வியாழன், 2 ஜனவரி, 2020

‘பாபா ஞோஞா’ (Baba and Nyonya)




‘பாபா ஞோஞா’ எனும் சமூகத்தின்  வரலாற்றைப் பேசத் தொடங்கினால் செங் ஹ (1371 – 1435) எனும் சீன நாட்டு இஸ்லாமிய மாவீரனையும், (1456 - 1477) காலக் கட்டத்தில் வாழ்ந்த மலாக்காவின் 6-வது சுல்தானான சுல்தான் மன்சூர் ஷாவை மணந்துக்கொண்டு, 15-ஆம் நூற்றாண்டில் மலாயா நாட்டில் முதலாவதாக அங்கீகரிக்கப்பட்ட சீனக் குடியிருப்புத் தோன்றுவதற்குக் காரணியாக இருந்த சீன இளவரசி ஹங் லீ போ-வையும் தவிர்த்துவிட்டுப் பேசவே முடியாது.

செங் ஹ சீனநாட்டின் மிங் வம்சத்து அரசனான யுங் லோ-வின் கடற்படைத் தளபதியாவார். மலாக்கா மாநிலத்தை நிறுவிய பரமேஸ்வரா என்ற இஷ்கந்தர் ஷா சீனா நாட்டிற்கு நட்பு நிமித்தமாக வருகைப் புரிந்து, செங் ஹ-வின் தலைமையில்தான் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். அப்போது இருவரும் நண்பர்களாயினர். அதன் தொடர்ச்சியாகச் சீனாவிலிருந்து அதிகமான வியாபாரிகள் மலாக்காவிற்கு வந்தனர். செங் ஹ மேற்கொண்ட 8 கடற்பயணங்களில் 5 முறை மலாக்காவிற்கு வந்திருப்பதாக இணைய பதிவு குறிப்பிடுகிறது.  அவருடன் வியாபாரத்திற்காக வந்தவர்களில்  வாணிபத்தில் வெற்றிகண்டச் சிலரும், நீண்ட நாள் சொந்த நாட்டிற்குத் திரும்பாமல் இங்கேயே தங்கியிருந்தவர்களும் மலாயா மலாய்ச் சமூகப் பெண்களுடன் இல்லரத்தில் இணைந்தனர். இவர்களில் சிலர் இஸ்லாம் மதத்தைக் தழுவிக்கொண்டனர்.

இளவரசி ஹங் லீ போ, ஹோக்கியன் இனத்தைச் சார்ந்தவராவார். நம்மில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய இனக் குழுவினர் இருப்பதைப்போல, சீனர்களில் 18 வகை இனக் குழுவினர் இருக்கின்றனர். மலாயா மண்ணில் சீனர்கள் நிரந்தரமாகக் குடியேற இவர்கள் இருவரின் பங்களிப்பு முக்கிய அம்சமாகப் பேசப்படுகிறது. ஆனாலும், ‘மிங்’ சாம்ராஜியத்தைச் சேர்ந்த இளவரசி ஹங் லீ போ-வை குறித்த பதிவுகள் எதுவும் சீன சாம்ராஜிய வரலாற்றுப் பதிவுகளில் இல்லை என இணையத்தில் எழுதப்பட்டிருக்கும் பல தரவுகளில் கூறப்பட்டிருக்கின்றன . என்றாலும் இளவரசி ஹங் லீ போ என்பவர்,  சீன சாம்ராஜியத்தில் இல்லவே இல்லை என எந்தப் பதிவும் உறுதியாக மறுத்திடவில்லை.

தன்னுடைய மனைவிக்கும் அவருக்கு உதவியாக வந்தவர்களுக்கும் Bukit Tinggi, Bukit Gedong மற்றும் Bukit Tempurong  ஆகிய மலைகளைப் பரிசளித்தார் சுல்தான் மன்சூர் ஷா. அந்த மலைத்தொகுப்பைப் பொதுவாகப் புக்கிட்சீனா (சீன மலை) என்று அழைப்பர். தற்போது அந்த மலையில் 12,500 உலகின் மிகப் பழமையான பாரம்பரியச் சீனப் புதைகுழிகள் (சீனக் கல்லரைகள்) இருக்கின்றன. மலேசியாவின் மிகப்பெரிய சீன மயானங்களில் இதுவும் ஒன்று.
பெரானாக்கான் என்கிற  ‘பாபா ஞோஞா சமூகத்தினரை, பொதுவாகப் பெரானாக்கான் சமூகத்தினர் என்றுதான் சொல்வார்கள். ‘பெரானாக்கான் என்றால் ரத்தக் கலப்பு என்று அர்த்தம். ஆண்களைப் ‘பாபா’ என்றும் பெண்களை ‘ஞோஞா’ என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். மலேசியாவில் மூன்று தனித்துவமானப் பெரானாக்கான் குழுவினர் இருக்கின்றனர். ‘மலாக்காச் செட்டி, ‘பாபா ஞோஞா மற்றும் ‘ஜாவிப் பெரானாக்கான்என்பன அவையாகும்.

‘ஜாவிப் பெரானாக்கான் அல்லது ‘அனாக் தன்ஜோங் என்ற சமூகத்தினர் பிரிட்டிஷ்- மலாயா சகாப்தத்தில் இந்திய வணிகர்கள் உள்ளூர் மலாய்ப் பெண்ணை மணந்தபோது உருவானது என்று வரலாறு பேசுகிறது. பின்னாளில் இப்படியான ஒரு சமூகம் தேய்ந்து மறைந்து, கிட்டதட்ட இல்லாமலே போன மாதிரிதான் இருந்து வருகிறது. காரணம் ஜாவி பெரானாக்கான் சமூகத்தினர் முழு மலாய்க்காரர்களாகவே இன்று வாழ தொடங்கிவிட்டனர். இவர்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை எனக் கூறப்படுகிறது.  இவர்களை ‘ஓராங் மாமாக் என்று சொன்னால் விரைந்து அதை மறுக்கின்றனர் .

மலாக்கா செட்டி சமூகத்தினர் என்பது இந்திய, மலாய், சீன மக்களின் கூட்டுக் கலவையாகும். அவர்கள் இந்து மதத்தில் இருந்துக்கொண்டு, மலாய்க் கலாச்சாரச் சாரத்தைப் பின்பற்றுவார்கள். மலாய் உடையைப் பாரம்பரிய உடையாக அணிவதுடன், மலாய் மொழியைத்தான் அவர்கள் முதன்மை மொழியாகப் பேசுவார்கள். மலாய்மொழியைத்தான் அவர்களின் தாய் மொழி என்றுகூடச் சொல்லலாம்.

மலேசியர்கள் மலாக்கா செட்டி மக்களைத் தெரிந்து வைத்திருப்பதைப் போன்று ‘பாபா ஞோஞா’ குறித்துத் தெரிந்து வைத்திருப்பது குறைவுதான் என்று தோன்றுகிறது. பெரிய பெரிய பேரங்காடிகளில் ‘பாபா ஞோஞா உணவு வகை ரெஸ்டாரண்களைப் பார்க்கும்போது, முப்பது நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிய பழைய மலாயாவை நினைவு கூறும் வகையில் இருக்கும். பிரிட்டிஷ் காலக்கட்டங்களில் நாட்டில் சீனர்கள் பயன்படுத்திய பண்ட பாத்திரங்களைக் கொண்டு அவ்வுணவு விடுதியை அலங்கரித்திருப்பார்கள்.

தவிர ‘பாபா ஞோஞா உணவு வகையானது மலாய்-சீன உணவுகளின் கலவையாக வண்ணமயமாக இருக்கும். மேலும், சீனர்களின் உணவு பாரம்பரியத்தில் புகழ்பெற்றதாக இருக்கும் கூடைக்குள் வைத்து அவித்துத் தயார் செய்யப்படும் ‘வன்தான்’, வாழையிலையில் மடித்த பன்றி இறைச்சி பூலூட், லக்சா உள்ளிட்ட உணவுகள் பிரபலமானதாக விளங்குகிறது. இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்களுக்குப் பன்றி இறைச்சி ‘ஹராம்’ என்பதால் அதை அவர்கள் சேர்ப்பதில்லை. ‘பாண்டன்’  இலைகளையும், மஞ்சள் மற்றும் தேங்காய் பாலையும் மிக அதிகமாகப் ‘பாபா ஞோஞா உணவுகளில் காணலாம். மேலும் தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, ஹோலன், இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் உணவு வகைகளையும் சார்ந்து இருக்கும். 




‘பாபா ஞோஞா சமூகத்தில் குழந்தை பிறந்த 30-வது நாள் முக்கிய நாளாகச் சடக்குகளை முன்னெடுக்கின்றனர். மஞ்சள் சோறாக்கி, கோழி கறிவைத்து, சிவப்பு பட்டாணியைப் பூரணமாக வைத்து செய்யக்கூடிய ‘ang koo’ (இது ஆமை வடிவத்தில் இருக்கும்) ang-ee ( இது முட்டை வடிவத்தில் இருக்கும்) ஆவியில் வைத்து அவித்து எடுத்த பலகாரத்தையும் செய்து இவற்றோடு இரண்டு சிவப்பு முட்டைகளை அவித்து முன்னோர்களுக்குப் படைக்கின்றனர்.
பாபா ஞோஞா சமூகத்தின் தாயகம் மலாக்கா மாநிலமாக இருந்தாலும், பின்னாளில் பினாங்கு, சிங்கப்பூர் என அவர்கள் வணிகத்திற்காகப் பரவத் தொடங்கினார்கள். பெரும்பான்மையாக வணிகத்தில் ஈடுப்பட்ட ‘பாபா ஞோஞா’ சமூகத்தினர் தங்களைச் சீனர்கள் என்று சொல்வதை விரும்புவதில்லை.

மாறாகத் தங்களை அவர்கள் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் எனச் சொல்லிக் கொள்வதையே விரும்புகின்றனர். இதன் காரணத்தினாலேயே இவர்கள் மலாய் மொழியில் உரையாடுவதைத் தாண்டி ஆங்கில ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவும் அவர்கள் கிறித்துவ மத்தையும் தழுவிக்கொள்கின்றனர். மேலும், Taoism, Confucianism, chinese Buddhism ஆகிய சமயங்களிலும் இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ‘பாபா ஞோஞா இனத்தவருக்கும் பிற சீன இனத்தவருக்கும் பல விஷயங்களில் குறிப்பாகச் சமயம், திருமணம், இறப்பு உள்ளிட்ட விஷயங்களில் அதிக வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றனர்.

அடிப்படையில் செல்வந்தராக இருக்கும் இவர்கள் மலாக்காவில் மட்டுமல்லாது பினாங்கு, சிங்கப்பூர் என வாணிபத்திற்காக இடம் பெயர்ந்தனர். தற்போது தென்கிழக்காசிய நாடுகள் வரைக்கும் தங்களின் விணிகத்தை விரிவு செய்திருப்பதோடு, ஒரு வழுவான சமூகமாகத் தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர்.

இவர்களின் பாரம்பரிய உடையைக் குறித்துப் பேசுவதும் இங்கு அவசியமாகிறது. காரணம் மலாக்கா செட்டி பெண்களுக்கும், ‘பாபா ஞோஞா’ பெண்களுக்கும் ஒரே பாரம்பரிய உடைதான். அதாவது மலாய்க்காரர்களைப்போலவே இவர்களும் பாஜூ கெபாயா அணிகிறார்கள். அதாவது கைலியில் தைக்கப்பட்ட பாவாடை. இது இடையை ஒட்டினார்போல இருக்கமாகத் தைக்கப்படும். மேல் சட்டை ‘V’ வடிவத்தில் பூ வேலைபாடுகள் வைத்துத் தைக்கப்படும். இவர்களின் காலணி பால்மணிகளைக் கொண்டு வேளைபாடுகள் செய்யப்பட்டிருக்கும். அதே பாணியில் கை பையும் வேலைபாடுகள் கூடியதாக இருக்கும்.

பழைய பி.ரம்லி திரைப்படங்களில், அவரின் கதா நாயகிகள் பாஜூ கெபாயாக்களில் படுகவர்ச்சியாக இருப்பார்கள். குறிப்பாக நடிகை சலோமா அணியும் பாஜூ கெபாயாக்கள் தனித்துவ அழகு கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சலோமா அணிந்த உடைகளை தேசிய தொள்பொருட்காட்சியகம் பொது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தார்கள் என்றால் அதன் தனித்துவத்தை மக்களே யூகித்துக்கொள்ளலாம். மலேசிய மக்களைவிடவும் பிற சமூக மக்களை வசீகரித்த இந்தப் பாஜூ கெபாயாவை பெரானாக்கான் மக்கள் மட்டுமல்லாது தமிழ் பெண்களும் விரும்பியணிந்தனர். 

திருவிழா, தீபாவளி பொங்கல் போன்ற பெருவிழா காலங்களில் நம் இந்தியப் பெண்கள் பாஜூ கெபாயாவுடன் வலம் வந்ததெல்லாம் ஒரு காலம். தற்போது மலாய் உடையான பாஜூ கெபாயாவை மலாய் சமூகப் பெண்களே அணிவது அரிதாகிவிட்டது. தவிரவும் அது ஓர் ஆபாச உடையாகப் பார்க்க படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. ஆனாலும், ‘பாபா ஞோஞா மற்றும் மலாக்கா செட்டி பெண்கள் பாஜூ கெபாயா அணிந்திருப்பதைப் பார்க்கும்போது வித்தியாசமாகத் தோன்றினாலும், அவர்கள் பெரானாக்கான் சமூகத்தினர் என்பதை அறிந்துக்கொள்ள அது ஒரு அடையாளமாக மாறியிருக்கிறது. ஒரு உடை குறைந்தது 100 வெள்ளி வீதம் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

‘பாபா ஞோஞா திருமணச் சடங்குகளை விவரித்தால் அது ஒரு ஆணாதிக்கச் சடங்காகத் தோன்றுகிறது. கிட்டதட்ட 14 நாட்கள் கொண்டாடப்படும் திருமண வைபவத்தில் பெண்ணின் கன்னித்தன்மையில் சந்தேகம் தோன்றினால் அவர்கள் திருமணத்தை ரத்து செய்கின்றனர். ஜாதகம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது, பாக்கு வெற்றிலை மாற்றிக்கொள்வது போன்ற இந்திய திருமணக் கலாச்சாரங்களை அவர்களும் பின்பற்றுகின்றனர். பிடி இல்லாத குட்டி குவலையில் தேனீர் கொடுத்து உபசரிக்கும் பழக்கமும் மிக முக்கியமான சடங்காக அவர்களிடம் இருக்கிறது.

இன்றும்  தனித்தவத் தன்மையுடன் விளங்கும் ‘பாபா ஞோஞா’ சமூகம் யாரும் தன்னை அங்கரீக்க வேண்டும் எனக் காத்துக்கிடப்பதில்லை. மலாக்கா மாநிலத்தில் உள்ள பாபா ஞோஞா பாரம்பரிய சாலையை யுனஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரிய களமாக 2008- ஆண்டு அங்கீகரித்தது. சுற்றுப்பயணிகள் அந்த சாலையை வலம் வரும்போதெல்லாம் என் மனதில் தோன்றும் கேள்வி ஒன்றுதான். மிக மிக யூனிக்கான சமூகத்தினர்களை கொண்டிருக்கும் மலாக்கா மாநிலத்தை உள்நாட்டு மக்களும் வெளிநாட்டினவரும் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கின்றனரா??

- யோகி, மலேசியா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக