திங்கள், 18 மார்ச், 2019

எழுத்தும் வாசிப்பும் என் பொழுதுபோக்கு! மு.யூசுப் நேர்காணல்


'திருடன் மணியன் பிள்ளை' என்ற சுயசரிதை புத்தகம், மலையாள இலக்கிய வட்டத்திலும், தமிழ் இலக்கியச் சூழலிலும் மிகப் பிரபலமான நூலாகும். மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் குளச்சல் மு.யூசுப். மலையாள இலக்கியங்களை
தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் இவர் பிறப்பால் ஒரு மலையாளி அல்ல. தமிழர்.

அதுவும் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தமிழ்பள்ளிக்கு போனவர். பாடசாலை போவதற்கான வாய்ப்பை குடும்பச் சூழல் வழங்கவில்லை. குழந்தை தொழிலாளியாக வேலை செய்துகொண்டே மலையாள எழுத்துக்களை நண்பர் ஒருவரின் உதவியோடு சுயமாகவே கற்றிருக்கிறார். அவரது சொந்த முயற்சியும் உழைப்பும் இன்று அவருக்கு மொழிபெயர்ப்புகான சாகித்ய அகாடமி விருதை பெற்று தந்துள்ளது.

`திருடன் மணியம்பிள்ளை’ புத்தகத்திற்குதான் அந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 31 படைப்புகளை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார் மு.யூசுப். அனைத்தும் மிக முக்கியமான படைப்புகளாகும். விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பேசுவதாகும்.
அவருக்கு விருது கிடைத்திருக்கிறது என்ற தகவல் தெரிந்தவுடன், தமிழ்நாட்டுப் பயணத்தில் இருந்த நான், நட்பின் அடிப்படையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நண்பர் சாகுலுடன் நாகர்கோவிலில் அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது மேற்கொண்ட உரையாடலை நேர்காணலாகத் தொகுத்திருக்கிறேன்…

* 31 புத்தகங்களை மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கும் நீங்கள் சொந்த புத்தகங்கள் ஏதும் வெளியிட்டுள்ளீர்களா?
- 'பாரசீக மகா கலைஞர்கள்' என்ற புத்தகம் என்னுடைய சொந்த படைப்பாகும். அது காலச்சுவடு வெளியீடாக வந்தது. மற்றது அனைத்தும் மொழிபெயர்ப்புதான்.




* உங்களுடைய எழுத்துப் படைப்பு எப்போது தொடங்கப்பட்டது?
83-ஆம் ஆண்டுத் தலாக் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று சுப்ரிம் கோட்டில் தீர்ப்பு வந்தது. ஜீவனாம்சம் வழங்கக்கூடாது எனச் சில முஸ்லீம் ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அதனையடுத்து ராஜீவ்காந்தி தலைமையில் அவசர அவசரமாக இரவில் பாராளமன்றத்தை கூட்டி புதிய தீர்மானத்தை எடுத்தார்கள். தலாக் செய்யப்படட பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர்களின் பாதுகாப்பை ஜமாத் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் இருந்தது. நான் சுப்ரிம் கோட்டுக்கு ஆதரவாக எனதலைமையில் கருத்தினை மறு மலர்ச்சி என்ற பத்திரிகைக்குத் துணிந்து எழுதினேன். அந்தக் கட்டுரை பிரசுரமான பிறகு பல எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வந்தன. நான் 23 வயது இளைஞன். ஆனால், வயதிற்கு ஏற்ற தோற்றமில்லை. ரொம்பச் சின்னவனாக இருந்தேன். என்னுடைய எழுத்தெல்லாம் பத்திரிகையில் வராது என்றுதான் நினைத்தேன். ஆனால் பிரசுரித்துவிட்டார்கள் என அப்பாவியாகப் பதில் சொன்னேன். ஓர் அசம்பாவிதம் நடப்பதிலிருந்து தப்பித்தேன். ஆனாலும், எழுதுவதை நிறுத்தவில்லை.

* குளச்சல் மு.யூசுப் என்ற படைப்பாலனை தமிழ் எழுத்துலகம் எப்போது திரும்பி பார்த்தது?
-15 ஆண்டுகளுக்கும் முன்பு, புன்னத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய மலையாள நாவலான `மீஸான் கற்கள்’ என்ற நாவலை மொழிபெயர்த்தேன் , அதைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு செய்தது. அதுதான் எனது முதல் மொழிபெயர்ப்பு நாவலாகும். அதற்கு முன்பு நான் கட்டுரைகள் – கவிதைகள்- கதைகள் என யார் கேட்டாலும் எழுதிக்கொடுப்பேன். என் பெயர் வர வேண்டும் என்பதல்ல. கேட்கும் நண்பர்களுக்கெல்லாம் எழுதிக்கொடுத்துக்கொண்டே இருந்தேன். எழுதுவதும் வாசிப்பதும் எனக்கு ஒரு தவமாக இருந்தது.




* உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள எம்மாதிரியான புத்தகங்களைத் தேடி வாசித்தீர்கள் ?
-ரயில் அட்டையிலிருந்து ‘எல்லோ பேஜஸ்’ வரைக்கும் எது கையில் கிடைக்கிறதோ அதையெல்லாம் வாசித்துகொண்டே இருந்தேன். இளமை பருவத்தில் இருப்பவர்களுக்குத் தன் இனிமையான பொழுதை போக்க பல விஷயங்க ள் செய்வார்கள். நான் எழுதுவதையும் வாசிப்பதையும் என் பொழுதுபோக்காகத் தேர்ந்தெடுத்தேன். எனக்கும் அதுதான் பிடித்தும் இருந்தது.
*பிறப்பால் நீங்கள் ஒரு மலையாளி அல்ல. ஆனாலும் பஷீர் மாதிரியான மிக நுட்பமான எழுத்தாளர்களின் எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது அந்த எழுத்துக்களை எப்படி உள்வாங்கிக் கொண்டிங்க? அல்லது நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
-கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சலிலிருந்து கோழிக்கோடு வரைக்கும் ஒரே மாதிரியான வாழ்கை மற்றும் உடல் தோற்றம் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்க்க முடியும். மேலும் முஸ்லீம் பெண்கள் அணியும் நகைகள், கவனி, சாளரம் குப்பாயம் உள்ளிட்ட உடைகள் என அனைத்து விஷயங்களும் ஒரே மாதிரி இருந்தாலும் நாங்கள் பேசிக்கொண்ட மொழி வெவ்வேறு. ஆனாலும் கலாச்சாரம் ஒன்றாக இருப்பதால் அந்த வாழ்க்கையை மொழிபெயர்க்க எனக்கு அதிகம் சிரமம் இருக்கவில்லை. பஷீர் கதைகளைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்ட முஸ்லீம் மக்களின் வட்டார வழக்கு மொழியில்தான் எழுதியிருப்பேன். அதில் எந்த வித்தியாசமும் சிரமமும் ஏற்படவில்லை.

*தமிழ்நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் முஸ்லீம் சமூகத்திலிருந்து வரும் ஒரு படைப்பாளரை தமிழ் சமூகம் எவ்வாறு அங்கிகரிக்கிறது?
நான் 83-ஆம் ஆண்டு எழுத தொடங்கியிருந்தாலும் எனது தீவிர எழுத்தென்பது கடந்த 15 ஆண்டுகளாகத்தான் படைக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் நான் எனக்கான இடத்தைப் பிடித்துவிட்டேன் என்பதை உறுதியாக நம்புகிறேன். மேலும், தமிழ் இலக்கிய வட்டத்தைவிடவும் மலையாள இலக்கிய வட்டத்திலும் நன்கு அறியப்படுபவனாக நான் இருக்கிறேன். இது எனக்குப் போதுமானதாக இருக்கிறது. காரணம் என் எழுத்தென்பது என் மன நிம்மதிக்காக எழுதப்படுவது. என் மன அமைதிகானது. ஒரு கட்டத்தில் கொண்டாட்டம் என்ற பேரில் என் மன அமைதியை கெடுக்கும் கேளிக்கை நடக்குமெனில் நான் எழுதுவதை நிறுத்திக்கொள்வேன்.

*விளிம்புநிலை மனிதர்களின் வாழ்கை சுயசரிதையை நீங்கள் தொடர்ந்து மொழிபெயர்பு செய்து வருகிறீர்கள். இந்தத் தேர்வுக்கான காரணம் என்ன? இந்தப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் முடிவை யார் எடுப்பது?
-நான் மலையாள எழுத்தை வாசிக்கப் பயின்றதே சமுதாய மக்கள் புரட்சி சம்பந்தப்பட்ட படைப்புகளிலிருந்துதான். மேலும், கம்யூனிஸ்ட் வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது. குறிப்பாக நச் லைட் போராட்டவாதிகளின் கதைகளைக் கேட்டால் அவர்களிடத்தில் பிரமாதமான குடும்பப் பின்னணி இருக்கும். எல்லாவற்றையுமே உதறி தள்ளிவிட்டுக் காட்டில் வாழ்ந்துகொண்டு மக்களுக்காகப் போராட்டத்தை நடத்துவார்கள்.
அவர்களிடத்தில் தனிப்பட்ட முறையில் பேசும்போது, போலீஸ் தாக்குததிலிருந்து தன்னைத் தர்கார்த்துக்கொள்ளும் யுத்திகளையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மிகவும் ஆபத்தான அபாயகரமான இந்தச் சம்பவங்களை அவர்கள் தெரிந்தே எதிர்கொண்டு பின்வாங்கமால் தொடர்ந்து இயக்கத்திற்காக அதிலேயே இருக்கிறார்கள்.
மகாத்மாவின் சத்திய சோதனை எனக்குப் பிடிப்பதுபோலவே இந்த ஆயுதப் போராட்டமும் எனக்குப் பிடிக்கிறது. மகத்மா காந்தியின் அரசியலில் விமர்சனம் இருக்கலாம் ஆனாலும் அந்த வாழ்க்கையை எப்படிக் குறைத்து மதிப்பிடமுடியும்? அதேபோலத்தான் போராட்டவாதிகளின் வாழ்கை சரித்திரமும், விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும் தமிழ்சமூகத்திற்குச் சொல்லவேண்டியிருக்கிறது.

* உங்களின் சமூகத்திற்காக நீங்கள் கொடுத்திருக்கும் படைப்பு எது?
- என் எழுத்து மொத்தமும் சமூகத்திற்கானது என்றாலும் இஸ்லாமிய இறைக்கான எழுத்தை நான் வழங்கவில்லை. அதை நான் சமூகத்திற்கான எழுத்தாகப் பார்க்கவும் இல்லை. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என அடையாளப்படுத்தும் வேளையில் என் எழுத்தை நான் சமூகத்திற்காக மிக நிதானமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையே சமூக அர்பணிப்பாகத்தான் நான் பார்க்கிறேன்.

* உங்களின் திருமண வாழ்கை குறித்துப் பகிர்துகொள்ளுங்களேன்? உங்கள் எழுத்துக்கு உங்கள் துணையின் ஆதரவு என்ன?
-32 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் எங்கள் புரிதல்கள் அலாதியானது. பெற்றோர் பார்த்துச் செய்துவைத்த திருமணம். என் மனைவி வாசிப்பாளர் இல்லை. நான் மட்டுமே வாசிப்பவராகவும் யோசிப்பவராகவும் இருக்கிறேன். இதனால் எந்தக் குடும்பச் சிக்கலும் எங்களுக்குள் ஏற்படவில்லை. குடும்பச் சிக்கல் என்பது பொருளாதாரத்தைத் தாண்டி தனது அதி புத்திசாலி தனத்தைக் காட்டும்போதுதான் ஆரம்பிக்கிறது. மனைவியை மட்டம்தட்டி உனக்கு அறிவில்லை என ஒரு கணவன் உதாசீனப்படுத்தினால் , உண்மையில் அவனுக்குத்தான் அறிவில்லை என அர்த்தம். அவனது இயலாமையை மறைக்கவே அவன் பிறரை அறிவில்லை என்பான். குடும்பச் சிக்கல்களுக்கு மிக அதிகமாக ஆதிக்க மனோபாவம்தான் காரணமாக இருக்கிறது. அது என்னிடமில்லை. அவரிடமும் இல்லை.

*தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த உங்களுடைய 'நாலடியார்' நூல் களவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கையை மேற்கொண்டீர்கள். உங்களுக்கு அந்த விவகாரத்தில் நீதி கிடைத்ததா?
நான் செய்த வேலைக்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ள பட்சத்தில் எனக்கு நீதி கிடைக்காமல் போகாது என நான் முழுமையாக நம்புகிறேன். அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது சில காட்சிகள் மாறிக்கொண்டிருக்கின்றன அவ்வளவுதான். படைப்பை வாசிக்கும் வாசகர்கள் அறிவார்கள், அந்த எழுத்து நடை யாருடையது என. என்வரையில் இலக்கியத் திருட்டு என்பதும் கருத்து திருட்டு என்பதும் மிகவும் கொடூரமானது வன்மம் மிகுந்தது. தப்புச் செய்தவர்கள் சில ஓடடைகளை மூட வழிதெரியாமல் தினருக்கிறார்கள். எனக்கு அந்தப் பயம் இல்லை.

*திருடர்கள் என வரும்போது அவர்களின் மீது ஒரு பயமும் கோபமும் மக்களுக்கு இருக்கிறது. ஆனால் , 'திருடன் மணியன் பிள்ளை சுயசரிதையை வாசிக்கும்போது சில இடங்களில் கோபமும் கழிவிரகமும் பாவமாகவும் அதே வேளையில் சில இடங்களில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. தற்போது உயரிய விருது கிடைத்திருக்கும் 'திருடன் மணியன் பிள்ளை' புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்க.
-மற்ற புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்த மாதிரிதான் நானும் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். சில இடங்களில் எனக்கும் கோபங்கள் எழவே செய்தது. மணியன் பிள்ளையைப் பொறுத்தவரை அது அவரின் பச்சையான வாழ்கை. அதனால் வார்த்தை அலங்கரங்கள் எதுவுமே தேவைப்படவில்லை. தவிரவும் மலையாளத்தில் எழுதியிருப்பதை இலகுவான தமிழில் கொடுத்தால்தான் விளிம்பு நிலையை அது பேசும்.
சில சம்பவங்களைக் கடக்க முடியாத பயங்கரக் கோபம் ஏற்படவே செய்தது. அவ்வேளையில், ஒரு முயற்சியைக் கையில் எடுத்து விட்டோம் முடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தொடர்ந்தேன்.சில இடங்களில் பிரமிப்பும் ஏற்பட்டது. குறிப்பாகத் திருடப் போன வீட்டில் நாய்களிடமிருந்து அவர் தப்பி வருவதையும் , இன்னொரு இடத்தில் டாக்டர் வீடிற்குத் திருட சென்று, விபத்தாகி மறுநாள் அந்த டாக்டரிடமே மருத்துவத்திற்குப் போகும் சம்பவத்தையும் திருடன் மணியன் பிள்ளை சுவாரஷ்யமாக விவரித்திருப்பர். சினிமா பார்ப்பதை போன்று இருக்கும் பல சம்பவங்கள்.

* மலேசியாவில் தமிழ் மக்கள் பேசும் தமிழைப் பலர் வாழ்த்தி புகழ்ந்துள்ளனர். அதிலும் தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் பேசும் தமிழ்மொழிக்கு பெரிய மரியாதையே இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலை மாறி அவர்கள் தங்களை மலாய்ச் சமூகமாக மாற்றி வருகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மலேசிய தமிழ் முஸ்லீம் சமூகத்தில் இளைய தலைமுறை எழுத்தாளர்களோ அல்லது படைப்பாளர்களோ இருக்கிறார்களா என்று கேடடால் அதற்குப் பதில் சொல்வது கடினம். மேலும், தமிழ் பள்ளியில் அவர்களைக் காண்பதும் அபூர்வமாகிவிட்டது. இந்தச் சூழலை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள்?
-இதைக் கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு மலேசிய இலக்கியம் மற்றும் சூழலை குறித்து அதிகம் தெரியவில்லை என்பதால் இதைக் குறித்து மேலும் பேசுவதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனது அடையாளத்தைத் தொலைப்பது என்பது மிகவும் கொடுமையானது.

நேர்கண்டவர் : யோகி
புகைப்படங்கள் : ஆர்:ராஜேஷ்குமார்
நன்றி தென்றல் வார இதழ்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக