திங்கள், 1 ஜூன், 2020

வாழ்க்கையா ? போர்க்களமா ? zoom செயலிவழி கலந்துரையாடல்



கருத்துரையாடல் :
*வாழ்க்கையா போர்க்களமா?*
ZOOM செயலி வழியாக
📅 31/05/2020 (ஞாயிற்றுக்கிழமை)
இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு 🇮🇳
(மலேசிய நேரப்படி இரவு மணி 8.30-க்கு 🇲🇾)
ஒருங்கிணைப்பாளர் :- தோழர் யோகி ( எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்)


விளக்கம்: கோவிட் நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும்போது, ஊரடங்கை அரசு நீட்டிக்குமா என்ற அச்சம் எல்லாருக்குமே இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் மனதளவிலும் உடல் ரீதியிலும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது சாத்தியமா? முயற்சிக்காமல் அதைக் கூறிவிட முடியுமா? இந்த நேரத்தில் சின்னச் சின்ன விஷயங்கள் நமக்குப் பெரிய நிவாரணத்திற்குத் திறவு ஆகின்றன.
அதற்காகவே இந்த உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த 31/5/2020 அன்று நடத்திய இந்தக் கலந்துரையாடலில் தமிழ்நாடு,  இலங்கை மற்றும் மலேசியாவிலிருந்து பார்வையாளர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொண்டனர். சுமார் 2.30 மணி நேரம் நிகழ்த்தப்பட்ட இந்த சந்திப்பின் சுறுக்கம் இது. 

நோய்த்தொற்று காலத்தில் உண்ண வேண்டிய உணவு என்ன? என்ற தலைப்பில் பேசிய சரோஜா அக்கா, பறவைகள் மற்றும் மற்ற விலங்குகள் போலவே மனிதன் தனக்கான உணவை பசிக்கும்போது தேடி உண்ண வேண்டும். மற்ற உயிரங்களைப் போலவே படைக்கப்பட்ட மனிதன் உணவுக்காக பணம் தேடி கஷ்டப்படக்கூடாது. உழைக்காமல் மனிதன் தனது உணவை பெற வேண்டும் என்பது என் கனவு என்று கூறினார். 

மனிதனால் உண்ண முடியாது என ஒதுக்கி வைத்திருந்த கள்ளிச் செடியை எப்படி உணவுக்கு பயன்படுத்துகிறீர்கள் என்ற பார்வையாளரின் கேள்விக்கு 


கள்ளித் துவையல் உடலுக்கு குளிர்ச்சியூட்டக்கூடிய மிகச் சிறந்த உணவு. அதை நான் அனுபவப் பூர்வமாக அறிந்துக்கொண்டேன். அதாவது ஒரு நாள் எங்கள் வீட்டு மாடு அந்தக் கள்ளிச் செடியை சாப்பிடுவதைப் பார்த்தேன். முட்கள் குத்தி அதன் வாயிலிருந்து ரத்தம்கூட வந்தது. அதில் விஷம் இருந்திருந்தால் நிச்சயமாக மாட்டுக்கு ஏதாவது எதிர்வினையாகியிருக்கும். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.  மாடு மறுநாளும் அந்தக் கள்ளிச் செடியை சாப்பிட போவதைப் பார்த்தேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தவிர அந்தச் சம்பவம் என்னை அடுத்தக் கட்ட முயற்சியில் இறங்க வைக்கவும் ஒரு  காரணியாக அமைந்தது. அந்தச் சுவை எத்தனை  பிடித்திருந்தால் மாடு அதை ஆசையாக சாப்பிடும் என்ற எண்ணம் எழவே நான் அதை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கினேன். புளிக்கு ஒரு மாற்று தேவை என எலுமிச்சைப் பழத்தை பயன்படுத்தச் சொல்கிறார்கள். அதைவிடவும் இந்தக் கள்ளிச் செடி சரியான தேர்வு என்று நான் அனுபவப்பூர்வமாக சொல்கிறேன். மேலும், சத்தான உணவும் கூட. அதோடு தற்போது முருங்கை இலை, முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணை, மல்லிச்சாறு என எளிதாக கிடைக்கூடிய விலைபொருள்கள் மனித உடல்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதுடன், நோயிலிருந்தும் மீட்டெடுக்கிறது என்றார்.  


 'இல்லம் தோறும் உழவர்' என்ற தலைப்பில் பேசிய தோழர் வீ.இறையழகன், உழவுக்குறித்து மனிதர்கள் இழந்துவிட்ட பல விஷயங்களை தனது ஆதங்கங்களாக வெளியிட்டார். இன்று இந்த பூமியில் ஏற்பட்டிருக்கும் பல இழப்புகள் மனிதனின் சூழ்ச்சி மட்டுமே காரணம். ஆனால், தன் தவறை அவன் உணர்ந்தமாதிரியே தெரியவில்லை. இன்று ஆட்டிச்சம் சம்பந்தப்பட்ட பிரச்னையுடன் குழந்தைகள் அதிகமாக பிறப்பதற்கு என்னக் காரணம் என்று யாரும் யோசிப்பதில்லை. இனி வரும் காலங்களில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் அந்தக் குறைப்பாடுடன் பிறக்கும் சாத்தியம் இருக்கிறது. நிச்சயமாக அந்தப் பிரச்னைக்கும்  உணவுக்கும் சம்பந்தம் உண்டென ஆராய்ந்தால்  அறிந்துக்கொள்ளலாம். அப்படியென்றால் அது உழவனை நோக்கி பார்வையை திருப்பும்.

இயற்கையையும் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க  வேண்டும் என்று சொல்கிறீர்கள். இன்று இயற்கையாக உயிர் பெற்று பயிற்களை நாசம் செய்துக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகளை கொல்வது சரியா? என்ற கேள்விக்கு..

வெட்டுக்கிளிகளை உணவாக உண்ணும் பறவைகள் குறைந்துப் போனதின் விளைவாக இதை நான் பார்க்கிறேன். இயற்கைக்கு மாறாக இன்று படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள் உயிர் பெற்றதற்கு மனிதனின் பேராசைக் குணம்தான் காரணம். ஐயா நம்மாழ்வார் சொன்ன ஒருக் கதை எனக்கு ஞாபகம் வருகிறது. ஒரு புழு இலையை தின்றுக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவரின் சீடர் ஒருவர் இலையை நாசம் செய்யும் புழுவை கொன்று விடவா என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வார் ஐயா, பசிக்கும் உணவு உண்ணும் உன்னை, அதன் காரணத்திற்காக கொள்ள முடியுமா? என்று கேட்டார். இந்த உணவு சுழற்சியில் அனைத்தும் சங்கிலித்தொடர்போல இணைந்திருக்கிறது. அதை சீர்குழைக்கும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது என்றார். 

இல்லாத பணத்தை எப்படி செலவு செய்வது? என்ற தலைப்பில் பேசிய  தோழர் பசுமை சாகுல் 
கொஞ்சநாள் முன்புவரை கையில் பணம் இருந்தது. ஆனால் ஒரே இரவில் அந்தப் பணத்துக்கு மதிப்பில்லால் போனது. இப்போது பணத்திற்கு மதிப்பிருக்கிறது. ஆனால், வாழ்க்கைக்கு (உயிர்) மதிப்பில்லாமல் போய்விட்டது. முன்னது அரசியல் விளையாட்டு. அதை சரிப்படுத்தி விடலாம் பின்னது இயற்கையின் விளையாட்டு அதைச் சரி படுத்த முடியுமா..?

இலட்சம் ஆண்டுகள் நிலையா இருக்கிற இந்த இயற்கையை அட்லீஸ்ட் அறுபது வருஷம் உயிரோடு இருக்குற மனிதன் தன் சுயநலத்துக்காக அழிக்கிறான். இயற்கையோட எதிர்தாக்குதல்தான் பெருவெள்ளமாகவும், பேரழிவாகவும், பூகம்பமாகவும், சுனாமியாகவும் மாறி இருக்கிறது. ஆனாலும் மனிதன் தன்னை மாற்றிகொள்ளவில்லை. இறுதியாக இப்போ ஒரு வெப்பனை இயற்கை விட்டிருக்கு. அதுதான் கொரோனா. இனியாவது இயற்கையோட இணைந்த வாழ்வை மனிதன் வாழ பழகவேண்டும். பணமில்லாத ஒரு வாழ்க்கை சாத்தியமா..?
சாத்தியமே பணம் சில நூற்றாண்டுகளாகத்தான் நம்மிடையே புழக்கத்தில் இருக்கு. அதற்கு முன் வாழ்ந்தவங்க சந்தோஷமா வாழலையா? பத்து பதினைஞ்சு குழந்தை பெத்துகிட்டு மகிழ்ச்சியாதானே வாழ்ந்தாங்க. இடையில் வந்த பணம் இப்போ பிரதானம் ஆயிடுச்சு. இல்லாத பணத்தை எப்படி செலவு செய்வது...? அதற்கு ஒரே வழி தற்சார்புதான்.

அப்படியென்றால் பழைய பண்டமாற்று  வணிகத்தை செய்ய சொல்கிறீர்களா? என்றக் கேள்விக்கு..

 நமக்கு அன்றாடம் பயன்படும் நாற்பத்தைந்து பொருட்களை நாமே இலகுவாய் உருவாக்கி கொள்ள முடியும். நமக்கு தேவையான உணவை நம்மை சுற்றி உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதற்கு பணம் தேவையல்ல. தற்சார்பு வாழ்க்கை முறை முன்னெடுப்பு மட்டும் போதும். இனிவரும் காலம் இனியும் சிக்கலாய்மாறும். பண்டமாற்று முறையை நடைமுறை படுத்தி பணத்தின் தேவையை குறைத்து வாழலாம்.

பெரிய ஆசைகளோ, தேவைகளோ இல்லாத நாடோடி மக்கள் எந்த சூழலிலும்தன்னை நிலைநிறுத்தி கொள்கிறார்கள். கிடைப்பதை வைத்து திருப்தியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதுவும் ஒருவகை தற்சார்பே. வனமக்களுக்கு எப்படி பணத்தின்தேவை இல்லையோ, இயற்கை எங்களுக்கு எல்லாம் கொடுக்கிறது என்கிற மனநிறைவோடு வாழ்கிறார்களோ அது ஒரு தர்சார்பு வாழ்க்கை முறைதான். இயற்கையோடு இணைந்த அந்த வாழ்க்கையை கற்றுகொண்டால் நம் வாழ்க்கைக்கு பணத்தின் தேவை இல்லாமலேயே போய்விடும் என்றார். 

தனிமைபடுத்துதல், அக்கரையிலும் இக்கரையிலும் என்ற தலைப்பில் பேசிய தோழர் கோகோபிநாத்

"என் அயல்நாட்டு பயணத்தின் அவலநிலைக்கு  யார் காரணம்? தொழில் 
நிமித்தமாக நான் மலேசியா வந்தேன். வந்த இரண்டாம் நாளே ஓர் அவசர நிலை போர் சூழல் போல எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, விமான போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

என்னை போன்றோரின் நிலையை பற்றி அரசாங்கம் எந்த ஒரு தீர்கமான முடிவும் எடுக்காமால் மக்களை கைவிட்டுவிட்டது 
வயதானவர்களின் நிலையாவது கொஞ்சம் யோசித்து பார்த்துயிருக்கலாம்.கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக மலேசியாவில்  பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒரு வழியாக சென்னை வந்தேன்  சென்னையில் எட்டு நாட்கள் தனிமையில் வாடினேன். உணவும் சரிவர வழங்கபடவில்லை.

மக்களுக்கான அரசு இது மக்களுக்கான அரசு என ஒலிபெருக்கியிலும் தொலைகாட்சியிலும் மட்டுமே சாத்தியமானதாகவே தெரிந்தது. சரியான முன்னறிவிப்பு இல்லாததால் அயல்நாட்டில் சிக்கி  கொண்ட நான்
 உடலளவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லா விட்டாலும், மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டேன். நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்த போதிலும்,தனிமையில் மிகவும் ஆதரவற்ற  நிலையை உணர்ந்தேன்.

நான்கு முறை விமான போக்குவரத்து தேதியை மாற்றி மாற்றி அமைத்து மன உளைச்சல் ஆனதுதான் மிச்சம். எப்போது இந்தியா செல்வோம் என்று தமிழகம் வருவோம் என்று தெரியாமல் மிகவும் கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டியதாயிற்று..

 தமிழகத்திற்கும் மலேசியாவுக்கும் உணவுமுறை மருத்துவம், மொழி பணம் ....
உள்ளிட்ட பல வேறுபாடுகள் உள்ளது..
இருப்பினும் மலேசிய தோழ்ர்களின்
ஆதரவினால் என்னால் ஓரளவு நாட்களை கடத்த முடிந்தது


அதேபோல் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தவுடன்  அங்கேயும் எட்டு நாட்கள் தங்கியிருந்தோம். அத்தனை நாட்கள் கடந்து வந்த அனைவரும், விமான கட்டணம் தங்குமிட கட்டணம் உணவு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் எங்களது சொந்த செலவில் நாங்களேதான் செய்து கொண்டோம். அரசு ஏற்கவில்லை..

 இங்கேயும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். மனதளவில் 
நான் பலகீனமானேன்.தைரியமாக இருக்க எங்களுக்கு எந்த ஒரு ஆலோசனையும், பயிற்சியும், ஏற்பாடு செய்யவில்லை; என்பது மிகவும் வேதனை அளிக்கிறது..

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான் கடந்தது கடந்த  இரண்டு மாதங்கள். எந்த ஒரு நோய் பாதிப்புமின்றி தமிழகம் வரவேண்டுமென்று எனக்காக பிரார்த்தனை செய்த என் குடும்பத்தாருக்கும் என் நண்பர்களுக்கும் ஆண்டவனுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவிக்கிறேன்.."




பேச்சாளர்கள் அறிமுகம்..

சரோஜா அக்கா:

நம்மாழ்வார் ஐயாவின் வானகத்தில் பயிற்சி எடுத்தவர் 2012-ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சார்ந்த நடவடிகைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 2018 ஆம் ஆண்டு நம்மாழ்வார் விருது இவருக்கு வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது. மேலும், பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவரை சரோஜா அக்கா என்று பலரும் அன்போடு அழைக்கின்றனர்.

தோழர் வீ.இறையழகன்

கடந்த 10 ஆண்டுகளாக ஐயா நம்மாழ்வார் அவர்களின்  வழிகாட்டுதல்படி இயற்கை வழி வேளாண்மையை  செய்து வருகிறார். ஐயாவின் வழிகாட்டுதல்படி தமிழ்நிலம் தமிழ்ப்பண்ணை எனும் பதினைந்து ஏக்கர் பரப்பிலான உணவுக்காடு பண்ணையை உருவாக்கி உள்ளார்.  அப்பண்ணையில் நூற்றுக்கும் மேலான வகைகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கிடையில் தான் அனைவருக்குமான உணவுக்காடும் உள்ளது எனும் இவர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.

தோழர் பசுமை சாகுல்

இயற்கை ஆர்வலராகவும் இயற்கையோடு இணைந்து பயணிக்ககூடியவராகவும் இருக்கிறார். கானுயிர் பயணி. பயணங்களை மேற்கொள்வதோடு  அதனூடே மாசு பட்டிருக்கும் இயற்கை வளங்களை அடையாளம் கண்டு அதை சீர் செய்யும் முயற்சியினை முன்னெடுக்கிறார். குமரி மாவட்டத்தின் நம்பிகை நட்சத்திரங்களில் ஒருவர். விவசாய விளைபொருள்களை தனது பசுமை அங்காடியில்  விற்பனைசெய்கிறார்.

தோழர் கோபிநாத்

RTN  எம். கோபிநாத்  சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர்,  கடந்த பத்து ஆண்டாக ரோட்டரியில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறார்.  அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்,  இவர் இதுவரை 200 ஜோடி கண்களை இறந்தவர்களிடம் இருந்து தானமாக பெற்று கண் மருத்துவமனைகளுக்கு வழங்கி உள்ளார்.  இதன் மூலம் பல நூறு பேர் கண்பார்வை பெற்று நலமாக உள்ளார்கள். மேலும் 50 க்கும் மேற்பட்ட முழு உடல் தானங்களையும் பெற்று மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளுக்கு தானமாக  வழங்கி உள்ளார்..

 மேலும் மூளைச்சாவு அடைந்த சிலரின் உடல் உறுப்புகளையும் தானமாக பெற்று தந்து  பலர்  உயிர் வாழ  உதவியுள்ளார்.  அதுமட்டுமன்றி  ஆதரவற்று கிடக்கும் அனாதைப் பிணங்களை தன்னுடைய சொந்த செலவில்  அடக்கம் செய்யும் பணியையும் செய்து வருகிறார். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்க, உணவும் உயிரும் எனும் திட்டத்தை துவக்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வாரம்தோறும் சுகப்பிரசவத்திற்கான பயிற்சியும் அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கடந்த இரண்டு ஆண்டுகளாக கிட்டத்தட்ட 90 வாரங்களாக வழங்கி வருகிறார்.

நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக