திங்கள், 8 பிப்ரவரி, 2021

பசை பூசிய அரசியல் நாற்காலி


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், ஒரு வழியாக அந்த மாபெரும் பொறுப்பைச் செயலாற்றுவதற்கு தொடங்கிவிட்டார். அவரை பதவிக்கு வரவிடாமல் முட்டுக்கட்டையாக இருந்து அடம்பிடித்துக் கொண்டிருந்த டோனால்ட் ட்ரம்ப், தமது அடாவடித்தனமான நாடகம் எடுபடாமல் மூட்டை முடிச்சிகளை கட்டிவிட்டார்.

அரசியல் பித்துப் பிடித்தவர் மாதிரி தனது பதவி காலத்தில் நடந்துக்கொண்ட டோனால்ட் ட்ரம்ப், தேர்தலில் தோல்வியடைந்ததைக்கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க பிரதமர்களில் ஒரு கறுப்பு புள்ளியாகவே அவர் மாறிவிட்டார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் அதேதி 2020-ல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது. முன்னதாக ஜோ பைடனின் செல்வாக்கும், தேர்தல் பரப்புரைகளும் அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை உலக மக்களிடத்தில் கொடுத்தது. ஆனால், டோனால்ட் ட்ரம்ப்புடைய கூலிப் படைகள் அல்லது அவரின் ஆதரவாளர்கள், ட்ரம்ப்புடைய நாற்காலியை பிரிக்க முடியாத அளவுக்கு பசையை பூசிக்கொண்டிருந்தது அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

தேர்தலில் ட்ரம்ப் படுதோல்வியடைந்தார். ஆனால், அதை அவரால் மட்டுமல்ல அவரின் ஆதரவாளர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து தமது நாற்காலிக்கு பசையை பூசி அதன் மீது உட்கார்ந்துக்கொள்ள முயற்சி செய்தது மட்டுமல்லாமல் தேர்தல் அணையத்திடமும் மல்லுக்கு நின்றார். அதோடு, நீதிமன்றங்களிலும் வழக்குகளை தாக்கல் செய்தார்.  ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து வாக்குகளை அபகரித்தனர் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.


ட்ரம்ப் முறையிட்ட எல்லா இடங்களிலும் நீதியானது ஜோ பைடன் அணிக்கு சாதகமாக அமைந்தது. தேர்தலில் ட்ரம்ப் குற்றம் சாட்டியதுபோல எந்த முறைக்கேடும் இல்லை என்று உறுதியாக கூறிவிட்டனர். ஆனாலும்கூட ட்ரம்பின் நாற்காலி ஆசையை கழற்றி எறியவே முடியவில்லை. அதன் காரணத்தினால், வன்முறையை கட்டவிழ்க்கவும் அவர் துணிந்தார். செய்தும் காட்டினார். தேர்தலுக்குப் பிறகு, தன்னுடைய பதவி உறுதியில்லை என்று தெரிந்தும் அமெரிக்க ராணுவ அதிகாரத்தில் மாற்றங்களை செய்தார்.

இந்த செய்கையானது உலக மக்களிடத்தில் ட்ரம்ப் உண்மையில் யார் என்ற கேள்வியை எழுப்பியது. அதன் தொடர்ச்சியாகதான் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சித் தலைவர் ஜோ பைடன் சான்றிதழ் பெறும் நிகழ்வில் நடந்தக் கிளர்ச்சியையும் பார்க்க வேண்டியிருந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ட்ரம்ப் ஆதவாளர்களால் நடத்தப்பட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்கு போலீஸ் கையாண்ட விதம் இன்னொரு விவாதத்திற்கான கதவினை திறந்துவிட்டிருக்கிறது. 

காவலதிகாரியால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்த கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாயிட்-டை மறந்திருக்க மாட்டோம். அவரை காவல்துறை எப்படி நடத்தியது எப்படி கொன்றது என்பதை உலக மக்கள் அறிவார்கள். ஆனால், நாடாளமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டிய, அடாவடி செய்த வெள்ளையின கிளர்ச்சிக்காரர்களை காவல்துறை கரிசனத்தோடுதான் நடந்துக்கொண்டது.  

ஆனாலும், 52 பேரை காவல்துறை கைது செய்தது. உயிர் சேதமும் இருந்தது குறைப்பிடதக்கது. தவிர 15 நாட்கள் பொதுமுடக்கத்தினை வாஷிங்டன் மேயர் அறிவித்தார்.

இப்படியாக அரங்கேரிய டோனால்ட் ட்ரம்ப் எனும் பணக்காரரின் ஜனாதிபதி நாடகம் அமெரிக்காவில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. தன்னோடு ஒட்ட வைத்துக்கொண்டிருந்த அரசியல் நாற்காலியை பசையோடு பிடுங்கி எடுத்து ஜோ பைடனிடம் கொடுத்தாகிவிட்டது.   ,  இனி ஜோ பைடன் மக்கள் மனங்களை வெல்வாரா அல்லது அவரும் நாற்காலிக்கு பசையை தடவுவாரா  என்று போக போகத் தெரியும்.  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக