புதன், 12 ஏப்ரல், 2017

வரலாற்றை தேடி 1

வெள்ளையும் கறுப்பும்மாக சில வேளையில் வண்ணமயமாகவும் செல்லும் என்  பயணங்களில் மறக்க முடியாத பாதைகள்  மலர்கள் விரித்து வரலாறு எழுத எழுத முற்படும்.  அத்தகைய ஒரு பயணம்தான் அண்மையில் எனக்கு  ஓசூரில் அமைந்தது.

அன்பு அண்ணா ஆதவனின் வீட்டில் தங்கியிருந்த என்னை ஓசூரின் சிவப்பு மலர்கள் உதிர்த்த சாலையெங்கும் அழைத்து செய்வதற்கான பொறுப்பை அன்பு தோழர் பெரியசாமி ஏற்றிருந்தார். அவருடைய இரு சக்கர வாகனமும் எங்களின் பயணத்துடன் பயணம் செய்ய தயாராகவே இருந்தது.

ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து கிட்டதட்ட 100 கிலோமீட்டர்  தூரம்வரை இரு புறத்திலும் வேடிக்கை மட்டுமே பார்த்தபடி அந்த நீண்டச்சாலையில் பயணம் செய்தது தனி அனுபவம் எனக்கு

தோழர் பெரியசாமி நீண்ட பிரயாணத்தில் தொடர்ந்து அங்காங்கு நிறுத்தப்பட்டிருந்த சுமைதாங்கி கற்களை காட்டி கொண்டே சென்றார். சுமை தாங்கி கல் என்றால் என்ன என்று முதல் மரியாதை திரையில் இயக்குனர் பாரதி ராஜா காட்டி விட்டபடியால் அதன் விவரம் முன்பே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், இத்தனை கற்கள் நிறுத்தியிருந்தது வருத்தமாகவும் அதே வேளையில் சுமை தாங்கிகள்இத்தனை பேர் இறப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றும் மனம் சிந்திக்க தொடங்கியது.
கர்ப்பிணியாக மரணித்தவர்களுக்கு  சுமைதாங்கி கற்களும்,   வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடுகற்களையும் ஓசூரின் பல பகுதிகளில்  நிறுத்தியிருப்பது இன்று நேற்று பழக்கமில்லை. அதற்கு கிபி 5-ஆம் நூற்றாண்டு தொடங்கி  வரலாறு உண்டு.

தோழர் பெரியசாமி என்னை தொடக்கமாக கோபனபள்ளியிலுள்ள  ஒரு  கோயிலுக்கு அழைத்து சென்றார். வண்டியை ஆதரவாக ஒரு மரத்திற்கு கீழ் நிறுத்தினார். இங்கு என்ன பிரத்தியேகமாக இருக்கிறது என்று தோன்றிய எனக்கு 200 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் தன் வரலாற்றை  காட் சி கொடுத்தபடி மௌனமான பேச தொடங்கினஇதை நீங்கள் காண வேண்டும் யோகி என்கிறார் தோழர் பெரியசாமி. ஆம்; இது நான் காண வேண்டிய ஒன்றுதான் என்றேன்.
சிறிது நேரத்திற்கு நாங்கள் எதையும் பேசிகொள்ளவில்லை. அந்த சின்ன வளாகத்தில் மழையிலும் வெயிலிலும் தன் வரலாற்றை மெல்ல இழந்து கொண்டிருக்கும் நடுகற்களின் அருமை எப்போது மக்களுக்கும் அரசுக்கும் புரிய போகிறது என்ற கேள்வியே எனக்குள் எழுந்தது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5-ஆம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நுற்றாண்டு வரையிலான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.  ‘ஊர்க்காத்தான் கல்’, ‘புலிகுத்தப்பட்டான் கல்’, ‘யானை குத்தப்பட்டான் கல்’, ‘சன்னியாசி கல்’ , ‘பெண் மீட்டான் கல்’ என 11 வகை பெயர்கொண்ட நடுகற்கள் வீர மரணத்தை பேசும் வகையில்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

நடை மூடியிருந்த அந்த சிறிய கோயிலை சுற்றிலும் சில நடுகற்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கற்களில் பல சிதைந்த நிலையில் இருந்ததையும் காண முடிந்தது.  கோயிலின் ஒரு பகுதியில் மணல் கொட்டி பாதி  நடுகற்கள்  அதில் புதைந்த நிலையி லும்  கிடந்தனசுண்ணாம்பு அல்லது சாயம் பூசப்பட்ட சில நடுகற்களும் மிக பரிதாபமாக இருந்தன.
எங்களுடன் வந்திருந்த  கவிஞர் பத்மபாரதியும் அவரது சின்ன குழந்தையும் இந்த சந்திப்பை மேலும் சுவாரஸ்யமாக்கியபடியே இருந்தனர்.

கவிஞரின் மகள் இலந்தரா  தன் பிஞ்சு பாதங்களால் கோயிலை அளந்து கொண்டிருந்தாள்நாளை அவள் வளர்ந்து வந்து காணும்போது இந்த நடுகற்கள் காகிதத்தில் மட்டுமே  வெறும் பதிவாக இருக்கலாம். எனவே இப்போதே உன் பாதங்களை இங்கே பதித்து விடு மகளே என்றேன். என்னைப் புரியாமல் பார்த்து  தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் இலந்தரா.
நடு கற்கள் எதற்காக உருவாக்கப்பட்டன ? என்ற என் கேள்விக்கு தோழர்கள் பெரியசாமி மற்றும் கவிஞர் பத்மபாரதியும் விளக்கம் தந்தார்கள். முதலில் அவை காவல் தெய்வங்களாக இருக்குமோ என சந்தேகம் எனக்கு இருந்தது. காரணம் செதுக்கப்படட சிலைகள் கொண்டிருந்த அலங்காரம்தான். அவை மதுரை வீரன், முனியாண்டி போன்ற சிறுதெய்வங்கள் போல தோற்றத்தில் செதுக்கியிருந்தார்கள். உண்மையில் மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த வீரர்களுக்காக மக்கள்  செதுக்கி வைத்த பதிவு கற்கள் அவை எனும்போது அந்த கற்களில் வாழ்த்து கொண்டிருக்கும் மனிதர்கள் மீது பெரிய மரியாதை எழுந்தது.

பல கற்களில் பெண்களும் ஓவியமாக வரலாற்றில் இடம் பிடித்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவை குறித்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கு வருங்காலத்தில் ஆய்வாளர்கள் இருப்பார்கள்; ஆனால் நடு கற்கள் இருக்குமா என வருத்தம் அவர்களுக்கும் இருந்திருக்கலாம். அனைத்து  கற்களையும் சேகரித்து ஒரு தொல்பொருள் காட் சியாகம் தொடங்கியிருக்கலாம். ஆவணங்களை  பாதுகாப்பதற்கு வேறு வழி இருக்கிறதா என்று தெரியவில்லை என்றேன். தோழர்கள் இருவரும் மௌனமாக இருந்தனர். மௌனங்களின் மொழி மிக அடர்த்தியானது என நம்புகிறவள் நான். அவர்களின் மௌனத்தின் அர்த்தம் விளங்கி கொள்ளாமல் இல்லை.
தொடர்ந்து தளியில்  இருக்கும் இன்னுமொரு கோயிலுக்கும் தோழர் பெரியசாமி அழைத்து சென்றார். தளி எத்தனை அழகான நிலப்பரப்பு கொண்டது என வார்த்தையில் சொல்ல முடியாது. அந்த கோயிலில் இருந்த நடுகல் கள் சில அகலத்தில் பெரியதாக இருந்தது. ஓவியங்களை தெளிவாக காணக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது. கையில் வாளுடனும் கேடயத்துடனும், அருகில் ஒரு மங்கையுடனும் இருக்கும் அந்த ஓவியம் பெண் மீட்டான் கல்லாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. அல்லது உடன்கட்டை ஏறிய பெண்ணின் நினைவாகவும் இருக்கலாம்.

 சில கற்களுக்கு  மஞ்சலும் குங்குமமும் பூசி தீபாராதனை கட்டப்பட்ட சுவடுகள் இருந்தது. கடவுள் என்று நினைத்து வணங்கி வருவதால் அந்த ஓவியங்கள் காணாபோகாமல் இருக்ககூடும். ஆனால், அதன் இயற்கை தன்மை அழிந்து போகும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
 ஓசூரில் நடுகற்கள் மட்டுமல்ல சூரிய அஸ்தமனமும் பதிவு செய்ய வேண்டிய ஒன்றாக தோன்றியது. நான் பார்த்த அஸ்தமனத்தை நீங்கள் பார்த்திருப்பீர்களா என தெரியாது. அது குறித்தே ஒரு தொடர் எழுத வேண்டும்.

மறுநாள் பாகலூர் செல்லும் சாலையில்  குடிசெட்லு எனும் இடத்தில இருக்கும் ராமர் கோயிலில்  இருக்கும் நடுகல் முக்கியமாக காண வேண்டிய ஒன்று என்று தோழர் பெரியசாமி சொன்னார்.

நாங்கள் பூம்பூம் மாடு தரிசனத்தோடு அந்த பயணத்தை தொடங்கினோம்.

அது குறித்து அடுத்த தொடரில் பார்ப்போம்.

 

 

2 கருத்துகள்:

  1. கவிஞரின் மகள் இலந்தரா தன் பிஞ்சு பாதங்களால் கோயிலை அளந்து கொண்டிருந்தாள்//

    இதுவே கவிதை மாதிரி தான் இருக்கு :)

    பதிலளிநீக்கு