மலேசிய பெண்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள கூகை இணைய இதழ் வெளிவருவதற்கு முன்னதாகவே, நாடு தழுவிய நிலையில் பெண்களை சந்திப்பதற்காகச் சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் முதல் சந்திப்பு நகரத்திலிருந்து பறந்துசென்று சுங்கை எனும் சின்ன கிராமத்தில் அமர்ந்தது கூகை. கிராமத்துப் பெண்களிலிருந்து தொடங்குவது மட்டுமல்ல கிராமத்து பெண்களுக்கு எங்களின் நோக்கத்தையும் இன்றைய தேவையையும் எங்களால் கொண்டு சேர்க்க முடியுமா என்று எங்களையே நாங்கள் பரிசோதித்து கொள்ளும் முயற்சியும் கூட. மேலும், இதில் ஏதும் தவறோ அல்லது தவறான புரிதலோ வந்துவிட்டாலும் நகரத்து வாசிகளைப்போல எங்கள் மேல் உடனே சேற்றை வாரி இரைக்கவோ முகநூலில் பதிவேற்றி அவமானப்படுத்தவோ இவர்களுக்கு தெரியாது. உடனுக்குடனேயே அதைக் கேள்வி கேட்டு பதில் தெரிந்துகொள்ளக்கூடிய அல்லது அப்போதே சண்டைப் போட்டு எழுந்துசெல்லக்கூடிய வெளிப்படையான குணம் மட்டுமே அவர்களுக்கு இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் திட்டமிட்டபடியே எந்த மாற்றமும் இல்லாமல் இந்தச் சந்திப்பு நடந்தது. தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில் இன்னும் அதன் கொண்டாட்டங்கள் மிச்சமிருக்கும் வேளையில், இம்மாதிரியான முதல் சந்திப்புக்கு பெண்கள் வருவது சாத்தியப்படுமா என்ற சந்தேகங்கள் இருந்தாலும், துணிந்து காரியத்தில் இறங்கியது கூகை. இதற்கான அறிவிப்பாக 100-க்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்கள் முதல் நாலே வீடு வீடாகச் சென்று கிராமத்துப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. சந்திப்பன்று (17.11.18) மாலை 6 மணிக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் சுங்கைப் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் கூடினர். தோழி சகிலா மற்றும் தோழி கௌசல்யா சந்திப்பை நெறிப்படுத்தியிருந்தனர்.
தோழி சகிலா |
கூகை பெண்கள் சந்திப்பு நடத்துநர்களாக எங்களை எளிய முறையில் அறிமுகப்படுத்தி வைத்தார் தோழி சகிலா. 'பெண்களும் பொது அறிவும்' என்ற தலைப்பில் எனது கலந்துரையாடல் தொடங்கியது. முன்னதாக கூகை என்றால் என்ன? எதற்காக மலேசியப் பெண்கள் இணைய தளத்திற்கு கூகை எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற குழப்பமான நிலையில் இருந்தவர்களுக்கு அதற்கான விளக்கத்தைச் சொல்லிய பிறகே சந்திப்பை தொடர்வது சரியாக இருக்கும் எனத் தோன்றியது . எல்லாப் பறவைகளையும் எனக்குப் பிடிக்கும் என்றாலும், சாம்பல் நிற பறவையான மடையான் எனக்கு நெருக்கமான ஒரு பறவையாகும். அதேபோல வழி தவறி வெளிச்சத்தில் குருட்டு நிலையில் அமர்ந்திருந்த ஆந்தையை, 10 வயதில் முதன்முதலாக நேரில் பார்த்தலிருந்தே அதன் மீது தனியொரு பிரியம் இருக்கிறது.
"பெண்களைத் திட்டுவதற்காக ஆக்கங் கெட்ட கூவை என தமிழ்நாட்டில் பயன்படுத்துவார்கள். தற்போது ஆண்-பெண் இருவரையுமே அந்த வார்த்தையைச் சொல்லி திட்டினாலும் அதைப் பெண்களை மட்டம் தட்டவே பயன்படுத்தியது. நிச்சயமாகப் பெண்கள் இணைய இதழுக்கு இந்தப் பெயரை வைக்க வேண்டாம்" என என் நண்பர் என்னை எச்சரித்தபோது, முன்பைவிட இன்னும் தீர்க்கமாக அந்தப் பெயரை வைப்பதற்கு முடிவு செய்தேன். பெண்களைத் திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் எல்லா வார்த்தைகளையுமே பட்டியலிட்டு இனி அதையே மற்ற மற்ற அமர்வுகளுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்திருக்கிறேன் . எங்களைப் பலவீனமாக்கும் வார்த்தைகளைக் கொண்டே எங்களைப் பலப்படுத்திக்கொள்கிறோம் என நண்பருக்குப் பதில் சொன்னேன். அவர் என் வார்த்தைகளில் உள்ள நம்பிக்கையை கண்டு உற்சாகமாகிவிட்டார்.
தோழர் சிவரஞ்சனி |
தொடர்ந்து சிறிய தேநீர் இடைவெளிக்குப்பிறகு தோழர் சிவரஞ்சனியின் ஆண்-பெண் சரிசம நிகர் என்ற தலைப்பில் தனது உரையாடலைத் தொடங்கினார். முன்னதாக பெண்களை மையப்படுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர்களைப் பலவீனமானவர்களாக காட்டபடும் சொல்லாடல்களையும் துண்டு காகிதங்களில் பிரிண்ட் செய்து வருகையளித்திருந்த பெண்களுக்கு ஆளுக்கொன்றாக கொடுத்து அது 'சரியா தவறா'? உங்கள் கருத்து என்ன? என்று வந்திருந்த அத்தனை பேரையுமே உரையாடுவதற்கு வழி செய்தார். குறிப்பாக
இரவில் பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது.
பெண்கள் சத்தமாக சிரிக்கக்கூடாது.
பெண்கள் அடக்கமாகப் பேச வேண்டும். உள்ளிட்ட 30 வாக்கியங்களை வந்திருந்த அனைத்துப் பெண்களும் சரியா தவறா என்ற ரீதியில் விவாதித்தனர். சில பெண்களுக்கு இதெல்லாம் சரிதானே இன்று குழம்பிப்போன நேரத்தில் அது எவ்வாறு சரியாகும் அல்லது ஏன் தவறில்லை? எதற்காக அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம் என மிக எளிய மொழியில் பேசி வந்திருந்த அனைவரையுமே சிந்திக்க வைத்தார் சிவரஞ்சனி.
தோழி கௌசல்யா |
"இம்மாதிரியான உரையாடல்கள் எங்களுக்கு அவசியமானதாகவும் தேவையாகவும் இருக்கிறது. எங்களை நாங்கள் மீட்டெடுக்க இம்மாதிரியான சந்திப்புகள் தேவை என்பதை உணர்கிறோம். அடுத்த சந்திப்புக்கு ஆவலாக இருக்கிறோம்" எனக் கூகை ஆதரவுப் பெண்கள் எங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வழியனுப்பி வைத்தனர்.
இந்தச் சந்திப்புக்கு எல்லா வகையிலும் காரணமாக இருந்த தோழர் சிவா லெனினுக்கு நன்றி. கூகை தான் அமரப்போகும் அடுத்த கிளையை விரைவில் அறிவிக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக