற்றுகின்றனர். வார வாரம் ராமாயண நாடகங்கள் அரங்கேற்றப்படுகிறது. பாத்திரத்தை ஏற்றவர்கள் இந்துக்களாக இருக்க வேண்டிய கட்டாயத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டு கலை(ற்)ச்சிற்ப்பங்கள் அனைத்தும் அந்த 9-ஆம் நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டவையாகவே இருக்கின்றன. அங்கு சில வரலாற்று முரண் இருப்பதாக தோன்றினாலும், அங்கு வரலாறுகள் வரலாறுகளாகவே பார்க்கப்படுகின்றன; மதிக்கப்படுகின்றன.
ஆனால், பூஜாங் பள்ளத்தாக்கு சண்டிகள் அதற்கும் முந்தவையாக, அதாவது 5-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அது சோழனுடையதுதானா என நான் கேள்வி எழுப்புவதற்கு வழுவான காரணமாக, உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம் என நினைக்கிறேன். சோழர்கள் இயற்கையிலேயே கலை அம்சம் கொண்டவர்கள். அவர்கள் கட்டிய கோயில்களும் மண்டபங்களும் அதற்கு சான்றுகளாக விளங்குகின்றன. ஆனால், பூஜாங் பள்ளத்தாக்கு கொண்டிருக்கும் சண்டிகள் எந்தக் கலையம்சமும் கொண்டதல்ல. அவை வெறும் கற்குவியலாகவே காணப்படுகின்றன.
பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தில் சோழர் கால கட்டட கலை அம்சம் என்றும் பல்லவர் கால கலை அம்சம் என்றும் கூறப்படுவதற்கு அகழ்வாதாரக் புகைப்படங்கள் கூட உறுதிசெய்யவில்லை. இதனால், அதன் உண்மை நிலை நிறுபிக்கப்படாமலே இருப்பது வருத்தத்துக்குறியது. மூவாயிரம் ஆண்டுக்கு முந்தய பொருள்கள் என்று அங்கு சேமிப்பில் இருக்கும் பொருள்கள் எதுவும் சோழனையோ அல்லது பல்லவனையோ நிலைநிறுத்துவதாகவும் நியாபகப்படுத்துவதாகவும் இல்லை.
இங்கே வேடிகையான விஷயமாக எனக்கு படுவது, அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட கோயில்களான அங்கோர் வாட், பிரம்மனன் உட்பட ஐந்த நாடுகளில் சோழர்கள் கட்டியதாக நம்பப்படும் பல சண்டிகளை பூஜாங் பள்ளத்தாக்கு சண்டிகளோடு ஒப்பிடுவதுதான். வெளிநாடுகளில் இருக்கும் அந்தக் சண்டிகளை சோழர்கள்தான் கட்டினார்கள் அல்லது கட்டியிருப்பார்கள் என்று நம்புவதற்கு சிலகாரணங்கள் காணக்கிடைக்கின்றன. குறைந்த பட்சம் சுவரோவியங்கள் போன்றவை அதற்கு சான்றாக அமைகின்றன. கடாரத்தின் பூஜாங் பள்ளத்தாக்கில் அப்படியான அடையாளங்கள் எங்கே? கடாரம் வந்த சோழனுக்கு கலை தெரியாதா? அல்லது திட்டமிட்டே கலைவடிவத்தை விடிக்காமல் போனானா? அல்லது அடையாளங்கள் அழிக்கப்பட்டதா?
நான் தேடிவந்த சோழனின் அடையாளங்கள் கிடைக்காததால் பலகுழப்பங்கள் என்னுள் சூழதொடங்கின. இதை நீட்டித்தால் என் தேடலுக்கு பங்கம் வரும் என எண்ணி, அகழ்வாராய்ச்சி விஷயத்தில் மிகத்தீவிரமான பார்வைக்கொண்டிருக்கும் சகோதரன் நவீன் செல்வங்கலையை அழைத்தேன். சோழனின் அடையாளங்கள் இங்கு இல்லையே? அவனின் அடையாளங்களை எங்கு பெறுவது என்றேன். அவரிடமிருந்து எனக்கு வந்த குறுஞ்செய்தி அங்கிருக்கும் அருங்காட்சியகத்தின் நிலையை நன்றாகவே எனக்கு புரிய வைத்தன.
இந்தக் கூற்றை பல சான்றுகளோடும் அகழ்வாராய்ச்சி குறிப்புகளோடும் நவீன் செல்வங்கலை முன்வைத்தார். இருந்தபோதிலும், ஜெராய் மலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுப்புதையலில் மிஞ்சியது இதுதானா? இந்தியாவின் வடக்கு பகுதியான கங்கை வரையும், தெற்கு கடல் கடந்த கடாரம் வரை ஆட்சி புரிந்த எம் சோழனின் பொக்கிஷங்கள் திட்டமிட்டே மறைக்கப்பட்டனவா? அல்லது அழிக்கப்பட்டனவா? அல்லது இன்னும் புதைந்து கிடக்கிறதா?
பூஜாங் சமவெளியில் சூரியன் உதிக்கும் போது அதன் ஒளிக்கீற்று வினாயகர் கோயிலின் மேல் பட்டு உதிப்பதாகவும், மறையும் போது அம்மன் கோயிலில் பட்டு மறைவதாகவும் கூறப்படுகிறதே. அது வெறும் கட்டுகதையா? நெருப்பில்லாமல் புகையாது அல்லவா? ‘Deprecated area'-என அரசு அறிவித்துள்ள ஜெராய் மலை பகுதிகளில் இன்னும் எம் சோழனின் அடையாளங்கள் புதைந்துக்கிடக்குமா?
(தேடல் தொடரும்)
Samething in India/Pakistan/SL! They Try to hide or twist the history!
பதிலளிநீக்கு