வாழ்க்கையில் எந்தப் புள்ளியில் வந்து நிற்கக்கூடாது என்று நான் ஒவ்வொருமுறையும் நினைக்கின்றேனோ , காலம் அந்தப் புள்ளியில் தான் நிறுத்தி எனக்கு வேடிக்கை காட்டுகிறது. ஒவ்வொருவரையும் வாழும் காலத்திலேயே அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதையும் சந்தப்பம் கிடைக்கும் எல்லா இடத்திலேயும் நான் வழியுறுத்திவருகிறேன். ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்பது என்னவோ மிக மிகக் குறைவுதான்.
நாம்
அன்பு செலுத்தும் ஒருவரை, கொண்டாடித் தீர்க்கும் அந்த நல்ல ஆத்மாவை குறித்து மனமுறுகி பேசுவதற்கும் எழுதுவதற்குமான சந்தர்ப்பத்தை அவர் வாழும் காலத்திலேயே ஏற்படுத்திகொள்ளாமல், அவர் இல்லாத உலகில் வெறும் எழுத்துகளால் பேசி தீர்த்துவிடுவது என்பது யாரை திருப்திபடுத்துவதற்கு?
நம்
மதிப்புகுரியவர்கள் இந்தப் பூவுலகை விட்டு விடைபெற்ற பிறகு, அவரை நினைவுக்கூற நாம் மேற்கொள்ளும் ஒருசில முயற்சிகள் நம்மை ஆசுவாசப்படுத்துவதற்கு மட்டுமே உதவும். இன்று நான் ஆசுவாசப்படுத்திகொள்ள வேண்டிய சூழ்நிலையில்தான் நிற்கிறேன்.
தோழர்
பென்ஸி முகநூல்வழிதான் எனக்கு அறிமுகமானார். மலேசிய திருநங்கை தோழர் நிஷா ஆயூப், அமெரிக்காவில் வீரப் பெண்மணிக்கான விருது பெற்றது தொடர்பான பதிவு வழிதான் எங்களின் அறிமுகம் தொடங்கியது. அவருடைய முகநூல் பதிவுகளை உற்று நோக்கும்பொழுது அது ஓர் அறிவு களஞ்சியத்திற்கான பெட்டகம். அனைத்துமே மிகத் தெளிவாகத் தரவுகளுடன் கூடிய கட்டுரைகளாகவே இருந்தது. ஒரு சின்ன விஷயத்தையும் அதன் ஆணி வேரைப் பிடித்துப் பதிவிடுவார். அது தொடர்பான கேள்விகளுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் தம் பதிவை படித்துப் பதிவிடுபவர்களுக்கு ஞாயம் செய்யும் விதத்தில் பதில் அளிப்பார்.
முகநூல்
என்பது யாரும் பார்வையாளராக வந்து போகும் ஓர் இடம்தான் என்றாலும், தம் வீட்டுக்கு வந்து போகும் விருந்தாளிக்கு கொடுக்கும் மரியாதையைத் தோழர் பென்ஸி, தம் முகநூல் பக்கத்திற்கு வருபவர்களுக்கும் கொடுக்கத் தவறியதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அல்ல அந்த உபசரிப்பு, நட்பு என்ற இலக்கணத்திற்கு அர்த்தம் தெரிந்தவர்களால் மட்டுமே அந்த மரியாதையைக் கொடுக்க முடியும்.
முகநூல்
வழியே அறிமுகமாகியிருந்தாலும், நீண்ட உரையாடல் எதையும் நிகழ்த்தாத, வெளிநாட்டில் வசிக்கும் யோகி என்ற பெண்ணை அவளின் பதிவுகள் வழியே அவளின் செயற்பாடுகளைத் தீவிரமாக அறிந்துகொண்டவர் தோழர் பென்ஸி. அந்த நட்பின் மேல் கொண்ட அறத்தை அவரேதான் உறுதியும் செய்துகொண்டார்.
பணி
நிமித்தமாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் அவரின் மகனைக் காண தோழர் பென்ஸி, சில ஆண்டுகளுக்கு முன் மலேசியா வந்திருந்தார். என்னைச் சந்திக்க முடியுமா? என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நான் தோழரை சந்திக்கச் சென்றேன். ஜிகுனா தூவி பெறும் ஆடம்பரமாகவும் பகட்டுடனும் இருக்கும் தலைநகரின் இன்னொரு பக்கம் இருண்மையானது என்று நான் கூறினேன். அவரின் ஜோல்னா பை புறப்படுவதற்குத் தயார் என்று
அவரின் தோளில் ஏறி அமர்ந்தது.
சைனா
டவுன், பசார் காராட் உள்ளிட்ட இடங்களைத் தோழருக்கு சிறுசிறு விளக்கம் கொடுத்தபடியே சென்றேன். தலைநகரில் இருண்மையின் நிழலில் மறைந்திருக்கும் கடைநிலை மக்களின் வாழ்வை பார்த்தவாரே நகர்ந்து சென்றோம். அன்றையை ஒரு பொழுதின் சந்திப்பை, தோழர் பென்ஸியின் வாழ்விலும் என்னுடைய வாழ்விலும் அழிக்க முடியாத ஒரு பந்த பாசத்தை உருவாக்கியிருந்தது. முகநூலில் பலர் அவரை மாஸ்டர் என்று அழைப்பதை பார்த்திருக்கிறேன். நான் தோழர் என்றுதான் அவரை அழைப்பேன். என்றாலும் அவர் தகப்பனாருக்கு உரிய அந்தஸ்தைதான் பெற்றிருந்தார்.
நான்
அவருக்கு அதைக் கூறியதே இல்லை. அன்புக்கொண்ட எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. ஒரு முறை பந்த பாசத்திற்கான உணர்வு ஏற்பட்டாலே போதும், அதற்கு எந்த மாற்றும் இருக்கப் போவதில்லை. தோழரின் முதல் சந்திப்பிலேயே அவரின் நோய் குறித்துக் கூறியிருந்தார். தொடர் சிகிச்சையின் காரணத்தினால் முகத்தில் ஏற்பட்ட தோல் அலர்ஜிக் குறித்தும் தோழர் சொன்னார். யாரிடமும் இதைக் கூறவில்லை தோழர் என்றார். அதன் அர்த்தம் நானும் யாரிடமும் கூறக்கூடாது என்பதை உணர்த்தியது. ஆறுதல் கூறத் தெரியாத நான் வழக்கம் போலவே அவரின் அந்த நோயைக் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அதே வேளையில் வாழ்ந்துகொண்டிருக்கிறத அந்த நேரம்தான் தோழர்களுக்கு முக்கியமான நேரம், அரூபமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் அந்தக் கறுப்புப் பூனை குறித்துத் தோழர்களுக்கு என்ன கவலை?
நகர
வீதிகளில் சுற்றிய நாங்கள் விடைபெறும்போது தோழர் பென்ஸி வீட்டிற்கு வரும்படி அழைத்தார். நானும் மறுப்பு சொல்லவில்லை. மீன் குழம்பு மற்றும் மீன் வறுவலோடு எனக்கு விருந்தோம்பல் நடந்தது. தோழரின் துணைவியாரும் புன்னகை மாறாமல் உரையாடினார். புதிதாக அறிமுகம் கொண்ட தோழரின் வீட்டில் வைத்து விருந்தோம்பல், உரையாடல் அதுவும் ஒரு இஸ்லாமிய குடும்பமாக இருந்தாலும், அந்த ஒரு வேறுபாட்டை யோகியிடம் அவர்கள் காட்டவே இல்லை. நிறையப் பேசினோம். பின் விடைபெற்றேன்.
அதன்
பிறகு நான் தோழரை சந்திக்கவே இல்லை. நீண்ட உரையாடல் எதுவும் செய்யவில்லை. சில ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இருவருக்கும் இடையில் உள்ள அந்த நட்பு மிக அழகாகவே உயிர்ப்புடன் இருந்தது. தோழர் பல இடங்களில் நல
நட்புகளிடத்தில் என் குறித்த மதிப்பினையும் அன்பினையும் பகிர்ந்திருப்பது அவர் இல்லாத இந்த நேரத்தில் அறியவரும்போது, ரொம்பவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அதே வேளையில் தோழரின் இந்த மறைவு குறித்தான வேதனையை எதிர்கொள்ளத் தெரியாமல் திணருகிறேன்.
தோழர்
இருக்கும்போதே ஏன் இந்த யோகி அவரின் மீதுள்ள பந்த பாசத்தைப் பேசவில்லை? இப்போது இதைப் பேசிதான் ஆகப்போவதென்ன? என்னை நானே நொந்துகொள்வதைத் தவிர வேறு தண்டனையைக் கொடுத்துகொள்ள முடியவில்லை…
-யோகி
(மலேசியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக