வியாழன், 4 மார்ச், 2021

அவரும் ஓடினார், நானும் ஓடினேன்.. ஓடினேன்... ஓடிக்கொண்டே இருந்தேன்

நான் எப்போதும் இரண்டு கைப்பைகள் வைத்திருப்பதை பலர் கவனித்திருக்ககூடும். ஒன்று என் தேவைகள் கொண்ட கைப்பை. மற்றொன்று பழைய துணிகளோடு சில புத்தகங்கள் கொண்டது. புத்தகம் எனக்குதான். பழைய துணி சாலையோர வாசிகளுக்காக வைத்திருப்பது. உடுத்த துணியில்லாமல், கிழிந்த அல்லது சாலையோர குப்பைகளில் கிடைக்கும் ஏதாவது நெகிழியையோ சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு உடனே கையில் வைத்திருக்கும் பழைய துணியை கொடுத்துவிட ஏதுவாக அப்படி வைத்திருப்பேன். எல்லா நேரமும் வைத்திருப்பேன் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் துணிப்பை அலுவலகத்திலோ அல்லது காரிலோ வைத்திருப்பேன். ஜாலான் ஈப்போ சாலையிலிருந்து சௌகிட் சாலைவரை தினமும் 40-50 சாலையோர வாசிகளை கண்டு விடலாம். பெருவாரியாக அவர்கள் தஞ்சம் அடைவது பஸ் நிறுத்துமிடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மூடப்பட்டிருக்கும் கடை வாசல்களில்தான். இவர்களில் கணிசமானவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மனப்பிறழ்வு மாதிரியானவர்களும் இருக்கிறார்கள். 

இன்று (3/3/2021) காலையில் நான் பேருந்துக்கு காத்திருக்கும் நேரம் ஒரு பெரியவர் மேலடையில்லாமல், தேசியக் கொடியை மட்டும் இடுப்பில் சுற்றியபடி பேருந்து நிறுத்துமிடத்தில் உட்கார்ந்திருந்தார். நல்ல உயரமான ஆள், கனத்த சரீரம். தேசிய கொடி இருக்கி அவர் இடுப்பை சுற்றியிருந்தது. ஒருமுறை அவரின் கண்களும் என் கண்களும் சந்தித்துக்கொண்டன. அவர் பார்த்தபடியே இருந்தார்.  எனக்கு அவரைப் பார்ப்பதற்கு ஏதோ போல் இருந்தது. மேற்சட்டையில்லாமல் இந்த வெயிலிலும், உஷ்ணத்திலும், கொசு கடியிலும் எப்படி இருக்கிறார்? எங்கே படுத்துக்கொள்கிறார்? உடல் கழிவுகளையும் வெளியேற்றிதானே ஆகனும். இதற்கிடையில் உடனே எடுத்துகொடுக்க இன்றுப் பார்த்து, நான் துணிப்பையை கொண்டுவரவும் இல்லை. அருகில் இருந்த மங்களத்தீபம் பலசரக்குக் கடையில் கைலி இருக்கா என்று கேட்டேன். 

"ஆண் கட்டுவதா அல்லது பெண் கட்டுவதா" 
"ஆண் கட்டுவது" 
"இல்லை"
"பெண் கட்டுவதாவது கொடுங்க..".

கடையிலிருந்து கைலியை வாங்கி வருவதற்குள் பெரியவர் நடையை கட்ட தொடங்கினார். "அங்கிள் நில்லுங்க. இது உங்களுக்குதான்" என்றேன். அவர் இன்னும் வேகமாக நடையை கட்டினார். நான் அங்கிள்- அங்கிள் என அவர் பின்னாடியே ஓட, அவரும் ஓட சுமார் 100 மீட்டர் ஓட்டப்பந்தையம் நடந்தது.  ஓடி முடித்த கலைப்பில் அவர் சாலையைத் தாண்டி முருகன் கோயில் பஸ் நிலையத்திற்கு வந்து உட்கார்ந்தார். அப்போதுதான் கவனித்தேன். தெருவே எங்கள்  கூத்தை பார்த்துக்கொண்டிருந்ததை.  நான் கையில் கைலியோடு முருகன் கோயில் பூக்கடைக்காரரிடம் கைலியை கொடுத்து பெரியவரிடம் கொடுக்க சொன்னேன். 

"இவர் பெரிய ஆளுமா? யாரிடமும் எதையும் வாங்க மாட்டார்" என பெரியவரை ஒரு முறை முறைத்தார் பூக் கடைக்காரர். "ஐயோ! கொடுங்க அண்ணா" என்றேன். கைலியோடு பெரியவரை பார்த்த பூக்கடைகாரரை நோக்கி பெரியவர் வந்தார். நான் சாலையை தாண்டி வேலைக்கு பஸ் ஏற வந்துவிட்டேன். பஸ் ஏறியதும் அந்தப் பெரியவர் கைலியை கட்டியிருக்கிறாரா என்று தேடினேன். முருகன் கோயில் பஸ் நிறுத்தத்தின் அமர்வு இடத்தில் கைலியை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த மாதிரியானவர்களுக்காக அரசு பல சமூக நல இலாகாக்களை நடத்தி வந்தாலும், இவர்களை மாதிரி சிலரை அங்கு தங்க வைப்பது முடியாத காரியமாக இருக்கிறது. அவர்களால் ஒரு இடத்தில் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. இம்மாதிரியானவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை அரசு யோசித்து பரிசீலிக்க  வேண்டும். குறிப்பாக இவர்களின் சுகாதாரத்திற்கு சரியான முறையில் ஏற்பாடுகள் செய்வது நலம். உணவுக்கு இவர்கள் பெரிய சிக்கலை பெருவாரியாக எதிர்நோக்குவதில்லை. காரணம் இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உணவு கிடைக்கவே செய்கிறது. 

நல்லுங்கள் பலர் உணவுகளை சாலையோரவாசிகளுக்கு வாங்கி தருவதைப் பார்க்க முடியும். இல்லை என்றாலும் இவர்கள் உணவு கடைகளின் முன் போய் நிற்கும்போது, நீண்ட நேரம் நிற்க வாய்ப்பு கொடுக்காமல் கடைக்காரர்களே உணவை பொட்டலம் கட்டி கொடுத்துவிடுவார்கள். அழுக்காக , துர் மணம் வீச இருக்கும் இவர்களை கடையின் முன் நிறுத்திப் பார்க்க கடைக்காரர்கள் விரும்புவதில்லை. 

இம்மாதிரியான ஆதரவற்றவர்கள் நாளுக்கு நாள் நாட்டில் பெருகி வருகிறார்கள்.  இந்தக் கோவிட் கால நெருக்கடியிலும்,  காலநிலை மாற்றத்தின் எதிர்வினையிலும் இவர்களின் நாட்களை யாரும் நினைத்துப்பார்க்கபோவதில்லை. அதனால், இவர்களை விட்டுவிட முடியுமா என்ன?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக