வியாழன், 11 நவம்பர், 2021

அமானுஷ்யமும் பில்லா அரண்மனையும்…

 

அண்மையில் ஒரு செய்தி காதில் எட்டியது. தெலுக் இந்தானில் உள்ள பேராக் சுல்தானின் பாழடைந்து பழுதடைந்து கிடந்த பழைய அரண்மைனை தனியாருக்கு விற்கப்படபோகிறது என்று. அது வதந்தியாககூட இருக்கலாம். ஆனாலும் அது உண்மையென்றால்? நான் என்னையே கேட்டுகொண்டேன். சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மையை அறிய முடியவில்லை. இஸ்தானா ராஜா மூடா என்று அழைக்கப்படும் பழைய அரண்மனை பாழடைந்து இருந்தாலும், அதன் எச்சம் இருக்கும் வரை வரலாறு பேசும் தானே? சில முக்கிய வரலாறுகளை தமிழில் கொண்டு வரவேண்டும் என்று எங்களின் சிறிய குழு எடுத்திருக்கும் முயற்சியை இன்னும் துரிதப் படுத்த வேண்டும் என நான் முனைப்போடு இருக்கிறேன். அழிப்பது ரொம்ப சுலபம். ஆனால், படைத்தல் அப்படி இல்லையே.

இஸ்தானா ராஜா மூடா  அரண்மனையை போன்றே பேராக்கில் வரலாறு பேசும் மற்றுமொரு அரண்மனைக் குறித்து நிறையபேர் அறியவில்லை. அது  பில்லா அரண்மனையாகும். உண்மையில் பில்லா அரண்மனை என்பது ஒரு மாளிகை. ராயல் மாண்டெய்லிங் குடும்பமான  ராஜா பில்லாவைச் சேர்ந்தது. பில்லா அரண்மனை மாண்டேலிங் கட்டிடக்கலை கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. இது "மாண்டேலிங் மேன்ஷன்" என்றும் அழைக்கிறார்கள். மாண்டேலிங் என்பது இந்தோனேசியாவின் சுமத்ராவின் வடக்குப் பகுதியிலிருந்து வரும் ஒரு பாரம்பரிய கலாச்சாரக் குழுவாகும். அங்கிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழில் முனைவர்களும் புலம்பெயர்ந்தோரும் சிலாங்கூர் மற்றும் பேராக் பகுதிகளில் குடியேறினர்.

ராஜா பில்லா ஒரு 'பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க நபர்'. பேராக்கின் பாப்பானில் 1896 இல், ஒரு மலையின் உச்சியில் அவர் இந்த மாளிகையின் கட்டுமானத்தை நிறைவு செய்தார்.  இந்த மாளிகை அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது. அந்த அரண்மனையின் பிரமாண்டம், சுமத்ராவின் அரச குடும்பத்துடன் ராஜா பில்லாவின் தொடர்புக்கு சாட்சியமாகும். பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பெருவாரியான அரண்மைனைகள்  பிரிட்டிஷ் கட்டிட கலையின் பாணியோடு கலந்துதான் இருக்கிறது. மேல்நாட்டு பாணியோடு இருக்கும் அரசர்களின் அரண்மனைகளோடு பில்லா அரண்மனை சற்றுமாறுபட்டு இருப்பதை பார்த்த மாத்திரத்திலேயே உணரவும் முடியும்.  

பலகை மாளிகையின் வடிவமைப்பைக் கொண்டுள்ளதும் பில்லா அரண்மனையின் சிறப்புகளில் ஒன்றுதான். தரை தளத்தில் 8 மூலைகள் மற்றும் ஒரு மண்டபம் மாதிரியான தளம் உள்ளது. மாடியில் பெரிய  அறையும் ஒரு வரவேற்ப்பு அறையும் இருக்கிறது.  இந்த அரண்மனை மன்னன் பில்லாவால் திருமணங்கள், கூட்டங்கள், சந்திப்புகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. மிக முக்கியமாக, இந்த அரண்மனை சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் ராஜா பில்லாவை சந்தித்து பிரச்சனைகள் மற்றும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள ஒரு தளமாக இந்த அரண்மனை இருந்திருக்கிறது. பொதுவாக பாப்பான் நகரில் இருந்த பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு குடியிருப்பாளர்கள் அவரைப் சந்திக்க வருவார்களாம்.

மாண்டேலிங் வரலாற்றில் நிபுணரான அப்துர்-ரசாக் லூபிஸின் கூற்றுப்படி, ராஜா பில்லாவும் அவரது ஆதரவாளர்களும் பேராக்கில் குடியேற முடிவு செய்திருந்தனர். அதன் காரணமாகதான் அந்த அரண்மனையும் கட்டப்பட்டிருக்கிறது. பாப்பான் நகரில் மிகப்பெரிய கட்டிடமாக அந்த அரண்மனை புகழ்பெற்றிருக்கிறது. இருந்தபோதிலும் ஏதோ காரணத்தினால் அவரது சந்ததியினர் பலர் பாப்பானை விட்டு வெளியேற தொடங்கியிருக்கின்றனர் என்கிறார் அவர்.

2009-ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான “வர்க்கா தெராகிர்இந்த அரண்மனையில்தான் படமாக்கட்டது. அரண்மனை தளத்தில் பணிபுரிந்த படக் குழுவினர் அந்த இடத்தில் படப்பிடிப்பை மேற்கொண்டபோது பயங்கரமான ஆமானுஷ்யங்களை அனுபவித்ததை பகிர்ந்திருந்தனர். அவர்கள் படப்பிடிப்பின்போது தனியாக இல்லை என்பதை குழுவினர் உணர்ந்ததாகவும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே ஏதோ அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்ததாகவும் கூறியிருந்தனர். பில்லா அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை பாப்பான் நகரின் குடியிருப்பாளர்கள் கற்பனையாக கூறவில்லை என்றும் அவை உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்பதால் அந்த அமானுஷ்ய சம்பவங்களை அப்படியே “வர்க்கா தெராகிர்” தொடரில் பதிவு செய்துள்ளனர் என்றும் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதியிருப்பதையும் காண முடிகிறது.  “வர்க்கா தெராகிர்” தொடரின் கதாநாயகர் சரவாக் மாநில போராட்டவாதியான ரோஸ்லி டோபி (Rosli Dhoby) குறித்ததாகும். ரோஸ்லி டோபி யார் என்ற வரலாற்றை வேறொரு பதிவில் சொல்கிறேன்.  “பெனுங்கு இஸ்தானா என்ற ஆவணப்படமும் இந்த அரண்மையில்தான் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடதக்கது.



131 ஆண்டு பழமையான மர வீடுபோல் காட்சியளிக்கும் இந்த அரண்மனைக்கு அண்மையில் போயிருந்தேன். மௌனத்தில் மூழ்கியிருக்கும் இந்த அரண்மைக்கு சுற்றுலாத்துறையின் அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதோடு பாதுகாக்ககூடிய பட்டியலிலும் இந்த அரண்மனை இடம் பிடித்திருக்கிறது. என்றாலும், பார்வையாளர்கள் கண்களில் படாத இந்த அரண்மனை மேலும் அமானுஷ்யங்களை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.    

நன்றி தமிழ்மலர் 14/11/2021

“வர்க்கா தெராகிர்'' தொடர் நாடகத்தின் வரும் அந்த தேசிய போராட்டவாதியின் வரலாறு அறிய...  ஸ்கேன் செய்யுங்கள்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக